ஒருநாள்

dog

இன்று 29-12-208 அன்று சைதன்யாவின் பிறந்தநாள். எத்தனையாவது என்பது ரகசியம். 22 என்றால் மறுக்கப்போவதுமில்லை. பிரதமன் வைக்கலாம் என அருண்மொழி சொன்னாள். ஆகவே காலையில் நடை சென்று மீண்டதுமே நான்கு தேங்காய்களை உரித்து உடைத்து துருவி தந்தேன். கை ஓய்ந்துவிட்டது. எத்தனை தேங்காய்களை துருவிய கை என சொல்லிக் கொண்டேன். இதையெல்லாம் சொல்லுமிடத்திற்கு ஒருவழியாக வந்துசேர்ந்துவிட்டோம் என்பது கொஞ்சம் பெருமிதமாகவே இருந்தது.

வெண்முரசு சில அத்தியாயங்கள் இரண்டுநாட்களில் எழுதவேண்டும். நாளை மாலை கோவை எக்ஸ்பிரஸில் ஈரோடு செல்கிறேன். அங்கிருந்து ஈரட்டியில் எங்கள் மலைவிடுதியில் இரண்டுநாட்கள். புத்தாண்டை அங்கே நண்பர்களுடன் கொண்டாடுகிறேன். 25 நண்பர்கள் வருகிறார்கள். வழக்கமான சிரிப்பும் கொண்டாட்டமும் மட்டுமே திட்டம். விஷ்ணுபுரம் விழாவின் அனைத்துச் சலிப்புகளிலிருந்தும் மீண்டுவிடவேண்டும்.

உண்மையில் அஜ்மீர் தர்கா செல்வதற்காகத் திட்டமிட்டிருந்தேன். தனியாகப்போவதாக. பின்னர் ஷாகுல் வருவதாகச் சொன்னார். அவர் நின்றுவிட்டார். செல்லும் திட்டம் பயணத்திற்கான முன்பதிவுச் சிக்கல்களால் தள்ளிச்சென்றது. ஆனால் செல்லவேண்டும். கனவில் இரண்டுமுறை தர்காவை ஒட்டிய குறுகலான சந்துகள் வந்துவிட்டன. அது ஓர் அழைப்பு.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-6