அன்புராஜ் பேட்டி – கடிதங்கள்

anb11

கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி

அன்புள்ள ஜெ

அன்புராஜ் அவர்களின் பேட்டி என்னுடைய இந்த புத்தாண்டை மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்கச்செய்தது. வாழ்க்கையைப்பற்றிய ஆழமான ஒரு பிடிமானத்தை உருவாக்கியது. மிகச்சிறிய வாழ்க்கை என்னுடையது. மிகச்சிறிய எதிர்பார்ப்புகள். அதைவிடச் சின்ன ஏமாற்றங்கள். ஆனால் எனக்கு எப்போதுமே ஒரு சோர்வும் கசப்பும்தான்.எதுவுமே செய்வதற்கில்லை. வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை. இந்தமாதிரியான சோர்வு.

இந்தச்சோர்வு ஏன் என்று அன்புராஜ் பேட்டியை வாசித்தபோது நினைத்துக்கொண்டேன். சோர்வுக்கான காரனம் நான் என்னைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்ததுதான். எனக்கு நல்லது நடக்கவேண்டும், எனக்கு வெற்றி கிடைக்கவேண்டும். இதைப்பற்றி நினைத்தேன். என்னை மற்றவர்கள் மதிக்கிறார்களா என்று நினைத்தேன். இதெல்லாம் சேர்ந்துதான் என்னை இவ்வளவு சோர்வூட்டியது. ஆனால் அன்புராஜ் போன்றவர்கள் மற்றவர்களுக்காகவும் சமூகநலனுக்காகவும் வாழ்கிறார்கள். ஆகவே அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிகழும் அத்தனை சோர்வுகளிலிருந்தும் எளிதில் விடுதலை அடைகிறார்கள்.

இந்தநாள் பொன்னாகியது

டி.ராஜ்குமார்

அன்புள்ள ராஜ்குமார்,

அதைவிட முக்கியமானது சலிப்பு. எதிலாவது ஊக்கமுடன் செயல்படாதவர்கள், தன் உடல் மற்றும் உள்ள ஆற்றலை செலவிடாதவர்கள் மெல்ல மெல்ல புரணிகளில் வம்புகளில் பூசல்களில் ஈடுபடுகிறார்கள். அது அவர்களிடம் காலப்போக்கில் சோர்வாக வெளிப்படுகிறது. அந்தச்சலிப்பை அவர்கள் மற்றவர்களிடம் காட்டுவார்கள். அவர்கள் திருப்பி இவர்களை மேலும் சோர்வுறச்செய்வார்கள். விரக்தியிலிருந்து வெளிவந்தால்தான் செயலூக்கம் என்பது பொய். செயலூக்கம் கொள்வதே விரக்தியிலிருந்து வெளிவரும் வழி.

ஜெ

அன்பு ஜெயமோகன்,

அந்தியூர் அன்பு அண்ணாவின் பேட்டி சிறப்பு. பேட்டியை ஒருங்கிணைத்த ஈரோடு கிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி.

அன்பு அண்ணாவை எனக்கு அறிமுகப்படுத்தியது சுடர் நடராசன். சத்தியமங்கலத்தில் சுடர் எனும் பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை நட்த்தி வரும் அவருடன் மலை கிராமங்களுக்கு அவ்வப்போது செல்வேன். அப்படியான பயணம் ஒன்றில்தான், அன்புவை எனக்கு நடராசன் அறிமுகப்படுத்தி வைத்தார். “வீரப்பனோட இருந்தவர்” என்று சொன்னபோது உள்ளுக்குள் ஒரு அதிர்ச்சி எழுந்த்தை மறவாமல் ஒப்புக்கொள்கிறேன். அதேநேரம், அவர் முதல் சந்திப்பிலேயே இயல்பாகப் பழகிய விதம் எனக்குப் பிடித்திருந்தது. வார்த்தைக்கு வார்த்தை தோழர் என்று அழைப்பார்.

சுடர் ஒருங்கிணைத்திருந்த குடியரசு விழா நிகழ்வில்(தாமரைக்கரை-கொங்காடை பகுதி) நானும் அவரும் கலந்து கொண்டோம். மிக எளிய விழா அது. மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அன்பு அண்ணா பேசியது ஒரு பிரச்சாரகரைப் போல் இல்லை. நெருக்கமான சொந்தத்தைப் போல அம்மக்களிடம் பேசினார். பிறகு, இருமுறை அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். ஒருமுறை மலைத்தேனைத் திகட்ட திகட்ட நக்கக் கொடுத்தார். இன்னும் அதன் ருசி நாக்கில் இருக்கிறது. அவரின் குடும்பத்தினர் எங்களைக் கொண்டாடிய விதத்தை வியந்துதான் ஆக வேண்டும். தீவிரத் தமிழ்த்தேசியரான அவருக்கு, சில சங்கப்பனுவல்களை மற்றொருமுறை கொடுத்தேன். அவ்வளவு உவகையோடு அந்நூல்களைப் பெற்றுக் கொண்டார்.

சந்திக்கின்ற பொழுதுகளில் எல்லாம் அவரின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும். மணிக்கணக்கில் சோர்வடையாமல் பேசிக்கொண்டே இருப்பார். மாதத்தில் இருமுறைகளேனும் அவரிடம் பேசுவேன். இதழ்களில் வெளிவரும் கட்டுரைகளைப் படிக்கச் சொல்லி அவருக்கு இணைப்புகள் அனுப்புவேன்.

விஷ்ணுபுரம் விருது நிகழ்வில் அன்பு அண்ணாவை நெடுநாட்களுக்குப் பிறகு ஆச்சர்யத்தோடு சந்தித்தேன். சனிக்கிழமை(விழாவின் முதல் நாள்) மதிய உணவு இடைவேளையில் கலையரங்கின் படிக்கட்டுகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஒரு நாவலை எழுத முயற்சி மேற்கொண்டிருப்பதாகச் சொன்னார். ஒருகணம், ஆடிப்போய் விட்டேன். ஏனென்றால், அவர் ஒரு சித்தாந்தத்தின் வழியாக வாழ்க்கையை அணுகுபவர். அத்தடுமாற்றத்தை அவரும் ஒப்புக் கொண்டார். நாவல் எழுதும் பயிற்சிக்கு விஷ்ணுபுர விழா உதவக்கூடும் எனும் நம்பிக்கையை அவர் பகிர்ந்து கொண்டபோது, மகிழ்ந்து போனேன். சித்தாந்தங்களுக்கு வெளியே இருந்து அவற்றைக் கவனிப்பது குறித்து கால்மணிநேரத்துக்கு மேலாக பேசிக்கொண்டிருந்தோம். ”ஸ்டாலின் ராஜாங்கம் மற்றும் ராஜ்கெளதமன் போன்றோரின் கட்டுரைகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்” என்ற என் கருத்தை ஆமோதித்தார் அன்பு. சனிக்கிழமை மதியமே நான் கிளம்பி விட்டேன்.

திங்கள் கிழமை(விழா முடிந்த மறுதினம்) அன்று மாலை அன்பு அண்ணாவிடம் பேசினேன். “விழா பயனுள்ளதாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட கருத்தியலின் பன்முகத்தரப்புகளை உரையாடல் வழியாக முன்வைக்கும் களத்தை இதுவரை நான் கண்டதில்லை” என்று சொன்னார். “ஒன்றை நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள் அண்ணா. ஜெயமோகனின் சிந்தனைகளை அல்லது அவர் சிந்திக்கும் முறையை அப்படியே ஒப்புக்கொள்ளும் அடிமைகளைக் கொண்ட ’ஆசிரமம்’ அல்ல விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். விஷ்ணுபுர விருதாளர்களைக் கவனித்திருந்தாலே நீங்கள அதைப்புரிந்து கொண்டிருப்பீர்கள். அவ்வகையில் ஒற்றைச்சித்தாந்தத்தை மையப்படுத்தி அதற்கு வலுச்சேர்க்க வேண்டிய ‘அரசியல்’ திட்டமும் அவ்வமைப்புக்குக் கிடையாது. இதைப் புரிந்து கொள்வது மிக முக்கியம் அண்ணா!” என்பதான வகையில் அவரிடன் நான் குறிப்பிட்டேன். தொடர்ந்து ’சித்தாந்தப் பிடிமானத்தைப்’ பற்றிய உரையாடலைத் தொடர்ந்தோம். ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் வழியாகவே சமூகத்தை அணுகிக் கொண்டிருந்ததால், அவரால் விழாப் பங்கேற்பாளரின் உரைகள் அதிர்ச்சியை அளித்திருப்பது புரிந்தது. எனினும், அதன் வழியாக அவர் சில புரிதல்களைப் பெற்றிருப்பதையும் உணர்ந்தேன்.

அன்புராஜ் அண்ணாவின் வாழ்க்கையை இனி விஷ்ணுபுர விருது விழாவுக்கு முன் / பின் எனப்பிரிக்கலாம் என்றே உத்தேசிக்கிறேன்.

உயிர்நலத்தை விரும்பும்,

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.

அன்புள்ள சக்திவேல்

அன்புராஜ் வெறும் கலைஞரோ எழுத்தாளரோ அல்ல. அவர் களச்செயல்பாட்டாளர். அதற்கு அமைப்பு இன்றியமையாதது. அவர் சார்ந்துள்ள அமைப்பு, குறிப்பாக அவர் தன் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கும் வி. பி. குணசேகரன் அவர்கள் பழங்குடிகளுக்காக பெரும் பணியில் ஈடுபட்டிருப்பவர். அவர் அவ்வமைப்பின் பகுதியாக இருக்கையிலேயே தன் களப்பணியை ஆற்றமுடியும். அதிலிருந்தே தன் ஆற்றலை பெறமுடியும். இலக்கியம் மற்றும் கலை சார்ந்த சில கருத்துக்களை நம் நண்பர்களுடனான உரையாடலில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். அவருடைய அமைப்பே மேலும் முக்கியமானது என நினைக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைபுத்தரின் வருகை
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா உரைகள்- கடிதங்கள்-15