எண்பதுகளில் நான் எஸ்.ராமகிருஷ்ணனை சந்தித்து நிறைய பேசியிருக்கிறேன். 2007-ல் நீண்ட இடைவேளைக்குப் பின்னால் என்னைச் சந்தித்த பின்னர் அவர் சுகாவிடம் சொன்னதாகச் சுகா சொன்னார் ‘ஜெயமோகன் தானான்னே சந்தேகமா இருக்கு. நீங்க அவரை இருபது வருசம் முன்னாடி பாத்ததில்லை. ரொம்ப அடங்கிட்டார். ரொம்ப சிரிக்கிறார். ரொம்ப கனிஞ்சிட்டார்னு தோணுது’
அதை சுகா சொன்னபோது நான் எனக்குள் புன்னகை செய்தேன். நல்ல சொல்தான். ஆனால் கனிவு என்பது என்ன? தெரியவில்லை. ஒருவகை விடுபடுதல்தான் நான் அடைந்தது என்று தோன்றுகிறது. என்னில் இருந்து. நான் என நான் எண்ணிக்கொண்டவற்றில் இருந்து. என் மனதில் இருந்து. இன்னும் சொல்லப் போனால், என் ஜென்மவாசனைகளில் இருந்து.
என் அப்பா முன்கோபத்துக்கு புகழ்பெற்றவர். என் அண்ணா இன்றும் அப்பாவின் அதே குணத்துடன் இருக்கிறார். நான் என் இளமை முழுக்க முன்கோபத்துடன் இருந்திருக்கிறேன். எத்தனையோ அடிதடிகள். எத்தனையோ வழக்குகள். ஈட்டி ஏந்தி சென்று யாருக்காகவோ எதற்காகவோ போரிட்டுச் செத்த படைவீரனின் ரத்தம் எனக்குள் இருக்கிறது போல. அதை வெல்ல நான் என் வாழ்நாளெல்லாம் போரிட வேண்டியிருந்தது.
அதைவிட என் மனம். இரு சிக்கல்கள் கொண்டது. மிகவேகமாக உச்ச நிலைகளுக்குச் சென்று நெகிழ்ச்சியையோ கோபத்தையோ விரக்தியையோ வெறுப்பையோ அடையக்கூடியது அது. அதில் என் தர்க்கத்தின் கட்டுப்பாடே இருக்காது. ’பேய்’ இறங்க கொஞ்ச நேரமாகும்.
இரண்டாவதாக, மிகைப்பற்று மனச்சிக்கல் [Obsessive compulsive neurosis] அளவுக்கே செல்லும் செயல் தீவிரம். ஓர் எண்ணம் அல்லது செயல் என்னில் என் கட்டுப்பாட்டை மீறி இருந்துகொண்டே இருக்கும். அதை மட்டுமே எண்ணி, அதிலேயே குவிந்து, அதைமட்டுமே மணிக்கணக்கில் நாட்கணக்கில் செய்துகொண்டிருப்பேன். அந்த வேகம் காரணமாகவே நான் விஷ்ணுபுரம் போன்ற நாவல்களை எழுத முடிந்தது. ஆனாலும் அந்த வேகம் ஓர் உளப்பீடிப்பாகவே இருந்தது.
அவை இரண்டுமே கலைஞர்களுக்கு கண்டு வரும் சிக்கல்கள் என்று மணிப்பாலில் ஒர் உளவியல் நிபுணர் சொன்னார். நானே இவற்றை அவதானிக்க முடிவது வரை இவை உளப்பிரச்சினைகள் அல்ல என்றார். என் வாழ்க்கையின் முதல் முப்பது வருடங்கள் நான் இந்த உளச்சிக்கல்களுடன் போராடியிருக்கிறேன்.
கலைஞனின் மனம் என்ற விஷயத்தைப் பற்றி நான் எப்போதுமே சிந்தனை செய்வதுண்டு. அவன் கட்டுப்பாட்டில் இல்லாமலிருக்கும் போதுதான் அது படைப்பூக்கத் தன்மையுடன் இருக்கிறது. ஆகவே மனதை அதன்வழி போக விட்டால் மட்டுமே அவனால் நல்ல படைப்புகளை கொடுக்க முடியும். ஆனால் மனதை அதன் வழியே போகவிடுபவன் இச்சைகளை பின் தொடர்வான். இச்சைகளை பின் தொடர்பவன் உறவுகளை இழப்பான். பொய்யனாவான். பிறர் உணர்ச்சிகளை எப்படியோ சுரண்டுவான். அநீதிகளை எங்கேனும் செய்தேயாவான்.
எட்கார் அல்லன் போ முதல் இன்றுவரை புகழ்பெற்ற ஐரோப்பிய எழுத்தாளர்கள் கலைஞர்கள் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை கட்டற்றதாக, அநீதியும் குரூரமும் கலந்ததாக இருப்பதற்கு காரணம் இதுவே. அவர்கள் செய்பவற்றின் மேல் அவர்களின் பிரக்ஞைக்குக் கட்டுப்பாடு இல்லை. அறம், நீதி ,நாகரீகம் என்பதெல்லாம் பிரக்ஞைகள். ஆழ்மனம் ஓர் அபூர்வமான, மகத்தான விலங்கு. அவர்களின் எழுத்தில் அழகும் மானுட அறமும் வெளிப்படும் போது தனிவாழ்க்கை வேறெங்கோ இருந்துகொண்டிருக்கும்.
நானும் கட்டற்றவனாக இருந்தேன். அறவுணர்வு எனக்கிருந்தது. ஆனால் இங்கிதம் இல்லை. குரூரம் இருந்தது. நெருங்கிய ஒவ்வொருவரையும் புண்படுத்துபவனாக இருந்தேன். அப்படியே சென்றிருந்தால் நான் ஒரு பி.கெ.பாலகிருஷ்ணனாக ஆகியிருப்பேன். யார் கண்டது, ஜி. நாகராஜன்கூட ஆகியிருப்பேன். மனைவியை துரத்திச் சென்று நெருப்பு வைத்து கொளுத்திய ஜி. நாகராஜன்!
பல கலைஞர்களின் லௌகீகமான தோல்வி தங்களை கட்டற்ற ஆளுமைகளாக ஆக்கிக் கொள்வதில் இருக்கிறது. அந்த ஆளுமையை அவர்கள் பிறர்மேல் சுமத்துகிறார்கள். வேண்டியவர்களை கொடுமைக்குள்ளாக்குகிறார்கள். சகமனிதர்களை புண்படுத்துகிறார்கள். அதன்மூலம் உருவாகும் லௌகீகப்பிரச்சினைகளால் அவர்களின் கலையும் வீழ்ச்சியடைகிறது. அதனால் மனமுடைந்து தங்களைத் தாங்களே அழிக்கிறார்கள். ஒருவகை வன்மத்துடன் அந்த அழிவை தாங்களே முழுமை செய்துகொள்கிறார்கள்.
அதற்கான எல்லா வாய்ப்புகளும் கொண்டவனாகவே நான் இருந்திருக்கிறேன். என்னை மீட்டது இரு நிகழ்வுகள். ஒன்று அருண்மொழி. அவள்மேல் நான் கொண்ட, இன்றும் அதே உக்கிரத்துடன் ஒவ்வொருகணமும் நீடிக்கும் பெருங்காதல். பெண்மையின் ஒரு அம்சத்தை ஆண் தனக்குள் ஏற்றுக்கொள்ளாமல் அவனுக்கு மீட்பில்லை. எனது எல்லா நாவல்களிலும் அடிநாதமாக சொல்லும் சாரமான கண்டறிதல் இது.
அடுத்து நித்யா. நித்யா சிரிக்க சொல்லித்தந்தார். ’எதுவும் பெரிய விஷயமல்ல எல்லாமே பெரியதாக இருக்கும்போதுகூட’ என்று சொல்லித் தந்தார். தத்துவத்தை நோக்கியும் வரலாற்றை நோக்கியும் ஒவ்வொன்றையும் விரிக்க பயிற்றுவித்தார். அப்படி விரிந்தவற்றை பிரபஞ்ச நிகழ்வில் வைத்து சின்னஞ்சிறு துளியாக ஆக்கக் கற்பித்தார்.
எழுதும்போது கட்டற்றவனாகவும் நேர்வாழ்க்கையில் கட்டுப்பாடுள்ளவனாகவும் நான் ஆக முடியும் என்றார். எழுதும்போது உணர்ச்சிகரமானவனாகவும் சிந்தனையில் தர்க்கபூர்வமாகவும் செயல்படலாம் என்று சொல்லிக்கொடுத்தார். என்னைப்போன்ற எழுத்தாளனின் முன்னுதாரணம் காஃப்காவோ, எட்கார் அல்லன் போவோ, மார்கி து சேடோ, ஜி.நாகராஜனோ அல்ல. துஃபுவும், பாஷோவும், சிவராமகாரந்தும், பஷீரும்தான்.
அத்வைதத்தின் கொள்கைப்படி ஆளுமை [personality] என்று ஒன்று இல்லை. அது ஐரோப்பாவில் மக்களை மந்தைகளாக்கிய கிறித்தவத் திருச்சபையின் ஆன்மீகசர்வாதிகாரத்தை மீறி தனிமனித உரிமையை கோரியவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கருதுகோள். அந்த மக்களால் நாநூறு வருடங்களாக நம்பப்பட்டு ஏற்கப்பட்ட ஒன்று, அவ்வளவுதான்.
அத்வைதிக்கு நான் என்பது அகங்காரம் அல்லது மமகாரம் [தன்னிலை] மட்டுமே. அது ஒர் இருப்பு அல்ல. நிலை அல்ல. கட்டமைப்பு அல்ல. அது ஒரு நிகழ்வு மட்டுமே. அது இடத்துக்கு ஏற்ப தருணத்திற்கு ஏற்ப மாறக்கூடியது. ‘நான் இதுதான்’ என எண்ணுவதே மாயை. ’நான் இவ்வாறு இங்கே இருக்கிறேன்’ என்றே அத்வைதி எண்ணுவான்.
ஆகவே தன் அக இருப்பைப் பலவாக பிரித்துக்கொள்ள, பல தளங்களுடன் அதை இணைத்துக்கொள்ள அவனால் முடியும். இரும்புச்சிலைபோல தன்னைச் சுமந்தலையமாட்டான். காற்றுப்போல, நெருப்புப்போல கால – இடத்தில் தன்னை நிகழ்த்திக்கொள்வான். மேகம்போன்ற வடிவம் கொண்டதாக இருக்கும் அவன் அகம்.
உண்மையில் நாம் அனைவரும் இயல்பாக அதைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம். சிறுகுழந்தைகள் அப்படித்தான் இருக்கின்றன. கல்வி கற்கும் தோறும்தான் அகங்காரம் இறுகி, மெல்ல நம் தன்னிலையை ஓர் ஆளுமையாக உருவகித்துக் கொள்கிறோம். குறிப்பாக ஐரோப்பியக் கல்வி நம்மை நான் என நம்பச் செய்கிறது. தனிமனிதன் [individual ] என்ற சொல்லை அது சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதன் மூலம் நாம் நமக்கென ஒரு நானை உருவாக்கிக் கொள்கிறோம். அதன்பின் அதை பேணி வளர்க்கும் பொறுப்பு நம்முடையதாகிறது.
நான் என்பது ஓர் ஆளுமை அல்ல. நான் என்பது ஓர் அகங்காரம் மட்டுமே. அதை உணரும்படிச் செய்தது நித்யா. அது என்னைப் பலவாக எளிதாகப் பிரித்துக் கொள்ளச் செய்தது. நான் குறைந்தபட்சம் இருவர். ஓர் எளிய லௌகீகன், கூடவே ஒர் இலக்கியவாதி. இரு ஆளுமைகள் நடுவே முரண்பாடில்லாமல் ஆக்கிக் கொள்ள கடுமையாக என்னைப் பழக்க வேண்டியிருந்தது. என் அகங்காரத்தை ஒடுக்க வேண்டியிருந்தது. முழு வெற்றியும் நிகழவில்லை. ஆனால் அது பலன் அளித்தது.
அதேசமயம் அகங்கார அழிவு என்பது ரஜோகுணத்தை இல்லாமலாக்கிவிடும். செயல்திறமையை அழிக்கும். ’நான் இதைச் செய்யவேண்டும், என்னால் முடியும்’ என்ற இச்சை [will] இல்லாமல் செயல் இல்லை. அந்த இச்சையை உருவாக்கும் அடித்தளமான அகங்காரத்தை செயல்களைச் செய்யும் கர்ம மண்டலத்தில், செயல்சூழலில், மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும் என்றார் நித்யா.
அது எளிதல்ல. ஆனால் சாத்தியம்தான் என்பதை நான் அறிந்தேன். என் எழுத்தில் என் கருத்துக்களில் வெளிப்படும் அகங்காரம் என்பது நானே உருவாக்கிக்கொண்ட ஓர் அமைப்பு மட்டுமே. அது எனக்கு விருப்புறுதியை அளித்து என்னைத் தீவிரமாகச் செயல்படச்செய்கிறது. என் மூளையை, என் மனத்தை, என் மொழியை நானே நம்பச் செய்கிறது. என்னுடைய கருத்துக்களை முன்வைப்பதற்கான தன்னம்பிக்கை அவ்வாறு உருவாவதே. என் எழுத்துக்களில் ஒலிக்கும் நான் நான் என்னும் ஒலி அதுவே.
அகங்காரம் அடித்தளமாகக் கொண்ட என் செயல்தளத்தில் நான் முழுமையாகவே தனிமையானவன். அங்கே எனக்கு வேண்டியவர்கள் என எவரும் இல்லை. நான் நம்பும் விழுமியங்கள், இலட்சியங்கள் மட்டுமே அங்கே உண்டு.
ஆனால் நான் தனிமனிதனாக இதற்கு முற்றிலும் அப்பாற்பட்டவனாக என்னை ஆக்கிக்கொண்டேன். அங்கே முடிந்தவரை அகங்காரத்தை அழிக்க முயல்பவன். எந்தக்கூட்டத்திலும் இயல்பாக கரையக்கூடியவன். எத்தகைய மனிதர்களிடமும் சேர்ந்து பழகக் கூடியவன். ஆகவே நண்பர்கள் நிறைந்தவன். பிரியமான குடும்பம் கொண்டவன். ஒருபோதும் தனியன் அல்ல.
மூன்றாவதாக ஒரு நான் உண்டு. அது என் முழுமை நோக்கி நான் செல்லும் அந்தரங்கமான தேடல்களால் ஆனது. நித்யா தவிர எந்த மனிதரிடமும் நான் அதை முழுமையாகப் பகிர்ந்துகொண்டதில்லை. பகிரப்போவதும் இல்லை.
ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு எளிதில் என்னால் பின்வாங்க முடிவதே என்னை உற்சாகமானவனாக வைத்திருக்கிறது. என் கருத்துத்தளத்தில் நிகழும் எந்த சிக்கலும் சொந்த வாழ்க்கைக்குள் வருவதில்லை. ஒரு கணம்கூட அவற்றை நான் இங்கே கொண்டுவருவதில்லை. அது வேறு ஒருவன் என்றுதான் பலசமயம் உண்மையிலேயே தோன்றும்.
என்னைச் சந்திப்பவர்கள் எழுதும் ஆளுமைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்வதுண்டு. நண்பர்கள் அடிக்கடி அதைச்சொல்வதுண்டு. அருண்மொழியும் அஜிதனும் சைதன்யாவும்கூட அதைச் சொல்வதுண்டு. அது நான் பலகாலம் முயன்று அடைந்த ஒரு நிலை. ஒவ்வொருவருக்கும் அதையே சிபாரிசு செய்வேன். உறுதியான ஒற்றை ஆளுமையாக ஒருவர் தன்னை வைத்துக்கொண்டால் அவரை வாழ்க்கை ஏதேனும் ஒரு கட்டத்தில் பிளந்து போடும். அது இயற்கைக்கு மாறானது என்பதனால். அப்படி சிதைந்த பலரின் துயரங்களைக் கண்டிருக்கிறேன்.
கருத்துலக ஜெயமோகன் செய்யும் வேலைகளின் பொறுப்பை தனிமனித ஜெயமோகன் சுமப்பதில்லை. எழுத்து என் தன்னறம், அவ்வளவே. அது என்னால் செய்யப்படவேண்டியது என தோன்றுகிறது. செய்தால் நிறைவு கிடைக்கிறது. மற்றபடி அதன் வெற்றிதோல்விகளை, விளைவுகளை நான் பொருட்படுத்தப்போவதில்லை. அங்கே நான் வெளிப்படுத்தும் அகங்காரம் என் கடிவாளக் கட்டுக்குள் நிற்கும் ஒரு மிருகம் மட்டும்தான். ஆம், அது ஒரு பாவனை என்றே உணர்கிறேன்
ஏதேனும் ஒரு தருணத்தில் அந்த கருத்துலக முகத்தை முழுமையாக உதறி நான் பின்வாங்கவும்கூடும். என்னுடைய தனிமனித முகத்துடன் எஞ்சக்கூடும். ஏதேனும் ஒரு கட்டத்தில் அந்த தனிமனித முகத்தையும் உதறி பின்வாங்கி நான் என் ஆழ்ந்த தேடல்களுக்கு மட்டும் என்னை ஒப்புக்கொடுக்கக் கூடும். அது நிகழுமா என தெரியவில்லை. ஆசை, கனவு, அவ்வளவுதான்
கருத்துலகில் நான் திட்டவட்டமாக பேசக்கூடியவன். பொதுவாக முன்வைக்கப்படும் அரசியல் சரிகளுக்கு அப்பால் சென்று என் சொந்த அறவுணர்வால் சிந்திப்பவன். அதை அப்படமாக முன்வைப்பவன். இலக்கிய அழகியல் நோக்கில் என் ரசனைக்குகந்தவற்றில் கறாராக இருப்பவன். அரசியல், அழகியல் கருத்துக்களை தொடர்ந்து முன்வைப்பவன். ஆகவே என் மீது அன்றும் இன்றும் எரிச்சலும், கசப்புகளும் இருந்துகொண்டே இருக்கின்றன.
அதற்கான காரணங்கள் பல. ஒரு புதுக்கருத்து அது புதுக்கருத்து என்பதனாலேயே கொஞ்சம் அழுத்தமாகவே முன்வைக்கப்படும். மேலும் நான் படைப்பாளி என்பதனால் என் மொழி வர்மாணியின் விரல் போல. அறியப்படாத நுண்புள்ளிகளை அது சீண்டிவிடக்கூடும்.
எழுத்தாளனாக நான் உணர்ச்சிகளை அதீதமாக அடைபவனாகவே இருந்திருக்கிறேன். சென்ற காலங்களில் பல கருத்துக்களைத் தேவைக்குமேல் வேகமாக முன்வைத்திருக்கிறேன். இணையத்துக்கு நன்றி. நான் இணையம் வழியாக உரையாட ஆரம்பித்தபின்னர் மெல்லமெல்ல என் வேகத்தைக் குறைத்துக்கொண்டேன். ஒவ்வொருநாளும் என் கணிப்பொறியில் இருக்கும் கடிதங்களில் உலகின் மிகச்சிறந்த மனங்கள் பல என்னுடன் தொடர்பு கொள்கின்றன. அது என்னை இன்னும் நிதானமும் இன்னமும் தர்க்கமும் கொள்ளச்செய்கிறது.
இத்தனையையும் மீறி நான் சிலரைத் தனிப்பட்ட முறையில் எரிச்சல் கொள்ளச் செய்யலாம்தான். புதுக்கருத்தைக் கண்டு ஒவ்வாமை கொள்ளும் பழக்கம் நம்மில் சிலருக்கு இருக்கிறது. நாம் நம்பும் விஷயங்கள் மறுக்கப்படும்போது, ஆராதிக்கும் மனிதர்கள் விமர்சிக்கப்படும்போது நாம் பொங்குகிறோம். அது ஒருவகையில் இயல்புகூட. கருத்துக்கள் மேலும் மனிதர்கள் மேலும் பற்றுக்கொள்வதில் பிழை என ஏதும் இல்லை.
அவர்களிடம் ’நான் சொல்வதைக் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்’ என்றே சொல்வேன். ’இப்படி சிந்தனைசெய்து பார்க்காவிட்டால் நம்முடைய சிந்தனைகள் தேங்கிவிடுமல்லவா” என்று கேட்பேன். அதற்காக நான் ஊட்டும் எரிச்சலை மன்னித்துவிடும்படிக் கோருவேன். சிந்தனை என்பதே பல தரப்புகள் பிரிந்து முரண்பட்டு மோதி முன்னகர்வது, வளர்வது. அதில் நானும் ஒரு தரப்பு. நான் என்னை மறுப்பவர்கள் அவர்கள் தரப்பைச் செம்மை செய்து கொள்ள உதவுகிறேன் அல்லவா? குறைந்தது ஒரு விவாதத்தையாவது இந்த அறிவுச்சூழலில் அளிக்கிறேன் அல்லவா?
எரிச்சலடைபவர்களில் தங்களைப்பற்றி மிகையான மனப்பிம்பம் கொண்ட சில்லறை எழுத்தாளர்கள் பலர் உண்டு. இவர்கள் எல்லா காலத்திலும் இருப்பார்கள். கம்பனுக்கே அன்று சில்லறைக் கவிஞர்களின் தொல்லைதான் அதிகம் இருந்திருக்கிறது. பாரதி, தாகூர், புதுமைப்பித்தன் என அனைவருமே இந்த கொசுத்தொல்லையைத் தாங்கியவர்கள்தான். இவர்களின் எரிச்சல் உள்ளீடற்ற அகங்காரம் மூலம் உருவாவது. அதற்காக அனுதாபம் கொள்கிறேன். வேறெதுவும் செய்வதற்கில்லை.
இதையும் மீறி என்னுடய கருத்துக்களின் பிழைகளால், போதாமைகளால் சிலர் எரிச்சல் கொள்ளக்கூடும். நான் என்னை எந்த துறையிலும் ஆராய்ச்சியறிஞன் என்று சொல்லிக்கொள்பவன் அல்ல. இந்தியஞானம், மற்றும் இலக்கியம் சார்ந்த கருத்துக்களை மட்டுமே நான் திடமாக முன்வைப்பேன், அவற்றில் எனக்கிருந்த ஆசிரியர்களும் அவர்களுடன் இருந்த வாய்ப்புகளும் உலகின் எந்த கல்விச்சாலையிலும் எளிதில் காணமுடியாதவை. பிற தளங்கள் சார்ந்து எனக்கு எப்போதும் ஐயங்களும் இடர்பாடுகளும் உண்டு. தகவல்களுக்குப் பிறரைச் சார்ந்திருக்கிறேன்.
மேலும் சிந்தனைகளை மேற்கோள் காட்டியே நமக்கு பழக்கம். நம்மில் பலர் எதைச் சொன்னாலும் அதை யார் சொன்னார்கள் என்றுதான் சொல்கிறோம். சுயமாகக் கருத்துக்களை உருவாக்கும்போது பல சிக்கல்கள். சிலகருத்துக்கள் ஒற்றைப்படையாக இருக்கும். சில கருத்துக்கள் முந்தைய கருத்துக்களுடன் முரண்படும். சிலகருத்துக்கள் தர்க்கமே இல்லாமல் வெறும் எண்ணங்களாக இருக்கும். அவற்றைத் தொடர்விவாதங்கள் மூலமே மேம்படுத்தி முழுமை செய்துகொள்ளமுடியும்.
எமர்சன் போன்றவர்களின் எழுத்தின் அளவு பீதியூட்டுவது. அதற்கான காரணம் இதுவே, அவர்கள் பேசவில்லை, உரையாடிக் கொண்டிருந்தார்கள். உலகின் எல்லா முக்கியமான சிந்தனையாளர்களும் நிரந்தரமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அதன் வழியாகத் தங்களை செம்மை செய்துகொண்டிருந்தார்கள். ஆகவே என் சிந்தனைகளை நானே உருவாக்கிக் கொள்ளும்போது கொஞ்சம் தடுமாறுவதில் பிழையில்லை என்றே நினைக்கிறேன். அவை உரையாடலுக்கான வெளிகளைத் திறக்கின்றன.
நான் சொல்வது முற்றிலும் பிழையாகக் கூட இருக்கலாம். ஆனால் நான் அறிந்ததை, நம்புவதைச் சொல்கிறேன். அந்தக்குரலும் இந்த கருத்துத்தளத்தில் இருக்கட்டுமே. இவை நாளை முழுக்க மறுக்கப்பட்டாலும் கூட நம் சிந்தனையின் ஒழுக்கில் எனக்கான பங்கை ஆற்றியிருக்கிறேன் என்று நிறைவுகொள்வேன். ஆனால் ஒன்று, இத்தனை பக்க அளவுகளுடன் இத்தனை சிந்தனைகள் மற்றும் விவாதங்களுடன் இந்த எழுத்துமுகம் என்னுடைய ஒரு சிறு பகுதி மட்டுமே.
மறுபிரசுரம் /முதற்பிரசுரம் ஜனவரி 21 ,2011