நீராட்டறையிலிருந்து திரும்புகையில் அங்கநாட்டுப் படைகள் குருக்ஷேத்ரத்தை நோக்கி கிளம்புவதற்கான போர்முரசு மிக அண்மையிலென ஒலிக்கக் கேட்டு கர்ணன் திடுக்கிட்டான். மாளிகைக்கு நேர் கீழே முற்றத்தில் அவ்வோசை எழுவதாகத் தோன்றி அவன் சாளரக்கட்டையைப் பற்றி எட்டிப் பார்த்தான். கீழே இரண்டு தேர்கள் புரவிகள் கட்டப்பட்டு காத்து நின்றிருந்தன. பொறுமையிழந்த புரவிகள் காலுதைத்து உடல்மாற்றிக்கொள்வதனால் தேர்கள் குலுங்கி மணியோசை எழுந்தது. ஏவலர்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்க சிற்றமைச்சர் பார்த்திபர் கைகளை வீசியபடி ஆணைகளை இட்டுக்கொண்டிருந்தார். அப்பால் இரு ஏவலர் ஏதோ பொருட்களுடன் வந்தனர். அவற்றை தேர்களில் ஏற்றிவைக்கும்போது “ஏற்று! உம்!” என்று கூவினர்.
சிவதர் அவனுக்குப் பின்னால் நின்று “கோட்டைமுகப்பில்தான் முரசு ஒலிக்கிறது. ஆனால் கோட்டை மிகச் சிறிது” என்றார். கர்ணன் திரும்பிப்பார்த்து தலையசைத்தான். “நமது படையினர் அனைவரும் அந்தியிலிருந்தே ஒருங்கி ஆணைக்காக காத்திருக்கிறார்கள். இன்றிரவு கிளம்ப வேண்டியிருக்கும் என்பதில் எவருக்கும் ஐயமிருக்கவில்லை. நான் மாலையில் படைமுகப்பிற்குச் சென்றபோது பெரும்பாலானவர்கள் கவசங்களை அணிந்து கால்குறடுகளைக் கட்டி கையில் படைக்கலங்களுடன் இருப்பதை பார்த்தேன். எதற்காகக் காத்திருந்தாலும் அது நிகழ்கையில் நிறைவே எழுகிறது” என்றார்.
கர்ணன் தன் கூந்தலை கையால் அறைந்து பின்னாலிட்டான். “நானும் கிளம்பவேண்டும்” என்றான். “பால்ஹிகரும் கௌரவரும் சற்று ஓய்வெடுத்தனர். அவர்கள் புரவிகளிலேயே வந்திருக்கிறார்கள். திரும்பிச்செல்ல விரைவுத்தேரை ஒருக்க ஆணையிட்டிருக்கிறேன்.” கர்ணன் தலையசைத்தான். “நீங்கள் செல்வதற்கும் விரைவுத்தேர்…” என்று சொன்ன சிவதர் நிறுத்தி தயங்கி “ஜைத்ரத்திலேயே செல்லவிருக்கிறீர்களா?” என்றார். “ஆம்” என்றான் கர்ணன். சிவதர் கூர்ந்து நோக்கிவிட்டு “ஆம், நன்று” என்றார். கர்ணன் “நான் அங்கே நுழைவது எந்தையின் மைந்தனாக” என்றான். சிவதர் உளம் பொங்க “ஆம்” என்றார்.
கர்ணன் “நீங்கள் அங்கநாட்டுக்கே திரும்பிச்செல்லுங்கள், சிவதரே. என் மைந்தனுடன் இருங்கள்” என்றான். சிவதர் ஒன்றும் சொல்லவில்லை. கர்ணன் அவரை நோக்காமல் திரும்பிக்கொண்டு “எதுவும் நம்மிடையே எஞ்சவில்லை என்று எண்ணுகிறேன். சென்ற பிறப்பின் கடனை இன்று தீர்த்துவிட்டோம்” என்றான். சிவதர் மெல்ல முனகினார். கர்ணன் பெருமூச்சுவிட்டு உடலில் ஒரு மெல்லிய நிலையின்மை அசைவென வெளிப்பட நின்றான். “தங்கள் கவசங்களும் படைக்கலங்களும் எடுத்து வைக்கப்பட்டுள்ளன” என்று சிவதர் சொன்னார். அச்சொற்களினூடாக நிலைமீண்டு “இங்கிருந்து கிளம்பி நேராகவே படைமுகப்பிற்குச் செல்வது போலிருக்கும் என்று எண்ணுகின்றேன்” என்றார்.
கர்ணனும் மீண்டு “விரைவுத்தேரில் நான் அவர்களுடன் முன்னால் செல்கிறேன். நமது படைகள் பின்னால் வந்து சேர்ந்துகொள்ளட்டும்” என்றான். “ஆம், அதற்குத்தான் தேர்களை ஒருக்கி நிறுத்தியிருக்கிறேன்” என்று சிவதர் சொன்னார். கர்ணன் தன் சால்வையை எடுத்து நன்றாகச் சுற்றியபடி சிறிய கதவைத் திறந்து உடலை மிகவும் குறுக்கி அப்பால் சென்று அங்கு காத்து நின்றிருந்த அணிச்சேவகர்களிடம் “உம்” என்று கைவீசி ஆணையிட்டான். அவர்கள் சிறிய பீடத்தை இழுத்துப் போட்டனர். அவன் அதில் அமர்ந்த பின்னர் பெருமூச்சுடன் கால்களை நீட்டிக்கொண்டான். அவர்கள் மெல்லிய குரலில் தங்களுக்குள் பேசிக்கொண்டு பணியை தொடங்கினர்.
சிபிரத்தின் காவலர்தலைவனின் மாளிகை சிற்றுடலர்களுக்காகவே கட்டப்பட்டது போலிருந்தது. அறைகளும் வாசல்களும் தூண்களும் அனைத்துமே சிறியவை. சில அறைகளில் இரு கைகளையும் விரித்து இருபக்கச் சுவர்களையும் அவனால் தொடமுடிந்தது. அவன் முன்னிருந்த ஆடி கூட மிகச் சிறியது. அவன் முகமும் மார்பும் மட்டுமே அதில் தெரிந்தன. பொருட்களை எடுத்துப் பரப்பிய பின் அணியர்கள் விரைவாக அவனை ஒருக்கத்தொடங்கினர். கொம்புச்சீப்பால் அவன் குழலைக் கோதி பின்னால் எடுத்து மூன்று பட்டைகளாக்கி ஒன்றுடன் ஒன்று முடைந்து சுருட்டி கொண்டையாக்கினர். அதன் மீது செம்பட்டு ஒன்றைக் கட்டி நாடாவால் இறுக்கினர். அவன் கைகளுக்கு கடகங்களும் முழங்கைக்காப்பும் தோள்வளையும் அணிவித்தனர்.
தன் விரல்களில் அரசக்கணையாழிகளை ஒவ்வொன்றாக அணிவிப்பதை அவன் பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் கூறுவதற்குள்ளாக அவன் எழுந்து நிற்க இருவர் பட்டுக் கச்சையை அவன் இடையில் சுற்றிக் கட்டினர். இடையாடையை மடித்து தற்றுடுத்து பின்னால் செருகிக் கட்டி அதன் மீது சல்லடத்தை அணிவித்து அதன் கொக்கிகளை இறுக்கினர். அவர்கள் பேழையிலிருந்து திறந்து எடுத்து இட்ட இரும்புக்குறடுகளின் மேல் கால்களை வைத்து ஏறி நின்றான். அதன் தோல் பட்டைகளை அவர்கள் இழுத்துக் கட்டினார்கள். குறடுகள் அவனை மேலும் உயரமாக்கின. அணி முடிந்ததும் அவர்கள் தலைவணங்கி விலகினர். அவன் ஆடியில் தன்னை நோக்கினான். அங்கே கதிரவனின் மைந்தன் தோன்றினான்.
சிவதர் அறைவாயிலில் நின்று “படைக்கல அறையில் விஜயம் தங்களுக்காகக் காத்திருக்கிறது, அரசே” என்றார். கர்ணன் அவரை சொல்லமையா விழிகளுடன் திரும்பி நோக்கினான். அணியர் இறுதியாக எடுத்து அணிவித்த பொற்பட்டு மேலாடையை தோளில் சுற்றி கைகளில் பற்றிக்கொண்டு சிறுவாயிலினூடாக உடலை தணித்து மறுபக்கம் சென்றான். சிவதர் அவனைத் தொடர்ந்து வந்தார். இடைநாழியில் நடக்கையில் மரத்தரையில் அவனது இரும்புக்குறடுகள் எழுப்பிய ஒலி அக்கட்டடத்தின் அனைத்துச் சுவர்களையும் அதிரவைத்தது. படிகளில் அவன் இறங்கியபோது மரப்பலகைகள் விரிசலிட்டு முனகின.
கூடத்தில் அவனுக்காக அங்கநாட்டின் படைத்தலைவர்கள் எழுவரும் காத்து நின்றிருந்தனர். அவனைக் கண்டதும் தலைவணங்கினர். கர்ணன் அவர்கள் ஒவ்வொருவரையாக பார்த்துவிட்டு வஜ்ரசீர்ஷனிடம் “நமது படைகள் குருக்ஷேத்ரத்திற்குச் சென்று காந்தாரர் சகுனியிடம் வருகையறிவிப்பு செய்யவேண்டும். அவரது ஆணை தலைகொள்ளப்படட்டும்” என்றான். “ஆணை” என்றான் வஜ்ரசீர்ஷன். அவர்கள் தலைவணங்கி நிரையாக வெளியே சென்றனர்.
சிவதர் சற்று முன்னால் சென்று அவனுக்காக காத்திருந்தார். அவன் நடந்து அவரை அணுகியதும் “இவ்வழி, அரசே” என்று முன்னால் சென்றார். இடைநாழிகள் ஒடுங்கலானவை. படைக்கலப் புரை மிகச் சிறிதாக இருந்தது. அந்த மாளிகை முன்பு எப்போதோ சிறிய வேட்டைக்குடிலாக கட்டப்பட்டிருந்தது. பின்னர் அது காவல்மாளிகையாக மாற்றப்பட்டபோதுகூட அதன் அடிப்படைக் கட்டடத்தை அப்படியே தக்கவைத்திருந்தார்கள். சேறு குழைத்துக் கட்டப்பட்ட பருமனான யானைப்பள்ளைச் சுவர்களால் அதன் கீழ்நிலையின் தென்மேற்கு மூலையில் அமைந்திருந்த படைக்கலப் புரையின் நுழைவாயில் சிறிய பெட்டியொன்றின் மூடி போலிருந்தது. சிவதர் அதை இழுத்துத் திறந்து உள்ளே கைகாட்டி விலகி நின்றார்.
உள்ளே எரிந்த நெய்ச்சுடரின் வெளிச்சம் செம்புகைபோல தெரிந்தது. கர்ணன் அந்நிலை வாயிலின் படியைத் தொட்டு சென்னிசூடிய பின் முழந்தாளிட்டு அவ்வறைக்குள் நுழைந்தான். அங்கே அவனால் எழுந்து நிற்க முடியாதென்று தெரிந்தது. அறைக்குள் ஒவ்வொரு படைக்கலத்திலும் ஒன்று வீதம் படைக்கலங்கள் அனைத்தும் பூசெய்கைக்கு வைக்கப்பட்டிருந்தன. செம்பட்டு விரித்த உயரமற்ற பீடங்களில் செந்தூரமும் குங்குமமும் பூசப்பட்ட கொம்புப்பிடிகொண்ட குத்துவாளும், நீள்வாளும், கதையும் அங்குசமும் கோடரியும் பாசமும் காலையில் பூசெய்கைக்கு இட்ட செம்மலர்கள் சூடி பந்த ஒளிகொண்டு அமைந்திருந்தன. எறிவேலும் குத்துவேலும் மாலைசூடி நின்றிருந்தன.
அவற்றுக்கு அப்பால் சுவருக்கு இணையாக அவனுடைய பெருவில்லான விஜயம் இருந்தது. அது அந்த அறையை விடவும் நீளம் கொண்டிருந்தது. ஆகவே சற்றே வளைத்து இரு சுவர்களிலும் நுனிகள் முட்ட அதை நிறுத்தியிருந்தனர். படகுபோல அதன் வளைவு தெரிந்தது. அதற்கப்பால் பலாமரக் குடத்தில் கடைந்த துர்க்கையின் சிறிய சிலை மரப்பீடத்தின்மேல் பதிட்டை செய்யப்பட்டிருந்தது. தொன்மையால் கருமைகொண்டு மெழுகென மின்னிய முகத்தின் வளைவுகளிலும் விழிகளிலும் பந்தங்களின் ஒளித்துளிகள் இருந்தன. அன்னை பதினாறு கரங்களிலும் படைக்கலங்களுடன் அஞ்சலும் அருளலும் காட்டி அமர்ந்திருந்தாள். அவள் காலடியில் செம்மலர்கள் குவிக்கப்பட்டிருந்தன. இருபுறத்திலும் எரிந்த நெய்விளக்கின் சுடர்கள் அங்கிருந்த காற்றசைவின்மையால் இரு மலரிதழ்கள்போல் நிலைகொண்டிருந்தன.
கர்ணன் துர்க்கையை சில கணங்கள் நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் கைகூப்பி வணங்கி நெற்றி நிலம்தொட தொழுதான். மலர்களில் ஒன்றை எடுத்து தன் கொண்டையில் பட்டுத் துணிச்சுற்றுக்கு மேல் செருகினான். இடையிலிருந்து குறுவாளை எடுத்து இடக்கை கட்டைவிரலை கிழித்து மூன்று சொட்டுக் குருதியை அன்னையின் காலடியில் இருந்த சிறிய பலிபீடத்தில் சொட்டி வணங்கிவிட்டு சிறு சிமிழில் இருந்த குங்குமக் குழம்பை நாகவிரலால் தொட்டு தன் நெற்றியிலணிந்தான். விஜயத்தை மும்முறை தொட்டு வணங்கி கையில் எடுத்துக்கொண்டு தவழ்வதுபோல அந்தச் சிறிய வாயில் வழியாக வெளிவந்து நிமிர்ந்து நின்றான்.
பெருநாகம் புற்றில் இருந்து வருவதுபோல் விஜயம் முதலில் வந்தது. சிவதர் அறியாது பின்னடைந்தார். கர்ணன் வெளிவந்து உடல் நீட்டி நின்று வில்லை நிலைநிறுத்தி அதைப் பற்றி சற்று வளைத்தான். சிவதர் “தாங்கள் அதை எடுத்துச் சிலகாலமாகிறது, அரசே” என்றார். கர்ணன் அப்போதுதான் அவ்வெண்ணத்தை அடைந்தவன்போல அந்த வில்லை பார்த்தான். பரசுராமர் அவனுக்கு அளித்தது அது. எரிவிழித்தெய்வம் முன்பு முப்புரத்தை எரிக்க எழுந்தபோது அவருக்காக தேவசிற்பி விஸ்வகர்மன் படைத்தது. மெய்முனிவர் நெற்றிவிழி திறந்து அவனை நோக்கிய கணத்தில் கண்டது. அவர்கள் அதை சொல்லென்றாக்கினர். பிருகுவிலிருந்து ஜமதக்னியினூடாக அது பரசுராமருக்கு வந்தது. பரசுராமர்களில் திகழ்ந்தது. பதினெட்டு வரிகள் கொண்ட ஒரு பாடலாக அவர் அந்த வில்லை அவனுக்கு அளித்தார்.
அன்று கோதையின் நீர்ப்பரப்பு தொலைவில் அந்திஒளியில் அனல் கொண்டிருந்தது. தலைக்குமேல் இருந்த இலைத்தழைப்பில் பறவைகளின் முழக்கம் நிறைந்திருந்தது. கண்கூசவைத்த ஒளிவழிவின்மீது வணிகப்படகுகள் பாய்களை விரித்து எழுந்தமைந்து நிரையாக சென்றுகொண்டிருந்தன. கர்ணன் ஆசிரியரின் கால்களை அழுத்தி வருடிக்கொண்டிருந்தான். நீர்வெளியை நோக்கிக்கொண்டிருந்த அவர் தன் கையை அவன் தலையில் வைத்து “வெல்க! புகழ் கொள்க!” என்று வாழ்த்தினார். அவன் அதை புரிந்துகொள்ளாமல் திகைப்புடன் நோக்க அவர் தன்னிலை மீண்டு “நீ விடைபெறும் காலம் வந்துவிட்டது” என்றார். அவன் தலைவணங்கினான். “இன்னும் சில நாட்கள்… நீ கிளம்பும் தருணம் அமையும்…” என்றார் பரசுராமர்.
முந்தைய பதினைந்து நாட்களாக அவன் இரவிலும் பகலிலும் அவருடனே இருந்தான். வழக்கத்திற்கு மாறாக அவர் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. முந்தைய நாள் அந்தியில் கோதையின் கரையில் வழக்கமாக அவர் துயிலும் மரத்தடியில் அவன் இலைப்படுக்கை விரித்து காத்து நின்றபோது எவரிடமென்றில்லாமல் “நாளை மறுநாள் சித்திரை முழுநிலவு. ஆசிரியரிடமிருந்து மாணவர்கள் இறுதிச் சொல்லை பெற்றுக்கொள்ள உகந்தது” என்றார். அவன் அவர் சொல்வதை புரிந்துகொள்ள முயன்றான். அவர் மேலும் ஒரு சொல்லும் உரைக்காமல் இலைப்படுக்கையில் படுத்து மூச்சொலியுடன் தசைகளை எளிதாக்கிக்கொண்டார். வில்லை மடியில் வைத்தபடி அவன் சற்று அப்பால் வேர் மடிப்பில் அமர்ந்து இருளென ஓடிக்கொண்டிருந்த கோதையை பார்த்தான்.
அப்போதுகூட அங்கிருந்து அஸ்தினபுரிக்கு திரும்பிச்செல்லும் எண்ணம் அவனுக்கு எழவில்லை. தனக்கொரு ஊரும் குடியும் இருப்பதையே அவன் மறந்துவிட்டிருந்தான். எண்ணம் ஓட ஓட சில நாட்களுக்குப் பின் அங்கிருக்கப் போவதில்லை என்ற எண்ணம் மட்டுமே அவனிடம் எஞ்சியிருந்தது. கோதையை பார்த்துக்கொண்டிருந்தபோது இந்த நதியை எத்தனை ஆண்டுகளாக இப்படி பார்க்கிறோம் என்றுதான் உளம் ஓடியது. அது நோக்க நோக்க பொருள் பெருகும் ஒன்றாக இருக்கவில்லை. புவியிலுள்ள அனைத்துப் பொருள்களும் நோக்குபவனின் எண்ணங்களையும் உணர்வுகளையும் தாங்கள் பெற்றுக்கொண்டு பொருட்செறிவு கொள்கின்றன. இல்லங்கள் நோக்கு கொள்கின்றன. மரங்கள் உரையாடத் தொடங்குகின்றன. மலைகள் சொல்லின்மையாலேயே உளம் நிறைக்கின்றன. ஆனால் நதிமட்டும் அது கொண்டிருந்த அனைத்து உட்பொருட்களையும் ஒவ்வொரு நாளுமென இழந்துகொண்டிருந்தது.
தெற்கே வந்து முதன்முறையாக அதை பார்த்தபோது உளம் பொங்கி கைகூப்பி அதை வணங்கினான். குனிந்து அதன் நீர்த்துளிகளை எடுத்து தன் தலைமேல் விட்டுகொண்டான். பெருங்கவிஞர் பாடிப் பரவிய நதி. முனிவர்கள் ஊழ்கத்தில் அறிந்தது. வேதத்தில் வாழ்வது. ஆனால் அப்போது வெறும் கிழக்கு நோக்கிய பெருக்காக மட்டுமே இருந்தது. ஓடுநீரல்ல, படகுநிரைகள் செல்லும் பெரும்பாதை அல்ல, உணவளிக்கும் அன்னையும் அல்ல, வெறும் விசை. தன்னை மீறி தன்னில் நிகழும் விசையொன்றுக்கு ஆட்பட்டது. இரவெல்லாம் அவன் அதை பார்த்துக்கொண்டிருந்தான். இருளுக்குள்ளும் நீர் ஒழுகிச்செல்லும் அசைவு தெரிந்தது. வணிகப்படகுகளின் செவ்விளக்குத் தொகைகளின் மேல் காற்று கடந்துவருவதன் அலைவு. படகுகளின் பாய்கள் புடைத்து கட்டுகளை இழுத்து விம்மி படபடக்கும் ஓசை.
புலரியில் முதலில் பாய்களின் வெண்பரப்புகள் மீதுதான் வெளிச்சம் எழும். இருட்பரப்பில் அவை வெண்தீற்றல்களென துலங்கி தெரியும். பின்னர் நீருக்குள் அகவெளிச்சம் ஊறத் தொடங்கும். கோதை தெளிந்துகொண்டிருந்தபோது “ஓம்!” எனும் ஒலியுடன் பரசுராமர் விழித்தெழுந்தார். இரு கைகளையும் கூப்பி எழுந்தமர்ந்து விழிகளை மூடி ஊழ்கத்திலிருந்தார். எழுந்து நேராகச் சென்று கோதையை அணுகி நீரை அள்ளி மும்முறை தலைக்கு மேல் விட்டபின் விழிகளைத் திறந்து அதை பார்த்தார். அன்று முழுக்க அவனிடம் அவர் ஒரு சொல்லையும் சொல்லவில்லை. எப்போது அவர் தன்னிடம் இறுதிச் சொல்லை உரைக்கப் போகிறார் என்று காலையில் இருந்தே அவன் எதிர்பார்த்தான். வழக்கம்போல அவர் காட்டுக்குள் சென்று பறவைகளை வீழ்த்தி சமைத்துத் தரும்படி அவனிடம் அளித்தார். உச்சிப்பொழுதில் பேராலமரத்தினடியில் ஓய்வெடுத்தார். பின்னர் மாலை நீராடி பூசெய்கையையும் ஊழ்கத்தையும் முடித்தார். அவன் இருப்பதையே மறந்துவிட்டிருந்தார்.
மீண்டும் கோதையின் கரைக்கு வந்தபோது அவர் கைசுட்டி நீர்வெளிக்கு மேலெழுந்த வெற்று வானத்தில் முழுநிலவு தோன்றியிருப்பதை காட்டினார். மாலை வெளியில் இளம் பாளைக்குருத்தில் வெட்டப்பட்ட தாலம்போல அது தெரிந்தது. அவர் கூறுவதை புரிந்துகொண்டு அவன் வணங்கி எழுந்ததும் கிழக்கு நோக்கி அமர்க என்று பரசுராமர் கையசைவால் சொன்னார். அவன் முழந்தாளிட்டு கிழக்கு நோக்கி அமர்ந்ததும் “உன் தந்தையை எண்ணிக்கொள்க!” என்றார். அவன் மறுநாள் அத்திசையில் பொற்கரங்களுடன் மணிமுடி சூடி அருணன் தெளிக்கும் ஏழுபுரவித் தேரில் தோன்றும் நாளவனை விழிகளுக்குள் நிறுத்தி இமை மூடினான். பரசுராமர் முழந்தாளிட்டு அமர்ந்து தன் இரு கைகளாலும் வாய் மூடி அவன் காதருகே உதடு கொண்டுவந்து அந்தப் பாடலை சொன்னார். இருமுறை அதை திரும்பச்சொல்லி “மூவகையில் பாடம் செய்து கொள்க!” என்றார். அவன் அதை ஜட, த்வஜ, கன முறையில் சொல்லிக்கொண்டான்.
“இது முக்கண்ணன் வில். முப்புரம் எரித்த பேராற்றல். இதுவே உன் வில்லென்றாகுக! பாதாளத்தின் அரசனாகிய வாசுகியின் மைந்தன் மணிகர்ணன் இதன் பருவடிவென்றெழுவான். என்றும் உன் முதற்துணைவனாக அவனே அமைவான். அறிக, அறத்தின் பொருட்டு நிலைகொள்கையிலேயே வீரனின் வில் பொருள் கொள்கிறது! எளியோர்க்கு அருள்வதாக, அறிவர்க்கு பணிவதாக, பெண்டிருக்கு அரணாக இது நிலைகொள்ளட்டும். அச்சத்தால் வில்லெடுக்கையில் நீ முன்னரே தோற்றுவிட்டாய், ஆணவத்தால் வில்லெடுத்தால் பழி சூடிவிட்டாய், விழைவுக்கென வில்லெடுத்தால் துயரை ஈட்டிவிட்டாய், அழியாத அறத்தின் பொருட்டு மட்டும் வில்லெடுப்பாய் என்றால் தெய்வங்களுக்கு இனியவனாவாய். நலம் பெறுக!” என்றபின் அவர் எழுந்து சென்று தன் இலைப்படுக்கையில் படுத்துக்கொண்டார். மேலும் மூன்று நாட்களுக்குப் பின் அவன் அவரிடமிருந்து பிரிந்தான்.
அவன் அங்கநாட்டுக்கு அரசனாக வந்த பின்னர் முதல் முடிசூட்டு விழாவின்போது அந்த வில்லை வார்க்க விழைந்தான். சொல்லில் இருந்து பொருளை வார்க்கும் தச்சர்கள் கலிங்கத்திலேயே உண்டு என்றனர் அமைச்சர். ஹரிதர் கலிங்கச் சிற்பியாகிய காத்யகுலத்துக் காளிகரை அழைத்துவர சிவதரை அனுப்பினார். காளிகர் அகவை முதிர்ந்து, விழிநோக்கு மறைந்து, செவிப்புலனும் அணைந்து கொண்டிருக்கும் நிலையிலிருந்தார். சிவதருடன் அவரும் அவருடைய ஏழு மாணவர்களும் வந்தனர். கர்ணன் அவரைப் பார்த்ததுமே புலன்கள் அணையுந்தோறும் உட்புலன் கூர்கொள்ளும் கலைஞர் அவரென உணர்ந்துகொண்டான். ஆனால் அவருடைய கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. எந்த வினாவையும் உளம்கொண்டு உரிய மறுமொழி அளிக்க அவரால் இயலவில்லை.
பெயரை மட்டுமே அறிந்து கலிங்க நாட்டுக்குச் சென்று அவரை சந்தித்தபோது பெருத்த ஏமாற்றமடைந்த சிவதர் தேடிச்சென்றமையால் வேறுவழியில்லாமல் பரிசுப்பொருட்கள் அளித்து அரசரின் கோரிக்கையை உரைத்து அழைத்து வந்திருந்தார். காளிகரை அவையில் கொண்டுவந்து நிறுத்துவதில் அவருக்கு தயக்கமிருந்தது. ஆகவே அரண்மனைக்கு தெற்கே குறுங்காட்டுக்குள் இருந்த தனி மாளிகையில் எவருக்கும் தெரியாமல் தங்க வைத்து நேராக கர்ணனின் தனியறைக்குள் கூட்டிச்சென்று சந்திக்கச்செய்து அவர் புலன்களை இழந்திருப்பதை உணர்த்திய பின்னர் மேலும் பரிசுகளை அளித்து கலிங்க நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடலாம் என்றே எண்ணம் கொண்டிருந்தார்.
ஆனால் அவர் அதை சென்று உரைத்தபோது கர்ணன் “தனியறையிலா? அது அவருக்கு நாமிழைக்கும் சிறுமையென்றாகிவிடும். தொல்நூல்களில் குறிப்பிடப்படும் காத்ய பெருங்குலத்தைச் சார்ந்தவர் அவர். சூதர் நாவில் திகழும் பெருங்கலைஞர். அவரை அங்கநாட்டு அவையில் குடித்தலைவர் முன்னிலையில் மட்டுமே நான் எதிர்கொள்ளவேண்டும். மணிமுடியும் செங்கோலும் கொண்டு அவரை வரவேற்று அவையமர்த்தி வணங்கி சிறப்பு செய்யவேண்டும். காணிக்கை அளித்த பின்னரே கோரிக்கையை முன்வைக்கவேண்டும். பெருங்கலைஞர்கள் அரசர்களுக்கு மேலான அவைமுறைமைக்கு உரியவர்கள் என்கின்றன நூல்கள். அவர்கள் மயன் அளித்த செங்கோலை முழக்கோல் என கொண்டவர்கள்” என்றான். தன் தயக்கத்தை சொல்ல சிவதரால் இயலவில்லை. அவ்வாறே என்று தலைவணங்கி வெளியேறினார்.
அங்கநாட்டின் பேரவையில் காளிகர் அவை புகுவதை நிமித்திகன் அறிவித்து வாழ்த்தொலிகள் எழுந்தபோது பேரவைக்கு அணுக்கமாக இருந்த சிற்றறைக்குள் நின்றிருந்த சிவதர் வளைந்த உடலை ஒடுக்கி வாயை இறுக்கி தலைநடுங்க அமர்ந்திருந்த காளிகரை அணுகி மெல்ல தொட்டார். காளிகர் எழுந்து “அவை ஒருங்கிவிட்டதா?” என்றபின் தன் சால்வையை சுற்றிக்கொண்டு முழக்கோலை கையிலெடுத்துக்கொண்டார். “மகதமன்னர் ஜெயபாலர்தானே நாம் சந்திக்கப்போகிறவர்?” சிவதர் ஒருகணம் தன்னை கட்டுப்படுத்திக்கொண்ட பின் “அங்கநாட்டரசர் வசுஷேணர்” என்றார். “ஆம், ஆம்” என்றபடி காளிகர் நடுங்கும் காலடிகளுடன் நடந்தார். சிவதர் “அவர் கதிரவனின் மைந்தர். தீர்க்கதமஸின் குடிவழியிலமைந்த முடியைச் சூடியவர்” என்றபடி பின்னால் சென்றார்.
காளிகர் “தீர்க்கதமஸின் குருதி என எவரும் தன்னை சொல்லிக்கொள்ள முடியும்” என்றார். “பாரதவர்ஷத்தின் நிகரற்ற வீரர் அவர் என்கிறார்கள். பரசுராமரின் மாணவர்” என்றார் சிவதர். “அனல்குலத்து அரசர் என்றும் எவரும் தன்னை சொல்லிக்கொள்ள முடியும். அதன்பொருள் அவர் ஷத்ரியர் அல்ல என்று மட்டுமே” என்றார் காளிகர். “ஆனால் நான் வந்தது அவர் அளித்த அந்தக் கணையாழியாலேயே. அதிலிருந்த அருமணியை என்னால் பார்க்கமுடிந்தது. அது மும்முடி சூடிய சக்ரவர்த்திகளும் விழையும் ஒளிகொண்டது…”
சிவதர் அவரை சம்பாபுரியின் பேரவைக்குள் இட்டுச்சென்றார். அவரது தோற்றத்தைக் கண்டதுமே அவையில் வியப்பொலிகளும் கலைந்த சொற்களின் முழக்கமும் எழுந்தன. வளைந்த உடலை காற்றில் மிதக்கவிட்டு காகம்போல் காலடிவைத்து முன்னால் சென்ற காளிகர் ஓசையிலிருந்து அரியணை இருக்கும் திசையை உய்த்துணர்ந்தார். சற்றே தலைவணங்கி “அரசரை வணங்குகிறேன். காத்யகுலத்தைச் சார்ந்த பெருந்தச்சனாகிய காளிகன் நான். அரசரின் அழைப்பின் பேரில் இங்கு வந்தேன்” என்றார். கர்ணன் எழுந்து மூன்று அடி முன்னால் வந்து தன் செங்கோலை சற்றே தாழ்த்தி தலைவணங்கி “சம்பாபுரியின் அரசவைக்கு நல்வரவு, பெருந்தச்சரே. தங்கள் கைத்திறன் இந்நகரை பொலிவுறச் செய்க!” என்றான்.
காளிகர் நோக்கு இழந்திருக்கிறார் என்பதை அவர் உடலிலிருந்து உணர்ந்துகொண்ட அவையினர் அவர் சொற்களைச் செவிகூர்ந்து அமைதியடைந்தனர். கர்ணன் “எங்கள் அவையையும் முடியையும் குடிகளையும் வாழ்த்துக, விஸ்வகர்மரே! எங்கள் காணிக்கைகளைப்பெற்றுக்கொள்க!” என்றான். “காணிக்கைகளைப் பெறுகையில் கொள்ளும் தகுதி தனக்குண்டா என்று முதலிலும் கொடுக்கும் தகுதி மற்றவருக்குண்டா என்று பின்னரும் கருதவேண்டும் என்பது விஸ்வகர்மக் குலவழக்கம்” என்றார் காளிகர். “முதலில் உங்கள் விழைவு என்ன, எதன்பொருட்டு இங்கே என்னை அழைத்துவந்தீர்கள் என்று சொல்லுங்கள்.”
கர்ணன் அருகணைந்து அவர் முன் குனிந்து “மூத்த தச்சரே, எனக்கு என் ஆசிரியர் அளித்த வில்லொன்று சொல் வடிவில் உள்ளது. அதை தாங்கள் பருப்பொருளில் யாத்து எனக்கு அளிக்கவேண்டும்” என்றான். “ஆம், வில் வார்க்கவேண்டும் என்று சொன்னார்கள். அதன்பொருட்டே இங்கு வந்தேன்” என்றார். விழிநோக்கு மங்கியவர்களுக்கே உரியமுறையில் கைகளை மிகையாக அசைத்தபடி “அரசனே, விற்கள் வழக்கமாக ஆறு வகையானவை. மரத்தாலான தார்வம். எலும்புகளாலான அஸ்திகம். ஆமையோடுகளை வகிர்ந்துசெய்யும் குரோதகம். கொம்புகளாலான ஷிர்கம். உலோகங்களாலான லோகிதம். இவற்றைக் கலந்து செய்த மிஸ்ரிதம். அந்த ஆறு விற்களுக்கும் அப்பால் உள்ளவை தெய்வங்களுக்குரியவை. அவற்றை மானுடர் ஏந்தலாகாது” என்று அவர் சொன்னார்.
கர்ணன் “தெய்வ வில்லை ஏந்திய மானுடர் உண்டு” என்றான். “உண்மை, இந்திரப்பிரஸ்தத்தின் அர்ஜுனன் காண்டீபத்தை ஏந்தியிருக்கிறான். முன்பு ராகவராமன் மூவிழியனின் வில்லை ஏந்தினான். பரசுராமர் ஏந்தியது பிறிதொரு சிவக்கோடு. தெய்வவில்லை ஏந்துபவன் தெய்வத்தின் மைந்தன். அவனை தெய்வப்பிறவி என்று கண்டறிந்த ஆசிரியன் ஒருவனால் அந்த வில் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் தெய்வத்தின் மைந்தன் என்று முனிவர்கள் அறுதியிட்டுள்ளனரா?” என்றார் காளிகர். கர்ணன் “தெய்வவில்லொன்றை ஏந்தும் ஆணையை எனக்கு நீங்கள் நன்கு அறிந்த ஆசிரியர் ஒருவர் அளித்துள்ளார்” என்றான்.
காளிகர் தலையை கோணலாகத் திருப்பியபடி “அந்தச் செய்யுளை நீங்கள் ஒட்டுக்கேட்டு அறியவில்லை என்பதற்கோ, மாயத்தால் உளம்புகுந்து உணரவில்லை என்பதற்கோ என்ன சான்று உள்ளது?” என்றார். கர்ணன் தலைவணங்கி “சான்றாண்மைக்கு சான்று அளிக்கவியலாது, தச்சரே. அது விழிக்கூடெனத் துலங்கவேண்டும். சொல்லின்றி அறியப்படவேண்டும். நன்று, நீங்கள் உங்கள் விருப்பம்போல் நாளையே இங்கிருந்து கிளம்பலாம்” என்றான். காளிகர் “நன்று” என்று சொல்லி தலைவணங்கி அவையையும் வணங்கிவிட்டு திரும்பிச்சென்றார். கர்ணன் ஹரிதரிடம் தலையசைக்க அவர் வெளியே சென்று சிவதரிடம் காளிகரை உரிய முறையில் தங்கவைத்து இளைப்பாற்றி உடன்வந்தவர்களுக்கு பரிசிலும் அளித்து திரும்பிச்செல்ல உகந்ததை இயற்றும்படி ஆணையிட்டார்.
மறுநாள் காலை கர்ணன் வழக்கப்படி முற்புலரியில் கங்கைநீராடி கதிரோன் ஆலயத்தில் வழிபட்டு படிகளில் இறங்கி வருகையில் கீழிருந்து இரு மாணவர்களால் கைபிடித்து கொண்டுவரப்பட்ட காளிகர் ஏறிக்கொண்டிருந்தார். அரசனின் வருகையை அறிவிக்கும் சங்கொலியைக் கேட்டு அவரை மாணவர்கள் ஒதுக்கி நிறுத்தினர். காளிகர் மேலே நோக்கியதுமே அதிர்ச்சி அடைந்து “யார் அது? மேலே யார்?” என்றார். மூத்த மாணவனாகிய சந்தீபன் “ஆசிரியரே, அங்கே அரசர் தன் அகம்படியினருடன் வருகிறார்!” என்றான். “செம்மணிக் கவசம் அணிந்திருக்கிறான். மணிக்குண்டலங்கள் ஒளிகொண்டிருக்கின்றன. இளங்கதிரோன் போலிருக்கிறான்!” என்று காளிகர் கூவினார். பின்னர் அவர் உடலுக்கு ஒவ்வாத விசையுடன் “கதிரோனே! விண்ணவனே!” என்று கூவியபடி படிகளில் ஏறி கர்ணனை நோக்கி ஓடினார்.