பாழி, ஒருகடிதம்

ஜெயமோகன்,

நலமா? தங்களிடும் துவக்கத்தில் ஒரு வாசிப்புப் பழகுநன்

தங்களிடம் ஒரு உதவி அல்லது ஒரு வழிகாட்டுதல் கோரி இந்தக் கடிதம்.

நான் கடந்த இரு மாதங்களாக கோணங்கியின் ‘பாழி’ யை வாசிகக முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்.

இதுவரைக்கும் என்னால் அதனைப் புரிந்து கொள்ள இயலவில்லை. என் எண்ணத்தின் படி மொழி வளத்திலும், வாசிக்கும் அணுகுமுறையிலும், கோணத்திலும் என் தகுதிக்கு மீறியதாக இருக்கும் என்றுதான் படுகிறது.

உதாரணமாக, அல்ஜீப்ராவின் அடிப்படைகளைப் புரியாத மூன்றாம் வகுப்பு மாணவன் ஆறாம் வகுப்பின் அல்ஜீப்ரா கணக்கு ஒன்றை வாசித்தலைப் போல.

இதனை வாசிப்பதில் மொழி வகையிலும் புரிதல் வகையிலும் முன் தயாரிப்புகள் தேவை என்று படுகிறது. அந்தத் தயாரிப்புக்கு நீண்ட கால அளவும் கூட தேவைப்படலாம். எவ்விதமான முன் தயாரிப்பு எனத் தெரியவில்லை.

இதில் வழிகாட்டுதல் கோரித்தான் இந்த விண்ணப்பம்.

என் அணுகுமுறை என்னவாக இருக்கவேண்டும்.
இதில் எனக்கு அறிவுறுத்த வேறு யாரும் அருகில் இல்லை. அதனால் நேரடியாக உங்களிடம் கேட்கிறேன்.

நம்மைச் சுற்றி இலக்கிய வாசிப்புள்ளவர்கள் இல்லாமல் தனித்து இருத்தல் ஒரு கொடுமை. நான் அவ்வையாக இருந்திருந்தால் இதை சேர்த்து பாடியிருப்பேன்.

வாசகன்,
சுந்தரவடிவேலன்.

பின் குறிப்பு:-
மற்றும் ஒன்று ஒரு ஆசிரியருக்கு மாணவனின் தகுதி அறிந்தால் தான் சரியான வழிகாட்ட இயலும்.நான் நிற்கும் படிக்கட்டினை தாங்கள் அறிந்துகொள்ள நான் ஓராண்டுக்குள் வாசித்த ஒரு புத்தகத்தைப் குறிப்பிடுகின்றேன். உப பாண்டவம் – அது ஒரு நேர் கோட்டு தன்மை உடைய படைப்பல்ல. அதனை உள் வாங்கிக்கொள்வதில் எனக்கு எந்த குழப்பமும் இருந்திருக்கவில்லை. எனினும் எனக்கு இலக்கிய கோட்பாடுகள் பற்றி ஒன்றும் தெரியாது.

****

அன்புள்ள சுந்தர வடிவேலன்,

கோணங்கியின் எழுத்து தானியங்கிஎழுத்து என்ற வகையைச் சேர்ந்தது – ஆட்டமாட்டிக் ரைட்டிங் என்கிறார்கள். அந்தவகை எழுத்து தன் மனஓட்டங்களை அப்படியே பின்பற்றும் விதமாக மொழியை அமைத்துக்கொள்வது. கட்டற்று பாயும் தன்மை கொண்டது.

அத்தகைய எழுத்தை முக்கியமானதாக ஆக்கவேண்டுமென்றால் அந்த எழுத்தாளரின் மொழி மனஓட்டங்களை சிறப்பாக தொட்டுச்செல்லும் தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். மொழியை வைத்து அவர் விளையாட வேண்டும்.
அவருக்கு மொழியின் சொற்களின் உள்ளடுக்குகளை தொட்டுச்செல்லும் வரலாற்றுபிரக்ஞையும் பண்பாட்டு பிரக்ஞையும் இருக்க வேண்டும்.இவ்வகை எழுத்துக்கு மிகச்சிறந்த் உதாரணமாக சொல்லப்படும் ஜேம்ஸ் ஜாய்ஸ்- ஐயே இதற்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டலாம்.

கோணங்கியின் மொழி திறனற்றது. அவரது படைப்புப் பிரக்ஞை என்பது நாட்டார் தன்மை உடையதே ஒழிய இத்தகைய தானியங்கிப் படைப்பை எழுதும் அளவுக்கு மொத்தப் பண்பாட்டுக்குமாக விரியும் வீச்சுள்ளது அல்ல.

ஆகவே அவரது முதலிரு சிறுகதைத் தொகுதிகளுக்குப் பின்னால் வந்த எழுத்துக்கள் அனைத்துமே பரிதாபகரமான தோல்விகள். அர்த்தத்தையும் அனுபவத்தையும் அளிக்காத வெற்றுச் சொற்பிரவாகங்கள் அவை. பின்னாளில் அவரே தனக்குரிய சில தேய்வழக்குகளையும் ஒரேமாதிரி சொற்றொடரமைப்புகளையும் உருவாக்கிக் கொண்டு ஒரே போல எழுதிக்குவிக்கலானார்

ஓரு தானியங்கி எழுத்து ’புரிந்து’ கொள்வதற்குரியதல்ல, வாசிக்கையிலேயே அந்த மொழியுடன் நம் மனம் ஓடவேண்டும். கோணங்கியின் எழுத்தை நம் மனம் ஏற்க மறுக்கும். அதில் உள்ள செயற்கைத்தனமும் அபத்தமான பாவனைகளும் எரிச்சலை மூட்டும். கோணங்கியின் இந்த கதை மொழி அவர் தமிழில் வாசித்த அபத்தமான மொழிபெயர்ப்புகளில் இருந்து அவர் செயற்கையாக உருவாக்கிக் கொண்டது

ஆரம்பகால கதைகளை வைத்து கோணங்கியைத் தமிழின் மிகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக எண்ணுகிறேன். பின்னாளில் படைப்பியக்கம் பற்றி தவறாக உருவாக்கிக்கொண்ட மனச்சித்திரத்தால் தடம் புரண்டு எழுத்தை அழித்துக்கொண்டவர் அவர். தமிழிலக்கியச் சூழலின் மிகப்பெரிய சமகால அவலங்களில் ஒன்று இது

காரணம், கோணங்கிக்கு உலக இலக்கியம் தெரியாது. இலக்கியத்தின் போக்குகளை அவர் வாசித்த இலக்கணப்பிழையும் பொருட்பிழையும் மிக்க மொழியாக்கங்களைக்கொண்டு புரிந்துகொண்டார். அவரை ஒருகட்டத்தில் தவறாக வழிநடத்தியவர்கள் கழன்றுகொண்டார்கள். கோணங்கியின் இயல்பான அப்பாவித்தனமே அவரது வீழ்ச்சியை அமைத்தது

இலக்கியம் என்பது உத்திச்சோதனைகளோ மொழிச்சோதனைகளோ அல்ல. அது வாழ்க்கையின் மீதான கலைஞனின் விசாரணை. அதற்குத்தான் வடிவமும் மொழியும் எல்லாம். அவன் எந்த பூட்டை திறக்கிறான் என்பதே அவனை முக்கியமாக்குகிறது.

’பாழி’ ஒரு மொழிக்குப்பை, கோணங்கியின் பிற நாவல்களைப்போலவே. அதில் அவர் கலைஞன் என்பதனால் இயல்பாக உருவாகும் ஓரிரு வரிகளை எங்காவது காணலாமே ஒழிய இலக்கியப்படைப்புக்குரிய எந்த அம்சத்தையும் காணமுடியாது

இருந்தும் அவ்வப்போது பாழியை பற்றி சில மேதாவித்தனமான கருத்துக்களை நீங்கள் வாசித்திருக்கலாம். பாழியின் நடையிலேயே அதைப்பற்றி எழுதுபவர்களும் உண்டு.

எப்போதும் சிற்றிதழ்ச்சூழலில் இலக்கியத்தை உணர முடியாத, அதேசமயம் வெத்துவேட்டுத்தனமாக வாசித்துத்தள்ளுகிற, ஒரு கும்பல் உண்டு. தங்கள் உள்ளீடற்ற தன்மையை மறைக்க அவர்கள் இம்மாதிரி சில நூல்களை முன்வைப்பார்கள். அவ்வாறே ஒருசிலர் பாழி பற்றி பேசுகிறார்கள். எனக்கு இவர்கள் மேல் ஆழமான ஏளனம் மட்டுமே உள்ளது

இவர்கள் அறிவுச்சூழலுக்கு அளிக்கும் அழிவு அதிகம். முக்கியமான உதாரணமே கோணங்கிதான். அவர்களின் வெற்று பேச்சுக்கு பலியான பெரும் கலைஞன் அவர்.

இலக்கியவாசிப்பில் பல படுகுழிகள் உண்டு. ஆத்மாவை ஜேப்படிக்க உடலில்தான் எத்தனை கைகள் என்றான் ஜேஜே அதைப்போல. நான் அதிதீவிரமாக படிக்கிறேன், அதி நுண்மையாக படிக்கிறேன் என்றெல்லாம் நமக்கும் பிறருக்கும் காட்டிக்கொள்வதற்கான பாவனைகளில் நாம் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான், நம் வாழ்க்கையின் பெரும்பகுதி வீணாகும்

இலக்கியப்படைப்புகள் எவையாயினும் அவை நம் ஆழ்மனத்துடன் உரையாடும். நாம் வாழ்க்கை பற்றி கொண்டிருக்கும் சித்திரங்களை மாற்றி எழுதும். நம்முடைய வரலாற்றுணர்வை மறுகட்டமைப்பு செய்யும். சில ஆக்கங்கள் அவற்றின் வடிவம் காரணமாக புரிவதற்கான சிக்கல்களை அளிக்கலாம். சில நூல்கள் பின்புலம் காரணமாக நம்மை அன்னியப்படுத்தலாம். அவற்றுக்கு நாம் கொஞ்சம் உழைப்பை கொடுக்க வேண்டும்.

ஆனால் எந்த நல்ல ஆக்கமும் புரியாத நிலையிலேயே நம்மை உள்ளேயும் இழுக்கும். அதை உபபாண்டவத்திலேயே உணர்ந்திருப்பீர்கள்.

ஒரு குறிப்பிட்ட வயதில் கிளாஸிக்குகளை வாசிப்பது எது இலக்கியம் என்ற பிரக்ஞையை உருவாக்கும். தமிழிலேயே தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி போன்றோரின் மகத்தான நாவல்கள் கிடைக்கின்றன. சிவராம காரந்த், தாராசங்கர் பானர்ஜி, விபூதி பூஷண் ஆகியொரின் பெரும் படைப்புகள் கிடைக்கின்றன. அவற்றை வாசியுங்கள். எது இலக்கியம் என்று தெரியும். அதன்பின் எந்த வெற்றுக் குரலும் உங்களை திசை திருப்பாது

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஉண்பேம்