ஒரு தொல்நகரின் கதை

varala

தமிழில் ஆண்டுதோறும் வரும் வரலாற்று நூல்கள் இரண்டுவகை. ஒன்று, வரலாறு என்றபேரில் நினைத்ததை எல்லாம் எந்தத் தர்க்க ஒழுங்குமில்லாமல் எழுதிக்குவிக்கும் எழுத்துக்கள். அவை மூன்று வகை.  திராவிட, தமிழ்த்தேசியப் பெருமிதங்களை அடிப்படையாகக் கொண்டு கொரியமொழி தமிழ்மொழியே, எகிப்தும் தமிழ்நாடே என்றவகையில் எழுதப்படுபவை ஒருபக்கம். இன்னொருபக்கம் இணையான அசட்டுத்தனத்துடன் அனைத்தையுமே சம்ஸ்கிருத, பிராமணியப் பெருமிதவரலாற்றுடன் திரித்து இணைத்துக்கொள்ளும் வரலாறுகள்.

முந்தைய வரலாற்றுக்கு நவீனவரலாற்றாய்வு என்னும்பாவனை உண்டு. இரண்டாவது வரலாற்றுக்கு தொன்மச்சார்பும் அதிலிருந்து கிளைத்த தொகுப்புமுறையும் உண்டு. மூன்றாவதாக இன்று வலுப்பெற்றிருப்பது சாதியவரலாறு. எல்லாச் சாதியினருமே ஒரேசமயம் ஒடுக்கப்பட்டவர்களாகவும் ஆண்டகுடிகளாகவும் எண்ணிக்கொள்ளும் வரலாறு இது. இது இன்று ஒருவகை நேரடி வன்முறையாகவே மாறிவிட்டிருக்கிறது. எந்தவரலாற்றெழுத்தாளனும் இவர்களை அஞ்சியே ஆகவேண்டும்.

இதற்கு நடுவே அவ்வப்போது வந்துகொண்டிருக்கும் பொருட்படுத்தத் தக்க வரலாற்றுநூல்கள் பெரும்பாலும் தகவல்களின் கோவைகளாகவே உள்ளன. வரலாற்றெழுத்தின் மொழியும் தர்க்கமும் அமையவில்லை என்றாலும் இவற்றிலுள்ள தகவல்களின் தொகுப்புக்காகவே இவை முக்கியமானவை. அவ்வகையில் குறிப்பிடத்தக்க நூல்களில் ஒன்று வே.மகாதேவன் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்றில் பழையாறை மாநகர்.

பட்டீஸ்வரம்
பட்டீஸ்வரம்

தொடர்ச்சியாக வரலாற்றை வாசித்துக்கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே இத்தகைய நூல்கள் பயனுள்ளவை. அவர்கள் ஏற்கனவே அறிந்திருப்பவற்றில் சிறிய துல்லியங்களை இவை உருவாக்குகின்றன. மேலும் சற்று தகவல்செறிவை அளிக்கின்றன. மிக அரிதாக சில புதிய திறப்புகளை இயல்வதாக்குகின்றன. தகவல்களினூடாக வரலாற்றுச் சித்திரத்தை உருவகித்துக்கொள்ள முடிபவர்களுக்கு உள எழுச்சியூட்டும் வாசிப்பாக அமைகின்றன.

முன்பு பழையாறை என்று அழைக்கப்பட்ட தொல்நகர் இன்று பழையார் என்ற பேரில் கும்பகோணத்தின் அருகே ஒரு சிற்றூராக விளங்குகிறது. அரிசில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இன்று கும்பகோணத்தின் வளர்ச்சி காரணமாக இது கும்பகோணத்தின் ஒருபகுதியே. கும்பகோணத்தின் பேட்டைநாணயக்காரத் தெரு முதல் முடிகொண்டான் ஆறு வரை பழையாறை என்று சொல்லலாம். பழைய பழையாறையின் பகுதிகள் பழையார். பட்டீஸ்வரம், திருச்சத்திமுற்றம், அரிச்சந்திரம்  பாற்குளம், முழையூர், இராமநாதன்கோயில், தாராசுரம், கோணப்பெருமாள்கோயில், ஆரியப்படையூர்,பம்பப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர், ராஜேந்திரன்பேட்டை ஆகிய ஊர்களாக இன்று உள்ளன என ஆசிரியர் சொல்கிறார்.

பழையாறை சைவக்குரவர் முதல்மூவர் பாடல்களில் ஆறை என்றும் பழைசை என்றும் சொல்லப்படுகிறது. பழையாறு என்றும் நந்திபுரி என்று நந்திபுரம் என்றும் முடிகொண்ட சோழபுரம் என்றும் ஆகவமல்ல குலகாலபுரம் என்றும் இராஜராஜபுரம் என்றும் முடிகொண்டசோழபுரம் என்றும் இந்நகர் அழைக்கப்படுகிறது.

தாராசுரம்
தாராசுரம்

பழையாறையின் முதன்மையான சிறப்பு தமிழகத்தின் தொல்லூர்களில் ‘பழைய’ என்று பெயரிலேயே அடைமொழி இருக்கும் ஊர் இதுதான் என்பது. அதாவது பிற்காலப் பல்லவர், பிற்காலச் சோழர்காலகட்டத்தில், கிபி ஐந்தாம்நூற்றாண்டுமுதலே, இவ்வூர் பழையாறை என்றே அழைக்கப்பட்டது. ஆறைநகர் பழையாறையாக ஆனபின்னர்தான் வரலாற்றுக்குள்ளேயே நுழைகிறது. விரிவாக எழுதப்படவேண்டிய ஒரு மாபெரும் வரலாறு இந்நகருக்கு உண்டு. வே.மகாதேவனின் இந்நூல் அவ்வாறு எழுதத் தொடங்குபவர்களுக்கான ஒரு எளிமையான தகவல்தொகுப்பும் முன்னடிவைப்பும் என்று சொல்லலாம்.

பழையாறைநகர் பெருங்கற்காலத்திலேயே முக்கியமான மக்கள்குடியிருப்புகள் கொண்டதாக அமைந்திருக்கிறது. அதற்குக் காரணம் மிதமான மழை காரணமாக அடர்காடுகள் இல்லாமலிருந்ததும் அதேசமயம் ஆற்றின்கடையாக நீர்வளம் கொண்டிருந்தமையால் வேட்டைவிலங்குகள் கிடைத்ததும் வேளாண்மைக்கு உகந்த மண்கொண்டிருந்ததும்தான். கிபி ஆறாம் நூற்றாண்டிலேயே பழையாறை சமயச்சிறப்பு கொண்ட ஊராக இருந்திருக்கிறது. இங்கிருந்த வடதளி என்ற ஊரை தேவாரம்பாடிய திருநாவுக்கரசர் பாடியிருக்கிறார். இங்கே அன்று இருந்த ஆலயங்கள் செங்கல்தளிகளாக இருந்திருக்கலாம்.

கோவிந்த தீட்சிதர்
கோவிந்த தீட்சிதர்

பல்லவமன்னன் இரண்டாம்நந்திவர்மன் காலகட்டம் [710-715] முதல் பழையாறை அரசியல்மையமாக ஆகத்தொடங்கியது. நந்திவர்மனின் இரண்டாம் தலைநகரமாக பழையாறை மாறியது. பல்லவநாட்டின் தென்னெல்லையாகவும் விளங்கியது. அப்போது நந்திபுரம் என்ற பெயர் பழையாறைக்கு இருந்தது. ’திருக்கோடிக்காவலாகிய கணமங்கலத்துச் சபையினர் பழையாறையாகிய நந்திபுரத்து வணிகன் குமரன் கணபதியிடம் ‘சதாசிவப் பட்டராலய மண்டபம்’ எடுப்பிக்கத்தந்த இறையிலியை உரைக்கும் கல்வெட்டு வழியாக நந்திபுரம் என்ற பெயர் பழையாறைக்கு இருந்தது பெறப்படும்’ என ஆசிரியர் கூறுகிறார்.

பல்லவர்களின் ஆட்சி தமிழகத்தின் பெரும்பகுதியில் நிலவியபோது பழையாறை பல்லவர்களுக்கு கப்பம் கட்டிய சோழர்களின் தலைநகராக விளங்கியது. பிற்காலப் பாண்டியர்களில் கூன்பாண்டியன் என்று அழைக்கப்பட்ட பாண்டியன் சுந்தரமாறனின் மனைவி மங்கையற்கரசி மணிமுடிச்சோழன் என்னும் சோழமன்னனின் மகள் என திருஞானசம்பந்தர் சொல்கிறார். இச்சோழனின் தலைநகர் பழையாறை என குறிப்பிடப்படுகிறது.

பல்லவர்களின் வீழ்ச்சிக்குப்பின் சோழர்களின் தலைநகராக பழையாறை ஆற்றல்கொண்டு எழுந்தது.   முதற்பராந்தகன் [907-53] காலகட்டத்தில் 14-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று பழையாறையை குறிக்கிறது. பழையாறையின் சிறப்பு முதலாம் ராஜராஜன் காலகட்டத்தில் உச்சத்தை அடைந்தது. இக்காலகட்டத்தில் பழையாறை இரண்டாம் தலைநகராக விளங்கியது. இன்று பழையாறையிலிருக்கும் பல ஆலயங்கள் ராஜராஜனால் கட்டப்பட்டன. தளிச்சேரிகள் அமைக்கப்பட்டு தேவரடியார் குடியேற்றப்பட்ட செய்திகளைச் சொல்லும் கல்வெட்டுகள் அன்று பழையாறையிலிருந்த ஆலயங்களின் கணக்கை அறிவிக்கின்றன.

முதலாம் ராஜேந்திரன் நெடுங்காலம் அரசப்பிரதிநிதியாக பழையாறையில் வாழ்ந்தவன். பல கல்வெட்டுகளும் செப்பேடுகளும் ராஜேந்திரசோழனின் ஆணைகள் பழையாறையிலிருந்து வெளியானமையை காட்டுகின்றன. உதாரணமாக, ‘இராசேந்திரனுடைய மூன்றாவது ஆட்சியாண்டில் திருக்கற்குடி விழுமியார்க்குரிய பிரமதேய நிலங்கள் அளக்கப்பெற்றன. இதற்குரிய உத்தரவை பழையாற்று அரண்மனையில் தெற்குப்பக்கத்து உணவுச்சாலையில் இருந்தபோது அரசன் பிறப்பித்தான் என்பது உய்யக்கொண்டார் திருமலைக் கல்வெட்டில்கண்டது’ என ஆசிரியர் சுட்டுகிறார்.

ராஜேந்திரனின் சிறப்புப் பெயர்களில் ஒன்று முடிகொண்ட சோழன். அவன் பெயரை ஒட்டி பழையாறையும் அன்று முடிகொண்டசோழபுரம் என அழைக்கப்பட்டது. தொடர்ந்து சோழர் ஆட்சிக்காலம் முழுக்க பழையாறை பெருஞ்சிறப்புடன் விளங்கியதை ஆசிரியர் ஆவணங்கள் வழியாக காட்டுகிறார். இரண்டாம் இராஜராஜன் [1146-63] பழையாறையை தன் முதற்தலைநகரமாகக் கொண்டான். அப்போது அவன்பெயரில் இந்நகர் இராஜராஜபுரம் என்று பெயர் பெற்றது. நகரைச்சூழ்ந்து அரணையும் அவன் அமைத்தான். இவன் கட்டிய இராஜராஜேஸ்வரம் என்னும் பேராலயமே இன்று தாராசுரம் என அழைக்கப்படுகிறது. தென்னகக் கட்டிடக்கலையின் உச்சங்களில் ஒன்று அது.

மூன்றாம் குலோத்துங்கன் [1178-1218] ஆட்சிக்காலத்திலும் பழையாறை தலைநகரமாகவே இருந்தது. இவன் பழையாறையில் பேராலயங்களை எடுத்தான். தாராசுரம் ஆலயத்தின் கோபுரத்தை பொன்வேய்ந்தான். மூன்றாம் இராஜராஜன் காலகட்டத்தில் 1219-இல் பாண்டியமன்னன் சுந்தரபாண்டியன் சோழநாட்டை வென்று பழையாறையை கைப்பற்றி பழையாறை அரண்மனையில் ஆயிரத்தளிமண்டபத்தில் வீராபிஷேகம் செய்துகொண்டான். 1231-இல் மீண்டும் படையெடுத்துவந்த சுந்தரபாண்டியன் பழையாறை அரண்மனையில் வீராபிஷேகம் செய்துகொண்டான்.

அதன்பின் சோழர் ஆட்சி அருகி மறைய பழையாறையும் கைவிடப்படலாயிற்று. பழையாறை நகர் பாண்டியர்களால் தொடர்ந்து சூறையாடப்பட்டது என்று பாண்டியன் மெய்கீர்த்திகளில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஆலயங்கள் மட்டும் இடிக்கப்படவில்லை. பின்னர் வரலாற்றில் பழையாறையைப் பற்றிய குறிப்புகள் பெரும்பாலும் இல்லை. பழையாறை அரசச்சிறப்பு மறைந்தாலும் சமயச்சிறப்பு கொண்டு வணிகமையமாக மேலும் சிலகாலம் நீடித்தது. 1310-இல் தஞ்சைநிலம் மேல் படைகொண்டுவந்த மாலிக் காபூர் பழையாறையை முழுமையாகச் சூறையாடி அழித்தான்.

பழையாறை பல ஊர்களாகச் சிதறியது. சிறப்பிழந்து வரலாறு மறைந்து காலத்தில் புதைந்தது. பின்னர் விஜயநகரை ஆண்ட நாயக்க மன்னர்கள் சோழநிலத்தைக் கைப்பற்றியபோது ஆலயங்கள் பழுதுபார்க்கப்பட்டன. வழிபாட்டுக்கு புதிய இறையிலிநிலங்கள் அளிக்கப்பட்டன. காவிரிநீர் பாயும் பட்டீஸ்வரம் வாழ்வதற்குத் தகுதியான நிலமாக இருக்கவில்லை என நாயக்கர் கால சம்ஸ்கிருதக் கல்வெட்டு சொல்கிறது. தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரான ரகுநாத நாயக்கர் [1541–1580] பழையாறையின் ஆலயங்களை மீட்டுக் கட்டி இன்றைய வடிவில் அமைத்தார்.

வே மகாதேவன்
வே மகாதேவன்

விஜயநகர அரசரின் மகாமண்டலேஸ்வரனான திருமலைத் தேவமகாராயன் என்பவனால் பழையாறையின் பலபகுதிகள் புதுப்பிக்கப்பட்டன. 1450-ஆம் ஆண்டில் அவன் சத்திமுற்றம் கோபிநாதப்பெருமாள் ஆலயத்தை சீரமைத்தசெய்தியை கல்வெட்டு சொல்கிறது. தஞ்சை நாயக்க மன்னரின் அமைச்சரான கோவிந்த தீட்சிதர் பட்டீஸ்வரத்தில் பல திருப்பணிகளை செய்தார். 1453-இல் பழையாறை சிவன்கோயில் மண்டபம் வாணாதரையனால் கட்டப்பட்டது. விஜயநகர நாயக்கர் ஆட்சியில் ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டன. புதிய அந்தணர்குடியேற்றங்கள் உருவாயின. ஏரிகளும் குளங்களும் வெட்டப்பட்டன. பழையாறை பல ஊர்களாக மாறி மக்கள்வாழ்க்கைக்கு வந்தது. ஆனால் அதன் தொல்சிறப்பு வரலாற்றுச்செய்தியாகவே எஞ்சியது.

பழையாறையைக் குறித்த இந்நூலில் இங்கு இன்றுள்ள ஆலயங்களையும் இன்றைய அகழ்வாய்வுகள் வெளிப்படுத்தும் புதியசெய்திகளையும் ஆசிரியர் தொகுத்துச் சொல்கிறார். பழையாறையின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்திருக்கும் நந்திவர்மன், ராஜராஜன், ராஜேந்திரன், இரண்டாம் ராஜராஜன் ஆகியோரின் வரலாறுகளுடன் இந்நகரில் வாழ்ந்த அமரநீதிநாயனார் என்னும் சைவக்குரவர்,  பின்னாளில் இந்நகர் மீண்டெழக் காரணமாக அமைந்த திருமலைத்தேவ மகாராஜ மண்டலராயன் என்னும் படைத்தலைவர், அமைச்சரான கோவிந்த தீட்சிதர், இந்நகரை மறுகட்டமைப்பு செய்த தஞ்சை ரகுநாதநாயக்கர் ஆகியோரைப்பற்றிய குறிப்புகளையும் அளிக்கிறார்.

ஒரு மகத்தான காவியப்புலம் என வியப்பூட்டுகிறது பழையாறையின் வரலாறு. என்று எனத் தெரியாத தொல்காலத்தில் தோன்றி, வரலாற்றிலேயே பழையநகர் என புகுந்த ஒரு நகரம் ஓங்கி மெல்ல வீழ்ச்சியடைந்து சற்றே மீண்டு தொன்மமாகவும் வரலாறாகவும் நின்றிருப்பதன் சித்திரம். இந்நூல் வெறும் செய்திகளை மட்டுமே அளிக்கிறது. பழையாறை நகரின் இன்றைய நிலப்பகுதிகளின் விளக்கம். இங்குள்ள ஆலயங்களின் பட்டியல், பழையாறை குறித்த கல்வெட்டுச்செய்திகள், இலக்கியச் சான்றுகள், வரலாற்றுப்பின்புலம் ஆகியவற்றைப் பற்றிய ஆதாரபூர்வச் செய்திகளை ஒழுங்குபடுத்தி சொல்லிச்செல்லும் நூல் இது.

இந்நூலில் ஆசிரியர் ஓர் ஆவணத்தொகுப்பாளராகவே செயல்படுகிறார். தன் கருத்து அல்லது முடிவு என எதையும் சொல்வதில்லை. வரலாற்றுநூல்களுக்குரிய நேரடியான கணக்குவழக்கு நடை. ஆயினும் வரலாற்றுநூல்களை வாசிப்பவர்களுக்கு பழையாறை என்னும் பெருஞ்சித்திரத்தை உருவாக்கியளிக்கிறது இந்நூல்.

வரலாற்றில் பழையாறை மாநகர் புலவர் வே. மகாதேவன்

 ===========================================================================================

தஞ்சை தரிசனம் – 5

தஞ்சை தரிசனம் – 4

முந்தைய கட்டுரைரயிலில் கடிதம் – 11
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-24