விஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-11

IMG_8172
தேவதேவன்

 

 

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

அன்புள்ள ஜெ

 

விஷ்ணுபுரம் விருதுவிழா முடித்து வீட்டுக்கு வந்தபின்னர் நினைத்துக்கொண்டே இருந்தேன். இந்தவகையான பெரிய விழாக்களில் நான் முன்பு கலந்துகொண்டதில்லை. தமிழில் இவ்வகையான பெரிய இலக்கியவிழாக்கள் இல்லை என நினைக்கிறேன். இப்படிப்பட்ட இலக்கியவிழாக்களை நம்மவர் சரியாகப்புரிந்துகொள்ளவில்லை. சின்ன விழாக்களில் கூடி அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதுபோல நினைத்துக்கொள்கிறார்கள். இந்த மாதிரி விழாக்களில் நிகழ்வதை அவர்களால் ஊகிக்கமுடியவில்லை. வந்தபின் ஆச்சரியப்படுகிறார்கள்.

 

வெளியே சிலர் இந்த விழாவிலுள்ள ஒழுங்கு ஒரு எதிர்மறை அம்சமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஒழுங்கு இல்லாமல் இத்தகைய விழாக்களை நடத்தமுடியாது. நடத்தினால் உருப்படியாக எதையுமே செய்யமுடியாது. அதைப்பற்றி நான் உங்களிடம் கேட்டபோது நீங்கள் சொன்னதை ஞாபகப்படுத்துக்கொள்கிறேன்

 

நீங்கள் சொன்னது இதுதான். “அப்படிப் பேசுபவர்கள் யார் என்று பாருங்கள். உருப்படியாக எதையாவது எழுதியவர்கள் அத்தனைபேரும் இதைப்போன்ற ஒழுங்கான நிகழ்ச்சிகளைத்தான் விரும்புகிறார்கள். அவர்களே இதைப்போல நடத்த விரும்புகிறார்கள். அவர்கள் நடத்த முயன்றார்கள். லட்சுமி மணிவண்ணன் கூட பல நிகழ்ச்சிகளை ஒழுங்காக அமைப்பவர்தான். ஒழுங்கில்லாத கூட்டம், சுதந்திரம் என்றெல்லாம் பேசுபவர்கள் அனைவருமே ஓர் அரங்கில் எழுந்து பிறர் மதிக்கும்படி ஒரு கருத்தைக்கூடச் சொல்லும் அறிவுத்திறன் இல்லாதவர்கள். ஒரு அரங்கில் அங்குள்ள வாசகர்களால் மதிக்கும்படி ஒரு இலக்கியப்படைப்பை எழுதமுடியாதவர்கள். அதாவது non entities. அவர்கள் அங்கே ஏதாவது சத்தம்போட்டுத்தான் பிறருடைய கவனத்தை ஈட்டமுடியும். அதன்வழியாகவே தங்களை அங்கே காட்டமுடியும். அந்தச்சுதந்திரம் தேவை என்றுதான் அவர்கள் பேசுகிறார்கள்.ஒழுங்கான ஒரு அவையில் சீரியஸான கருத்தாடல் நடந்துகொண்டிருந்தால் இவர்கள் அப்படியே ஒடுங்கி குறுகி அமரவேண்டியிருக்கும். இவர்களின் பிரச்சினை இந்தத் தாழ்வுணர்ச்சிதான்” என்று சொன்னீர்கள்.

db
டி பாலசுந்தரம்

 

நான் இணையத்தில் இப்படி ஒழுங்குக்கு எதிராகப் பேசுபவர்களைச் சென்று பார்த்தேன். அத்தனைபேரும் ஒருவர்கூட மிச்சமில்லாமல் வெறும் டம்மிபீஸ்கள். ஒரு நல்ல கதை கூட எழுதாதவர்கள். ஆச்சரியமாக இருந்தது. இவர்களின் குரலுக்கு இப்படி ஒரு சின்ன கவனம் வரும் அளவுக்குக்கூட இவர்களுக்கு தகுதி கிடையாது. அதேபோல இங்கே விஷ்ணுபுரம் அரங்கில் வருபவர்கள் எல்லாம் உங்கள் துதிபாடிகள் என்று சிலர் எழுதினார்கள். எழுதியவர்களின் மொத்த வாசிப்பே பத்துபக்கம் தேறாது. சில்லறை அரசியலையும் சினிமா வம்புகளையும் பேசும் கூட்டம் இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறது.

 

இந்த அரங்கிலே பேசப்பட்டதெல்லாம் என்னைப்போன்ற ஒருவருக்கு மிகப்பெரிய கொடை. நான் மூன்று ஆண்டுகளாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் பேச ஆளில்லை. விஷ்ணுபுரம் விழாவிலேதான் பேசுவதற்கு துணை கண்டுபிடிக்கிறேன். நிறைய பேசினோம். அரங்கிலே பேசப்பட்டவற்றைப்பற்றியும் நிறையவே பேசிக்கொண்டோம்.

DSC_0318

அரங்கிலே பேசியவற்றில் எனக்கு ‘unconscious writing’ பற்றித்தான் நிறைய சந்தேகம். அதை எல்லாரும் ஒரு கொள்கையாகச் சொல்கிறார்களா என்று சந்தேகம். உண்மையில் அது சாத்தியம்தானா? அதேபோல ராஜ் கௌதமனிடம் அவர் முன்முடிவுடன் எழுதுகிறாரா என்ற கேள்வி. முன்முடிவு இல்லாமல் எவராலும் சிந்திக்கவே முடியாது என்று தோன்றியது.

 

சரவணன் சந்திரன் பேசியதிலும் சந்தேகம். அவர் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை வெவ்வேறு களங்களில் நிகழ்கிறது, அதை எழுத வெவ்வேறு களங்களை தேர்வுசெய்வதாகச் சொன்னார். ஆனால் அந்தக்களங்களை ஏன் எழுதவேண்டும்? அதெல்லாம் விக்கிப்பீடியா விவகாரம்தானே? அந்தக்களங்களுக்கு எதிர்வினை ஆற்றும் நம் மனம்தானே முக்கியம்? அது நாம் பிறந்த ஊரில் catering செய்யப்பட்டதுதானே? அதை எழுத நம்மூர் இமேஜ்கள்தானே உதவும்?

 

நிறைய கேள்விகள். அவற்றை எழுதி வைத்துக்கொண்டேன். நீண்ட கடிதமாக பின்னர் எழுதுகிறேன்

 

சிவக்குமார் சுப்ரமணியம்

award

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

விஷ்ணுபுரம் விழா சிறப்பாக நடந்தது. நான் முந்தையநாள் மட்டும்தான் கலந்துகொண்டேன். அவசரமாகப் போகவேண்டியிருந்தது. நிகழ்ச்சிகள் செறிவாக ஏராளமான செய்திகளுடன் இருந்தன. ஒவ்வொரு அரங்கிலும் ஒரு உலுக்கல்போல புதிய சிந்தனைகள். இன்று அறிவுத்துறையில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஒட்டுமொத்தமாகப் பார்க்கமுடிந்தது. குயிஸ் நிகழ்ச்சி எனக்கு பெரிய தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்தியது. இலக்கியத்தில் எந்தக்கேள்வி கேட்டாலும் பதில் சொல்கிறார்கள். நானெல்லாம் ஒன்றுமே வாசிக்கவில்லை என்று தோன்றியது

 

ஒரு சின்ன விஷயம். அரங்கிலே சரவணன் சந்திரன் பேசும்போது நீங்கள் அவரை ஃபேஸ்புக் எழுத்தாளர் என்று சொல்லிவிட்டதாகச் சொன்னார். நீங்கள் சொன்னது தெளிவாகவே இருந்தது. இன்றைக்கு இளைஞர்கள் உலகம் முழுக்க பரவியிருக்கிறார்கள். ஒரு டம்ப்ளர் தண்ணீரை ஒரு கிலோமீட்டருக்கு பரப்புவதுபோன்றது இது. [உங்கள் உவமைதான்] அந்த வாழ்க்கைக்கு உரிய தளம் ஃபேஸ்புக். அதில் ஒரு சுருக்கமான மொழி உருவாகி வந்தது. அந்தமொழியைக்கொண்டே இலக்கியம் படைக்கலாமென காட்டியவர் சரவணன் சந்திரன். [ஆனால் ஃபேஸ்புக் போல சின்னச்சின்ன துணைச்சம்பவங்களாக சிதறிச்செல்வதாக அவர் கதைகள் இருப்பதாக இன்னொருவரின் கேள்வி இருந்தது] சரவணன் சந்திரன் அந்தக்கோணத்தில் யோசிக்கவில்லை என்றும் அவருடைய படைப்புக்களில் ரோலக்ஸ் வாட்ச் போன்றவை பற்றி இப்போது அதிருப்தி இருப்பதாகவும் சொன்னார்.

DSC_0265

வெளியே பேசும்போது மூத்த எழுத்தாளர் ஒருவர் சொன்னதை அருகே நின்று கேட்டேன். எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் வெளிவந்தபோது அவருடைய ஆசிரியர் தேவதேவன் கடுமையான விமர்சனங்களைச் சொன்னார். ஆனால் இன்று நீங்கள் ஒரு பாராட்டான அப்செர்வேஷனைச் சொன்னபோதுகூட சரவணன் சந்திரனின் ஃபேஸ்புக் நண்பர்கள் அவரை ‘ஏத்திவிட்டு’ அவரை நீங்கள் திட்டிவிட்டதாக சொல்லி அவர் வருத்தப்படுகிறார். இப்படியிருந்தால் எப்படி விமர்சனம் வரும்? விமர்சனம் வராமல் எப்படி தன்னை அவர் மதிப்பிட்டுக்கொள்ளமுடியும்?

 

இன்றைய சூழலில் உண்மையிலேயே பெரிய பிரச்சினை இந்த ஃபேஸ்புக் விஷச்சூழல்தான். எதைச்சொன்னாலும் அதை வம்புகளாக ஆக்குகிறார்கள். உண்மையான உரையாடலுக்கே வழியில்லாமல் ஆக்குகிறார்கள். இந்த அரங்கிலே இவ்வளவு பேசப்பட்டிருக்கிறது. சமூகவலைத்தளத்திலே வாழ்க்கைபூரா அலைந்தால்கூட இதில் பேசப்பட்டவற்றில் நாலைந்து விஷயங்கள்கூட காதில் விழமுடியாது. இதுதான் இன்றைக்குள்ள சிக்கல் என்று நினைக்கிறேன்

 

எஸ்.திருக்குமரன்

விஷால்ராஜா

 

அன்புள்ள ஜெ

 

விஷ்ணுபுரம் விருதுவிழாவில் நிகழ்ந்த உரையாடல்கள் மிகமிக சிந்தனையைத் தூண்டுவனவாக இருந்தன. 2009ல் நான் திருவனந்தபுரம் பிலிம் ஃபெஸ்டிவல் போனேன். ஒரே விழாவில் உலகசினிமா எனக்கு அறிமுகமாகியது. இன்றுவரை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதேபோல இலக்கியமும் எனக்கு ஒரே வீச்சில் அறிமுகமாகியது சென்ற ஆண்டு விழாவி. இந்த ஆண்டு அது பலமடங்கு பெருகியிருக்கிறது

 

ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வொரு வகை. ஒவ்வொரு கோணம். எல்லாருமே ஆத்மார்த்தமாகப்பேசியதனால் உண்மை மட்டுமே ஒலித்தது. மற்ற அரங்குகளில் உள்ள வெற்றுப்பேச்சு அறவே இல்லை. எவருமே உங்களையோ உங்கள் அமைப்பையோ பொய்யாகப் பாராட்டவில்லை. சம்பிரதாயங்கள் இல்லை.நேரடியாகக் கருத்துப்பரிமாற்றம் மட்டுமே

 

DSC_0311

 

ராஜ் கௌதமன் சொன்னதுபோல அரங்கிலிருந்தவர்களும் பெரும்பாலும் எழுத்தாளர்களாகவே இருந்தார்கள். அது ஒரு பெரிய விஷயம். ஆகவே கேள்விகள் மிகமுக்கியமானவையாக இருந்தனநான் ஐந்து முரன்பாடுகள் ஒலித்தபடியே இருப்பதைக் கண்டேன்

 

1. திட்டமிட்டு எழுதுவது x  தன்னிச்சையாக எழுதுவது

 

2 தன் நிலத்தை எழுதுவது Xசென்று பார்த்த ஊர்களையும் எழுதுவது

 

3 ஐடியாலஜியை எழுதுவது Xஅழகியலை எழுதுவது

 

4 நெகெட்டிவிட்டியை எழுதுவது X பாஸிட்டிவான மனநிலையை சென்றடைவது

 

5 வணிக எழுத்து X தீவிரமான எழுத்து

 

இந்த முரண்பாடுகளை ஒட்டியே பெரும்பாலான கேள்விகள் இருந்தன. இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தரப்பு என்பதைக் காண முடிந்தது. என்ன ஆச்சரியமென்றால் வெளியே பேசிக்கொண்டிருந்தவர்களிலும் இரு பக்கங்களுக்குமே ஆளிருந்தார்கள்

 

ஜெயக்குமார் மதுரை

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா:கடிதங்கள் 10
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா 2018, உரைகள்