விஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-14

8

 

விஷ்ணுபுரம் விருதுவிழா:தேவிபாரதி உரை

விஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை

விஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை

விஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை

விஷ்ணுபுரம் விருதுவிழா:ராஜ் கௌதமன் உரை

விஷ்ணுபுரம் விழா உரை – ஜெயமோகன்

விஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்

அன்பின் ஜெ..

 

விஷ்ணுபுர விழா நன்றியுரைகளையே ஒரு தனிப்புத்தகமாகப் போடலாம். அவை ஒரு இயக்க வரலாற்றின் ஆவணங்களாக பிற்காலத்தில் அமையும்.

 

இம்முறை, அது, பிரதமன் சிறுகதையை நினைவு படுத்தியது.  (சிறுவயதில் உண்ட,  கேக் போலாகி இருக்கும் சீம்பாலின் சுவை நாவில் தொக்கியிருப்பது போல, அந்தக் கதை இருந்து கொண்டேயிருக்கிறது).

 

நண்பர்களின் பங்களிப்பைச் சொல்லியிருந்தீர்கள். அத்தனை பேரின் ஆர்வத்துக்குள்ளும் சரடாய் ஓடி உத்வேகப்படுத்திக் கொண்டிருப்பது உங்களின் இயக்கம்.

சுனீல் கிருஷ்ணனின் உருவாக்கம் மிக மகிழ்வளிக்கிறது. அவரைப் பற்றிய உங்கள் அவதானிப்பு  மிகச் சரி.

 

லௌகீகம் மேலெழுந்து ஆட்சி செய்யும் தமிழ்ச் சமூகத்தை மடைமாற்றுதல், மிகப் பெரும் முனைப்பு. ஜெயமோகப் பிரயத்தனம் எனச் சொல்லலாம்.

ஒவ்வொரு ஆண்டும், அது மேலும் பெரிதாகி வருகிறது. வாழ்க!

 

பாலா

 

 

வணக்கம் ஜெ,

 

விஷ்ணுபுரம் விருது விழாவை ஒவ்வொரு முறையும் தூர இருந்தே தரிசித்து வருகிறேன். தூர இருந்து அவதானிப்பதில் பெரு சுகம் இருபதாகவே நினைகிறேன்.  ஒவ்வொரு நிகழ்வும் பல மடங்காக மனம் காட்சிச் சித்திரத்தை விரிவாக்கிக் கொள்கிறது.

 

இந்த விழாவின் நேர்த்தியான கட்டமைப்பு மலைக்க வைக்கிறது. விழா தொடங்கு முன்னரான நாளிலிருந்து நிறைவுறும் தருணம் வரை அதன் கட்டொழுங்கு கலையாமல் இருப்பது வேறெந்த இலக்கிய நிகழ்ச்சிகளிலும் காணமுடியாது ஒன்று.

 

தொடக்க நிகழ்ச்சி சிறிய அளவில் ஆரம்பித்து இன்றைக்கு 350 பேருக்குமேல் கலந்துகொண்டு கொண்டாடுவது ஒரு தீவிர லட்சியவாத்தை நோக்கிய பயணமாகக் கருதமுடிகிறது. பெரு நிகழ்ச்சியாக வளர்ந்து கொண்டு வருவதற்கான முகாந்திரத்தை நான் திருவேந்திரத்தில் தமிழ்ச் சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் கேட்க நேர்ந்தது. ஆ.மாதவன் வந்திருந்தார். அவர் இரண்டு வெவ்வேறு சாகித்ய அக்கெதமி பெற்றிருந்தாலும், விஷ்ணுபுர விருதையும் குறிப்பிட்டு அவரை அறிமுகம் செய்தார்கள். எனவே அக்கேதமி விருதுக்கு நிகராக இந்த விருதையும் மதிப்பதும், வைத்து நோக்குவதும் இதன் தரத்தை நிறுத்துப் பார்ப்பதற்குச் சமம்.  தேசிய விருதுகள் பாராமுகம் காட்டும் ஆளுமைகளுக்கு இவ்விருதை வழங்கி சம பீடத்தில் அமர வைக்கும் முயற்சி பாராட்டத் தக்கது. (திருவனந்தபுரத்தில நான் இருந்த போது நீங்கள் உங்கள் மனைவியோடு திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருந்தீர்கள்)

 

விஷ்ணுபுர விழாவைக் கட்டமைக்கும் உங்கள் நண்பர் குழுவின் அர்ப்பணமும் வியக்க வைக்கிறது. ஒரு தேர்ந்த படைப்பாளனை மக்கள் முன் நிறுத்தி அவரின் படைப்பிலக்கியத்தை எல்லாத் திசையிலுமிருந்து ஆராய்வது விருதை விட படைப்பாளனுக்குக் கிடைக்கும் சிறந்த அங்கீகாரமல்லவா?

 

தமிழ் நாட்டில் பல்வேறு விருது நிகழ்ச்சிகள் நடந்தேறினாலும் இவ்விருது விழா அதன் இலக்கிய மையம் சிதராமல் , அது சார்ந்தே நீடித்து நிறைவுறுவதால் இது இலக்கியச் சிறப்பை அடைந்து தீவிர வாசகர்களைக் கவர்ந்து  ஈர்க்கிறது. அதனால்தான் அது ஒவ்வோராண்டும் முந்தைய ஆண்டைக் காட்டிலும் பெரிதாக வளர்ந்த வண்ணம் இருக்கிறது.

 

பார்ப்போம் அடுத்தடுத்த ஆண்டுகளில் என்னை அங்கே இழுத்து வருகிறதா என்று.

 

கோ.புண்ணியவான்

அன்புள்ள ஜெ

 

இந்த காலகட்டத்தின் பொதுவான மனநிலை என்பது அவநம்பிக்கை, ஏளனம், கசப்பு. இதை சமூக ஊடகங்கள் பெரிதாக வளர்க்கின்றன. இந்த மனநிலை இருப்பதனால்தான் அவ்வப்போது [சென்னை வெள்ளத்தில் மக்களின் சேவை போல] சில விஷயங்களை மிதமிஞ்சி ஊதிப்பெருக்கி கண்ணீர் மல்குகின்றன. ஆனால் நிலையாக, நீடித்த முறையில் பாஸிட்டிவாக எதைச்செய்தாலும் நாம் சந்திப்பது அவநம்பிக்கையையும் ஏளனத்தையும்தான்.  அதை எதிர்கொண்டு எதையாவது செய்வதுதான் மிகப்பெரிய சவால். நாம் வென்றால் நம் மீது கசப்பு பெருகும். தோற்றால் கொஞ்சம் பரிதாபமும் பாராட்டும் கிடைக்கும். அதற்காகவே தோற்கும் மனநிலைக்குச் செல்கிறார்கள்.

இச்சூழலில்தான் உங்கள் பணிகள் முக்கியமானவை ஆகின்றன. அவை விடாப்பிடியாக நம்பிக்கையை முன்வைக்கின்றன. கலைமீதும் இலட்சியவாதம் மீதும் நம்பிக்கையை விதைக்கிறீர்கள். இந்த விழாவில் காந்திய இயக்கத்தினர் உட்பட கலந்துகொண்டவர்களிடம் அதைப் பார்த்தேன். அவர்களைப்பார்த்தபோதெல்லாம் அய்யோ நம் நவீன எழுத்தாளர்கள் இவர்களின் மனதுக்குள் அவநம்பிக்கையை உருவாக்கிவிடக்கூடாதே என்ற பயம்தான் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. இருண்ட பக்கங்களைப் பார்ப்பதுவேறு அர்த்தமில்லாத அவநம்பிக்கைகளை உருவாக்கிக் கொள்வது வேறு. கட்டற்ற கற்பனையும் கட்டற்ற ஆன்மிகத்தேடலும் கொண்டிருப்பது வேறு கட்டற்றுநடந்துகொள்வது வேறு. இதெல்லாம் நம்மவர்களுக்கு புரியவைக்கப்படவே இல்லை.

 

முந்நூறு இலக்கிய ஆர்வலர் இரண்டுநாள் கூடி வேறுநினைப்பே இல்லாமல் இலக்கியம் மட்டுமே பேசி கனவுகளுடன் பிரிவதென்பதே ஒரு மகத்தான இலட்சிய நிகழ்ச்சி. வாழ்த்துக்கள் ஜெ. நான் எளிய வாசகன். அப்படித்தான் என்னை வைத்துக்கொண்டிருக்கிறேன். என் இலக்கும் இடமும் ஆன்மிகம்தான். இலக்கியவாசகனாக என்னை நிறைவடையச்செய்த நிகழ்ச்சி இது

 

எஸ்.கே.ராகவன்

 

அன்புள்ள ஜெ, வணக்கம் ,

விஷ்ணுபுர விருது விழா, அதன் துல்லிய ஒழுங்கு, நிகழ்ச்சி ஒருகிணைப்பில் ஆர்வமுள்ள என்னைபோன்றவர்களுக்கு பெறும் நிறைவை தருவதாக இருந்தது . ஏற்பாட்டாளர்களுக்கு இது பெரும் வெற்றி .அவர்களுக்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் . நான் முதல் முறையாக விஷ்ணுபுர விருது விழாவில் கலந்து கொள்கிறேன் என்றாலும் , பல வருடங்களாக நடந்துவந்தவைகளின் தொகுப்பை உங்கள் தளத்தில் பார்த்தவை மற்றும் வாசித்தவை என்பதால், நிகழ்ச்சி வழக்கமானஒன்றாக தோன்றினாலும் , குழு ஒத்திசைவின் உச்சம் , பிரமிப்பை அளிப்பதாக இருந்தது . மிக அமைதியாகஅவற்றை பார்த்துக்கொண்டிருப்பதே எனக்கு போதுமானதாக இருந்தது. அதற்காகவே வந்தேன்.

அந்த அனுபவம்இனிதானதாக இருந்தது. கடந்த பல வருடங்களாக ,ஒரு கூட்டுப் புழுவைப் போல அனைத்திலிருந்தும் உள்ளிழுத்துக் கொண்டுவிட்ட எனக்கு ,சில வருடங்களுக்கு முன்பாக ஏற்பட்ட உங்களின் தொடர்பு என்னை மீட்டுக் கொள்ளும் விசையாக எப்போதும்இருந்திருக்கிறது . இப்போது அது கொண்டாட்ட மனநிலைக்கு வரவே ,கோயம்புத்தூர் வந்திருந்தேன். நிஜமான கொண்டாட்டமான நிகழ்வு. மேடை , உரையாடல் , பேச்சு இவற்றிற்கு அப்பால் அங்கு சுழன்று அடித்துகொந்தளித்துக் கொண்டிருந்த ஒன்றை உணர்வது தனி அனுபவமாக இருந்தது. நான் உங்களுக்கு எழுதிய பல கடிதத்தில் , உங்களை கண்டடைந்து மிக தற்செயலானது என பலமுறைகுறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவியிருக்கும் . எனது கருதுகோள் குறித்த தெளிவிற்கும் அதை நோக்கியதேடலின் பொருட்டும், பல முனைகளில் அலைக்கழிக்கப்பட்டு உங்களை வந்தடைந்தேன் . புடவியின் பெரு விதியாக இயங்கும் நிர்குண பிரம்மத்தின், விதி விலக்காக சகுண பிரம்மத்தை நான் புரிந்துகொள்ள முயலுகிறேன்.

நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் ராமாநுஜர் குறித்து சொன்ன “அழகியல்” இதுவாகவும்இருக்கலாம் . அர்ச்சா விக்ரஹத்தை அண்டத்தின் குவி மையம் என்கிற புரிதலையும் அடைகிறேன் . அத்துடனானதொடர்பை அதன் லாலன , பாலனங்களினால் கூட அடையப்படலாம் என்கிற உங்களின் பதில்களில் பெற்றேன்.நீங்கள் சொன்ன உங்களின் அத்வைத நிஷ்ட்டையிலிருந்து எனக்கானதைப் பெற்றுக்கொள்ள இயலும் என்கிறஎண்ணமே ,என்னை உங்களை நோக்கிய நகர்வை நிகழ்த்தியது என்பது எனக்கு ஆச்சர்யமானது . எதை எதிர் நோக்கி உங்களுடன் எனது உரையாடலைத் துவங்கினேனோ . எதில் உங்களுடன் இந்த நீண்டபயணத்தில் இருக்கிறேனோ, அதிலேயே இதுவரை தொடர்ந்து பயணிப்பது மகிழ்வான ஒன்றாக இருக்கிறது .எங்கோ மனதின் ஆழ்மூலையில் ஏமாற்றமுறுவேன் என ஒன்று ஓயாது சொல்லிக் கொண்டிருந்தது , பின் என்னகாரணத்தினாலோ அது அமைதியடைதிருக்கிறது .உங்கள் எழுத்துக்களிலிருந்து நான் அடையும் மெய்மையின்விளைவாக அதுவே நிகழ்ந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

ஆன்மீகம் பற்றி எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட முன்முடிவுகளை நான் இறுக்கமில்லாததாக வைத்துக்கொண்டேன் . அதனாலேயே அது நெகிழ்வனானதாக இருந்திருக்க வேண்டும். எனக்குள் இது முரண் எனக்கிறகவலையே ஓங்கியிருந்தது. ஆனால் புதியவற்றை பெற்றுக் கொள்வதிலும் முன்பே அறிந்திருந்தவைகளைகட்டுடைத்து புதியவற்றை கொண்டு அவற்றை மறு உருவாக்கம் செய்து கொள்வதும் எனக்குள் எப்போதும்நிகழ்ந்து கொண்டே இருக்கிறது . அந்த நெகிழ்வுத்தன்மை காரணமென இப்போது உணர்கிறேன் . எனது பயணத்தின் பாதையில் இடையில் வரும் சில மையில் கற்களில் அமர்ந்து , பயணித்த பாதையில் அதுவரைநிகழ்ந்ததை தொகுத்தும் சரி பார்த்துக் கொள்வது என்னுள் எப்போதும் நிகழ்வது . அது நிகழும் போதெல்லாம் உங்களுக்கு கடிதம் எழுதி என்னை பகுத்துக் கொள்வதுடன் , அடுத்த பயண இலக்கை தேர்ந்தெடுக்ககாத்திருக்கிறேன் .

விஷ்ணுபுர விருது விழா விருந்தினர் நரேன் பற்றி குறிப்பில் மீபொருண்மை பற்றிய செய்தி சிறுமின்சார தீண்டலாக உணர்ந்தேன். திரு. ராஜ்கௌதமன் பற்றிய கட்டுரை ஆழம்மிகுந்த பண்பாட்டு வெளியைஎனக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறது . மிக கறாரான விமர்சனம் .

விஷ்ணுபுரம் வாசிப்பில் தொடங்கி , இப்போது விஷ்ணுபுரம் விருது விழா வரை கடந்த நான்கு வருடமாக பயணித்துவந்துள்ள எனது பாதையை இப்படித்தான் தொகுத்துக் கொள்கிறேன் . நான் நானாக இருப்பதாகவே இப்போதும்உணர்கிறேன் . ஆனால் அதன் மத்தியில் அடைந்த மாற்றங்கள்,புரிதல்கள், கணக்கில் அடங்காதவை . ஆகவேபுரிதலும் அதிலிருந்ழு கற்றதும் எனது இடைவெளிகளை நிரப்பியுள்ளது என்றே நினைக்கிறேன். அடுத்த இலக்கிற்கான உரையாடலை எனக்குள் நிகழ்த்துகையில் எனது போதாமை ஒரு முக்கிய காரணமாகஎப்போதும் என்முன்னே எழுகிறது .அதன் பொருட்டே

நான் உங்களின் எழுத்துக்களை வாசித்தும் உங்களுடன்உங்களின் எழுத்துக்களின் வழியாக உரையாடிக்கொண்டும் இருக்கிறேன் , நான் உங்களிடமிருந்து பெற்றுக்கொண்டவற்றில் முதன்மையானது “இன்றில் வாழ்வது “ என்கிற பெரும்கருதுகோள் அது என்னை புதிய சிந்தனைக்கு எடுத்துச்செல்கிறது. என்னை மீட்டுக் கொண்ட புள்ளி அது எனநினைக்கிறேன் .

நன்றி

ஆழ்ந்த நட்புடன்

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-13
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன?