‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-26

ele1இரவுக்குரிய ஆடைகளை கர்ணனுக்கு அணிவித்துவிட்டு தலைவணங்கி ஏவலன் மெதுவாக பின்னடி வைத்துச் சென்று குடிலின் கதவை மூடினான். கர்ணன் கைகளை மேலே நீட்டமுடியாதபடி அந்த மரக்குடிலின் அறை உயரம் குறைவானதாக இருந்தது. கொடிகளை இழுத்துக்கட்டி உருவாக்கப்பட்ட நீண்ட மஞ்சத்தில் உடலை அமைத்து அமர்ந்து கைகளை நீட்டி உடலை வளைத்தான். சிலகணங்கள் அந்த நாளை முழுமையாக நினைவில் மீட்டியபடி அமர்ந்திருந்த பின் பெருமூச்சுடன் படுத்து கால்களை நீட்டி கைகளை மார்புடன் கோத்துக்கொண்டான். மீண்டும் பெருமூச்சுவிட்டு உடலை எளிதாக்கினான்.

துயில்கையில் எப்போதும் இரு கைகளையும் மார்பிலமைத்து நேர்நிலையில் மல்லாந்து படுப்பதே அவன் வழக்கம். இரவில் ஒருமுறைகூட அவன் புரள்வதில்லை. அவன் மூச்சொலி நாகச்சீறல் என சீராக எழுந்துகொண்டிருக்கும். துயிலின் நடுவே பிற ஓசைகள் எதுவும் அவனிடமிருந்து எழுவதில்லை. அவன் துணைவியர் அவன் துயில்கிறானா ஊழ்கத்திலிருக்கிறானா என்ற ஐயத்தை அடைவதுண்டு. அரிதாக இரவில் அவனைத் தொட்டு எழுப்புகையில் அவர்கள் அவன் மிக அப்பாலெங்கிருந்தோ எழுந்து வருவதுபோல் உணர்வார்கள். முதல் சிலகணங்கள் அவன் எவரையும் அடையாளம் காண்பதில்லை. முதல் வினா “எவர்?” என்றே இருக்கும். படம் எடுத்த நாகத்தின் சீறல் என அது ஒலிக்கும்.

மஞ்சத்தறையில் அவனுடன் அரசியர் துயில்வதில்லை. அவர்கள் அவனுடன் இருக்கையில்கூட சற்று விழிமயங்கி விழித்துக்கொண்டால் அவ்வறைக்குள் பிறிதொருவரும் இருக்கும் உணர்வை அடைவார்கள். முதல்நாள் உடன்மஞ்சம் கொண்ட விருஷாலி நள்ளிரவில் எழுந்து அமர்ந்து உடல் நடுங்கி அறைக்குள் விழியோட்டினாள். அவளுடைய அரைக்கனவில் அவ்வறைக்குள் பேருடல் கொண்ட நாகம் ஒன்று சுற்றி வளைத்து தன் உடல்மேலேயே தலை வைத்து இமையா விழிகளுடன் இருப்பதை கண்டாள். அது மெய்யென்றே அவள் உள்ளம் அறிவுறுத்த உளறலுடன் எழுந்தமர்ந்தாள். மூச்சை இழுத்துவிட்டு தன்னை மெல்லமெல்ல மீட்டுத் தொகுத்துக்கொண்டாள்.

நெஞ்சை நீவியபடி அறைக்குள் மெல்ல நடந்து பார்த்தாள். சாளரத்தைத் திறந்து வெளியே நோக்கினாள். பின்னர் கதவை மெல்லத் திறந்து வெளியே காவல் நின்ற ஏவல்பெண்டிடம் “இங்கு ஏதேனும் அசைவு தெரிந்ததா?” என்றாள். அவள் வெறித்த விழிகளுடன் “இல்லையே, அரசி” என்றாள். கதவை மூடி மீண்டும் மஞ்சத்தில் வந்து அமர்ந்த விருஷாலி பதற்றத்துடன் தன் ஆடையை கசக்கி முடிந்து அவிழ்த்து விரல்கள் நிலையழிந்து கொண்டிருக்க அலைபாயும் விழிகளுடன் அமர்ந்திருந்தாள். நோக்குவன அனைத்தும் நாகமென நெளிந்தன. அனைத்துப் பொருளையும் நெளியச்செய்யும் ஒன்றால் அழியாது நெளியவைக்கப்பட்டவையா நாகங்கள்? நெளிவென எழுந்த தெய்வமொன்றின் புலனறிவடிவங்களா அவை?

மறுநாள் கர்ணனிடம் அவள் அதை சொன்னாள். அப்போது அவள் அச்சம் மறைந்திருந்தது. பகலொளியில் நாகங்கள் அனைத்திலிருந்தும் மறைந்துவிட்டிருந்தன. அப்போது ஒரு நாகம் கண்முன் எழுந்தால்கூட அதை கோலென்றோ கயிறென்றோ மூங்கிற்குழலென்றோதான் எண்ணத்தோன்றும். அவன் புன்னகையுடன் “என் அன்னையும் இதை சொன்னதுண்டு, என் அருகே பிறிதொரு இருப்பை அவர் உணர்வதாக. அதனால்தான்போலும், நினைவறிந்த நாள் முதல் எப்போதும் நான் தனியாகவே துயின்று வருகிறேன்” என்றான். “மெய்யாகவே ஒரு நாகம் உங்களுடன் இருக்கிறதா?” என்று அவள் கேட்டாள்.

கர்ணன் சிலகணங்களுக்குப் பின் “அது உளமயக்கா என்று நான் அறியேன். ஆனால் பலமுறை என்னைத் தொடர்ந்து வரும் பெரிய நாகம் ஒன்றை கண்டிருக்கிறேன். நான் பிறக்கும்போதே அதுவும் உடன் வந்தது என்று அன்னை சொல்வதுண்டு” என்றான். விருஷாலி அச்சத்துடன் விழியோட்டி “உங்கள் அறைக்குள் நான் துயிலமாட்டேன். அதை நேரில் ஒருமுறை பார்த்துவிட்டேன் என்றால் உங்களை அணுகவே என்னால் இயலாது” என்றாள். அதன்பின் ஒவ்வொரு முறையும் அவனுடன் கூடிவிட்டு அவள் மெல்ல கதவைத் திறந்து வெளியே சென்றாள்.

சுப்ரியை மட்டும் சிலநாள் அவனுடன் அறைக்குள் பிறிதொரு மஞ்சத்தில் துயின்றாள். அவளும் ஒருநாள் அந்த மாநாகத்தை பார்த்தாள். அவள் தன் கையிலிருந்த தலையணைகளையும் அருகிருந்த நீர்க்குடுவையையும் எடுத்து அதன் மேல் எறிந்து வீறிட்டதைக் கேட்டு கர்ணன் விழித்தெழுந்து “யார்? என்ன?” என்றான். “நாகம்! மாநாகம்!” என்று அவள் கூவினாள். “எங்கே?” என்று அவன் கேட்டான். எழுந்து சென்று ஐந்து சுடர் எரிந்த விளக்கைத் தூண்டி அறையை ஒளியேற்றி சுழிந்து நோக்கி “எங்கே?” என்றான். “இந்த அறைக்குள்! நான் மெய்யாகவே பார்த்தேன்!” என்று அவள் சொன்னாள்.

அவன் அவள் தலைமயிரை கையால் தடவி “அது விழிமயக்கு. அன்றேல் கனவு. நினைப்பொழிக!” என்றான். “இல்லை. கனவில் அந்த நாகத்தை மிக அருகிலே கண்டேன். திகைத்து விழித்தெழுந்தபோது உங்கள் மஞ்சத்திற்கு அடியில் அது கிடப்பதை பார்த்தேன். மிகத் தெளிவாக. மண்ணில் அதுதான் மிகப்பெரும் நாகமென்று எண்ணுகின்றேன். உங்கள் உடலளவுக்கே தடிமனானது. பன்னிரு சுருள்களாக உங்கள் மஞ்சத்துக்கு அடியில் அது கிடந்தது. பொன்னிறக் காசுகள் அடுக்கியதுபோன்ற அதன் பெரிய தலை மானுடத் தலையை விடவும் பெரிது. நெடுநேரம் அதை என்னை மறந்து பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர்தான் அழைத்தேன்” என்றாள்.

“எனில் அது எங்கே?” என்றான் கர்ணன். “மறைந்துவிட்டது. நான் உங்களை அழைத்தபோதே சுருள்களை இழுத்து அப்பால் சென்றது” என்றாள் சுப்ரியை. கர்ணன் நகைத்து “நோக்கு, அப்பால் சுவர்தான் இருக்கிறது. அத்தனை பெரிய ஒன்று அச்சுவரினூடாக கடந்துசெல்ல இயலாது” என்றான். அவள் எழுந்து “இனி நான் இந்த அறைக்குள் தங்கமாட்டேன். இந்த அறைக்குள் எவரும் தங்க இயலாது” என்றாள். “நன்று, கதைகளிலிருந்து மெய் உருவாகிறது. மெய்யிலிருந்து கதைகள் மீண்டும் பிறக்கின்றன என்பார்கள்” என்றபின் அவன் அவள் தோளைத்தட்டி “செல்க!” என்றான்.

அவள் உடல் நுண்ணிதின் நடுங்கிக்கொண்டிருப்பதை அத்தொடுகையில் அவன் உணர்ந்தான். இடைவளைத்து அவளை தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு அவள் இரு கன்னங்களிலும் முத்தமிட்டு “அஞ்சாதே!” என்றான். அவள் அவன் நெஞ்சில் தலையை சாய்த்து மெல்ல விம்மினாள். கழுத்தில் மென்தசைகள் அதிர்ந்தன. அவ்வதிர்வின்மேல் அவன் மீண்டும் முத்தமிட்டு “அஞ்சாதே. அவ்வண்ணம் ஒரு நாகமிருந்தால்கூட அது எனக்கும் என் கொடிவழியினருக்கும் காவலாகவே அமையும்” என்றான்.

அவள் சிறு சீற்றத்துடன் தலை நிமிர்ந்து “நீங்கள் கதிரவனின் மைந்தர் என்கிறார்கள். எனில் எங்கிருந்து வந்தது அந்தப் பாதாள நாகம்?” என்றாள். “அதுவும் கதிரவனின் மைந்தனாக இருக்கக்கூடும். கதிரொளி சென்று தொடாத இடமுண்டா என்ன?” என்று கர்ணன் சொன்னான். அவள் மேலும் சினம்கொண்டு “வேடிக்கை அல்ல இது. அந்த நாகம் ஏன் உங்களுடன் வருகிறது? அவ்வாறெனில் நீங்கள் மெய்யாகவே யார்?” என்றாள். கர்ணன் “அதற்கு எவரேனும் உறுதியான மறுமொழியை சொல்லிவிட முடியுமா என்ன?” என்றான். சிரித்து “நான் எவரென்று ஒவ்வொரு நாளும் அறிந்து முன் சென்று கொண்டிருக்கிறேன். ஒருவேளை இறுதிக்கணத்தில் முற்றறிவேன் போலும். நன்று, நீ சென்று வேறு மஞ்சத்தில் துயிலலாம்” என்றான்.

அவள் கடும்சீற்றத்துடன் அவன் கையை பற்றிக்கொண்டு உலுக்கி “அது பாதாள தெய்வம்! பாதாள தெய்வங்கள் ஒருபோதும் மானுடனை பொருட்படுத்துபவை அல்ல. அவை முடிவிலாது பலிகொள்பவை. சிறுபிழையும் பொறுக்காதவை. ஊரும் ஊர்தியை உண்டபின்னரே தங்கள் இடம் மீள்பவை. இருள்தெய்வங்களை வழிபட்டோர் குடி வாழ்ந்ததில்லை என்பார்கள். அது உங்களைத் தொடர்வது காக்கும் பொருட்டு அல்ல, உரிமை கொள்ளும் பொருட்டே” என்றாள். கர்ணன் “இருக்கலாம். அதற்கு நான் என்ன செய்ய இயலும்? அதிலிருந்து தப்ப இயலுமா என்ன?” என்றான்.

“தப்ப வேண்டும். உங்கள் தந்தையை தாள் பணிக! இவ்விருளின் சுழல்களை நாம் ஓட்டுவோம்” என்றாள். அவன் “ஆம், செய்வோம்” என்றான். அவனுடைய ஆர்வமின்மையால் அவள் மேலும் சீண்டப்பட்டாள். “கலிங்கத்தில் நாங்கள் நகரில் எங்கும் ஒரு அரவுகூட வாழ ஒப்புவதில்லை. ஒரு நெளிவு கண்ணில்பட்டால்கூட நாகவேள்வியால் அதை துரத்துவோம்” என்றாள். கர்ணன் நகைக்க “இங்கு நாம் வேத வேள்விகள் நிகழ்த்துவோம். ஒவ்வொரு நாளும் இங்கு அவிப்புகை எழட்டும். இந்த இருள்உலக தெய்வங்களை அண்டாது அகற்றும் வல்லமை வேதச்சொல்லுக்கும் புகைக்கும் உண்டு” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்று கர்ணன் சொல்லி அவளைத் தட்டி “செல்க! ஒய்வெடு” என்றான். “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். “வேள்விப்புகை மண்ணுக்குள் செல்லுமா என்ன?” என்றான். “அங்கே அவை வாழட்டும். நாம் வாழும் உலகில் அவை எழவேண்டியதில்லை. ஆழத்திலுள்ளவை ஆழத்திலேயே இருந்தாகவேண்டும்” என்றாள். கர்ணன் அதற்கும் நகைத்தான்.

சுப்ரியை “நான் உறுதியாகவே சொல்கிறேன். இனி அது உங்களைத் தொடராது ஒழிய வேண்டும். நீங்கள் அதை அகற்றியே ஆகவேண்டும். நாம் வேதவேள்விகளை இயற்றுவோம். அங்க நாட்டுக்கு நாம் வந்தபிறகு அறிந்தேன், இங்கு பெருவேள்விகள் எதுவும் நிகழ்ந்ததில்லை என்று. உங்களுக்கு அந்தணருக்கு பொன்னள்ளிக் கொடுக்க கையெழாது என்று சூதர்கள் சொன்னார்கள். உங்கள் உள்ளத்தில் அந்த மறுப்பை உருவாக்கி நிலைநிறுத்துவதே இந்த ஆழத்து நாகம்தான். உளம் ஒருங்குங்கள். இங்கு ஏழு நாடுகளிலிருந்தும் அந்தணர்கள் வரட்டும். வேள்விச்சாலை உருவாகட்டும். ஒருகணம் முறியாது இங்கு வேதப்பேரொலி எழுந்து பன்னிரு ஆண்டுகள் நீடிக்குமென்றால் பாதாள தெய்வங்கள் உங்களை முற்றாகவே கையொழியும். அது உங்களுக்கும் என் குடிக்கும் விடுதலை” என்றாள்.

கர்ணன் அப்பேச்சை ஒழியும்பொருட்டு “நன்று. அதை நான் எண்ணுகிறேன்” என்று அவள் தோளைத் தட்டி மெல்ல அழைத்துச்சென்று கதவைத் திறந்து அங்கு நின்றிருந்த சேடிப்பெண்ணிடம் “தேவிக்கு பிறிதொரு மஞ்சத்தறையை காட்டுக!” என்றான். அவள் செல்லும்போது சீற்றத்துடன் தலையை அசைத்துக்கொண்டிருந்தாள். அவள் அதை பலநாட்கள் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தாள். மைந்தர் பிறந்த பின்னர் அவள் அச்சமும் சீற்றமும் பெருகியது. மைந்தர் பிறப்புக்குரிய வேள்விச்சடங்குகள் எதையும் அவன் செய்யவில்லை. அவள் பலமுறை கூறி மன்றாடி அழுது சீற்றம்கொண்ட பின்னரும் அவன் இளகவில்லை. அவனிடமிருந்து உளம் விலகும்தோறும் அவளுடைய குரலில் சினம் ஓங்கியது.

ஒரு தருணத்தில் சீற்றம் கரைமீற அவன் அவளிடம் “நோக்குக, என் ஊழை நான் வகுக்க இயலாதென்பதே இதுநாள் வரை நான் கற்றுக்கொண்டது! என் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் முன்னரே வகுக்கப்பட்டுவிட்டிருக்கிறது. ஊழுக்கெதிராக போராடிச் சலித்த பின்னரே இவ்வடிவை எடுத்துள்ளேன்” என்றான். “ஊழை வேதத்தால் வெல்லலாம். முன்னோர் அறிவுறுத்தியது அது” என்று அவள் சொன்னாள். “வெல்பவர் இருக்கலாம். என்னால் இயலுமென்று தோன்றவில்லை” என்றான் கர்ணன். “இங்கு வேள்வி நிகழட்டும், என் ஆணை” என்று அவள் சொன்னாள். “நான் நிகழ்த்துகிறேன். அனைத்தையும் நானே ஒருக்குகிறேன். நீங்கள் மாற்றுச் சொல்லுரைக்காமலிருந்தால் மட்டும் போதும்.”

கர்ணன் “அவ்வேள்வியில் செங்கோலேந்தி வேள்விக்காவலனாக அமரவிருப்பவன் யார்?” என்று கேட்டான். அவள் அவன் சொல்வதை உணர்ந்து “அந்தணர் எவரை ஏற்கிறார்களோ அவர்” என்றாள். “அந்தணர் என்னை ஏற்க மாட்டார்கள். என் குருதிமைந்தர்களில் உன் வயிற்றில் பிறந்தவர்களை மட்டுமே ஏற்பார்கள்” என்றான். “அவன் என்னை தன் தந்தையல்ல என்று அறிவிக்கும் மூன்று சடங்குகளை செய்யவேண்டும். நீரால், அனலால், வேதச்சொல்லால் என்னை விலக்க வேண்டும். விண்ணவர்களில் ஒருவரை தன் தந்தையென ஏற்று அவர் பெயரை தன் பெயருடன் சூட வேண்டும். அவன் கொடிவழியில் எழுபவர்கள் பின்னர் அத்தெய்வத்தின் வழித்தொடர்களாகவே அறியப்படுவார்கள். என் கோலும் முடியும் அக்கணமே என்னிலிருந்து விலகும். பின்னர் அங்கநாட்டுச் சொல்வழியில் வசுஷேணனின் பெயர் இருக்காது.”

கசப்புடன் சிரித்து “நன்று! அது அவ்வாறு இருக்கவேண்டும் என்றும் நான் எண்ணவில்லை. ஆனால் சூதனாகிய அதிரதனின் பெயர் இருந்தாகவேண்டும். சொல்க, உனது அந்தணர்கள் எவரேனும் அதிரதனின் பெயரை வேள்வித்தலைவனென அமர்ந்து நான் உரைப்பதை ஏற்பார்களா என்ன? அவ்வண்ணம் ஏற்கும் அந்தணர் எவரேனும் இருந்தால் அழைத்து வரச்சொல், இங்கே வேள்வி நிகழட்டும்” என்றான். அவள் சொல்லமைந்து சற்று நேரம் இருந்தபின் “இவ்வண்ணமே அஸ்தினபுரியின் அடிமை நாடென அமையப்போகிறோமா நாம்? என்றேனும் தனி முடியும் கோலும் கொண்டு எழ மாட்டோமா? அன்று நாம் வேள்வி செய்தாகவேண்டும் அல்லவா?” என்றாள்.

கர்ணன் அவளை கூர்ந்து நோக்கி “ஆகவே?” என்றான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “ஆகவே?” என உரத்த குரலில் அவன் மீண்டும் கேட்டான். அவள் சீற்றத்துடன் விழிதூக்கி “நமக்கு வேறு வழியில்லை” என்றாள். “என்னை துறக்கும்படி என் மைந்தருக்கு நாமே ஆணையிடவேண்டும் என்கிறாய் அல்லவா?” என்றான். அவள் சொல்லின்றி இருந்தாள். “எண்ணுக! உன் மைந்தனுக்கு இன்னும் ஐந்தாண்டுகூட அகவை ஆகவில்லை.” பின்னர் அவன் முகம் வஞ்சப்புன்னகையில் விரிந்தது. “ஐந்து அகவை கொண்ட மைந்தனை அரியணை அமர்த்தி அவனுக்குப் பின்னால் நீ செங்கோலேந்தி அமர்ந்திருக்கலாம் அல்லவா?” என்றான். அவளும் சீற்றத்துடன் உதடு சுழித்து “ஏன், அப்படி எத்தனையோ ஆட்சிகள் இங்கு நிகழ்ந்துள்ளன. அரியணை அமர்ந்து ஆள்வதற்கான குலமும் பயிற்சியும் கொண்டவள்தான் நான்” என்றாள்.

கர்ணன் “நன்று! உன் மைந்தன் தோள்விரிந்தெழட்டும். வில்லேந்தி அவன் நிலம் வெல்லட்டும். அவன் வென்ற நிலத்தை ஆள்வதற்கு முழுதுரிமை உனக்குண்டு” என்றான். அவள் தன் மேலாடையை இழுத்தெடுத்து சுற்றிக்கொண்டு எழுந்து நின்று “அவ்வண்ணம்தான் நிகழவிருக்கிறது. என் மைந்தன் இவ்வரியணை அமர்ந்து ஆள்வான். அனைத்து வேள்விகளையும் செய்வான். அப்போது உங்களை இங்கிருந்து அகற்ற வேண்டிய பணி எனக்கு இருக்காது. அதை நீங்கள் வழிபடும் இந்த நாகபூதமே செய்யும். உங்களை கவ்வி இழுத்து அது அடியிலா இருளாழத்திற்கு கொண்டு செல்லும். அங்கிருந்து நீங்கள் அனைத்தையும் பார்க்கலாம்” என்றபின் வெளியே சென்று திரும்பி நோக்கி “இங்கிருந்து உங்கள் மைந்தர்கள் அனுப்பும் எள்ளும் நீரும்கூட வந்து சேராத அடியாழம் அது. செல்ல விழைவது அங்குதான் எனில் அவ்வாறே ஆகுக” என்று சொன்னபின் அகன்றாள்.

கர்ணன் அவளால் வீசி அறையப்பட்ட கதவு ஓசையுடன் மோதித் திறந்து குடுமி முனகியொலிக்க அசைந்துகொண்டிருப்பதை பார்த்தான். பின்னர் தன் மீசையை கைகளால் நீவியபடி தலைகுனிந்து, விழிசரித்து, தன்னில் ஓடும் எண்ணங்களை கட்டில்லாது பெருகவிட்டு அமர்ந்திருந்தான். சிவதரும் அவன் அணுக்கர்களும்கூட அந்த நாகத்தை பலமுறை பார்த்திருந்தார்கள். அது அவர்களுக்கு பழகி ஒருகட்டத்தில் இன்னொருவர் என்ற சொல்லால் அதை சொல்லத் தொடங்கிவிட்டிருந்தனர். இன்னொருவர் எழும் நாள்கூட அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. இன்னொருவரை தொடர்பிலாத எவரும் பார்த்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் உளம் நாட்டினார்கள். பேச்சில் இயல்பாகவே இன்னொருவர் என்று கர்ணனிடம் சொன்னார்கள்.

அஸ்தினபுரிக்கு கர்ணன் கிளம்பிச்சென்றபோது சிவதர் அவனிடம் தனியாக “அரசே, இன்னொருவரும் உடன் வருவார். அங்கு அவையிலும் எவ்வடிவிலோ அவர் இருப்பார்” என்றார். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. மஞ்சத்துப் போர்வைகளை நீவி வைத்தபடி “அங்கு நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் அவர் கேட்டுக்கொண்டிருப்பார் என்பதை உணருங்கள். அவருக்கு உகக்காத ஒன்றை நீங்கள் செய்ய இயலாது என்பதையும் தெளிக!” என்றார். “உகக்காத எதை நான் அங்கு சொல்லவிருக்கிறேன்?” என்றான் கர்ணன்.

சிவதர் “நட்பின்பொருட்டு அடிமையாதல். அன்பின் பொருட்டு அனைத்தையும் விட்டுக்கொடுத்தல். கொடை என்பது ஓர் உளநிலை. கொடுக்கத் தொடங்கியவர் அனைத்தையுமே கொடுத்துவிடுவார். எஞ்சுவது அனைத்தும் சுமையென ஆகும். எஞ்சாது ஒழிவதே விடுதலை எனத் தோன்றும்”  என்றார். கர்ணன் “அது வேள்விப் பேரவை. அங்கு…” என்றதும் சிவதர் “அனைத்து வேள்விகளிலும் அவர்களும் இருக்கிறார்கள். நிழலாடாது நெருப்பு எப்படி எரியும்?” என்றார். “மெய்” என்று கர்ணன் சொன்னான். “நோக்குக, அரசே! இங்கு நாம் வாழும் வாழ்க்கை நமது தெய்வங்களுக்கு அளிக்கும் முடிவிலாப் பெருங்கொடை. இன்னொருவர் உங்களை கைவிட்டால் உடனிருப்பவர் எவருமில்லை” என்றபின் சிவதர் வெளியே சென்றார்.

அஸ்தினபுரியின் வேள்விச்சாலையில் சிறுமைப்பட்டு அவையிலிருந்து வெளியேறி வருகையில் சிவதர் “இன்றிரவு இன்னொருவர் உங்கள் அறையில் எழுவார். அவர் சீற்றம் கொண்டிருப்பார். ஐயமே இல்லை” என்றார். கர்ணன் “என்னால் இயல்வது ஒன்றுமில்லை” என்றான். “இன்று வேள்விச்சாலையிலும் முன்னர் அவையிலும் நீங்கள் அரசரைப்போல் பேசவில்லை. அடிபணிந்தீர்கள். அனைத்தையும் அள்ளி முன்வைத்தீர்கள். இடக்காலால் அந்த அவை உங்களைத் தட்டி வெளியே தள்ளியபோது ஒரு சொல்லும் உரைக்காமல்  எழுந்து மீண்டீர்கள்” என்றார் சிவதர். கர்ணன் ஒன்றும் சொல்லாமல் நடந்தான். அவன் தன் அறைக்குள் சென்றதும் சிவதர் “நன்று! எந்நிலையிலும் தன் மைந்தரிடம்  தந்தை உள்ளாழத்தில் முனிவதில்லை. அதை மட்டுமே நாம் நம்பியிருக்க வேண்டும்” என்றார்.

அன்றிரவு அரைத்துயிலில் கர்ணன் தன் மஞ்சத்திற்கு அடியில் அந்த மாநாகத்தை உணர்ந்தான். அறைக்குள் எங்கிருந்தோ கரிய நீரோடை வந்து சுழித்து மையம் கொள்வதுபோல் அதன் பேருடல் வளைந்து கொண்டிருந்தது. அம்மஞ்சத்தை மெல்ல காற்றில் மேலே தூக்கியது. அவன் கண்விழித்தபோது அதன் பெரும்படத்தை தன் முன் கண்டான். இமையா விழிகள் இரு மின்மினிகள்போல், இரு தொலைவான விண்மீன்கள்போல், அவனை நோக்கிக்கொண்டிருந்தன. அவன் மார்பின் மேல் வைத்த கையை எடுத்துக் கூப்பியடி அதை பார்த்துக்கொண்டிருந்தான்.

“எந்தையே” என பெருமூச்சுடன் வணங்கிவிட்டு கர்ணன் கண்களை மூடி மெல்ல உடல் தசைகளை தளர்த்தி நீள்மூச்சுவிட்டு துயிலத்தொடங்கினான். அறைக்குள் மெல்லிய அசைவொலி எழுந்தது. செதில்தோல் தரையை உரசும் ஓசை. செதில்கள் ஒன்றுடன் ஒன்று வழுக்கிச்செல்லும் ஓசை. மரப்பட்டைகள் உரசுவதுபோல் எனத்தோன்றும். பட்டுத்துணியின் உரசலோ என மெல்லென்றிருக்கும். பின்னர் யானையின் மூச்சுபோல் சீறலோசை. கண் விழிக்காமலேயே அவன் தன் மஞ்சத்துக்கு அடியில் பெருகி வளைந்து சுழிமையத்துக்கு மேல் தலைவைத்துப் படுத்திருக்கும் மாநாகத்தை கண்டான். அதன் விழிகளையே நோக்கிக்கொண்டிருந்தான்.

வெளியே கதவு தட்டப்பட்டது. கர்ணன் எழுந்து சென்று கதவைத் திறந்தான். “அரசே, தங்களை சந்திக்க அன்னை எழுந்துள்ளார்” என்று ஏவலன் சொன்னான். “எங்கே?” என்று அவன் திரும்பிப்பார்த்தான். “வெளியே உள்ளார்” என ஏவலன் கதவை திறந்தான். அவன் வெளியே காலெடுத்துவைத்தான். அங்கு இருளுக்குள் மண்ணிலிருந்து விண்தொட எழுந்த பேருருவ நாகமொன்றை கண்டான். அதன் உடற்சுருட்கள் ஒன்றின்மேல் ஒன்றென வளைந்து எழுந்திருந்தன. இருளாழத்தில் உடல்நுனி சென்று மறைந்திருந்தது. இரு விழிகளும் எரிவிண்மீன்போல் வானில் எழுந்திருந்தன. விரிந்துகொண்டிருந்த படத்தில் மணிமாலை போன்ற செதில்வளைவுகள் அசைந்தன.

“எவர்?” என்று கர்ணன் நடுங்கும் குரலில் கேட்டான். “அன்னை தன்னை கத்ரு என்று உரைத்தார்கள்” என்று ஏவலன் சொன்னான். கர்ணன் குடிலிலிருந்து வெளியே இறங்கி அவளை நோக்கி சென்று “தாங்களா?” என்றான். “ஆம், நான் உன் மூதன்னை” என்று நாகம் சொன்னது. கதவு மீண்டும் தட்டப்பட்டபோது கர்ணன் முழுவிழிப்பு கொண்டு எழுந்து அமர்ந்தான். அவன் உடல் விதிர்த்துக்கொண்டிருந்தது. ஏவலன் கதவை தொடர்ந்து பல முறை தட்டியிருக்கவேண்டும். அவன் குரல் உரத்து ஒலித்தது. “அரசே! அரசே! முதன்மைச் செய்தியொன்று வந்துள்ளது. அரசே!” என்றான். அவன் ஏவலனின் குரலை அடையாளம் கண்டான். அதிலிருந்த பதற்றத்தை உணர்ந்ததும் இடையிலிருந்த ஆடையை செம்மை செய்து எழுந்தான்.

அக்கணமே மஞ்சத்திற்கு அடியிலிருந்து மாநாகம் எழுந்து அவன் கால்களை வலுவாக சுற்றிக்கொண்டது. நிற்க இயலாமல் கர்ணன் தடுமாறினான். விழுந்துவிடுவோம் என்று எண்ணி கைநீட்டி கட்டில்நிலையை பிடித்தான். கால்களை விடுவித்துவிட முயலுந்தோறும் அதன் பிடி மேலும் இறுகியது. அதன் உடல் வளைந்து மேலெழுந்து அவன் தலைக்குமேல் நின்றது. அதன் முகம் அவன் முகத்துக்கு நேரே வந்தது. தன் விழிகளால் அவனுடன் அது உரையாடியது. “வேண்டாம், துயில்க! வாசல் திறவாதொழிக!” என்றது.

கர்ணன் தள்ளாடி நிலையழிந்து பதறிய கைகளை நீட்டி குடிலின் தூணைப் பற்ற முயல அதன் சுருள்கள் மேலும் மேலும் எழுந்து அவன் கைகளைப்பற்றி உடலோடு இறுக்கின. “அன்னை!” என்று அவன் சொன்னான். “இவ்விரவைக் கடந்து செல்க! இவ்விரவை மட்டும் கடந்து செல்க!” என்று நாகம் சொன்னது. “எவ்வண்ணம் என்னால் இயலும்?” என்று அவன் கேட்டான். “வந்திருப்பவள் என் அன்னை!” நாகம் “அன்னை அல்ல அவள், மூடா!” என்று சீறியது. “குளிர்ந்த நஞ்சுடன் வந்துள்ள தமக்கை அவள். ஆயிரம் பல்லாயிரம் கோடி முகம்கொண்டு இப்புவியெங்கும் நிறைந்திருப்பவள்.” கர்ணன் “அன்னை! அன்னை!” என்றான். “இவ்விரவை மட்டும் எவ்வண்ணமேனும் கடந்து செல்க! இந்தக் கணத்தை மட்டும் கடந்து செல்க! நீ வெல்வாய். இங்கு மட்டுமேனும் நீ வெல்வாய்!”

கர்ணன் “என்னால் இயலாது! என்னால் அது இயலாது!” என்றான். “என் அமுதை அருந்துக! என்னுள் ஊறிய ஒரு துளி அமுது உன்னை ஆற்றல்கொண்டவனாக்கும். கூர்வாளென இவ்விரவைப் போழ்ந்து கடக்கச்செய்யும்” என்றது நாகம். கர்ணன் ஒருகணத்தில் தன்னுடலை அதிலிருந்து உதறி மீண்டான். பிடிதளர்ந்த நாகத்தை இரு கைகளாலும் அள்ளி அப்பால் வீசினான். பேரோசையுடன் அது தரையில் அறைபட்டு விழுந்து செதில்கள் உரசும் ஒலியுடன் புரண்டு சுருண்டெழுந்து சீறி “நீ என்னை புறந்தள்ளுகிறாய். என்னை சிறுமைசெய்கிறாய்!” என்றது. “அன்னை வெளியே எனக்காக காத்து நிற்கிறார்” என்று சொல்லி அவன் வெளியே ஓடினான்.

“அவள் கொண்டுவந்திருப்பது என்ன என்று அறியமுடியாதவனா நீ?” என்றது நாகம். “நான் அவருக்கு முதற்கடன் பட்டவன்” என்று கர்ணன் சொன்னான். “என்னை நீ புறந்தள்ளுகிறாய்! என்னை நீ புறந்தள்ளுகிறாய்! என்னை நீ புறந்தள்ளுகிறாய்!” என்று நாகம் வீறிட்டது. “வேறு வழியில்லை. இருவரில் ஒருவரையே இத்தருணத்தில் நான் ஏற்கமுடியும்” என்றபின் கர்ணன் சென்று கதவை திறந்தான். ஏவலன் தலைவணங்கி “அரசே, இந்திரப்பிரஸ்தத்தின் யாதவஅரசி தங்களை பார்க்க விழைந்து இங்கு வந்திருக்கிறார்” என்றான். கர்ணன் அப்போதுதான் முழு தன்னினைவை அடைந்து “யார்?” என்றான். “இந்திரப்பிரஸ்தத்தின் யாதவஅரசி குந்திதேவி தங்களை பிறரறியாது பார்க்கவேண்டுமென்று இங்கு வந்திருக்கிறார்” என்றான் ஏவலன்.

“எங்கு?” என்றான் கர்ணன் உளம்கலங்கியவனாக. “இதோ இங்கு” என்று சற்று அப்பால் சேடி ஒருத்தி துணை நிற்க வெண்ணிற ஆடையால் முகத்தை முற்றிலும் மறைத்து தலைகுனிந்து உடல் குறுக்கி நின்றிருந்த சிற்றுருவத்தை ஏவலன் சுட்டிக்காட்டினான். கர்ணன் மூச்சுத்திணறுவதுபோல், கைகால்கள் உதறுவதுபோல் உணர்ந்தான். சிலகணங்கள் அவளை நோக்கி நின்றபின் “வரச்சொல்க!” என்றான். ஏவலன் சென்று குந்தியிடம் பணிந்து அவன் வரவொப்புதல் அளித்ததைச் சொல்ல குந்தி சிறிய அடிகளை எடுத்து வைத்து நிழல் நகர்வதுபோல் ஓசையின்றி அவனை அணுகினாள்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஉல்லாலா!
அடுத்த கட்டுரைஇலக்கியமுன்னோடிகள்