யானை – புதிய சிறுகதை
அன்புள்ள ஜெ
யானை சிறுகதை நீங்கள் எழுதிய சிறுகதைகளில் மிக முக்கியமான ஒன்று. ஒருவகையில் ஆழமற்ற நதி கதையுடன் இந்தக்கதையும் நுட்பமாகச் சென்று இணைகிறது. நாம் அறியமுடியாத ஆழம் என்ன என்பதுதான் கதை. ஆழமற்ற நதியில் யாருமே அந்த ஆழத்தை நோக்கிச் செல்லவில்லை. இந்தக்கதையில் அனந்தனின் அம்மா அதற்குள் சென்றுவிடுகிறாள்.
அனந்தனை ஆழத்துக்கு இழுப்பது இருட்டு. அதைத்தான் அவன் யானை என்கிறான். யானையின் தலையை அவன் வரையவில்லை. அதன் உடல் இருட்டுதான். அதைத்தான் அவன் வரைகிறான். அந்த இருட்டை அங்கே பிளாக்போர்ட் ஆகவும் அவன் பார்க்கிறான். அவன் அதை பலவகையில் சொல்லிக்கொண்டே இருக்கிறான். அவனுக்குக் கற்பிக்கப்படும் எழுத்துகள் எல்லாமே அந்த ஆழத்தில் சென்றுவிழுந்து நொறுங்கிக் கிடக்கின்றன.
சாதனாவுக்கு ஒரு நெர்வஸ் பிரேக் என்று சாதாரணமாகச் சொல்லிவிடலாம்தான். ஆனால் அவள் தன் மகனை மிகமிக ஆழமாக தொடர்ந்து செல்கிறாள்:.அவனை அணுக முயல்கிறாள். அவளும் அந்த ஆழத்திற்குள் விழுந்துவிடுகிறாள். அவளுக்கு இனிமையாக இருந்த வெள்ளைச்சுவர்கள் வெள்ளையானைகளாக மாறி அழுத்த ஆரம்பிக்கின்றன.
ஜெ, நான் இந்தக்கடிதத்தை எழுதும்போது நடுங்கிக்கொண்டே இருக்கிறேன். இதெல்லாமே என்னுடைய சொந்த அனுபவங்களும்கூட. இதற்குமேல் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.
அ.
அன்புள்ள ஜெ,
யானை ஒரு அற்புதமான சிறுகதை. யானையின் வயிற்றுக்குள் செல்வதைப்பற்றி கனவுகாணும் ஒரு சிறுவனின் கதை. இந்தக்கதையின் உச்சகட்டம் என்பது சாதனா யானை என்றதுமே அந்த யானையை அனந்தன் பார்த்துவிடுவதுதான். அந்த இடம் ஓரிருவரிகளில் சொல்லப்பட்டுவிடுகிறது. ஆனால் அதுதான் கதையின் முக்கியமான இடம்
ஜெயந்தி ராகவ்
அன்புள்ள ஐயா
ஆனை சிறுகதை வாசித்தேன். இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய வன்கொடுமையை குழந்தைகள் வீடுகளிலும் பள்ளிகளிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி நீங்கள் பல முறை எழுதி விட்டீர்கள். ஆனாலும் எழுதி மாளாது.
எனது தங்கை மகன் தன் தந்தையின் முகமறிந்ததில்லை. மூன்றாம் வகுப்பு படிக்கும் போது ஒருநாள் தயங்கியபடியே “என்னால் அந்த ஸ்கூல் போக முடியாது மாமா. எல்லாரும் கிண்டல் பண்றாங்க” என்றான். சில வருடங்களுக்கு முன் The Week பத்திரிகை கற்றல் குறைபாடு (Dyslexia) குறித்த சிறப்பிதழ் வெளியிட்டிருந்தது நினைவுக்கு வந்தது. அவனது கல்வி பற்றிய எனது கனவுகளை மூட்டை கட்டி வீசிவிட்டு உடனடியாக சிறப்பு உளவியல் மருத்துவரை நாடி assessment முடித்ததும் குறைபாட்டை உறுதிசெய்து சிறப்புப் பள்ளியில் சேர்த்தோம். எட்டு வருடம் அழுத்தமில்லாத , நிபுணத்துவம் பெற்ற ஆசிரியைகளின் உதவியால் மீண்டு வந்தான்.
எழுத்துக்களை கண்ணாடி பிம்ப மாதிரியில் எழுதுவது மட்டுமே dyslexia வின் வெளிப்படையான அறிகுறி. இப்போது உணர்கிறோம். நமது வகுப்பில் படிக்காத , கடைசி பென்ச் கெட்ட பையன்கள் என்று முத்திரை வாங்கிக் கொண்டிருந்த மாணவர்களின் துயரை.
“புறப்பாட்” டில் வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியேறும் சிறுவனுக்கும் ஆனையின் அனந்தனுக்கும் பொதுப்பண்புகள் உண்டு. கிளிப்பாட்டு அனந்தன் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த குறும்பு கொப்பளிக்கும் குழந்தை.
ஆனையை முதல் முதலில் எதிர்மறைப் படிமமாக உங்கள் படைப்பில் காண்கிறேன். அமைப்பு, பள்ளிக்கூடம், ஆசிரியர்கள், எல்லோரும் சேர்ந்து ஆனையாக ஆகிறார்கள் என்று தோன்றுகிறது. சிறுவனின் தாயும் நகர நாகரிகம் என்ற ஆனையிடம் மாட்டிக் கொண்டிருக்கிறாள். கடைசியில் தாயும் மகனும் ஆனையைக் கண்டு கொண்டு தாய் அடுக்கு மாடி ஆனையிடமிருந்தும் மகன் பள்ளிக்கூட ஆனையிடமிருந்தும் விடுபடும்போடு ஆனை வெள்ளையாகி விடுகிறது. இனி அதை சமாளித்து விடலாம்.
சில ஆண்டுகளுக்கு முன் ஐலான் என்ற குழந்தை அகதியாகதோணியில் தப்பி வந்து துருக்கி கடற்கரையில் மரணித்து கவிழ்ந்து படுத்திருக்கும் படம் உலகை உலுக்கி விட்டது. தினமும் மரணத்தின் குறுவடிவை பள்ளியில் பார்த்துக் கொண்டிருக்கும் அனந்தன்கள் பெற்றோர்களின் அடங்கா விழைவால் நம்மை விட்டு விலகிச்சென்றுகொண்டிருக்கிறார்கள்.
உங்களிடம் உள்ள குழந்தை வாசகர்களை குறுஞ்சிரிப்புக்குள் ஆழ்த்தி விட்டுக் கொண்டிருக்கிறான். அவன் எங்கள் குழந்தைகளையும் எழுப்புகிறான்.
அன்புடன்
ஆர் ராகவேந்திரன்
கோவை
அன்புள்ள ஜெ
யானை கதையில் அனந்தன் பசியை வரைகிறான். பசிக்கும் உயிர்களை அல்ல. பசிக்கும் வயிறுகளையும் அல்ல. சும்மா பசியை மட்டுமே வரைந்துவிடுகிறான்.
“இது என்ன கண்ணு?” என்று அவள் கேட்டால் “பசிக்குதுல்ல, அதுதான்” என்று அவன் சொல்வான் . “யானைக்கு பசிக்குதா?” என்று அவள் கேட்பாள். “யானைக்கில்ல, எறும்பு குதிரை எல்லாத்துக்கும் பசிக்குதுல்ல? அதான்” அவளுக்குப் புரியவில்லை. “பசிச்சா அது இப்படித்தான் சத்தம் போடுமா?” என்றாள். “சத்தம்போடறதுன்னா இதோ இப்படி” என்று இன்னொன்றைக் காட்டினான். “இது அதுக்கு பசிக்குதுல்ல, அது மட்டும்தான்” என்றான். அவள் அவனை திகைப்புடன் பார்க்க “ரொம்ப பசி” என்று மேலும் கரியால் தீற்றினான்.
இந்த இடம்தான் எனக்கு இந்தக்கதையை நுட்பமாகப் புரிந்துகொள்ள உதவியது. பசி என்ற அப்ஸ்டிராக்ட் ஆன விஷயத்தை வரைபவன் வேறு ஏதோ அப்ஸ்டிராக்டான விஷயத்தைத்தான் யானை என உருவகம்செய்கிறான். அம்மா அப்படி உருவகம் செய்த விஷயத்தையும் அவன் சட்டென்று புரிந்துகொள்கிறான்
டி.தியாகராஜன்