ஜே.ஜே. சிலகுறிப்புகள் – இன்றைய வாசிப்பில்

jeje

நேர்கோடற்ற எழுத்து

வணக்கம் ஜெ,

உங்களின் கடிதத்திற்கு பின் தமிழ் படைப்புக்களை வாசிக்க துங்கியுள்ளேன். https://www.jeyamohan.in/114896#.XDJTfplX6yM

இன்று ஜேஜே சில குறிப்புகள்.

நான் படித்த புத்தகங்களின் கதை என்ன என மற்றவர்கள் கேட்கும் போது பல நேரம் கதை இல்லை எனவோ ஒற்றை வரியிலோ கூறுவேன். யூலிஸ்ஸஸ்- டப்லினில் ஒரு நாள். A Portrait of the artist as a young man- ஒரு சிறுவன் கலையை நோக்கி வளர்ந்து செல்வது. இந்த ஒரு வரியையா அறுநூறு பக்கங்களுக்கு மேல் எழுதிற்கான் என்ற மறுகேள்விக்கு நாவலில் கதை முக்கியமல்ல என சொல்லுவேன். எழுத்தாளன் தான் சொல்ல விரும்பியவற்றை சொல்லும் ஒரு தளம் நாவல். அதற்குள் சிறுகதை கவிதை நாடகம் என எதுவும் இருக்கலாம். வெறும் சிந்தனைகளின் தகவல்களின் தொகுப்பாகவோ கூட இருக்கலாம். ஜேஜே சில குறிப்புகளின் இரண்டாம் பாகம் முற்றிலும் அவ்வகையிலானது.

ஜேஜேயின் டைரி குறிப்புகள் மட்டுமே தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன. எவ்விதமுறையான நரேடிவ் இல்லையென்றாலும் முதல் பாகத்தில் தரப்பட்டுள்ள ஜேஜேயின் சித்திரத்தை அறிந்தபின் இவற்றை உள்வாங்கி புரிந்துகொள்ளமுடிகிறது. ஆங்காங்கே வெளிப்படும் ஹாஸ்யங்களும் ஜேஜே எனும் ஆளுமையின் சித்திரமும் தொடர்ந்து படிக்கவைக்கிறது.

நிஷேவை படிக்கும் ஒவ்வொரு முறையும் முன்னிருந்த சிந்தனைகள் அனைத்தையும் உடைத்து சென்று கொண்டேயிருக்கும் ஒரு அனுபவம் ஏற்படும். ஜேஜே வை படிக்கும் போதும் ஏறத்தாழ அவ்வாறே. கட்டமைப்புகள் அனைத்தையும் தரைமட்டம் ஆகி தடுப்புகள் அனைத்தையும் தாண்டி எங்கென்று எதற்கென்று தெரியாமல் சென்றுகொண்டே இருக்கும் ஒரு முனைப்பு. அங்கங்கே சற்று பிணைப்புகள் ஏற்பட்டாலும் வெகு விரைவிலேயே அவற்றை உதறி செல்லுதல்.

ஜேஜேயின் தத்துவங்கள் எல்லாவற்றையும் நிராகரிப்பதோடு நின்றுவிடுகின்றன. ஒரு தீர்மானமோ இலக்கோ இருப்பதாக தெரியவில்லை. நிஜவாழ்க்கையில் நாம் பெரும்பாலும் அப்படி தான் இருக்கிறோம் என்றாலும் ஒரு கதாபாத்திரத்திற்கு ஒரு முடிவு இருப்பதே கதையில் நம்மை ஊன்றச்செய்கிறது.

ஆனால் நிஷேயின் மொழியில் தத்துவம் மட்டுமல்ல் உணர்ச்சியும் கவித்துவமும் இருக்கும். நிஷே ஒரு பொயட் பிலோசோபர். சுந்தர ராமசாமியின் நடையில் உணர்ச்சிகள் எங்கும் இல்லை. அதை அவர் உணர்ந்தே செய்திருக்க கூடும். அதேசமயம் கவித்துவமும் சற்றும் இல்லை. நவீன நாவலாக இருக்கவேண்டும் என்று உணர்ச்சியையும் கவித்துவதையும் பழையகால மெலோட்ராமாட்டிக்ஸ் என எண்ணி விட்டுவிட்டாரா. ஜேஜேயின் தத்துவத்தை சிந்தனைகளை படித்து அதோடு ஒரு புரிதல் ஏற்பட்டாலும் இன்னும் சில வருடங்கள் தாண்டி அவை நினைவிருக்கும் என்றால் இல்லை. ஆனால் நாவலில் சற்றே உணர்ச்சிகள் கொண்ட ட்ராமாட்டிக் இடமாக எனக்கு தோன்றியதே என்றும் நினைவில் இருக்கும்- மரப்பாச்சி பொம்மை பகுதி.

நாவலின் பிற கதாபாத்திரங்களுடனும் எவ்வித பிடிப்பும் ஏற்படவில்லை. குறிப்பாக ஓவியர் சம்பத். முப்பரிமாணம் இல்லாத ஒற்றை வண்ணமாக தோற்றமளிக்கும் செயற்கையான கதாபாத்திரம். ஜேஜேயின் அம்மாவும் அதே போல் stereotypicalஅச்சு ஜேஜேயின் மனைவி இருக்கிறார் அவ்வளவே.

இந்நூலை அறிவுத்தளத்தில் வைத்து மட்டுமே படிக்க வேண்டுமெனில் அவ்வறிவு எக்காலத்திற்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். ஜேஜேயின் பல கூற்றுகள் இன்று உவப்பானதாகவோ சுவாரசியமாக பட வில்லை. இது வெளி வந்த நாட்களில் பெரும் வரவேற்பை பெற்றிருந்ததை பற்றி படித்திருக்கிறேன். அது இந்நாவலின் புதுமையான நடைக்காக மட்டுமே இருந்திருக்கு முடியும். இன்று இந்நடையில் பல நூல்கள் வந்துவிட்டாலும் தமிழில் இது முன்னோடியாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.

இந்த வாசிப்பில் என்னை பாதித்த ஒரு விஷயம். நம் மொழி எழுத்தாளர்களை விட்டு விட்டு பிற மொழி எழுத்தாளர்களை புகழ்வதும் போற்றுவதும். நான் இவ்வளவு காலம் அப்படி தான் இருந்திருக்கிறேன். தமிழில் உங்களை தவிர பெரிதாக வேறெந்த இலக்கியமும் படித்ததில்லை. டால்ஸ்டாய் ப்ரௌஸ்ட் ஸ்வெய்க் என மொழி மாறி மாறி சென்றாலும் தமிழ் பக்கம் வரவில்லை. இந்நூல் என்னை மீண்டும் என் தாய் மொழி நோக்கி திருப்பி யுள்ளது. இனி அதிகமாக தமிழ் நூல்களே வாசிக்கப்போகிறேன். அடுத்து ஒரு புளியமரத்தின் கதை.

ஸ்ரீராம்

sura

அன்புள்ள ஸ்ரீராம்

ஏற்கனவே ஜே ஜே சிலகுறிப்புகள் பற்றி நான் எழுதியவற்றுடன் நீங்கள் சொல்பவை பெரும்பாலும் ஒத்துப்போகின்றன. ஆனால் நான் சொல்லி இருபத்தைந்தாண்டுகள் ஆகின்றன.

பொதுவாக அறிவுத்தளம் சார்ந்தவையும் வாசிப்புச் சவால்களை அளிக்கும்படி சிக்கலான வடிவம் கொண்டவையுமான சோதனைமுயற்சி நாவல்கள் தீவிர இலக்கியச் சூழலில் உடனடியாக கவனம் பெறுகின்றன. ஏனென்றால் அவை எந்த அளவுக்கு ‘அடக்கமான’ மொழி கொண்டிருந்தாலும் ‘இதோ சோதனை முயற்சி செய்திருக்கிறேன்’ என்பது ஒரு கூப்பாடுதான். இந்தப் பிரபலம் என்பது சிறியவட்டத்திற்குள்தான் என்றாலும் அவர்கள் பிறர் மேல் கருத்துப்பாதிப்பு செலுத்தக்கூடியவர்கள். ஆகவே  ஒருதலைமுறைக்காலம் அந்த மதிப்பு வாசிப்புச் சூழலில் இருந்துகொண்டிருக்கும்.

இத்தகைய ஆக்கங்கள் சமகாலப் பொதுவாசிப்பு முறைமையிலிருந்து விலகிச்சென்று வாசிக்கத்தக்கவை. ஆகவே வாசகனுக்கு சவாலாக அமையக்கூடியவை. அந்தச் சவாலை அவன் எதிர்கொண்டுவிட்டான் என்றால் அவனுக்கு ஒரு வகையான நிறைவும் பெருமிதமும் உருவாகிறது. அவன் அதைப்பற்றி பிறரிடம் பெருமையாகப் பேசுவான். தன்னை உயர்நிலை வாசகன் என கருதிக்கொள்ளவும் முன்வைக்கவும் அது ஒரு வாய்ப்பு என கருதிக்கொள்வான்.

ஒரு படைப்பில் இருக்கவேண்டிய நுண்மை என்பது அது வாழ்க்கையின் நுண்மை ஒன்றை சுட்டிக்காட்டுவதனால் இயல்பாக வரக்கூடியதாக இருக்கவேண்டும். அது உருவாக்கும் வாசக இடைவெளி என்பது வாசகன் வாழ்வனுபவத்தாலும் பண்பாட்டு அறிவாலும் நிரப்பிக்கொள்வதாக இருக்கவேண்டும். வடிவச்சோதனைகளில் புதிர்விடுவிப்பின் வழிமுறையே உள்ளது. தன் வடிவப்பிரக்ஞையாலும் புதிரவிழ்க்கும் திறனாலும் வாசகன் அந்தப்படைப்பை அவிழ்க்கிறான். அது உண்மையில் இலக்கிய அனுபவம் அல்ல, ஆனால் இலக்கிய அனுபவம் என்று தோன்றுகிறது

வாசிப்பிலிருக்கும் இந்தப்பாவனை இலக்கியத்தளத்தில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு. இளம்வாசகர்களில் கணிசமானவர்கள் இச்சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். ஏனென்றால் அந்த வயதில் வாசகன் தேடுவது ‘நான் அரிதானவன், பிறரைப்போல அல்ல’ என்னும் உளநிலையையே. வாசிக்க வாசிக்க பலர் விரைவில் வெளியே வந்துவிடுவார்கள். அரிதாக சிலர் இறுதிவரை அங்கேயே சிக்கிக்கொள்வார்கள். சிக்கிக்கொள்பவர்கள் பெரும்பாலும் வாழ்க்கைசார்ந்த நுண்ணுணர்வு அற்றவர்கள். வரலாற்று, பண்பாட்டு அறிதல்களோ அதுசார்ந்த உசாவுதல்களோ இல்லாதவர்கள். வடிவங்களின் கணிதங்களுக்குள் உழல்பவர்கள்.

ஜே.ஜே. சிலகுறிப்புகள் ஓர் எல்லைவரை இத்தகைய ஒரு படைப்பு. அது அன்று பெரிதாக பேசப்பட்டமைக்குக் காரணம் அதன் வடிவச்சிக்கல்தான், அன்று ‘டைரி’ வடிவநாவல் அரிது. தன்னை புனைவல்ல உண்மை என பாவனைசெய்யும் படைப்புகள் இல்லை. ஆகவே அதை அன்று உண்மைவரலாறு என்றே வாசகர் மயங்கினர்.   அதன் மொழிப்புதுமை பெரிதாக பேசப்பட்டது. அதற்கப்பால் அது விவாதிக்கப்படவில்லை. விவாதிக்கப்படவேண்டும் என்று நான் எப்போதுமே சொல்லிவந்தேன். ஒருதலைமுறை கடந்ததும் அதன் வாசிப்புத்தன்மையிலிருந்த சவால் இல்லாமலாகிவிட்டிருக்கிறது. அந்தக் கவர்ச்சி இல்லாமல் அது தரையில் நின்றிருக்கிறது.

அந்நாவலின் எல்லைகளை உருவாக்கிய கூறுகள் என்னென்ன? ஒன்று எழுத்து என்பது மிகுந்த பிரக்ஞையுடன் உருவாக்கப்படவேண்டியது, செதுக்கிச் செதுக்கி அமைக்கப்படவேண்டியது என்ற சுந்தர ராமசாமியின் நம்பிக்கை. அவர் அதை பல ஆண்டுகளை எடுத்துக்கொண்டு யோசித்து யோசித்து எழுதினார். வரிவரியாக திருத்தினார். ஒருநாளைக்கு இருபது வரிகள் வீதம் மொத்தநாவலையும் கூர்தீட்டியதாக அவர் என்னிடம் சொல்லியிருக்கிறார். பின்னர் ஓர் எடிட்டர்குழு அதை இரண்டுடாண்டுகாலம், ஒவ்வொருநாளும் அமர்ந்து, மொழிமேம்பாடும் வடிவமேம்பாடும் செய்திருக்கிறது. இதை சுந்தர ராமசாமியே சொல்லி அவருடைய அனுமதியுடன் பதிவும் செய்திருக்கிறேன்.

விளைவாக மிகமிகக் கவனமான, பிர்க்ஞைபூர்வமான ஒரு நடை உருவாகி வந்தது. இலக்கியத்தின் முதல்பணியே நனவிலிநோக்கிய ஊடுருவல்தான். அது அப்படைப்பில் நிகழவேயில்லை. அந்த ‘கவனம்’ ஆசிரியனை மீறிய எதுவும் அப்படைப்பில் நிகழாமல் தடுத்துவிட்டது.  ஆகவே வாசகன் தன் பிரக்ஞையைக் கடந்து நனவிலி நோக்கிச் செல்ல எந்த வாய்ப்பும் அதில் இல்லை. அந்தக் கட்டுப்படுத்தப்பட்ட மொழி அன்று புதுமையாக இருந்தது. சவரக்கத்தியின் கூர் கொண்ட மொழி என்னும் கனவு சுந்தர ராமசாமிக்கு இருந்தது. படைப்பாளிக்கு அது ஒரு பொய்க்கனவு. அவன் இலக்கு அகதரிசனங்களும் உணர்ச்சிவெளிப்பாடுகளுமே ஒழிய மொழி அல்ல. மொழி என அவன் சொல்வது ஒரு கூட்டுபாவனை மட்டுமே. ஆகவே ஒரு தலைமுறை கடந்தால் எல்லா மொழியும் பழைய மொழியே. அந்தப்புனைவுலகில் எந்த அளவுக்கு நனவிலிப்பயணம் கைகூடியிருக்கிறது என்பதே கேள்வி.

இரண்டாவதாக, சுந்தர ராமசாமிக்கு மரபின் மேல், சூழலின்மேல் இருந்த விலக்கம். செவ்வியல் மரபு நாட்டார் மரபு இரண்டின்மீதும் அவருக்கு ஒவ்வாமையும் அறியாமையும் இருந்தது. கூடவே சமகால வாழ்க்கைச்சூழலை நேரடியாக எதிர்கொள்வதும் குறைந்திருந்தது. ஆகவே பெரும்பாலும் அவருடைய ’சிந்தனையில்’ இருந்தே அந்நாவல் உருவானது. கேரள இலக்கியம்பற்றிய அந்நாவலில் கேரளவாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த எந்தத் தொன்மமும் இல்லை. எந்த ஆழ்படிமமும் இல்லை. கேரள இலக்கியத்தில் என்றும் பேசப்பட்ட எந்தப் பெரிய உருவகமும் அதில் கேலியாகக்கூட உள்ளே வரவில்லை.

அதோடு அதில் கேரளவாழ்க்கையின் எந்த உத்வேகம் மிக்க மெய்யான நிகழ்வுகளும், அதன் சாயல்களும் இல்லை. ஜே.ஜே.வாழ்ந்த காலகட்டத்தில்தான் வயலார் புன்னப்றா போராட்டம் நடந்தது. ஜே.ஜே. அதைக் கேள்விப்படவே இல்லை. உண்மையான ஜே.ஜே. [அதாவது சி.ஜே.தாமஸ்] கிறித்தவச் சீர்திருத்தம் சார்ந்த பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளால் கொந்தளித்தவர். அவருடைய சடலத்தை அடக்கம் செய்ய கத்தோலிக்கத் திருச்சபை மறுத்தது. ‘பொறுக்கிக்கல்லறை’யில் அவரை அடக்கம் செய்யும்படி சொன்னது. அது அன்று பெரிய போராட்டமாக மாறியது. ஜே.ஜே. சிலகுறிப்புகளில் ஜே.ஜே. பேசிக்கொண்டிருப்பதெல்லாம் போலியான அறிவுச்சிக்கல்களைப்பற்றி மட்டுமே.

சரி, அது உருவகமாகவே கேரளத்தை எடுத்துக்கொண்டது என்றும் அது பேசுவது தமிழ்வரலாறே என்றும் கொள்வோமென்றால் அதில் தமிழ்ச்சூழல் சார்ந்த எந்தத் தொன்மமும் ஆழ்படிமமும் இல்லை. குறியீட்டுத்தன்மையுடன் விரியும் எந்தப் பெருநிகழ்வும் இல்லை. சமகாலத் தமிழ் அறிவுலகை ஆட்டிப்படைத்த எந்த மெய்யான சிக்கலும் அதில் இல்லை. வணிக எழுத்து ஓங்கி இலக்கியம் மறைந்திருந்ததன் சித்திரம் தவிர. [ஜே.ஜே.யின் சமகாலத் தமிழகம் திராவிட இயக்கம் எழுச்சிகொண்டு அரசியலை கைப்பற்றிய காலகட்டத்தில் இருந்தது]

ஏன் ஆழ்படிமங்களும் தொன்மங்களும் முக்கியமானவை என்றால் அவையே எழுத்தாளனும் வாசகனும் இணைந்து தங்கள் ஆழுள்ளத்திற்குள் செல்லும் வழிகள். பண்பாட்டின் ஆழுள்ளம் வெளிப்படும் வாயில்கள். ஜே.ஜே. சிலகுறிப்புகள் நம் நவீனத்துவம்  [modernism] உருவாக்கிய உச்சகட்ட மாதிரிப் பிரதி. நவீனத்துவம் தனிநபர்படிமங்களையே அதிகபட்சமாக உருவாக்கமுடியும். ஜே.ஜே. சிலகுறிப்புகளில் அவ்வப்போது வரும் சில எளிய அந்தரங்கப் படிமங்கள் மட்டுமே அதன் அழகு [இடைக்காவின் இசைபோல. அறைக்குள் தானே இசைக்கும் வீணை போல]

மூன்றாவதாக, ஜே.ஜே. சிலகுறிப்புகளின் டைரிப் பக்கங்கள். அவை சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றன. ஆனால் அவற்றிலுள்ள தத்துவப்புரிதல் மிக மேலோட்டமானது. எளிமையான தத்துவ வாசிப்புள்ள எவருக்கும் சுந்தர ராமசாமி சிந்தனைகளாக எழுதிவைத்துள்ளவை மேம்போக்கானவை என்றே தோன்றும். அவை வாழ்க்கையிலிருந்து பெற்ற வரிகள் அல்ல. பெரும்பாலும் ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்ற சிலரின் உரைகளில் இருந்து பெறப்பட்ட எளிமையான கருத்துக்கள். அவற்றின் பல வரிகளுக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தியில் மூலவரிகளை கண்டடைய முடியும். ஜே.கிருஷ்ணமூர்த்தியே தத்துவ வாசகனுக்கு சலிப்பூட்டும் மேம்போக்கான தன்மை கொண்டவர். திரும்பத்திரும்ப பேசுபவர்.

ஜே.ஜே. வாழ்ந்த காலம் மிகமுக்கியமான தத்துவமோதல்கள் நிகழ்ந்த களம். மரபுக்கும் ஐரோப்பியச் சார்புகொண்ட நவீனமயமாதலுக்கும், சடங்குசார்ந்த மதத்துக்கும் தத்துவம்சார்ந்த மதத்திற்கும், சமூகம் என்னும்  தொன்மையான அமைப்புக்கும் அன்று உருவாகி வந்த தனிமனிதன் என்னும் கருத்துநிலைக்கும் உரையாடலும் உரசலும் நிகழ்ந்தது. பொதுவாழ்வு இலட்சியவாதத்திலிருந்து நடைமுறை நோக்கி சென்றது. அந்தத் தளம்சார்ந்த ஆழ்ந்த கருத்துக்கள் எதுவும் அப்பகுதியில் இல்லை.

சுந்தர ராமசாமியின் தத்துவத்தேடல் மிக மேலோட்டமானது. அதை குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலிலும் காணலாம். அவர் மிக இளமையிலேயே கொண்ட [ஸ்டாலினிய] கம்யூனிச ஆர்வம் மெய்யான தத்துவவிவாதங்களிலிருந்து அவரை விலக்கியது.  அவருடைய சூழலில் இருந்து மதம் அவருக்கு கிடைக்கவேயில்லை. அவர் தனக்குமேல் ஓரு  குருவை ஏற்றுக்கொள்ளாதபடி அவரை தன்னம்பிக்கைகொண்டவரும் ஆக்கியது. புனைவில் மொழி பிரக்ஞைபூர்வமாக ஆகும்போது முதன்மையாக தத்துவத் தளத்தில்தான் முழுக்க நியாயப்படுத்தப்படுகிறது. அது ஜே.ஜே. சிலகுறிப்புகளில் நிகழவில்லை.

இறுதியாக, எந்த ஒரு நாவலும் வாழ்க்கைமீதான, பண்பாட்டின்மீதான மெய்யான தத்துவவிமர்சனமாக  [critique on life and culture]  ஆகும்போதே பொருள்கொள்கிறது. ஜே.ஜே. சிலகுறிப்புகளில் அத்தகைய மெய்யான பண்பாட்டு ஊடுருவல் இல்லை. பண்பாட்டுப்பழக்கங்கள் பற்றிய சில விமர்சனங்கள் மட்டுமே உள்ளன. அதில் தமிழ்வாழ்க்கையை நாம் அணுகியறிய உதவக்கூடிய புனைவுத்தருணங்கள் ஏதுமில்லை. சென்ற இருபத்தைந்தாண்டுகளில் அதிலுள்ள எந்நிகழ்வும் உதாரணமாக பேசப்பட்டதில்லை. ஒட்டுமொத்தமாக அது தமிழ்ப்பண்பாட்டை எதிர்கொண்டு விமர்சிக்கவோ மாற்றுச்சித்திரம் ஒன்றை அளிக்கவோ இல்லை. அவ்வாறு அளிக்கும் இந்திய நாவல்கள் இரண்டை சுட்டிக்காட்டவேண்டும் என்றால் தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்கிய நிகேதனம், குர்ரதுல் ஐன் ஹைதரின் அக்னிநதி என்னும் ஒரு ஆக்கங்களை சொல்வேன்.

அப்படியென்றால் ஜே.ஜே. சிலகுறிப்புகளின் கொடை என்ன? முன்பு சொன்னதுபோல நவீனத்துவத்தின் எழுத்துமுறையின் சிறந்த உதாரணங்களில் ஒன்று அது. நவீனத்துவத்தின் செதுக்கப்பட்ட உரைநடைக்கு உதாரணமாக ஆகும் பல கூரிய வரிகளின் தொகுதி. விலக்கம்கொண்ட மென்மையான அறிவார்ந்த நகைச்சுவை அதற்கேற்ப சொற்தேர்வுடன் வெளிப்படும் இடங்கள் அதிலுண்டு. அவை என்றும் வாசிக்கப்படும். பிரக்ஞைமிக்க மொழியின் இரண்டாவது களம் பகடி. அது ஜே.ஜே, சிலகுறிப்புகளில் உள்ளது. குறிப்பாக சொற்பகடி [pun] என்பதற்கான மிகச்சிறந்த உதாரணம் ஜே.ஜே. சிலகுறிப்புகள்.

இங்கே நவீனத்துவத்தின் கட்டுப்பாடான மொழியை எழுதிய படைப்பாளிகள் பெரும்பாலும் புறவயமான அன்றாட யதார்த்தத்தை சித்தரிப்பதை மட்டுமே செய்தனர். அது ஒருவகை செய்தியறிக்கைத் தன்மையுடன் இருந்தது. விதிவிலக்கு அசோகமித்திரனும் சுந்தர ராமசாமியும் மட்டுமே. அவர்களே அந்த மொழிநடையை சிந்தனைத்தளத்திற்கும் அகச்சித்தரிப்புக்கும் கொண்டுசென்றனர். அசோகமித்திரன் அவருடைய சில கதைகளில் [உதாரணம் காந்தி] சிந்தனைக்கு அதை வெற்றிகரமாக பயன்படுத்தினார். காலமும் ஐந்துகுழந்தைகளும் போன்ற கதைகளில் உருவகமாகவும் கொண்டுசென்றார். சுந்தர ராமசாமி ஜே.ஜே. சிலகுறிப்புகளில் சில இடங்களில் அதை சாதித்திருக்கிறார். டைரியின் சிலபகுதிகள் அவ்வகையில் உதாரணமாக சுட்டப்படவேண்டியவை. அதை அவர்களை முன்னோடியாகக் கொண்ட எவரும் நெருங்கக்கூட முடியவில்லை. அவ்வகையில் ஜே.ஜே. முக்கியமானது.

ஜே.ஜே. சிலகுறிப்புகளின் அங்கதம் அதன் கலைவெற்றியே. ரமணியும் பாலுவும் வைத்துவிளையாடும் மரப்பாச்சிபோல பண்பாட்டை வைத்து பாவனைசெய்யும் பகுதிகள் அவை. ஓர் அங்கதப்படைப்பாக அது நிலைகொள்ளும்.

ஜெ

சு.ராவும் நானும்

ஜே.ஜே.சிலகுறிப்புகள்,சாரு நிவேதிதா– இருகடிதங்கள்

ஜே.ஜே.சில குறிப்புகள் தழுவலா?

முந்தைய கட்டுரையானை கடிதங்கள் – 2
அடுத்த கட்டுரைசென்னையில்…