‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-13

ele1வடகாட்டில் நாகர்களின் சிற்றூரான ஐராவதீகம் பிறர் அணுகமுடியாததாகவே இருந்தது. அவ்வண்ணம் ஓர் ஊர் இருப்பதை கதைகள் மீண்டும் மீண்டும் கூறின. மாபெரும் புற்றுகளே வீடுகளென அமைந்த நகரம். மூன்று முகம் கொண்டு எழுந்து நின்றிருந்த மலைமுடிக்கு அப்பால், அதன் ஆறுவிழிகளின் நோக்கால் ஆளப்படும் நிலம். அங்கிருந்து ஊர்களுக்குள் வரும் நாகர்கள் அரவுநஞ்சு கொண்டுவந்து விற்பவர்களாகவும் ஊருக்குள் புகும் அரவுகளை பிடித்துச்செல்பவர்களாகவும்தான் சூழ்ந்திருந்த யாதவர்களால் அறியப்பட்டார்கள்.

நாகநஞ்சு அருமருந்து என மருத்துவர்களால் சொல்லப்பட்டது. நாகக் கடி ஏற்று நினைவழிந்து உயிர்பிரிந்துகொண்டிருப்பவர்களை மீட்கும் மருந்தும் அதுவே. கான்களிற்றை போர்க்களிறென அது எதிர்கொண்டு துரத்தியது. நோயால், துயர்களால் நரம்புகள் சிதைந்தவர்களுக்கும் அது மீட்பென்றமைந்தது. மானுட உடலுக்குள் நாகங்கள் நரம்புகளின் வடிவில் பின்னிப்படர்ந்துள்ளன. அவை பூசலிட்டு ஒத்திசைவழிவதையே நாம் நோய் என்கிறோம். நாகநஞ்சு மாநாகத்தின் ஆணை. அரசனின் குரலுக்கு சிறுநாகங்கள் பணியும் என்றனர் மருத்துவர்.

ஐராவதீகக் காட்டின் விளிம்பிலமைந்த இடையச் சிற்றூர்களில் இரவுகளில் ஆயர்கள் சாவடிகளில் கூடி அமர்ந்து நடுவே நெய்விளக்கேற்றி வைத்து கதை கேட்டனர். விளக்கொளி முகத்தில் படும்படி அமர்ந்திருக்கும் சூதன் தொலைவில் நிகழ்ந்துகொண்டிருந்த குருக்ஷேத்ரப் பெரும்போரின் அன்றைய நிகழ்வை கதைகளின் தொடர் என விரித்துரைத்தான். ஒவ்வொன்றும் குருக்ஷேத்ரத்தை நோக்கி வளர்ந்தும் முயங்கியும் பிரிந்தும் முனைகொண்டு வந்தணைந்த வழியை அவன் விளக்கினான். அங்கே அவை மோதிக்கொண்டதன் தருணங்களை சொற்களின் வழியாக நடித்தான்.

ஒவ்வொருநாளும் குருக்ஷேத்ரத்திலிருந்து கிளம்பிய சூதர்கள் அருகிருந்த ஊர்களில் அந்நாளின் நிகழ்வை கதையெனச் சொன்னார்கள். அந்த அவையிலிருந்து கிளம்பிய சூதர்கள் வேறு அவைகளில் அந்நிகழ்வுகளை உரைத்தனர். தொடுத்துத் தொடுத்து கதை விரிய ஒவ்வொரு ஊருக்கும் மாலையில் புதிய கதையுடன் புதிய சூதன் ஒருவன் வந்து நின்றிருந்தான். முந்தையநாளின் சூதன் புலரியிலேயே கொடைபெற்று அடுத்த ஊர்நோக்கி சென்றுவிட அரைத்துயிலில் அவர்கள் வரும்கதைக்காக காத்திருந்தனர்.

கதை கேட்க நெய்விளக்கில் ஏழு திரி ஏற்றி வணங்கிவிட்டுத் திரும்பிய முதிய ஆயர் மிகத் தொலைவில் குழலோசையை கேட்டார். ஒரு தேனீயின் ரீங்காரமென அது ஒலித்தபோதும் அது நாகர்களின் குழல் என அடையாளம் கண்டார். “நாகர்களின் இசை. அங்கு ஏதோ விழவு போலும்” என்றார். கதை சொல்ல அமர்ந்த சூதன் “அவர்களும் அங்கே குருக்ஷேத்ரத்தில் களம்நின்றிருக்கிறார்கள். இன்று பாரதவர்ஷத்தில் போர்க்கதை உரைப்பது அன்றி பிற நிகழ்வென ஏதுமில்லை” என்றான்.

“அவர்கள் எப்படி அங்கு நிகழ்வதை அறிகிறார்கள்? நம் சூதர் அங்கே செல்வதில்லையே” என்றார் ஆயர். “ஒவ்வொருவருக்கும் ஒரு கதைமுறை உள்ளது. சொல்லிலும் சொல்லுக்கு அப்பால் நிறைந்துள்ள சொற்பொருளிலும் ஊறி அப்பெருங்கதை இந்நிலமெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது” என்றான் சூதன். ஆயர் பெருமூச்சுவிட்டு “அழிவின் கதை. இதை இந்நிலம் இன்னும் எத்தனை காலம் சொல்லி பெருக்கிக்கொள்ளப் போகிறது?” என்றார். “என்றுமுள அழிவு. எக்கணமும் நிகழும் ஆக்கம்” என்றான் சூதன். ஆயர் மீண்டும் பெருமூச்சுவிட்டார். சூதன் கைகளை கூப்பிக்கொண்டு “ஓம்” என ஒலியெழுப்பினான். “ஓம்! ஓம்! ஓம்!” என்றனர் சூழ்ந்திருந்த ஆயர்கள். சூதன் தன் கதையை சொல்லத் தொடங்கினான்.

“பாண்டவப் படைகளின் நடுவினூடாக காசிநாட்டு இளவரசி அம்பை கூந்தல் எழுந்து நீண்டு பறக்க பெருங்குரலெழுப்பியபடி ஓடினாள். ஒவ்வொரு ஆயிரத்தவர் குழுவுக்கும் இருவர் என காவலர் சிறிய மரமேடைமேல் வேலுடன் விழித்து அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு அக்ஷௌகிணியின் தொடக்கத்திலும் சிறு காவலரணில் எழுவர் தாழாப் படைக்கலங்களுடன் இருந்தனர். எவரும் அவளை காணவில்லை. பெருவெள்ளம் அகன்ற பின் சேற்றில் பரவிக் கிடக்கும் சருகுகளும் சுள்ளிகளும் தடிகளும்போல பாண்டவப் படை நிலம்படிந்து துயின்றுகொண்டிருந்தது. இரவிலெழுந்த நீர்வெம்மை மிக்க காற்று அவர்களின்மேல் அசையாது நின்றிருக்க மீன்நெய்ப் பந்தங்களின் ஒளிவட்டங்களில் கொசுத்திரள்கள் பொறிகளென, புகையென சுழன்றன. அவர்கள் எவரும் அவள் ஓசையை கேட்கவில்லை.” ஆயர்கள் விழித்த கண்களுடன் அச்சொற்களில் ஆழ்ந்து அமர்ந்திருந்தனர்.

ele1உலூபி குடியிருந்த புற்றுவீட்டின் வாயிலுக்கு வெளியே வந்து நின்றிருந்த நாகர் குலப் பெண்டிர் எழுவரில் முதல்வி தன் கையிலிருந்த சிறு குழலை மும்முறை முழக்கி வரவறிவித்தாள். புற்றின் சுழற்பாதையின் அடியாழத்தில் ஈரமும் தண்மையும் கொண்ட கதுப்பில் உடல் பதித்து விழி மூடி ஊழ்கத்தில் உடல் ஓய உளம் குவித்து அமர்ந்திருந்த உலூபி அவர்கள் மீண்டும் மும்முறை அவ்வோசை எழுப்பியபோதுதான் அதை அறிந்தாள். சீறல் ஒலியுடன் உயிர்த்தெழுந்து இரு கைகளாலும் புற்றுவழியின் சுவர்களைப் பற்றி உடல் நெளித்து நீர்மை கொண்டவள்போல் வளைந்து வழிந்து மேலேறி திறந்த வாயில் இருந்து நாக்கு எழுவதுபோல் புற்றுவாயிலில் தோன்றினாள்.

கூடி நின்றிருந்த பெண்கள் வாய்மேல் கைவைத்து குரவையொலி எழுப்பி அவளை வாழ்த்தினர். உலூபி ஆண்டிற்கு ஒருமுறைகூட அந்தப் புற்றில்லத்திலிருந்து வெளிவருவதில்லை. நெடுங்காலத்திற்கு முன் அங்கு வந்து அவளை மணந்து அன்னையாக்கிவிட்டு பாரதவர்ஷத்தின் பெருவீரன் சென்ற பின்னர் ஈன்ற மைந்தனை குலக்குழுவிடம் ஒப்பளித்துவிட்டு அவள் தன் ஊழ்கத்திற்குள் புகுந்தாள். அதன்பின் அவள் அவ்வப்போது குடிப்பூசெய்கைகளின் பொருட்டே அதற்குள் இருந்து வெளிவந்தாள். ஒவ்வொருமுறையும் உருமாறிக்கொண்டே இருந்த அவளை அவர்கள் வெவ்வேறு மூதன்னையராகவே எண்ணினார்கள்.

அவள் தங்கியிருந்த அந்தப் புற்று மிகத் தொன்மையானது. நாகர்கள் அங்கு தோன்றுவதற்கு முன்னரே அங்கிருந்தது. அடியிலாத ஆழம் கொண்டது என்று அதைப்பற்றி மூதன்னையரின் கதைகள் சொல்லின. மண்ணுக்கு அடியில் ஏழாம் உலகென அமைந்த நாகஉலகை நோக்கி திறக்கும் பாதை அது என்றனர் பூசகர். தொன்றுதொட்டு மூதன்னையர் அதற்குள் நுழைந்து ஊழ்கத்தில் அமைந்தனர். அங்கிருந்து வெளிவராமலேயே அவர்கள் மறைந்தனர். உலூபி அதற்குள் சென்று அமர்ந்து தன்னை உள்ளிழுத்துக்கொண்டதும் அவள் செல்லவிருக்கும் பாதை என்ன என்பதை அக்குலம் அறிந்தது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை அவர்கள் அதன் வாயிலில் வந்து குழல்விளி எழுப்பி அன்னைக்கான உணவையும் நீரையும் படைத்தனர். உலூபி பின்னிரவில் பிறரறியாது வெளிவந்து அவற்றை எடுத்துச்சென்றாள்.

அவள் நாவில் சொல்லெழுவது நின்றது. எனவே விழிகளில் அரவுகளுக்குரிய ஒளி குடியேறியது. சொல்லடங்கிய அரவு சொல்லனைத்தையும் விழிமணி என்றாக்கியது. தன்னை தான் தழுவிக்கொள்ளும் உயிர் அது ஒன்றே. எனவே மண்ணுலகில் வாழும் உயிர்களில் தன்னியல்பாகவே ஊழ்கம் கைகூடுவதும் அதற்கு மட்டுமே. ஊழ்கத்தில் அனைத்தையும் அறியத்தொடங்குபவர்களின் விழிகள் பெரிதுநோக்கத் தொடங்குகின்றன. அவர்கள் முன் உலகு சிறுத்து நீர்த்துளி என்றாகி புல்நுனியில் நின்று நடுங்குகிறது. அவர்கள் அனைத்து அலைகளுக்கும் மேல் காலெடுத்து வைத்து கடந்துசெல்கிறார்கள்.

நாகினிகள் முன்வந்து உலூபியை மும்முறை தலைதாழ்த்தி வணங்கினர். முதல் பெண் “அன்னையே, தங்களை பூசனைக்கு அழைத்து வரும்படி எங்களுக்கு குடிப்பூசகர்களின் ஆணை” என்றாள். வெண்ணிற நீள்குழல் இடைக்கு தாழ்ந்து கிடக்க, நீண்டு சுருண்ட நகங்கள் கொண்ட தசை வற்றிய கைகள் முதிய பாம்புகள் என தோள் தொங்க, வறுமுலைகள் வயிறு வரை தாழ்ந்து ஒட்டியிருக்க, சுருங்கிய முகத்தில் உள்மடிந்த உதடுகளுக்குள் ஒளிமிக்க கூர்வெண்பற்கள் தெரிய நின்றிருந்த உலூபி செல்வோம் என்று கைகாட்டினாள். அவர்கள் அவளை வணங்கி சூழ்ந்து அழைத்துச் சென்றனர். ஒருத்தி முன்னால் சென்று அவள் வருகையை சங்கொலியாக அறிவித்தாள். இன்னொருத்தி சிறுகலத்திலிருந்து பசுஞ்சாணி கரைத்த நீரை தெளித்து அவள் செல்லும் பாதையை தூய்மை செய்தாள். பிறிதொருத்தி அவளுக்குப் பின்னால் வந்து தோகையால் அவள் பாதத்தடங்களை அழித்தாள்.

வெற்றுடலுடன் நடந்த உலூபி காற்றில் நெளிந்து தவழ்ந்து செல்பவள் போலிருந்தாள். திரிசிரஸ் மலைமுடியில் இருந்து இறங்கி ஐராவதீகத்தின் வடக்குப் புறமாக ஓடும் உரகவதி ஆற்றின் கரை நோக்கி அவர்கள் சென்றனர். உரகவதியில் மரங்களின் வேர்ச்செறிவென படமிலாப் பாம்புகள் அடர்ந்து நீருக்குள் உடல் நுழைத்து அலைகளில் ஆடி நெளிந்துகொண்டிருந்தன. காலடியதிர்வில் அவை தாங்களும் அதிர்ந்து நெளிவுகொண்டன. சிற்றாற்றின் கரையில் போடப்பட்டிருந்த கருங்கல் பீடத்தில் அவளை அவர்கள் அமரச்செய்து பனைஓலை கோட்டிய தொன்னையில் ஆற்றுநீரை அள்ளி அவள் தலையில் ஊற்றி நீராட்டினர். ஈச்சை இலைகளால் முடைந்த ஆடையை அவள் இடையிலும் மார்பிலும் அணிவித்தனர். சுண்ணமும் மஞ்சளும் கலந்து குருதித் துளியை அவள் நெற்றியில் குறியிட்டனர். நாகர்குலத்திற்குரிய விழிமணி மாலையை ஒரு மரச்செப்பிலிருந்து எடுத்து அவளுக்கு அணிவித்தனர். கமுகுப்பாளையாலான நாகபட முடியை அவள் தலையில் சூட்டினர்.

அவள் சொல்லற்றவள் என்னும் உணர்வால் அவர்களும் சொற்களை இழந்து கையசைவுகளாலும் முகக்குறிகளாலுமே அவளிடம் பேசினர். பின்னர் அவர்கள் எண்ணுவதே அவளுக்குத் தெரிந்தது. அவர்கள் சொல்வதற்குள் அவள் எழுந்து நடக்கத் தொடங்கினாள். அவர்களின் சிறிய அணிநிரை ஊருக்கு வெளியே வடக்குப் பக்கம் அமைந்திருந்த மூதன்னையரின் ஆலயம் நோக்கி சென்றது. தொலைவிலேயே மூதன்னையரின் ஆலயத்தில் வெளிச்சம் எழுந்து சூழ்ந்திருந்த மரச்செறிவின் இலைத்தழைப்பின் இடைவெளிகளினூடாக சிதறி வானில் பரந்திருந்தது தெரிந்தது. அங்கு அசைந்த மானுட நிழல்கள் காட்டின் இலைத் திரைமேல் பேருருக்கொண்டு விழுந்து நடமிட்டன. பேச்சொலிகளும் பொருட்கள் முட்டிக்கொள்ளும் ஒலிகளும் இணைந்த முழக்கம் கேட்டது.

அவள் அணுகிக்கொண்டிருப்பதை உணர்த்த முதல் நாகினி சங்கோசை எழுப்பினாள். அதை ஏற்று அங்கிருந்து மறுவிளி எழுந்தது. அங்கே முழவுகளும் கூரொலி கொண்ட குழல்களும் ஒலிக்கத்தொடங்கின. அவர்கள் அன்னையர் ஆலயத்தை அணுகியபோது உள்ளிருந்து தலைமை பூசகர் கர்க்கர் கையில் நிறைகுடத்து நீருடன் எதிரே வந்தார். மலர்களும் கனிகளும் ஏந்திய தாலங்களுடன் இரு துணைப்பூசகர்கள் அவருக்கு இருபுறமும் வந்தனர். உலூபியை அணுகி நிறைகலம் தாழ்த்தி தலைவணங்கி பூசகர் வரவேற்றார். அவள் ஒரு சொல்லும் உரைக்காமல் இமையா விழிகள் எதையும் நோக்காதவைபோல் வெறித்திருக்க சீராக அடிவைத்து காற்றிலென முன்னால் சென்றாள்.

ஆலயமுகப்பில் கூடி நின்றிருந்த நாகர்கள் அனைவரும் எழுந்து கைகூப்பினர். நாகர்குலத்து அரசன் கௌரவ்யன் கற்பீடத்தில் அமர்ந்திருந்தான். முந்தைய அரசர் முதுகௌரவ்யர் அணிந்திருந்த கல்மணி மாலையை அவருடைய கட்டைவிரல் எலும்பைக் கோத்து கழுத்திலணிந்திருந்தான். நாகபட முடி சூடி, கைகளில் எலும்பில் கடைந்த நாககங்கணங்கள் அணிந்து வலக்கையில் நாகபடம் செம்மணிவிழிகளுடன் எழுந்து வளைந்திருந்த நீண்ட குலக்கோல் ஏந்தி அமர்ந்திருந்த அவனுக்கு இருபுறமும் நச்சுக்கூர்வேல் ஏந்திய காவலர்கள் நின்றிருந்தனர். அவன் முன் நாகபூசைக்கான களம் வரையப்பட்டு அதில் செந்தழல் எழுந்தாடிய ஊன்நெய்ப் பந்தங்கள் எரிந்தன.

உலூபி நாககளத்திற்குள் சென்று அங்கு நூற்றெட்டு நிரையாக பதிட்டை செய்யப்பட்டிருந்த அன்னையரின் அறைக்கல் உருக்களை விழியோட்டி நோக்கியபின் தலைவணங்கினாள். பூசகர் கர்க்கர் வணங்கி சாணி மெழுகிய ஓவியத்தரையில் வரையப்பட்டிருந்த களத்தை காட்டினார். கரிப்பொடியும் செம்மண்பொடியும் நீலப்பொடியும் கலந்து உருவாக்கப்பட்டிருந்த அந்த மாநாகக்கட்டு குங்குமச்செம்மை, இலைப்பசுமை, மண்மஞ்சள், துத்தநாகநீலம், கரிக்கருமை, சுண்ணவெண்மை என்னும் ஆறுவண்ணங்களில் வரையப்பட்ட நூற்றெட்டு நாகங்கள் பின்னி உருவானதாக இருந்தது. நாகபடங்கள் நூற்றெட்டு இதழ்களாக வட்டமாக விரிந்து விளிம்பமைக்க நடுவே அவற்றின் உடல்கள் ஆயிரத்தெட்டு முறை ஒன்றையொன்று வெட்டி முடிச்சிட்டு மையத்தில் வால்முனைகள் பின்னி ஒற்றைப்புள்ளியாக குவிந்திருந்தது. அப்புள்ளியில் களிமண் பீடம் அமைக்கப்பட்டு அதில் நாகபுடம் வைக்கப்பட்டிருந்தது.

நாகக்கட்டு அமைந்த களத்தின் வலது மூலையில் போடப்பட்டிருந்த கல்பீடத்தில் உலூபி அமர்ந்தாள். அவளுக்கு நேர் எதிர்புறம் முகம் நோக்கியபடி அரசன் அமர்ந்திருந்தான். கர்க்கர் உலூபியை வணங்கியபின் அரசனிடம் சென்று குரல் தாழ்த்தி மரபுச் சொல்லுரைத்தார். அரசன் எழுந்தபோது முழவுகளும் கொம்புகளும் முழங்கின. சூழ்ந்து நின்றிருந்த பெண்கள் வாயில் கைபொத்தி கழுத்து நரம்புகள் புடைக்க குரவையிட்டனர். தன் கையிலிருந்த நாகபடக் குலக்கோலுடன் அரசன் மூதன்னையரை மும்முறை உடல்நிலம் படிய விழுந்து வணங்கினான். பின்னர் திரும்பி குடித்தலைவர்களை வணங்கினான். குலப்பூசகர் அவனை வழிநடத்தி உலூபியிடம் அழைத்து வந்தனர். அவனுக்குப் பின்னால் குலமூத்தோர் எழுவர் தங்கள் நாகபடக் கோல்களுடன் இருநிரைகளாக வந்தனர்.

உலூபியை அணுகி நின்றபின் “அன்னையே, தங்கள் அடிபணிகிறேன். அருள்க!” என்று அரசன் சொன்னான். தன் மரக்கொந்தையைக் கழற்றி பூசகர் நீட்டிய மரத்தாலத்தில் வைத்தான். நாகபடக் கோலை கையிலேந்தி தலைவணங்கி நின்றான். அவனுடைய முடியை தாலத்தில் மலரும் கனியும் சேர்த்து வைத்து கொண்டுவந்து உலூபியின் காலடியில் வைத்தார் கர்க்கர். அவள் கைநீட்டி அதை தொட்டு வாழ்த்த கொம்புகளும் முழவுகளும் உச்சம் கொண்டு ஆர்த்தன. அரசன் ஏழடி முன்னால் வந்து தன் குலக்கோலை தாழ்த்தி உலூபியின் காலடி மண்ணைத் தொட்டு வணங்கினான். அவள் தாலத்திலிருந்து மூன்று மலர்களை எடுத்து அவன் தலைமேலிட்டு சொல்லின்றி வாழ்த்தினாள். ஏழடி பின்வைத்து நின்று மீண்டும் வணங்கி அவன் திரும்பி குல மூத்தோரையும் கூடியிருந்த நாகர் குடிகளையும் வணங்கினான்.

கர்க்கர் தாலத்தை திரும்ப எடுத்து அதிலிருந்த கொந்தையை அவன் தலைமேல் சூட்டினார். கோலும் முடியுமாக அவன் மீண்டும் சென்று தன் கல்லரியணையில் அமர்ந்தான். குலத்தலைவர்கள் எழுவரும் அரியும் மலருமிட்டு அவனை வாழ்த்தினர். மூதன்னையர் எழுவர் வந்து நீரூற்றி அவன் அரியணை அமர்வை மேலும் ஓராண்டுக்கு நிலைக்கச் செய்தனர். ஏழு நாகர்குலங்களில் இருந்து ஏழு இளமைந்தர் வந்து வணங்கி அரசனிடமிருந்து பொற்பரிசில்களை பெற்றனர். ஏழு கன்னியர் வந்து அவனை வாழ்த்தி மலர்ப்பரிசில்களை பெற்றுச் சென்றனர். ஏழு அன்னையர் வந்து அவனுக்கு எழுவகை அமுதை ஊட்டி வாழ்த்தினர்.

குலப்பூசகர் கை காட்டியதும் ஓசைகள் அழிந்தன. நாகர்கள் கைகளைக் கூப்பியபடி நோக்கி நின்றிருந்தனர். நாககளத்தை அரைவட்டமாகச் சூழ்ந்திருந்த புற்றுகளில் பலநூறு வளைதிறப்புகள் சொல்லத் திறந்த வாயென தெரிந்தன. பந்தங்கள் அனைத்தும் கொளுத்தப்பட்டபோது அவை ஒளியலையில் ததும்பி ஆடலாயின. கர்க்கர் தலைமையில் குடிப்பூசகர் எழுவர் நாககளத்தை சூழ்ந்தமர்ந்து நாகர்களின் தொல்முறைப்படி பூசனை முறைகளை செய்யத் தொடங்கினர். ஏழு குடங்களில் நீரும், ஏழு தாலங்களில் மலர்களும், ஏழு தாலங்களில் கனிகளும் கொண்டுவந்து படைக்கப்பட்டன. மலர்களை எடுத்து நாகக்கட்டு அமைந்த களத்தின் மையப் புள்ளியாக அமைந்த நாகபுடத்தின் மேல் இட்டு நாகவேதம் ஓதி பூசகர்கள் வழிபட்டனர். கைகளைக் கூப்பியபடி அரசனும் குல மூத்தோரும் நாகர் குடிகளும் சூழ்ந்து அதை நோக்கிக்கொண்டிருந்தனர்.

அரவுச்சீறல்களின் பலநூறு ஒலிமாறுபாடுகளால் ஆனதாக இருந்தது நாகவேதம். பயின்று தீட்டப்பட்ட தொண்டைகளும் ஒன்றே எனக் குவிந்த உதடுகளும் அவற்றில் முற்றமைந்த உள்ளமும் அவ்வொலியை எங்கிருந்தோ என அங்கு எழச்செய்தன. அவர்களிடமிருந்து எழுந்ததேயென்றாலும் அவர்களைக் கடந்து பிறிதொரு இருப்பென அது அங்கே பெருகி உருக்கொண்டது. அவர்கள் அனைவரையும் ஒன்றெனப் பிணைத்தது. செவி பழகப் பழக அவர்கள் அதில் தாங்கள் பேசிவந்த மொழியின் சொற்களை கண்டுகொண்டார்கள். பின்னர் அச்சொற்கள் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ள பொருள் உருவாகி வந்தது.

முதல் பிரஜாபதியும் வெள்ளாட்டு முகம்கொண்ட பெருநாகமும் ஆன தட்சனையும் முதல் மூதன்னையரான கத்ருவையும் வினதையையும் வாழ்த்தியது அந்தத் தொல்மொழி. புடவியை ஈன்ற பெருநாகங்களான அதிதி, திதி, தனு, அரிஷ்டை, சுரஸை, கசை, சுரஃபி, வினதை, தாம்ரை, குரோதவசை, இரை, கத்ரு, முனி, புலோமை, காலகை, நதை, தனாயுஸ், சிம்ஹிகை, பிராதை, விஸ்வை, கபிலை அகியோரையும் அவர்களிடமிருந்து எழுந்த காகி, ஸ்யேனி, ஃபாஸி, கிருத்ரிகை, சூசி, க்ரீவை ஆகியோரையும் வாழ்த்தியது. அன்னையர் நிரை அச்சொற்களிலிருந்து பெருகியெழுந்தபடியே இருந்தது. ஒவ்வொருவரும் பலராயினர். வேதச்சொல் எனும் ஆழ்களஞ்சியத்திலிருந்து அவர்கள் பிறந்தெழுந்து அங்கே துலங்கினர்.

கர்க்கர் எழுந்து தெற்கு திசை நோக்கி வணங்கி கைகாட்டினர். துணைப்பூசகன் கொம்பெடுத்து மும்முறை ஊதினான். மிக அப்பால் காட்டிற்குள் அதற்கு எதிர்விளியென கொம்போசை எழுந்தது. பெண்டிர் குரவையிடத் தொடங்கினர். காட்டுக்குள்ளிருந்து ஒற்றைப் பந்தமொன்று ஒழுகி வந்தது. இலைத்தழைப்புக்குள் வெளிச்சம் பீறிட்டெழுந்து நீண்டலைய, பந்தமேந்திய முதன்மைப் பூசகர் வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து மூன்று பூசகர்கள் கொம்புகளையும் முழவுகளையும் முழக்கியபடி வந்தனர். தொடர்ந்து ஒருவன் தலையில் மரத்தாலம் ஒன்றை சுமந்து வந்தான். அதன் மேல் செம்பட்டால் மூடப்பட்ட கலமொன்று இருந்தது. அவனைத் தொடர்ந்து மேலும் பன்னிரு பூசகர்கள் நாகவேதச் சொற்களை ஓதியபடி வந்தனர்.

பூசகர்கள் உள்ளே வந்து நாகக்கட்டின் மையத்தை சூழ்ந்தனர். தாலமேந்தி வந்தவன் அதை பூசகர் முன் மும்முறை தாழ்த்தி காட்டினான். பூசகர் அதன் ஒரு முனையை தொட இருவருமாக அதை நாகக்கட்டின் நடுவில் இருந்த நாகபுடத்தின் மேல் வைத்தனர். அந்தத் தாலத்திலிருந்த பட்டில் பொதிந்த சிறு கலத்திற்கு அரிசியும் மலருமிட்டு பூசை செய்து வணங்கிய பின்னர் கர்க்கர் செந்நிற மூடுதிரையை மெல்ல இழுத்து அகற்றினார். அங்கு வெட்டப்பட்ட நாகன் ஒருவனின் தலை இருந்தது. பெண்கள் குரவையொலி விசை கொண்டது. முதிய பெண்கள் கைகளை நீட்டி உடல் விதிர்க்க வெறியாட்டுகொண்டனர். சிலர் கீழே விழுந்து நாகம்போல் நெளியலாயினர்.

நாகனின் நீண்ட குழல்கற்றைகள் இருபுறமும் சரிந்து தாலத்தில் விழுந்து கிடந்தன. மாநாகங்கள் வெளியே வரும் குகைகளின் முன் அவன் தன் கழுத்தை தானே வெட்டி விழுந்து நவகண்டம் அளித்தான். புற்றுவாய்களிலிருந்து எழுந்து விழுந்த நாகங்கள் அவன் உடலை கவ்வி இழுத்து உள்ளே கொண்டுசென்று உண்டன. பூசகர் அவன் தலையை சீராக வெட்டி அத்தாலத்தில் அமைத்து கொண்டுவந்திருந்தனர். குருதி வழிந்து கரிய பிசினாக மாறி தாலத்துடன் ஒட்டி தலையை உறுதியாக நிறுத்தியிருந்தது. அவன் விழிகள் நிறைவுகொண்ட துயிலிலென மூடியிருந்தன. உதடுகள் சற்றே திறந்து உள்ளே நாகர்களுக்குரிய இரு கூர்வளைந்த பற்கள் கொண்ட வெண்நிரை தெரிந்தது. நீண்ட வடித்த காது தாலத்தை தொட்டுக் கிடந்தது. நெற்றியில் நாகபடத்தை பச்சை குத்தியிருந்தான்.

அவனை அங்கிருந்த அனைவரும் அறிந்திருந்தார்கள். திறல்மிக்க வேட்டையனும் நாகர்குலத்தின் அழகனுமாகிய சுனீதன் இளமையிலேயே நாகமூதாதையருக்கு உகந்தவன் என்று பூசகர்களால் குறி சொல்லப்பட்டவன். அவனுடைய ஏழு துணைவியரிலாக பதினேழு மைந்தர்கள் அக்குடியில் பிறந்தனர். மூன்று முறை புலியை வென்று பல் கொண்டு மீண்டவன் என்பதனால் அவனைப்பற்றி குலப்பாடகர் பாடிய ஆறு பாடாண் பாடல்கள் அக்குடியில் நிலவின. ஒவ்வொருநாளும் என அவன் மூதாதையரை நோக்கி சென்றுகொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். அவன் உடல் ஒளிகொண்டது. கண்களில் நாகமணிகளுக்குரிய மின் எழுந்தது. சொற்கள் கார்வைகொண்டு எடைமிகுந்து மெல்ல அடங்கின. கனிந்து கனிந்து காம்பு இற்றுக்கொண்டிருந்தான்.

அவன் முகத்தையே அனைவரும் நோக்கிக்கொண்டிருந்தனர். கர்க்கர் அரசரிடம் சொல் பெற்று பூசையை தொடங்கினார். கைகளைக் கூப்பியபடி திகைத்தனபோல் வெறித்த விழிகளுடன் நாகர்கள் அந்த முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தனர். கர்க்கரின் விரல்கள் வெறிகொண்ட நாகக்குழவிகள்போல் உடுக்கின் தோல்பரப்பில் நின்று துடித்தன. விசையிலிருந்து மேலும் விசைக்கென திமிறித் துள்ளி எழுந்தது தாளம். பின்னர் மீட்டுபவரிலிருந்தும் அவர் விரல்களிலிருந்தும் அது விடுபட்டது. காற்றில் தன்னைத் தானே நிகழ்த்திக் கொள்வதுபோல் நின்று ததும்பியது. அங்கிருந்த அனைவரையும் சரடெனக் கோத்து ஒன்றாக்கி இறுக்கி நிறுத்தியது.

சூழ்ந்திருந்த பல்லாயிரம் நாகப் புற்றுவாய்களுக்குள் அரவுகள் எழுந்து வந்து அமைவதை அவர்கள் உணர்ந்தனர். அவை அனைத்தும் நோக்கு கொண்ட விழிகளென மாறின. அவர்களை உறுத்தபடி சூழ்ந்திருந்தன. கூர்வேல் முனைகளென வந்து தொடுத்த அந்த நோக்குகளால் அங்கிருந்த நாகர்கள் அனைவரும் மெய்ப்பு கொண்டனர். குழவிகள் அன்னையரை இறுக கட்டிக்கொண்டன. கன்னியர் ஒருவரோடொருவர் உடல் தழுவி நின்றனர். தாளம் உச்சத்தில் சென்று அறுபட்டு ஓய்ந்த கணத்தில் வெட்டுண்ட தலையில் விழிகள் திறந்தன. உதடுகள் அசைவுகொண்டன.

மூச்சொலிகள் சூழ ஒலித்தன. பூசகர் உடுக்கையைத் தாழ்த்தி தலைவணங்கி கப்பரையிலிருந்து நீர் தொட்டு மூன்றுமுறை அந்தத் தலைமீது தெளித்தார். நீருக்கு அந்த முகம் சிலிர்த்துக்கொண்டது. பூசகர் உரத்த குரலில் “இங்கு எழுந்தருளியவனே! எங்கள் குடியின் வீரனே! நீ யார்? சொல்க!” என்றார். சூழ்ந்திருந்த அமைதியில் அந்தக் குரல் முழவோசைபோல் ஒலித்தது. அவன் உதடுகள் மெல்ல அசைந்தன. “சொல்க! எங்கள் அனைவருக்கும் செவி தொடும்படி சொல்க! எங்கள் களமுற்றத்தில் எழுந்தருளியுள்ள நீ யார்? எங்கள் அன்னையரின் முன் அமர்ந்துள்ள நீ யார்? பல்லாயிரம் நாகச் செவிகளால் கேட்கப்படும் சொற்கள் கொண்ட நீ யார்?”

“என் பெயர் அரவான். நாகர் குலத்து உலூபியின் மைந்தன்” என்று அந்தத் தலை கூறியது. மூச்சொலிகள் சேர்ந்தெழ நாகர்களின் உடல்வளையம் இறுகி அணுகியது. “சொல்க, நீ நோக்குவதென்ன? அங்கே தொல்நிலமாகிய குருக்ஷேத்ரத்தில் நிகழ்வதென்ன?” என்று பூசகர் கேட்டார். அந்த முகம் ஊழ்கத்தில் என புன்னகைத்தது. “நான் அங்கநாட்டரசன் கர்ணனை பார்க்கிறேன். அவன் அறைக்குள் நிழலசைவென சுவர்மடிப்பினூடாகச் சென்று எழுந்து விழிமணி மின்ன நின்றிருக்கிறேன்” என்று அவன் சொன்னான்.

“அது குருக்ஷேத்ரத்திற்கு தென்கிழக்கே அமைந்த சிறிய எல்லைக்காவல் கோட்டையாகிய சிபிரம். கர்ணனின் தனியறைக்குள் அவன் அணுக்கரான சிவதர் புன்னகையுடன் நுழைவதை காண்கிறேன். இதோ தங்களுக்குரிய நாளை தெய்வங்கள் வகுத்துள்ளன, அரசே. பிதாமகர் பீஷ்மர் களம்பட்டார். அங்கே அம்புமுனையில் படுத்திருக்கிறார். இனி அஸ்தினபுரிக்கு வேறு வழியில்லை. உங்களை போருக்கு அழைத்தே தீரவேண்டும் என்கிறார் சிவதர். சலிப்பு தோன்ற ஆம் என்று கர்ணன் சொன்னான். மெல்ல உடலை அசைத்து பெருமூச்செறிந்தான். சிவதர் மேலும் மேலும் பேச அவன் ஆர்வமிழந்தபடியே சென்றான்.

“பின்னர் கர்ணன் பெருமூச்சுடன் பீடத்தில் உடல் தளர்த்தி கால் நீட்டி அமர்ந்தான். தலையை அண்ணாந்து பீடத்தின் சாய்வில் வைத்துக்கொண்டு கண்களை மூடினான். அவன் தசைகள் ஒவ்வொன்றாக தொய்வதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். மெல்லிய விம்மல் போலொன்று எழ அவன் நெஞ்சு அசைந்தது. விழிகளில் இருந்து ஊறிய நீர் இருபுறமும் கன்னங்களில் வழிந்தது. நாகரே, கேளுங்கள்! பிறர் அறியாத ஆண்மகனின் துயர் தன்னந்தனி மதவேழத்தின் நோய் போன்றது. தெய்வங்கள் அன்றி பிறர் அதை அறியப்போவதில்லை. தெய்வங்களிடமும் அது முறையிடப்போவதில்லை.”

அரவான் சொன்னான் “அவ்வறையில் பீடக்காலின் நிழல் நீண்டு சுவர்மடிப்பில் விழுந்து நாகத்தின் பத்தியென வளைந்து நின்றது. அதில் குடியேறி விழிகள் ஒளிர நா பறக்க மெல்ல படமசைத்தாடியபடி நான் அவனை பார்த்துக்கொண்டிருந்தேன்.” நாகர்கள் அச்சொற்களினூடாக உடனிருந்தென அனைத்தையும் பார்த்தனர். அந்த விழிகளையும் அசையும் உதடுகளையும் நோக்கியபடி உணர்ச்சியற்ற முகத்துடன் உலூபி அமர்ந்திருந்தாள்.

முந்தைய கட்டுரைஒருதெய்வ வழிபாடு
அடுத்த கட்டுரைமு.தளையசிங்கம் – ஒரு நினைவுக்குறிப்பு