வரைகலை நாவல்கள் [graphic novel] மேல் எனக்கு பெரிய ஆர்வமிருந்ததில்லை. நான் வாசித்தவரை அவை ஆழமானவையாகவும் தெரியவில்லை. ஒருவகையில் அவை வாசிப்புக்கு இடர் அளிப்பவை. நம் வாசிப்பின்போது மொழியிலிருந்தே கால இடச்சூழலை உருவாக்கிக் கொள்கிறோம். காட்சிக் கோணங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறோம். நான் வாசிக்கையில் ஒவ்வொரு வாசிப்புக்கும் புனைவுகள் அளிக்கும் காட்சிகள் மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன். வரைகலை நாவல்கள் அவற்றை நம் சார்பில் தாங்களே முற்றாக வகுத்து முடிவெடுத்துவிடுகின்றன. நாம் செய்வதற்கொன்றுமில்லை.
ஆனால் பிறிதொரு தருணத்தில் எனக்கு வரைகலைநாவல்கள் தேவைப்பட்டன. மூளை வேறொரு புனைவில் வேர் அமிழ்ந்து சிக்கியிருக்கையில் வாசிப்பது கடினமாக ஆகியது. ஆனால் அவ்வப்போது எளிய வாசிப்பும் தேவைப்பட்டது. ஆகவே படக்கதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். பெரும்பாலும் முத்து காமிக்சின் டெக்ஸ் வில்லர். அவை நான் பெரிதும் நாடிய எளிய இளைப்பாறலை அளித்தன.
எனக்கு அமெரிக்காவின் வன்மேற்கு [wild west] நிலப்பகுதிமேல் பெரிய ஆர்வம் உண்டு. நான் சிறுவனாக இருந்தபோதே கௌபாய் கதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன். என் நிலம் பசுமையும் அழகும் கொண்டது. அதற்கு முற்றிலும் மாறான அந்த வறண்ட வெற்றுநிலம் அளிக்கும் பரவசமே முதன்மைக் காரணம். அங்கிருக்கும் தனிமை. என் நிலம் மக்கள் செறிந்தது. பேச்சிப்பாறையின் அடர்காடுகளில்கூட இன்னொருவர் நம்மிடம் ‘சோமா இருக்கேளா?” என்று கேட்க எல்லா வாய்ப்பும் உண்டு. டெக்ஸ் வில்லர் கும்பல் பாலையின் விரிநிலத்தில் மூன்றுகால்நாட்டி கெட்டிலை தொங்க விட்டுக்கொண்டு காபி போட்டு குடிக்கும் காட்சி என்னை கனவில் ஆழ்த்தியிருந்தது. பின்னர் நேரில் சென்று அந்நிலத்தை பலகோணங்களில் பார்த்துவிட்டு வந்தபோதிலும்கூட அதிலிருந்து தப்ப முடிந்ததில்லை. இருபத்தைந்தாண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் டெக்ஸ் வில்லர் கதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். அதே கனவு நீடித்தது. அத்துடன் அதற்கு மூளை தேவையுமில்லை என கண்டடைந்தேன்.
அவ்வாறு வரைகலை நாவல்களுக்குள் சென்றபின்னர் ஒருநாள் என் நூலகத்தொகையில் ஓசாமு டெஸுக்கா எழுதிய புத்தா என்னும் வரைகலை நாவலின் முதல் பகுதியாகிய கபிலவாஸ்துவை கண்டடைந்தேன். எவரோ எனக்கு அன்பளிப்பாக அளித்தது. நான் அதை பலமுறை கையில் எடுத்திருந்தாலும் இன்றுதான் வாசிக்க முடிந்தது. இதை என்றேனும் வாசிப்பேன் என நான் எண்ணவே இல்லை. ஏனென்றால் அப்படி புதிய புதிய உலகங்களுக்குள் செல்லும் ஆர்வம் எனக்கு இன்று இல்லை. நான் செல்லும் உலகங்களிலேயே கண்டடைவதற்கு ஏராளமாக உள்ளன.
இந்நாவல் ஜப்பானிய வரைகலையான மங்கா பாணியைச் சேர்ந்தது. இந்த வரைகலைக்கோடுகள் முற்றிலும் வேறுபட்டவை. டெக்ஸ் வில்லர் கதைகளின் ஓவியங்கள்போல நிலக்காட்சிகளையும் மனிதர்களையும் மெய்யுருவில் காட்ட முயல்பவை அல்ல. சினிமாபாணி காட்சிக்கோணங்கள் கொண்டவையும் அல்ல. இவை கேலிச்சித்திரங்களுக்கு இணையான எளிமை கொண்ட கோடுகளால் ஆனவை. கொந்தளிப்பான, நம்பமுடியாத அசைவுகளின் அசையாச்சித்திரங்கள். உணர்ச்சிவெளிப்பாடுகளிலும் கேலிச்சித்திரங்களுக்குரிய மிகை உண்டு. ஆனால் இவற்றை நாம் சற்று கூர்ந்து நோக்கி இவற்றின் உலகுக்குள் நுழைய முடிந்தால் உள்ளிழுத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவை.
ஓசாமு டெசுக்கா [Osamu Tezuka – 1928 –1989] ஜப்பானிய மங்கா வரைகலை நாவல் உலகின் பெரிய பெயர்களில் ஒன்று. வால்ட் டிஸ்னிக்கு இணையான ஜப்பானியக் கலைஞர் என கருதப்படுபவர். டெசுக்காவின் New Treasure Island என்னும் வரைகலைப்படைப்பு 1947-இல் வெளியானது. அது ஜப்பானிய மங்கா யுகத்தை தொடங்கிவைத்தது. புத்தா அவருடைய உச்சப்படைப்பு.
ஒசாமு டெசுக்காவின் புத்தா என்னும் வரைகலை நாவல் வரைகலைநாவல் உலகின் ஒரு பெரும் செவ்வியல்படைப்பு என்று சொல்லப்படுகிறது. உலகளாவிய பல பரிசுகளை பெற்றது இது. 1972-இல் தொடங்கி 1983-இல் முழுமை அடைந்தது. நான் இணையத்தில் நூல்வாங்கும் வழக்கத்தை இன்னமும் தொடங்கவில்லை. பல சர்வதேச விருதுகளைப் பெற்றது இந்த வரைகலைநாவல். 2004-இல் வரைகலைநாவலுக்கான Eisner Award இதற்கு அளிக்கப்பட்டது. இந்நாவல்நிரை திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது. மூன்று பகுதிகளால் ஆனது. முதற்பகுதி கபிலவாஸ்து மட்டுமே என்னிடம் உள்ளது. எஞ்சிய இரண்டு பகுதிகளை இனிமேல்தான் படிக்கவேண்டும். வாங்கவேண்டும்.
இந்நாவலை குழந்தைகள் ஆர்வத்துடன் படிக்கக்கூடும். குழந்தைகளுக்கு உவப்பான கொந்தளிப்பான காட்சிச்சித்தரிப்புகள், அரிய வீரச்செயல்கள், மானுடத்தன்மைமீறிய கதைநாயகர்கள், திருப்பங்கள் கொண்ட கதையோட்டம் ஆகியவை கொண்ட நாவல் இது. இதன் உலகத்திற்குள் நுழைபவர்களுக்கு அவையெல்லாம் நம்பகமானவைதான். ஒன்றிலிருந்து ஒன்றுக்கு என நாம் சென்றுகொண்டிருக்கும் கனவுருக்காட்சிகளில் மானுடத் துயரும் மானுடக்களிப்பும் மானுடவெற்றியுமே வெளிப்படுகிறது. ஆனால் அவை வேறெங்கோ ஒரு களத்தில் கூர்கொண்டு நின்றிருப்பதாகவும் நமக்குப் படுகிறது.
இதிலுள்ள முதன்மையான கூறு ஒன்றுண்டு, செவ்வியலுக்கும் மானுடத்தன்மைக்கு அப்பாற்பட்டவற்றுக்குமான உறவு. புத்தரின் கதை, அன்றிருந்த தத்துவக்கொந்தளிப்பும் அரசியல் அலைகளும், நடப்பியல் நோக்கில் சொல்லப்பட்டிருந்தால் இதிலுள்ள செவ்வியல்கூறு நிகழ்ந்திருக்காது. ஏனென்றால் புத்தரின் பிறப்பும் மெய்யறிதலும் உலகவெற்றியும் எளிய அன்றாட நடப்புகள் அல்ல. நாமறிந்த அன்றாடத்தை கற்பனையிலிருந்து முற்றாக உதறாமல் அந்தத் தளத்தை நோக்கி நாம் செல்லவே இயலாது. மாபெரும் மெய்த்தேடிகள், வீரர்கள் எவ்வகையிலோ அன்றாடத்தை உதறியவர்கள்தான். அன்றாடத்தின் சலிப்பூட்டும் சின்னஞ்சிறுதன்மையில் கண்டடைதல் இல்லை. மாபெரும் வெற்றிகள் இல்லை. மெய்யறிவும் இல்லை. அன்றாடம் மானுடத்தின் சராசரிகளால் ஆனது. மானுடன் தன் சாரத்தை உச்சநிலைகளிலேயே கண்டடைய முடியும். வீரமும் மெய்மையும் அங்குதான் விளையும்.
அந்த உச்சநிலைகள் மட்டுமே நிகழும் ஒரு களமே செவ்வியல். ஆகவேதான் மாபெரும் செவ்வியல் ஆக்கங்களில் இருந்து குழந்தைக்கதைத் தன்மையை பிரிக்க முடிவ்தில்லை. பித்தின் கட்டின்மை, கற்பனையின் விரிவு, குழந்தைகளுக்குரிய பெருவியப்புத்தன்மை ஆகியவை வரலாற்றுப்புலத்துடன், தத்துவ தரிசனத்துடன் இணைகையில் உருவாகும் உலகமே செவ்வியல். இந்நாவலை செவ்வியல் என ஐயமில்லாது சொல்லிவிடமுடியும். இதன் பல உச்சதருணங்களை வாசித்தபின்னரும் வாழ்ந்தேன். அஸிதருக்கு தன்னையே எரியிலிட்டு உணவாகக்கொடுக்கும் முயலின் கதையில் தொடங்குகிறது அந்த மிகைகற்பனை. தத்தன், சாப்ரன் ஆகியோரின் சாகசத்தன்மையினூடாக பெருங்கனவென திகழும் புத்தரின் பிறப்பு நோக்கி செல்கிறது.
இந்நாவல் புத்தரைப்பற்றியது என்றாலும் இந்தியாவைப் பற்றியது அல்ல. டெசுக்கா இந்தியாவை புத்தர்வரலாறுகளைப்பற்றிய பிற்காலத்தைய நூல்களில் இருந்தே உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அவை பெரும்பாலும் இந்தியாவை அறியாத புத்த பிட்சுக்களால் இந்தியா குறித்த செய்திகளால் உருவாக்கப்பட்டவை. அதிலுள்ள இந்தியச்சித்தரிப்பு பெரும்பாலும் ஜப்பானிய யதார்த்தம் சார்ந்தது.
ஓர் உதாரணம் சொல்லலாம். சூத்திரர்கள் எந்நிலையிலும் எவ்வகையிலும் சாதியின் அடையாளத்திலிருந்து மீளவோ, பிறிதொரு வாழ்க்கைக்குச் செல்லவோ இயலாது என டெசுக்காவின் நாவலான ‘கபிலவாஸ்து’ சொல்கிறது. ஆனால் அது அந்தக்கால நடப்பு அல்ல. மகாபாரதம் முதல் புத்தசரிதம் வரை அவ்வாறு அல்ல என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. சூத்திரப்பிறப்பிலிருந்து தங்கள் திறனால் அரசர்கள் ஞானிகள் என மேலெழுந்த மனிதர்கள் ஏராளமானவர்கள். சூத்திர ஜாதியினர் தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டு அரசுகளை அமைத்துள்ளனர் – மாபெரும் மௌரியப்பேரரசே அவ்வாறு உருவானதுதான். அவ்வாறு தங்களை நிலைமாற்றிக்கொள்வதற்கான பல்வேறு சமூகச்சடங்குகள் இருந்தன. அவை இன்றும் நீடிக்கின்றன.
டெசுக்கா ஜப்பானிய அடிமைமுறையைக்கொண்டு இந்திய சாதிமுறையை புரிந்துகொள்கிறார். இது ஜப்பான் போன்று சமூக அமைப்பு நிலைபெற்றுவிட்ட மிகச்சிறிய நாட்டின் அமைப்பு அல்ல. பல்லாயிரம் இனக்குழுக்கள் தங்கள் மேலாதிக்கத்துக்காக முட்டிமோதிக்கொண்டிருந்த ஒரு பெரிய வாழ்க்கைச்சூழலின் முரணியக்கக் களம். ஒவ்வொருகணமும் மாறிக்கொண்டிருப்பது. இத்தகைய சிறிய, ஆனால் முக்கியமான மாறுபாடுகள் வழியாக இதுகாட்டும் சித்திரம் நமக்கு அயலானதாகவே உள்ளது.
இந்நாவல் உருவாக்கும் முழுமையான தரிசனம் என்ன என்பதை எஞ்சிய பகுதிகளை வாசித்தபின்னரே சொல்லமுடியும். ஆனால் இந்நாவலில் இருந்து கிடைக்கும் சித்திரமும் இந்தியாவிலிருந்து எழுந்தது அல்ல, முழுக்கமுழுக்க ஜப்பானியத்தன்மை கொண்டது இது. அன்றைய இந்தியா ‘தத்துவம் அற்ற’ வறுமையில் இருந்தது என எந்த வரலாற்றாசிரியனும் சொல்ல மாட்டான். நம்பமுடியாத மானுடத்துயர்களில் இருந்து ‘இறங்கிவந்தது’ போல ஒரு மெய்மையாக பௌத்தம் எழுந்தது என்றும் சொல்லமாட்டான்.
அன்றைய இந்தியப்பெருநிலம் தத்துவமோதல்களின் பெருங்களம். இந்தியாவின் மாபெரும் நிலவிரிவு காரணமாக ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மக்கள்குழுவும் தனக்கான தரிசனத்தை, தத்துவத்தை கண்டடைந்தது. இந்தியா ஒரே தட்பவெப்பம் கொண்ட நிலமாக இருந்தமையால், இமையம் போன்ற பெரிய மலைகளாலோ பாலைகளாலோ பிரிக்கப்படாத பரப்பாக இருந்தமையால் ஒற்றை மானுடவெளியாக ஆகியது. வணிகப்பாதைகளினூடாக இணைக்கப்பட்டது. விளைவாக அத்தனை தத்துவங்களும் தரிசனங்களும் ஒன்றோடொன்று முட்டிமோதின. உண்டு செரித்தன. கீறி மேலெழுந்தன. தழுவி வளர்ந்தன. அந்த மாபெரும் விவாதக்களத்தில் விளைந்ததே பௌத்தம்.
பௌத்தம் சாங்கியத்தின், ஆசீவகத்தின், சமணத்தின் நீட்சி. அதன் மறுபக்கமாகத் திகழ்ந்தது வேதாந்தம். விவாதம் வழியாக அது வேதாந்தத்தில் இருந்து பெற்றுக்கொண்டதே மிகுதி. வேதாந்தம் இல்லாமல் பௌத்தம் இல்லை என்றே சொல்லலாம். அதேபோல பிற்கால வேதாந்தங்களைப் பொறுத்தவரை பௌத்தம் இல்லாமல் அவையும் இல்லை. இந்த விரிவான சித்திரத்தை இந்நூலில் இருந்து பெற இயலாது. இச்சித்திரத்தின் தொடக்கம்கூட இதில் இல்லை. டெஸுக்காவுக்கு அத்தகைய அழுத்தமான புரிதலேதும் இருந்ததாகவும் தெரியவில்லை. ஏராளமான மேலைநாட்டு ஆய்வாளர்களிடமிருக்கும் மேலோட்டமான தத்துவப்புரிதல்தான் அவரிடமும் உள்ளது.
அத்துடன் இன்னொன்றையும் சொல்லவேண்டும். டெஸுக்கா காட்டும் இந்த ஞானத்தேடல் ஜப்பானிய ஜென் வழிமுறை சார்ந்ததே ஒழிய இந்தியத்தன்மை கொண்டது அல்ல. புத்தர்காலத்து இந்தியா தீவிரமான தர்க்க வழிகளை கண்டடைந்தது. உள்ளுணர்வைத் தீட்டும் தியானமுறைகளையும் கையாண்டது. இரண்டும் ஒன்றை ஒன்று நிரப்பி அடையும் ஒன்றாகவே பௌத்தமெய்யறிதல் இருந்தது. யோகாசாரம் என பௌத்தம் தன் அறிதல்முறையை சொல்கிறது. அதுவே பிற்கால வேதாந்தங்களிலும் திகழ்ந்தது. இந்நாவல் காட்டும் மெய்யறிதல்கள் ஜென் பௌத்தத்தின் ‘ஒருகணத் திறப்பு’ என்னும் வகையில் அமைந்துள்ளன. ஓர் அதிர்வில் உள்ளம் தன் கோணத்தை மாற்றிக்கொள்வது, அகம் தன் ஆழம்நோக்கி திறந்துகொள்வது அந்த முறை. அது ஊழ்கத்தை அந்தக்கணம் நோக்கிச் செல்லவே பயன்படுத்துகிறது.
செவ்வியலுக்குரிய நகைச்சுவையும், ஆசிரியரே அவ்வப்போது புனைவுக்குள் ஊடுருவும் மீமொழிபுத்தன்மையும் [meta narration] கொண்டது இப்படைப்பு. கோஸலத்திற்குள் நுழையும்போது ஒரு வணிகன் அந்நகர் நியூயார்க் நகருக்கு இணையானது என்கிறான். புத்தரின் அன்னைக்கு பேறுபார்க்க டெசுக்காவே டாக்டராக நவீன உடையில் ஓரமாக வந்து நிற்கிறார். ஆசிரியரின் நுண்ணிய விளையாட்டுக்களை நாவல் முழுக்கவே பார்த்துச்செல்லமுடியும். அதேசமயம் நாவல் முன்வைக்கும் மையத்தரிசனங்கள் அவற்றுக்குரிய கவித்துவமான தீவிரத்துடனேயே வெளிப்படுகின்றன.
அறிதல்களின் வெவ்வேறு வாய்ப்புகளைக்கொண்டு பின்னப்பட்டிருக்கிறது இந்நாவல். தத்துவத்தின் பரிணாமத்தை எளிமையாக வாசிக்க விழைபவர்களுக்குரியது. ஆனால் இதன் குறைபாடு என்பது இதன் வரைகலைவடிவே என்றும் தோன்றுகிறது. ஒவ்வொன்றிலும் நாம் நின்று வாழ்ந்து விரிந்து கடந்துசெல்வதில்லை. மாறாக மிகவிரைவாக அனைத்துக்கும் மேல் பறந்துசெல்கிறோம்.