யானை கடிதங்கள் – 4

yanai

யானை – புதிய சிறுகதை

அன்புள்ள ஜெ

யானை சிறுகதையில் அபாரமான கவித்துவம் கொண்ட ஓர் இடம் வருகிறது. மீன் நிலாவின் நிழலில் ஏறிக்கொண்டு போட் என்று சொல்லி ஓட்டியது என்கிறான் அனந்தன். அது நிழல், அதில் எப்படி ஏறமுடியும் என சாதனா கேட்டதுமே அது மீனின் நிழல்தான் என்று சொல்கிறான். குழந்தைகள் இப்படி மிகப்பெரிய கவிஞர்களைப்போல சட்டென்று பேசிவிடுவதுண்டு. பிச்சைக்காரக் குழந்தைகள்கூட எதையாவது சொல்லிவிடும். ஒரு பிச்சைக்காரப்பெண்குழந்தை என்னிடம் பைசா கேட்டது. நான் நாணயம் கொடுத்தேன். ரூவா குடு இது உருண்டு போயிரும் என்று அது சொன்னது. நான் ரூவா பறந்திருமே என்றேன். அதுமேலே பைசாவை வச்சிருவேன் என்றது. ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவுக்கும் அந்தக்குழந்தைக்கு ஐந்துவயதுதான் இருக்கும்.

மாரிச்செல்வம்

அன்புள்ள ஜெ

யானை சிறுகதையில் அனந்தன் சொல்லும் ஒரு கதையில் அவன் நிலாவின் நிழல்மீது மீனின் நிழல் சவாரிசெய்யும் என்று சொல்கிறான். அந்தக்கதைக்கும் அந்த உவமைக்கும் தொடர்புள்ளதுபோலத் தோன்றியது. அனந்தனின் அம்மா அவனுடைய கற்பனைமேல் ஏறிக்கொள்கிறாள் என்பதைத்தானே அந்தக்கதை காட்டுகிறது? இருவருமே இரண்டு நிழல்களாகத்தான் மாறிவிடுகிறார்கள். நான் நினைப்பது சரியா என தெரியவில்லை. ஆனால் இந்த எண்ணம் எனக்கு வந்தது

சபரி

அன்புள்ள ஜெ

யானை கதையின் படங்கள் வித்தியாசமாக இருந்தன. ஏதோ ஓவியர் குழந்தைகள் பாணியில் வரைந்திருக்கிறார் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.நேற்றுத்தான் தற்செயலாகப் பார்த்தேன்.  ஓவியங்கள்: யாழினி (6 வயது), நிலா (8 வயது) என்று எழுதப்பட்டிருந்தது. ஆச்சரியமாக இருந்தது. இரண்டு இளம் ஓவியர்களுக்கும் என் வாழ்த்துக்கள்

எம்.பாலகிருஷ்ணன்

அன்புள்ள ஜெ

யானை கதை வாசித்து இத்தனைநாட்களுக்குப்பின்னரும் மனதிலேயே நிற்கிறது. அனந்தன் ஒரு தனியுலகில்வாழ்கிறான். அங்கே அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். வெளியுலகம்தான் அவனுக்குக் கஷ்டம். ஆனால் அவன் அம்மா அவனுக்காக தான் மகிழ்ச்சியாக இருந்த உலகை உதறிவிட்டு அந்த உலகுக்குள் செல்கிறாள். அவளை வெள்ளையானைகளாக மாறி அந்த வீடு சூழ்ந்துகொள்கிறது.

நம் பெண்களில் பெரும்பாலானவர்களை குழந்தைகளின் பள்ளிக்கூடம் இப்படி பேய்போல பிடித்துக்கொள்கிறது. குழந்தைகளின் படிப்பைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் ஏராளமான பெண்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களின் பிரச்சினையும் இதுதான்

சரஸ்வதி ராமச்சந்திரன்

முந்தைய கட்டுரைபனிமனிதன் – கடிதம்
அடுத்த கட்டுரைமங்காப் புகழ் புத்தர்