அன்பின் திரு ஜெயமோகன் .
மிகவும் சிறப்பான விழா . பங்குகொள்ள அழைத்தமைக்கு மனமார்ந்த நன்றி .. அனைவரும் பங்குகொள்ளும் படைப்பாளிகளை வாசித்துவிட்டு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது . எனது உரையாடல் பகுதி தாண்டியும் அடுத்த நாள் கிளம்பும் வரை நிறைய பேர் நேரில் சந்தித்து எனது படைப்புகளை குறித்து உரையாடல் நிகழ்த்தியது மனதிற்கு உற்காசமாகவும் , மகிழ்ச்சியாகவும் இருந்தது . அடுத்த ஆண்டும் நிச்சயம் கலந்துக்கொள்வேன் .
நன்றி
நரன்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் இலக்கியவிழா முடிந்தபின் நினைவிலிருந்து மீளமுடியாமல் இதை எழுதுகிறேன். நான் இதுவரை கல்லூரியில் நிகழும் இலக்கியவிழாக்களில்தான் கலந்துகொண்டிருக்கிறேன். இப்படி ஒரு விழாவை நான் நினைத்துப் பார்த்ததில்லை. இதுதான் நான் கலந்துகொண்ட இலக்கிய விழா.
முன்பு சென்னையில் சில இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன்.அந்த விழாக்களுக்கெல்லாம் ஒரு பொதுவான அம்சம் உண்டு. அவையெல்லாமே முடிந்தபின்னர் ஒருவகை சோர்வைத்தான் அளிக்கும். பெரும்பாலானவர்கள் எந்தத் தயாரிப்பும் இல்லாமல் வந்து பேசுவார்கள். இலக்கியவாதிகள் அப்படிப்பேசினால்கூடப் பரவாயில்லை. நிகழ்ச்சி பார்க்க வந்தவர்கள் கேள்விகேட்கிறேன் என்று பேசித்தள்ளுவார்கள். அதிலும் சிலர் ஒரே விஷயத்தைத்தான் எல்லா விழாக்களிலும் பேசுவார்கள். பெரும்பாலான கூட்டங்களில் ஒரே விஷயம்தான் பேசப்படும். ஒரு நாலைந்து கூட்டம் கேட்டால் என்ன பேசுவார்கள் என்பதே தெளிவாகிவிடும்.
அத்துடன் கூட்டம் ஆரம்பிக்கவே லேட் ஆகும். முக்கியப்பேச்சாளர் பேசும்போது மிகவும் லேட் ஆகிவிடும். அதைக்கேட்காமலேயே செல்லவேண்டும். அதைவிட அந்த முக்கியப்பேச்சாளர் பேச நேரமே அளிக்காமலும் ஆகும். எந்த அறிவும் பயிற்சியும் இல்லாதவர்கள் வரவேற்புரை என்ற பேரிலும் தொகுப்புரை என்றபேரிலும் பேசித்தள்ளுவார்கள். இலக்கியக்கூட்டம் என்றாலே சலிப்பும் சோர்வும்தான் மிஞ்சும். ஆகவேதான் கூட்டம் போவதில்லை. சாருநிவேதிதா கூட்டம் நான் போவேன். அங்கே சீரியஸாக ஒன்றும் இருக்காது. ஆனால் அறுத்துக்கொல்லமாட்டார். உற்சாகமாக இருப்பார். அரங்கும் கொஞ்சம் உற்சாகமாக இருக்கும்.
விஷ்ணுபுரம் விழா மிகச்சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்ததனால்தான் அந்த நிறைவு வந்தது. எல்லாருக்கும் பேச இடமிருந்தது. ஒரு மணிநேரத்துக்குள் ஒரு அமர்வுமுடிந்து இன்னொன்று ஆரம்பித்தது. ஆகவே எந்த நிகழ்ச்சியும் இழுபட்டதாகவே தெரியவில்லை. எனக்கு சரவணன் சந்திரன், ஸ்டாலின் ராஜாங்கம் இருவரும் பேசியது மிகவும் பிடித்திருந்தது. ஆத்மார்த்தமாகப்பேசினார்கள். பல புதிய திறப்புக்கள் வந்துகொண்டே இருந்தன. இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை உலகம் முழுக்கச் சிதறியிருப்பதை எழுதிய எழுத்தாளராக அவரை நீங்கள் வர்ணித்தது மிகவும் பொருத்தமானதுதான்.
சுனீல்கிருஷ்ணன் மிகச்சிறப்பாகப்பேசினார். அவருடைய மகிழ்ச்சி நன்றாகவே தெரிந்தது. அவர் தன்னுடைய சொந்தவாழ்க்கை, எழுத்துக்குப்பின்னணி ஆகியவற்றைப் பேசியிருக்கலாம். மீட் த ஆதர் என்றால் அந்த ஆசிரியரைப் புரிந்துகொள்வதுதான் முக்கியமான நோக்கம். கலைச்செல்வி அந்தக்கோணத்தில் நன்றாகவே பேசினார் என நினைக்கிறேன்.அனைவருடைய படைப்புக்களையும் வாசித்துவிட்டு வந்து பேசிய கூட்டம்தான் இந்த அரங்கின் பலம். ஆனால் அரங்கிலிருந்தவர்களுக்கே ஒரு விமர்சனநிலைபாடு இருந்தது. எவர் முக்கியம் எவர் முக்கியமில்லை என அவர்கள் ஏற்கனவே முடிவிலிருந்தார்கள் என நினைக்கிறேன்.
விழாவுக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்ததும் நன்றாக இருந்தது. நான் கவனித்தவரை விஷால்ராஜா சுரேஷ்பிரதீப் ஆகியோர் நன்றாக இளைஞர்களைக் கவர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். கடலூர் சீனு, வேணுவேட்ராயன் ஆகியவரையும் பலர் அணுகிபேசிக்கொண்டிருந்தார்கள். நான் தேவதேவனிடம் சில வார்த்தைகள் பேசினேன். அது ஒரு பெரும் பேறு என நினைக்கிறேன்.
எம்.மகேஷ்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் நிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. அனைவரும் சிறப்பாகப் பேசினார்கள். பேச்சில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தைக் காட்டினார்கள். என்னைப்போன்ற இளைஞர்களுக்கு எல்லாவகையான பார்வைகளையும் அறிய வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் என்ன பிரச்சினை என்றால் எல்லாமே சரியாகவும் தெரிகிறது. தெளிவை அடையமுடியவில்லை. தன்னை மறந்து எழுதுவதே இலக்கியம் என்று கலைச்செல்வி, சரவணன் சந்திரன் சொன்னார்கள். ஆனால் திட்டமிடல் இல்லாமல் எழுதமுடியாது என்று சரவணக் கார்த்திகேயன் சொன்னார். வாசகனைப்பற்றி நினைப்பதே இல்லை என்று தேவிபாரதி சொன்னார். வாசகனுக்காகவே எழுதுகிறேன் என்று சரவணக்கார்த்திகேயன் சொன்னார். எவரை எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை.
ஆனால் ஒரு பெரிய போதைபோல இருந்தது. அங்கே நான் ஒன்று கவனித்தேன். எல்லா எழுத்தாளர்களும் அவர்களை எவரெல்லாம் கவனிக்கிறார்கள் என்றுதான் பார்க்கிறார்கள். அவர்களுக்கு வாசகர்கள் இருப்பது தெரிந்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இல்லாவிட்டால் சோர்வடைகிறார்கள். நான் இன்னும் ஒன்றும் பெரிதாக எழுதவில்லை. ஆனால் ஒருநாள் எழுதி அந்தமேடையில் அதேபோல அமர்ந்திருக்கவேண்டும் என்று ஆசைவந்தது. இந்த விழாவிலிருந்து நான் அடைந்தது இதைத்தான்
பழனிகுமார்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
விஷ்ணுபுரம் விருதுவிழா இனிதே முடிந்தது. ஆவணப்படம் மிகச்சிறப்பாக இருந்தது. அதில் பேராசிரியரின் மனைவி ஒரு குழந்தை இறந்ததைப்பற்றிச் சொல்லும்போது இறுகிய முகத்துடன் இருக்கிறார். அவர் பதற்றம் அடைகிறார். அந்த இடம் என்னையும் படபடப்பு அடையச்செய்தது. பேராசிரியர் கிராமத்துக்குச் செல்வதும் திரும்பி வருவதும் ஒரு கவிதைபோல அழகான காட்சி ஓவியம்.
ஆனால் பேராசிரியரின் பேச்சு எனக்குப்புரியவில்லை. அது முன்பின்னாக தாவித்தாவிச்சென்றது என்று தோன்றியது. அதேசமயம் ஸ்டாலின் ராஜாங்கம் பேசியது அற்புதமாக இருந்தது. தலித் பண்பாட்டு வரலாறு எப்படியெல்லாம் மறைக்கப்படுகிறது என்று அவர் சொன்னார். அவ்வாறு மறைப்பவர்கள் கெட்டநோக்கத்துடன் மறைப்பதில்லை. அவர்கள் செய்ததை மிகையாக்கிக் கொள்வதற்காகவே மறைக்கிறார்கள். ‘தீவிரமாக ஆதரிப்பவர்கள் களத்தில் ஒன்றுமே செய்ததில்லை. களத்தில் பெரும் பணியாற்றிய பலபேர் தீவிரமான கொள்கை கொண்டவர்களாகவும் இல்லை’ என்று ஸ்டாலின் சொன்னது என்னை சிந்திக்கவைத்தது
சாம்ராஜ் அவர்களின் பேச்சு பலருக்குப் பிடித்திருந்தது. ஆனால் அவர் நக்ஸலைட்டுகள் கள்ளமில்லா மனம்கொண்டவர்கள், நல்லவர்கள், இலட்சியவாதிகள் என்றே பேசிக்கொண்டிருந்தார். அதெல்லாம் ஒரு இமேஜ்தான் என்று எனக்குத் தோன்றியது. அவர்களின் இணையதளம்தான் எனக்குத்தெரியும். கீழ்த்தரமான வெறுப்பைக் கக்குபவர்கள் அவர்கள் என்பதே எனக்குப்புரிந்தது. பலபேர் வெறும் சாதிவெறியர்களும்கூட
நான் இதைப்போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதில்லை. ஆனால் இந்நிகழ்ச்சி எனக்கு சுழற்றிச்சுழற்றி அடிப்பதுபோல இருந்தது. எவ்வளவு கருத்துக்கள். போதைபோல இருந்தது. இலக்கியத்திலே எதையாவது சாதித்துக்காட்டவேண்டும் என்ற வெறி எழுந்தது
சண்முகராஜ்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருதுவிழா மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. இத்தனை எழுத்தாளர்களை ஒருகுடைக்கீழ் பார்ப்பதென்பது இன்றைக்கு மிக அரிதாகவே நிகழ்கிறது. நான் மின்னஞ்சல் போட்டிருந்தபோது பாவண்ணன் வருவார் என்று சொன்னீர்கள். சுப்ரபாரதி மணியன் வந்திருந்தார். உடனடியாகச் சென்றுவிட்டார். கோவை ஞானி அய்யாவைச் சந்திக்க முடிந்தது. மிகச்சிறப்பான ஒரு சந்திப்பாக இருந்தது அது. தேவிபாரதி, நாஞ்சில்நாடன் ஆகியோருடனும் பேசினேன்
இந்த ஆண்டு இரண்டுநாளும் இரண்டுமணிநேரம் எழுத்தாளர்களுடன் சந்திப்புக்கு ஒழுங்குசெய்திருந்தது மிகச்சிறப்பாக இருந்தது. மிக மகிழ்ச்சியான இரண்டுநாள் நிகழ்ச்சி. எல்லா பேச்சுக்களும் மிகமிக க்ரியேட்டிவாக இருந்தன. நான் கண்டது ஒன்றே. மெய்யாகவே நிறைய யோசிப்பவர்களிடம் என்ன கேட்டாலும் அவர்கள் மிகச்சிறந்த பதிலையே அளிக்கிறார்கள். உதாரணம் ஸ்டாலின் ராஜாங்கம். அவரிடம் எதுகேட்டாலும் அவர் அளித்தபதில் கேள்வியை மேலே கொண்டுசென்றது.
ஜெயக்குமார் முருகேசன்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் நிகழ்ச்சியின் அத்தனை உரையாடல்களும் மிகச்சிறப்பாக அமைந்திருந்தன. ஆனால் குவிஸ் நிகழ்ச்சிதான் உச்சம். எப்படிப்பட்ட வாசகர்கள் அரங்கிலே இருந்தார்கள் என்பதை அங்கே வந்திருந்தால் எழுத்தாளர்கள் உணர்ந்திருப்பார்கள். பலர் அப்போது அறைக்குச் சென்றுவிட்டார்கள். எந்த ஒரு நூலில் இருந்தும் எந்த ஒரு கேள்வி கேட்டாலும் பதில் வந்தது. பிரமிப்பாக இருந்தது. இப்படியெல்லாம் நான் வாசித்ததே கிடையாது.
நன்றி ஜெ, அற்புதமான இரண்டுநாள் அனுபவம். நானும் சிறந்த வாசகனாக வந்து சந்திக்கிறேன்
அருண் செல்வா