காளிகர் நடுங்கிக்கொண்டிருந்தார். கர்ணன் அவர் தோளைப்பற்றி “பெருந்தச்சரே, நான் அங்கநாட்டரசனாகிய கர்ணன்” என்றான். அவர் அவன் நெஞ்சை வருடி “பொற்கவசம்… மணிக்குண்டலங்கள். நான் அவற்றை பார்த்தேன்” என்றார். அவருக்குப் பின்னால் மூச்சிரைக்க ஓடிவந்த மாணவர்கள் “நிலையழிந்துவிட்டார், அரசே…” என்றார்கள். கர்ணன் “தாழ்வில்லை… அவர் சற்றே ஓய்வெடுக்கட்டும்” என்றான். “நீங்கள் தெய்வமைந்தன். கதிரவன் எனக்கு இன்று அதை காட்டித்தந்தான். அரசே, சொல்க! அடியவன் ஆற்றவேண்டிய பணி என்ன?” என்றார் காளிகர்.
கர்ணன் சொல்லெடுப்பதற்குள் மறித்த காளிகர் “நீங்கள் எவரென்று நான் கேட்கப்போவதில்லை. உங்கள் ஆசிரியர் எவரென்றும் கூறவேண்டியதில்லை. அச்செய்யுளை கூறுங்கள்” என்றார். கர்ணன் அவர் காதில் அந்தச் செய்யுளை உரைத்தான். அவர் மும்முறை அதை கேட்டபின் கைகூப்பி சற்று நேரம் அமர்ந்திருந்தார். அவர் முகம் அச்சமோ பெருவியப்போ கொண்டதுபோல மாறியது. “ஆம், இது விண்கதிரின் மைந்தனுக்கு சொல்லப்பட்டது. இந்த வில்லை ஏந்துபவன் வானாளும் மண்நிகழும் தேவன் என வெல்லற்கரியவன்” என்றார். கர்ணன் “அதை எழுப்புக, பெருந்தச்சரே! நான் ஆவன செய்கிறேன்” என்றான்.
“அனைத்தையும் நான் சொல்லியாகவேண்டும்” என்றார் காளிகர். “அரசே, மானுடர் இயற்றும் பெருஞ்செயல்கள் அனைத்துமே தேவர்களுக்கான அறைகூவல்களே. ஏனென்றால் பெருஞ்செயலாற்றுபவர்கள் அதனூடாக தேவர்களாகிறார்கள். ஆகவே தேவர்கள் பெருஞ்செயல்களை பெருந்தடைகளென ஆக்குகிறார்கள்.” அவர் விழிகள் நிலையழிந்து உருண்டன. சிவதர் “ஆனால் பெரியவர்கள் பெருஞ்செயல்களை ஆற்றாதொழியலாகாது” என்றார். காளிகர் அதை கேளாதவராக “பெருவேள்விகள், அரிய கலைப்பொருட்கள், மெய்மைசூடிய நூல்கள் கோடி கைகளைப் பெற்று வானுக்கும் பாதாளங்களுக்கும் விரிகின்றன. அங்கே துயிலும் தெய்வங்களை தொட்டெழுப்புகின்றன. ஒளியின் தெய்வங்களை மட்டுமல்ல இருளின் தெய்வங்களையும்தான். அருளுடன் எழுகின்றன சில. பெருவஞ்சம் கொண்டு அணைகின்றன சில” என்றார்.
“அறிக, அவற்றின்மேல் நமக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை! நாம் இயற்றும் பெருஞ்செயல்களால் விளைவது ஆக்கமா அழிவா என்றுகூட நம்மால் சொல்லிவிட இயலாது” என்றார் காளிகர். “இச்செய்யுள் விண்ணில் இருந்து எரிகல் என அடியிலாத ஆழத்திற்கு பாயும். அங்கு யுகங்களாக துயின்று கிடக்கும் மணிகர்ணன் என்னும் தொல்நாகத்தை தொட்டெழுப்பும். ஒரு தெய்வத்தை தொட்டெழுப்புவதென்பது எளிய நிகழ்வு அல்ல. எழுப்பிய தெய்வத்தை மீண்டும் அங்கு சென்று அமைய வைப்பதுவரை இங்கு நிகழும் அனைத்திற்கும் பொறுப்பேற்பதுதான் அது.”
கர்ணன் “பெருந்தச்சரே, இது என் ஆசிரியர் எனக்களித்த ஆணை. அதை நான் மறுநோக்கு செய்யும் தகுதி கொண்டவனல்ல” என்றான். காளிகர் “ஆம், அவர் இதை எண்ணியிருப்பார் எனில் நாம் மேலும் சொல்சூழ்வதில் பொருளில்லை” என்றார். கர்ணன் “இந்த வில் மண்ணில் நிகழட்டும். தன் தருணத்திற்காக இது எங்கோ காத்திருக்கிறது” என்றான். “நானும் அதையே உணர்கிறேன். ஏழாம் உலகில் சின்னஞ்சிறு கணையாழி என சுருண்டுறங்கும் மணிகர்ணனின் கனவிலிருந்து எழுந்த அதன் நிழல்வடிவம் இங்கே புவியில் இருந்துகொண்டிக்கிறது. ஓர் இடத்தை செயல்சென்று தொடுவதற்கு முன்னரே அதற்கான விழைவு சென்று சேர்ந்துவிடுகிறது. நீங்கள் பிறந்தநாள் முதல் அந்த நிழல்நாகம் உங்களுடன் உள்ளது” என்றார் காளிகர்.
கர்ணன் சற்று திகைத்தபின் “இளமையில் என்னைத் தொடர்ந்து ஓர் அரசநாகம் வந்ததாகவும் எப்போதும் என்னைச் சூழ்ந்து அது இருந்துகொண்டிருந்ததாகவும் என் அன்னையும் தந்தையும் சொன்னதுண்டு. இளமையில் நானும் பலமுறை ஒரு பெருநாகத்தை கண்டிருக்கிறேன். அதனுடன் இயல்பாக விளையாடியிருக்கிறேன். என் கனவுகளில் அதை அணுக்கமாக நோக்கியிருக்கிறேன். அது எப்போதும் என்னுடன் உள்ளது என்று உணர்ந்துகொண்டிருக்கிறேன்” என்றான். “அது மணிகர்ணனேதான். அவனை நாம் எழுப்பவிருக்கிறோம்” என்றார் காளிகர். கர்ணன் “அவன் எழுக!” என்றான். காளிகர் “மானுடர் அனைவருமே தெய்வங்களின் கருவிகள். நீங்கள் இயற்றவேண்டியவை சில உள்ளன போலும்” என்றார்.
காளிகர் தன் மாணவர்களுடன் சம்பாபுரிக்குத் தெற்கே கங்கைக்கரையில் அமைந்த சிறுகுடிலில் தங்கி அந்த வில்லின் வடிவத்தை உருவாக்கத் தொடங்கினார். அதன் ஒவ்வொரு வரியையும் அவர்கள் ஒருங்கமைந்து தொன்மையான அனுஷ்டுப் சந்தத்தில் பாடினர். அவர்கள் குரல்களில் ஒத்திசைவு உருவாகவில்லை. எவரோ ஒருவரின் குரல் உந்தி எழுந்தது. எவரோ ஒருவர் ஒருகணம் பிந்தினார். சொல்லிச்சொல்லி ஒற்றைக்குரலென அது ஆயிற்று. பின்னர் சீவிடுகளின் ரீங்காரம்போல் ஒற்றை ஒலியென்று அது மாறியது. அவர்கள் அனைவருக்கும் பொதுவான உள்ளமொன்று அங்கே எழுந்து வந்தது. அதில் மானுடர் உளம் திரள்கையிலெல்லாம் தோன்றும் சொல்லரசி எழுந்தருளினாள். ஒருவர் பிறிதொருவரிடம் சொல்லாமலேயே அச்சொற்கள் என எழுந்த பொருளை, அப்பொருளென வெளிப்படும் பிறிதொன்றை, அப்பிறிதொன்று தொகையான முழுதொன்றை கண்டுகொண்டனர்.
பதினெட்டு நாட்களில் அந்த வில்லின் வடிவை அசையா, அழியா பொதுக்கனவென அவர்கள் எண்மரும் ஒரே தருணத்தில் கண்டனர். குடிலுக்கு தென்மேற்கே கொட்டகை அமைத்து அங்கே களிமண் இறுக்கி சுண்ணம் பூசி உருவாக்கப்பட்ட களத்தில் முழு வடிவில் அதை வரைந்தனர். பன்னிரு நாட்கள் ஒவ்வொரு பகுதியையாக வரைந்து அதை முழுமை செய்தனர். அந்தப் பன்னிரு நாட்களும் அவர்கள் ஒருவேளை உணவுண்டு இருநாழிகை விழிதுயின்று ஒருசொல்லும் உரையாடாமல் நோன்பிருந்தனர். வரைந்து முடித்தபின் தங்கள் கைகளினூடாக எழுந்த அவ்வடிவை நோக்கியபடி அவர்கள் திகைத்து நின்றனர். காளிகர் அதை அகவிழியால் கண்டு “தெய்வங்களே!” என்று கைகூப்பினார். தன் கைவிரலைக் கிழித்து ஏழு சொட்டு குருதியை அந்த மண்டலவரைவின்மேல் சொட்டி மானுடர் உளம்குவியுமிடத்தில் எல்லாம் குருதிகோரி வந்து காத்திருக்கும் இருட்தெய்வங்களை விடாய்நிறைவு செய்து திருப்பி அனுப்பினார்.
வில்லுக்கான வாஸ்துமண்டலம் வரைந்து முழுமையாக்கப்பட்ட செய்தியை காளிகரின் கடைமாணவன் வித்யுதன் வந்து அரசவையில் அமர்ந்திருந்த கர்ணனிடம் சொன்னான். “அரசே, இது தெய்வக்காட்சி என்று சொல்கிறார்கள். புலரியில் அணியிலிக் காட்சி என தெய்வத்தை வணங்கச் செல்கையில் கடைபிடிக்கப்படும் அனைத்து முறைமைகளும் கடைபிடிக்கப்பட்டாகவேண்டும். முதற்புலரியில் நீராடி, ஒற்றை உடையணிந்து, ஈரம் விலகாத உடலுடன் நீராடிய இடத்திலிருந்தே கூப்பிய கைகளுடன் தாங்கள் அதை பார்க்க வரவேண்டும். மலர்களும் நீரும் அன்னமும் படைத்து அதை வணங்கவேண்டும்” என்றான். “எந்தத் தெய்வத்தையும் போலவே அதுவும் உங்களை ஏற்று உங்கள் கையில் வந்தமையவேண்டும்.”
“பொருள்களில் தெய்வங்கள் எழுவது அரிதாகவே நிகழ்கிறது. பொருள்களில் திகழும் தெய்வம் தன்னை எல்லையின்மையை ஒடுக்கி ஓர் எல்லைக்குள் நிறுத்திக்கொள்ளும் பெருங்கனிவை நமக்கென அடைகிறது. அக்கனிவு அது நமக்களிக்கும் அருள். அதற்கென நாம் அதை வழிபட்டாகவேண்டும். வில்லில் எழுந்துள்ள அத்தெய்வம் உங்கள் கையில் அமர்ந்து உங்கள் எண்ணத்திற்கேற்ப செயல்படும். உங்கள் எதிரிகளை வெல்லும். அணுக்கர்களை காக்கும். உங்கள் தன்னறம் துலங்க வைக்கும். விழிப்பிலும் துயிலிலும் ஒழியாத் துணையென உடனிருக்கும். உங்கள் உடலின் ஒரு நீட்சியென்றாகும். நீங்கள் உங்களை அதுவென உணரும் தருணமும் அமையும்” என்று வித்யுதன் சொன்னான்.
“ஆயினும் அது தெய்வமென உங்களை ஆண்டு, அதுவே நீங்கள் என உணரவைத்து முழுமையளித்து அழைத்துச் செல்லும்பொருட்டு மண் திகழ்வதென்றும் நீங்கள் உணர்ந்தாகவேண்டும். அதுவே உங்களுக்கு நிறைவளிப்பது” என்றான் வித்யுதன்.
கர்ணன் புலரியில் கங்கையில் நீராடி சிவதரும் ஹரிதரும் இருபுறமும் வர காளிகரின் ஈச்சஓலைக் குடிலுக்குள் சென்றான். நீள்வடிவில் போடப்பட்டிருந்த ஓலைக்குடிலுக்குள் நீள்சதுர களத்தில் வெண்சுண்ணத்தால் அவ்வில்லின் வடிவம் வரையப்பட்டிருந்தது. அதன்மேல் கரி படிந்த நூல் அடித்து இழுத்து உருவாக்கப்பட்ட நேர்கோடுகள் மெல்லிய வலையென பரவியிருந்தன. அவற்றில் அவ்வில்லின் ஒவ்வொரு பகுதியின் விசைக்கணக்குகளும் வளைவுக் கணக்குகளும் எடைக் கணக்குகளும் சிவந்த மையால் குறிக்கப்பட்டிருந்தன. அது ஒரு கட்டட வரைபடம் என்று தோன்றியது. அதை வில் என உளம்கொள்ள இயலவில்லை.
குடில்முற்றத்திலிருந்து அவனை வரவேற்று அழைத்துச் சென்ற காளிகர் அதைக் காட்டி “உருவம் காட்டியுள்ளது. இனி பருப்பொருளில் எழவேண்டும்” என்றார். கர்ணன் அதனருகே சென்று கைகூப்பி நின்றான். “மலரீடு செய்க, அரசே!” என்று காளிகரின் மாணவன் நிமிஷன் சொன்னான். அவன் நீட்டிய தாலத்தில் இருந்து குருதிப்பூக்களை அள்ளி அதன் மேலிட்டு எட்டுறுப்பும் நிலம்தொட விழுந்து வணங்கினான். “இறைவடிவே, என் மூதாதையர் இயற்றிய தவப்பயன் என்றாகுக! என் குலதெய்வமென்று எழுக! இங்கே என் கொடிவழியினருக்கு அருளி அமர்க!” என வேண்டிக்கொண்டான்.
திரும்பிச் செல்கையில் நீர்ப்பாவையென அவ்வில்லின் தோற்றம் அவன் உள்ளே அலையடித்தது. நினைவிலிருந்தும் விழித்திரையிலிருந்தும் கலைந்து கலைந்து விலகியது. சிவதரிடம் “அதை ஒரு கட்டடம் என்றோ நகரம் என்றோதான் உளம்கொள்ளத் தோன்றுகிறது. வில்லென்று எண்ணவே தோன்றவில்லை” என்றான். அவர் “வில்லை இவ்வாறு வரைபடமாக இதற்குமுன் பார்த்ததில்லை” என்றார். கர்ணன் “அந்த வில்லை நான் அறியேன். அப்பாடலின் பொருளைக்கூட உணர்ந்ததில்லை. சொல் சொல்லென அதை நினைவு வைத்திருந்தேன், அவ்வளவுதான்” என்றான். “அன்று என் ஆசிரியரிடம் சொன்னேன். அதை எவ்வாறு நான் கையாள இயலும், அதைப் பயில்வதற்கு கற்றுக்கொடுப்பவர் எவர் என்று. ஆசிரியர் என்னிடம் அதில் தெய்வமெழுந்துள்ளதென்றால் அதுவே உன் ஆசிரியனும் ஆகுக என்றார்.”
காளிகரும் அவர் மாணவர்களும் அந்த வில்லை உரிய உலோகக் கலவையில் வார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் கோரிய உயர்நிலை இரும்பு தென்னிலமாகிய எருமைநாட்டிலிருந்து அங்கு கொண்டு செல்லப்பட்டது. கலிங்கத்து ஈயமும் அகழ்ந்தெடுத்த கரியும் வந்துசேர்ந்தன. ஈயமும் கரியும் சேர்த்து இரும்பை உறையடுப்பிலிட்டு உருக்கினார்கள். உறையடுப்பு செய்யும் குயவர்கள் சம்பாபுரிக்கு அப்பால் விதிஷாவிலிருந்து கொண்டு வரப்பட்டனர். அவர்கள் மண்ணுக்கடியில் செங்கல்லடுக்கி உருவாக்கிய உறையடுப்புக்குள் இரும்பும் கரியும் சேர்த்து உருக்கி குழம்பாக்கி அதில் ஈயம் சேர்த்தனர். வெள்ளீயமும் காரீயமும் நிலவெள்ளியும் அதில் கலக்கப்பட்டன.
அங்கிருந்து வந்த ஹரிதர் “தெய்வங்கள் உண்ணும் எதையோ அவர்கள் சமைப்பது போலிருக்கிறது. உருகிய இரும்பு அனற்குழம்பென்றாகிறது. அதில் தூய கரி சேர்க்கப்படும்போது கரியும் ஒளியாவதை பார்க்க முடிகிறது. செங்குழம்பில் ஈயம் உருக்கி சேர்க்கப்படுகையில் விந்தையானதோர் மணம் எழுகிறது” என்றார். சிவதர் “ஒவ்வொரு உலோகமும் விடாய் கொண்டதென்று தோன்றுகிறது. உருகுகையில் அவை நீர் நீர் என கூச்சலிடுகின்றன” என்றார். கர்ணன் சென்று நோக்கியபோது முதல் உறையடுப்பின் விளிம்புகள் பளிங்கென ஆகிவிட்டிருப்பதை கண்டான். “மிகைவெம்மை ஒரு தவம். அவற்றை மாசகற்றி ஒளிகொள்ளச் செய்துவிட்டது” என்றான் காளிகரின் மாணவனாகிய சம்விரதன்.
“அரசே, ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு இயல்பு கொண்டது. இரும்பு உறுதியும் நெகிழ்வும் கொண்டது. கரி முற்றிலும் நெகிழ்வற்றது. ஈயம் முற்றிலும் நெகிழ்வானது. இரும்பின் நெகிழ்வை ஈயம் பெருக்குகிறது. அதன் உறுதியை கரி பெருக்குகிறது. அவையிரண்டும் இரும்பை இரு திசைகளிலாக நெருக்குகின்றன. எங்கோ ஓர் இடத்தில் இரும்பு தன் உச்சநிலையை கண்டடைகிறது. இங்கு உருவாக்கப்பட்டுள்ள அனைத்து உருக்குப் பொருட்களும் அந்நிலையின் முன்பின் என அமைந்த ஏதோ தருணத்தில் நின்றுவிட்டவை. அந்த உச்சதருணத்தில் எழும் இரும்பே எங்கள் தேடல். அதை முன்பு நாங்கள் ஓரிரு முறை கண்டிருக்கிறோம். அதை மீண்டும் அடைவதென்பது ஊழ்க உச்சத்தை சென்றடைவது போலத்தான். அதற்கான வேண்டுதலையும் முயற்சியையும் மட்டுமே நாம் செய்ய முடியும். தெய்வங்கள் அதை நிகழ்த்தவேண்டும்” என்றார் காளிகர்.
இரும்பின் உச்சம் நிகழ்ந்துவிட்டதென்பதை சம்விரதன் வந்து அவனிடம் சொன்னான். “பதினெட்டு நாட்களாக உலோகக்கூட்டு கொதித்து கலவைநிலை மாறிக்கொண்டே இருந்தது. இன்று அமைந்துவிட்டது.” கொட்டகைக்குச் சென்று அங்கிருந்த காளிகரை வணங்கி கர்ணன் “எவ்வண்ணம் இரும்பு முழுமைகொண்டதை அறிந்தீர்?” என்று கேட்டான். “அதில் பொன் எழுந்தது” என்று காளிகர் சொன்னார். “அரசே, மண்ணில் பொன்னே அனைத்து உலோகங்களுக்கும் உச்சம். இங்குள்ள ஒவ்வொரு உலோகமும் வெவ்வேறு நிலையில் பொன்னை நோக்கி சென்று நின்றுவிட்டவை. எனவே இங்குள்ள ஒவ்வொன்றையும் ஏதோ ஓர் வழியில் பொன்னென்றாக்க முடியும். அதையே ரசக்கலை என்கின்றனர் முன்னோர்.”
“மானுடரில் முனிவர்போல், விலங்குகளில் சிம்மம்போல், பறவைகளில் கருடனைப்போல் இங்குள்ள ஒவ்வொரு பொருளிலும் ஒளி உறைகிறது. இருளே வடிவான கரியில் கூட ஏதோ ஒரு வெப்பத்தில் ஒளியெழுகிறது. இங்குள்ள அனைத்துமே ஊழிப்பொழுதில் ஒளி மட்டுமே என ஆகிவிடுகின்றன. நேற்று எங்கள் கலவையில் பொன் எழுந்தது. இருளில் கதிர் எழுவதுபோல. எங்கள் உலோக உலைக்கூடம் புலரியில் நிறைந்தது. எங்கள் ஒவ்வொருவரின் உடல்களும் பொன்னென்றானதுபோல் தழல் சுடர்விட்டன. ஐயமே இன்றி அனைவரும் அறிந்தோம் எங்கள் உலோகம் முழுநிலையில் எழுந்துவிட்டதென்று.”
“இங்குள்ள ஒவ்வொரு மானுடரும் உளமெழுந்து தேவர்களாகிவிட முடியும் என்பதுபோல் ஒவ்வொரு பொருளும் பொன்னென்றாகி விடக்கூடும். பின்னர் அங்கிருந்து இறங்கி வந்து இங்குள நிலையில் ஒன்றை தனக்கென தெரிவு செய்து அமையவேண்டும். நேற்று அந்த வில்லை வார்த்துவிட்டோம். இன்று அதை குளிர வைத்துக்கொண்டிருக்கிறோம்” என்றார் காளிகர். “எப்போது அது குளிர்ந்து உருக்கொள்ளும்?” என்று கர்ணன் கேட்டான். “அது அந்த உலோகத்தால் முடிவெடுக்கப்படுவது. ஒவ்வொரு அணுவிடையாக அதன் வெப்பத்தை குறைத்துக்கொண்டிருப்போம். இன்று முழுக்க அது கொதிக்கும் உலையிலேயே இருக்கும். நாளை முதல் ஒவ்வொரு நாழிகைக்கும் மிகச்சற்று என அதன் எரியை குறைப்போம். தொடும்படி குளிர்வதற்கு நூற்றெட்டு நாட்களாகும். அதற்கு மேலும் ஆகக்கூடும்” என்றார் காளிகர்.
ஒவ்வொரு நாளும் அவ்வில்லைப்பற்றிய செய்திகளை கேட்டுக்கொண்டிருந்தான் கர்ணன். “குளிர்ந்தமைகிறது. கருமை கூடுகிறது” என்று காளிகர் சொன்னார். “பிறந்த குழந்தை விழி திறந்து இவ்வுலகை நோக்கி அறிவதுபோல் காற்றையும் தண்மையையும் உணர்கிறது. இங்குளோம் இவ்வாறுளோம் என்று அறிந்துகொண்டிருக்கிறது.” பின்னர் அவரே மாணவர் சூழ அவைக்கு வந்து சொன்னார் “அரசே, வில் ஒருங்கிவிட்டது. நீங்கள் அதை வந்து பார்க்கலாம்.” கர்ணன் “அதற்கான முறைமைகள் என்ன?” என்றான். “இம்முறை நீங்கள் அதை பீடத்தில் முழுதுருக்கொண்டு கொலுவீற்றிருக்கும் தெய்வத்தை பார்க்க வருவதுபோல் அணுக வேண்டும்” என்றார் காளிகர்.
“மணிமுடி சூடி செங்கோலேந்தி அரசணி கோலத்தில் செல்க! அரசியரும் அமைச்சரும் அகம்படியினரும் உடனெழுக! முழவுகளும் கொம்புகளும் சங்கும் மணியும் இலைத்தாளமும் முழங்கட்டும். நூறுவகை படையல்கள், ஐவகை பூசனை முறைகள் நிகழ்க! இக்குடியின் பெருந்தெய்வம் ஒன்று சிலை கொண்டுவிட்டது என்று குடிகள் அறியட்டும்” என்றார் ஹரிதர். கர்ணன் கைகூப்பியபடி எழுந்து காளிகரின் கால்களைத் தொட்டு வணங்கி “அடியவன் அளிக்கவேண்டியதென்ன என்று சொல்லுங்கள்” என்றான். “என் குடியினர் நூற்றெண்மர் கலிங்கத்திலுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இல்லங்களும் ஆண்டுக்கு நூறுகலம் நெல்லும் நாளுக்கு நாழி நெய் என வந்தமையும் ஆநிரைச் செல்வமும்” என்றார் காளிகர். மீண்டும் வணங்கி “கோரியதற்கு பத்துமடங்கு அளிக்கிறேன். வாழ்த்துக!” என்றான் கர்ணன்.
அரசனின் ஆணைப்படி சம்பாபுரி விழவுக்கோலம் பூண்டது. காளிகர் வகுத்தளித்த நற்பொழுதில் கர்ணன் கங்கையில் நீராடி அரசணிக்கோலம் பூண்டு தன் அரசியரும் அமைச்சரும் படைத்தலைவர்களும் குடித்தலைவர்களும் அகம்படியினருமாக அரண்மனையிலிருந்து அணியூர்வலமாக கிளம்பினான். சம்பாபுரியின் அரசத்தெருக்களினூடாக தென்மேற்கு எல்லையில் அமைந்த காளிகரின் சோலையை அணுகினான். அங்கே அந்த வில் புதிதாக கூரை மாற்றப்பட்ட கொட்டகையில் மரப்பீடத்தின் எட்டு பிடிகளின்மேல் பொத்தி மேல்நோக்கி வளைத்து வைக்கப்பட்டிருந்தது.
முந்தையநாள் இரவிலேயே காளிகரும் அவரது மாணவர்களும் கலிங்கத்து முறைப்படி இடமுறைப் பூசனைகளை முடித்து திமில் பெருத்த வெண்எருதொன்றை பலியிட்டு அக்குருதியால் அதை ஏழு முறை நீராட்டியிருந்தனர். செம்மலர் மாலைகள் சூடி அது பீடத்தில் காத்திருந்தது. கர்ணன் தன் இரு அரசியருடனும் மைந்தருடனும் கைகூப்பி கொட்டகையின் முகப்பில் வந்து நின்றான். காளிகர் அருகே வந்து அவன் முன் தலைவணங்கி “விஜயம் தங்கள் வருகைக்காக ஒருங்கியிருக்கிறது. அதன் அருள் தங்கள் தோள்களுக்கும் குடிகளுக்கும் முடிக்கும் அமைக!” என்று வாழ்த்தினார். தலைவணங்கி கர்ணன் அந்த வில் முன் சென்று நின்றான். அவனுக்கு எழுந்த முதல் எண்ணம் அவன் அறிந்த அனைத்து விற்களையும் போலத்தான் அது இருக்கிறது என்பதுதான். அத்துடன் அதன் பருமனையும் நீளத்தையும் பார்த்தபோது அதன் எடை எண்ணியதைவிட மிக அதிகமாக இருக்கக்கூடுமென்றும் தோன்றியது. அதை நடுவளைவைப்பற்றி நிலை அமையச்செய்து நாணேற்றி அம்பு தொடுப்பதென்பது பெரும் தோள்வல்லமையுடன் இயற்றப்படவேண்டியது. அவனால் அது இயலுமென்றாலும்கூட மிக விரைவில் அவன் கைகள் சலித்துவிடக்கூடும்.
காளிகர் அவன் அருகே நின்றார். அவன் அவரிடம் “மூங்கில் போன்ற வடிவிலேயே இதை அமைப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்றான். தன் மெய்யான ஐயத்தை கேட்கத் தயங்கினான். “அரசே, தொல்காலத்து மானுடர் மூங்கிலையே வில்லென்று பயன்படுத்தினார்கள். அவ்வடிவிலிருந்தே எழுந்தவை அனைத்து விற்களும். நமது மூதாதையர் கைகளில் நினைவென படிந்த மூங்கில்வில்லே நம் கனவுகளில் வாழ்கிறது. ஆகவே மூங்கில் வடிவிலன்றி வேறெந்த வடிவிலும் வில்லை வார்க்க இயலாது” என்றார் காளிகர். கர்ணன் “நன்று… ” என்றான். ஆனால் மூங்கில் எடையற்றது என்று தன்னுள் சொல்லிக்கொண்டான்.
பூசகர்கள் மலர்த்தாலங்களுடன் வந்தனர். சம்பாபுரியின் குடிவழக்கப்படி அந்த வில்லுக்கு முறைப்படி பூசெய்கை நிகழ்ந்தது. கர்ணன் மலரிட்டு அதை வணங்கினான். பல்லியங்கள் ஆர்த்தன. சூழ்ந்திருந்தோர் வாழ்த்துக் குரலெழுப்பினர். பெருமுரசின் ஒலிகேட்டு சம்பாபுரியெங்கும் வாழ்த்தொலி முழங்கியது. மக்கள் களிவெறி கொண்டு கூச்சலிட்டார்கள். பெருந்திரளாக நகரிலிருந்து கிளம்பி வில்லை வழிபடுவதற்காக அரிமலர் கனிநிறைத் தாலங்களுடன் வந்துகொண்டிருந்தனர். அரசன் வழிபட்டு அகன்றதும் ஏழு நிரைகளாக அவர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். பகலெல்லாம் அங்கே வழிபாட்டுக்கான முரசொலி எழுந்துகொண்டே இருந்தது.
அன்று திரும்பிவருகையில் கர்ணன் சிவதரிடம் சொன்னான் “எனது ஐயமும் தயக்கமும் மேலும் பெருகியிருக்கிறது, சிவதரே. இந்தப் பெருவில்லை என்னால் கையாள இயலுமா என்று தெரியவில்லை. போர்க்களத்தில் அம்புக்கு விசையாகும் நிமிர்வும் எடையும் வில்லுக்குத் தேவை. ஆனால் உடன்நிற்பது அறியாமல் கையில் அமையும் எடையின்மையும் அதற்கு இன்றியமையாதது. இவர்கள் தங்கள் ஆணவ நிறைவுக்கென ஓர் அணிவில்லை படைத்துள்ளார்களோ என்று தோன்றுகிறது.” சிவதர் “நானும் அதையே எண்ணினேன். ஆயினும் என்ன? இத்தகையதோர் வில் இங்கு சமைக்கப்பட்டிருப்பதே வெற்றிதான். சம்பாபுரியில் எழும் புத்தெழுச்சியை பார்க்கையில் ஒருமுறைகூட இது போருக்கென எழவில்லையெனினும் நன்றே என்று தோன்றுகிறது” என்றார்.
உடன் வந்துகொண்டிருந்த ஹரிதர் “ஆம், இங்கு நம் குடியின் போர்த்தெய்வமாக படைக்கலப் புரையில் இது அமையட்டும்” என்றார். “ஒவ்வொரு நாளும் நமது மலரும் நீரும் பெற்று நம் வெற்றிக்கும் திறலுக்கும் அடையாளமாக இங்கு துலங்கட்டும். நமக்கென்று போர்த்தெய்வம் எழுந்தது நன்றே. ஒருவேளை பரசுராமர் தங்களுக்கு அருளியதே அதுதான் போலும்” என்றார். கர்ணன் அவர்கள் இருவரையும் பார்த்த பின் “வில் என்பது களத்திலேயே பொருள்கொள்கிறது” என்றான். சிவதர் “இது சிவதனுஸ். இது முடிவெடுக்கட்டும் எந்தக் களத்தில் எப்படி எழுவதென்று” என்றார்.
விஜயம் அமைந்திருந்த கொட்டகையை மரத்தாலான ஆலயமாக மாற்றிக் கட்டுவதற்கு கர்ணன் ஆணையிட்டான். ஒவ்வொருநாளும் இருமுறை அதற்கு மலரிட்டு நீர் காட்டி பூசனை செய்வதற்குரிய அந்தணரையும் அமைத்தான். பரசுராமர் அமைத்த அந்த நுண்மொழிச்செய்யுள் பதினெட்டு வரிகளாக பிரிக்கப்பட்டு பதினெட்டு அந்தணர்குடிக்கு பயிற்றுவிக்கப்பட்டது. காளிகரின் ஆணைப்படி பதினெட்டு சொற்களுக்கு ஒன்று வீதம் எடுத்து அவ்வரிகள் அமைக்கப்பட்டன. பதினெட்டு அந்தணர்களும் ஒருவருக்கொருவர் எந்த உறவும் கொள்ளலாகாதென்றும் ஒருமுறையேனும் நுண்சொல் பெற்ற அந்தணர் இன்னொரு நுண்சொல் பெற்ற அந்தணரை காணலாகாதென்றும் வகுக்கப்பட்டது. ஒரு அந்தணர் குடி அந்த வில்லுக்கு மூன்று மாதம் பூசனை செய்யவேண்டும். அதன்பின் அடுத்த அந்தணர் குடி பூசனைக்கு எழும். அந்த நுண்சொற்களைக் கோத்து மீண்டும் முதற்செய்யுளாக ஆக்கும் கணக்கு ஒரு செய்யுளென யாக்கப்பட்டு சம்பாபுரியின் அரசகுடிக்கும் அதை உருவாக்கிய சிற்பியர் குடிக்கும் மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்டது.
விடைபெற்றுச்செல்கையில் காளிகர் சொன்னார் “அரசே, ஓராண்டு அந்த வில் தொடப்படாது அங்கிருக்கட்டும். அதன் பின் ஒருநாள் நீங்கள் அதை கையில் எடுக்கலாம். அதற்கான ஆணையை அதுவே அளிக்கும். அதற்காக உளம் தீட்டி காத்திருங்கள்.” வழிப்பரிசில்கள் பெற்று காளிகரும் மாணவர்களும் கலிங்கத்திற்கு கிளம்பிச்சென்ற பின்னர் கர்ணன் அவ்வில்லையே பலநாட்கள் எண்ணிக்கொண்டிருந்தான். பின்னர் அஸ்தினபுரிக்குச் சென்று துரியோதனனிடம் அவைகூடினான். தென்மகதத்திற்கு படையெடுத்துச் சென்றான். மீண்டு வந்தபோது அந்த வில்லை முற்றாகவே மறந்துவிட்டிருந்தான். சம்பாபுரி அதற்கு வகுக்கப்பட்ட மாறா திசைவழியில் சென்று கொண்டிருந்தது. அதன் பலநூறு தெய்வங்களில் ஒன்றென அந்த வில் மலரும் நீரும் பெற்று ஆண்டுக்கொரு பலிகொண்டு அமர்ந்திருந்தது.