தன்னறம் நூல்வெளி

சிவகுருநாதன், குக்கூ சிவராஜ், ஸ்டாலின்
சிவகுருநாதன், குக்கூ சிவராஜ், ஸ்டாலின்

 

 

செயல்படுவோர் அளிக்கும் மீட்பு

அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு,

தற்காலச்சூழல் மெல்லமெல்ல தர்க்கச்சூழலாகவே, எல்லா பக்கங்களிலிருந்தும் அணுகப்படுவதை நாமனைவருமே பார்கிறோம். ஒருவித வெறுப்புணர்வு உச்சம் மனித மனங்களிலிருந்து எவ்விதத் தடையுமின்றி வெளிப்படுகிறது. எதிர்மைசார்ந்த பயணப்போக்கின் மீது ஒரு சாயல் ஏற்பட்டுள்ளதை நம்மால் மறுக்க முடியவில்லை. ஒன்றினை அடைதல் என்ற குறுஎல்லையை இலக்காக வைத்திருப்பதனால், நாமடைந்த இழப்புகளை கணக்கில்கொள்ளத் தவறிவிடுகிறோம்.

அவ்வகையில், இவ்வாழ்க்கையின் மீதும் அதன் உள்ளார்ந்த சத்தியத்தின் மீதும் எங்களுக்குப் பேரார்வமும் பெரும்பிடிப்பும் உண்டாக… உங்களின் எழுத்துகள்தான் ஒளிநிழலாக அமைந்தது. இது ஒற்றைப்படையான பற்றுநிலை அல்ல. காலங்காலமாக நம் மனதின் மரபுநீட்சியில் உயிர்த்துளிக்கிற தனிமனித அகவாழ்க்கையை, அத்தனை கோணங்களில் அலசிப்பார்த்திருக்கிறது உங்களெழுத்துகள் மற்றும் கருத்துகள். இந்த கணத்தில் நிகழும் இவ்வாழ்க்கை, நெடிதுநீண்ட வரலாற்றின் தற்செயலொழுங்கா? அல்லது தூண்டப்பட்ட விளைவா? என்பதை ஆன்மத்தவிப்போடு உளத்தீவிரத்தோடு அது அணுக முயல்கிறது.

உங்களுடைய இணையதளத்தில் வாசகமனதின் கேள்விகளுக்கான பதிலாகப் பகிர்ந்தவைகளில் பலவற்றில் எங்களையும் பொருத்திப்பார்த்து தெளிவுற்றிருக்கிறோம். நம்பிக்கையின் மையஅச்சு விலகுகிற நடுக்கத் தருணத்திலெல்லாம், அக்கடிதக்கட்டுரைகளின் சொற்கள் மனவலுவைத் திரட்டி தனித்தெழ வைத்திருக்கிறது. புறவயமான ஒரு வாழ்க்கைப்பாட்டினூடே, அகவயமான ஒரு தேடலும் சாத்தியம்தான் என்பதை அறிவின் தீர்க்கத்தோடு சொல்வதே நவயுகத்தில் ஒரு ஆசானின் சாரம். அதை நீங்கள் செய்தீர்கள்.

எளிய உரையாடல்களின் வழியாக நீங்கள் இட்டுச்செல்லும் தொன்மங்களின் ஆழமும், அறிவார்ந்த நுட்பங்களின் வழியாக நீங்களேற்றிப்போகும் சிந்தனைகளின் உயரநுனியும்… வெறுப்புள்ள மனங்களோடு உரையாடத் தேவையான தெளிவை தரவல்லவை. சிந்தனைப்போக்கின் தர்க்க எல்லைகளைத் தாண்டி, சகமானுடனோடு ஒரு உரையாடல் வைத்துக்கொள்வதே இவ்வாழ்வின் உயிரம்சம். அன்பினை பிரார்த்தனையாக வைக்குமிடத்தில் மனிதன் பேதமில்லாதவன் ஆகிறான்.

எழுத்து வழிநடத்திச் செல்லும் வாழ்வென்பது நம்முடைய அன்றாடமாகிவிட்டது. காலை விடியலில் காதொலிக்கும் அல்லது கண்பார்க்கும் ஒரு சொல்லோ, ஒரு வரியோ அன்றைய தினத்தின் மனநிலையாக உருக்கொள்கிறது. கடல், என்பது நம் கண்ணறிந்த நீர்வெளி; ஆனால், கோடிக்கணக்கான ஆண்டுகளாகத் தாவரங்களின் சின்னப்பூக்களில் தேன்சொட்டாக சுரப்பதும் அதே நீர்தான். மானுடச்சிந்தனையின் பெருவிரிவு எனும் அகண்டத்தைப் போல அதிமுக்கியம், தனிமனித அகம் எனும் உட்சுருங்கலும். சுருக்கமாக உங்கள் வரிகளிலே சொன்னால், ‘வாழ்கை என்பது மானுட அகத்தில் நிகழ்வது’.

எல்லோருக்குமான வெளிச்சத்தை படைப்புகளின் வழியே சத்தியப்படுத்தும் நீங்களும், உங்கடைய அன்புசூழ் குடும்பமும், விருப்பவெளி மனிதர்களும்… நிகரற்ற அகத்தாகத்தையும் ஆன்மநிறைவையும் பெறவேண்டி, பேரிறையை கைகூப்பி வான் தொழுகிறோம். கருணையே அருள்க!

எல்லாவற்றுக்கும் மேலாக காந்தி குறித்து நீங்கள் எழுதிய கட்டுரைத்தொகுப்புகளையும், தன்னறத்தின் வழிப்பாதையாக நீங்கள் எண்ணிய சொற்களையும் தேர்ந்தெடுத்து ‘உரையாடும் காந்தி மற்றும் தன்மீட்சி’ என்னும் இரு புத்தகங்களாக நூலாக்குகிற பொறுப்பினை இச்சிறியவர்கள்மீது நம்பிக்கைவைத்து அளித்ததற்கு… எக்காலத்தும் நாங்கள் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். இந்தச் சமகாலத்தில் எங்களுடைய அகத்திறனை ஆத்மார்த்தமாக வெளிபடுத்திகொள்ள இந்த வாய்ப்பு உறுதுணையானது.

விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் எங்களையும் வெளிப்படுத்திக்கொள்ள நீங்கள் உருவாக்கித் தந்திருந்த தளத்தை ஒரு நம்பிக்கை நகர்வாகவே நாங்கள் காண்கிறோம். உரையாடும் காந்தி, தன்மீட்சி புத்தகங்களின் முதல்பிரதிகளை உங்களிடம் ஒப்படைத்து, உரைவழி நீங்கள் உண்டாக்கிய பேருவகையையும் சுமந்து நிறைந்த நிறைவோடு வீடு திரும்பியிருக்கிறோம். இன்னும் இன்னும் எங்கள் தன்னறச்செயல்களுக்காக தீவிரமாக மெனக்கெடும் ஒரு சுயசத்தியத்தை நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்குள் உள்ளப்படுத்திக் கொண்டோம்.

யாவற்றுக்கும் துணைநிற்கும் இயற்கையின் உள்ளார்ந்த இறைமைக்கு, இருதயத்து நன்றிகள்…

அன்பில் நெகிழும்,

தன்னறம் நூல்வெளி – குக்கூ காட்டுப்பள்ளி

http://thannaram.in/

தன்மீட்சி

இயற்கைக் கடலைமிட்டாய்

முந்தைய கட்டுரைநீலத்தாமரை
அடுத்த கட்டுரைகலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி