‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-21

ele1சஞ்சயன் சொன்னான். கௌரவர்களின் அரசே, குருக்ஷேத்ரத்தில் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் போர் ஒற்றைக் குவியம் கொண்டதாக ஆகிவிட்டிருக்கிறது. அங்கநாட்டரசராகிய கர்ணனும் இளைய பாண்டவராகிய அர்ஜுனரும் நிகர்நிலையில் நின்று அணுவிடை தாழாது போர்புரிந்துகொண்டிருக்கிறார்கள். கர்ணனின் விற்திறனையும் நிலைபெயராது தொல்மலைகளைப்போல் நின்றிருக்கும் அவர் உள்ளத்தையும் தொட்டுத் தொட்டு விழிபெருகி அம்மொத்தக் களத்தையுமே தன் நோக்கில் நிறுத்தியிருக்கும் பேருருவையும் கண்டு பாண்டவர்கள் மலைத்துவிட்டிருந்தார்கள். விழிக்கு ஒன்றும் தெரியவில்லையெனினும் அணுவிடை அணுவிடையென அர்ஜுனர் கைதளர்ந்து பின்னடைவதை அங்கிருந்த ஒவ்வொருவரும் உணர்ந்தனர்.

கௌரவப் படை அர்ஜுனரின் இந்திரப்பிரஸ்த வில்லவர்களின் பின்படையை சூழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக அவருக்கு இருபுறமும் சாத்யகியும் திருஷ்டத்யும்னரும் நின்று போரிட்டனர். கௌரவர்களுக்குத் துணையாக பூரிசிரவஸும் வந்தபோது நகுலரும் சகதேவரும் அவர்களை தடுத்து நிறுத்தும்பொருட்டு அங்கே சென்றார்கள். மெல்ல மெல்ல சுழிமையம் நோக்கிச் செல்லும் வாவிநீர் என பாண்டவப் படையின் வீரர்கள் அனைவருமே அர்ஜுனரை நோக்கி சென்றனர். ஆயிரம் வில்லவர்களும் ஏழாயிரம் வேல்படையினரும் அவரைச் சூழ்ந்து காத்தனர். அவர்கள் அனைவரையுமே தன் அம்புகளால் அறைந்து வீழ்த்தி பாண்டவர்களின் சூழ்கையை உடைத்து முன் சென்றுகொண்டிருந்தார் கர்ணன்.

கிரௌஞ்சம் தன் தலையை தரையோடு அழுத்தி உயிர்வலியுடன் விடுபடும்பொருட்டு இரு சிறகுகளையும் ஓங்கி அறைந்துகொண்டிருந்தது. பீமனை துரியோதனரும் சர்வதரை துச்சாதனரும் சுதசோமரை துர்மதரும் துச்சகரும் எதிர்த்தனர். கர்ணன் தன் கணமொழியா அம்புகளால் அர்ஜுனரை பின்னடையச் செய்வதை முரசொலிகளின் விசைமாற்றத்தினூடாகவே நுண்ணிதின் உணர்ந்த பீமன் அவர் உதவிக்குச் செல்ல விழைந்தாலும் அவரை நகரவிடாமல் கௌரவர்களின் சூழ்கைத் தாக்குதல் நிறுத்தி வைத்திருந்தது. சர்வதரும் சுதசோமரும் கௌரவர்களின் தாக்குதலை அன்று மும்மடங்கு விசைகொண்டதென உணர்ந்தனர். அரசே, வெற்றிபெறுகிறோம் என்னும் உணர்வைப்போல் ஆற்றல் அளிப்பது பிறிதொன்றில்லை.

இடும்பர் சூழ களம்நின்று பொருதிய கடோத்கஜனை அறைந்து பின்னடையச் செய்துகொண்டிருந்தார் பகதத்தர். சுப்ரதீகம் எடுத்துச் சுழற்றிய முள்ளுருளையால் தேர்கள் உடைந்து தெறித்தன. குருதி சிதற சிறு புழுக்களென நசுங்கினர் வீரர்கள். சகுனியின் அறைகூவல் எழுந்தபடியே இருந்தது. “எழுக! எழுக! வென்றெழுக! அவர்களின் விசை தளர்கிறது. வண்டிக் கூண்டில் சிக்கிக்கொண்டிருக்கிறது நாரை!” சுபலரையும் மைந்தரையும் சிகண்டி எதிர்கொண்டார். அவருடைய இரு மைந்தர்களும் இருபுறமும் நின்றிருக்க ஆற்றல்கொண்ட அம்புகளால் காந்தாரர்களின் பெரும்படையைச் சிதறடித்து முன்னால் சென்றார். அப்பால் குந்திபோஜர் சல்யரை எதிர்த்தார். குந்திபோஜரின் உதவிக்கு விராடர் எழுந்துவந்தார். சல்யரின் விற்திறனுக்கு முன் நிற்க இயலாமல் அவர்கள் பின்னடைய பாண்டவப் படை அலைமோதியது.

கிருதவர்மரை நிஷாதர்களும் கிராதர்களும் சேர்ந்து எதிர்த்து நின்றனர். கிருதவர்மரை வெல்லமுடியாமல் அவர்கள் பின்னடைந்தபோது சிகண்டி தன் வில்லில் நாணொலி எழுப்பியபடி அவர்களின் உதவிக்கு வந்தார். கிருதவர்மரும் சிகண்டியும் நிகர்நிலையில் நின்று போரிட்டனர். கிருதவர்மரின் அம்புகள் ஒவ்வொன்றாக உடைய அவர் பின்னடையத் தொடங்கியதும் அவருக்கு உதவும்படி சகுனியின் ஆணை எழுந்தது. கிருபர் நாணொலி எழுப்பியபடி யாதவப் படைகளுக்குத் துணையாக வந்துசேர்ந்தார். சிகண்டியை அம்புகளால் அறைந்து பின்னடையச் செய்தார். அவர்கள் இருவரையும் எதிர்த்துநிற்பது இயலாதென்று அறிந்தாலும் சிகண்டி தன் வெறிகொண்ட விற்தொழிலைக் காட்டி களத்தில் நின்றுபொருதினார்.

ஆனால் பாண்டவர்கள் எவரும் பிறிதொரு போர்மையம் உருவாகிக் கொண்டிருப்பதை உணரவில்லை. பாஞ்சாலப் படைகளால் துணைக்கப்பட்ட துரோணர் எந்த முரசறிவிப்பும் இல்லாது ஒரு சிறு வல்லூறுபோல் தன் சிறகுகளை விரித்து யுதிஷ்டிரர் நின்றிருந்த படைப் பின்நிரையை நோக்கி நகர்ந்தார். யுதிஷ்டிரர் படைமுகப்பில் வந்து போர் எழுவதற்கான ஆணையைக் கொடுத்த பின்னர் படைகளுக்குள் மூழ்கிச்சென்று பாண்டவப் படைத்திரளின் பன்னிரு அடுக்குகளுக்கு அப்பால் இருந்தார். சிறகுகளால் தன் குஞ்சை மூடிவைத்திருக்கும் கிரௌஞ்சம் போலிருந்தது பாண்டவப் படை. அங்கு சென்று அடையவேண்டுமெனில் பாண்டவப் படையை முற்றாகவே வென்றாகவேண்டும் என்பதனால் போரின் விசையில் பாண்டவர்கள் அனைவருமே யுதிஷ்டிரரை மறந்துவிட்டிருந்தனர்.

அரசே, யுதிஷ்டிரரை நோக்கி நேரடியாக துரோணர் சென்றிருந்தால் பாண்டவர்கள் எச்சரிக்கை கொண்டிருக்க வாய்ப்பிருந்தது. யுதிஷ்டிரரை நோக்கி நேரடியாகச் செல்லும் போர்முனையில் சகுனி பால்ஹிகராகிய சலனும் திரிகர்த்தநாட்டு அரசர் சுசர்மரும் அவர் மைந்தர்களான சம்சப்தர்களும் துணைவர திரிகர்த்த காந்தார வில்லவர்படை இருறமும் அணைய முழு விசையில் தாக்கிக்கொண்டிருந்தார். யுதிஷ்டிரரைப் பிடிக்க சகுனி முனைவதாகவும் அதற்கு எந்த வாய்ப்பும் இல்லையென்றும் அதனூடாக பாண்டவர்கள் நம்பவைக்கப்பட்டனர்.

துரோணர் மெல்ல மெல்ல எவரும் தனித்தறியாமல் வடக்கே விலகிச்சென்று பாண்டவப் படையின் வடக்கு எல்லையில், அதன் நாரைச் சூழ்கையின் விளிம்பில், வலச்சிறகின் பிசிறுகளில் தன் முழு விசையையும் கொண்டு தாக்கினார். அவரை அங்கு எதிர்பார்த்திராத பாண்டவப் படையினர் இயல்பாக தெற்கே ஒதுங்கி வழிவிட காட்டுக்கும் பாண்டவப் படைக்கும் நடுவே இடைவெளி உருவாகியது. வழி திறந்துகொண்டதுமே துரோணரின் தலைமையில் கௌரவப் படை பாண்டவர்களின் படையின் வட எல்லையினூடாக வழிந்து சென்று படையின் பின்புறத்தை அடைந்தது. அரைநாழிகைப் பொழுதுக்குள் நிகழ்ந்த இந்தச் செயல் பாண்டவப் படையை சென்றடையவில்லை. பாண்டவர்கள் அர்ஜுனர் பின்னடைவதைக் குறித்த பதற்றத்தில் இருந்தனர். முரசுகளனைத்தும் படைமுகப்பிலேயே இருந்தன. பின்புறத்திலிருந்த ஓரிரு முரசுகள் முழக்கமிட அங்கிருந்து முரசுகளினூடாக செய்திகள் எழுந்து படைமுகப்பை அடைய ஒருநாழிகைப் பொழுதாகியது.

“துரோணர்! படைப் பின்புறத்தில் துரோணர்!” என முரசுகள் முழங்கியபோது சகுனியின் ஆணைப்படி கர்ணன் தன் கைதளர்ந்து சற்றே வில் தாழ்வதுபோல் காட்டி பின்னடையத் தொடங்கினார். அர்ஜுனரைச் சூழ்ந்திருந்த பாண்டவப் படையினர் வெற்றிக்குரலெழுப்பி கூச்சலிட்டு துள்ளிக் குதித்தனர். வேல்களையும் வாள்களையும் தூக்கிப்பிடித்து “இந்திரப்பிரஸ்தம் வெல்க! வில் விஜயன் வெல்க! காண்டீபம் வெல்க! எழுக மின்கொடி! எழுக குருகுலம்!” என்று குரலெழுப்பினர். அக்கொண்டாட்டத்தில் முரசுச்செய்திகளை எவரும் கேட்கவில்லை.

மேலும் மேலும் கர்ணன் பின்னடைய விசைகொண்டு தாக்கியபடி அர்ஜுனர் அவரை அழுத்தி கௌரவப் படைகளுக்குள் கொண்டு சென்றார். கர்ணன் பொற்தேர் பின்னடைந்து மேலும் பின்னடைந்து அர்ஜுனரை உள்ளிழுத்தது. அதே தருணத்தில் துரோணர் பாண்டவப் படையின் பின்பகுதியைத் தாக்கி சிதறடித்தார். அங்கு படைகளனைத்தும் சிதறி ஒருங்கிணைவின்றி அலைமோதிக் கிடந்தன. படைமுகப்பிற்கு படைக்கலங்களையும் வீரர்களையும் கொண்டு செல்லும் வண்டிகளும் அத்திரிகளும் படைநகர்வுகளையும் தடுக்கும் வண்ணம் அங்குமிங்குமாக பரவியிருந்தன. திறந்த வாயில் எனக் கிடந்த அப்பகுதியினூடாக ஒரே வீச்சில் அறைந்து பாண்டவப் படையின் மையப்பகுதிக்கு வந்த துரோணர் என்ன நிகழ்கிறதென்று யுதிஷ்டிரர் உணர்வதற்குள் தன் வில்லவர் படையால் அவரை சூழ்ந்துகொண்டார்.

யுதிஷ்டிரரின் தேரின் கொடியை தன் அம்புகளால் அறைந்து தெறிக்க வைத்தார் துரோணர். யுதிஷ்டிரருக்கு மெய்க்காவலென அமைந்திருந்த நூற்றெட்டு திறன் வாய்ந்த வில்லவர்கள் நிரையில் அனைவரையும் கழுத்தறுத்துக் கொன்று தேர்தட்டில் வீழ்த்தினார். யுதிஷ்டிரரின் உதவிக்கென தனிப்படை ஒன்று ஆயிரத்தெட்டு புரவிவில்லவர்களுடன் திரும்பி எழுந்தணைய அவர்களை சல்யர் தன் படைகளுடன் தடுத்துக் கொன்று நிலம் சரித்தார். மறு எல்லையில் யுதிஷ்டிரரைக் காக்கவந்த சிகண்டியை கிருதவர்மர் தடுத்தார். இருபுறமும் படைப்பெருக்கிலிருந்து பிரிக்கப்பட்ட யுதிஷ்டிரரின் படை செயலிழந்து நிற்க அவர்களை வெறிகொண்டு கொன்றுவீழ்த்தினார் துரோணர். அவருடைய பிறையம்புகள் தலைகொய்து எறிந்தன. நீளலகு அம்புகள் நெஞ்சைத் துளைத்து மறுபக்கம் சென்று நின்றன.

தன்னைச் சூழ்ந்து உடல்கள் குவிவதை, ஒவ்வொரு அம்பும் உயிர் குடித்து நின்று துடிப்பதை கண்டு யுதிஷ்டிரர் வில்லுடன் தேர்த்தட்டில் நின்று பதைத்தார். “முரசெழுக! அர்ஜுனனுக்கு செய்தி செல்க!” என ஆணையிட்டார். துரோணர் “அரசே, தேர்த்தட்டில் முழந்தாளிடுக! அம்புகளை ஒழிந்து முழந்தாளிடுக!” என்று கூவினார். “உங்களை சிறைபிடித்துள்ளோம்! பணிக!” என்று திரிகர்த்தராகிய சுசர்மர் கூச்சலிட்டார். ஆனால் யுதிஷ்டிரர் அந்த ஆணையால் சீற்றம்கொண்டு “களம்படுவதில் எனக்கு அச்சமில்லை! எந்நிலையிலும் பாண்டுவின் மைந்தன் பணிவதில்லை என்று அறிக!” என்றபடி தேர்த்தட்டில் வில் ஏந்தி நின்றார். “வில்லை தாழ்த்துக! அன்றில் உங்கள் ஒரு படையும் எஞ்சப்போவதில்லை” என்று துரோணர் கூவினார். “வில் தாழ்த்தி போர் நிலைக்க ஆணையிடுக! உங்கள் படையினர் உயிரை காத்துகொள்க!”

தன்னைச் சூழ்ந்து செத்து உதிர்ந்துகொண்டிருந்த காவலர் படையினரைப் பார்த்த பின் “ஆம், வில் தாழ்த்துகிறேன்! கொலை நிற்கட்டும்!” என்று யுதிஷ்டிரர் சொன்னார். வில்லை தாழ்த்திவிட்டு தேர்த்தட்டில் அவர் கைவிரித்து நிற்க துரோணரின் வில்லவர் படை வீசு வலையென எழுந்து சென்று வளைத்து யுதிஷ்டிரரை சுற்றிக்கொண்டது. யுதிஷ்டிரரின் தேர்த்தட்டில் பாய்ந்தேறிய வீரனொருவன் ஒரே வாள்வீச்சில் அவர் பாகனின் தலையை வெட்டி வீழ்த்தியபின் நுகத்திலமர்ந்து கடிவாளத்தை இழுத்துச் சுண்டினான். யுதிஷ்டிரரின் தேர் நடுவில் செல்ல துரோணரின் படை சூழ்ந்து அவரை வலப்பக்கமாக கொண்டுசென்றது.

யுதிஷ்டிரர் சிறைபிடிக்கப்பட்டார் என்ற செய்தியை அறிவித்தபடி பாண்டவ முரசுகள் அனைத்தும் முழங்கத்தொடங்கின. துருபதரும் சகதேவரும் நகுலரும் அச்செய்தியைக் கேட்டு தங்கள் படைகளை திருப்பிக்கொண்டு யுதிஷ்டிரரைக் காக்கும் பொருட்டு தொடர வாள் என அவர்கள் நடுவே நுழைந்து அவர்களைத் தடுத்தது சல்யரின் படை. சகதேவரும் நகுலரும் இருபுறமும் நின்றெதிர்க்க நடுவே துருபதர் வில்லாட சல்யர் அவர்களை அங்கேயே தளைத்து நிறுத்தினார். சகதேவர் “மூத்தவருக்கு அறிவியுங்கள்! அரசர் கைப்பற்றப்பட்டுவிட்டார்! மூத்தவருக்கு அறிவியுங்கள்!” என்று வில்லோட்டியபடியே கூவினார். முரசுகள் மேலும் மேலும் முழங்கி யுதிஷ்டிரர் கைப்பற்றப்பட்ட செய்தியை அறிவித்தன.

துரியோதனருடன் கதைப்போர் செய்துகொண்டிருந்த பீமன் அதைக் கேட்டு தன் படைகள் பின்னால் திரும்பி மையப்படைக்குள் நுழைந்து வலுத்திரட்டிக்கொள்ள ஆணையிட்டார். அவர் பின்னகர முற்பட்டதைக் கண்டதும் துரியோதனர் “விடாதீர்கள், சூழ்ந்துகொள்ளுங்கள்!” என்று ஆணையிட்டு தன் தம்பியரும் பிறரும் துணைக்க பீமனை மேலும் வலுவாக சூழ்ந்துகொண்டார். சீற்றத்துடன் பீமன் கௌரவர்களில் இளையவராகிய சத்வரை தலையில் அறைந்து கொன்றார். அலறியபடி அவர் மேல் பாய்ந்த சித்ராக்ஷரை நெஞ்சில் அறைந்து குருதிசிதற தெறிக்க வைத்தார். சர்வதர் கௌரவ மைந்தர்களான விஸ்வகரையும் பாசபாணியையும் கொன்றார். சுதசோமர் கௌரவ மைந்தர்களான அனுத்ததன், அத்ஃபுதன், சுதம்ஷ்டிரன் ஆகியோரை கொன்றார்.

தம்பியரும் மைந்தரும் வீழ்ந்ததைக் கண்டு நெஞ்சில் அறைந்து குரலெழுப்பியபடி துரியோதனர் தேரிலிருந்து எடைமிக்க கதையுடன் பாய்ந்திறங்கி பீமனை தடுத்தார். பீமனின் கதை எழுந்து அவர் கதையை அறைந்தது. இருவரும் வெறியுடன் ஒருவரை ஒருவர் தாக்கியபடி களத்தில் சுற்றிவந்தனர். அரசே, மதமெழுகையில் யானை கொள்ளும் அசைவுகளே சினமெழுகையில் அத்தனை உயிர்களிடமும் வெளிப்படுகிறது. துரியோதனரின் அறைகளை தடுத்துத் தடுத்துப் பின்னடைந்த பீமனின் உதவிக்கு வந்த சர்வதரை துச்சாதனர் எதிர்கொண்டார். சுதசோமரை லக்ஷ்மணர் எதிர்கொண்டார். ஆறு கதைவீரர்களும் நெஞ்சில் நஞ்சு கொந்தளிக்கும் விசையுடன் ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிட்டனர்.

ஒவ்வொரு கணமும் நழுவிக்கொண்டிருப்பதை பீமன் உணர்ந்தார். “விரைவு! விரைவு! விரைவு!” என்று அவர் கூவிக்கொண்டிருந்தார். அரைநாழிகைப் பொழுதுக்குள் யுதிஷ்டிரரைக் கொண்டு துரோணர் கௌரவரின் பெரும்படைத் திரளுக்குள் சென்றுவிடுவார். கௌரவப் படை அவரை உள்ளிழுத்து மூடிவிட்டதென்றால் அதன்பின் மீட்க இயலாது. அரைநாழிகைப் பொழுதே உள்ளது. அரைநாழிகைப் பொழுது! அவ்வெண்ணத்தை செவிகேட்டவர்போல துரியோதனர் வெறியுடன் நகைத்து “ஆம், அரைநாழிகைப் பொழுது! இன்னும் அரைநாழிகைப் பொழுதே உள்ளது! ஆனால் இன்று அந்திவரை இக்களத்திலிருந்து நீ வெளியேறப் போவதில்லை!” என்று பீமனை அறைந்தார். அதை ஒழிந்து விலகிய பீமனின் தோளை அறைந்து தெறிக்கச்செய்தார். கையூன்றி எழுந்து உறுமியபடி பீமன் மீண்டும் பாய்ந்தார்.

சினமும் ஆற்றாமையும் கொண்டு உள்ளம் பொங்குந்தோறும் தன் காலடிகள் பிழைப்பதை, வீச்சு குறி தவறுவதை பீமன் உணர்ந்தார். வீச்சு இலக்கழிந்து நிலையழியச் செய்த காலடிகளுடன் அவர் மீள்வதற்குள் துரியோதனரின் கதை அவர் நெஞ்சைத் தாக்க மல்லாந்து விழுந்தார். அவர் தலையை உடைக்க வந்த கதையின் தலையை புரண்டு தவிர்த்தார். ஏழு அறைகள் அவரை கொல்லும் பொருட்டு வீழ்ந்தன. ஏழு குழிகளை செம்மண் தரையில் உருவாக்கியபடி துரியோதனரின் பெருங்கதை நிலத்திலறைந்தது. கையூன்றி பாய்ந்தெழுந்து விலகிய பீமனை துரியோதனர் தொடர்ந்து சென்று அறைந்தார். உடைந்த தேர் ஒன்றில் பின்புறம் முட்ட உடல் தூக்கி பறவைபோல் மேலெழுந்து அதன் மேல் நின்ற பீமனை நோக்கி கதை வீசி ஒரே அறையில் அத்தேரை உடைந்து தெறிக்கவைத்தார்.

சர்வதர் துச்சாதனரின் அறைகளிலிருந்து தப்ப அங்குமிங்கும் பாய்ந்து நிலத்தில் விழுந்து புரண்டெழுந்து போரிட்டார். அவரை அறைந்த ஒவ்வொரு அடியிலும் தேர்கள் உடைந்து தெறித்தன. குதிரைகள் குருதி சிதற உடல் நொறுங்கி விழுந்தன. லக்ஷ்மணரும் சுதசோமரும் இரு இணையுடல்களின் நடனம்போல் போரிட அவர்களை இரு கருவண்டுகள் சுற்றிவருவது போல் கதைகள் சுழன்றன. லக்ஷ்மணரை மிக அருகிலெனக் கண்டபோது அவர் விழிகள் கனிந்திருப்பதை சுதசோமர் அறிந்தார். ஆனால் அது அவரை பேரச்சம் கொள்ளச்செய்தது. அவர் நெஞ்சத்துடிப்பால் கையிலிருந்த கதை வழுவியது. இறுகப்பற்றி அவர் பின்னெட்டு வைக்க அவர் கதையில் அறைந்த லக்ஷ்மணரின் கதையின் எடை குதிகால்வரை சென்றது.

நகுலரையும் சகதேவரையும் துணைக்க வந்த சதானீகரையும் சுருதசேனரையும் சல்யரின் படைகள் எதிர்கொண்டன. பாண்டவப் படைகள் மூச்சு நெரிக்கப்பட்டு இறுதிக் காற்றுக்கென உடல் விதிர்க்கும் பெருவிலங்குகள்போல் அதிர்ந்துகொண்டிருந்தன. அரைநாழிகை எனும் சொல்லே மொத்த பாண்டவப் படையையும் துடிக்க வைத்தது. நகுலர் “பின்தொடர்க… ஆசிரியரின் படை நம் படைகளுடனான தொடர்பை இழந்துவிடலாகாது” என்று கூவினார். சிகண்டியின் தலைமையில் பாஞ்சாலப் படை துரோணரைத் தொடர முற்பட்டபோது கிருபர் அவரை தடுத்து நிறுத்தினார்.

கர்ணனால் சூழ்ச்சியாக கௌரவப் படைகளுக்குள் இழுக்கப்பட்ட அர்ஜுனர் யுதிஷ்டிரர் சிறைபிடிக்கப்பட்டார் என்னும் செய்தியைக் கேட்டதுமே நிகழ்ந்ததென்ன என்று புரிந்துகொண்டார். தேரை இழுத்து பின்னடையச் செய்த இளைய யாதவர் “நாம் அங்கு செல்வதற்குள் பொழுது கடந்துவிடும். பாண்டவனே, சல்யரைக் கடந்து துரோணரை அடைய முடியாது” என்றார். ஒருகணம் காண்டீபம் நழுவ அர்ஜுனர் உளம்நலிந்தார். “ஒருபோதும் நீ இனி உன் மூத்தவரை பார்க்கப்போவதில்லை, அர்ஜுனா!” என்று நகைத்தபடி கர்ணன் தன் முழு ஆற்றலுடன் முன்னெழுந்து வந்தார். அவர் வில்லில் இருந்து புறப்பட்ட விந்தையான அம்புகளால் அர்ஜுனரின் படைவீரர்கள் ஒவ்வொருவராக சரிந்தனர்.

சுருதகீர்த்தியும் அபிமன்யூவும் இருபுறங்களாக ஜயத்ரதரையும் பூரிசிரவஸையும் தாக்கி தடுத்து நிறுத்தினர். சாத்யகியும் திருஷ்டத்யும்னரும் அர்ஜுனர் மேலும் பின்னடையாமல் இருக்க அரணொன்றை உருவாக்கியபடி பின்னால் நின்றனர். கர்ணனின் நாகநெளிவுகொண்ட அம்புகள் அர்ஜுனரின் தலைக்குமேல் சென்று இறங்கி அவருக்குப் பின்துணையாக வந்துகொண்டிருந்த புரவிவீரர்களை ஒவ்வொருவராக வீழ்த்தின. இளைய யாதவர் திரும்பிப்பார்த்தபோது தனது தேருக்குப் பின்னால் உடைந்து விழுந்து கிடந்த தேர்களையும் சிதைந்து துடித்த குதிரைகளையும் கண்டார். “நமது தேரை இனி பின்னெடுக்கவே இயலாது, பார்த்தா!” என்றார். முற்றிலும் உளம் தளர்ந்து அர்ஜுனர் “மூத்தவரே! மூத்தவரே!” என்று அரற்றினார்.

“அவர்கள் சற்றும் எண்ணாத ஒன்றை செய்வோம். கர்ணனை உனது மைந்தர்கள் இருவரும் எதிர்கொள்ளட்டும்” என்றார் இளைய யாதவர். அர்ஜுனர் எண்ணுவதற்குள் தன் புரவியைத் திருப்பி பக்கவாட்டில் முழு விசையில் பாய்ந்து கௌரவப் படைகளுக்குள் புகுந்தார். அங்கிருந்த வில்லவர்கள் அதை எதிர்பார்க்காமல் அலறியபடி சிதறினர். காண்டீபம் அனல்பட்ட நாகமென நின்று துடிக்க அம்புகள் எழுந்தெழுந்து வில்லவர்களை வீழ்த்த அர்ஜுனர் கௌரவப் படைகளுக்குள் தன்னந்தனியாக புகுந்தார். அந்தத் தேர் உருகும் மெழுகை காய்ச்சிய வாளெனக் கிழித்து கௌரவப் படைகளினூடாக சென்றது. அர்ஜுனரை பின்தொடர கர்ணன் தேரை திருப்பியபோது சுருதகீர்த்தியும் அபிமன்யூவும் அவரை எதிர்கொண்டனர்.

அபிமன்யூ உரக்க நகைத்தபடி “உங்கள் வில் என் முன் நிற்குமா என்று பாருங்கள், அங்கரே. இன்று மூத்தோர்கொலைபுரிந்தவனாக பாடி மீள்வேன்!” என்று வஞ்சினம் உரைத்தார். கர்ணன் சீற்றத்துடன் “அறிவிலி… உயிர்கொடாது விலகி ஓடு” என்று கூவியபடி தன் அம்புகளால் அபிமன்யூவை அறைந்தார். ஆனால் ஓரிரு அம்புகளுக்குள் அர்ஜுனரைவிடவும் ஆற்றல் மிகுந்த வீரன் அவர் என்று கண்டுகொண்டார். அபிமன்யூவின் அம்புகளால் கர்ணனைச் சூழ்ந்திருந்த வில்லவர்கள் நிலம்பட்டனர். கர்ணனின் தேரின் கொடியும் அவர் தோள்கவசங்களும் சிதறின. கர்ணனின் அனைத்து அம்புகளையும் அறைந்து நிலத்தில் வீழ்த்தி நூறு சரடுகளால் கட்டப்பட்ட மதவேழமென அவரை நின்றிருந்த இடத்திலேயே நிறுத்தினார் அபிமன்யூ.

“செல்க! இளைய பாண்டவனை சூழ்ந்து கொள்க!” என்று கர்ணன் கூவினாலும் சாத்யகியும் திருஷ்டத்யும்னரும் இணைந்து ஜயத்ரதரையும் பூரிசிரவஸையும் அசையாமல் நிறுத்தினர். அர்ஜுனரின் கொலைவெறியைக் கண்டு அஞ்சி செயலிழந்துவிட்டிருந்த கௌரவர் படை காற்றுக்கு பட்டுத்திரைகள்போல விலகி விலகி வழிவிட்டது. கௌரவப் படையின் பெருவில்லவர்கள் அனைவருமே பாண்டவப் படையின் வெவ்வேறு இடங்களில் முழுமையாக சிக்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் வகுத்த சூழ்கையே அவர்களை அவ்வாறு பிரித்து நிலைகொள்ளச் செய்தது.

சுருதசேனரையும் சதானீகரையும் நகுலரையும் சகதேவரையும் எதிர்த்துக்கொண்டிருந்த கௌரவர்களின் படை மத்ரநாட்டின் வேலேந்திய காலாட்களால் ஆனதாக இருந்தது. அதைக் கிழித்து கடந்து சென்ற அர்ஜுனர் பீமனையும் சுதசோமரையும் சர்வதரையும் எதிர்த்துக்கொண்டிருந்த கௌரவர்களின் பின்புறம் வழியாக சென்றார். திடுக்கிட்டுத் திரும்பி அவரை எதிர்கொண்ட உக்ரபர், அகம்பனர், உக்ரேஷ்டர் என்னும் மூன்று கௌரவ மைந்தர்களை வீழ்த்தினார். என்ன நிகழ்கிறது என்று புரிந்துகொள்வதற்குள்ளாகவே சோமகீர்த்தியையும் திருதரதாசிரயரையும் நெஞ்சில் புண்பட்டு விழச்செய்தார். கலைந்து கூச்சலிட்டு எதிர்த்த இளங்கௌரவர்களையும் மத்ரநாட்டு இளவரசர்களையும் அம்புகளால் அறைந்து பின்னடையச்செய்து விசைகுறையாமல் அப்பால் சென்றார்.

கடோத்கஜனை எதிர்த்துக்கொண்டிருந்த பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தரின் படைவீரர்கள் பதினெண்மரைக் கொன்று கடந்துசென்றார். அவர் திரும்பியபோது கடோத்கஜனின் கொக்கிக் கயிறுவந்து கவ்வி வீழ்த்தியது. அவர் சிக்கிக்கொண்டதை அறிந்த சுப்ரதீகம் பிளிறியபடி வந்து பாசத்தை பற்றிக்கொண்டிருந்த கடோத்கஜனை அறைந்தது. பகதத்தர் கொக்கியை உதறி பின்னடைந்து சுப்ரதீகத்தின்மேல் ஏறிக்கொண்டார். அர்ஜுனர் பெருயானைமேல் அமர்ந்து எடைமிக்க கதாயுதத்தை சுழற்றிக்கொண்டிருந்த பால்ஹிகரின் பின்துணையாக அமைந்த சிபிநாட்டுப் படையினரை அறைந்து வீழ்த்தியபின் துரோணரின் படைகளை நோக்கி சென்றார்.

யுதிஷ்டிரருடன் கௌரவப் படைகளுக்குள் நுழையும் பொருட்டு வந்த துரோணர் தனக்கு முன்னால் அர்ஜுனர் எதிர்பாராது எழுவதைக்கண்டு திகைத்தார். அர்ஜுனர் அத்திகைப்பு விலகுவதற்குள்ளாகவே அவரது வில்லையும் அம்புகளையும் அறைந்து உடைத்தார். ஆவக்காவலனையும் பாகனையும் கொன்றார். துரோணரின் மூன்று புரவிகள் கழுத்தறுந்து கீழே விழுந்து துடிக்க அவர் ஊர்ந்த தேர் நிலையழிந்தது. இளைய யாதவர் தேரைத் திருப்ப அர்ஜுனர் “துரோணரே, போர் முடிந்துவிட்டது! உயிர் காக்க செல்லுங்கள்” என்று கூவினார். துரோணர் தன் தேரிலிருந்து தாவி பிறிதொரு தேரிலேறிகொண்டு அங்கிருந்த வில்லவனின் வில்லைப் பெற்று அர்ஜுனரை நோக்கி அம்புகளை ஏவினார்.

“இப்போது அவரிடம் போர்புரிய வேண்டியதில்லை. யுதிஷ்டிரரின் தேர் மீண்டு நம் படைகளுக்குள் செல்ல வழியொருக்குக!” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனர் யுதிஷ்டிரரின் தேருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த துரோணரின் காலாட்படையையும் வில்லவர்படையையும் தன் அம்புகளால் கொன்றுவீழ்த்த இளைய யாதவர் பாய்ந்து இறங்கி கீழே விழுந்திருந்த புரவிகள் மேலும் உடைந்த தேர்கள் மேலும் கால்வைத்து வெட்டுக்கிளிபோல் தாவி யுதிஷ்டிரரின் தேரிலேறி அங்கிருந்த பாகனை ஓங்கி உதைத்து அப்பால் வீசிவிட்டு கடிவாளத்தை பற்றிக்கொண்டு தேரைத் திருப்பி தேருக்குப் பின்னால் விழுந்து கிடந்த புரவிகளையும் வீரர்களையும் பாதையென்றாக்கி கொந்தளிக்கும் அலைமேல் நிலையழியும் படகுபோல் தேர் துள்ளி அலைந்து உலைய ஓட்டிக்கொண்டு சென்றார். அர்ஜுனர் தன் வில்லுடன் தேரிலிருந்து பாய்ந்து அங்கிருந்த புரவியொன்றில் ஏறி அதை முழு விசையில் முடுக்கி யுதிஷ்டிரரின் தேரைத் தொடர்ந்து சென்றார்.

சில கணங்களுக்குள் தன்னை மீட்டுக்கொண்டதும் துரோணரின் படை அம்புகளைப் பெய்தபடி அர்ஜுனரை நோக்கி வந்தது. தன் புரவியில் பின்திரும்பி அமர்ந்து அம்புகளைத் தொடுத்து துரத்தி வருபவர்களை விரைவழியச் செய்தபடி அர்ஜுனர் யுதிஷ்டிரரின் தேரைத் தொடர்ந்து சென்றார். யுதிஷ்டிரரின் தேர் பாண்டவப் படைகளை அடைந்து உள்ளே நுழைந்துவிட்டது என்பதை அறிந்ததும் “அரசர் மீண்டுவிட்டார்! அரசர் காக்கப்பட்டார்!” என அறிவிக்கும் முரசுகள் முழங்கின. “வெற்றி! வெற்றி!” என்று பாண்டவர்கள் கூச்சலிட்டனர். பாண்டவப் படை இரு கிளைகளாக பெருகிவந்து முழுமையாக மூடி யுதிஷ்டிரரை உள்ளே கொண்டுசென்றது.

இருபுறமும் வந்து சேர்ந்து இணைந்த பாண்டவ வில்லவர்படையின் முகப்பில் பிறிதொரு தேரில் பாய்ந்தேறி நின்று அர்ஜுனர் தோல்வியின் சீற்றத்துடன் தன்னை எதிர்கொண்டு வந்த துரோணரை தடுத்தார். உள்ளிருந்து பாயும் புரவிகளின் முதுகினூடாக கால்வைத்து தாவி வந்து அவர் தேரிலேறி அமர்ந்து கடிவாளத்தை எடுத்துக்கொண்டார் இளைய யாதவர். துரோணர் அனைத்தும் கைவிட்டுச்சென்றுவிட்டன என உணர்ந்து கைகளை உதறி சலிப்புடன் தலையை அசைத்தார். பாண்டவப் படை “வெல்க! யுதிஷ்டிரர் வெல்க! வெல்க மின்கொடி! வெல்க இந்திரப்பிரஸ்தம்!” என வெற்றிமுழக்கமிட்டது. பீமன் உரக்க நகைத்து துரியோதனரிடம் “நீங்கள் எண்ணியது நிகழப்போவதில்லை, அஸ்தினபுரியின் அரசே” என்றார்.

திட்டம் தோல்வியடைந்ததை உணர்ந்து அரைக்கணம் தளர்ந்த துரியோதனரை நோக்கி வீறுகொண்டு எழுந்து அவர் தோளை தன் கதாயுதத்தால் அறைந்து பின்னால் தெறிக்க வைத்தார் பீமன். அந்த ஒரு கணமே சர்வதருக்கும் சுதசோமருக்கும் போதுமானதாக இருந்தது. லக்ஷ்மணர் பின்னடைந்தார். துச்சாதனர் “மூத்தவரே” என துரியோதனரை நோக்கி திரும்பினார். பீமன் பற்களைக் கடித்து கதையைச் சுழற்றியபடி அர்ஜுனரின் அம்புகளால் புண்பட்டு தேர்த்தட்டில் அமர்ந்திருந்த சோமகீர்த்தியையும் திருதரதாசிரயரையும் தலையில் அறைந்து கொன்றார். அந்த மீறலால் உளமழிந்த கௌரவர்கள் அலறி பின்னடையத் தொடங்கினர். கௌரவர்கள் இருவர் களம்பட்டதை அறிவிக்கும் முரசு துரியோதனரை மேலும் சோர்வுறச் செய்ய அவர் பின்னடைந்து தன் படைகளுக்குள் நுழைந்து தேரிலேறிக்கொண்டார். பீமன் கதையைத் தூக்கி தலைமேல் சுழற்றியபடி வெறிக்குரலெழுப்பி அமலையாடினார்.

முந்தைய கட்டுரைமனிதனாக இருப்பது என்றால் என்ன? அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி?   -விஷால் ராஜா
அடுத்த கட்டுரையானை கடிதங்கள் – 3