பீஷ்மரின் படுகளத்திலிருந்து வெளிவந்ததும் கர்ணன் நின்று துரியோதனனிடம் “இன்னும் ஒரு பணி எஞ்சியுள்ளது” என்றான். துரியோதனன் அதை உடனே உணர்ந்துகொண்டு “நமக்கு பொழுதில்லை. படைகள் அணிநிரந்துவிட்டன. நம்மை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். கர்ணன் “இதை தவிர்க்கமுடியாது” என்றான். துச்சாதனன் “சென்றுவருவோம், மூத்தவரே. இன்று காலையில் பொழுது நாம் நீட்ட நீட்ட நீண்டுகொண்டிருக்கிறது” என்றான். கர்ணன் புன்னகையுடன் அவன் தோளைத் தொட்டுவிட்டு துரியோதனனிடம் “பிதாமகரின் வாழ்த்துக்குப் பின் இதை நாம் செய்யாமலிருக்க இயலாது” என்றான்.
அவர்கள் புரவிகளில் ஏறிக்கொண்டு அணியமைந்துவிட்டிருந்த படைகளினூடாக பலகைப்பாதையில் குளம்புகள் முழக்கமிட விரைந்து சென்றனர். துரோணர் உத்தரபாஞ்சாலப் படைகளின் முகப்புக்கு சென்றுவிட்டிருந்தார். அவர்கள் அணுகியபோது அவர் தேர்ச்சகடத்தின் அருகே சிறிய பெட்டி ஒன்றில் அமர்ந்திருக்க அவர் அருகே நின்றிருந்த ஆவக்காவலன் அவருடைய கையுறைகளை அணிவித்துக்கொண்டிருந்தான். அவர்கள் வருவதை அவர் ஏறிட்டுப் பார்த்தார். ஆனால் முகத்தில் வியப்பேதும் தெரியவில்லை. அவன் அசைவுகளும் மாறுபடவில்லை. ஆனால் அவர்களிருவரும் மாறிவிட்டிருப்பது தொலைவிலேயே தெரிந்தது.
கர்ணன் புரவியிலிருந்து இறங்கி கைகூப்பியபடி துரோணரை நோக்கி சென்றான். உடன் துச்சாதனனும் துரியோதனனும் நடந்தனர். அருகே கர்ணன் வருந்தோறும் துரோணர் மெல்ல மாறுதலடைந்துகொண்டே இருந்தார். பின்னால் ஓசை கேட்க துச்சாதனன் திரும்பிப்பார்த்தான். சகுனி தேரிலிருந்து இறங்கி வருவதை கண்டான். துரியோதனன் “அவர் இருந்திருக்கலாம் என எண்ணினேன்” என்றான். “அவர் எண்ணியதை முன்னுணர்பவர்” என்றான் துச்சாதனன். கர்ணன் துரோணரை அணுகி அவர் காலடியில் தன் முழுதுடலும் மண்படிய விழுந்து வணங்கி “என்னை வாழ்த்துக, ஆசிரியரே! சற்றுமுன் பீஷ்ம பிதாமகரின் வாழ்த்துகொண்டேன். இனி நான் பெறவேண்டியது உங்கள் வாழ்த்து ஒன்றையே” என்றான்.
துரோணர் மெல்லிய உடல்நடுக்குடன் எழுந்துவிட்டார். கைகளை நீட்டி அவன் தலையைத் தொட்டபோது அவர் கைகளும் தலையும் ஆடிக்கொண்டிருந்தன. அவரால் பேசமுடியவில்லை. அவர் அத்தருணத்தையே எதிர்பார்த்திருந்தார் என தெரிந்தது. ஆனால் அது நிகழ்ந்தபோது அவருக்குள் இருந்த ஒன்று அதிர்ந்தது. அவர் கூட்டி வைத்திருந்த சொற்கள் அப்போது பொருள்கொள்ளவில்லை. அத்தருணத்தை நோக்குவதே ஒரு நாணின்மை என உணர்ந்து துரியோதனனும் துச்சாதனனும் விழிகளை விலக்கிக்கொண்டனர். துரோணரின் தொண்டை ஏறியிறங்க தாடி அசைந்தது. அவர் தொண்டையில் உமிழ்நீர் இறங்கும் ஒலி கேட்டது.
கர்ணன் எழுந்து “நான் பிழையென எதையேனும் இயற்றியிருந்தால் பொறுத்தருள்க!” என்றான். “இல்லை” என்றார் துரோணர். “பிழை இயற்றியவன் நான், நீ அறிவாய்” என்றார். அவர் குரல் நெஞ்சுக்குள் சிக்கிக்கொண்டதைப்போல ஒலித்தது. மூச்சிரைக்க கைகளை அசைத்து சொல்திரட்டினார். “பிழை” என்றார். தொண்டையை கமறிக்கொண்டு “நான் செய்த முதற்பிழை அரசு ஒன்றின் குடியென அமைந்து ஆசிரியத் தொழில் செய்தது. அதன்பொருட்டு அத்தனை மெய்யாசிரியர்களிடமும் பொறுத்தருளும்படி சொல்லிக்கொண்டிருக்கிறேன். உன் ஆசிரியரிடமும் நான் கால்தொட்டு அருள்கோரவேண்டும்” என்றார்.
“யோகிக்கும் அந்தணனுக்கும் அறிஞனுக்கும் கலைஞனுக்கும் அரசென்று ஒன்று இருக்கலாகாது” என்றபோது துரோணரின் குரல் தெளிந்தது. “ஆனால் நான் என் வாழ்நாளெல்லாம் அஸ்தினபுரியின் குடைநிழலை நாடினேன். அரசனுக்கு நாம் அளிப்பது வரியை மட்டும் அல்ல. அவன் நமக்களிக்கும் காவலுக்கு மாற்றாக நம் அடிபணிவை. பிற அனைத்துக்கும் மேலாக அவனை தலைக்கொள்வோம் என்னும் சொல்லுறுதியை. ஒரு நிலையிலும் நான் அதை செய்திருக்கலாகாது. யோகிக்கு மெய்மையும் அந்தணனுக்கு வேதமும் அறிஞனுக்கு ஞானமும் கலைஞனுக்கு தன் அகச்சான்றுமே முழுமுதல் தெய்வங்கள்.”
“நான் காட்டில் குடிலமைத்து ஆசிரியனாக இருந்திருக்கவேண்டும்” என துரோணர் தொடர்ந்தார். “கற்பிப்பவனுக்கு தெய்வமென்றும் அரசனென்றும் அவன் கலை மட்டுமே இருக்கவேண்டும். நான் அடிபிழைத்தவன். என் அச்சமும் வஞ்சமும் விழைவும் அரசை நாடும்படி என்னை தூண்டின.” அவர் முகம் துயர்கொண்டது. “நீ களம்நீங்கியபோது இரவில் நான் துயிலவில்லை. நான் எவரேனும் ஆகுக, என் குருதியிலோடுவது தொல்முனிவரின் மெய்மை அல்லவா? என் பிழை என்ன என்று அன்றே உணர்ந்தேன். உன்பொருட்டு என் முந்தையோரிடம் நூறுநூறாயிரம் சொற்களில் பிழைபொறுத்தல் கோரினேன்.”
“அன்றே நான் என் வில்லுடன் சென்று அரசிலாக் காடொன்றில் குடிலமைத்திருக்கவேண்டும். என் முந்தையோர் நுண்ணுருவாக எழுந்து எனக்கு ஆணையிட்டது அதுவே. ஆயினும் அஸ்தினபுரியின் குடியென அடங்கியிருந்தேன். என் மைந்தன் அரசாளவேண்டும் என்பதற்காக. துருபதனுக்கு எதிராக என் வஞ்சம் எழுந்து நின்றிருக்கவேண்டும் என்பதற்காக.” துரோணரின் விழிமணிகள் அலைபாய்ந்தன. அவர் அவர்களை பார்க்கா நோக்குடன் பேசிக்கொண்டே சென்றார். “அந்த வஞ்சமே என்னை ஆட்டிவைக்கும் கீழ்த்தெய்வம். என் முதல்மாணவனுக்காக உன்னை சிறுமைசெய்தேன். அவன்முன் என்னை இழிமகனாக நிற்கச் செய்தது அத்தெய்வம்.”
அவர் அவன் தோள்களை பற்றினார். “மைந்தா, உன்னை களம்நீங்கச் சொன்ன அன்று உன் விழிகளில் கண்ட அதே கூரை அவன் விழிகளிலும் காணச்செய்தது ஊழ். பாஞ்சாலத்தின் போர்க்களத்தில் துருபதனை என் காலடியில் கொண்டுவந்து அவன் தள்ளியபோது. அன்று நான் மீண்டுமொருமுறை இருண்ட ஆழத்தில் விழுந்தேன். என் மூதாதையரும் ஆசிரியரும் பழிக்கும் இழிமகன் ஆனேன். கற்ற கல்வி என்பது வழிபடு தெய்வம்போல. நோன்பும் வழிபாடும் தவறியவனிடம் அது சினம்கொள்கிறது. அவனை முற்றழிக்கிறது…”
கர்ணன் அப்பேச்சை நீட்டவிழையாமல் மெல்ல இடைமறித்து “நான் தங்களால் வாழ்த்தப்பட்டேன் என்பதே எனக்குப் போதுமானது. இன்று களம்நிற்கவிருக்கிறேன். உங்கள் சொல் என் உடன்நிற்கட்டும்” என்றான். ஆனால் துரோணர் பேசவிழைந்தார். “அந்தணன் என்பவன் யாரென்று என்னைப்போல் உணர்ந்தவர் எவருமில்லை. தனக்குமேல் தன் ஞானமன்றி தெய்வமும் இல்லாதவனே அந்தணன். தன் ஞானத்தால் அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்தவன். அனைத்திலிருந்தும் காக்கப்பட்டவன். நானோ என் அந்தணநிலையை உதறி ஷத்ரியநிலை நோக்கி வந்தவன். என் பிழைகள் ஷத்ரியர் இயற்றுபவை. நான் கொள்ளவேண்டிய தண்டனையோ அந்தணர்களுக்குரியது” என்றார்.
கால் தளர்ந்தவராக அவர் மீண்டும் பெட்டிமேல் அமர்ந்தார். தலையை அசைத்தபடி “பிழையினும் பெரும்பிழை நிஷாதனாகிய ஹிரண்யதனுஸின் மைந்தனுக்கு நான் இழைத்தது. அங்கனே, உனக்கு மட்டுமல்ல, அர்ஜுனனுக்கும் நான் பிழையிழைத்தேன். ஆனால் அப்பிழைகளிலிருந்து நீங்கள் எழுந்தீர்கள். அவனோ அப்பிழையினூடாக மேலும் கீழ்மைகளுக்குச் சென்றான். மீட்பிலா ஆழங்களில் அமைந்தான்… அவனை அங்கே செலுத்திய பழி என்னுடையது” என்றார். அவருடைய உடல் உலுக்கிக்கொண்டது. உயிரற்றவை என இரு கைகளும் பக்கவாட்டில் தளர்ந்துவிழுந்தன.
சகுனி அருகே வந்து “ஆசிரியரே, இன்னும் பொழுதில்லை. நீங்கள் தேரிலேறிக்கொள்ளவேண்டிய தருணம்” என்றார். துரோணர் தலைநிமிர்ந்தபோது இமைமயிர்களில் நீர்ச்சிதர்கள் இருந்தன. தலையை இல்லை இல்லை என அசைத்து “தான் கீழிறங்குவதை ஒருவன் உணரவே கூடாது. அதைப்போல துயரளிப்பது வேறேதுமில்லை” என்றார். சிரிப்புபோல இதழ் கோணலாக இழுபட “அதை வெல்ல ஒரே வழி அக்கீழிறங்கலை ஆதரித்துச் சொல்லாடுவதுதான். அதன்பொருட்டு மேலும் கீழிறங்குவதுதான்” என்றார். பின்னர் வெடித்து நகைத்து “எத்தனை நுண்ணுருமாற்றங்கள்! எத்தனை பொய்ச்சொற்கள்!” என்றார்.
சகுனி அந்த உணர்வுகளை அறிந்ததாகவே காட்டாமல் “உங்கள் வில்லை நம்பி இன்று களமிறங்குகிறோம், ஆசிரியரே” என்றார். “பிதாமகர் களம்வீழ்ந்தமையால் நம் படைகள் சோர்வடைந்துள்ளன. இன்று நாம் ஒரு தெளிவான வெற்றியை பெற்றாகவேண்டும். நம் படைகள் இன்று நம்பிக்கைகொண்டு திரும்பவேண்டும். இல்லையேல் நாளை போர் நிகழாது” என்றார். அவர் எண்ணுவதை உணர்ந்துகொண்டு துரியோதனன் முன்னால் வந்து “ஆம், ஆசிரியரே. இனி நாங்கள் உங்களையே நம்பியிருக்கிறோம். தந்தையிடம் மைந்தர் என உங்களை நாடி வந்திருக்கிறோம்” என்றான்.
அச்சொற்கள் அவரை மீளச் செய்தன. துரோணர் “இன்று அங்கர் களமிறங்குகிறார். படைகள் எழுச்சிகொள்ள அவரே போதும்” என்றார். “ஆம், ஆனால் நாம் திரும்பும்போது நம்மிடம் வெற்றி என ஒன்று விழிக்குத் துலங்கும்படி இருந்தாகவேண்டும்” என்றார் சகுனி. “இனி பாரதவர்ஷத்தில் எஞ்சியிருக்கும் பெருவீரர் நீங்களே. பிறர் உங்கள் மாணவர்கள் மட்டுமே. தோண்டிநீர் கிணறாவதில்லை. உங்கள் வில்முன் அர்ஜுனனோ அங்கநாட்டரசரோகூட நிற்கமுடியாது. உங்களுக்கு நிகரான வீரர் அஸ்வத்தாமர் மட்டுமே. அவரோ உங்களுக்கு தோளிணையாக களம்நிற்கவிருப்பவர்”.
சகுனி எண்ணுவதென்னவென்று அறியாமல் துரியோதனன் வெறுமனே நோக்கினான். ஆனால் துரோணர் அச்சொற்களைக் கேட்டு மீண்டுவருவதை துச்சாதனன் கண்டான். அவருக்கு அவை தேவைப்பட்டன. அத்தருணத்தில் அகமுணர்ந்த ஒன்றை சொற்களாக்கியதுமே அவர் நாணத் தொடங்கிவிட்டிருந்தார். அச்சொற்கள் அவருக்கு அவரை மேலும் துலக்கிக் காட்டின. அங்கிருந்து அகல விழைந்தார். சகுனி “உங்களை எண்ணி அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள் பாண்டவர்கள். நேற்றிரவெல்லாம் அங்கே சொல்சூழவையில் அதைத்தான் பேசியிருக்கிறார்கள். இளைய யாதவரே பிதாமகர் பீஷ்மரை வீழ்த்தியமையால் நாம் துரோணரை இருமடங்கு வஞ்சம் கொண்டவராக ஆக்கிவிட்டிருக்கிறோம் என்றாராம். வஞ்சத்தைப் பெருக்கி ஆற்றலாக ஆக்கிக்கொள்பவர் அவர், அவருடைய வில்லில் காற்றென்றும் அம்புகளில் அனலென்றும் அவ்வஞ்சம் குடியேறிவிட்டது என்று சொன்னாராம்” என்றார்.
கைநீட்டி அருகிருந்த தன் வில்லைத் தொட்டபடி துரோணர் “நான் இன்று பாண்டவர்களில் ஒருவரையேனும் கொல்வேன். இதை சூளுரையென்றே கொள்க!” என்றார். “அது நமக்கு பெருவெற்றி என்பதில் ஐயமில்லை” என்றார் சகுனி. “ஆனால் அவர்களில் எவர் மாண்டாலும் பிறர் இருமடங்கு வஞ்சமும் வெறியும் கொண்டவர்களாவார்கள்.” துரோணர் “மணிமுடிசூடவிருப்பவன் யுதிஷ்டிரன், அவனை கொல்கிறேன்” என்றார். “அவனை கொன்றால் பீமன் அரசனாவான். அறத்துக்கு அஞ்சும் ஒருவனைக் கொன்று அரக்கனை எதிரியென அமரச் செய்கிறோம்” என்றார் சகுனி.
சகுனி சொல்வதென்ன என்று துரோணர் விழிசுருக்கி நோக்கினார். சகுனி குரல் தழைய “இது என் எளிய எண்ணம். திட்டமென இதை ஆக்கவேண்டியவர் தாங்களே. தங்களுக்கு நான் ஆணையிடலாகாது” என்றார். துரோணர் கூர்ந்து நோக்க “நாம் யுதிஷ்டிரனை சிறைபிடித்தாலென்ன? நம் பணயப்பொருளாக அவனை கொண்டுவருவோம்” என்று சகுனி சொன்னார். துச்சாதனன் ஏனென்றறியாமல் ஓர் அச்சத்தை அடைந்தான். “நாளை காலைக்குள் படைத்தோல்வியை அறிவித்து களமொழிந்தாலொழிய அவனை உயிருடன் காணமுடியாதென்று அறிவிப்போம். அவர்களுக்கு வேறுவழியில்லை” என்றார் சகுனி.
கர்ணன் கையை வீசி அதை விலக்கி “அது கீழ்மை” என்றான். துரோணர் “ஆம்” என்றார். “எந்நிலையிலும் அரசரையோ அரசகுடியினரையோ மகளிரையோ பணயப்பொருள் ஆக்கலாகாது என்று போர்நூல்கள் ஆணையிடுகின்றன.” சகுனி “இப்போரில் இனி நன்றுதீது உயர்வுதாழ்வு என ஏதுமில்லை. வெற்றி ஒன்றே பொருட்டு” என்றார். துரோணர் “ஆனால்…” என்றார்.
சகுனி உரத்த குரலில் “ஆசிரியரே, அவ்வாறு நீங்கள் யுதிஷ்டிரனை சிறைபிடிப்பீர்கள் என்றால் போர் ஓயுமென்று உறுதியாகவே சொல்கிறேன். அவர்கள் நால்வருக்கும் மட்டுமல்ல அவர்களை ஆளும் இளைய யாதவருக்கும் அவன் முதன்மையானவன். போர் ஓயுமென்றால் உயிரெஞ்சும் பல்லாயிரங்களை எண்ணி நோக்குக! போர் மேலும் நீளுமென்றால் அவர்கள் இறந்தழிவதன்றி வேறுவழியில்லை” என்றார். துரோணர் அச்சொற்களால் அமைதியடைந்து “ஆம்” என்றார். சகுனி “உங்களால் இயலும்” என்றார்.
துரோணர் “ஆம்” என்றார். “இன்று நாம் இருமுனைத் தாக்குதல் செய்யவிருக்கிறோம். நம் படைசூழ்கையை விழிகளால் நோக்கியபோதுதான் இவ்வெண்ணம் எனக்கு வந்தது. இது வண்டிச்சூழ்கை. நீள்சதுரப் பெட்டிபோலிருக்கின்றன நம் படைகள். என் பாகன் இதை புலிப்பொறிப்பெட்டி என்றான்” என்று சகுனி சொன்னார். “புலிக்கான இரையொன்றை வைப்போம். இருபுறமும் இரு கைகள் என நம் படைகள் எழுந்து வந்து அதை கவ்வட்டும்.” துரியோதனன் “ஆம், அது இயல்வதுதான். பலமுறை நம் படைகள் நடுவே அவன் சிக்கிக்கொண்டிருக்கிறான். ஒவ்வொருமுறையும் அவனை தன் படைகளுடன் சென்று சேரும்படி விட்டிருக்கிறோம்” என்றான்.
துரோணர் “ஆம், யுதிஷ்டிரனை நான் சிறைபிடிக்கிறேன்” என்றார். “ஆனால் ஓர் உறுதிப்பாடு எனக்கு அளிக்கப்பட்டாகவேண்டும். எந்நிலையிலும் அவன் சிறுமைசெய்யப்படலாகாது. சொல்லிலோ செயலிலோ. நம் உள்ளத்திலோ அவன் உள்ளத்திலோ ஒரு சிறு ஒவ்வாமைகூட உருவாகக்கூடாது. இந்நிலத்தின் இணையரசன் என்றே அவன் கருதப்படவேண்டும். அவர்கள் அடிபணியவில்லை என்றாலும் அவனுக்கு தீங்கிழைக்கப்படலாகாது. ஒருவேளை பீமன் தலைமையில் அவர்கள் போரை தொடர்ந்து நடத்துவார்கள் என்றால்கூட அவன் உரிய முறையில் வணங்கப்பட்டு காட்டுக்கே அனுப்பப்பட வேண்டும்.”
“அதை நான் உங்களுக்கு சொல்லுறுதியாக அளிக்கிறேன்” என்று துரியோதனன் சொன்னான். “அஸ்தினபுரியின் அரசனின் ஆணை அது. என் குடிகளையும் குருதியினரையும் அது ஆளும் எனக் கொள்க!” கர்ணன் சலிப்புடன் “அத்தனை எளிதில் அவரை பிடிக்கமுடியாது” என்றான். “ஏனென்றால் அவர்கள் நால்வரும் எந்நிலையிலும் அவரை ஒரு தனிவிழியால் நோக்கிக்கொண்டுதான் இருப்பார்கள். குருளையிடமிருந்து உளவிழியை விலக்காத அன்னைப்புலிபோல பீமன் அவரைக் காத்துநின்றிருப்பான். ஒரு சிறு அழைப்பில் அவரை அணுகும்தொலைவிலேயே என்றும் அர்ஜுனன் இருந்துகொண்டிருப்பான்.”
“அதையும் முன்னரே எண்ணினேன்” என்று சகுனி சொன்னார். “அங்கரே, உங்களால் அர்ஜுனனையும் பீமனையும் எங்கும் செல்லவியலாமல் அம்புகளால் சூழ்ந்து நிறுத்திவிடமுடியும். நமக்குத் தேவை இரண்டு நாழிகைப் பொழுது மட்டுமே. அதற்குள் ஆசிரியர் பாண்டவப் படைகளை உடைத்து யுதிஷ்டிரனை சிறைபிடித்து கொண்டுவந்துவிடுவார்.” துரோணர் “அதற்கு ஒரு நாழிகையே மிகுதி” என்றார். “ஒருவேளை நம் நோக்கத்தை அறிந்து அவர்கள் அவரை படைகளுக்குள் புதைத்துக்கொண்டால்கூட இரண்டு நாழிகைப் பொழுதே போதுமானது” என்றார் சகுனி.
கர்ணன் “அந்திவரை அவர்களை என் விழிமுன் இருந்து விலகவிடாமல் நோக்குகிறேன். இயன்றால் இன்றே அர்ஜுனனையும் பீமனையும் களத்தில் வீழ்த்துகிறேன். என் தயக்கமெல்லாம் அர்ஜுனனை எண்ணி அல்ல, அவன் தேரோட்டியை நான் அறிந்திருப்பதனால்தான். ஆனால் அவனே தடுத்தாலும் இளைய பாண்டவர் இருவரில் ஒருவரையேனும் புண்படுத்திச் சரிப்பேன் என்பதில் ஐயமே தேவையில்லை” என்று கர்ணன் சொன்னான். “பிறகென்ன? இது இன்று நிகழட்டும்” என்று சகுனி சொன்னார்.
கர்ணன் மெல்லிய ஒவ்வாமை கொண்டவனாகத் தோன்றினான். உடலெங்கும் திகழ்ந்த ததும்பலால் அவன் எதையோ சொல்லப்போகிறவன் போலிருந்தான். ஆனால் அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் முகத்தை நோக்கியபின் விழிதிருப்பிய துரியோதனன் துச்சாதனனிடம் “நம் இன்றைய திட்டம் இது, இளையோனே. இதை தனித்தூதர் வழியாக அஸ்வத்தாமனுக்கும் ஜயத்ரதனுக்கும் அறிவித்துவிடு” என்றான். துச்சாதனன் தலைவணங்கினான். துரியோதனன் “முறையோ பிழையோ, இது நிகழுமென்றால் நன்றே. அங்கரே, இதை இயற்றினோம் என்றால் பாண்டவ மைந்தர் எவரையும் கொல்லாமல் நம்மால் இப்போரை முடிக்க முடியும். அதை மட்டுமே நான் கருதுகிறேன்” என்றான்.
துரோணர் புதிய ஊக்கம் கொண்டவராக எழுந்து “இன்று இதை எய்துவோம். நாளையே இப்போர் முடியும். அஸ்தினபுரியின் அரசரென நீங்கள் முடிசூடுவீர்கள்” என்றார். அவர் அடைந்த அந்த உளநெகிழ்வுக்கு நேர் எதிர்த்திசையில் நெடுந்தொலைவு சென்று அள்ளிச்சேர்த்துக்கொண்ட மிகையான உளஊக்கத்துடன் “இன்று நான் வில்லென்றால் என்னவென்று அவர்களுக்குக் காட்டுகிறேன். அவர்களின் அத்தனை அரண்களையும் பிளந்துசென்று யுதிஷ்டிரனை அகழ்ந்தெடுக்கிறேன். இது என் வஞ்சினம்!” என்றார். “நீங்கள் சொன்ன சொல்லே வெற்றிமுழக்கமென என் செவிக்கு கேட்கிறது, ஆசிரியரே” என்றான் துரியோதனன்.
துரோணரிடமிருந்து விலகி வந்ததும் சகுனி “இனி கணமும் வீண்செய்வதற்கில்லை. அவரவர் படைமுகப்புக்குச் செல்க!” என்றபின் தன் தேரிலேறிக்கொண்டார். கர்ணன் புரவியில் ஏறி திரும்பி துரியோதனனிடம் “நான் என் தேர்நிலைநோக்கி செல்கிறேன்” என்றபின் விரைந்தான். துரியோதனன் துச்சாதனனிடம் “இளையோனே, நீ உன் படைப்பிரிவுக்கே செல்” என்றபின் தானும் அகன்றான். துச்சாதனன் ஒரே கணத்தில் முற்றிலும் தனியனாக அங்கே நின்றிருந்தான். பின்னர் தன் புரவிமேல் ஏறிக்கொண்டு அதை திருப்பினான். புரவி விசைகூட்டி விரைவுகொண்டது.
அவன் பலகைப்பாதையில் குளம்படித் தாளத்துடன் சென்றுகொண்டிருக்கையில் தனக்குப் பின்னால் அதே தாளத்துடன் அணுகிவரும் புரவியை உணர்ந்து விரைவழியாமலேயே திரும்பி நோக்கினான். சற்று அப்பால் வந்துகொண்டிருந்த கரிய பெரும்புரவிக்குமேல் அமர்ந்திருந்த உருவை தெளித்து நோக்கவியலாமல் பனித்திரை என ஒன்று மறைத்திருந்தது. மேலும் அது அணுகியபோது அவ்வுருவை கண்டான். சுருள்கூந்தல் எழுந்து பறக்க ஒரு முதுமகள் அதன்மேல் இருந்தாள். அவளுடைய புரவிக்குமேல் எழுந்து நின்றிருந்த மெல்லிய மூங்கில்கம்பத்தில் வெண்ணிறக்கொடி பறந்தது. அதில் காகத்தின் முத்திரை இருந்தது.
துச்சாதனன் புரவியை இழுத்து நிறுத்தி அவளை வெறித்து நோக்கி நின்றான். அவள் நீல ஆடை அணிந்திருந்தாள். திரண்ட கலவயிற்றின்மேல் வறுமுலைகள் தொங்கி அமைந்திருந்தன. அப்புரவிக்கு கடிவாளம் இருக்கவில்லை. அவள் வலக்கையில் நீலத்தாமரையையும் இடக்கையில் சிறிய மண்கலத்தையும் வைத்திருந்தாள். கழுத்தில் எலும்புமணி மாலை. காதுகளில் எலும்புக் குழைகள். சிறு துதிக்கை என நீண்ட மூக்கு. மின்னும் எலிக்கண்கள். வாயில் இரு கோரைப்பற்கள் இருபுறமும் வளைந்திருந்தன.
அவள் அருகணைந்தபோது துச்சாதனன் “யார்?” என்றான். தன் குரலில் நடுக்கத்தை உணர்ந்து குரலை செயற்கையாக உயர்த்தி “யார் நீ? இங்கே களத்தில் பெண்களுக்கு நுழைவொப்புதல் இல்லை என்று தெரியாதா?” என்றான். அவள் அருகே வந்து நின்றாள். விழிகளில் இருந்த நோக்கு மானுடர்க்குரியதல்ல. அவளைச் சூழ்ந்திருந்த இருள் விடியல் பரவிக்கொண்டிருந்த அக்காலைப்பொழுதுக்கு அயலாக இருந்தது. அவள் தாழ்ந்த குரலில் “நான் தவ்வை, இக்களத்தை ஆள்பவள்” என்றாள்.
துச்சாதனன் சொல்லிழந்து நோக்கி நின்றான். அருகே சென்றுகொண்டிருந்த படையினர் எவரும் அவளை காணவில்லை. அவ்வாறென்றால் அது கனவாக இருக்கக்கூடும். அவன் அதிலிருந்து விழித்துக்கொள்ள விழைந்தான். அவளை மேலும் நுணுகி நோக்கவும் விழைந்தான். விடாய் மிகுவதுபோல, மூச்சு இறுகி நெஞ்சு துடிப்பதுபோல உணர்ந்தான். “அன்னையே” என்றான். அக்குரலை அவன் கேட்கவில்லை. அவள் தன் கையிலிருந்த கலத்தை அவனை நோக்கி நீட்டினாள். “இது உனக்கு” என்றாள்.
அவன் கை மேலெழவில்லை. “இதுவும் அமுதே. அமுதுக்கு முன் எழுந்தது. திருமகளுக்கு முன் நான் எழுந்ததுபோல” என்றாள். துச்சாதனன் தன் கையை கும்பிளாகக் கோட்டி நீட்டினான். அவள் கலத்தைச் சரித்து அதிலிருந்த குளிர்ந்த வெண்ணிற அமுதை ஊற்றினாள். அது கடுந்தண்மை கொண்டிருந்தது. நெடும்பொழுது விரலிடுக்குகளில் வழிந்தது. அதை கையில் வைத்திருக்கமுடியாதென்று உணர்ந்தான். அவளுடைய புரவி வால்சுழற்றி விசைஎழுப்பி முன்னால் பாய்ந்துசென்றது. சற்று அப்பால் தேங்கியிருந்த இருளுக்குள் அவள் சென்று மறைந்தாள். அவன் அது வெறும் கனவா என வியந்தபடி குனிந்து தன் கையிலிருந்த அமுதைக் கண்டு திடுக்கிட்டான். சிலகணங்கள் அதை நோக்கி நின்றபின் அதை அருந்தினான்.
அவன் கையை கீழிறக்கி வாயைத் துடைத்தபோது நன்றாகவே விழிதுலங்கியிருந்தது. இருபுறமும் நிரைவகுத்து நின்றிருந்த கௌரவ வீரர்கள் எதிரே துலங்கிவந்த வானை நோக்கிக்கொண்டிருந்தார்கள். அவன் நோக்குணர்வை அடைந்து ஏறிட்டுப் பார்த்தான். சற்று அப்பால் உயர்ந்த மேடையொன்றின்மேல் பார்பாரிகன் அமர்ந்திருந்தான். அவன் தன்னை நோக்குவதாக அவன் உணர்வு சொன்னது. ஆனால் அவ்விழிகளில் எதையும் நோக்காத வெறிப்பே துலங்கியது.