உரையாடும் காந்தி

gan

 

 

ஒரு நூலகத்தில் காந்தியின் தொகுக்கப்பட்ட நூல்களை பார்ப்பவர் எவரும் துணுக்குறுவார்கள். இந்தியாவில் எந்த ஒரு எழுத்தாளரும் கற்பனைசெய்யக்கூட முடியாத அளவுக்கு எழுதிக்குவித்திருக்கிறார் காந்தி. அரசியல்கட்டுரைகள், அறிக்கைகள்,கடிதங்கள் என. அவற்றில் அரசியல் மட்டுமல்ல மருத்துவம் முதல் பொருளியல் வரை அனேகமாக நவீன வாழ்க்கையின் எல்லா தளங்களையும் தொட்டுச் சென்றிருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் மகத்தான உள்ளங்களில்  ஒன்று காந்தி. வேர்களை வெட்டிவிட்டு எழுந்து பறந்தவர்களின் யுகம் அது. ஆழ வேரூன்றி விழுதுகளையும் ஊன்றி வானுக்கு கைவிரித்தெழுந்த ஆலமரம் காந்தி

 

காந்தி இடைவிடாது உரையாடிக்கொண்டே இருந்தார். பல்வேறு தளங்களில் பலதரப்பட்டவர்களுடன். அந்த உரையாடல் வழியாக அவர் கற்பித்தார், கற்றுக்கொள்ளவும் செய்தார். இந்த இரண்டாவது அம்சம்தான் விந்தையானது. மார்க்சியம் பற்றி பியாரிலாலுக்கும் காந்திக்கும் இடையிலான உரையாடலை வாசித்தபோது எண்ணிக்கொண்டேன், காந்தி இவ்வகையில்தான் கற்றுக்கொள்ள முடியும் என. அவர் வாசகர் அல்ல, ஆனால் பேரறிஞர். காந்தியின் காதுகள் மிகப்பெரியவை, அவை கேட்கும் வல்லமை மிக்க யானையின் காதுகள். ஜே.சி.குமரப்பா முதல் வெரியர் எல்வின் வரை அவருடைய அத்தனை மாணவர்களும் அவருக்குக் கற்பித்தவர்களும்கூட.

 

காந்தியைப்பற்றி அறிவதற்கும் உகந்த முறை உரையாடுவதுதான். விவாதிப்பது அல்ல. விவாதிப்பதில் முந்துவது அறிவு. அறிவென்பது ஆணவத்தின் மாற்றுரு. ஆணவம் அறிவெனத்தோன்றும் அறியாமை. வெற்று விவாதங்களால் உறைந்துபோன கருத்துக்களையே புரிந்துகொள்ளமுடியும். காந்தி போன்று ஒவ்வொருநாளும் கற்றுக்கொண்டு, ஒவ்வொரு செயல்மூலமும் தெளிவடைந்து இறக்கும் கணம் வரை வளர்ந்துகொண்டிருந்த ஒரு பெருநிகழ்வை எவ்வகையிலும் புரிந்துகொள்ளமுடியாது. காந்தியை தன் கைகளால் விவசாயம் செய்யும் ஒருவர் புரிந்துகொள்ள முடியும். ஓர் அரசியல்நிலைபாட்டாளர் புரிந்துகொள்ள முடியாது

 

அவ்வாறு காந்தியைப்பற்றி உரையாடியவற்றின் தொகுதியாக இன்றைய காந்தி என்ற நூல் வெளிவந்தது. காந்தி குறித்த ஐயங்கள் அனைத்துக்குமான விளக்கம்தேடிச்சென்ற பயணம் அது. இணையான வினாக்களுடன் காந்தியை அணுகிய பலருக்கும் அது உதவியாக இருந்தது. அதற்குப்பின் வெவ்வேறு தளங்களில் காந்திபற்றிய உரையாடல்களை நான் நிகழ்த்தினேன். உரைகள், கேள்விபதில்கள், குறிப்புகள் என. அவற்றின் தொகுதி இது

 

காந்திக்குச் செல்லும் பாதையை இந்நூல் தெளிவுபடுத்தும் என நம்புகிறேன். இந்நூலை காந்தி குறித்து பிறிதொரு கோணத்தில் எழுதிவரும் பேரா. அ.மார்க்ஸ் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். அவருடைய கருத்துக்களுடன் முப்பதாண்டுகளாக பெரும்பாலும் அனைத்துத்தளங்களுடன் ஒவ்வாமையையையும் எதிர்ப்பையுமே கொண்டிருக்கிறேன். அதை பலதருணங்களில் உச்சகட்ட விசையுடன் பதிவும் செய்திருக்கிறேன். ஆனால் அவருடைய மானுட உரிமைசார்ந்த களப்பணிகள் மீதான என் மதிப்பை எப்போதும் கூடவே பதிவுசெய்வது என் வழக்கம். தமிழ்க்கருத்துருவாக்கத் தளத்தின் முதன்மைப் பங்களிப்பாளர்களில் ஒருவர் என அவரை எப்போதுமே சொல்லிவந்துள்ளேன்.

 

என் கருத்துக்களுக்காக நான் அ.மார்க்ஸ் அவர்களால் மிகக்கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளேன்.  ஆனால் நான் எவரிடமிருந்தெல்லாம் கற்றுக்கொள்கிறேனோ அவர்களை எல்லாம் என் ஆசிரியர்களாகக் கருதுவது என் வழக்கம், அவர்கள் என்னை அப்படிக் கருதவேண்டிய தேவை இல்லாதபோதிலும்கூட.

 

இந்நூல் அ.மார்க்ஸ் அவர்களுக்கு என் காணிக்கை

 

 

ஜெயமோகன்

 

 

குக்கூ குழந்தைகள் வெளி ( Cuckoo Movement for Children)

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள், காந்தி குறித்து எழுதிய புதுக்கட்டுரைகள் மற்றும் இதுவரை நூலாக்கம் பெறாத காந்தியத்தகவல்கள் ஒன்றிணைந்த புத்தகமாகஉரையாடும் காந்திவெளிவருகிறது. ஒரு சராசரி மனிதன், உலகின் மாபெரும் ஜனக்கூட்டத்தை ஜனநாயகத்துக்கு பழக்கப்படுத்த முடிந்திட்ட நிகழ்வற்புதம் நம் தேசத்திற்கு இருக்கிறது. அதன்பிறகே அச்சராசரி மனிதன் சரித்திரமனிதனாக நிலைபெறுகிறான்.

எதிர்மைகளையும் முன்முடிவுகளையும் தாண்டி காந்தி குறித்து அறியவும், நமக்குள்ளிருக்கும் ஐயங்களையும் அவதூறுகளையும் கடந்து காந்தியையும் அவருடைய மனவழியையும் உள்வாங்குவதற்கான ஒரு கண்திறப்புதான் இப்புத்தகம். மீளமீள நாம் காந்திபற்றி பேசவேண்டியிருக்கிறது. எல்லோருக்குமான காந்தியை நமது சுயத்தடைகளை மீறி விடுதலைப்படுத்த வேண்டியிருக்கிறது. காந்தியம் காட்டும் வழிகளை நம் வாழ்வியலாக அமைத்துக்கொள்ளத் தேவையானத் அகத்துணிவையும் இப்புத்தகம் எழுத்துகள் நல்குமென உறுதிபடச் சொல்ல இயலும்.

தன்னறம் நூல்வெளியின் வாயிலாகஉரையாடும் காந்திஎனும் தலைப்போடு இப்புத்தகம் அச்சடைந்து வெளிவருகிறது. பின்பற்றுதலுக்கு முன்பாக, நாம் காந்திகுறித்து உரையாடவேண்டியுள்ளது; குழப்பமுற்று தெளிவடைய வேண்டியிருக்கிறது. வழிநடத்துதல் மட்டுமல்ல வாழ்ந்துகாட்டலும் அவசியமென மானுடசாட்சியாக மாறிநின்ற அந்த பொதுமனிதனை வரலாற்றடிப்படையில் அணிகியறியும் ஒரு நோக்கு, இப்புத்தகம்வழி திறப்படையலாம்.

உரையாடும் காந்திஜெயமோகன் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பும் நண்பர்கள் கீழுள்ள இணைப்பை அணுகவும்

http://thannaram.in/buy/

தொடர்புக்கு:
9843870059

முந்தைய கட்டுரைஎஸ்.ரமேசன் நாயர் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்?