யுதிஷ்டிரர் மீண்டுவிட்டதை அறிவித்த முரசொலி கர்ணனை சீற்றம்கொள்ள வைத்தது. “அறிவிலிகள்! வீணர்கள்!” என்று கூவியபடி வில்லை ஓங்கி தேர்த்தட்டில் அறைந்தான். பற்களை நெரித்தபடி அவன் தன் அம்புகளை மேலும் விசையுடன் தொடுத்தான். அவன் அம்புகள் இலக்கு பிழைத்ததே இல்லை என்பதை பாண்டவர்கள் கண்டனர். அவை வளைந்தும் நெளிந்தும் ஏறியும் இறங்கியும் இலக்குகளை தேடிச்சென்று தைத்தன. “அவை அம்புகள் அல்ல! மாற்றுருக்கொண்ட நாகங்கள்!” என்று ஒரு வீரன் கூவினான். “நாகங்கள் மட்டுமே இவ்வாறு வானில் நெளிந்து பறக்க இயலும்!” எங்கும் “நாகங்கள்! பறக்கும் பாம்புகள்!” என்னும் கூச்சல்கள் எழுந்தன.
சாத்யகி விலகிச்சென்று பூரிசிரவஸை எதிர்கொள்ள திருஷ்டத்யும்னன் படைநடத்தும் ஆணைகளை அறிவிக்கும்பொருட்டு பின்னடைய அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் இருபுறமும் கர்ணனை எதிர்த்தனர். அதிரதனின் இளையோனாகிய தீர்க்கரதனின் மைந்தர்கள் துருமனும் வித்பலனும் விருத்ரதனும் சத்ருந்தபனும் அவனுக்குப் பின்னால் தேர்களில் வந்தனர். கர்ணனின் மைந்தர்களான விருஷசேனனும் விருஷகேதுவும் திவிபதனும் சத்ருஞ்சயனும் சுதமனும் சத்யசேனனும் சித்ரசேனனும் அவர்களுடன் இருந்தனர். மீன்கூட்டம்போல அவர்களின் வெள்ளிமின்னும் தேர்களின் அரைவளையம் பாண்டவ மைந்தர்களைச் சூழ்ந்தது.
அபிமன்யூ தன் தேர்ப்பாகனை காலால் உதைத்து “செல்க! செல்க!” என்று கூவினான். கர்ணனின் முன்னால் வந்து நின்று அவன் செலுத்திய அம்புகளை அறைந்து தெறிக்கச்செய்தான். “இதோ, நாகங்களை வெல்லும் கருடன்!” என்று கூவியபடி அபிமன்யூ ஏவிய அம்பு வந்து கர்ணனின் தேரை அறைய அவன் சற்று நிலையழிந்தான். கர்ணன் அம்புதேர்வதற்குள் அவன் பாகனின் தலையை அறுத்துவீசியது அபிமன்யூவின் வாளி. “தொடர்க! தொடர்க!” என கர்ணனின் படைக்குப் பின்னால் போர்முரசு முழங்கியது. “பாண்டவ மைந்தரை குறைத்து எண்ணாதீர்கள். அவர்களைச் சூழ்ந்து வெல்க! கர்ணனின் பின்பக்கத்தை காத்துகொள்க!” துருமன் பாய்ந்து கர்ணனின் தேரிலேறிக்கொண்டு அதை நிலைபெறச்செய்து முன்னால் செலுத்தினான்.
கர்ணன் சீற்றத்துடன் விருஷகேதுவிடம் “நீங்கள் சுருதகீர்த்தியை வளைத்துக் கொள்ளுங்கள். நான் இக்களத்திலேயே இந்த நாணிலா மைந்தனை கொன்றுவீழ்த்துகிறேன்” என ஆணையிட்டபடி தேர் விசைகொள்ள முன்னால் பாயந்தான். அபிமன்யூவின் தேர்ப்பாகன் அம்பு தைத்த நெஞ்சைப்பற்றியபடி இறந்து விழுந்தான். அபிமன்யூவின் தேரின் குதிரைகள் நான்கு தலையறுந்து விழுந்தன. அவன் கொடியும் தேர்மகுடமும் உடைந்தன. அபிமன்யூ பின்புறமாகப் பாய்ந்து புரவியிலேறி பாண்டவப் படைகளுக்குள் நுழைந்தான். விருஷசேனனுடன் நேர்நின்று பொருதிய சுருதசேனன் அவன் எய்த அம்பை தோளில் ஏற்று புண்பட்டு தேர்த்தட்டில் விழ அவனை பாண்டவர்கள் பின்னெடுத்துச் சென்றனர். அவர்களை விருஷகேதுவும் சத்ருஞ்சயனும் துரத்திச்சென்றனர்.
கௌரவப் படை கர்ணனின் தலைமையில் மீண்டும் கூர்கொண்டு பாண்டவப் படையை அறைந்தபடி முன்னெழுந்து சென்றது. கர்ணன் கணந்தோறும் சீற்றமும் விசையும் மிகுந்தவன் ஆனான். அவனைத் தடுக்க பாண்டவப் படைகள் அனைத்தும் அடுக்கடுக்காக இணைந்து அரணமைத்தும் முடியவில்லை. யுதிஷ்டிரரை இழந்த சினம் மேலோங்க தன் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இழந்து கூச்சலிட்டபடியும் வசைபொழிந்தபடியும் பாண்டவப் படையைத் தாக்கிய துரோணரை துருபதனும் திருஷ்டத்யும்னனும் வந்து எதிர்கொள்ள சிகண்டி கிருபரை தடுத்தார்.
கர்ணன் தேர்த்தூணை ஓங்கி ஓங்கி அறைந்து “செல்க! முன்செல்க!” என்று ஆணையிட்டான். காட்டெரி மரங்களைப் பொசுக்கி ஊடுருவுவதுபோல அவன் தேர் பாண்டவப் படைகளுக்குள் சென்றது. இருபுறமும் பாண்டவ வில்லவர்கள் அவன் அம்புகள் பட்டு தேர்களிலிருந்து துடித்து கீழே விழுந்தனர். கர்ணன் இலக்கு நோக்குவதையே பாண்டவப் படையினர் காணவில்லை. அம்புகள் தாங்களாகவே ஆவநாழியிலிருந்து எழுந்து அவன் கையிலமர்ந்து நாணிலிழுபட்டு எழுந்து சீற்றொலி எழுப்பி பாய்ந்து வருவதாகவே அவர்களுக்குத் தோன்றியது. அவர்கள் வளைந்தாலும் நெளிந்தொழிந்தாலும் ஒளிந்தாலும் அவற்றிடமிருந்து தப்ப இயலவில்லை.
கர்ணனின் ஓர் அம்பு அவர்களின் கவச இடுக்கை புகுந்து தொட்டு நிலையழியச் செய்ய மறுகணம் பிறிதொரு பேரம்பு வந்து அவர்களின் தலைகளை கொய்து வீழ்த்தியது. அம்புகள் தங்களுக்குள் பேசிக்கொள்ள முடியுமென்று, காற்றில் தங்கள் திட்டங்களை வகுத்துக்கொண்டு தாங்களே ஒரு சூழ்கை அமைத்து வந்து தாக்கக்கூடுமென்று அவர்கள் முன்பு அறிந்திருக்கவில்லை. எழும் ஒரு அம்பை தடுத்து அடிப்பதற்கு அவர்கள் அம்பெடுப்பதற்குள் பிறிதொரு அம்பு வந்து அந்த அம்பை எடுத்த கையை தாக்குமென்றும் விண்ணில் சீறி எழுந்த அம்பு வளைந்து கீழிறங்கி விழுந்து கிடப்பவனை தேடி வந்து தைக்குமென்றும் அக்கணத்தில்தான் முதலில் கண்டனர்.
“இது போரல்ல! இது போரே அல்ல! இது நாகர்களின் மாய வித்தை!” என்று பாஞ்சாலப் படைவீரர்கள் கூச்சலிட்டனர் “எழுகின்றன கொடிய நச்சுநெளிவுகள்! நாபறக்கும் பாதாளக் கணைகள்! நாம் மானுடரிடம்தான் போரிட முடியும்! மண்ணுக்கடியிலிருந்து பெருகியெழும் தெய்வங்களுடனல்ல” என்று வில்லவன் ஒருவன் தேரைத் திருப்பியபடி கூவினான். அவன் சொற்கள் காற்றில் அலைகொண்டு நிற்கவே அவன் தலையை வெட்டி கொண்டு சென்றது பன்னகவாளி. அவனை நோக்கி அஞ்சி கூச்சலிட்டவனின் குரலையே இரண்டாக வெட்டிச்சென்றது பிறிதொரு அம்பு.
யுதிஷ்டிரரை பாண்டவப் படைக்குள் புகுத்திவிட்டு படைமுகப்பிற்கு வரும் வழியிலேயே அர்ஜுனன் கர்ணன் பாண்டவப் படைகளை அழித்து முன்னெழுந்துவிட்டதை முரசொலிகளிலிருந்து உணர்ந்தான். தேரில் விழுந்துவிட்ட சுருதகீர்த்தியை இழுத்து கொண்டுசென்று பின்னால் நகர்ந்த மருத்துவ ஏவலரையும் தொடர்ந்து அபிமன்யூ தரையிலமர்ந்து தன் புண்களுக்கு கட்டுபோட்டுக்கொண்டிருப்பதையும் கண்டான். சகதேவனும் நகுலனும் வில்லும் அம்பும் இழந்து கர்ணன் முன்னிலிருந்து தேரிலிருந்து பாய்ந்து ஓடி ஒளிந்து தப்பினார்கள் என அறிந்தான். அவனை எதிர்கொண்ட வீரன் ஒருவன் “அரசே, இன்னும் ஒரு நாழிகை இவ்வண்ணம் அங்கர் போரிட்டால் பாண்டவப் படைகள் இரண்டாகப் பிளந்துவிடும். நடுவே கௌரவர் ஊடுருவினால் நமக்கு முற்றழிவு” என்றான். மேலும் ஒருவன் ஓடி வந்து “பெருவில்லவர்கள் நூற்றுக்கணக்கில் விழுந்துகொண்டிருக்கிறார்கள். நிஷாத இளவரசர்களான உத்பாதரும் உஜ்வலரும் பார்க்கவரும் விழுந்துவிட்டனர்!” என்றான்.
அர்ஜுனன் “செல்க! படைமுனைக்கு விரைக!” என்று இளைய யாதவரிடம் சொன்னான். இளைய யாதவர் தன் தேரை மெல்ல ஓட்டிச்சென்றார். “செல்க! விரைக!” என்று அர்ஜுனன் கூவினான். தேர் சீராகச் செல்வதை உணர்ந்து “விரைவு கொள்க!” என்று கூச்சலிட்டான். “அங்கே அவன் யுதிஷ்டிரர் தப்பிவிட்ட சீற்றத்தில் இருக்கிறான். அச்சீற்றம் சிலரை கொன்றால் சற்றே தணியும். அதன் பின்னர் அவனை நாம் எதிர்கொள்வோம்” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் காண்டீபத்தை ஓங்கி தேர்த்தட்டில் அறைந்து “விளையாடுகிறீர்களா? நான் கோழை என எண்ணுகிறீர்களா?” என்றான். “அல்ல, ஆனால் நீ அவனுக்கு நிகர் அல்ல. அவன் வில்லெடுத்து நின்றால் நானன்றி எவரும் எதிர்கொள்ள இயலாது” என்றார் இளைய யாதவர்.
“வென்றுகாட்டுகிறேன். இக்களத்திலேயே அவனை கொல்கிறேன்!” என்று அர்ஜுனன் தொண்டை கமற, நெஞ்சில் அறைந்து வீறிட்டான். “என் எல்லை எதுவென காண்கிறேன். அறிக தெய்வங்கள், இக்களத்தில் அவனை கொன்றுவீழ்த்துவேன்!” இளைய யாதவர் புன்னகையுடன் தேரை செலுத்தினார். தொலைவில் யானைச்சங்கிலி கொடி பறந்த பூசல்சுழி அலறல்களாலும் சங்கொலிகளாலும் கொம்பொலிகளாலும் நிறைந்திருந்தது. எரியெழுந்த இடத்தில் கலைந்து விண்ணில் பூசலிடும் பறவைகள்போல் அங்கு வானில் அம்புகள் தெரிந்தன. மையத்திலிருந்து நாற்புறமும் கிளம்பும் அலையென கர்ணனால் தாக்கப்பட்டு பின்னடையும் படைகளின் கொப்பளிப்பு நெடுந்தொலைவிற்கு வளையங்களாக பரவியது. அலைகளில் எற்றுபடும் நெற்றென பார்த்தனின் தேர் அந்த வளையங்களில் ஏறி அமைந்தது.
பாண்டவப் படையின் அலைமோதலைப் பிளந்து ஊடுருவி அப்பால் சென்ற அர்ஜுனனின் தேர் கர்ணனின் அம்புகளின் தொடுஎல்லையில் உடைந்த தேர்களும் இறந்த உடல்களும் குவிந்து உருவான வேலி ஒன்றைக் கடந்து அவன்முன் சென்று நின்றது. இருவரும் ஒருவரையொருவர் எதிர்கொண்ட கணம் இரு தரப்பிலிருந்த படைவீரர்களும் சொல்லில்லா வியப்பொலி ஒன்றை எழுப்பினர். பின்னர் கௌரவப் படையினர் “நாகபாசர் வெல்க! வெல்க அங்கர்! வெல்க கதிர்மைந்தர்! வெல்க கர்ணன்!” என்று வாழ்த்தொலி எழுப்ப பாண்டவர் தரப்பினர் “எழுக காண்டீபம்! எழுக இளைய பாண்டவர்! வெல்க விண்ணவன் மைந்தன்! எழுக மின்கொடி!” என்று வாழ்த்தொலி எழுப்பினர். இரு பெருவில்லவர்களும் ஒரே கணத்தில் அம்புகளால் முட்டிக்கொண்டனர். வானில் அம்புகள் பூசலிட்டு சிதறி விழுந்தன.
போர் உச்சத்தில் தொடங்கி மேலும் மேலுமென உச்சத்திற்கு சென்றுகொண்டிருந்தது. சில கணங்களில் சூழ்ந்திருந்தோர் அனைவரும் விற்களைத் தாழ்த்தி அந்தப் போரை நோக்கலாயினர். அர்ஜுனனின் தேரை அறைந்து நிலையழிய வைத்தன கர்ணனின் அம்புகள். குரங்குக்கொடி உடைந்து தெறித்தது. காண்டீபத்துடன் தேர்த்தட்டில் விழுந்தும் ஒளிந்தும் அர்ஜுனன் போரிட்டான். அவனுடைய கவசங்களும் தலையணியும் உடைந்து தெறித்தன. ஆவக்காவலன் தேரிலிருந்து அலறியபடி கீழே விழ திகைத்து நின்ற அர்ஜுனனை நோக்கி இளைய யாதவர் “பின்னடைக!” என்றார். “முன்செல்க! முன்செல்க!” என்று அர்ஜுனன் கூச்சலிட்டான். தேர்த்தட்டில் காண்டீபத்தால் அறைந்து “முன்னெழுக! முன்னெழுக!” என்றான்.
கர்ணன் “வருக! இதுவே நாமிருவர் போரிடும் இறுதித் தருணம் என்றாகுக!” என நகைத்துக்கொண்டே அணுகிவந்தான். அவன் பற்களின் வெண்மையை அருகிலென அர்ஜுனன் கண்டான். நாகங்களின் சீறல்சூழ்ந்திருந்த காற்றில் வெள்ளிமின்னல்கள் என அம்புகள் பறந்தன. அம்பை எடுத்த கணம் அர்ஜுனன் துரோணரின் காலடிகளை எண்ணினான். அந்த அம்பை அறைந்து சிதறடித்து அவன் தொடைக்கவசத்தை உடைத்தது கர்ணன் அம்பு. அடுத்த அம்பை எடுத்தபோது அவன் இந்திரனை எண்ணினான். அந்த அம்பு துண்டுகளாக உடைந்து அவன் தேரிலேயே விழுந்தது. சீறி அணுகிய அம்பிலிருந்து தப்ப அவன் விழுந்து எழுந்தபோது பிறிதொரு அம்புவந்து அவன் கால்குறடை உடைத்தெறிந்தது.
அடுத்த அம்பை எடுத்தபோது விழிநீருடன் அவையில் நின்றிருந்த திரௌபதியை எண்ணினான். அது அன்றில்சிறகொலி எழுப்பிச் சென்று கர்ணனின் தோளிலையை சிதறடித்தது. சீற்றத்துடன் கர்ணன் அம்பெடுத்து முன்னெழுந்த கணம் அர்ஜுனனுக்குப் பின்னால் மறைந்தவனாக அபிமன்யூ அம்புதொடுத்து கர்ணனின் பாகனாக அமர்ந்திருந்த உடன்குருதியினனான துருமனின் தலையை கொய்தெறிந்தான். அர்ஜுனன் “அறிவிலி! ஒளிந்திருந்து போரிடுகிறாயா?” என அபிமன்யூவை நோக்கி சீறினான். “அவனை கொல்வேன்! அவனை கொல்வேன்!” என வெறியுடன் கூச்சலிட்டபடி அபிமன்யூ அம்புகளால் கர்ணனின் தேரிலேற முயன்ற வித்பலனை கொன்றான்.
கர்ணன் “கீழ்மகனே, முன்னால் வந்து நின்று போரிடு!” என்றான். “கொல்வேன்! என்னை எவரும் வெல்ல விடமாட்டேன்! கொல்வேன்!” என்று அபிமன்யூ பேயெழுந்தவன்போல கூச்சலிட்டுக்கொண்டே இருந்தான். அபிமன்யூவைத் தேடிவந்த கர்ணனின் அம்பை அர்ஜுனன் அறைந்து தெறிக்கச்செய்தான். அடுத்த அம்பை ஒழிய இன்னொரு தேருக்குப் பாய்ந்தான் அபிமன்யூ. அங்கே தேருக்குப் பின் ஒளிந்து நின்று கர்ணனின் இளையோன் விருத்ரதனை கொன்றான். சத்ருந்தபன் கர்ணனின் தேர்ப்பாகனாக ஏறிக்கொள்ள அவனையும் அபிமன்யூவின் வாளி வீழ்த்தியது. கர்ணனின் மைந்தர்களான விருஷசேனனும் விருஷகேதுவும் இருபக்கமும் அம்புகளால் அரணமைத்து அபிமன்யூவை தாக்கி பின்னடையச் செய்ய திவிபதன் தேர்ப்பாகனாக ஏறிக்கொண்டான்.
சத்ருஞ்சயனும் சுதமனும் சத்யசேனனும் சித்ரசேனனும் சேர்ந்து அபிமன்யூவை எதிர்த்தார்கள். அபிமன்யூவின் உதவிக்கு வந்த சகதேவனை கர்ணனின் அம்பு தோளில் அறைந்து தேரிலிருந்து விழச்செய்தது. அவனை நோக்கிச் சென்ற நகுலனை பிறிதொரு அம்பு அறைந்து வீழ்த்தியது. பாண்டவர்களின் அலறல்களுக்கும் கூச்சல்களுக்கும் நடுவே அபிமன்யூவை அம்புகளால் அறைந்து அறைந்து பின்னடையச் செய்தனர் கர்ணனின் மைந்தர். விருஷசேனனின் அம்புபட்டு அபிமன்யூ தேரில் விழுந்தான். பாகன் அவனை பின்னெடுத்துச் சென்றான். அவனைத் தொடரமுயன்ற கர்ணனின் மைந்தர்களை அர்ஜுனன் அம்புகளால் தடுத்தான். சுதமன் அர்ஜுனனின் அம்பால் தேர்த்தட்டில் விழுந்தான். சத்யசேனனை அறைந்து அப்பால் விழச்செய்தது அர்ஜுனனின் கருடபாசம்.
பெருஞ்சினத்தால் எழுந்த சிரிப்புடன் கர்ணன் அர்ஜுனனை நோக்கி வந்தான். அவன் அம்புகளால் அர்ஜுனனின் தேர் உடைந்து சிதறியது. புரவிகளில் ஒன்று கழுத்தறுபட்டு முகம்தாழ்த்திச் சரிய தேர் நிலையழிந்தது. இளைய யாதவர் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து தேரைத் திருப்பி உள்ளே அழைத்துச்சென்றார். “முன்னெடுத்துச் செல்க! முன்னெடுத்துச் செல்க!” என்று அர்ஜுனன் கூவினான். அதை இளைய யாதவர் கேட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. “யாதவரே, பின்திரும்ப வேண்டாம். இக்களத்தில் நான் பின்திரும்பினால் இனி எனக்கு புகழென்பதில்லை. நம் குடிக்கு வெற்றியென்பதில்லை!” என்று அர்ஜுனன் கூவினான். “அவன் முன்னால் இனி நிற்க இயலாது. நம் தேர் உடைந்துவிட்டிருக்கிறது. உன் அம்புகள் ஒழிந்துவிட்டிருக்கின்றன” என்று இளைய யாதவர் சொன்னார்.
“என் தலை கொடுக்கிறேன். இக்களத்தில் அவன் முன் இறந்து உதிர்கிறேன். சூதனை அஞ்சி பின்னடைந்தேன் எனும் பெரும்பழி எனக்குத் தேவையில்லை!” என்று அர்ஜுனன் கூவினான். “முன்னெடுத்துச் செல்க! முன்னெடுத்துச் செல்க!” என்று யாதவரின் பீலி சூடிய குழல்பற்றி உலுக்கினான். ஆனால் கர்ணனின் அம்பு வளையத்திலிருந்து தேரை பின்னெடுத்து மேலும் மேலும் பின்னகர்த்தி பாண்டவப் படைகளின் ஆழத்திற்குள் கொண்டு சென்றார் இளைய யாதவர். மருத்துவர்கள் பாய்ந்து வந்து தேரிலேறி கவசங்களைக் கழற்றி அவன் உடலில் பட்டிருந்த புண்களை அம்புமுனைகளைப் பிடுங்கி தூய்மை செய்து கட்டுகளை போட்டனர்.
அர்ஜுனன் விலகிய இடைவெளியை நிரப்பி முன்னெழுந்த சுருதசேனனும் சதானீகனும் இருபுறத்திலிருந்தும் வந்து கர்ணனை எதிர்கொண்டனர். அவர்களுடன் சாத்யகி வந்து சேர்ந்துகொண்டான். ஆனால் அவர்களால் கர்ணனின் விசையை சற்றும் நிலைகொள்ளச் செய்யமுடியவில்லை. பாண்டவர்கள் உளம் சோர்ந்து மேலும் மேலும் பின்னடைய கௌரவர்கள் கூச்சலிட்டு நகைத்தபடி முன்னெழுந்து வந்தனர். நிஷாத இளவரசர்கள் எழுவர் களம் பட்டனர் என அறிவித்து முரசொலி எழுந்தது. “பீஷ்மர் காற்றெனில் இவர் எரி. இனி பாண்டவப் படைகள் எஞ்சப்போவதில்லை!” என்று முதிய வீரர் ஒருவர் கூவினார். சோர்வுறுத்தும் எதையும் படையில் சொல்லலாகாதென்னும் நெறியை மீறி ஒவ்வொருவரும் அச்சத்தையும் ஐயத்தையும் கூவியறிவித்தனர். அவை ஒன்றுடன் ஒன்று கலந்து எழுந்த முழக்கத்தில் சொற்கள் பொருளிழந்தாலும் ஒலி உணர்வுகொண்டிருந்தது. கடந்துசெல்கையில் அம்முழக்கத்திலிருந்து பிரிந்து காதில் தொட்ட உதிரிச் சொற்றொடரை அம்முழக்கம் பீடமென அமைந்து தாங்கியிருந்தது.
இளைய யாதவர் திருஷ்டத்யும்னனிடம் “அலைகள்! அலைகள்!” என்று கூவி கைகளால் காட்டினார். அவர் கூறுவதை புரிந்துகொண்ட திருஷ்டத்யுமனன் “நிலைமாறாது எவரும் அங்கர் முன் நிற்கவேண்டியதில்லை. அரைநாழிகை நேரம் ஒவ்வொருவரும் அவர் முன் நின்று தடுங்கள்! ஆவநாழி ஒழியும் கணத்தில் பின்னடைந்து அடுத்தவருக்கு இடம்கொடுங்கள். கடற்பாறை முறை! கரைப்பாறையை கடலலைகள் அறைவதுபோல் முடிவிலாது நம் படைவீரர்கள் அவரை அறைந்துகொண்டிருக்க வேண்டும். மோதி உடைக்க இயலாது என்று உணருங்கள்” என்று ஆணையிட்டான். “கடற்பாறை முறை! கடற்பாறை முறை!” என முரசுகள் முழக்கமிட்டன.
அவ்வறிவிப்பை கேட்டு பாண்டவப் படைகள் மேலும் உளம் சோர்வதை விழிகளால் காண முடிந்தது. சதானீகனும் சுருதசேனனும் தளர்ந்து பின்னடைய திருஷ்டத்யும்னனும் அவன் வில்லவர்களும் கர்ணனை எதிர்கொண்டனர். அவர்கள் தளர்ந்து பின்னடைய தன் யாதவப் படைகளுடன் சாத்யகி அவரை எதிர்கொண்டான். பின்னர் விராடரும் அதன் பின்னர் துருபதனும் கர்ணனை எதிர்கொண்டனர். அலையிறங்கி உருண்டு வரும் பெரும்பாறைக்கு முன் சிறு கற்களையும் மரத்தடிகளையும் போட்டு தடுக்க முயல்வதுபோல அவன் விரைவை சற்று குறைக்கமட்டுமே அவர்களால் இயன்றது. தாக்கி தலைகொண்டு திரும்பி ஆவநாழியையே அடையும் சுழிநாக அம்புகளிலிருந்து குருதிசொட்டி கர்ணனின் தேர் நனைந்தது. அவனுக்கு மட்டுமென குருதிமழை ஒன்று பெய்ததுபோல் அதன் மகுடவிளிம்புகளிலிருந்து குருதித்துளிகள் சொட்டின. அவன் உடலெங்கும் குருதி வழிந்தது. தொல்நிலங்களிலிருந்து எழுந்துவந்த அறியாத போர்த்தெய்வம் என்று அவன் தோன்றினான்.
தேர்த்தட்டில் உடல் சோர்ந்து அமர்ந்த அர்ஜுனன் எண்ணியிராக் கணத்தில் உளமழிந்து விம்மி அழத்தொடங்கினான். திரும்பி அவனது துயரைப் பார்த்த பின் இளைய யாதவர் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தார். தான் அழுவதை தானே உணர்ந்து சினமெழ எழுந்து ஓங்கி தேர்த்தட்டில் மிதித்து “முன்செல்க, யாதவரே! இக்கணம் முன் செல்லவில்லையென்றால் இங்கேயே என் அம்பால் சங்கறுத்து விழுவேன்” என்றான். “இனி முன் செல்லலாம். உன் ஆவநாழிகளை நிரப்பிக்கொள்” என்றார் இளைய யாதவர். “இதோ துருபதனும் சத்யஜித்தும் விலகுகிறார்கள். அந்த இடைவெளியை அரைநாழிகைப் பொழுதுக்கு நீ நிரப்பு!”
“இல்லை! அங்கிருந்து நான் மீளமாட்டேன்! அவ்விழிமகன் முன்னிருந்து உயிருடன் மீளமாட்டேன்! அங்கேயே இறந்து விழுவேன்!” என்று அர்ஜுனன் கூவினான். “கீழ்மகன்! கொலையாட்டுக்கென எழுந்து வந்திருக்கிறான்! யாதவரே, இவன் வில்திறனால்தான் அஸ்தினபுரி துணிவு கொண்டது. இவனை எண்ணியே இங்கு போருக்கெழுந்துள்ளனர். எங்கள் குலமகளை அவைச்சிறுமை செய்தவன் இவன். இவன் வென்றால் உங்கள் ஒவ்வொரு சொல்லும் இம்மண்ணிலிருந்து முற்றழியும். நாகர்களால் நிறையும் இந்த நிலம். எரிந்தணைந்த காண்டவ வனத்திலிருந்து முட்டைகள் பொரித்து பெருகுவதுபோல் பாம்புகள் எழுந்து பூமியை நிரப்பும். இவனை அழித்தாக வேண்டும். நான் உங்கள் கையில் அம்பு! என்னை ஏவுக!”
மறுமொழி சொல்லாமல் புன்னகைத்தபடி இளைய யாதவர் தேரைச் செலுத்தி மீண்டும் அர்ஜுனனை கர்ணன் முன் கொண்டுவந்தார். இரண்டாம் முறை வந்தபோது அர்ஜுனன் முற்றிலும் நிலையழிந்து தீப்பற்றி எரிபவன் போலிருந்தான். அவன் அம்புகள் எழுந்து பெருமுழக்கத்துடன் கர்ணனை நோக்கி வந்தன. வெற்புகளை இடித்தழிப்பவைபோல் விசை கொண்டிருந்த அவற்றை கர்ணனின் நாகஅம்புகள் எளிதில் சுற்றி வளைத்து சிதறடித்து அப்பாலிட்டன. அவன் அம்புகள் எவையும் கர்ணனின் தேரைச் சூழ்ந்திருந்த விழிதொட இயலாத காப்பு வளையமொன்றை அணுகக்கூட முடியவில்லை. உளம் சோர்ந்து அவன் மேலும் வெறி திரட்டிக்கொண்டபோது கர்ணனின் அம்புகள் வந்து அவனை அறைந்தன. நெஞ்சில் அறைந்த அம்பால் அவன் தேர்த்தட்டிலிருந்து தூக்கி வீசப்பட்டான். அவன் கவசம் உடைந்து அம்பு ஆழப்புதைந்து நின்றிருந்தது. வலியலறலுடன் எழ முயன்றபோது மீண்டுமொரு அம்பு அவனைத் தாக்க அவன் நிலத்தில் பதிந்தான். அவன் உடல் அங்கே கிடந்து துள்ளியது.
இளைய யாதவர் தன் தேரைத் திருப்பி அர்ஜுனனை மேலும் தொடர்ந்து தாக்க வந்த கர்ணனின் அம்புகளிடமிருந்து அவனை காத்தார். அம்புகள் தேரிலறைந்து உதிர்ந்தன. ஆனால் விண்ணிலெழுந்து குத்தாக இறங்கி வந்த பிறிதொரு அம்பு அர்ஜுனனை அறைந்து புரட்டியது. முழவுகள் “இளைய பாண்டவர் விழுந்தார்! இளைய பாண்டவர் விழுந்தார்!” என்று உறுமத் தொடங்கின. சுருதசேனனும் சதானீகனும் அர்ஜுனனை காக்கும் பொருட்டு இருபுறத்திலிருந்தும் ஓடிவந்தனர். உயிர் எஞ்சியுள்ளதா என்று அறியும்பொருட்டு திருஷ்டத்யும்னன் தன் தேரிலிருந்து குதித்து தரையில் கையூன்றி தவழ்ந்து அருகணைந்தான். சுருதசேனனும் சதானீகனும் இருபுறத்திலிருந்தும் கர்ணனை நோக்கி அம்புகளை எய்து அவன் விசையை தடுக்க முயன்றனர்.
கர்ணன் உரக்க நகைத்தபடி தன் ஆவநாழியிலிருந்து நாகவாளியை எடுத்தான். அக்கணத்தை சதானீகனும் சுருதசேனனும் ஒவ்வொரு கணத்துளியென தெளிவாக கண்டனர். கர்ணனின் கண்களில் அதுவரை இருந்த கூர் அகன்று கொலைத் தெய்வங்களுக்குரிய வெறிநகைப்பு குடியேறுவதை, அவன் உதடுகள் விரிந்து வெண்பற்கள் வெளித்தெரிவதை கண்டு அவன் மானுடனல்ல மண்ணாழத்திலிருந்து எழுந்து வந்த நாகம் என்று உளமயக்கடைந்தனர். நாகவாளி புற்றிலிருந்து படமெடுத்து எழும் அரசநாகம் என ஆவநாழியிலிருந்து எழுந்ததை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தனர். பல்லாயிரம் இழுமூச்சுகள் எழ படையே சீறலோசை எழுப்புவது கேட்டது.
கர்ணன் நாகவாளியை கைசுழற்றி எடுத்து நாணிலிட்டு இழுத்த கணம் இளைய யாதவர் அதைப் பாராதவர்போல் தேர்த்தட்டில் பாய்ந்தெழுந்து பின்திரும்பி நின்று கீழே விழுந்து கிடந்த அர்ஜுனனை பார்த்தார். அவர் மேல் நாகபாசாம் பாயப்போகிறதென்று எண்ணி சதானீகன் “இளைய யாதவரே” என்று கூவினான். புன்னகையுடன் திரும்பிப்பார்த்து இளைய யாதவர் “என்ன?” என்று கேட்டார். மறுபுறம் சுருதசேனன் “நாகவாளி! அவர் கையில் நாகவாளி!” என்று கூவினான். திரும்பி கர்ணனைப் பார்த்து புன்னகைத்த இளைய யாதவர் இரு கைகளையும் விரித்தார்.
சில கணங்கள் இறுகிய வெண்நாணில் அம்பு விம்மி நின்றிருக்க அவரைப் பார்த்தபின் வில் தாழ்த்தி அம்பை எடுத்து மீண்டும் தன் ஆவநாழியிலிட்டு மறுபுறம் திரும்பி அங்கு நின்றிருந்த ஏழு பெருவில்லவர்களை ஒரே வீச்சில் கொன்றழித்தபடி “முன்னேறுக! முன்னேறுக!” என்று கர்ணன் கூச்சலிட்டான். அதற்குள் அர்ஜுனனை இழுத்து தேரிலேற்றி பாண்டவப் படைகள் உள்ளே கொண்டு சென்றன. “வீழ்ந்தான் அர்ஜுனன்! வீழ்ந்தான் இளைய பாண்டவன்!” என்று கௌரவப் படைகளில் முரசுகள் முழங்கலாயின.
பாஞ்சாலப் படைகளின் முகப்பில் நின்று போரிட்டுக்கொண்டிருந்த துரோணர் சலிப்புடன் தன் வில்தாழ்த்தி தலையை அசைத்தார். அவரருகே புரவியில் விரைந்து வந்த பூரிசிரவஸ் உரத்த குரலில் “வீழ்ந்தார் பார்த்தர்! இனி அவர் களமெழப்போவதில்லை என்கிறார்கள்” என்று கூவினான். கைகளை விரித்தபடி புரவியில் அமர்ந்தபடியே களிவெறியுடன் நடனமிட்டு “இனி அவர் களமெழப்போவதில்லை! இனி காண்டீபம் எழப்போவதில்லை!” என்றான். சீற்றத்துடன் அவனை நோக்கித் திரும்பிய துரோணர் கைவீசி “விலகு, அறிவிலி!” என்றார். அதை எதிர்பாராத பூரிசிரவஸ் தன் புரவியின் கடிவாளத்தை பிடித்திழுத்து நிறுத்தி வெற்றுவிழிகளுடன் கூர்ந்து நோக்கினான்.
மறுபுறத்தில் துரோணரை நோக்கி புரவியில் வந்த அஸ்வத்தாமன் “அவர் உயிர்துறக்கவில்லை, தந்தையே! அது வெறும் மயக்கம்தான்” என்றான். “இன்றைய போரிலிருந்து கற்றுக்கொண்ட அனைத்து ஆற்றலுடன் நாளை எழுவார். ஐயமில்லை!” என்றான். துரோணர் மெல்ல முகம் மலர்ந்து “ஆம்! அவனை வெல்ல இயலாது!” என்றார். பூரிசிரவஸ் அவர் உளநிலையை புரிந்துகொண்டு மெல்ல புரவியை இழுத்து பின்னடைந்தான். அஸ்வத்தாமன் தந்தையின் முகம் சுருங்குவதைக் கண்டதனால்தான் அருகணைந்திருக்கிறான் என்று தெரிந்தது. “காண்டீபம் ஒருபோதும் தோற்காது, தந்தையே!” என்றான் அஸ்வத்தாமன். துரோணர் “ஆம்! மெய்!” என்றார்.
அஸ்வத்தாமன் உரத்த குரலில் சூழ நின்ற அனைவரும் கேட்கும்படி “எப்போதும் கற்றுக்கொண்டிருப்பவர் அவர். இன்றைய வீழ்ச்சி இதுவரை அவர் பெற்றவற்றிலேயே மிகப் பெரிய கல்வியாக அமையக்கூடும்” என்றான். துரோணர் வாய்விட்டு நகைத்து “ஆம், பரசுராமரின் விற்தொழில் என்ன என்று இன்று புரிந்துகொண்டிருப்பான். இனி நாளை அவன் பொருதப்போவது பார்க்கவகுல முனிவரிடம்” என்றார். மேலும் நகைத்து கைதூக்கி “முதல்முறையாக பார்க்கவர் ஷத்ரியர்களிடம் தோற்கப்போகிறார். இப்புவி அதை பார்க்கவிருக்கிறது” என்றார்.