ஈரட்டிப் புத்தாண்டு – கடிதங்கள் – 2

ERA1

சிரிப்புடன் புத்தாண்டு

ஈரட்டி – கடிதங்கள்

அன்புள்ள ஜெ

ஈரட்டி அனுபவம் பற்றி எழுதியிருந்தீர்கள். நீங்கள் சொன்னது மிக முக்கியமானது. குடி இல்லாத கேளிக்கைதான் உண்மையானது. குடி இல்லாமல் நண்பர்களுடன் இருப்பதே உண்மையான கொண்டாட்டம். குடிக்கேளிக்கை என்பது ஒரு பாவலாதான். அப்போது எவருமே மகிழ்ச்சியாக இருப்பதில்லை.சமீபத்தில் குடியை விதந்தோதும் எழுத்தாளர்களில் ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக குடி இல்லாமல் நட்புச்சந்திப்பே சாத்தியமில்லாமல் ஆகியிருப்பதைப்பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன்.

நானும் அவ்வாறுதான் இருந்தேன். என் தொழில் என்னைக்குடிக்கச் செய்தது. கொஞ்சம் கொஞ்சமாக குடி இல்லாமல் சந்திப்பே சாத்தியமில்லாமல் ஆகிவிட்டது. அது என்னை அடிமைப்படுத்தியது இருபதாண்டுகாலம் எனக்கு சூரிய உதயம் கிடையாது. சூரிய அஸ்தமனமும் கிடையாது. ராத்திரிகளே கிடையாது. ஒன்றுமே நினைவில் இல்லை. இன்று ஒரே மூச்சில் உதறி மீண்டுவந்துவிட்டேன். இன்றைக்குத்தான் நான் இழந்தவை என்னென்ன என்று அறிகிறேன்

நான் மேலைநாடுகளில் தொழில்செய்தவன். அங்கே மிதமாகக் குடிக்கமுடியும். இங்கே அது சாத்தியமே இல்லை. இங்கே ஊற்றிக்கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். சூழலில் எல்லாரும் ஊற்றிக்குடிப்பதனால் நாமும் அறியாமலேயே அந்த நிலைக்குச் சென்றுவிடுகிறோம். மேலும் இங்கே உள்ள குடி தரமானது அல்ல. சீக்கிரமே மண்டையில் அறைந்துவிடுகிறது. அதன்பின் தரமானவற்றை குடிக்க முடிவதே இல்லை.

இங்கே குடிப்பவர்கள் இழப்பது உண்மையான நட்புச்சூழலை. பயணங்களை. இயற்கையுடன் கொண்டுள்ள உறவை. சொல்லப்போனால் எதெல்லாம் உண்மையான மகிழ்ச்சிகளோ எல்லாவற்றையும். இப்போது குடியை ஒரு ஃபேஷனாகச் சொல்கிறார்கள். பெண்கள் குடிப்பது ஜாஸ்தியாகிவருகிறது. குடி தரும் எரிச்சல் மனித உறவுகளை கசப்பாக ஆக்கிவிடும் என்பது என் அனுபவ உண்மை

திருமலைச்சாமி

er2

அன்புள்ள ஜெ,

ஈரட்டி 2 நாள் அனுபவம் மிக பெரிய ஒரு உளவிடுதலையை அளித்தது. எனக்கு கடந்த நான்கு வாரங்களாகவே ஒவ்ஒரு ஞாயிறு அன்றும் ஏதோ ஒரு வேலை காரணமாக வீட்டில் இருக்க முடியவில்லை. ஈரட்டி வருவதற்க்கு முதல் நாள் ஞாயிறு மாலை தான் வீடு வந்தேன். அடுத்த நாள் ஈரட்டி செல்ல மனைவி ஏதும் சொல்வாளோ என ஒரு தயக்கம் இருந்தது. மேலும் இளய மகன் ஒரு வருடத்திற்க்கு பிறகு வந்திருந்தார். எனவே ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் இருவருமே உங்களுடன் சந்திப்பு என்றவுடன் சந்தோசமாக சென்று வர சொன்னார்கள்.

இரண்டு நாட்களும் இலக்கியம் இல்லாமல் வெறும் சிரிப்பு கொண்டாட்டமாக சென்றது. பல வருடங்களுக்கு முன் இது போன்ற புது வருட கொண்டாட்டங்களில் கலந்துகொண்டதுண்டு. ஆனால் அதில் குடியே பிரதானமாக இருக்கும். இந்த புது வருடம் எனக்கு உன்மையில் மிக சந்தோசமாகவும்,உற்சாகமாகவும் அமைந்தது. மேலும் நாமக்கல்லில் இருந்து சக்திகிருஷ்ணனுடன் வந்து திரும்பி வந்தது ஒரு எக்ஸ்ரா போனஸ்.  அந்த “லாரிக்காரங்கள விட “என்று சென்னது ஒரு காமடியாகத்தான். கண்டிப்பாக வருத்தம் ஏதும் இல்லை.

நன்றியுடன்,

வரதராஜன்.

நாமக்கல்.

er5

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு.,

புத்தாண்டு வாழ்த்துக்கள். தங்களின் ஈரட்டி புத்தாண்டு கொண்டாட்டம் வாசித்தேன்.இதுவரை கேள்விப் படாத இடமாக இருந்தது. ஈரோட்டின் அருகில் இப்படி ஒரு மலைப்பிரதேசமா என்ற வியப்பும் தோன்றிற்று.

தங்களின் பயணக்கட்டுரைகள் , அனுபவங்களை படிக்கும் போது ஒருவித உற்சாகம் வருவதுண்டு.ஏனெனில், நமது மனதிற்கு அணுக்கமான ஆனால் இதுவரை சிந்தித்திராத தத்துவ சிந்தனைகள் உள்பொதிந்து கிடக்கும். அதை ஒருவர் கண்டு எழுதி, நாம் வாசிக்கும்போது வரும் உற்சாகம் அது. ஆழ்மனதில் ஒரு அடர்த்தியான ஆனந்தம் பரவும் . அக்கட்டுரையில் ,”மெய்யான மகிழ்ச்சி என்பது மூளையும், மனமும் முழவிழிப்பில் இருக்கும்போது மட்டுமே அடையப்படுவது ” என்ற வரி எனக்கு மாபெரும் திறப்பாக இருந்தது. ‘அட, ஆமப்பா!’ என்று மனதிற்கு நெருங்கிய சிந்தனையாக பட்டது. “அறிவார்ந்த மகிழ்ச்சி என்பது எப்போதும் தர்க்கத்தை கடந்து செல்லுதலே” என்ற நித்ய சைதன்ய யதியின் கூற்றிற்கு ஏற்ப அகம் இயங்க ஒரு மின்னல் வேக பேராற்றல் தோன்றிற்று.

மேலும் தங்களது புத்தாண்டு கொண்டாட்டம் மிக உற்சாகமாக கிண்டலும், சிரிப்புமாக போனது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.,அதேயளவு ஏக்கத்தையும் ! நான் ஒருசில சந்திப்புகளிலேயே, உங்கள் அருகாமையில் நின்று உரையாட கேட்டிருக்கிறேன்.எப்பொழுதும், பேச்சு இலக்கியத்தை சேர்ந்ததாகவே இருக்கும் ; கிண்டல்கள் என்றாலும் அது இலக்கிய ரீதியில்தான். இலக்கியத்தை தாண்டி, கேலிப்பேச்சும் களியாட்டமும்  இதுபோன்ற நண்பர்கள் கூடுகையில் தான் நிறைந்திருக்கும் பொழுது , அதில் பங்குகொள்ள மிக இயற்கையான ஒரு ஆவல் எழுகிறது.

இந்த மனநிலை, சரவணன் சந்திரன் அவர்கள் விஷ்ணுபுரம் விருது விழாவில் உங்களுடனான உறவை, ஒரு ‘Coach – Student’ உறவாகவே  பார்க்கிறார் என்று விவரித்தார். அதோடு நான் பொருத்திப்பார்க்கிறேன். ஒரு கண்டிப்பான ஆசிரியர், கிண்டலும் சிரிப்புமாக இருப்பதை எப்படி ஒரு மாணவன் உள்ளூற வியந்து ரசிப்பானோ, அதுபோலவே. இதுபோன்ற ஒரு நண்பர் கூடுகையில் வாழ்நாளில் பங்கேற்த்துவிடும் ஆவலுடன்.,

கார்த்திக் குமார்,

சென்னை.

முந்தைய கட்டுரையானை கடிதங்கள் – 3
அடுத்த கட்டுரைஇந்துமதத்தைக் காப்பது…