‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-24

ele1துச்சாதனன் வெளியே படையானை ஒன்றின் பிளிறலைக் கேட்டதுமே துரியோதனனின் வருகையை உணர்ந்தான். அதன் பின்னரே அரச வருகையை அறிவிக்கும் கொம்பொலி எழுந்தது. அவையிலிருந்தவர்கள் தங்கள் ஆடைகளையும் அணிகளையும் சீரமைத்துக்கொண்டனர். பீடத்தில் சற்றே உடல் சாய்த்து விழிசரிய துயில் கொண்டவன்போல் அமர்ந்திருந்த கர்ணனிடம் மட்டும் எந்த அசைவும் ஏற்படவில்லை. துச்சாதனன் அறைவாயிலுக்குச் சென்று நின்றான். அப்பால் தேரிலிருந்து இறங்கிய துரியோதனன் அவை நோக்கி வந்த நடையிலேயே அவன் உளம் உவகையில் துள்ளிக்கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் துச்சாதனனை அது மகிழவைக்கவில்லை.

தன்னைத் தொடர்ந்து வந்த துர்மதனிடமும் துச்சகனிடமும் விரைந்த சொற்களாலும் சுழலும் கையசைவாலும் பேசிக்கொண்டே வந்தவன் துச்சாதனனை நெருங்கியதும் அவன் தோளில் ஓங்கி ஓர் அறைவிட்டு “அனைவரும் வந்துவிட்டார்களா?” என்றான். துச்சாதனன் “ஆம் அரசே, தங்களுக்காக காத்திருக்கிறார்கள்” என்றான். கைகளைக் கூப்பியபடி துரியோதனன் அவைக்குள் நுழைந்தபோது அங்கிருந்தோர் எழுந்து வாழ்த்துரைத்தனர். வணங்கியபடி சென்று தன் பீடத்தில் அமர்ந்தான். அவைமுறைமைகள் தொடங்குவதற்குள் திரும்பி துச்சாதனனிடம் அவை தொடங்கலாம் என்று கைகாட்டினான்.

துச்சாதனன் தன்னிடம் அவன் அவ்வாறு சொல்லும் வழக்கமில்லையென்பதனால் திகைத்து பின்னர் அவை நோக்கி கைகூப்பி “அரசர் வாழ்க! வாழ்க அமுதகலக்கொடி! அவை நிகழ்க!” என்றான். தன் குரல் அவனுக்கே அயலாக ஒலித்தது. வழக்கமாக முதற்சொல் எழுவதற்காகக் காத்திருக்கும் அவை அன்று புத்துணர்ச்சியுடன் இருந்தது. அஸ்வத்தாமன் எழுந்து “இந்நாளில் நம் போர்களில் குறிப்பிடும்படியான வெற்றி ஒன்றை அடைந்த மகிழ்வுடன் நாம் கூடியிருக்கிறோம். இளைய பாண்டவர்கள் அர்ஜுனரும் நகுலரும் சகதேவரும் அவர்களின் மைந்தர்களும் பீமனின் மைந்தர்களும் புண்பட்டு மருத்துவநிலைகளில் படுத்திருக்கிறார்கள் என்ற செய்தி இப்போது வந்துள்ளது” என்றான்.

அவையினர் கைகளைத் தூக்கி ஆர்ப்பரித்தனர். துரோணர் மட்டும் தாடியை நீவியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அஸ்வத்தாமன் “அர்ஜுனரின் நிலை இன்னும் எதுவும் கூறவொண்ணாதபடியே உள்ளது. மருத்துவர்கள் அவர் விளிக்கு மறுவிளி அளிப்பது வரை காத்திருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அங்கே மருத்துவநிலைக்கு வெளியே யுதிஷ்டிரரும் பிறரும் நின்றுகொண்டிருக்கிறார்கள். எவ்வாறாயினும் நாளை போருக்கு அர்ஜுனர் எழப்போவதில்லை. அவர்கள் தோல்வியின் முதற்சுவையை அறிந்துவிட்டார்கள். நாம் வெற்றியின் சுவையை” என்றான். சல்யர் கைகளைத் தூக்கி “வெற்றி தொடங்கிவிட்டது. நாளையே நாம் போர்நிறைவு செய்வோம்” என்றார்.

“நமது படைகள் கொண்டாடிக்கொண்டிருக்கின்றன” என்று அஸ்வத்தாமன் தொடர்ந்தான். “நேற்று மாலை நம்பிக்கையிழந்து சோர்ந்து மீண்டார்கள். இரவெல்லாம் அங்கர் வருவார் என காத்திருந்தனர். அவரை எண்ணி படைமுகம் எழுந்தார்கள். ஒளிமிக்க உருவுடன் அவர் படைமுகப்பில் எழுந்தபோதே உளம்மீண்டனர். இப்போது வெற்றிபெற்றுவிட்டோம் என்றே எண்ணி ஆர்ப்பரிக்கிறார்கள்.” ஜயத்ரதன் “ஆம், நான் இங்கு வரும்போது பார்த்தேன். நமது படைகளில் புத்தூக்கம் நிறைந்துள்ளது. விழியோட்டிய திசையெங்கும் மதுக்கிண்ணங்களுடன் களிகொண்டாடும் படைவீரர்களையே பார்த்தேன்” என்றான்.

அருகில் நின்ற பகதத்தர் “என்னுடைய படைகளை ஒட்டி அசுரர்களின் படைப்பிரிவுகள் உள்ளன. அவர்கள் அங்கே தவ்வையின் கல்வடிவம் ஒன்றை வைத்து வழிபடுவதைக் கண்டேன்” என்றார். அனைவரும் அவரை நோக்கி திரும்ப அஸ்வத்தாமன் “தவ்வையா?” என்றான். சுபாகு “அசுரர்களும் அரக்கர்களும் தவ்வையை தங்கள் அமுதுக்குரிய தெய்வமாக வணங்குகிறார்கள். முன்பு பாற்கடலை தேவரும் அசுரரும் கடைந்தபோது அசுரருக்கு அருளும் இன்னமுதுடன் எழுந்தவள் என்று தவ்வை அவர்களால் கருதப்படுகிறாள். உண்டாட்டுகளிலும் மதுக்களியாட்டுகளிலும் தவ்வையை நிறுவி அவளுக்கு முதற்கலம் அளித்துக் கொண்டாடுவது அவர்களின் வழக்கம்” என்றான்.

துரியோதனன் “ஒவ்வொருவரும் அவரவர்களுக்குரிய வகையில் கொண்டாடட்டும்” என்றான். சுபாகு “நமது படைகளிலும் தவ்வையின் அமுதை உண்டு களியாடுகிறார்கள். நான் வரும்போது பார்த்தேன்” என்றான். ஜயத்ரதன் நகைத்தபடி கைகளைத் தூக்கி “கௌரவப் படைகளில் தவ்வை எழுக! அவள் அமுது நம்மை ஆற்றல் கொண்டவராக்குக!” என்றான். அவையினர் அனைவரும் கைகளைத் தூக்கி வாழ்த்துரை கூவிச் சிரித்தனர். சற்றுநேரம் அவை நகையாட்டும் சிரிப்புமாக நிறைந்திருந்தது.

துரியோதனன் “கூறுக அஸ்வத்தாமரே, நாளை நம் படைசூழ்கை என்ன?” என்றான். அஸ்வத்தாமன் “இன்று நமது படைசூழ்கையை வெற்றிகரமாக முன்னெடுத்து பாண்டவப் படைகளை சிதறடித்திருக்கிறோம். இன்றைய வெற்றியை நான் கூர்ந்து நோக்கியபோது உணர்ந்தது ஒன்றே. இன்று போரில் முதன்மைப் பெருவீரராகிய அங்கர் வென்று முன் சென்றார். அவரது அம்புகளுக்கு நிகர் நிற்க பாண்டவர் தரப்பில் எவரும் இருக்கவில்லை. ஆனால் எந்நிலையிலும் அவர் நம் சூழ்கையின் ஒரு பகுதியாகவே இருந்தார். பீஷ்மர் களம் நின்று போரிட்டபோது நம் சூழ்கையை அவருக்கிணையாக கொண்டு செல்வதற்காகவே நமது ஆற்றலின் பெரும்பகுதியை செலவழித்தோம். இன்று தெய்வத்தின் பீடமென அமைந்திருந்தது நமது சூழ்கை. இனியும் அவ்வண்ணமே அமைக!” என்றான்.

துச்சாதனன் துரோணரை பார்த்தான். துரோணர் தன் தாடியை கைகளால் நீவியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவன் விழியசைவினூடாக துரோணரை நோக்கிய துரியோதனன் “ஆசிரியரே, இன்றைய போரில் தாங்கள் ஆற்றிய பெரும்பணியால் நாம் வெற்றிமுகம் நோக்கி செல்கிறோம். அதன்பொருட்டு நான் தங்கள் அடிபணிய கடமைப்பட்டுள்ளேன்” என்றான். கைநீட்டி அவன் பேச்சைத் தடுத்து தலைதூக்கி, வெறுப்பால் உள்மடிந்து இறுகிய வாயும் நீர்மை படிந்த கண்களுமாக துரோணர் சொன்னார் “வீண்சொற்கள் வேண்டியதில்லை. நமது படைகள் வென்றன. நான் தோற்றேன்.” துரியோதனன் ஏதோ சொல்ல வாயெடுக்க அவர் கைவீசி அவனை நிறுத்தி மேலும் கசப்புடன் சொன்னார்.

“எனக்கு இப்படை அளித்திருந்தது ஒரே பணி. அதை நான் தவறவிட்டேன். யுதிஷ்டிரனை சிறையெடுத்து வந்திருந்தால் இன்று நாம் போர் வெற்றியை கொண்டாடிக்கொண்டிருப்போம். நாளை அஸ்தினபுரியின் மும்முடி உங்கள் தலையில் அமைந்திருக்கும். பல்லாயிரம் படைவீரர்கள் இறப்பொழிந்து தங்கள் குடிகளுக்கு மீண்டிருப்பார்கள். என்னால் இயலவில்லை.” அவர் குரல் தழைந்தது. அவையினர் உளநிலை மாறி அவரை நோக்கி அமர்ந்திருக்க விம்மல் கலந்த குரலில் துரோணர் சொன்னார் “நான் தோற்று நின்றிருக்கிறேன். என் விற்தொழில் தவம் பொருளிழந்ததாகிறது.” தன்னைச் சூழ்ந்திருந்த அமைதியைக் கண்டு அவர் விழிதூக்கினார். ஷத்ரியர்களின் விழிகளை சந்தித்ததும் சீற்றம்கொண்டார்.

“என் திட்டங்களை நொறுக்கியவன் அவன். அந்த இளைய யாதவன். பிற எவருக்கும் தோன்றாத ஒரு வழி எப்போதும் அவனுக்குத் தோன்றுகிறது. பிறர் துணியாதபோதும் அவன் எழுகிறான். பிற எவருக்கும் தோன்றாதது என்பதனாலேயே அங்கு எதிர்ப்புகள் எதுவும் இருப்பதில்லை. அவ்வாறு நமது படைகளை குறுக்காக வெட்டி அவன் என்னை நோக்கி குறுக்காக வரக்கூடுமென்று ஏன் எண்ணாமல் போனேன் என்று நூறுமுறை என் தலையில் அறைந்துகொண்டேன். இந்தத் தன்னிழிவிலிருந்து இனி ஒருபோதும் என்னால் மீள முடியாது.”

அஸ்வத்தாமன் ஏதோ சொல்ல முயல “நில்!” என்று அவனை நிறுத்தி துரோணர் சொன்னார் “நிகழ்ந்தது ஒன்றே. அவன் நான் ஆடிய ஆட்டத்தையே திருப்பி என்னிடம் ஆடினான். அவர்கள் படைமுகப்பில் அனைத்து ஆற்றலையும் குவித்ததனால் படைகளுக்குப் பின் பக்கம் எவருமிருக்கவில்லை. ஆகவே நான் வளைந்து சென்று படைகளுக்குப் பின்புறத்தைத் தாக்கி யுதிஷ்டிரனை சிறைபிடித்தேன். யுதிஷ்டிரனை நமது படைப்பிரிவுக்குள் கொண்டு வந்ததுமே வென்றுவிட்டோம் என்ற உணர்வு நமக்கு ஏற்பட்டது. ஆகவே நாம் அவனை காத்துக்கொள்ள எதுவும் செய்யவில்லை. யுதிஷ்டிரனை அவர்கள் வந்து மீட்பது அதற்குப் பின் இயல்வதல்ல என்று நாமே எண்ணிக்கொண்டோம். அவ்வெண்ணத்தால் ஆற்றலிழந்த நம் படைகளை ஊடுருவி வந்து அவன் கைபற்றிச் சென்றான்.”

“ஆசிரியரே, உங்கள் வீரம் உலகறிந்தது” என அவரிடம் ஆறுதல் சொல்ல முற்பட்டான் துரியோதனன். அவனைத் தடுத்த துரோணர் “வீரமின்மையால் நான் தோற்கவில்லை என நானும் அறிவேன். நான் தோற்றது நெறியால். அர்ஜுனன் தன் தமையனை நாடி வந்துவிட்டதை அறிந்தபோது என்னருகே தேரில் வெறும் கையுடன் யுதிஷ்டிரன் நின்றிருந்தான். அக்கணமே திரும்பி அவன் தலையை கொய்தெறிந்திருந்தால் அப்போதே இந்தப் போர் முடிந்திருக்கும்” என்றார். அவை சொல்லணைந்து நோக்கி அமர்ந்திருக்க சல்யர் “என்ன சொல்கிறீர்கள்?” என முனகினார்.

“நான் அதை செய்யவில்லை. செய்ய என்னால் இயலவில்லை. ஏன்? அவன் செய்திருப்பான் அல்லவா? சொல்க, பீமன் அதை செய்திருப்பான் அல்லவா? ஏன் நான் செய்யவில்லை? ஏனென்றால் எனக்கு நானே முதன்மையானவன். என் நெறிகள். என் மரபு. என் புகழ். அதற்குமேல் நின்றிருக்கும் ஒன்றும் என்முன் இல்லை. அவன் முன் அவனுக்கு இளைய யாதவன் கற்பித்த பேரறம் ஒன்று இருந்தது. அவனுக்கு அவன் உயிரைப்போலவே புகழும் ஒரு பொருட்டல்ல. என்னுடைய தயக்கத்தை அறமென்று நான் சொல்லிக்கொள்ளலாம். அது வெறும் ஆணவம் மட்டுமே.”

துரோணரின் குரல் ஓங்கியது. “அவன் எனக்கொரு சொல் உரைத்திருக்கிறான். ஆணவத்தால் நான் அழியப்போகிறேன் என்று. ஆம் ஆம் என்று என் உள்ளிருந்து என் தெய்வங்கள் உரைக்கின்றன” என்றார் துரோணர். அவர் தொண்டை இடற அழுகையில் முகம் இழுபட்டது. அவை துரோணரின் கண்ணீரை பார்த்தபடி அமர்ந்திருந்தது. அடக்க அடக்க விழிநீர் பெருகி வர துரோணர் தன் இரு கைகளாலும் கண்களை அழுத்தி அதை நிறுத்தினார். அதே கைகளால் தாடியை நீவி உடல் உலுக்கிய விம்மல்களை அடக்கினார். பின்னர் நிமிர்ந்து “ஆனால் நான் என் ஆணவத்தை ஒழியப்போவதில்லை. ஆணவம் ஒழிந்தபின் எவன் போர்புரிய முடியும்? இக்களத்திற்கு நான் வந்ததே என் ஆணவத்தால்தான்” என்றார்.

“நேற்று உரைத்தேன் என் விழைவால் கீழிறங்கினேன் என்று. இன்று உணர்கிறேன் அவ்விழைவால்தான் நான் போர்வீரன் என. அவ்விழைவு இல்லையேல் களத்திற்கே வந்திருக்க மாட்டேன். என் விழைவையும் ஆணவத்தையும் மேலும் பெருக்கவே எண்ணுகிறேன். என்னை கட்டுப்படுத்தும் எதுவேனும் இருந்தால் அதை நாளை களையவிருக்கிறேன். அது தெய்வங்களும் மூதாதையரும் ஆசிரியரும் எனக்களித்த நற்கொடைகளாக இருப்பினும் சரி, நாளை கட்டற்றவனாக களம் நிற்பேன். இனி வெற்றியொன்றே எனக்குரியது. இல்லையேல் வாழ்வதில் பொருளில்லையென்றே ஆகும்” என்றார் துரோணர். எழுந்து தன் கையை தூக்கி  “அரசருக்கு நான் ஒன்று சொல்கிறேன், இன்று விட்டதை நாளை செய்வேன். நாளை யுதிஷ்டிரனைச் சிறைப்பிடிப்பேன். அதன்பொருட்டு மட்டுமே போர்புரிவேன்” என வஞ்சினம் உரைத்தார்.

துரோணரின் உணர்வுகளைப் பார்த்தபடி அவை பேசாமல் அமர்ந்திருந்தது. அவரை உறுத்துநோக்கியபடி இருப்பதை உணர்ந்து ஒவ்வொருவராக விழிதாழ்த்தி உடலசைத்து தலை திருப்பி நிலை மீண்டனர். துரியோதனன் இரு கைகளாலும் பீடத்தின் கைப்பிடிகளை தட்டியபடி “நாம் நமது சூழ்கைகளைப் பற்றி பேசுவோம்” என்றான். ஜயத்ரதன் “அங்கரை எதிர்கொள்ள அர்ஜுனனாலும் அபிமன்யுவாலும் பிறராலும் இயலவில்லை என்பது தெளிவாகியுள்ளது. நம் படைகளை அதை ஒட்டியே நாம் அமைப்போம். நாளை அர்ஜுனன் களத்திற்கு வரவில்லையெனில் அவர்களில் எவர் எழுந்தாலும் எவ்வகையில் படைசூழ்கை அமைத்திருந்தாலும் நாம் வெல்வோம்” என்றான்.

“அர்ஜுனன் களம்வருவது அரிதினும் அரிது என்றே செய்திகள் சொல்கின்றன” என்று சுபாகு சொன்னான். அஸ்வத்தாமன் “ஆயினும் அவர் அர்ஜுனர். காண்டீபம் ஏந்திய பாரதர். நாம் அவரை எவ்வகையிலும் குறைத்துக்கொள்ளவேண்டியதில்லை” என்றான். “ஆகவே நமது படைசூழ்கையை இரு வாய்ப்புகள் கொண்டதாக அமைப்போம். அர்ஜுனர் வருவார் எனில் என்ன செய்வோம், வராதொழிந்தால் எவ்வண்ணம் கடந்து சென்று அமைப்போம் என திட்டமிடுவோம்.” ஜயத்ரதன் “ஆம், அதுவே உகந்தது” என்றான். துரியோதனன் “அவன் மீளவும்கூடும்… அதையும் கருத்தில் கொள்வோம்” என்றான்.

அஸ்வத்தாமன் “அரசே, நாம் நாளை வென்றாகவேண்டும். இன்று அவர்களின் படையின் அடித்தளங்களை நொறுக்கியிருக்கிறோம். நொறுங்கிய அடித்தளங்கள் அவ்வகையிலேயே அமைவு கொண்டு உறுதி அடையவும் வாய்ப்புண்டு என்கிறார்கள். அது நிகழலாகாது. அர்ஜுனன் இல்லாதபோது படைநடத்தும் தன்னம்பிக்கையும் திறனும் சாத்யகிக்கோ திருஷ்டத்யும்னருக்கோ வந்துவிடலாகாது. ஆகவே, நாளை அப்படையை ஒட்டுமொத்தமாக சரித்து இடும் பெரும்படைசூழ்கையை நாம் அமைக்கவேண்டும். என் உள்ளத்தில் ஓர் எண்ணம் உள்ளது” என்றபடி அவன் தன் தோற்சுருளை எடுத்தான்.

அவையின் பின்நிரையிலிருந்து திரிகர்த்தனாகிய சுசர்மன் எழுந்து முகப்புக்கு வந்தான். கைகளைத் தூக்கியபடி அவை நோக்கி திரும்பி “எங்களுக்கு பாண்டவர்களுடன் ஒரு கணக்கு இருக்கிறது. அதை ஆசிரியரும் அவையோரும் அறிவீர்கள். இந்தக் களத்திற்கு சம்சப்தர்களாகிய நாங்கள் வந்ததே அக்கணக்கை தீர்க்கத்தான். நாங்களும் வஞ்சினம் உரைக்கிறோம், திரிகர்த்தர்களாகிய நாங்கள் நாளைய போரில் அர்ஜுனனை கொல்வோம். நாளை அந்த ஒற்றை இலக்குடன் நாங்கள் களம்நிற்கவிருக்கிறோம்” என்றான்.

அவன் தம்பியரான சத்யரதன், சத்யவர்மன், சத்யவிரதன், சத்யேஷு, சத்யகர்மன் ஆகிய ஐவரும் எழுந்து அவை முகப்புக்கு வந்தனர். சத்யரதன் “ஆம், அது எங்கள் வஞ்சினம். நாங்கள் இன்று அந்த உறுதியை பூண்ட பின்னரே இந்த அவைக்கு வந்தோம்” என்றான். சுசர்மன் “அவையோர் அறிக! எங்களுக்கும் பாண்டவர்களுக்குமான போர் தொடங்கி நெடுநாட்களாகின்றன. இளைய மைந்தனாகிய அர்ஜுனன் எங்கள் நாட்டினூடாக தன் வடபுலப் பயணத்தை நிகழ்த்தியபோது என் தந்தை சென்று வணங்கி கப்பம்கட்டி தன் பணிவை அறிவித்தார். மலைநில மக்களாகிய எங்களால் அஸ்தினபுரியின் பெரும்படையை எதிர்கொள்ள இயலாதென்று அவர் அறிந்திருந்தார்” என்றான்.

“நாங்கள் அஸ்தினபுரிக்கு கப்பம்கட்டும் நாடாகவே இருந்தோம். அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்குமான பூசலில் எங்களுக்கு பங்கில்லை. ஆனால் இந்திரப்பிரஸ்தம் அமைந்ததும் நகுலன் படைகொண்டு வந்து எங்கள் நிலத்தை வென்று கப்பம் பெற்று சென்றான். அஸ்தினபுரியின் படைத்துணை இல்லாமல் நகுலன் ஆற்றலின்றி இருப்பான் என எண்ணிய என் மூத்தவராகிய சுரதர் படைகொண்டுசென்று நகுலனின் படைகளை எதிர்த்தார். ஆனால் அவர்கள் யாதவப் பெரும்படையுடன் வந்திருந்தனர். களத்திலேயே நகுலன் அவரை கொன்று வீழ்த்தினான்.”

“வஞ்சம் நோக்கியிருந்த நாங்கள் விராடபுரியில் பாண்டவர்கள் மறைந்திருந்ததை உணர்ந்து படைகொண்டுசென்றோம். அர்ஜுனன் எங்களை துரத்திவரவேண்டும் என்பதற்காக விராடரின் ஆநிரைகளை கவர்ந்து சென்றோம். அவனை எளிதில் வெல்லலாம் என எண்ணினோம். ஆனால் அவனை நாங்கள் குறைத்து எண்ணிவிட்டோம். விராடபுரியின் படைகளைத் திரட்டி துரத்திவந்த அர்ஜுனன் எங்கள் நாட்டுக்குள் புகுந்து எரியூட்டினான். எங்கள் குடிகளை அழித்தான். எங்கள் நாட்டை சாம்பலும் இடிபாடுகளும் கண்ணீரும் நிறைந்ததாக ஆக்கிவிட்டு திரும்பிச்சென்றான்.”

“விராடப் படைகள் என்னை சிறைபிடித்துச் சென்றன. அகுரம் என்னும் மூங்கில்கோட்டையில் என்னை சிறையிட்டன. பன்னிரு நாட்கள் அங்கே நான் சிறையிலிருந்தேன். என் குடியினர் வந்து பொன்னும் பொருளும் வைத்து அடிபணிந்து, ஏழுமுறை வணங்கி, முடிநிலம் வைத்த பின்னரே விடுவிக்கப்பட்டேன்” என சுசர்மன் சொன்னான். “அன்று ஒன்று உணர்ந்தோம். எங்களால் அர்ஜுனனையோ நகுலனையோ பழிவாங்க முடியாது. அவர்களுக்கு நிகரான எதிரி உருவாகும்போது எதிர்ப்புறம் சேர்வதொன்றே வழி. அதற்காக காத்திருந்தோம். அவையோரே, அரசே, நாங்கள் குருக்ஷேத்ரம் வந்தது அதற்காகவே.”

“இப்போரில் மீளமீள பாண்டவர்களை நாங்கள் தாக்கினோம். ஒருபோதும் அவர்களை வெல்ல எங்களால் இயலவில்லை. இன்றும் நாங்கள் களத்தில் சிதறடிக்கப்பட்டோம். புண்பட்டு சோர்ந்து குடிலுக்குத் திரும்பினோம். சற்றுமுன்பு நாங்கள் அதையெண்ணி துயர்கொண்டிருந்தோம். என் இளையோர் கூறினர், அவர்களை வெல்ல இயலாதென்றால் அவர்கள் கையால் இறப்போம். அந்தப் புகழேனும் எஞ்சட்டும் நமக்கு என்று. நான் துயருற வேண்டாம், நம் தெய்வங்கள் நம்மை கைவிடுவதில்லை என்றேன். நாங்கள் கள்ளருந்தி துயில்கொண்டிருந்தபோது ஒரு பெண் குடிலுக்குள் வந்து எங்களை எழுப்பி கையிலிருந்த மொந்தையை நீட்டினாள்.”

துச்சாதனன் மெய்ப்பு கொண்டு ஓர் அடி முன்னெடுத்து வைத்தான். “அவள் கரியவள். நீள்மூக்கும் எருமைவிழிகளும் கொண்டவள். அவள் எங்கள் குடித்தெய்வமான தமக்கை. நான் கனவிலோ நனவிலோ என அவளை கண்டேன். என் தம்பியரை எழுப்பினேன். மெய்யாகவே என் அறைக்குள் ஒரு குடுவையில் கடுங்கள் இருந்தது. அதை மாந்தினோம். அங்கிருந்து எழுந்து இங்கே வந்தோம்” என்று சுசர்மன் சொன்னான். “அவையினரிடம் நாங்கள் கோருவதொன்றே. இன்றுவரை உங்கள் படைசூழ்கையில் எங்களை அமைத்தீர்கள். இன்று எங்களுக்கு ஒரு தனி வாய்ப்பு கொடுங்கள். கொல்கிறோம், அன்றி சாகிறோம். இனிமேலும் பொறுத்திருக்க எங்களால் ஆகாது.”

“இன்று இங்கே வருவதற்கு முன்னர் போர்வீரர்களுக்குரிய அந்தத் தொன்மையான வஞ்சினத்தை நாங்கள் எடுத்தோம். கரிய ஆடை அணிந்து படைக்கலங்களில் குருதி தோய்த்து எங்கள் குடிதெய்வத்தின் முன்வைத்து வணங்கினோம். நாளை அர்ஜுனனை கொல்வோம். இல்லையேல் அங்கேயே களத்தில் உயிர்விடுவோம். அவனைக் கொல்லாது எந்நிலையிலும் படைமுகத்தில் இருந்து மீளமாட்டோம். அறிக தெய்வங்கள்! அறிக மூதாதையர்! அறிக அவை!” என்றான் சுசர்மன். திகைப்படைந்த அவை அவர்களை நோக்கி அமர்ந்திருக்க வாளை உருவி மும்முறை அசைத்தபின் அவர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பினர்.

வெடித்தெழுந்ததுபோல் அவை ஓசையிட்டது. கையமர்த்தி அவர்களை நிறுத்திய பின் துரியோதனன் “நமது படைசூழ்கை என்ன என்று சொல்லுங்கள், அஸ்வத்தாமரே” என்றான். அஸ்வத்தாமன் தோல்சுருளை எடுத்து துரியோதனனிடம் அளித்துவிட்டு அவை நோக்கி திரும்பி “இம்முறை நம் இலக்கென்ன, அவர்களின் காப்புமுறை என்ன என இரண்டையும் நோக்கவேண்டியிருக்கிறது. நாளை அவர்களின் முதன்மைக் கவலை யுதிஷ்டிரரை காப்பதாகவே அமையும். இன்று நாம் அவரை கவர முயன்றதை அவர்களின் படைகள் நன்கு அறிவார்கள். ஆகவே அவர்களால் நாளை யுதிஷ்டிரரை ஒளித்து நிறுத்த முடியாது. அது அவருக்கு இழிவை உருவாக்கும்” என்றான்.

“அவரை அவர்கள் அணிசெய்து நடுக்களத்தில் கொண்டுவந்து நிறுத்தியாகவேண்டும். அவரைக் கண்டு பாண்டவப் படையினர் வஞ்சினக்குரல் எழுப்பியாகவேண்டும். அவர் படைமுகப்பில் இல்லையேல் அவர்கள் உளம்சோர்வார்கள். நாளை அர்ஜுனர் எழுவதும் ஐயத்திற்குரியது என்கையில் இதை தவிர்க்கவே முடியாது” என்றான் அஸ்வத்தாமன். “அதற்குரிய சிறந்த சூழ்கை என்பது அரைநிலவுச்சூழ்கையே. அரைவட்டவடிவிலானது அது. அதன் இரு முனைகளிலும் அவர்களிடமிருக்கும் தேர்ந்த வில்லவர்படையை நிறுத்துவார்கள். விசைகொண்ட தேர்களில் அவர்கள் இருப்பார்கள். பிறைநிலவின் இருமுனைகளும் இரு கூரிய வாள்களைப்போல.”

“பிறையின் மையத்தில் அவர்கள் யுதிஷ்டிரரை நிறுத்தினால் முழுப் படையினரும் அவரை காணமுடியும். அவர் படைமுகப்பில் நிற்பதாகவும் தோன்றும். ஆனால் அவர் உண்மையில் படைகளுக்கு உள்ளேதான் நின்றிருக்கிறார். அவரை நாம் தாக்கமுயன்றால் அரைநிலவின் இருமுனைகளும் வளைந்து முன்னெழுந்து அவரை கவரப்போகும் படைகளை சூழ்ந்துகொள்ளும்” என அஸ்வத்தாமன் தொடர்ந்தான். “அவரை அவர்கள் நமக்கு ஒரு பொறியாகவும் வைக்கலாம். அவரை காட்டிவிட்டால் நம்மால் கவராமலிருக்க இயலாது. அது நம் படைகளுக்கு முன் நாம் இழிவுகொள்வது. பன்றிக்கு வைக்கப்படும் பொறி அது. கவரச்சென்றால் இருபுறமும் இழுவிசை கொண்டு நின்றிருக்கும் வாள்களால் வெட்டப்படுவோம்.”

“நம் சூழ்கை என்ன?” என்று சல்யர் கேட்டார். “அதை நன்கு ஆராய்ந்தபின் நான் நமக்கு வகுத்துள்ளது கருடச்சூழ்கை” என அஸ்வத்தாமன் சொன்னான். “கருடனின் சிறகுகளும் வலுவான படைக்கலங்களே. கருடன் கூரலகை நீட்டி யுதிஷ்டிரரை கொத்தி எடுக்கட்டும். இருபக்கமும் எழுந்து அணையும் பிறையின் முனைகளை கருடனின் இரு சிறகுகளும் தடுக்கட்டும்.” சுசர்மன் “கருடனின் கழுத்தும் அலகும் நாங்கள்…” என்றான். “ஆம், அலகென ஆசிரியர் அமைக! நீங்கள் அவருக்கு துணைசெல்க!” என்றான் அஸ்வத்தாமன். “அர்ஜுனர் எழுந்தால் அவரை அங்கர் எதிர்கொள்ளட்டும். இல்லையேல் அபிமன்யுவை.”

துரியோதனன் சூழ்கையை நோக்கிவிட்டு “பழுதற்றிருக்கிறது” என்றான். சல்யர் அதை வாங்கி நோக்கிவிட்டு பிற படையினருக்கு அளித்தார். அவையிலிருந்து “ஆம், இதை இறுதி செய்வோம்! கருடச்சூழ்கை அமைக!” என்று குரல்கள் எழுந்தன. அஸ்வத்தாமன் “நாளை நம் ஆசிரியர் உரைத்த வஞ்சினமும் இதனூடாக நிறைவேறும்” என்றான். துரியோதனன் கையசைத்து “அவ்வண்ணமே ஆகட்டும். நாளை நாம் கருடச்சூழ்கை அமைத்து களமெழுவோம்” என்றான். பின்னர் திரும்பி அவைக்கு வெளியே இடைநாழியில் நின்றிருந்த துச்சகனிடம் “ஒற்றுச்செய்திகள் ஏதேனும் வந்துள்ளனவா?” என்றான். துச்சகன் “மூத்தவரே, சற்று முன் வந்த செய்திகளின்படி இளைய பாண்டவர் இன்னும் உயிர்மீளா நிலையிலேயே படுத்திருக்கிறார். அபிமன்யுவும் சுருதகீர்த்தியும் கட்டுகளுடன் தங்கள் குடில்களுக்குத் திரும்பி அகிஃபீனா உண்டு ஓய்வெடுக்கிறார்கள். நகுலனும் சகதேவனும்கூட நலம் பெற்றுவிட்டார்கள்” என்றான்.

துரியோதனன் “இளைய யாதவர் என்ன செய்கிறார்?” என்றான். “அவர் இன்னும் தன் தோழரை சென்று பார்க்கவில்லை. தன் குடிலுக்குள் ஓய்வெடுக்கும் பொருட்டு சென்றார். அங்கு அவரைக் காத்து அவரது அணுக்கர்கள் இருவர் நின்றிருந்தனர். அவர்கள் மரவுரியால் அவர் உடலை தூய்மை செய்தனர். தன் குடிலுக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டார். வழக்கம்போல் இன்றும் காவிய ஆய்வில் மூழ்கிவிட்டாரென்று தொலைவிலிருந்து நோக்கும் நமது ஒற்றன் செய்தி அனுப்பியிருக்கிறான்” என்றான் துச்சகன்.

“விந்தைதான்!” என்று துரியோதனன் சொன்னான். “தன் தோழனை அவர் ஏன் கைவிட்டார்? ஏன் சென்று அவனை பார்க்கவில்லை? அவர் சென்று நோக்கினாலேயே அவன் நலம் பெறக்கூடும் என்று சொல்லப்படுவதுண்டே?” “நோக்கி பயனில்லை என்று எண்ணியிருக்கலாம். அர்ஜுனன் களமெழவில்லை எனில் எவ்வண்ணம் போரை நிகழ்த்துவோம் என்று சூழ்கை வகுத்துக்கொண்டுமிருக்கலாம்” என்று ஜயத்ரதன் சொன்னான். அவையில் குழப்பமான பேச்சொலிகள் எழுந்தன.

துரியோதனன் “ஒருவேளை…” என்றபின் கைவீசி அதை விலக்கி “அவ்வாறு எளிதாக இது முடியுமென்று எனக்கு தோன்றவில்லை. எப்போதுமே இது இவ்வாறு நம்முடன் விளையாடுகிறது. அண்மையிலெனக் காட்டுகையில் நாம் நம்பிக்கை கொள்கிறோம். நம் ஆற்றலைக் குவிக்க தயங்குகிறோம். அர்ஜுனன் நாளை படையில் முழுவிசையுடன் எழுவான், வஞ்சம் தீர்க்கும் வெறியுடன் வில்லெடுப்பான் என்று நம்பியே நாம் களச்சூழ்கையை அமைப்போம்” என்றான்.

கர்ணன் எழுந்து “ஆம், அதுவே எனது எண்ணமும்” என்றான். அனைவரும் தலைதூக்கி வானிலெனத் தெரிந்த அவன் முகத்தை பார்த்தார்கள். “நான் ஓய்வெடுக்க விழைகிறேன்” என்றபடி தலைவணங்கி கர்ணன் வெளியே சென்றான். துரியோதனன் துச்சாதனனை நோக்கி கர்ணனுடன் செல்லும்படி விழி காட்டினான். துச்சாதனனும் தலைவணங்கி கர்ணனுக்குப் பின்னால் சென்றான்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஒரு தொல்நகரின் கதை
அடுத்த கட்டுரைவரைகலை நாவல்கள் – கடிதம்