கைத்தறி நெசவும் விஷ்ணுபுரமும்

20770480_1832843460075817_8818736182789213271_n

தன்மீட்சி

நம்பிக்கையின் ஒளி

கைநெசவும் தனிவழியும்

செயல்படுவோர் அளிக்கும் மீட்பு

நம்பிக்கை, ஸ்டாலின் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அய்யாவுக்கு,

வணக்கம். பொங்கலுக்கான வேலைகள் ஒருங்கிணைப்பதில் சற்று நேரம் எடுத்துக்கொண்டதால் அனுபவத்தை பகிர்ந்துகொள்வதில் தாமதம் நேர்ந்துவிட்டது.

வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வும் அவரவர் அகத்தில் கொண்டிருக்கும் அடிப்படையான நம்பிக்கையின் தன்மையை வைத்தே அமைகிறது என்ற வரிகளை இத்தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன். விஷ்ணுபுர இலக்கிய நிகழ்வில் கலந்துகொண்ட மூன்று நாட்களும் , அதற்கு பிறகு கிடைத்த பெரும் நம்பிக்கையான மனநிலையும் என் வாழ்வினை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துகிறது என்று நம்புகிறேன். விழா முடிந்துவந்த அடுத்தடுத்த நிகழ்வுகளே அப்படி உணரவைக்கிறது.

விழாவிற்கான வேலைகள் ஏதாவது இருந்தால் அதனை செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் வெள்ளியன்று மாலையிலேயே ராஜ்தானி அரங்கிற்கு  வந்துவிட்டோம். வந்தவுடன் தற்காலிகமாக ஒதுக்கியிருந்த அறைக்கு சென்று கார்த்திக் மற்றும் ஆனந்த்  என்ற விழாவிற்கு வந்திருந்த தோழர்களிடம் எங்களை அறிமுகம் செய்துகோண்டு உரையாடிக்கொண்டிருந்தபோது, அங்குவந்த  மீனாம்பிகா அக்காவைதான் முதலில் சந்தித்தோம். பிறகு விஜய் அண்ணாவை அவர் அறிமுகம் செய்துவைத்தார். வேலைகள் எதாவது இருக்கிறதா என்று கேட்டதற்கு , எல்லாம் முன்னரே நிர்ணய்த்தாகிவிட்டது , சிறப்பு அழைப்பாளர்கள் வந்தால் மட்டும் கூட்டிக்கொண்டு வருவதற்கு ஆட்கள் தேவைப்படும் என்றார். எங்களுக்கு கோவையின் சாலைத்தடங்கள் பரிட்சயம் இல்லாத காரணத்தால் அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டோம் என்று சொல்லிவிட்டார்.

விழாவிற்கான ஒவ்வொரு பொருட்களும் வந்துகொடிருந்தது. அதனை விஜய் அண்ணா மேற்பார்வையிட்டுக்கொண்டு இருந்தார். விழாவில் கலந்துகொள்ள வெவ்வேறு ஊர்களில் இருந்து ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரையும் செந்தில் அண்ணாவும் மீனாம்பிகா அக்காவும் வழிநடத்திக்கொண்டிருந்தனர். அன்றைய இரவு, அங்கு அரங்கு காவலராக பணிபுரியும் தர்மராஜ் அய்யாவிடம் உரையாட வாய்ப்பு கிடைத்தது. அவர் தான் ஒரு பொற்கொல்லர் , நகைக்கடை வைத்திருந்தவர் என்றும் எல்லாம் காலமாற்றத்தால், தன்னைவிட்டு விலகிவிட்டது என்றும்  மக்களின் மனநிலையும் வெகுவாக மாறிவிட்டதாலும் அதிலிருந்து இந்த காவல் பணிக்கு வந்துவிட்டதாகவும் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.

காலத்தின் வேகத்திற்கு தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளாமல் இருந்தாலும், அதன் வடிவத்தை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் வேலை செய்யாமல் இருந்தாலும்,  அது எத்தகைய பாரம்பரியமாக இருந்தாலும் மிக எளிதில் புறந்தள்ளப்படும் என்று அன்றைய இரவே கற்றல் நிகழ ஆரம்பித்துவிட்டது.

சனியன்று காலை நண்பர்களுடன் உங்களையும் தேவதேவன் அய்யாவை சந்தித்தது, சுனில் அண்ணா, அரங்கசாமி அண்ணா அறிமுகம் மற்றும் புதிய நண்பர்களின் அறிமுகம் என அன்றைய நாளின் தொடக்கமே வாழ்வின் பெரிய பரிசாக இருந்தது. பிறகு வந்திருந்த நண்பர்கள் எல்லோரும் காலை உணவு முடித்துவிட்டு வந்து அரங்கை தயார் நிலையில் வைத்திருந்தோம். அரங்கை காணவந்துகொண்டிருந்த பெரும்பாலோருக்கும் என்னை தெரிந்திருந்தது. உங்கள் எழுத்துக்கள் மூலம் அனைவருக்கும் நூற்பின் வேலை தெரிந்திருக்கிறது என்ற புரிதலே  பொறுப்புகளின் முக்கியதுவத்தை எனக்கு உணரவைத்தது.

நிதர்சனத்தில் இருக்கும் நடைமுறை சிக்கல் வரும்போது அதன் மூலம் ஏற்படும்  மனச்சோர்வை குக்கூ சிவராஜ் அண்ணனுடன் பகிரும்போதெல்லாம் அண்ணனிடம் வரும் பதில், தம்பி நாம் இன்னும் பிறவா குழந்தைகளின் எதிர்காலத்திற்கான கனவிற்கு உழைத்துக்கொண்டிருக்கிறோம், அது யாருக்கும் புரியாது புரிந்தவர்கள் அருகில் இருக்கும்போது உனதுவேலையின் தன்மை உனக்கு புரியும் என்பார். அந்த தரிசனத்தை விஷ்ணுபுர நிகழ்வில் நான் உங்கள் எழுத்துக்களை நேசிக்கும் வாசகர்களின் நலம் விசாரிக்கும் வார்த்தைகளில் இருந்து கண்டடைந்தேன்.

முதல் சேலை எடுத்ததே  வங்க எழுத்தாளரான அனிதா அக்னிஹோத்ரி அம்மாதான். நூற்பை பற்றி அரங்சாமி அண்ணா சொன்னதும் அவர் மகிழ்ந்துபோய் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதும், பிறகு அவர் ஒடிசா, வங்காளம் போன்ற பகுதிகளில் தான் வேலை செய்துகொண்டு வரும் கைத்தறி நெசவாளர்களைப்பற்றியும் பகிர்ந்துகொண்டதோடு மட்டுமில்லாமல், எந்த சூழல் வந்தாலும் அகவலிமையோடு அதன் குரலுக்கு செவிமடுத்து செயல்படு  என்று நம்பிக்கையூட்டியது பாக்கியமாக கருதுகிறேன்.

நிகழ்வு அனைத்திலும் முழுமையாக கலந்துகொள்ள இயலவில்லை. ஸ்டாலின் ராஜாங்கம் மற்றும் தேவிபாரதி அண்ணாக்கள் பேசும்போது  அமர்ந்து கேட்டதில் இருவரின் உரையிலும் எனக்கு மைய அச்சு காந்தியமாகவே இருந்தது. எந்த நண்பர்களுடனும் உரையாடினாலும் இறுதில் சென்று சேர்வது காந்தியமாகவே இருந்தது. கோவை ஞானி அய்யா, புவியரசு அய்யா, தேவிபாரதி அண்ணா, ராஜ் கௌதமன்  அய்யா என நிறைய மனிதர்களை நேரில் சந்தித்து உரையாடுவதற்கான தருணங்களாகவே அன்றைய நாள் இருந்தது.

எப்படியாவது  விழாவிற்குள் உரையாடும் காந்தியையும், தன்மீட்சியையும் புத்தகவடிவில் உங்களிடம் ஒப்படைத்துவிடவேண்டும் என்று மிகுந்த சிரத்தை எடுத்துக்கோண்டோம். சிரமமான சூழலிலும் நண்பர்களின் ஒத்துழைப்பில் ஓவியம், வடிவமைப்பு, கிருஷ்ணம்மாள் அம்மாவிடமிருந்து கடிதம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து அச்சுக்கு அனுப்பிவிட்டோம். புத்தக கணகாட்சியின் வேலை இருந்ததால் வாய்ப்பு குறைவு என்றே சொல்லிவிட்டார்கள். எல்லோரும் காத்துக்கொண்டிருந்த வேலையில் சனியன்று மாலை புத்தகங்கள் தயாராகிவிட்டது என்று பழனி அண்ணாவுக்கு அழைப்பு வந்ததும் எல்லோரும் பெரும் மகிழ்ச்சி. பிறந்த குழந்தையின் முகத்தை முதன் முதலாக காணும் தாயின் உணர்வைப்போன்று இருந்தது அனைவருக்கும். பிறகு அடுத்தநாள் காலை உங்களிடம் எப்படி கொடுக்கலாம் என்று தயாராகிக்கொண்டிருந்தோம்.

ஞாயிறு அன்று உங்களிடமும் தேவதேவன் அய்யாவிடமும் இரண்டு புத்தகங்களையும் கரம் சேர்த்தது எல்லா நண்பர்களுக்கும் பெரும் நிறைவாகவே இருந்தது. அது விழா முடிந்து வீடு செல்லும் வரை அந்த நிறைவே எல்லோரின் மனதிலும் நிலையாக இருந்தது. நிகழ்விற்கு முந்தைய நாள் மாலையில் இருந்து நான்காம் நாள் காலை வரை நிகழ்ந்த தருணங்கள் ஒவ்வொன்றும் வாழ்வைவிட்டு அகலாத சம்பவங்களாகவே நிலைத்திருக்கும் . நீங்கள் ஆதிசங்கரர் பற்றிய உரை ஒன்றில், உங்களின் சிறுவயதில் வயலுக்கு அழைத்துச் சென்ற அந்த பெரியவர் விவசாய நிலத்தில் பறவை ஒன்று நடந்துசென்றபோது உணர்ந்த அதே தரிணசத்தைதான் என்னால் சிறிதளவேனும் உணர முடிந்தது. நான் அதுவாகவே இருந்திருந்தேன்.

இரண்டு நாட்கள் மனம் நிறைந்த தோடு மட்டுமில்லாமல் வீட்டிற்கு சென்றால் அப்பாவின் ஆதங்கம் நிறைந்த கேள்விக்கு பொறுப்பான பதிலாக சொல்லும் அளவிற்கு ஆடைகளும் வந்திருந்த வாசகர்களின் கனிசமான வீடுகளுக்கு சென்றிருக்கிறது என்பதை சொல்லவும் முடிந்தது. உங்களுக்கும், செந்தில் அண்ணா, மீனாம்பிகா அக்கா, அரங்கசாமி அண்ணா, விஜய் அண்ணா, ஈரோடு கிருஷ்ணன் அண்ணா மற்றும் விழா சிறப்பாக நடந்து முடிவதற்கு உதவிய அனைத்து தோழமைகளுக்கும் இந்த இடத்திற்கு என்னை கொண்டு சேர்த்த குக்கூவின் நல் அதிர்வுகளுக்கும் வாழ்வின் என்றென்றைக்குமான அகம் நிறைந்த நன்றியை இருகரம் கூப்பி  தலைவணங்கி தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றியும்… இறைவேண்டலும்…

சிவகுருநாதன் சி,

நூற்பு கைத்தறி ஆடைகள்,

+919578620207.

அன்புள்ள சிவகுரு,

விழாவில் விற்பனை எப்படி இருக்கும் என்ற ஐயம் இருந்துகொண்டிருந்தது. ஆனால் ஏதோ ஒருவகையில் இலட்சியவாதத்தில் நம்பிக்கைகொண்ட ஒரு சுற்றம் அங்கே வரும். அவர்களுடன் உங்களுக்கு தொடர்பு உருவாகவேண்டும் என்று விரும்பினேன். அது நிகழ்ந்ததில் மகிழ்ச்சி

ஜெ

துகள்

குக்கூ .இயல்வாகை – கடிதம்

துகள் -கடிதம்

நம்பிக்கை -கடிதங்கள் 3

நம்பிக்கை -கடிதங்கள்-2

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்விழா: கடிதங்கள்-16
அடுத்த கட்டுரைகண்டத்தட்டுகள் உரசிக்கொள்ளுதல்