‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-8

ele1சிவதர் கதவை ஓசையின்றி திறந்து உள்ளே வந்து தலைவணங்கினார். கர்ணன் அத்தனை பொழுதும் தான் அசைவில்லாமல் அமர்ந்திருந்ததை அப்போதுதான் உணர்ந்தான். நெடும்பொழுது அசைவற்றிருந்ததனால் உடற்தசைகளில் எடை கூடி மெல்லிய உளைச்சல் ஏற்பட்டது. விழிகளைத் தூக்கி முகத்தால் என்ன என்று வினவினான். “அஸ்தினபுரியின் அரசதூதர்கள்” என்று சிவதர் சொன்னார். கர்ணன் தலையசைத்தான். “அவர்களின் அரசகுடியிலிருந்து சுபாகுவும் உடன் பூரிசிரவஸும் வந்திருக்கிறார்கள்” என்று சிவதர் சொன்னார்.

பின்னர் இரு எட்டு எடுத்துவைத்து அருகணைந்து “அவர்கள் வந்தது நன்று. அரசகுடியிலிருந்து ஒருவர் வருவார் என்று நான் எண்ணினேன். உடன் அமைச்சர் ஒருவரும் இருக்கக்கூடும் என்றும். பால்ஹிகர் வந்திருப்பது நன்று. நமக்கு அவரிடம் அணுக்கமும் கூடவே அரசருக்கு அரசர் என்ற விலக்கமும் உள்ளது. அமைச்சர்களின் பணிவும் முறைச்சொற்களும் மிகப் பெரிய கவசங்கள் அவர்களுக்கு. பால்ஹிகரிடம் நாம் விழிநோக்கி நேரடியாக பேச முடியும். நாம் பேசுவதன் பொருளும் பொருளுக்கு அப்பாலுள்ள கருதலும் அவருக்கு புரியும்” என்றார்.

கர்ணன் தலையசைக்க “நான் சென்று அவர்களை அழைத்துவருகிறேன். தாங்கள் அரசணி கோலத்தில் அவர்களை எதிர்கொள்ள வேண்டும்” என்றார். கர்ணன் “அது எதற்கு?” என்றான். “தாங்கள் அணிகொள்ள இன்னும் பொழுதில்லை… ஆனால் அரசணிக்கோலமே முறைமை. முறைமையே ஓர் அறிவிப்புதான்” என்றபின் “நான் ஏவலனிடம் தங்களுக்கொரு அணிச்சால்வையை மட்டும் கொண்டு வரச்சொல்கிறேன், அதை அணிந்துகொள்க! இப்போது அது போதும்” என்றபின் மேலும் குரல் தாழ்த்தி “பிற சொற்களை நானே உரைக்கிறேன், அரசே. தாங்கள் என்னை தடுக்கவோ திருப்பவோ மட்டும் செய்யாமல் இருந்தால் போதும்” என்றார்.

கர்ணன் தலையசைத்தபடி விழிதாழ்த்தி இடக்கை சுட்டுவிரலால் மீசையை சுழற்றிக்கொண்டு அமர்ந்திருந்தான். சிவதர் இரண்டு பின்னடி எடுத்து வைத்து கதவைத் திறந்து வெளியே சென்றார். நீர்ப்பாளம் விலகி மூடுவதுபோல கதவு மூடியது. கர்ணன் மீண்டும் அந்த அறைக்குள் தனிமையை உணர்ந்தான். தனிமையை உணரும்போதே மெல்லிய எச்சரிக்கையென அவ்வறைக்குள் பிறிதொரு விழியின் இருப்பை அவன் உணரத் தொடங்குவான். இமையா விழி அது என்று பல கனவுகளில் பார்த்திருந்தான். அறையின் நிழல்களில் கரைந்ததாக அது அங்கிருக்கிறது. அனைத்தையும் அறிந்து ஒரு சொல்லும் இன்றி நோற்றிருக்கிறது.

கர்ணன் எழுந்து நின்று கைகளைத் தூக்கி உடலை நீட்டி சோம்பல்முறித்தான். விரல்களை ஒவ்வொன்றாக விரித்து தசைகளை இறுக்கி நெகிழ்த்தி எளிதாக்கி பெருமூச்சுவிட்டான். கதவை மெல்லத் திறந்து உள்ளே வந்த ஏவலன் தலைவணங்கினான். அவன் கொண்டுவந்த தாலத்தில் பொன்னூல் பின்னப்பட்ட கலிங்கப் பட்டுச் சால்வையும் தலையணியும் இருந்தன. கர்ணன் சால்வையை எடுத்து தன் தோளில் அணிந்து கொண்டான். செம்பருந்தின் இறகு பொருத்தப்பட்ட பட்டுத் தலைப்பாகை அருமணிச் சரங்கள் சுற்றப்பட்டு சூரிய முத்திரையுடன் இருந்தது. அவன் அதை தலையில் அணிந்துகொண்டபின் அறைக்குள் ஆடி ஏதேனும் இருக்கிறதா என்று சுற்றும் பார்த்தான்.

ஏவலன் கதவை சற்றே திறக்க இன்னொரு ஏவலன் உள்ளே வந்து தன் கையிலிருந்த உலோக ஆடியை அவனை நோக்கி காட்டினான். கர்ணன் அருகணைந்து தன் தலைப்பாகையை சீரமைத்து சால்வை மடிப்புகளை நீவிக்கொண்டான். அணிகொண்டதும் நல்லதே என்று தோன்றியது. நெடும்பொழுதாக உறைந்து நின்றிருந்த உள்ளம் சொல்கொண்டது. முகத்தசைகள் விரிசல்விடுவதுபோல உயிர்ப்படைந்தன. ஏவலர் இருவரும் தலைவணங்கி வெளியே சென்றனர். கதவு மெல்லிய ஓசையுடன் மூடியது. தான் பிறிதொருவனாக மாறிவிட்டதாக அவனுக்குத் தோன்றியது. அதுவரை இருந்த உளநிலை முற்றாக மாறியது. ஆடையும் தலைப்பாகையும் எப்படி அகத்தை மாற்ற முடியும்? ஆனால் எப்போதும் அவ்வாறு வெளியிலிருந்து ஒன்று உள்ளிருப்பவற்றை முற்றாக திசை மாற்றி வைக்கத்தான் செய்கிறது.

அவன் பீடத்தில் சென்று அமர்ந்து கைகளை மார்பில் கட்டிக்கொண்டான். வெளியே காலடி ஓசை கேட்கிறதா என்று செவி கொண்டபடி அமர்ந்திருந்தான். மெல்லிய நாடித்துடிப்புபோல் காலடிகளின் ஓசை கேட்டது. கதவை மெல்லத் திறந்து உள்ளே வந்த சிவதர் தலைவணங்கினார். பின்னர் கதவைத் திறந்து வெளியே நின்றிருந்த சுபாகுவையும் பூரிசிரவஸையும் உள்ளே வரும்படி கைகாட்டினார். இருவரும் உள்ளே வந்தனர். பூரிசிரவஸ் முறைப்படி ஏழு அடி எடுத்து முன்னால் வந்து உடல்வளைத்து “அங்கநாட்டு அரசருக்கு பால்ஹிக நாட்டு இளவரசனின் வணக்கம். என் குலம் உங்கள் வாழ்த்துகளால் சிறப்புறுக! அஸ்தினபுரியின் அரசரின் ஆணைக்கேற்ப தங்களிடம் தூது சொல்லும் பொருட்டு வந்துள்ளேன்” என்றான். கர்ணன் வலக்கை தூக்கி அவனை வாழ்த்தி “நலம் சூழ்க! வெற்றி எழுக!” என்று வாழ்த்தினான்.

சுபாகு அதேபோல முறைப்படி தலைவணங்கி “அங்கநாட்டு அரசருக்கு கௌரவ இளவரசனும் அஸ்தினபுரியின் அரசர் துரியோதனனின் இளையோனும் தார்த்தராஷ்டிரனுமாகிய சுபாகுவின் வணக்கம். என் தமையனின் ஆணைப்படி தங்களிடம் தனிச்சொல்லொன்று உரைக்கும்படி பணிக்கப்பட்டுள்ளேன்” என்றான். “சிறப்புறுக! புகழ் கொள்க!” என்று கர்ணன் அவனை வாழ்த்தினான். அமரும்படி அவன் கைகாட்ட இருவரும் பீடங்களில் அமர்ந்தனர். சிவதர் கதவை மூடிவிட்டு அப்பால் நெஞ்சில் கைகட்டி நின்றார்.

கர்ணன் சிவதரிடம் “இவர்களுக்கு இன்நீர்…” என்றான். சுபாகு “வேண்டியதில்லை. நாங்கள் புரவியில் ஒரேவிசையென விரைந்து வந்தோம். ஆகவே வந்து இறங்கியதுமே இன்நீர் அருந்தி இளைப்பாறிவிட்டோம்” என்றான். “நன்று” என்றான் கர்ணன். அவர்கள் சிலகணங்கள் சொற்களில்லாமல் அமர்ந்திருந்தனர். சிவதர் பூரிசிரவஸின் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தார். பூரிசிரவஸ் அவர் நோக்கைத் தவிர்த்து கர்ணன் மேல் விழிநாட்டினான். கர்ணன் புன்னகைத்து “கூறுக!” என்றான்.

பூரிசிரவஸ் “இனி முறைமைகள் ஏதுமில்லை, மூத்தவரே. நேரடியாகவே சொல்லெடுக்கிறேன். அஸ்தினபுரி இன்று தங்களை பணிந்து எதிர்பார்த்திருக்கிறது. தங்களால் காக்கப்படும்பொருட்டு தவித்திருக்கிறது. கைவிடலாகாதென்ற மன்றாட்டுடன் இங்கு வந்திருக்கிறேன். அஸ்தினபுரி எங்கள் நாடும் கொடியும் என்பதுபோல் உங்களுடையதும் கூட. நாங்கள் கோராமலேயே தந்தையென்றும் தெய்வமென்றும் வந்து நின்றிருக்கவேண்டியவர் நீங்கள். அதற்கு நாங்கள் எந்த முறைமை சார்ந்த கோரிக்கையையும் வைக்கவேண்டியதில்லை” என்றான்.

“ஆயினும் இத்தூது ஏன் தேவைப்படுகிறதென்றால் நாங்கள் பெரும்பிழை ஒன்று இழைத்துவிட்டோம். பாரதவர்ஷத்தின் மாவீரராகிய தங்களை அகற்றிநிறுத்திவிட்டு இப்போரில் இறங்கினோம். அது எவ்வகையிலும் தங்கள் மேல் கொண்ட உளவிலக்கினாலோ தங்களை சிறுமை செய்யவேண்டுமென்ற எண்ணத்தாலோ அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். எங்கள் குலத்திற்கு பிதாமகராகிய பீஷ்மரின் ஆணைப்படியே அது நிகழ்ந்தது. வீரத்தால் நீங்களிருவரும் நிகரானவர்கள் என்றாலும் பீஷ்ம பிதாமகர் அகவையால் மூத்தவர், நோன்பால் பெரியவர். அனைத்தையும்விட கௌரவக் குடி அனைத்திற்கும் பெருந்தந்தை. இழிவோ, பழியோ, அழிவோ பெறினும்கூட தந்தையர் சொல்லை மீறாமல் இருப்பதே தகைமை என்று நூல்கள் கூறுகின்றன.”

“அஸ்தினபுரியின் அரசர் எந்நிலையிலும் தந்தை சொல் மீறியவர் அல்ல. குலநெறிகளுக்கு அப்பால் ஒரு நிலையிலும் சென்றவரல்ல. ஆகவேதான் தாங்கள் போரிலிருந்து தவிர்க்கப்பட்டீர்கள். அது பிழையென்று பிற அனைவரும் அறிந்திருக்கிறோம். பலமுறை அதை சொல்லவும் செய்துள்ளோம். எங்கள் அனைவரையும்விட அரசர் அறிவார். அந்தப் பிழையின் பொருட்டு தங்கள் கால்களில் தலைவைத்து இளையோரை பொறுத்தருள்க என்று கோரவே நான் வந்துள்ளேன். மூத்தவரே, தந்தையரை மைந்தர் பழிப்பது உலக இயல்பு. ஆனால் தந்தையரை அன்றி எவரைப் பழிக்க நமக்கு உரிமை உள்ளது?” என்றான்.

கர்ணன் விழிகளைத் தாழ்த்தி கைகள் மீசையில் சுழன்றுகொண்டிருக்க அசைவில்லாது அமர்ந்திருந்தான். சுபாகு பூரிசிரவஸின் சொற்களால் உளம் நெகிழ்ந்து கண்களில் நீர்ப்படலத்துடன் மெல்லிய நடுக்கு கொண்டிருந்தான். பூரிசிரவஸ் “இந்தப் படைத்தலைமை தங்களுக்குரியது. அஸ்தினபுரியின் நிலமும் கொடியும் உங்கள் ஆணைக்கு அடிபணியும். அதற்கப்பால் ஒரு சொல்லும் நான் சொல்வதற்கில்லை” என்றான். கர்ணன் விழிதூக்கி சுபாகுவை பார்த்தான். சொல்லெடுக்க முயன்றபோது மெல்லிய கனைப்பொலி எழுந்தது. அவன் உதடுகள் அசைந்தன.

அவன் பேசுவதற்குள் சுபாகு நடுங்கிய குரலில் “மூத்தவரே!” என்று அழைத்தான். கைகளை விரித்து “மூத்தவரே! என் மைந்தன் களம்பட்டான். சுஜயன் இன்றில்லை. எத்தனை சொற்களை அள்ளி இறைத்தாலும் இனி என் விழி அவனை பார்க்காது என்ற உண்மையிலிருந்து என்னால் வெளிவர இயலவில்லை. இனி இங்கே வெற்றியையோ புகழையோ அல்ல, வீழ்ந்துபட்டு என் மைந்தனுடன் செல்வதையன்றி நான் வேறெதையும் விழையவில்லை” என்றான். பூரிசிரவஸ் திகைப்புடன் திரும்பி ஏதோ சொல்வதற்குள் சுபாகு விரைந்த அசைவுகளுடன் எழுந்து முழந்தாள் மண்ணிலறைய விழுந்து கர்ணனின் இரு முழங்கால்களையும் பற்றிக்கொண்டு “தங்களை சந்தித்து மடியில் தலை வைத்து கதறி அழவேண்டுமென்று நூறுமுறை எண்ணியிருப்பேன், மூத்தவரே. எனக்கு யாருமில்லை. பெரும்படை சூழ்ந்த களத்தில் தன்னந்தனியாக என் மைந்தனை எண்ணி அழுதுகொண்டிருக்கிறேன்” என்றான்.

கர்ணன் அவன் தலைமேல் கைவைத்தான். சுபாகு கர்ணனின் மடியில் தலைவைத்து உடல் குலுங்க உரத்த விசும்பல்களும் விம்மல்களுமாக அழுதான். கர்ணனின் கை நடுக்கத்துடன் அவன் தலையை, குழல்கற்றைகளை அளைந்துகொண்டிருந்தது. பூரிசிரவஸ் தன் கைகளை கோத்து மடியில் வைத்து விழி நிறைந்துவழிய உதடுகளை உள் மடித்து இறுக்கியபடி அதை பார்த்துக்கொண்டிருந்தான். சிவதர் அவர்களை மாறி மாறி பார்த்தார். அந்தத் தருணத்திற்குள் ஊடுருவி அதை திசைமாற்றி செலுத்த விரும்பினார். ஆனால் என்ன செய்ய வேண்டுமென்று அவருக்குத் தெரியவில்லை. இருமுறை பேச விரும்பியதுபோல் மெல்லிய ததும்பல் அவர் உடலில் வந்தது.

கர்ணன் நிமிர்ந்து பூரிசிரவஸை நோக்க அவன் விசும்பல் ஒலியுடன் எழுந்து கர்ணனின் இன்னொரு தொடைமேல் தலைவைத்து அமர்ந்து அழத்தொடங்கினான். இருவரையும் அணைத்தபடி கர்ணன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். பூரிசிரவஸ் உடைந்த குரலில் “மூத்தவரே, எம் மைந்தரும் களம்பட்டனர். ஒவ்வொரு நாளும் உடல் சலிக்க, உள்ளம் சோர்ந்து, அகம் இன்மையென்றாகும் வரை எதையேனும் செய்து அதை ஆற்றிக்கொள்கிறேன். இறப்புக்கு நிகராக துயில்கிறேன். எங்கோ அவர்கள் இருக்கக்கூடும் எனும் நம்பிக்கையுடன் விழித்தெழுகிறேன். தந்தை வடிவென இங்கு தங்களை பார்க்கையில் நானும் எம் மைந்தரைப்பற்றித்தான் எண்ணினேன்” என்றான்.

கர்ணன் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. அவன் கைகள் இருவரின் தலைகளுக்குமேல் ஓடிக்கொண்டிருந்தன. சிவதர் பெருமூச்சுவிட்டார். பூரிசிரவஸ் தன் மேலாடையால் கண்களையும் முகத்தையும் அழுந்தத் துடைத்தான். பின்னர் குரல்வளை அசைய உமிழ்நீர் விழுங்கி நெஞ்சத்தின் எடையை ஆற்றுபவன் என நீள்மூச்சுகள் எழுப்பி விடுபட்டான். சால்வையை திருத்தியபோது அவன் உள்ளமும் மீண்டது. அவன் திரும்பி சிவதரை பார்த்தான். சிவதர் “நீங்கள் இருவரும் இங்கு வந்தது நன்று. அரசர் அங்கு வந்திருந்தால் இத்தருணம் அங்கே நிகழ்ந்திருக்காது” என்றார்.

பூரிசிரவஸ் அந்த முறைமைச்சொல்லால் முற்றாக மீண்டு கர்ணனிடம் “நாளை புலரியில் தாங்கள் அங்கே களம் நிற்கவேண்டுமென்பது அரசரின் விருப்பம். பீஷ்ம பிதாமகர் களம்பட்ட பின்னர் அங்கே அனைவரும் உளச்சோர்விலிருக்கின்றனர். இளங்கதிரவனென நீங்கள் தேரிலெழுந்தால் அனைவரும் புத்துயிர் கொள்வார்கள். இல்லையேல் நாளை காலையிலேயே அஸ்தினபுரி பாண்டவருக்கு முன் தோற்றுவிடும்” என்றான். சிவதர் தனக்கான தருணத்தை கண்டுகொண்டு “ஆனால் வெல்ல முடியாதவர் என்று நூல்களில் புகழப்படும் துரோணர் அங்கிருக்கிறார் அல்லவா?” என்றார்.

அவர் சொல்லவருவதை புரிந்துகொண்டு பூரிசிரவஸ் திரும்பிப் பார்த்தான். எழுந்து தன் மேலாடையை சீரமைத்துக்கொண்டு “ஆம், துரோணர் இருக்கிறார். பார்த்தரால் அவரை வெல்ல இயலாது. அஸ்வத்தாமரும் ஜயத்ரதரும் இருக்கிறார்கள். சல்யர் இருக்கிறார். ஆனால் பிதாமகர் பீஷ்மரின் இடத்தை அவர்கள் நிரப்ப இயலாது. அவர்கள் மாவீரர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்கேற்ற ஒளிரும்தோற்றம் கொண்டவர்கள் அல்ல. போர்க்களத்தில் ஒளிர்ந்தெரிந்து முன்செல்பவரையே அனைவரும் உளம்தொடர்கிறார்கள். பீஷ்ம பிதாமகர் தேரிலெழுகையில் அங்கிருக்கும் அனைத்து மானுடருக்கும் மேலாக விண்ணிலிருந்து தேவன் ஒருவன் இறங்கியதுபோல தோன்றுவார். அத்தோற்றப்பொலிவு பாரதவர்ஷத்தில் இனி மூத்தவருக்கு மட்டுமே உள்ளது” என்றான்.

சிவதர் “அங்கநாட்டரசர் அங்கு வந்து படைத்தலைமை கொள்வதைப்பற்றி சொல்லுறுதி எதையேனும் கௌரவ அரசர் அளித்துள்ளாரா?” என்றார். பூரிசிரவஸின் விழிகள் மாறுபட்டன. சில கணங்களுக்குப் பின் “இல்லை. படைத்தலைமை துரோணருக்குரியது. அரசரென வந்து போரில் கலந்துகொள்ளும் பொருட்டே அங்கநாட்டரசரை அழைக்க வந்தோம்” என்றான். “துரோணர் தனக்கிணையான ஷத்ரிய வீரராக அங்கநாட்டரசர் களம் நிற்பதை ஏற்கிறாரா?” என்று சிவதர் கேட்டார் . “சிவதரே, பிதாமகர் அரசருக்கு ஆணையிடும் இடத்தில் இருந்தவர். துரோணர் அரசரின் ஆணை பெறும் குடிகளில் ஒருவர்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

“ஆம், அதை அறிவேன். ஆனால் அரசர் அங்கு வந்தபின் அவரது இடமென்ன என்றும் களத்தில் அவர் எங்கு நிற்பாரென்றும் முன்னரே அறிந்தபின் அவர் இங்கிருந்து கிளம்புவதே நன்று. அன்றி அங்கு வந்தபின் துரோணர் படைத்தலைமை கொள்ள அவர் படைநிரையில் ஓர் எளிய வீரனாக நிற்பாரென்றால் அது அங்கநாட்டுக்கு பெருமை அல்ல. துரோணரின் படைத்தலைமையை அங்கநாடு ஏற்கவேண்டுமென்றில்லை. அவர் நிகரற்ற வில்லவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் எவ்வண்ணம் அவரால் படை வகுக்க முடியும், எவ்வகையில் முதற்பறவையென வழி செலுத்தக்கூடும் என்பதில் எங்களுக்கு ஐயமிருக்கிறது. படைமுதல்வராக முதன்மைத்தகுதி கொண்ட எங்கள் அரசர் இருக்கையில் அந்தணரா ஷத்ரியரா என்றறியாத பிறப்புள்ள ஒருவர் படைமுகப்பில் நிற்பது அத்தனை சிறப்பும் அல்ல” என்றார் சிவதர்.

பூரிசிரவஸ் “எங்கள் அரசரின் செய்தியைச் சொல்ல மட்டுமே எங்களுக்கு உரிமையுள்ளது. பிற சொல்லுறுதிகள் அனைத்தையும் நீங்கள் அரசரிடமிருந்தே பெறவேண்டும்” என்றான். சிவதர் “பால்ஹிகரே, வீரத்தில் எங்கள் அரசருக்கு நிகரான மைந்தர்களை உங்கள் களத்திற்கு அனுப்பினோம். அவர்கள் அங்கு குதிரைச்சூதர்களாக பணிபுரிகிறார்கள்” என்றார். பூரிசிரவஸ் ஒருகணம் குன்றினாலும் தன்னை மீட்டுக்கொண்டு “ஆம், அவர்களை அங்கே நிறுத்தியது பீஷ்ம பிதாமகரின் ஆணை” என்றான். சுபாகு “அது எங்கள் கீழ்மையென்றே கொள்க!” என்றான். “தந்தையரின் பெருமை மட்டுமல்ல கீழ்மைகளும் மைந்தர்க்குரியவைதான்.”

“இங்கு நாங்கள் சில சொல்லுறுதிகளை விரும்புகிறோம் என்பதாவது அஸ்தினபுரியின் அரசருக்கு தெரியவேண்டும். ஒரு சொல்லுமில்லாது வந்து படையில் இணைந்து எளிய வில்தாங்கி என்று அணியில் நிற்க அங்கநாட்டு அரசர் எழ மாட்டார்” என்றார் சிவதர். “ஆனால் இனிமேல் இச்சொல்லாடலை நிகழ்த்துவதற்கு பொழுதில்லை. இப்போது நள்ளிரவு கடந்துவிட்டது. இன்னும் சற்றுப் பொழுதில் படைகள் கிளம்பினால்தான் வெள்ளி முளைப்பதற்குள் குருக்ஷேத்ரத்தை சென்றடைய முடியும்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

“படைகளுடன் அங்கநாட்டு அரசர் கிளம்பட்டும். அவருக்கு சற்று முன்னால் நீங்கள் கிளம்புங்கள். குருக்ஷேத்ரப் படைநிலத்திற்கு வெளியே அங்கநாட்டுப் படைகள் நிலைகொள்ளும். நீங்கள் சென்று எங்கள் சொல்லை அஸ்தினபுரியின் அரசருக்கு சொல்லுங்கள். அவர் அளிக்கும் உறுதிப்பாட்டுடன் மீண்டு வந்து எங்களை அழையுங்கள். படையுடன் அங்கநாட்டு அரசர் வருவார்” என்று சிவதர் சொன்னார். பூரிசிரவஸ் சற்றுநேரம் சிவதரின் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தான். அவர் உறுதிகொண்டிருக்கிறார் என்பதையும் அதை கர்ணனிடம் முன்னரே பேசியிருக்கிறார் என்பதையும் அவன் உணர்ந்தான்.

சுபாகு மெல்லிய எரிச்சலுடன் “நீங்கள் கோருவதென்ன, சிவதரே?” என்றான். “கோருவது நான் அல்ல. அங்கநாட்டின் குடி. எங்களுக்கும் ஒரு சொல் இதில் உள்ளது. பீஷ்மரின் ஆணைப்படியோ அன்றி பிறிதொரு சொல்லின்படியோ சிறுமை செய்யப்பட்டது அங்கநாட்டுக் குலப்பெருமை. நாளை அதை சூடவிருப்பவர் எங்கள் கொடிவழியினர். எனவே அது ஈடுசெய்யப்பட வேண்டும்” என்றார் சிவதர். “மூன்று கோரிக்கைகள் உண்டு. சென்று அவற்றை சொல்க! அவற்றுக்கு அஸ்தினபுரி உடன்பட்டாகவேண்டும்” ஓங்கிய குரலில் அவர் தொடர்ந்தார்.

“அங்கநாட்டரசர் எப்போதும் தனிக்கொடியுடன் படைப்பிரிவுகளின் தலைவராகவே இருப்பார். துரோணர் தவிர்த்த பிற அனைவருமே அவருக்குக் கீழ்தான் படை திரண்டிருக்க வேண்டும். அங்கநாட்டு அரசருக்கு துரோணர் உட்பட எவரும் ஆணைகளை இடலாகாது. அங்கநாட்டரசர் எந்நிலையிலும், எந்த அவையிலும், அஸ்தினபுரியின் அரசர் உட்பட எவர் முன்னிலும் முடி தாழ்த்த மாட்டார். அவர் அவரை நட்பு நாட்டரசர் எனக் கருதி போர்த்துணை கோரி அஸ்தினபுரியின் அரசாணை ஒன்று ஓலையில் எழுதப்பட்டு அங்குள்ள அனைத்து ஷத்ரிய அரசர்களுக்கும் அனுப்பப்படவேண்டும்.”

பூரிசிரவஸ் “இதில் அஸ்தினபுரியின் அரசர் இயற்ற வேண்டிய எதற்கும் மறுசொல்லிருக்க வாய்ப்பில்லை. ஆனால் துரோணர் என்ன எண்ணுகிறார் என்பதை அங்கு சென்ற பின்னர்தான் சொல்லமுடியும்” என்றான். சிவதர் “நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார். சுபாகு “நாங்கள் மூத்தவரிடம் சொல்கிறோம். எங்களால் முடிந்தவரை துரோணரிடம் மன்றாடுகிறோம்” என்றான். பூரிசிரவஸ் “எங்கள் அரசரின் சொல்லை முன்வைப்பதொன்றே எங்கள் நோக்கம். அதை செய்துவிட்டோம்” என்றான். “எங்கள் சொல்லை அங்கே முன்வைக்கவும்தான் நீங்கள் வந்துள்ளீர்கள்” என்றார் சிவதர்.

கர்ணன் இரு கைகளாலும் பீடத்தின் கைப்பிடியை தட்டியபடி எழுந்து “எதுவும் வேண்டியதில்லை. நான் வருகிறேன். இப்போரை வென்று துரியோதனனை அஸ்தினபுரியின் அரியணையில் அமரச்செய்கிறேன். படைத்தலைவன் என்றால் தலைவனாக, வெறும் வீரனென்றால் வீரனாக, சூதன் என்றால் அவ்வாறாக படைநிற்க நான் ஒருக்கமே. எங்கு நின்றிருந்தாலும் போர் என்னை முன்னிறுத்தியே நிகழும். வெற்றி என்னிலிருந்தே எழும். அஸ்தினபுரியிடமிருந்து ஒரு சொல்லும் நான் கோரவில்லை. இங்குள்ள எவரிடமும் நான் கோரிப்பெறுவதற்கு ஒன்றுமில்லை” என்றான்.

சிவதர் ஏதோ சொல்ல நாவெடுக்க “இதைப் பற்றி நாம் மீண்டும் பேசவேண்டியதில்லை. படை கிளம்ப ஆணையிடுக!” என்று கர்ணன் சொன்னான். சிவதர் சில கணங்கள் உறைந்த முகத்துடன் நின்றுவிட்டு “ஆணை” என தலைவணங்கி அறையிலிருந்து வெளியே சென்றார்.

பூரிசிரவஸ் முகம் மலர்ந்து தலைவணங்கி “பிறிதொரு சொல் உங்கள் நாவில் எழாதென்று நானும் அறிவேன். மூத்தவரே, பிறந்த நாள் முதல் கொடுப்பதை அன்றி பிறிதை அறியாதவர் நீங்கள். இதையும் நீங்கள் எங்களுக்கு அளிக்கும் கொடை என்றே கொள்கிறோம். இளையோரென இதற்கு கடன்பட்டிருக்கிறோம்” என்றான். சுபாகு “நாங்கள் உங்கள் இளையோர். பிறிதொன்றும் சொல்வதற்கில்லை” என்றான்.

கர்ணன் அருகணைந்து தன் நீண்ட கையை சுபாகுவின் தோளைச் சுற்றி செலுத்தி அவனை அணைத்துக்கொண்டு “சுஜயன் என் மைந்தன். என்னுடைய கண்ணீரும் அவனுக்கு செல்லட்டும். அதற்கப்பால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றான். “ஆம்” என்று சுபாகு பெருமூச்சுடன் சொன்னான்.

நாகரே, கேளுங்கள். அந்த அறைக்குள் நான் கண்டது என்ன? பேருருக்கொண்ட நாகம் ஒன்றை. அது வாழும் வெளி பிறிதொன்று. எனவே அங்கிருந்த பருவெளியை அது எடுத்துக்கொள்ளவில்லை. கரிய நீர்ச்சுழிபோல் அது அவர்களை சுற்றிக்கொண்டிருந்தது. அதன் மாபெரும் படம் அவர்களின் தலைக்குமேல் எழுந்து நின்றிருந்தது. அதன் விழிமணிகள் இரு விண்மீன்கள் என மின்னுவதை கண்டேன். அந்த அறைக்குள் இருளென நிறைந்து அவர்களை தன்னுள் வளைத்து அன்னைமடியின் இளவெம்மையை அளித்து வைத்திருந்தது அது.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன?
அடுத்த கட்டுரைபிரதமன் கடிதங்கள் 7