விஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-13

a

 

விஷ்ணுபுரம் விருதுவிழா:தேவிபாரதி உரை

விஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை

விஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை

விஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை

விஷ்ணுபுரம் விருதுவிழா:ராஜ் கௌதமன் உரை

விஷ்ணுபுரம் விழா உரை – ஜெயமோகன்

விஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்

அன்புள்ள ஜெ.

 

 

தங்களை பலமுறை மேடையில், சக வாசகர்கள் சூழ நின்று பேசிக் கொண்டிருக்க மௌனமாக நின்று கேட்டுவிட்டு அப்படியே கமுக்கமாக திரும்பிவிடுவேன். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். விஷ்ணுபுரம் நாவல் வந்த அந்த முதல் ஆண்டிலேயே, 96/97 களின் முதல் பதிப்பை குறித்து எங்களூரில் தோழர்  யாழன்ஆதியிடம் பேசியிருக்கிறேன். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக விஷ்ணுபுரம் 2018 விழாவுக்காக இரண்டு நாட்களும் எல்லாத் தயக்கங்களையும் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு வந்துவிட்டேன். இதை முதல் ஆண்டிலேயே 2010/2011-லிருந்து செய்திருக்கலாமே என்று இப்பொழுது தோன்றுகிறது. .

 

 

சனிக்கிழமை காலை ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் இளைஞனைப் பற்றி (கேள்வி நேரத்தில்) பேசினீர்கள். அதேபோல ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலைப் பற்றி தாங்கள் எழுதினீர்கள். ப.சிங்காரம் இந்த நாவலை எழுதுவதற்காக அந்த “விபத்துக்குள்ளான தோணி”யில் பயணித்து தப்பிய பலரிடம் அந்த சம்பவத்தை நினைவுகூற முடியாதபடி மறதி குணத்தைக் குறித்து எழுதியிருப்பீர்கள். இதை மறுக்கவில்லை. ஆனால் தங்களின் வாசக நண்பர்களான shahul hameed sultan, Godson Samuel இருவரும் வலைப்பூக்களில் தத்தமது அனுபவங்களை விரிவாகவே எழுதிவருகின்றனர். அதனால் “பெர்த்” நகர இளைஞர் குறித்து கவலைப்படத் தேவையில்லை.

b

 

நூற்றுக்கணக்கானவர்களை நேரிலும், கணிசமான மின்னஞ்சல், அலைபேசி அழைப்புகளில் பேசிக் கொண்டிருக்கும் தாங்கள் என்னுடைய ஓரிரு வரி மின்னஞ்சலை நினைவுகூர்ந்து பேசியது பெரும் வியப்பு. blasphemy குறித்து தாங்கள் பதிலளிக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறேன். ஆனால் வாசகரின் ஒவ்வொரு கேள்விக்கும் எழுத்தாளரால் பதிலளித்துக் கொண்டிருக்கமுடியாது என்பதும், அது கட்டாயமும் இல்லை என்பதையும் விளங்கிக் கொள்கிறேன்.

 

 

முதல் நாள் அமர்வில் நபிகளுக்கு நேர்ந்தது, அம்பேத்காருக்கு நேர்ந்துவிடக்கூடாது – worship study vs critical study என்பதாக ஸ்டாலின் ராஜாங்கத்திடம் கேட்டீர்கள். கச்சிதமாக சொல்லப்படுவது சிறுகதை, விவரணைகளுடன் சற்று விரிவாகவே நல்லதொரு நாவல் தான் எடுத்துக்கொண்ட விஷயத்தை பேசிவிடுகிறது, கவிதை என்பது அறிவுச் செயல்பாடு, அதனால்தான் கவிதை தன் வாசகனிடம் தரத்தை எதிர்ப்பார்க்கிறது என்று சாம்ராஜ் பேசினார்.

 

award

உண்மை. பிரதி அல்லது ஒரு எழுத்தாளன் சொன்னதும், விட்டதில் கொண்ட மௌனமாக தங்களின் கேள்வி இலக்கிய தளத்திலிருந்து சற்று விலகி ஆன்மிகம், மதப் பின்புலத்தில் எதிர்கொள்கிறேன். மதவிசாரணைக்கான உரையாடல் அல்ல, இலக்கிய உரையாடலே. இருந்தாலும் இஸ்லாத்தில் இதுவே நடந்தது, நபியென்பவர் இரண்டு விதமாக செயல்பட்டிருக்கிறார். தனிமனிதர் என்ற நிலையில், அடுத்து இறைத்தூதர் என்ற பொறுப்பில். இந்த இரண்டு வகையிலும் பதிவு செய்யப்பட்ட வரலாறு உள்ளது. தனிப்பட்ட மனிதர் என்ற நிலையில் செய்தவற்றுக்கும் அவர் சார்ந்த கொள்கைக்காக பேசியதும் செயல்பட்டதும் அடிப்படையில் வெவ்வேறானவை. முன்னதில் அவர் வெறும் மனிதர், எல்லோரையும் போல. ஆனால் பிற்காலங்களில் இமாம்களேகூட புனிதமானவர்கள், பாவமே செய்யாதவர்கள் என்பதாக நிலைமை மாறிவிட்டது. அம்பேத்காருக்கு அப்படி நேர்ந்துவிடக்கூடாது என்கிற கவலையில் தங்களுடன் உடன்படுகிறேன்.

என்னுடன் வந்திருந்த நண்பர் ஃபைஸ் காதிரி கோவையைச் சேர்ந்தவர். புவியரசு அவர்களின் மாணவரும்கூட. தமிழின் மிக முக்கியமான கவிதைகளை உருதுவில் மொழிபெயர்த்தவர். தேவதேவனுடன் அருகே அமர்ந்தபடி புவியரசு பேராசிரியரும், கவிஞருமான மதுரை அபியிடம் “விஷ்ணுபுரம்” விழா குறித்து (உணவு இடைவெளியில்) நீண்டநேரம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.

6

ஜாகிர் ராஜா உள்ளிட்ட நிறைய இடதுசாரிகளையும் அங்கு கண்டேன். கோவை ஞானி சிறிது நேரத்துக்கே வந்திருந்தாலும் மாற்று முகாம் சார்ந்தவர்களின் இருப்பை உறுதி செய்ததில் “விஷ்ணுபுரம் அமைப்பு” தவிர்த்து வேறு எங்குமே காணமுடியாது. என்னை போன்ற நிறைய வாசகர்கள் தன்னிச்சையானவர்கள். நீ எங்களுடன் இல்லை என்றால், எதிரியுடன் இருக்கிறாய் என்று பொருள் கொள்வேன் என்பதற்கு நாம் ஒன்றும் Richard Armitage அல்ல தானே?  அதுவுமில்லாமல் இடது, வலது, தெற்கு, வடக்கு என மனம்போன போக்கில் பயணப்படுவதுதானே நமது கீழைத்தேய non-linear சிந்தனை மரபு.

”உரையாடும் காந்தி”யை வாங்கிக் கொண்டேன், கூடவே “அன்புள்ள புல்புல்”லையும். ”கொங்குதேர் வாழ்க்கை”யின் விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பை தமிழினி வசந்தகுமார் முன்பொருமுறை நேரில் வந்து கொடுத்தார். அவரிடம் பிரமிளின் மொழிபெயர்ப்பில் ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் “பாதையில்லா பயணம்” வாங்கிக் கொண்டேன். தவற விட்ட நூலை இப்படியாக விஷ்ணுபுரத்தில் பெற்றுக் கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. ஒரு வாசகனாக அ.மார்க்ஸ்சுடன் எனக்கு ஏற்பும் மறுப்பும் உண்டு. அவருக்கு நூலை தாங்கள் சமர்ப்பித்திருப்பதும், அதை அங்கீகரித்து தன் முகநூல் பக்கத்தில்  அவர் (அ.மார்க்ஸ்) நெகிழ்ச்சியாக பதிவு செய்திருப்பதும் புதிய மாற்றங்கள்.

 

8

ஏதோவொரு திட்டமிடல் குறித்த அவசரத்தில் தாங்கள் இருந்தீர்கள். கூடவே சாப்பிட்டு விட்டீர்களா என்று விசாரித்தீர்கள், ஆம் என்றேன் – இங்கே சாப்பிட்டீர்களா என்று கேட்டு அதை உறுதி செய்துகொண்ட தொனியில் ஒவ்வொரு வாசகனுடன் தாங்கள் கொண்டிருக்கும் அக்கறையை உணர்ந்தேன். உண்மையில் இரண்டு நாட்களும் விஷ்ணுபுரம் தோழர்கள் உபசரிப்பில் என் பழைய ஹாஸ்டல் உணர்வை மீட்டுக் கொடுத்தது. தங்கியது மட்டும் வெளியில். உண்மையில் திருமணத்துக்கு முந்தைய இரவுதான் கொண்டாட்டமாக இருக்கும். அதே நினைவில் வெள்ளியிரவே கோவை வந்துவிட்டேன். அரங்கசாமி சனிக்கிழமை காலைதான் மண்டபம் கிடைக்கும் என்று சொன்னதால் ஜங்கஷன் அருகில் அறையெடுத்து விட்டேன். ஒருவேளை ராஜஸ்தானி சங்க கட்டிடத்தில் தங்கியிருந்தால் இன்னும் சற்று அதிக நேரம் நண்பர்களுடன் பேசவும், புதியவர்களின் நட்பும் அறிமுகமும் கிடைத்திருக்கும்.

 

நன்றி, நமஸ்காரம்.

கொள்ளு நதீம்,

ஆம்பூர்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-12
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-14