கவிதை ஒருவிவாதம்

அன்புள்ள ஜெ,

வணக்கம்.

உங்கள் “சில கவியியல் சொற்கள்” படித்ததும் ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஒரு முறை ஆர்க்குட் தளத்தில் “மோசமான/மட்டமான கவிதை” (“Bad poetry”) என்ற தலைப்பில் நிகழ்ந்த ஒரு விவாதம் நினைவுக்கு வந்தது.

அச்சமயம், சிலபல காரணங்களால், அந்த விவாதம் முடிவில் எங்கும் போய்ச் சேரவில்லை. ஆனால், அந்த விவாதத்தினூடாக எழுப்பப்பட்ட சில கேள்விகள்/எண்ணங்கள் மனதில் எங்கோ ஊசலாடிக்கொண்டே தான் இருந்தன. இப்போது உங்கள் தளத்தில் “சில கவியியல் சொற்கள்” படித்ததும் அந்த விவாதம் நினைவுக்கு வரவே, ஆர்க்குட் தளத்துக்குச் சென்று அதைக் கொஞ்சம் அகழ்ந்தெடுத்து வந்தேன். (பார்க்க: இணைப்பு, குறிப்பாக பதினோராம் பக்கத்தில் மஞ்சள் ஹைலைட் செய்துள்ள இடத்திலிருந்து)

நான் பார்க்குமுன் இந்த விவாதத்தில், “கஷ்டமா இருக்கிறது எல்லாம் மோசமான கவித,” “ஈசியா இருக்கிறது எல்லாம் மோசமான கவித,” “ரெண்டும் இல்லாம நடுவாந்திரமா இருக்கிறதெல்லாம் மோசமான கவித,” “மரபுக்கவித மோசமான கவித,” “புதுக்கவித மோசமான கவித” என்கிற ரேஞ்சில் எல்லாவற்றையும் மறுதலித்து மட்டையடி அடித்துக் கொண்டிருந்தார்கள்.

நானோ “மோசமான/மட்டமான” என்பதும் “கவிதை” என்பதும் ஒரு விதத்தில் ஒன்றுக்கொன்று ஒவ்வாத சொற்கள்—”அவலட்சணமான அழகி” என்பது போல—என்ற நிலையில் நின்று தொடங்கினேன் (“‘Bad’ Cannot Be ‘Poetry'”). “சுமாரான கவிதை” என்பது வேறு, “மோசமான/மட்டமான கவிதை” என்பது வேறு; அடிப்படையில் மோசமான அல்லது மட்டமான ஒன்று (பிற தகுதிகள் இருப்பினும்) “கவிதை” என்று அழைக்கப்படுவதற்கான தகுதியை இழக்கிறது என்பது எனது வாதமாக இருந்தது.

அதாவது, “கவிதை” என்பதில் அதன் வடிவம் மற்றும் ஓசை நயத்தைத் தாண்டிய ஏதோ ஒன்று சாரமாக இருக்க வேண்டும். அந்த சாரம் இல்லாமல் வெறும் எதுகை மோனை மற்றும் யாப்பின் இலக்கணங்களை மட்டும் ஒட்டி எழுதப்படுவது ஒரு செய்யுள் (verse) என்பதற்கான தகுதியை அடைகிறதேயன்றி அது மட்டுமே என்றும் கவிதை ஆவதில்லை என்பது எனது தரப்பு. அதனால், ஒன்று “கவிதை” என்று அடையாளப்படுத்தப்படுவதற்கான தகுதியை அடையுமேயானால் அது “மோசமான” அல்லது “மட்டமான” என்கிற தளங்களைக் கடந்ததாகவே இருக்க இயலும் என்பது எனது புரிதல். அவ்வாறிருக்க, “மோசமான/மட்டமான கவிதை” என்று சொல்வது பொருளற்றது என்று வாதிட்டேன்.

இதில், அந்த “ஏதோ ஒன்று சாரமாக இருக்க வேண்டும்” என்று சொன்னேன் இல்லையா, அந்த ஒன்று எது என்பதை (நீங்கள் கூட அடிக்கடி சுட்டும்) “உயர்கவித்துவம்” என்று தான் என்னால் உணர முடிந்திருக்கிறது. நமது அகவயமான ரசனைகளுக்கெல்லாம் ஆதாரமாக அப்படி ஒன்று கருத்து வடிவில் புறவயமாக இருப்பதாகவே நினைக்கிறேன் (அறிவு தளத்தில் பிளாட்டோவின் “world of ideas” போன்று; உணர்வு தளத்தில் இம்மானுவேல் கான்ட்டின் “sublime” போன்று). (இது கருத்து வடிவில் பற்பல வகையான உன்னதங்களுக்கு இலக்கணமாக, “abstract”-ஆக இருப்பதால் இதனை இன்னது என்று வார்த்தைகளால் சுட்டுவது அநேகமாக இயலாத ஒன்றாகவே உள்ளது; ஆயினும், மனதால் சட்டென்று உணரப்படக் கூடியது.)

நமது மனம் இந்தப் புறவயமான உன்னதமான அம்சங்களுடன் ஒத்திசையும் போது “ரசனை” என்பதை நாம் அகவயமாக உணர்கிறோம். அதாவது, நமது “ரசனை” என்பது தான் அகவயமானதே தவிர, நாம் ரசிப்பது புறவயமாக எப்போதும் இருக்கும் சில அடிப்படை சமன்பாடுகளையே என்பது எனது வாதம்.

(எனது புரிதல்: ஓர் இசைக்கோர்வையோ கவிதையோ சிற்பமோ ஓவியமோ காலத்தைத் தாண்டி நிற்கும் சில தீராத அடிப்படைத் தன்மைகளைக் கொண்டிருக்கும் போது அது உன்னதத் தன்மையைத் தன்னகத்தே “கொண்டிருக்கிறது” (வெறும் “கொண்டிருப்பதாய்ப் பார்க்கப்படுகிறது” இல்லை). அதை உருவாக்கியவரைத் தவிர யார் யாருக்கெல்லாம் அதே அடிப்படைத் தன்மைகளுடன் ஒத்திசைவு இருக்கிறதோ (அல்லது ஏற்படுகிறதோ), அவர்கள் அதனை அகவயமாக ரசிக்கிறார்கள்; அப்படி ரசிப்பதை உணரவும் செய்கிறார்கள். தத்தம் ரசனை வழியாகத் தாங்கள் ரசிப்பதுடன் ஒன்றி விடுவதால், அப்படி ரசிக்கப்படும் இசைக்கோர்வையில், கவிதையில், சிற்பத்தில், ஓவியத்தில் தாங்கள் காணும் உன்னதம் என்பது தங்களின் அகவயமான உணர்வில் தான் இருக்கிறதேயன்றி அதனில் (அல்லது பொதுவில்) புறவயமான இருக்கும் ஏதோ ஒன்று அல்ல என்று மயக்கம் கொள்கிறார்கள்.)

“இவ்வளவு தன்னம்பிக்கையோடு பேசுறியே, உனக்கு தான் எல்லாந்தெரியுமே, அப்புறம் என்ட்ட எதுக்கு கேக்குற?” என்று எண்ணி தவிர்த்திடாதீங்க! :) இது வரை சொன்னது, ஏற்கெனவே சொன்னது போல, என்னுடைய புரிதல் மட்டுமே. தவறான புரிதலாகக் கூட இருக்கலாம். உங்கள் எண்ணங்கள் என்ன? (நேரமிருந்தால் இணைப்பையும் பாருங்களேன். இரண்டு வருடம் பழைய உரையாடல் என்றாலும் கருத்தளவில் பெரிய மாறுதல் ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.)

அன்புடன்
விஜய்

அன்புள்ள விஜய்

இலக்கியம் மற்றும் தத்துவ விவாதங்களை ஆரம்பிக்கும் வயதில் இப்படி விவாதிப்பதில் பெரும் ஆர்வம் இருக்கும். எனக்கும் இருந்தது. நரியை பரியாக்கிவிடலாம் என்ற தன்னம்பிக்கையின் விளைவு. இதை நுண்விவாதம் என நினைப்போம் . அது வெறும் தர்க்க- சொல் விளையாட்டே.

நாம் அறியும் அனுபவம் கண்முன் உள்ளது. எமர்சன் கவிதைகளுக்கும் வர்ட்ஸ்வர்த் கவிதைகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. இரண்டுமே கவிதைகள். இரண்டுமே ஒரே பேசுபொருள் கொண்டவை. வர்ட்ஸ்வர்த் எழுதியது மாபெரும்கவிதை. எமர்சன் எழுதியவை மோசமான கவிதைகள்.

என்ன வேறுபாடு? இலக்கிய விமர்சனத்தில் இதைப்பற்றி நிறையவே பேசப்பட்டுள்ளது. நீங்கள் எலியட், எஸ்ரா பவுண்டில் இருந்தே இந்த விவாதங்களை தொடர்ந்து வாசிக்கலாம்.

மகத்தான கவிதை என்பதைப்பற்றிய அரவிந்தரின் வரையறை எனக்கு உவப்பானது. ‘ Supreme poetic utterance’ என்கிறார். உன்னதமான கவிதை மொழியில் நிகழும் ஒரு அபூர்வமான தற்செயல். ஒரு தனி மனித ஆழ்மனம் மானுட கூட்டுஆழ்மனமாக தன்னை உணர்ந்துகொண்டு தன் வெளிப்பாட்டுக்குரிய மொழியமைப்பை கண்டுகொள்ளும் தருணத்தில் உருவாவது அது.

அந்த அபூர்வ கவிதை எப்போதும் நிகழ்வது இல்லை. அது ஓர் உச்சம். ஓர் இலக்கு. ஒரு கனவு. ஆனால் கவிதை என்பது ஒரு சமூக நிகழ்வாக எப்போதும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கவேண்டியிருக்கிறது. கவிதை எழுதுவதும் வாசிப்பதும் பண்பாட்டின் அன்றாடச்செயல்களில் ஒன்று

இந்நிலையில் பல தர நிலைகளில் உள்ள கவிதைகள் எழுதப்படுகின்றன. அவை மகத்தான கவிதையை மானசீகமாக பின் தொடரக்கூடியவையாகவே பெரும்பாலும் இருக்கின்றன. இவ்வாறு கவிதை ஒரு புறவயமான பொதுக் குறியீட்டுக் கட்டமைப்பை உருவாக்கும்போது அதை பயின்று கற்றுக்கொண்டு மேலும் பலர் கவிதை எழுதுகிறார்கள். அவை மோசமான கவிதைகள்

ஆனால் அவையும் கவிதைகளே. ஆனால் அவை வெளிப்பட்டவை அல்ல, செய்யப்பட்டவை. வர்ட்ஸ்வர்த்தை நோக்கி எமர்ஸன் செய்தார். அந்தக்கவிதைகளிலும் கவியனுபவம் உள்ளது. கவியனுபவத்தின் நாலாம் கார்பன் பிரதி எனலாம். ஆனால் அதற்கான சமூக தேவை உள்ளது. மேலான கவிதை நோக்கிச் செல்லக்கூடிய படிகளாக அவை அமையலாம். மேலான கவிதை உருவாக்கிய அழகியலையும் தரிசனத்தையும் பரவலாக்க அவை உதவலாம்

கம்பன் மகா கவிஞன். புகழேந்தி புலவர் அவன் ஒளியில் எழுதிய சாதாரண கவிஞன். கம்பன் எழுதியவை மகா கவிதைகள். புகழேந்தி எழுதியவை மோசமான கவிதைகள். ஆனால் புகழேந்தி கம்பனுக்கு கொண்டு செல்வார். கம்பனை நினைவூட்டுவார். ஆகவே அவரும் கவிஞர்தான்

இவ்வாறு வரையறை செய்யலாம். கவிதை என்பது ஒரு சமூகத்தின் கூட்டுநனவிலியில் உள்ள படிமங்கள் மொழிக்குறிகள் மூலம் இணைக்கப்பட்டு புதிய படிமங்கள் உருவாக்கப்படும் ஒரு வெளிப்பாட்டு முறை

மேலான கவிதை அந்த ஆழ்படிமக் கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைத்து புத்தம்புதிய மொழிவெளி ஒன்றை உருவாக்குகிறது. மோசமான கவிதை ஏற்கனவே இருக்கும் மொழிவெளிக்குள் ஆழ்படிமக் கட்டமைப்புக்குள் செயல்படுகிறது

வர்ஸ்ட்வர்த் அன்று வரையிலான கவிதையின் ஆழ்படிமக் கட்டமைப்பில் ஒரு பெரும் திறப்பை உருவாக்கினார். எமர்ஸன் வர்ஸ்ட்வர்த் உருவாக்கிய மொழிக்களத்துக்குள் நின்று எழுதினார்.

இது ஒன்றும் விரிவாக விவாதிக்க வேண்டிய விஷயமே அல்ல

ஜெ

முந்தைய கட்டுரைஓர் உதவி
அடுத்த கட்டுரைசோற்றுக்கணக்கு, கடிதங்கள்