ஆண்களின் சமையல்

ராஜகோபாலன்
ராஜகோபாலன்

11-1-2019 அன்று நண்பர் ராஜகோபாலனின் வீட்டுக்கு மதியச்சாப்பாட்டுக்காக சென்றிருந்தோம். அவருடைய மனைவி அலுவலகம் சென்றிருந்தார். மகன் பள்ளிக்கு. ஆகவே அவர் எங்களுக்காக சமைத்தார். உதவிக்கு குருஜி சௌந்தர். நாங்கள் சென்றபோது சமையல் ஏறத்தாழ முடிந்திருந்தது.

ராஜகோபாலன் நன்றாக சமைப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். குழுமங்களில் அவர் அவ்வப்போது சமையற்குறிப்புகளை எடுத்துவீசுவதுண்டு. “என்னோட முள்ளுக்கத்தரிக்கா கொத்சு நீங்க சாப்பிட்டதில்லியே” என ஆர்வமாக நண்பர்களிடம் அவர் விசாரிக்கும்போதோ “வீட்டுக்கு வாங்க, பிரண்டைத்துவையல் செஞ்சு தாரேன்” என அழைக்கும்போதோ  பலர் மிரண்டு “இல்லீங்… நான் இப்பதான் மருந்து சாப்புட்டுங்…” என பம்முவதை கவனித்திருக்கிறேன்.

எனக்கு அப்படி தயக்கங்கள் ஏதுமில்லை. என் அப்பா மாபெரும் சமையற்காரர். ஏனென்றால் நன்றாக சாப்பிடுபவர். ராஜகோபாலனும் அபாரமான சாப்பாட்டுப்பிரியர். இந்தியாவையே நக்கிப்பார்த்து அறிந்தவர் என நாஞ்சில்நாடனைப்பற்றிய புகழ்மொழி ஒன்றுண்டு. [முதன்மையான காவிய ஆசிரியர் ஒருவரால் சொல்லப்பட்டது.] ராஜகோபாலன் சென்னையை நாக்கால் அளந்தவர் [இது அவர் மகளால் சொல்லப்பட்டது]

சமையலின் வாசம் மிதமாகவே இருந்தது. அசைவ உணவுக்கு அதிக வாசம் இருப்பதில்லை. சைவ உணவில்கூட சில வட்டாரங்களில் நெடிகள் உண்டு. வத்தல்குழம்பு மென்மையாக இருப்புணர்த்தியது. எங்களுடன் யோகேஸ்வரன் ராமநாதன், சண்முகம், மாரிராஜ் ஆகியோர் சாப்பிடுவதற்காக வந்திருந்தார்கள். வத்தல்குழம்பு, மோர்க்குழம்பு, வாழைக்காய் பொடிமாஸ் என மிகச்சரியான அந்தக்கால அக்ரஹார உணவு. ஒரு தாவலில் பழைய காலம் ஒன்றுக்கு சென்றுவிட்டதுபோல

கத்தரிக்காய் பொரியல். ஆனால் வாழைக்காய் தோலைமட்டுமே கொண்டு ஒரு பொரியல் இருந்தது. அதுதான் முதன்மையான சுவை. அதன் சுவையை வாழையின் நாடான குமரியில் பிறந்தால் ஒருபடி மேலாகவே உணரமுடியும். இந்தக் காய்கறிகள் எல்லாமே பெரிய சுவைமாறுபாடுகள் இல்லாமல் சென்னையில் கிடைப்பதுதான் ஆச்சரியம். தேடவேண்டும், அவ்வளவுதான். ராஜகோபாலன் நாஞ்சில்நாடனைப்போல இதற்கென்றே இறங்கித்திரிய மெனக்கெடுபவர்.

சாப்பிடும்போது அருண்மொழி ‘சூப்பரா இருக்கு’ என்று மலர்ந்திருந்தாள். நான் அவளிடம் “நல்லா இருக்கு இல்ல?” என்றதும். “ம்” என்றாள். நான் தொடர்ந்து “பெரிய அளவிலே வாசனைப்பொருட்கள் இல்ல. செரிக்கக் கஷ்டமான ஒண்ணுமே இல்லை. எல்லா மருந்து அம்சங்களும் இருக்கு. பெரும்பாலும் சாதாரணமாக கிடைக்கக்கூடிய பொருட்களில் இருந்துதான் சமைச்சிருக்காங்க. எளிமையின் ருசி. இப்டி வந்துசேர எவ்வளவு ஜெனரேஷன்ஸ் சமைச்சு சமைச்சு வந்துசேரணும், இல்ல?” என்றேன்

“ஆமா, ஒருநாள் வக்கணையா சமைச்சா நல்லாத்தான் இருக்கும். தினமும் சமைச்சா தெரியும்” என்றாள். சரிதான், ஆண்கள் சமைக்கும்போதெல்லாம் பெண்களின் எதிர்வினை இதுவாகவே இருக்கிறது. அதற்காக நாளும் சமைக்க முடியுமா என்ன? அப்படியென்றால் யார் சாப்பிடுவது?

முந்தைய கட்டுரைசீ.முத்துசாமியின் மலைக்காடு- ஹரன் பிரசன்னா
அடுத்த கட்டுரைமனிதனாக இருப்பது என்றால் என்ன? அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி?   -விஷால் ராஜா