கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி
அன்புள்ள ஜெ,
அன்புராஜ் அவர்களின் பேட்டி மிக நெகிழ்ச்சியான அனுபவம். சந்தனக்கொள்ளையன் வீரப்பனுடன் இருந்திருக்கிறார். காட்டில் கொள்ளையனாக வாழ்ந்திருக்கிறார். எல்லா வகையான அனுபவங்களையும் அடைந்திருக்கிறார். அவற்றிலிருந்தெல்லாம் மீண்டு வந்து ஒரு சமூகசேவையாளனாகவும் கலைஞனாகவும் வாழ்கிறார்.
எழுபதுகளில் இப்படி சம்பல் பகுதியில் கொள்ளையர்களாக வாழ்ந்த சிலர் வினோபாவே- ஜெயப்பிரகாஷ் நாராயணன் முயற்சியால் மனம்திருந்தி சிறைக்குச் சென்று மறுவாழ்க்கை வாழ்ந்தார்கள். அவர்கள் அனைவருமே சிறையிலிருந்து வெளிவந்தபின் முற்றிலும் வேறுவகையான வாழ்க்கையையே வாழ்ந்தார்கள். ஒருசிலர் குடிகாரர்களாக மாறி அழிந்தனர். மிச்சமிருந்தவர்கள் மதவழிபாட்டாளர்களாகவும் சாமியார்களாகவும் ஆனார்கள். சிலர் சமூகசேவகர்கள் ஆனார்கள். ஏதோ ஒருவகையில் சமூகத்திற்குப் பயனுள்ள வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.
[விதிவிலக்கு பூலன்தேவி. அவர் ஒரு அரசியல்வாதியாக ஆகி சீரழிந்தார். ஆனால் பெண் என்பதனால் அவரைப்பற்றித்தான் அதிகமும் பேசினார்கள். மான்சிங், டோமர் போன்றவர்களைப்பற்றிப் பேசப்படவே இல்லை. ]
வீரப்பனைப்பற்றி பேசுவதைவிட நாம் அதிகமாகப் பேசவேண்டியது அன்புராஜ் போன்றவர்களைப்பற்றித்தான். வீரப்பன் ஒரு வெறும் ஐக்கான். போலியாக ஊடகங்களால் உருவாக்கப்பட்ட முகம். அவருடைய ஆளுமைக்கும் ஊடகங்கள் உருவாக்கிய முகத்துக்கும் சம்பந்தமே இல்லை. அது அன்புராஜ் பேட்டியிலேயே தெரிகிறது. ஆனால் அதுதான் அரசியலுக்குத்தேவை. அதிலுள்ள எதிர்மறைத்தன்மைதான் அரசியலிலும் உள்ளது. அவரைத்தான் அரசியல்வாதிகள் கொண்டாடுவார்கள்
மாறாக அன்புராஜ் ஒரு மாபெரும் ஆளுமை. பாஸிட்டிவான ஆளுமை. ஒரு பெரிய முன்னுதாரணம். ஆனால் இன்றைய அரசியலுக்கு அவர் பொருந்த மாட்டார். நம் சூழலிலேயே பாருங்கள் அன்புராஜ் போன்றவர்களைப்பற்றிப் பேச இங்கே ஆளில்லை அவரை ஒரு சின்ன நியூஸ் பெட்டிக்குள அடக்கி விடுவார்கள். வாசகர்களுக்கும் அதில் பரபரப்பாக ஏதுமில்லை.
இந்த இணையதளத்திலேயே இவ்வளவு அற்புதமான ஒரு பேட்டி வந்துள்ளது. சமூகவலைத்தளங்களில் இதை ஒருவர்கூட பகிரவில்லை. ஒருவர்கூட கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் எவராவது மிகமிக நெகெட்டிவாக ஏதாவது சொல்லியிருந்தால் பெரிய அலைபோல அது பரவியிருக்கும். எல்லாரும் ஏதாவது சொல்லியிருப்பார்கள். அவர் பெரும்புகழ்பெற்றிருப்பார்.
இது எதிர்மறை உணர்ச்சிகளின் காலம். ஆகவேதான் வெறுமே கூச்சலிட்டு வசைபாடப்படுபவர்கள் தலைவர்களாகவும் முன்னுதாரணங்களாகவும் கொண்டாடப்படுகிறார்கள். அன்புராஜ் போன்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
உண்மையில் அன்புராஜ் போன்றவர்கள்தான் இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணம் ஆகவேண்டும். எந்த வகையான வாழ்க்கைச்சூழலிலும் இருந்து எழுந்து வரமுடியும் வாழமுடியும் என்பதற்கான சான்று அவர். எப்படிப்பட்ட நிலையிலும் வாழ்க்கையை கலை, இலக்கியம், சிந்தனை வழியாக பெருமைக்குரியதாக ஆக்கிக்கொள்ளமுடியும். பிறருக்குச் சேவைசெய்வதன் வழியாக ஒரு இலட்சியவாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதை அவர் வாழ்ந்து காட்டுகிறார். அவருடைய அர்ப்பணிப்பும் சேவையும் மகத்தானவை.
அவரை ஓர் இளைஞன் முன்னுதாரணமாகக் கொள்வான் என்றால் அவன் வாழ்க்கையைநேசிக்கவும் வென்றெடுக்கவும் ஆரம்பிப்பான். எதிர்மறையாக யோசிப்பவனான் வாழ்க்கையை எதிர்கொள்ளவே முடியாது. தோற்றுக்கொண்டேதான் இருப்பான். அந்தத் தோல்விக்கு அரசு காரணம் சமூகம் காரணம் அப்பா காரணம் என்று நினைத்து எதையாவது சொல்லிக்கொண்டிருப்பான். அதற்கு சமூகவலைத்தளம் என்னும் ஊடகம் இருக்கிறது. அதில் குரைத்துக்கொண்டும் புலம்பிக்கொண்டும் இருப்பான்.
அன்புராஜ் ஒருபக்கம் மொத்த சமூகக்குரலும் இன்னொரு பக்கம் இருக்கிறது. ஆனாலும் அன்புராஜ்தான் முன்னுதாரணம். அவர்தான் ஹீரோ. அவர்தான் வரலாற்றில் வாழ்பவர். ஊரோடு ஒட்டமால் ஊருக்கு முன்னால்செல்பவர்களால்தான் இங்கே எல்லாமே சாத்தியமாகியிருக்கின்றன. அன்புராஜ் அவர்களுக்கு வணக்கம். பேட்டி எடுத்தவர்களுக்கு நன்றி
செ.மாணிக்கவாசகம்