சென்னையில்…

ipa

விகடன் விருந்தினராக சென்ற ஜனவரி 8 ஆம் தேதி கிளம்பி 9 அன்று காலை சென்னையில் இருந்தேன். போரூரில் சென்னை லி பாலஸ் ஓட்டலில். காலைமுதல் நண்பர்கள் வந்தார்கள். வளவளாவல். நான் மாலை ஐந்துமணிக்கு விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவுக்குச் சென்றிருந்தேன். 2.0 பட செட்டுக்குள் சென்றுவந்த அனுபவம். எங்கே பார்த்தாலும் கண்ணைப்பறிக்கும் வண்ணங்கள். விளக்குகள். முன்வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கவேண்டும் என்றால் பிரம்மாண்டமான அரங்கின் ஏதேனும் ஒரு பகுதியை மட்டும்தான் கவனிக்க முடியும்.

விழாவில் 30000 ஆண்டு தொன்மையான உலகின் ஒரே மொழியான தமிழைப் புகழ்ந்து ராக்-ராப்-பிரேக் கலவையாக ரம்யா நம்பீசன் தலைமையில் மல்லு குழுவினர் நடனம் ஆடியபோது எங்கே பார்ப்பது என்னும் குழப்பம் இல்லாமல் இருந்தேன். வருகையாளர்களில் பாதிப்பேர் வி.ஐ.பிக்கள். நல்லக்கண்ணு, பிரகாஷ்ராஜ், நீயாநானா கோபி என. சென்ற ஆண்டு நடந்ததுபோலவே இவ்வாண்டும் விகடன் அன்றாட லௌகீக வாழ்க்கையிலிருந்து விலகி பிறருக்காக ஏதேனும் செய்யவேண்டும் என முனைந்த சிலரை அடையாளம் காட்டியது. அது மிக முக்கியமான ஒரு பங்களிப்பு என நினைக்கிறேன்

vika

இந்திரா பார்த்தசாரதிக்குச்  சிறப்பு விருது. சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், சு.வெங்கடேசன், வேலு சரவணன் ஆகியோருடன் இணைந்து நானும் அவருக்கு விருதை வழங்கினேன். அதன்பின் சிறந்த பத்து ஆளுமைகளில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டிருந்த எஸ்.ராமகிருஷ்ணனுக்கு விருதை வழங்கினேன். நல்லவேளையாக மேடைப்பேச்செல்லாம் இல்லை. ஓரிரு வரிகள் பேசினால் போதும். இந்திரா பார்த்தசாரதியின் இலக்கியப்பங்களிப்பு என்ன என்பதைப்பற்றி பத்து சொற்றோடர்களில் கூறமுடிந்தது

சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் , மனுஷ்யபுத்திரன், சு.வெங்கடேசன், மாரி செல்வராஜ் ஆகியோருடன் அரங்குக்கு பின்னால் நின்று கொஞ்சநேரம் உரையாடினேன். ஓசைக்கொப்பளிப்பு நடுவே பெரும்பாலும் அது காதுக்குள் கூச்சலிடுவதாகவே அமைந்தது. என்றாலும் நண்பர்களைச் சந்தித்ததில் நிறைவு.

அருண்மொழி நண்பர்களுடன் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றாள். ஏராளமான புத்தகங்களுடன் வந்து அறைமுழுக்க பரத்திப்போட்டு பங்குவைத்துக்கொண்டார்கள். மறுநாள் மீண்டும் நண்பர்கள் சந்திப்பு. மாலை ராஜகோபாலன், சண்முகம்,மாரிராஜ், ராகவ் ஆகியோருடன் திருநீர்மலை கோயிலுக்கு சென்றோம். சென்னைக்கு அருகே இப்படி ஒரு ஒதுங்கிய அழகிய இடம் இருப்பது ஆச்சரியமானது. நான் அங்கே சென்றதே இல்லை. சென்னைக்கு சம்பந்தமே இல்லாத அமைதியும் பழங்காலநெடியும் கொண்ட இடம் அது. தோயாத்ரி என்னும் நீர்வண்ணப்பெருமாளை தரிசனம் செய்தேன்

Amar_Mitra
Amar_Mitra

அன்று சண்முகம் வீட்டில் தங்கினேன். 11 அன்று கிளம்பி மாலை நாகர்கோயில் வந்தேன். புத்தகக் கண்காட்சிக்குச் செல்லவில்லை. சென்னையிலேயே இருந்தும்கூட புத்தகக் கண்காட்சிக்குச் செல்லாமலிருப்பது இது நாலாவது முறை. முதன்மையான காரணம் ஒருமுறை சென்று அடைந்த மூச்சுத்திணறல். செல்லவேண்டும் என நினைத்தாலே தவிர்க்கத் தோன்றுகிறது. ஆனால் அருண்மொழிக்கு கொண்டாட்டமாக இருந்தது. சொல்லிக்கொண்டே இருந்தாள்.

சென்ற ஆண்டு அருண்மொழி கணக்கில் உச்சகட்ட ‘ஸ்கோர்’. அறுபது புத்தகங்கள் வாசித்திருக்கிறாள். எல்லாமே முக்கியமான புத்தகங்கள் – அத்தனையும் புனைவுகள். உச்சகட்ட படைப்பு என்று வங்க எழுத்தாளர் அமர் மித்ராவின் துருவன் மகனைச் சொன்னாள். பி.பானுமதியின் சரளமான மொழியாக்கத்தில் சிறப்பான வாசிப்பனுபவம் அளிப்பது. உஜ்ஜயினியில் வந்த பெரும்பஞ்சம் பற்றிய வரலாற்றுநாவல்.

இப்போது புத்தகங்களைப் பரப்பி வைத்து நடுவே தூங்கிக்கொண்டிருக்கிறாள். புத்தகக் கண்காட்சி வாசகர்களுக்குத்தான் விழா.

சாகித்ய அக்காதமி நாவல்கள்

முந்தைய கட்டுரைஜே.ஜே. சிலகுறிப்புகள் – இன்றைய வாசிப்பில்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-20