அ.மார்க்ஸ் பற்றி…

amark

அன்புள்ள ஜெ ,

நீங்கள் “உரையாடும் காந்தி” நூலுக்கு  அ .மார்க்ஸ் அவர்களுக்கு  காணிக்கை அளித்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சியுற்றேன் .  ஏனெனில்  நான் உங்கள்  இருவரோட  வாசகன் .உங்கள் இருவர் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு . நான் உங்களின் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” நூல் மூலமாக தான் இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்தேன் .உங்களோட கட்டுரைகளை   இணையத்தளத்தில் தொடர்ந்து வாசித்து வருகிறேன் . சமீபத்தில் நடந்த விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொண்டேன்.

அ .மார்க்ஸ் அவர்களோடு  கடந்த காலத்தில் கடுமையான விமர்சனம்  செய்துள்ளீர்கள் .மாற்று கருத்து இருந்தும் ,  அ .மார்க்ஸ் அவர்களை பாராட்டி உள்ளீர்கள் .இது உங்கள் பெருந்தன்மை காட்டுகிறது .உங்களது செயல் மிகவும் பாராட்டு தக்கது.

உங்களிடம் ஒரு கேள்வி .கடந்த காலத்தில் நீங்கள் அ .மார்க்ஸ் மீது வைத்த  விமர்சனம் என்னாகிறது . அ.மார்க்ஸ்  மாறி உள்ளாரா? அல்லது உங்களது புரிதலில்  மாற்றம் உள்ளதா ? பதில் கூறுவீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்

செந்தில் குமார்

அன்புள்ள ஜெ,

இரண்டு நாட்களுக்கு முன் என் அலுவலகத்தோழரான இடதுசாரி நண்பர் வந்து நீங்கள் அ.மார்க்ஸ் அவர்களுக்கு உரையாடும் காந்தி நூலை சமர்ப்பணம் செய்திருப்பதைச் சுட்டிக்காட்டி உங்களை இரட்டைவேடதாரி, முன்பின் முரணானவர் என்று வசைபாடினார். அதற்கு ஆதாரமாக அவர் என்னிடம் காட்டியது ஒரு பிராமணச் சாதியவாதியால் திரட்டி அளிக்கப்பட்ட சில வரிகளை. அந்த வரிகளை ஓர் தீவிர இந்துத்துவ வாட்ஸப் குழுமத்தில் இருந்து பெற்றுக்கொண்டிருக்கிறார்.

இதே நண்பர் சிலமாதம் முன்பு நீங்கள் ‘திடீரென்று’ ராஜ்கௌதமனுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதாக என்னிடம் வாதாடினார். நான் நீங்கள் ராஜ் கௌதமன் பற்றி எழுதிய சில பழைய கட்டுரைகளை அவருக்கு கொண்டுபோய் கொடுத்தேன். அப்போதுதான் நீங்கள் 2003 லேயே ஒரு விமர்சனநூலை ராஜ் கௌதமனுக்குச் சமர்ப்பணம் செய்திருப்பதைக் கண்டேன். அதை அவரிடம் தெரிவித்தபோது உடனே ‘இது இரட்டைநாக்கு’ என்று சொல்லிவிட்டார்.

அ.மார்க்ஸ் அவர்களைப்பற்றிய விமர்சனங்களை கடுமையாக முன்வைத்தபோதும்கூட அவர் ஓர் அறிவியக்கம் என நீங்கள் இருபதாண்டுகளுக்கும் மேலாக எழுதிவந்திருக்கிறீர்கள். நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலிலேயே அவரை அப்படித்தான் அறிமுகம் செய்கிறீர்கள். என்னால் எவ்வகையிலும் ஏற்கமுடியாத தரப்பு என்றாலும் நம் சமகால அறிவுப்புலத்தின் முதன்மையான குரல்களில் ஒன்று என்று சொல்லியிருக்கிறீர்கள். கிட்டத்தட்ட பதினான்கு குறிப்புகளை நான் தேடி எடுத்தேன்.

உங்கள் இணையதளத்திலேயே மீண்டும் மீண்டும் இக்குரல் பதிவாகியிருக்கிறது

அதேசமயம் அவருடைய களப்பணிகள் மேல் எனக்கு மதிப்புண்டு, அவருடைய அரசியலின் ஒருபகுதியே அது என்றாலும் அதிகாரம் தன்னிச்சையான மூர்க்கத்தைக் கொள்ளவிடாமல் தடுக்கும் மக்கள்தரப்பாக அது பலசமயம் நிலைகொள்கிறது. ஜனநாயகத்திற்கு அவசியமான விசை அது.

அ.மார்க்ஸின் இலக்கிய ரசனை மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. அவரது அரசியல் கருத்துகக்ள் பலசமயம் புரட்சிகரம் என்ற நோக்கில் முழுமையான அராஜகம் நோக்கிச் செல்பவை. ஆனால் தமிழில் அவர் ஒரு முக்கியமான கருத்துநிலை. ஆகவே தமிழின் கருத்துரையாடலில் முக்கியமான ஒரு தரப்பு — இதை இப்போது சொல்லவில்லை. அவர் விஷ்ணுபுரத்தை கிழி கிழி என கிழித்த காலம் முதலே சொல்லி, எழுதிவருகிறேன்.

அவர் ஒருமையில் அழைப்பதோ அவமதிப்பாகப் பேசுவதோ பெரிய பிழை ஒன்றுமில்லை. அவர் என்னைவிட மூத்தவர், பேராசிரியர். ஒரு ஆசிரியரின் கசப்பை பெற்றுக்கொண்டிருக்கிறேன் என்று எடுத்துக்கொள்கிறேன்

இவற்றை நான் அந்த தோழருக்கு எடுத்துக் காட்டினேன். உடனே இரட்டைக்குரல் என்பது ஃபாஸிசம் என்று சொல்லிவிட்டார். அவர் அப்படித்தான் சொல்வார் என்றும் தெரியும். ஆனால் எனக்கே தெளிவுபடுத்திக்கொண்டேன். இதே மனிதர்கள் இவர்களின் தலைவர்களின் பேச்சில் இருக்கும் அனைத்து முரண்பாடுகளையும் சமரசங்களையும் நியாயப்படுத்துபவர்கள். இவர்களின் கட்சி ஐந்தாண்டுக்கொருமுறை அடிக்கும் அத்தனை பல்டிகளையும் நியாயப்படுத்துபவர்கள். ஆனால் ஒருவர் தான் எதிர்க்கும் தரப்பும் ஒருவகையில் முக்கியமே என்றும் அதைச் சொல்பவர் ஓர் அறிஞர் என்றும் அவரிடமிருந்து கற்றுக்கொண்டமையால் அவர் தன் ஆசிரியர்தான் என்றும் சொல்லும்போது மட்டும் கொந்தளிக்கிறார்கள்.

ஏனென்றால் இவர்கள் எப்படி மேலே தங்கள் தலைமையின் அத்தனை பல்டிகளையும் நியாயப்படுத்துகிறார்களோ அதேயளவுக்கு கீழே தங்களுக்கு மாற்றுக்கருத்து கொண்டவர்களை வசைபாடுகிறார்கள், முழுமுற்றாக வெறுக்கிறார்கள். ஒவ்வொருநாளும் கசப்பைக்கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தச்சூழலில் இப்படி தான் நினைப்பதைச் சொல்ல ஒரு துணிவு தேவை. அது துணிவா அறிவின் ஆணவமா என்று தெரியவில்லை. எதுவானாலும் என் வாழ்த்துக்கள்.

எம்.ராஜேந்திரன்

அன்புள்ள செந்தில்குமார், ராஜேந்திரன்,

செந்தில்குமார் எழுதியதுபோன்ற கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. அவற்றில் கொஞ்சம் மதிப்புடன் எழுதப்பட்ட கடிதம் செந்தில்குமார் எழுதியது. அவற்றுக்கு பதிலளிக்கும் முன் ராஜேந்திரன் எழுதியதுபோல ஒரு கடிதம் வருமா என்று நான் காத்திருந்தேன். ஏனென்றால் என் அணுக்கமான நண்பர்கள், தொடர்ந்துவரும் வாசகர்களுக்கு என் உள்ளமும் சிந்தனையும் செல்லும் திசை நன்கு தெரியும். மற்ற பொதுவாசகர்கள் இதை எவ்வண்ணம் காண்கிறார்கள் என அறிய ஆசை. உங்கள் கடிதத்தால் அந்த எண்ணம் நிறைவேறியது. என் நாளை அழகுறச்செய்திருக்கிறீர்கள் ராஜேந்திரன். நீங்கள் மிக இளையவர் என்பதனால் மேலும் நிறைவு.

இங்கே எழுத்தாளனைத் தொடர்பவர்களில் இருசாரார் உண்டு. தங்கள் உறுதியான அரசியலைக்கொண்டு அவனை மதிப்பிடுபவர்கள், விளக்கிக் கொள்பவர்கள் ஒருவகை. அவர் வழியாக சிலவற்றை புதிதாகத் தெரிந்துகொள்பவர்கள் இன்னொரு வகை. இரண்டாம் வகையினரே உண்மையில் வாசகர்கள். முதல்வகையினர் வெறும் அரசியல்நோக்கம், தனிப்பட்ட நோக்கம் மட்டும் கொண்டவர்கள். அவர்கள் எழுத்தாளனை நோக்கி வெவ்வேறு காரணங்களால் ஈர்க்கப்படுகிறார்கள். மதம், சாதி, அரசியல் என பல கணக்குகள். அவர்களின் கணக்குகள் சற்றே பிழைக்குமென்றாலும்கூட எழுத்தாளனை, எழுத்தை சிறுமைசெய்து வசைபாடும் தரப்பாக ஆகிவிடுவார்கள். அவனை வேவுபார்த்து எல்லாவகையிலும் இழிவுசெய்துகொண்டே இருப்பார்கள். அவர்களை தவிர்க்கமுடியாது. அவர்களுடன் எழுத்தாளன் மட்டுமல்ல இன்னொருவாசகன்கூட உரையாட முடியாது. அவனுடைய நேர்மையை சிறுமைசெய்யும் முடிவான நோக்கம் கொண்டவர்கள் அவர்கள். ஆகவே எந்த தர்க்கமும் அவர்களிடம் செல்லுபடியாகாது.

என் வாசகர்களிடம் நான் சொல்வதற்கு உள்ளவை என் எண்ணங்களும் தெளிவுகளும் மட்டும் அல்ல, என் குழப்பங்களும் தத்தளிப்புகளும் கூடத்தான்.வாசகன் எழுத்தாளனிடம் எதிர்பார்க்கவேண்டியது அறுதியான அரசியல், தத்துவ, ஒழுக்க நிலைபாடுகளை அல்ல. கடந்து நின்றிருக்கும் ஒருவனை அல்ல. வழிதேடி, அலைந்தும் கண்டடைந்தும் சென்றுகொண்டிருக்கும் ஒருவனை. அவனுடைய பாதையே அவன். அவனுடைய தேடலையே வெவ்வேறு வகையில் அவன் கதைமாந்தர் ஏந்தியிருக்கிறார்கள். இது உலகின் எந்த மகத்தான இலக்கியமேதைக்கும் பொருந்துவது.

எப்போதும் கருத்துச்செயல்பாட்டை முரணியக்கங்கள் வழியாக விரியும் ஒரு பெரும்பரப்பாக உருவகித்துக்கொள்ளவே நான் முயன்றிருக்கிறேன். ஒன்றுடன் ஒன்று முட்டிமோதியே கருத்துக்கள் வளர்கின்றன. எதிர்க்கருத்து எப்போதுமே முதற்கருத்தை வளர்க்கிறது, முழுமையாக்குகிறது. ஆகவே கருத்துப்பரப்பில் எல்லா கருத்துநிலைகளும் முக்கியமானவைதான். அவற்றில் எவை நேர்மையாக வெளிப்படுகின்றன, எவை சொல்பவனின் மெய்யான நோக்கத்தையும் தேடலையும் தன்னுள் கொண்டிருக்கின்றன என்பதே அவற்றின் முக்கியத்துவத்தை உருவாக்குகிறது.

கருத்துச்சூழலில் பல உச்சகட்ட ஆவேசங்கள் பொய்யானவை. அவற்றை சொல்பவனின் ஆணவம், தனிமை, சோர்வு என பல அகக்காரணங்களால் விளைபவை. பொதுச்சூழலில் வெறுமனே ஒரு பொய்யான ஆளுமையை கட்டமைக்கும்பொருட்டு சொல்லப்படுபவை. மிக எளிதில் அவற்றை அடையாளம் காணமுடியும். அவற்றை முற்றாக புறக்கணிக்கவே விழைகிறேன். பெரும்பாலான கருத்துக்கள் மிக எளிமையான நம்பிக்கைகள். சாதி, மத, அரசியல் சார்ந்த முன்முடிவுகளால் ஆனவை. அறிவுத்தகுதி அற்றவை. அவை அனுதாபத்துடன் கடந்துசெல்லவேண்டியவை.

மெய்யான நோக்கம் உடைய கருத்துக்கள், தேடலும் கண்டடைதலும் கொண்டவை நம்மால் முற்றாகவே ஏற்கத்தக்கவை அல்ல என்றாலும் நம் கவனத்திற்குரியவை. பயிலப்படவேண்டியவை. அவற்றை முன்வைக்கும் சிந்தனையாளர்கள் நமக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள். நம் தரப்பை நாம் மேலும் அறியும்போதுகூட அவர்களை நம் அறிவுச்சூழலின் மையங்கள் எனக் கொள்வதில், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதில் பிழையில்லை. அது ஓர் அறிவார்ந்த அடக்கம்.

ஆனால் இந்த நிலைபாட்டை ‘சஞ்சலமில்லாமல்’ கைக்கொள்வது ஒன்றும் எளிதல்ல. இது ஓர் இலட்சியநிலை. இதை இலக்காகவே நாம் கொள்ளமுடியும். நடைமுறையில் நாம் சீற்றம்கொள்ளக்கூடும். தன்னிலை அழியக்கூடும். மிகையாக வெளிப்பாடும் கொள்ளக்கூடும். என் இயல்பில் முழுமையான கட்டுப்பாடு எப்போதுமே இயன்றதில்லை. ஆகவே நான் அந்த இலட்சியங்களை கைவிட்டுவிட்டேன் என்பதில்லை.

அ.மார்க்ஸின் எல்லா நூல்களையும் வாசித்த சிலரில் நானும் ஒருவன். அதை பலமுறை எழுதியிருக்கிறேன்.பெரும்பாலான தருணங்களில் அந்நூலை வலுவாக மறுத்தபடி, வாசிக்கும்போதே எதிர்க்குறிப்புகள் எடுத்தபடிதான் வாசிப்பேன். ஆனால் பற்பல ஆசிரியர்களை, மாற்றுப்பண்பாடு குறித்த கருத்துக்களை அவர் முப்பதாண்டுகளாக தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். அவரிடமிருந்து கற்றுக்கொண்டவர்களின் இரு தலைமுறைகள் உருவாகியிருக்கின்றன. எந்த ஆசிரியரையும்போல அவர் விளைவுகளை திரும்பிநோக்கி சலிப்புறுவதில்லை. எந்நிலையிலும் ஆற்றல்குறைவதுமில்லை.

அவருடைய தரப்பு ஏதோ ஒருவகையில் இங்கே என்றுமிருந்தது. சமீபத்தில் பேரா.லட்சுமிநரசுவின் எழுத்துக்களை வாசிக்கையில் அவர்தான் அ.மார்க்ஸின் சரியான முன்னோடி என்னும் எண்ணம் எழுந்தது. புறவயத் தர்க்கநோக்கு, மையமரபு மறுப்பு, ஐரோப்பியச்சார்பு நோக்கு என அனைத்திலும். அந்த மரபை எம்.என்.ராய் வரை கொண்டுசெல்லமுடியும். மேலும் காலத்தில் நகர்ந்தால் பல்வேறு வேதமறுப்புக் கொள்கைகளை அதற்குப்பின்னால் நிறுத்த முடியும். இது என்றும் இங்கிருக்கும். பிற தரப்புகள் அதனுடன் உரையாடிக் கொண்டேதான் இருக்கவேண்டியிருக்கும். கடுமையான, முழுமையான மறுப்பும் ஒருவகை உரையாடலே.

ஆகவே அ.மார்க்ஸை நான் ‘ஏற்றுக்கொண்டாக’ வேண்டும் என்பதில்லை. நான் இக்கணம் வரை அத்வைத வேதாந்தியே. இந்தியதேசியவாதியே. அந்நிலையில் நின்று அ.மார்க்ஸை முழுமையாக மறுப்பவனே. அந்நிலையிலும் அவர் மதிப்புக்குரியவராக எனக்கு இருக்கமுடியும். ஏற்றுக்கொள்ள முடியாத தரப்பை சொல்பவர் எதிரியாக வேண்டியதில்லை. அந்தத் தரப்பு வெறுப்புக்குரியதாகவோ அழித்தொழிக்கப்படவேண்டியதாகவோ இருக்கவேண்டியதில்லை. நித்ய சைதன்ய யதியிடம் நான் அறிந்தது அது. உண்மையில் ஓர் அத்வைதி கொள்ளவேண்டிய நிலைபாடு.

ஆனால் நடைமுறையில் சில தருணங்களில் அன்றாட அரசியல்சார்ந்து பேசுகையில் என்னிடம் உச்சகட்ட உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன. இரு விஷயங்களில் அதை நான் அடையாளம் காண்கிறேன். ஒன்று அவருடைய இந்திய தேசிய எதிர்ப்புநிலைபாடு என்னை பலசமயம் கொந்தளிக்கச் செய்கிறது. ஏனென்றால் இந்தியா எனக்கு ஓர் அரசியல் கட்டுமானம் அல்ல. ஓர் உயிருள்ள பண்பாட்டு வெளி. இத்தனை ஆண்டுகளாக இந்நிலத்தின் பேருருவை நான் தரிசித்துக்கொண்டிருக்கிறேன்.

அத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாதத் தரப்பு ஒருவகையில் உலகளாவிய அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிரான விசையாக நிலைகொள்ளக்கூடும் என்னும் அவருடைய நம்பிக்கை என்னைக் கசப்புகொள்ளச் செய்கிறது. உலகளவில் பல இடதுசாரிச் சிந்தனையாளர்கள் கொண்டுள்ள நிலைபாடு அது என்றாலும்கூட அதை என்னால் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. இஸ்லாம் எனும் மதத்தின்மீது மதிப்பு எனக்குண்டு. சூஃபி இஸ்லாம் எனக்கு ஆன்மிகமாகவே அணுக்கமானது. நித்ய சைதன்ய யதியின் மரபில் அதற்கு மைய இடம் உண்டு. ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதம் உலகுக்கு அபாயமானது என்றே எண்ணுகிறேன். ஒரு சிறு மாற்றுக்கருத்து சொன்னால்கூட அனைத்து மரியாதைகளையும் கைவிட்டு அவர்கள் அ.மார்க்ஸை வசைபாடுவதை அவரே கண்டிருப்பார். இவைகுறித்த விவாதங்களில் என் எல்லைகளை மீறிச்செல்கிறேன் என்று படுகிறது.

அ.மார்க்ஸின் கருத்தியல்பங்களிப்பைப் பற்றி ஒட்டுமொத்தமாக பிறிதொரு சந்தர்ப்பத்தில் என்னால் தொகுத்து எழுதமுடியும். இப்போது சுருக்கமாக சொல்வதென்றால், அதை இங்கு தொல்காலம் முதல் இருந்துவரும் எதிர்சிந்தனை ஒன்றின் சமகால நீட்சி எனலாம். அது ‘வேதவிரோத’ மரபாகவும் ‘நம்பிக்கைமறுப்பு நிலைபாடா’கவும் இங்கிருந்தது. அது மையஎதிர்ப்புவிசை கொண்டது. மையம் எப்போதுமே ஆதிக்கத்தன்மை கொண்டது. ஆகவே அது எப்போதுமே ஆதிக்க எதிர்ப்புநிலைபாடாக இருக்கிறது. அந்த எதிர்ப்பும் அதிலிருந்து எழும் கசப்புமே அதன் விசையை அமைக்கின்றன.

அ.மார்க்ஸும் நானும் காந்தி போன்ற சில அரிதான பொதுப்புள்ளிகளில் எங்கேனும் தொட்டுக்கொள்வதை தவிர்த்தால் பொதுக்கருத்துநிலைகளுக்கு வருவோம் என்று தோன்றவில்லை. நான் கருத்துக்களை தெரிவிக்கும் காலம் வரை அவர் சொல்வனவற்றுக்கு எதிராகவே பேசுவேன் என நினைக்கிறேன். அது அவர்மீதான என் மதிப்பை குலைக்கலாகாது என்று எனக்கே சொல்லிக்கொள்வதே இந்த நூல் காணிக்கை.

அ.மார்க்ஸ் தொடர்ந்து கருத்தியலாளராக செயல்பட்டாலும்கூட அவர் அடிப்படையில் கலைஞர்களுக்குரிய கொந்தளிப்பும் நிலையின்மையும் அமைந்த நுண்ணுள்ளம் கொண்டவர். அவர் அனுபவங்களாக எழுதிய அனைத்திலுமே முதன்மையான எழுத்துக்கலைஞர்களுக்குரிய நுண்ணிய அழகை காணமுடியும். பலமுறை இதை பதிவுசெய்திருக்கிறேன். அவர் புனைவிலக்கியவாதியாக ஒரு நூலையாவது – அவருடைய தந்தையைப்பற்றி – எழுதவேண்டும் என்பது என் கோரிக்கை. அந்த உளநிலை கொண்டவர் மிகையாக வெளிப்பாடு கொள்வது இயல்பானதே.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு புகைப்படம் பார்த்தேன். எரிந்தணைந்த குடில் ஒன்றுக்கு கீழே அ.மார்க்ஸ் ஒரு முதியபெண்மணியிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அவருடைய கையைப்பற்றி அந்தப்பெண்மணி அழுகிறாள். அன்று மிகப்பெரிய உளநெகிழ்ச்சி ஒன்றை அடைந்தேன். நான் எப்போதுமே என் எந்த எழுத்தைவிடவும் களப்பணியை மேலெனக் கருதுபவன். என்னால் இயலாதென்றாலும் எப்போதும் அதை கனவுகாண்பவன். முழுமையான பணிவுடன் அன்றி எந்தக் களப்பணியாளனைப் பற்றியும் எழுதியதில்லை. என் எழுத்தை நோக்கும் எவரும் அதை உணரலாம். தமிழ் எழுத்தாளர்களின் தரப்பு என ஒரு கை நீண்டு அந்தப் பெண்மணியைத் தொடுவதாகவே அத்தருணத்தை உணர்ந்தேன்.

அ.மார்க்ஸ் காந்தி குறித்து கொண்ட கருத்துமாற்றமும் என் உளப்பதிவை மாற்றியது. அதை உடனே பதிவுசெய்திருக்கிறேன். அவர் காந்திக்கு வந்த வழி அந்தக் களப்பணியினூடாக அமைந்தது. ஈரோட்டில் ‘இன்றைய காந்தி’ நூல் வெளியீட்டரங்கில் முருகானந்தம் என்னும் நண்பர் அ.மார்க்ஸின் காந்திதரிசனம் பற்றி என்னிடம் சொன்னார். அதன்பின் நானே அவற்றைத் திரட்டி வாசித்தேன். அ.மார்க்ஸின் காந்தி நாம் கண்டடையப்படவேண்டிய ஒருவர். இந்நூற்றாண்டில் வெவ்வேறு கோணத்தில் காந்தியை கண்டடையவேண்டும் என நினைக்கிறேன். அந்நிலையில் அ.மார்க்ஸ் காந்திகுறித்து எழுதியவை எனக்கு பெரிய திறப்புகளை அளித்தன.

புரிந்துகொள்ள விரும்புபவர்கள் முரண்பாடுகள் மற்றும் வினாக்களினூடாகச் செல்லும் என் தேடல்களை தொடரமுடியும். தன் விடைகளை கண்டடையமுடியும். முரண்பாடுகளைக் கொண்டு என்னை நிராகரிப்பவர்களால் எவ்வகையிலும் எங்கும் அதை கண்டடையமுடியும். நான் பலமுறை சொல்லியிருப்பதுபோல அது அரசியலின் ஆரம்பகட்ட விளையாட்டு. அதை இருபது வயதிலேயே கற்றுக் கடந்துதான் இங்கு வந்துள்ளேன். அதை இனி எவ்வகையிலும் ஆட எனக்கு விருப்பமில்லை.

சென்ற சில ஆண்டுகளாக சாதியநோக்கின் மதவெறியின் பலமுகங்களை அணுக்கமானவர்களிடம் கண்டு அஞ்சி உள்ளூர விலகிக்கொண்டிருக்கிறேன். உண்மையில் இங்குள்ள அனைத்து விவாதங்களிலும் இருந்து அகலவே விரும்புகிறேன். இன்றைய உளநிலை என்பது நேற்று மோதியும் சீறியும் விவாதித்தபோது இருந்தது அல்ல. உள்ளிருந்து எழும் ஒலிகளுக்காக மட்டுமே செவிகூர்ந்திருக்கிறேன்.

என்னை முழுமையான ஒற்றைத்தரப்பாகத் தொகுத்து முன்வைக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அவ்வாறு ஆகிவிடக்கூடாதென்றே எச்சரிக்கை கொள்கிறேன். என் கருத்துலகம் சிதறிக்கிடக்கட்டும், அதுவே அழகு. என்னை ஒவ்வொருகணமும் நிராகரித்தே அடுத்த அடியை வைக்கிறேன். இச்சிதறல்களின் பரப்பில் ஒரு பயணத்தடத்தை என் வாசகர்கள் கண்டடையட்டும்

ஜெ

அ.மார்க்ஸின் ஆசி

குறைத்துரைத்தலின் அழகியல்

அ.மார்க்ஸிடம் ஒரு விண்ணப்பம்

தேர்தல் கண்காணிப்பு

அ.மார்க்ஸும் ஜெகேவும்

முந்தைய கட்டுரைஜெ சைதன்யாவின் சிந்தனை மரபு பற்றி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-19