அஞ்சலி:பிரபஞ்சன்
இனிய ஜெயம்
ஞாயிறு அன்று இரவே, நண்பர்களுடன் இல்லாமல் , நான் கிளம்ப முடிவு செய்த காரணம் ,திங்கள் அன்று காலை பிரபஞ்சனின் இறுதிப் பயணம் என நான் இறுதியாக கண்டிருந்த செய்தியே .பொதுவாக நான் யாருடைய மறைவுக்கும் செல்பவன் இல்லை .உயிர் கொண்டு ,மொழி கொண்டு அவர் என்னுடன் உறவாடிய இறுதிக் கணம் மட்டுமே ,என் நினைவின் இறுதிச் சுவடாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே காரணம் .
மாறாக பிரபஞ்சனின் இறுதிப் பயணத்தில் நான் கையளித்த ஒரு சிறு மலரெனும் அவர் சென்ற பாதையின் தடத்தில் விழவேண்டும் என விரும்பினேன் . காரணம் எனது நண்பர் ஒருவர் . இப்போது அவர் நல்ல வேலை ,குணம் வாய்ந்த துணைவி ,இனிய குழந்தைகள் என சுகஜீவனத்தின் முதல் படியில் கால் வைத்திருக்கிறார் . அந்தப் படியில் வந்து கால் வைக்க ,அவர் தாண்டி வந்த அகழி இருக்கிறேதே ,அதன் ஆழமும் .இருளும் அன்று அவருக்கு அளித்த திகைப்பு அளவிட இயலாதது .
சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ,பின் தங்கிய வருமானம் கொண்ட குடும்பம் ஒன்றின் ,நம்பிக்கை அவர் . கிடைத்த வேலை எல்லாம் செய்த படி , தமிழ் வழி பயின்று ,துணைக்கு ஆங்கில கைடு எல்லாம் வைத்து தொடர்ந்து வாசித்து ,பரிட்சைகள் எழுதி ,வெற்றி அடைந்து அரசு வேலை ஒன்றில் அமர்ந்தார் .குடும்பம் முழுதும் மகிழ்ச்சி .கனவுகள் .திருமண தேடல்கள் . ஆறே மாதம் அந்த அமைப்புக்குள் இருந்த அதிகார அடுக்குகள் நண்பர் மேல் சுமத்திய தன்மானக் குறைவான விஷயங்களை செய்ய மனமில்லாமல் அந்த வேலையை உதறினார் . மூன்றே மாதம் ,இன்னும் மூன்று நாளில் அவரை மனநல மருத்துவரை நோக்கி அழைத்து செல்ல அவரது சுற்றம் முடிவு செய்திருந்தது .
நீண்ட நாள் கழித்து அந்த சூழலில்தான் நண்பரை சந்தித்தேன் .பேசியபடி அன்று நடந்து கொண்டிருந்த நெய்வேலி புத்தக சந்தை போனோம் .நல்ல மழை. பேச்சாளர் அரங்க வாசலில் ஒதுங்கினோம் .உள்ளிருந்து பேசிமுடித்துவிட்டு வெளியே வந்த பிரபஞ்சன் , பற்றவைத்த சிகரட் புகையின் முதல் சுவாசத்தை வெளியேற்றி ,தளர்ந்து , மழைக்கு ஊடே தூரத்தில் எங்கோ வெறித்து உறைந்து நின்றார் . அந்த நொடி வரை என்னுள் எந்த செயல்திட்டமும் இல்லை .சட்டென உள்ளே எதோ தோன்ற ,வலிய சென்று பிரபஞ்சன் வசம் என்னை அறிமுகம் செய்து கொண்டு ,அடுத்த வரியிலேயே எனது நண்பரின் பிரச்னையை சொன்னேன் . எங்கோ லயித்தபடி கேட்டிருந்தவர் , மானுடக் கீழ்மை அனைத்தும் அகற்ற வந்த தேவனின் குரலில் சொன்னார்
நல்லது … ஒரு கீழ்மையான விஷயத்துக்கு உடன்படாம நிக்கறது இருக்கே அது ரொம்ப நல்லது …
நம்மளால அது முடியாது … அதுதான் நாம . ஆமா நம்மளால அது முடியாது .
அது இயலாமை திராணி இல்லாமை அப்டின்னு சொல்லும் உலகம் . உலகம் அது கிடக்கு .அது நாம யாரோ அதை நிரூபிக்கிற வரை கண்டதையும் சொல்லிக்கிட்டு இருக்கும் .அப்புறம் வேற யாரையும் தேடி இதையே சொல்ல போய்டும் .
தப்பில்ல ..என்ன பண்றது என்ன நடக்கும் …எல்லாமே இப்போ இருட்டாதான் இருக்கும் . ஆனா கொஞ்சம் திரும்பி பாத்தா நாம விட்டிட்டு வந்த இருட்ட விட ,மத்த இருட்டு கம்மின்னு நமக்கு மட்டும்தான் தெரியும் .
விடு …அது நம்மளால முடியாது ..அவ்வளவுதான் .
விருது விழா நிகழும் ஞாயிறு ,கடலூரில் எங்களது இலக்கிய அறிமுக உரையாடல் கூடல் . நானில்லாத கூடலை ,அந்த நண்பர்த்தான் அன்று ஒருங்கு செய்யப்போகிறார் . பேருந்து ஏறி அமர்ந்து இரண்டு நாள் கழித்து இணையத்தை உயிர் கொடுத்தேன் .ஞாயிறு அன்று மாலையே பிரபஞ்சனின் இறுதிப் பயணம் ,புதுவை அரசு மரியாதையுடன் நிகழ்ந்தேறியத்தை அறிந்தேன் . இணையாக நண்பர்கள் அளித்திருந்த சுட்டிகள் வழியே பிரபஞ்சனுக்கான சொற்களை தேடித்தேடி வாசித்தேன் .
அவரை ஆக்கிய சகல நியதிகளாலும் நாளொன்றுக்கு நான்கைந்து முறை கைவிடப்படும் மனுஷ்யபுத்திரன் கேட்டிருந்தார்
பெரியமனிதர்கள் என்று யாருமில்லாத உலகத்தில் எப்படி வாழ்வது பிரபஞ்சன் சார் .
. அவருக்கு பிரபஞ்சன் இங்கிருந்து என்ன பதில் சொல்லி இருப்பார் என அந்தரங்கமாக அறிய முடிந்திருந்தால் இந்த வினாவே அவரில் எழுந்திருக்காது .
என்ன பதில் சொல்லி இருப்பார்
சரிதான் … பெரிய மனிதர்களே இல்லாத உலகத்தில் … தேடி சலிப்பதை விட …. நீதான் பெரியமனிதனாக வாழ்ந்து காட்டி விட்டு போயேன்
என சொல்லியபடி ,இடங்கையின் சிகரட் முனையில் , கங்கில் படிந்துவிட்ட சாம்பலை சுண்டி எரிந்து புன்னகைத்திருப்பார்.
கடலூர் சீனு