நிகழ்தலின் துமி

இருண்ட காட்டுக்குள் செல்லும்போது குளிர்ந்த கரிய பாறை ஒன்றைப் பார்த்தேன். அது அங்கே மௌனமாக நிகழ்ந்து கொண்டிருப்பதாகப் பட்டது. நம்மைச் சுற்றி இந்த அலகிலாப் பெரும் பிரவாகம், பிரபஞ்சப் பெருவெளி, நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் நாமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அந்தப் பாறை ஒரு ரிஷி போல. அத்வைதத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்த யோகி. அதன்மீது சருகுகள் பெய்கின்றன. மழையும் பனியும் வெயிலும் நிழல்களும் பொழிகின்றன. காற்று தழுவிச் செல்கிறது. காலம் அதன்மீது பெருகிச் செல்கிறது. வாழ்தல் என்பது அதுபோல பரிபூர்ணமான ஒரு நிகழ்தலாக இருக்க வேண்டும். அது ஒரு மானுடக் கனவு. 

 

ஆனால் மண்ணில் நாமோ மலரிதழ் பட்டாலும் வடுப்படும் உள்ளத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சென்றவையெல்லாம் நம்மில் நிறைகளாக மீண்டும் மீண்டும் நிகழ ஓயாது அலையடித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு மனிதனை நாம் காணும் போது அவன் ஒர் இருப்பு அவல ஒரு கொந்தளிப்பு ஓர் அலையடிப்பு ஒரு பெருக்கெடுப்பு என்று நாம் உணர்வதில்லை. 

 

திருவனந்தபுரம் சீகுமார் திரையரங்கில் ஒரு குறுகலான மாடிப்படி வளைவு உண்டு. அவ்வழியாக ஏறிச் செல்பவர்கள் அங்கே இடித்துக் கொள்ளக் கூடுமென அந்தப் பகுதிக்கு மட்டும் குஷன் பொருத்தியிருந்தார்கள் இருபது வருடங்களுக்கும் மேலாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், அப்பகுதி வழியாகச் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் அந்தக் குஷன் மீது ஒங்கிக் குத்திவிட்டுச் செல்வார்கள், அனிச்சையாக.

மனித மனங்களிலும் மென்மையானவை அதிகக் குத்து படுகின்றன. வாழ்வின் தருணங்கள் முடிவிலாத தற்செயல் விளையாட்டினால் ஆனவை. ஆயினும் கலைஞர்களுக்கு அனுபவங்கள் இன்னும் அதிகம். எழுத்தாளர்கள் தங்கள் அனுபவங்களை எழுதும் போது சாமானிய வாசகன் இத்தனை அனுபவங்களா?’ என்று வியக்கிறான். எஸ்.ராமகிருஷ்ணனிடம் பல விகடன் வாசகர்கள் இந்த வினாவைக் கேட்டதாகச் சொன்னார். உண்மையில் அந்த அனுபவங்களைப் புற வயமாகப் பார்த்தால் அவை சிறப்பான அனுபவங்களே அல்ல. பலசமயம் சாதாரண நிகழ்வுகளே. அனுபவங்களில் இருந்து கலைஞன் பெற்றுக் கொள்ளும் அக அனுபவம் தான் பெரியதும் வீரியம் மிக்கதுமாக உள்ளது. 

 

இன்னொரு உதாரணம் ஜே.ஜே.சில குறிப்புகளில் சுந்தரராமசாமி கூறுவது. அறையின் உத்திரத்தில் யாரோ முட்டுகிறார்கள். அறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் வீணை தானே அதிர்ந்து இசைக்க ஆரம்பிக்கிறது. கலைஞனின் இயல்பு, அப்படித்தான். தன் அனுபவம் என்று அவன் கூறுபவை பெரும்பாலும் அவனுடைய அனுபவங்களே அல்ல. அவன் தன்னைப் பிறராகவும் காணக் கூடியவன். 

 

இவ்வனுபவங்களை நான் நேரடியாக எழுத ஆரம்பித்தது 1994 முதல் மாத்ருபூமி நாளிதழின் ஞாயிறு இணைப்பில். அவை பெரிய அளவில் வாசிக்கப்பட்டன. அதன்பிறகு அவற்றை பாஷாபோஷிணி இதழில் தொடர்ந்து எழுதினேன். அவற்றை பின்னர் தீராநதிஇதழ் தொடங்கப்பட்டபோது அதில் வாழ்விலே ஒருமுறைஎன்ற பேரில் ஒரு தொடராக எழுதினேன். அவை அதேபேரில் கவிதா பதிப்பகம் வெளியீடாக வெளிவந்தன. அதன் பிறகுதான் அனுபவக்குறிப்புகள் என்ற வடிவம் தமிழில் பிரபலமடைந்தது என்பது என் எண்ணம். இன்று பல எழுத்தாளர்கள் அவற்றை எழுதுகிறர்கள். 

 

ஒரு சிறுகதை என்பது ஒர் அனுபவத்துளி மட்டுமல்ல என்ற என் எண்ணமே இவற்றை நான் நேரடியான பதிவுகளாக உருவாக்குவதற்கான காரணம். சிறுகதை அளவில் சிறிதாக இருக்கலாம். சிறிய அளவில் வாழ்வைக் கூறுவதாக இருக்கலாம் ஆனால் அது ஒரு முழு வாழ்வின் சிறுதுளி. அதன் கூறப்பட்ட தளங்களுக்கு உள்ளே ஒரு முழுவாழ்வு இருக்கவேண்டும். ஆகவே அது அதை எழுதும் ஆசிரியனின் வாழ்வில் ஒரு சிறு துளி அல்ல. உதாரணமாக ஊமைச் செந்நாய்என்ற எனது சிறுகதை. அதற்குப் பின்புலமாக நேரடி அனுபவம் ஏதுமில்லை. பழுப்பு நிற விழிகள் உள்ள ஒரு காணிக்கார வேட்டைத் துணைவனை நான் பார்த்திருக்கிறேன் என்பதைத் தவிர. ஆனால் அக்கதையை கற்பனையில் வலிக்கும் ஒருவரால் ஊமைச் செந்நாயின் முழு வாழ்க்கையை, அதன் நிலப்பகுதியுடன், தன் நினைவில் விரித்துக் கொள்ள முடியும். 

 

அப்படி விரியாதலை எளிய அனுபவங்களாக நம்மில் நிரம்பியிருக்கலாம். உணர்வின், விவேகத்தின் ஒரு நுனியை அவை சென்று தீண்டும்போது அவற்றுக்கு இலக்கிய முக்கியத்துவமும் கிடைக்கலாம். அவற்றைப் பதிவு செய்வதற்கான ஊடகமாக அனுபவக் குறிப்புகள்என்ற வடிவத்தை நான் தேர்வு செய்தேன். சங்க இலக்கியப் பாடல்களைப் பற்றிய என்னுடைய சங்கசித்திரங்கள்நூலும் இந்த வனகமையைச் சார்ந்ததே. புனைவுக்கும் உண்மைக்கும் நடுவே உள்ள வடிவம். சிறுகதைக்கும் அனுபவப்பதிவுக்கும் நடுவே உள்ள வடிவம். நடைச்சித்திரமா கட்டுரையா என மயங்க வைக்கும் வடிவம். இதுவும் ஒரு முக்கியமான இலக்கிய வடிவமே.

 

 

இக்கட்டுரைகளில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு புனைவு உள்ளது என்பதை வாசகர் உணர்வார்கள். உண்மை அனுபவங்களை புனைவின் மூலம் மிகைப்படுத்தவில்லை. அலங்காரப்படுத்தவில்லை. சுவை உண்மையின் வலிமையை அணைத்துவிடக்கூடும். மாருக உண்மை அனுபவங்களை புனைவின் மூலம் துவக்கியிருக்கிறேன். ஓர் உண்மை அனுபவத்தை வாசகனின் கற்பனையில் உயிரோட்டத்துடன் விரியச் செய்வதற்கு மட்டுமே இங்கே புனைவு கையாளப்பட்டிருக்கிறது. இவை புனைவின் மூலம் வெறும் தகவல் என்ற நிலையில் இருந்து விடுபட்டு அக நிகழ்வுகளாக ஆகின்றன. அவ்வாறு அவை என் அனுபவங்கள் என்ற நிலையைவிட்டு எழுந்து வாசகனின் அனுபவமாக ஆகின்றன. இலக்கியம் என்பதே அதுதான், ஒருவன் தன் அக அனுபவத்தை சொற்கள் மூலம் பிறரது அக அனுபவமாக ஆக்குகிறான். 

 

இப்படைப்பு என் மதிப்பிற்குரிய நண்பரும் தனிவாழ்விலும் எனக்கு வழிகாட்டியும் துணையுமான பேரா. அ.கா.பெருமாள் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். 

[உயிர்மை வெளியீடாக வரவிருக்கும் ‘நிகழ்தல்: அனுபவக்குறிப்புகள்’ என்ற நூலின் முன்னுரை]

 

முந்தைய கட்டுரைசெவ்வியலின் வாசலில்
அடுத்த கட்டுரைஇஸ்லாம்:கடிதங்கள்