‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-16

ele1அவை முடிந்ததை நிமித்திகர் அறிவித்ததும் நிறைவை உரைக்கும் சங்கொலி முழங்க துரியோதனன் எழுந்து கைகூப்பிய பின் வலம் திரும்பி வெளியேறினான். அரசன் எழுந்தருள்வதைக் கூறி இடைநாழியில் கொம்பொலி எழுந்தது. கர்ணன் பீடத்திலிருந்து எழுந்து துரோணரை வணங்கினான். துரோணர் அவனை பாராதவர்போல இறுகிய முகத்துடன் கைகளை மார்பில் கட்டிக்கொண்டு நிலம் நோக்கி அமர்ந்திருந்தார். அவையினர் எழுந்து ஒருவரோடொருவர் உதிரிச்சொற்களில் உரையாடியபடியும் ஆடைகளைத் திருத்தியபடியும் வெளியே நடந்தனர்.

பகதத்தர் கர்ணனின் அருகே வந்து வணங்கி “பொறுத்தருள்க, அங்கரே! நான் குடிமேன்மை பேசுவதை நீங்கள் அரசியல்நோக்கிலேயே புரிந்துகொள்ளவேண்டும். அது என் பெருமைக்காகவோ உங்கள் சிறுமைக்காகவோ அல்ல” என்றார். “பிரக்ஜ்யோதிஷம் போன்ற நாடுகள் நெடுங்காலம் வெறும் தொல்குடிநிலமாக நீடித்தவை. இன்றும் தொல்குடி உளநிலைகள் வாழ்பவை. தொல்குடிகள் ஒவ்வொன்றும் முற்றிலும் தனித்தவை. பிறனை ஏற்க மறுப்பவை. அதன் தலைவர்கள் அனைவருமே தங்களை அரசர்கள் என்றே எண்ணுபவர்கள். முனிவர் அருளாலும் அந்தணக் குருதியாலும் வேள்வித் தகுதியாலும் ஷத்ரியர்களாகிவிட்டோம் என்று அறிவித்துக்கொண்டு ஒரு குடி பிறவற்றின்மேல் ஆதிக்கம் கொள்கிறது. அரசகுடியாகிறது. அரசுகள் உருவாவது அப்படித்தான்.”

“தீர்க்கதமஸின் குருதியில் எழுந்தது பௌண்டரம். பௌண்டர அரசக்குருதியில் எழுந்தது பிரக்ஜ்யோதிஷத்தின் அரசகுடி. அந்நம்பிக்கையால்தான் நூற்றெட்டு தொல்குடிகளை அடக்கி அவர்கள்மேல் என் அரியணையை நிறுவியிருக்கிறேன். எங்கள் அரசின் அடித்தளமே குடிமேன்மைதான். குடிமேன்மையை நான் அணுவிடை மறுதலித்தால்கூட என் அரசின் அடித்தளத்தில் விரிசலிடுகிறேன். நான் எந்த அவையிலும் அதற்கு உடன்பட முடியாது” என்றார் பகதத்தர். கர்ணன் சிரித்தபடி “நீங்கள் சொல்லாமலேயே அறிவேன். அரசர்களின் அனைத்துச் சொற்களும் அவர்களின் மணிமுடிக்குக் கீழிருந்தே எழுகின்றன” என்றான்.

பகதத்தர் “நீங்கள் களமெழுந்தமையால் நாம் வெல்வது உறுதியாயிற்று. கௌரவர் வெல்வார்கள். துரியோதனர் மும்முடி சூடுவார். அதை நான் பார்க்கப்போவதில்லை” என்றார். கர்ணன் ஏதோ சொல்ல நாவெடுக்க “நான் நிமித்திகரை உசாவிவிட்டே வந்தேன். இன்னும் இரு நாட்களில்” என்றார். “அங்கரே, போருக்குப் பின் அங்கம் படைவல்லமையால் முதன்மை நாடென்றாகும். அதன் கருவூலங்கள் நிறையும். அதைக்கொண்டு பெருவேள்விகளை நிகழ்த்துக! ராஜசூயமே குடிகள் ஷத்ரியர்களாகும் அரசப்பெரும்பாதை” என்றார் பகதத்தர். கர்ணன் “நான் வேள்விகளை இயற்றுவதில்லை” என்றான்.

பகதத்தர் “ஆம், நீங்கள் அள்ளிக்கொடுக்கும் செங்கை வள்ளல் என்று பாடும் சூதர்களே இதுவரை வேள்வியெதையும் இயற்றியதில்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால் குடிமேன்மை விழைந்தால் வேறு வழியில்லை” என்றார். கர்ணன் வெறுமனே புன்னகைத்தான். “என் குடியின் வாழ்த்துக்கள் உங்களைச் சூழட்டும், அங்கரே” என்றார் பகதத்தர். கர்ணன் அவரை வணங்கினான். அவர் கர்ணனின் தலையில் கைவைத்து “நலம்சூழ்க! விழைவதை எய்துக!” என வாழ்த்தி திரும்பிநடந்து வெளியேறினார்.

கர்ணன் வெளியே நடந்தபோது துச்சாதனனும் ஜயத்ரதனும் அவனுடன் வந்தனர். கர்ணனின் நீண்ட காலடிகளால் அவன் மெல்ல அசைவதாகத் தோன்றினாலும் உடன்செல்ல ஜயத்ரதன் ஓடவேண்டியிருந்தது. “மூத்தவரே, தங்கள் வருகைபோல் இத்தருணத்தில் இனிது பிறிதில்லை. கருக்கிருளில் கதிரெழுந்ததுபோல்” என்று ஜயத்ரதன் சொன்னான். கர்ணன் புன்னகையுடன் அவன் தோளில் கைவைத்தான். உடன் வந்துசேர்ந்த அஸ்வத்தாமன் “அங்கரே, படைநிலைக்கு செய்யவேண்டிய மாறுதல்களை உரைத்தீர்கள் என்றால் விரைவாக ஆணைகளை இடுவேன். பொழுது ஒளிகொள்வதற்கு இன்னும் ஒரு நாழிகை உள்ளது. அதற்குள் முகப்பை மட்டுமாவது நாம் மாற்றி அமைத்துவிட முடியும். படைகள் குருக்ஷேத்ரத்திற்குச் சென்று அணிநிரக்கும்போதே அம்மாறுதல்கள் இயலும்படி செய்யலாம்” என்றான்.

கர்ணன் “முற்றாக மாற்றவேண்டும். அதற்கு இனி பொழுதில்லை” என்றபின் “சில முதன்மை மாறுதல்களை மட்டுமே சொல்கிறேன். எங்கே கற்றுச்சொல்லி?” என திரும்பி நோக்கினான். அஸ்வத்தாமன் “நான் செவிகேட்பதை மறப்பதில்லை. சொல்லுங்கள்” என்றான். “பாஞ்சாலரே, நாம் படைசூழ்கையை வகுக்கையில் எப்போதும் ஆற்றும் பிழை ஒன்று உண்டு. படைசூழ்கையை ஓர் அழகிய சிற்பம் என்று எண்ணிக்கொள்கிறோம். ஆகவே அது அழகொருமையுடன் புரைதீர்ந்ததாக இருக்கவேண்டுமென்று விழைகிறோம். நோக்கி நோக்கி சீரமைத்து அழகிய முழுவடிவொன்றை அமைக்கிறோம். அமைத்து முடித்ததும் குறையற்ற சீர்மைகொண்டது என நிறைவுகொள்கிறோம். நன்கு வார்க்கப்பட்டது, ஆகவே வெல்வது என எண்ணிக்கொள்கிறோம்.”

“ஆனால் நாம் எண்ணியிராத ஒன்றுண்டு, அப்படை தன் எதிரில் ஓர் எதிர்ப்படையை சந்திக்கப் போகிறது. அப்படையின் கூறுகளே இதன் கூறுகளை வடிவமைக்கின்றன. எப்போதும் எதிரிப்படையையும் இணைத்துக்கொண்டு ஒற்றைப் பெருவடிவென நமது படைசூழ்கையின் வடிவை அமைத்தால் மட்டுமே களத்தில் நிலைகுலைவுகளை களைய முடியும்” என கர்ணன் சொன்னான். அஸ்வத்தாமன் விழிகளில் திகைப்புடன் “தாங்கள் கூறுவதை நான் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை, மூத்தவரே” என்றான்.

“நோக்குக, நமது படைசூழ்கை இன்று சகடவியூகம். எதிரில் அவர்கள் வகுத்துள்ளது கிரௌஞ்சவியூகம். வண்டிக்கும் நாரைக்கும் எந்தச் சிற்பத்தொடர்பும் இல்லை. ஆனால் வண்டிக்குமேல் நாரை பறந்து அமைந்து உடன்வந்துகொண்டிருக்கும் ஓர் உளக்காட்சி எழுமென்றால் நாம் நம் சூழ்கையை நன்கமைக்க முடியும். இளையோனே, நம் வண்டியை பழுதில்லாமல் அமைப்பதல்ல நமது பணி. வண்டியும் நாரையும் இரண்டும் இணைந்த ஒற்றைச்சிற்பம் ஒன்றை அமைப்பதுதான். எப்போதும் வண்டிநாரை என்றே அதை சொல்லவேண்டும். ஒரு தருணத்தில்கூட வண்டிச்சூழ்கை என்று அதை சொல்லக்கூடாது. ஏனென்றால் சொல் நம் உள்ளத்தில் எண்ணங்களை உருவாக்கும் ஆற்றல் கொண்டது. பிழையாக சொல்லப்பட்ட சொல் பிழையான எண்ணத்தையும் உருவாக்கும்.”

“ஆகவே நாம் அமைப்பது வண்டிநாரைச்சூழ்கை. அந்த வண்டிநாரை வடிவத்திற்குள் வண்டி எவ்வண்ணம் செயல்படும் என்று நாம் பேசலாம். வண்டியை நாரை வந்து தாக்குவதைப்பற்றி பேசினீர்கள் என்றால் வரும் களத்தில் நம்மால் வண்டிவடிவை நிலைநிறுத்தமுடியாமல் ஆகும்” என்றான் கர்ணன். ஒரு கணத்தில் அனைத்தும் புரிய துச்சாதனன் நிற்கமுடியாமல் உடல்பதறலானான். தன்னுள் புதிய அறிதல்கள் எல்லாமே பழுக்கக் காய்ச்சிய அம்புமுனைகள்போலவே நுழைகின்றன என எண்ணிக்கொண்டான். அதை அவன் ஏற்றுக்கொண்டு அந்தப் புண் அழியா வடுவென்று அவனில் எஞ்ச நெடுநாட்களாகும்.

கிளர்ச்சியுடன் அருகணைந்து கர்ணனின் கைகளைத் தொட்டபடி “ஆம்! ஆம்!” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “இத்தருணம் வரை நாங்கள் ஆற்றிய முதற்பிழை இதுவே என்று உணர்கிறோம். மூத்தவரே, ஒவ்வொரு படைசூழ்கை வகுக்கையிலும் இதோ ஒரு முழுமையை அடைந்துவிட்டேன் என்று நிறைவுறுகிறேன். அப்பெருமிதத்தை அவையில் சொல்கிறேன். அதிலிருக்கும் மெய்யான உணர்வால் அதை அவையினர் ஏற்கிறார்கள். அதை அவையோர் பாராட்டுகையில் நான் மேலும் உறுதி கொள்கிறேன். ஆனால் களத்தில் எழுந்த ஒரு நாழிகைக்குள் அச்சிற்பம் உடையத்தொடங்குவதை காண்பேன். நான் இயற்றிய வடிவை பிழையெனக் கருத என் உளம் ஒருங்காதென்பதனால் அனைத்துப் பிழைகளையும் படைகள் மேலும் படைநடத்துவோர் மீதும் சுமத்துவேன்.”

“மூத்தவரே… அதன்பின்னர் நிகழும் போர் என்பது நான் வடித்த அச்சூழ்கையின் உடைவுகளை மீட்டு சீரமைப்பது மட்டுமே. சரியும் மாளிகை ஒன்றை அள்ளி அள்ளி தாங்கி ஒன்றோடொன்று பொருத்தி நிறுத்தும் முயற்சியாகவே போர்சூழ்கைகளை களத்தில் நின்று காப்பது அமைகிறது. இறுதியில் உடைந்து கிடக்கும் சூழ்கையைக் கண்டு திகைப்பேன். அதற்குள்ளிருந்து பீஷ்ம பிதாமகரும் துரோணரும் ஜயத்ரதரும் அரசரும் தங்கள் தனிவீரத்தால் மேலெழுந்து நின்றுபொருதி எய்திய வெற்றியே என்னுடையதென எஞ்சியிருக்கும். அவர்களே வெற்றியின் அடிப்படை என அறிந்திருந்தும் அவர்கள் என் சூழ்கையை சற்று பேணியிருந்தால் வென்றிருப்போம் என்று எண்ணிக்கொள்வேன்.” அஸ்வத்தாமன் உளவிசையால் சற்று திக்கினான்.

“ஆம், இதை நானும் எண்ணியுள்ளேன்” என்று ஜயத்ரதன் சொன்னான். “நல்ல படைசூழ்கை ஒன்றை அமைத்தால் அதன்மேல் நமக்கு நம்பிக்கை மிகுகிறது. அது வடிவு குலையாதிருந்தால் வெற்றி உறுதி என்று நம்பத்தலைப்படுகிறோம். ஆகவே அதன் வடிவை காப்பதொன்றையே போர்க்களத்தில் செய்துகொண்டிருக்கிறோம். அந்நிலையில் தற்காப்புப் போர் என்றாகிறது. போரில் தாக்குதலே வெற்றி. தற்காப்பெனும் எண்ணம் வந்ததுமே நாம் தோற்கத் தொடங்கிவிடுகிறோம்.”

துச்சாதனன் “மூத்தவரே, பீஷ்ம பிதாமகர் கற்காத போர்சூழ்கையா? அவர் ஏன் இதை உணரவில்லை?” என்றான். ஜயத்ரதன் இயல்பாக “அவர் தன்னைக் கடந்து எதையும் எண்ணாதவர்” என்றான். எளிதாக சொல்லப்பட்டாலும் அது உண்மை என உணர்ந்து துச்சாதனன் திடுக்கிட்டான். அந்தத் திகைப்பை பிறர் விழிகளிலும் கண்டான். கர்ணன் அதை உணராமல் “இம்முறை படைசூழ்கையின் வடிவை நான் சுவடியில் பார்த்தேன்” என்றபின் கைநீட்ட அவன் எண்ணுவதை உய்த்து அஸ்வத்தாமன் தன் அருகே நின்றிருந்த ஏவலனிடமிருந்து தந்தப் பேழையை வாங்கித் திறந்து உள்ளிருந்து தோற்சுருளை எடுத்து அவனிடம் அளித்தான்.

கர்ணன் ஒருமுறை அதை கூர்ந்து விழியோட்டிவிட்டு அதை திருப்பி மீண்டும் கைநீட்டினான். ஏவலன் நீலவண்ண மையில் தோய்த்த முட்பன்றி எழுதுகோலை அளிக்க அதை வாங்கி தோலுக்குப் பின் விரைவாக வரைந்து ஒரு படைசூழ்கையை வகுத்தான். வண்டியும் நாரையும் ஒன்றென இணைந்த அவ்வமைப்பை ஒரு கணம் அஸ்வத்தாமனால் புரிந்துகொள்ள முடியவில்லை. “இது…” என்று நோக்கியபின் உரக்க “வண்டிநாரை” என்று சொல்லி கையை வைத்து “இது வண்டி, அது நாரை. ஆனால் பிணைந்து ஒன்றென்று ஆகிவிட்டிருக்கின்றன” என்றான்.

“நரசிம்மம்போல இரண்டும் ஒன்றான வடிவம் இது. ஒன்று இன்றி பிறிதொன்றிலாதது. போரில் எதிரி பிறன் அல்ல என்றுணர்க! அவன் நம் மறுபாதி. அவன் நாமேதான். அவனாகி நாம் நடிக்கையிலேயே அவனை அறிகிறோம். அவனை அறிந்த பின்னரே வெல்ல இயலும்” என்றான் கர்ணன். “ஆம்!” என்று ஜயத்ரதன் சொன்னான். “ஆம்! இது எத்தனை எளிதாக உள்ளது. ஆனால் ஏன் இதை என்னால் இக்கணம் வரை புரிந்துகொள்ள இயலவில்லை!” அஸ்வத்தாமன் “புதிய அறிதல் என்பது எப்போதும் சற்று நிலைமாறி நிற்றல் மட்டுமே என்று தந்தை சொல்வதுண்டு” என்றான்.

“உண்மை” என்று கர்ணன் சொன்னான். “ஆகவேதான் ஆசிரியரை மூன்றாம்விழி என்கின்றன நூல்கள். ஆசிரியனுக்குரிய தொல்வடிவென கல்லால மரத்தடியில் அமர்ந்த தென்றிசைமுதலோன் முக்கண்ணன் என வகுத்தனர் மூதாதையர்.” சுவடியை அஸ்வத்தாமனிடம் அளித்து “இதிலேயே ஆணைகள் உள்ளன. மிகச்சிறு மாறுதல்கள் மட்டுமே இப்போதைக்கு தேவை. இன்றைய படைசூழ்கை இவ்வாறு அமையட்டும். நாளை இதை முழுமை செய்துகொள்ளலாம்” என்றான்.

அஸ்வத்தாமன் தலைவணங்கினான். ஜயத்ரதனின் தோளில் தட்டிவிட்டு கர்ணன் திரும்பிப் பார்த்தான். சற்று அப்பால் நின்றிருந்த பூரிசிரவஸ் அருகணைந்து தலைவணங்கி “தாங்கள் மூத்தவரை தனியாக பார்க்க எண்ணுகிறீர்களா, மூத்தவரே?” என்றான். கர்ணன் “போருக்கு இனி பொழுதில்லை” என்றான். அந்தச் சந்திப்பை அவன் தவிர்க்கிறான் என்று துச்சாதனன் உணர்ந்தான். “அவர் எதிர்பார்க்கிறார். அங்கே சாமி மரத்தடியில் தன்னந்தனியாக அவர் நிற்பது அதன் பொருட்டே” என்றான் ஜயத்ரதன். கர்ணன் “ஆனால்…” என்றான். பூரிசிரவஸ் “நிலையழிந்து மீள மிகுபொழுதில்லை என்பதும் நன்றுதானே?” என்றான்.

கர்ணன் புன்னகைத்து “நன்று” என்றபின் அஸ்வத்தாமனின் தோளில் கைவைத்துவிட்டு நீண்ட காலடிகளுடன், களிறென மெல்ல ஆடும் நடையுடன் துரியோதனனை நோக்கி சென்றான். துச்சாதனன் அஸ்வத்தாமனைப் பார்த்து “அவரது ஒரு சொல் மூத்தவருக்கு தேவைப்படுகிறது. நேற்று இரவு முழுக்க உளம் தளர்ந்து துயிலாமல் இருந்தார்” என்றான். “உண்மையில் அவர் துயில்கொண்டு நெடுநாட்களாகிறது. அகிஃபீனா உருளைகள்கூட அவரை துயில் கொள்ள வைப்பதில்லை.” அஸ்வத்தாமன் “சென்று அவரருகே நின்றுகொள்க!” என்றான். துச்சாதனன் “ஆம், மூத்தவர் அதை விரும்புவார்” என்று வணங்கிவிட்டு கர்ணனுக்குப் பின்னால் சென்றான்.

ele1துரியோதனனை அணுகிய கர்ணன் இரண்டடி விலகி நின்றான். துரியோதனன் கர்ணனை பார்க்காமல் இரு கைகளையும் பின்னால் கட்டி தலைகுனிந்து நிலம் நோக்கி நின்றான். அவன் விரிந்த தோள்களில் தசைகள் இறுகி நெளிந்துகொண்டிருந்தன. துச்சாதனனுக்கு அங்கே பிறர் இருப்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள் என்று தோன்றியது. கர்ணன் மெல்லிய புன்னகையுடன் துரியோதனனை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் ஏதோ சொல்லப்போகிறான் என்று துச்சாதனன் எண்ணினான். ஆனால் அவர்களிருவரும் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை.

காலம் மெல்ல நீண்டு நீண்டு செல்ல துச்சாதனன் பொறுமையிழந்து சற்றே அசைந்தான். அது நிழலசைவாக சென்று துரியோதனனை தொட துரியோதனன் நிமிர்ந்து கர்ணனை பார்த்தான். உடைந்த குரலில் “என் தம்பியர் மண் மறைந்துவிட்டனர், அங்கரே” என்று சொல்லி இரு கைகளையும் விரித்தான். கர்ணனும் இரு கைகளையும் விரிக்க துரியோதனன் பாய்ந்து வந்து கர்ணனை இறுக தழுவிக்கொண்டான். தன் தலையை அவன் மார்பில் ஓங்கி அறைந்தபடி பெருத்த விசும்பல்களும் கேவல்களுமாக அழுதான். அவனை அணைத்து அவன் தோள்களை வருடியபடி கர்ணன் நின்றான். அக்காட்சியை நோக்க முடியாமல் துச்சாதனன் விழிதிருப்பிக்கொண்டான்.

கர்ணன் துரியோதனனின் குழல்களில் தன் முகத்தைப் பதித்து எதையோ சொன்னான். தானும் சென்று கர்ணனின் கால்களில் விழுந்துவிடவேண்டும் என்று துச்சாதனன் எண்ணினான். அங்கிருந்து அகன்றுவிடவேண்டும் என்றும் தோன்றியது. அதை நோக்காமலொழியவும் இயலவில்லை. கண்களில் நீர் மறைக்க துரியோதனன் அழுவதை துச்சாதனன் நோக்கி நின்றான். நெடுநேரம் அந்த அழுகை நீடித்தது. ஓய்ந்து விசும்பல்களும் மூச்சொலிகளுமாகி மீண்டும் வெடித்துக் கிளம்பியது. சொற்கள் அற்ற அழுகை. வெற்றொலி. காற்றின், விலங்குகளின், காட்டுமரங்களின், சிற்றுயிர்களின் ஓசைபோல். பின்னர் மெல்ல அமைதியடைந்து துயின்றவன்போல் கர்ணனின் மார்பில் துரியோதனன் கிடந்தான்.

துச்சாதனன் அவர்களிருவரும் காலம் மறந்து, இடம் அழிந்து நின்றிருப்பதை உணர்ந்து மெல்ல அருகணைந்து “மூத்தவரே, பொழுதாகிறது” என்றான். அச்சொல்லையும் அவர்கள் கேட்கவில்லை. மீண்டும் “பொழுதாகிறது, மூத்தவரே. படைநகர்வுக்கான முரசொலிகள் எழுந்துகொண்டுள்ளன” என்றான் துச்சாதனன். கர்ணன் தன்னுணர்வு பெற்று துரியோதனனின் கன்னங்களில் வழிந்த நீரை துடைத்து “கிளம்புவோம்” என்றான். துரியோதனன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான்.

ஒருகணத்தில் அத்தருணத்திற்காக இருவரும் நாணினர். அதை கடந்து முற்றாக மறந்து முன்பிருந்தவர்களாக மீண்டுவிட விழைந்தனர். துரியோதனன் சுற்றும் நோக்க கர்ணன் தன் ஆடைகளை சீரமைத்துக்கொண்டான். அவ்வசைவுகளினூடாக அவர்கள் மீண்டனர். துச்சாதனன் அத்தருணத்தை எளிதாக்கும்பொருட்டு ஏதேனும் சொல்லவேண்டுமென விழைந்தான். அப்போது அவர்களிடையே நுழைவதும் பொருத்தமல்ல என்று தோன்றியது. தொலைவில் ஒரு யானை பிளிறிய ஒலியில் மெய்விதிர்க்க துரியோதனன் திரும்பி நோக்கினான். கர்ணனின் கைகளும் அதிர்ந்தன. அவர்களிருவரும் எத்தகைய மென்நிலையில் இருக்கிறார்கள் என்பதை அது காட்டியது.

“பொழுதாகிறது” என்றான் துரியோதனன். “ஆம்” என்றான் கர்ணன். “நாம் ஆற்றவேண்டிய முறைமைகள் உள்ளனவா என்று மாதுலரிடம் கேட்கவேண்டும்” என்று துரியோதனன் சொன்னான். கர்ணன் “ஆம், பொறுப்பென்பது அனைத்தையும் ஆற்றுவதுதான்” என்றான். அந்தப் பொருளிலாச் சொற்களினூடாக அவர்கள் மீண்டுவந்தனர். “நீ அழைக்காமலே வருவாய் என்று சில இரவுகளில் எண்ணுவேன். அழைக்காமல் நீ வந்துவிடக்கூடாதென்று உடனே உளம் பதறுவேன்” என்று துரியோதனன் சொன்னான். மிகத் தனிமையில் மட்டுமே அவர்கள் ஒருமையில் பேசிக்கொள்வார்கள் என்று உணர்ந்திருந்த துச்சாதனன் புன்னகை செய்தான்.

“எண்ணி இயற்றுவது என் இயல்பல்ல. இயற்றுவதை எண்ணுவதும் என் வழக்கமல்ல. ஆனால் இப்போரில் நீ உடனின்றி களம் இறங்கியது குறித்து எண்ணாத நாளில்லை. நான் இழந்தவை அனைத்தும் அந்தப் பிழைக்கான ஈடுதான்” என்றான் துரியோதனன். “அதை இனி பேசவேண்டியதில்லை. நாம் வெல்வோம்” என்று கர்ணன் சொன்னான். “கர்ணா, இனி வெற்றி என்பது எனக்கு பொருளோ புகழோ அல்ல. என்னை இக்களம் வரை கொண்டுசேர்த்த அவ்விழைவுகள் அனைத்தும் இரண்டாம் நாள் போரிலேயே என்னிலிருந்து உதிர்ந்துவிட்டன. இனி வெற்றி என்பது என் இளையோருக்கான பழிதீர்த்தல் மட்டுமே. இவ்வண்ணம் அது உருமாறும் என்று எப்போதுமே கருதியிருந்ததில்லை” என்று துரியோதனன் சொன்னான்.

அவன் முகம் சுருங்கி துயர்கொண்டதாயிற்று. விழிகள் இடுங்க சினம் எழுந்தது. பற்களைக் கடித்து சீறும் மூச்சொலியில் சொன்னான் “அவன் ஒரு கணமும் தயங்காமல் என் இளையோரை கொன்று குவித்தான். அவர்களின் தலைகளை உடைத்து வெண்நிணம் சிதற…” அவன் கழுத்துத் தசைகள் இழுபட்டு அதிர்ந்தன. பற்கள் உரசிக்கொள்ளும் ஓசையை துச்சாதனன் கேட்டான். “ஆனால் நூறுமுறையேனும் அவன் மைந்தரை கொல்லும் தருணங்கள் எனக்கு வாய்த்தன. என்னால் அதை செய்ய இயலவில்லை. வில்லெடுக்கையில் வீரனாகவும் தொடுக்கையில் தந்தையாகவும் உருமாறுகிறேன். என்னால் மைந்தரை கொல்ல இயலாது.”

கர்ணன் “அவர்கள் கானேகுகையில் உன்னிடம் தன் மைந்தரை ஒப்படைத்துச் சென்றனர். அது விதுரரின் திட்டம். பிற எவரைவிடவும் அவர் நம்மை அறிந்தவர். மைந்தரை வளர்த்து பெருந்தந்தை என்றானவன் நீ. அவர்களோ தங்கள் மைந்தர்களையே மடியிலேற்றி கொண்டாடியவர்கள் அல்ல” என்றான். அதை கேட்காதவன்போல “இதனால்தான் நான் ஆற்றலிழக்கிறேனா? எதனால் அவர்களுக்கு அத்தயங்காமையும் பேராற்றலும் வருகிறது?” என துரியோதனன் சொன்னான். “மைந்தரைக் கொன்றவன் தந்தையை மேலும் எளிதாக வீழ்த்தினான். அவர் உடலில் அணுவிடை எஞ்சாமல் பாய்ந்தன அவன் அம்புகள்.”

“ஆயிரம் முத்தங்கள் என சூதர் பாடக் கேட்டேன்” என்று கர்ணன் புன்னகையுடன் சொன்னான். “எவ்வண்ணம் அது அவர்களுக்கு இயல்கிறது? ஏன் நான் தயங்குகிறேன்? கர்ணா, அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் சர்வதனும் சுதசோமனும் எஞ்சும்வரை இப்போர் முடியாது. ஆனால் நானறிந்து ஒருபோதும் அவர்களைக் கொல்ல நம் படைகள் எழாது” என துரியோதனன் சொன்னான். கர்ணன் “ஏனெனில் அவர்கள் தரப்பில் பேரறம் உள்ளது. பேரறத்தின் பொருட்டு சிற்றறங்களை மீறலாம் என்று அவர்கள் உளம் ஒருங்குகிறார்கள். நாம் குடியறத்தின் பொருட்டு களம்நிற்பவர்கள்” என்றான்.

துரியோதனன் திகைத்து பின் உடல்நடுங்கலானான். கர்ணன் “நிலம் கோரி நாம் நின்றதும் ஷத்ரியப் பெருங்குடிகளை படையென இணைத்துக்கொண்டதும் குடியறத்தின்பொருட்டே. அக்குடியறம் தந்தையரையும் மைந்தரையும் கொல்வதை ஒப்புவதில்லை. எனவே நம்மால் ஒருபோதும் அதை செய்ய இயலாது” என்றான். “பிறகெப்படி நாம் வெல்வோம்? நாம் தோற்பதுதான் நெறியா?” என்றான் துரியோதனன். “அக்குடியறங்கள் அனைத்தையும் நான் மீறுகிறேன்” என்று கர்ணன் சொன்னான். “ஏன்? அதனால் நீ அடைவதென்ன?” என்று துரியோதனன் கேட்டான். “செஞ்சோற்றுக்கடன் எனும் பேரறம் என் முன் உள்ளது. அதன்பொருட்டு தெய்வங்களின் ஆணைகளை நான் மீறலாம். நூறுமுறை உடன்குருதியினரை கொல்லலாம். ஆயிரம் முறை மைந்தரை கொல்லலாம். தந்தையர் பழி சூடி கோடி கோடி காலம் கெடுநரகில் உழலாம்” என்றான் கர்ணன்.

அதை தடுப்பதுபோல் கர்ணனின் கையை பற்றிக்கொண்டு “அச்சொல் என்னை கூச வைக்கிறது. என் எளிய அன்பின் பொருட்டு உன்னிடம் இவற்றை நான் கோரினால் அதைவிடக் கீழ்மை பிறிதில்லை” என்று துரியோதனன் சொன்னான். “ஆம், இயல்பான அன்றாட அன்பையே உன்னிடமிருந்து பெற்றேன். பெறுகையில் அது எளியது, சிறியது. பெற்ற பின் என் கையில் அது பேருருக்கொண்டது. நான் வாழ்நாள் முழுக்க அதை பெருக்கினேன். நான் வாழும் உலகென அதை ஆக்கிக்கொண்டேன். கௌரவரே, தாங்கள் எனக்கு அளித்ததென்ன என்பதை தங்கள் அரியணையில் அமர்ந்தபடி ஒருபோதும் உணரமுடியாது. அதன் பொருட்டு எனக்குரிய அனைத்தையும் எச்சமின்றி வைப்பதே நான் செய்யக்கூடுவது. அதற்கான தருணம் இன்று அமைந்துள்ளது” என்று கர்ணன் சொன்னான்.

அப்பாலிருந்து சகுனி அருகே நடந்துவந்தார். இருளில் நின்றபடி அவர்களின் உரையாடலை அவர் நோக்கிக்கொண்டிருந்ததாகத் தோன்றியது. அவரைக் கண்டதுமே இருவரும் முற்றிலும் நிலைமீண்டனர். “இன்னும் அரைநாழிகைப் பொழுதே உள்ளது. அதற்குள் அங்கர் சென்று பீஷ்ம பிதாமகரின் வாழ்த்துபெற்று வரவேண்டும். அதுவே முறை” என்று சகுனி சொன்னார். துரியோதனன் “என்ன சொல்கிறீர்கள், மாதுலரே!” என்றான். “அதைத்தான் இங்குள்ள அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவரை வணங்காமல் அங்கர் களம்புகுந்தால் அதற்கான பழியை நீடுகாலம் ஏற்கவேண்டியிருக்கும்” என்றார் சகுனி.

“ஆனால் அவர் வாழ்த்துவதென்பது…” என துச்சாதனன் தொடங்க “அவரை வணங்குவதே நாம் செய்யக்கூடுவது. வாழ்த்தை அவர் உரைக்கவேண்டுமென்பதில்லை” என்றார் சகுனி. துரியோதனன் “இந்த வீண்முயற்சி தேவையில்லை என்றே தோன்றுகிறது, மாதுலரே” என்றான். கர்ணன் “இல்லை, காந்தாரர் சொல்வதுவரை நான் அதை எண்ணவில்லை. ஆனால் என் உள்ளம் அதையே விழைந்திருக்கிறது என அச்சொல் செவிதொட்டதும் உணர்ந்தேன். நான் இந்தக் களத்தில் நுழைந்த கணம் முதல் அவரையே எண்ணிக்கொண்டிருக்கிறேன். சென்று அவரைக் கண்டபின்னர் களமெழுகிறேன்” என்றான். துரியோதனன் தலையசைத்து “உங்கள் விருப்பம், அங்கரே” என்றான்.

வெண்முரசு விவாதங்கள் 

முந்தைய கட்டுரைஅகச்சான்றின் காட்சிவடிவங்கள்
அடுத்த கட்டுரையானை – கடிதங்கள்