விஷ்ணுபுரம் விழா:கடிதங்கள்-9

raaj

அன்புள்ள ஜெ,

கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் 2018-ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விழா வெகு உற்சாகத்துடன் நடந்து முடிவுற்றுள்ளது. இலக்கிய அமர்வுகள் தந்த தாக்கத்திலிருந்து இன்னும் நான் விடுபடவில்லை. சில எழுத்தாளர்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. இரு தினங்களும் ஒருவித கட்டுக்கோப்பான, அடர்த்தி மிக்க அமர்வுகள். எழுத்தாளர்களின் உலகம் என்னவாக இருக்கிறது என்பதை வாசகர்கள் உணர்ந்து கொள்ளும் விதமான உருப்படியான அமர்வுகள். இலக்கிய அமைப்புகளும், எழுத்தாளர்களும் தன் முனைப்பில் உதிரி உதிரியாக ஆண்டுக்கணக்கில் செய்கின்ற பணியைத் திட்டமிட்டு இரண்டே நாட்களில் செய்துவிடுகிறீர்கள். இவ்வாறான இலக்கிய அரட்டைகள் தான் உங்கள் கனவு என்பதை அறிவேன்.

அனிதா அக்னிஹோத்ரி, சுனில், ஸ்டாலின் ராஜாங்கம், தேவிபாரதி, லீனா மணிமேகலை, மதுபால், ராஜ்கவுதமன் அமர்வுகள் செறிவாக அமைந்திருந்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். அனிதா ஆங்கிலத்திலும், மதுபால் மலையாளத்திலும் பேசியது பார்வையாளர்களை எவ்விதத்திலும் சிரமப்படுத்தவில்லை.

 

ஜான் சுந்தர்
ஜான் சுந்தர்

இரண்டாம் நாள் விருது வழங்கும் நிகழ்வின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துப் பாடிய அந்தச் சிறுமியின் குரல் “சங்கரா சங்கரா” என்று இன்னும் என் செவிகளில் பாய்ந்து கொண்டிருக்கிறது. இரண்டு நாட்களும் ஒரு தொப்பியணிந்த இஸ்லாமிய இளைஞர் சுறுசுறுப்பாக அரங்கில் ஓடியாடி வேலை பார்த்ததை நான் சற்று வித்தியாசமாக கவனித்தபடி இருந்தேன்.

பேரா.ராஜ்கவுதமனின் இயல்பே அப்படித்தான் போல. எல்லாக் கேள்விகளையும் அவர் சற்று ஹாஸ்ய பாவத்துடனே எதிர்கொண்டாலும், பொறுப்பான பதில்களைத் தந்தார். ராஜ்கவுதமனின் ஆய்வுப்பணிகள் குறித்து நீங்கள் ஆற்றிய உரை எல்லா உரைகளிலிருந்தும் தனித்துவத்துடன் இருந்தது. எழுதப்படாத வரலாற்றை அவர் எழுதினார். பெரிதாக தமிழ் இலக்கிய உலகம் கண்டுகொள்ளாத ஆளுமைக்கு விஷ்ணுபுரம் அமைப்பினர் விருதளித்து சிறப்புச் செய்துள்ளனர்.

புத்தகக்கடை விரித்திருந்தவர் வரிசையில் பாரதி புத்தகாலயமும் இடம் பெற்றிருந்ததைக் கவனித்தேன். நிறைய எழுத்தாள நண்பர்களை, இதுவரை சந்தித்திராத பல வாசகர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.

விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றியும்.

-கீரனூர் ஜாகிர்ராஜா.

 

வணக்கம்.

கடந்த  மூன்று  வருடங்களாக  விஷ்ணுபுரம்  விழாவிற்கு வந்து  கொண்டிருக்கிறேன். இந்த  முறை  கொஞ்சம் புதிது.

முதல் நாள்..  முதல் அமர்வு.

முதல் கேள்வியே நீ என்னை மட்டுமே வாசி.. என்பதாக என் வலைத்தளம் சுட்டுவதாக கேட்கப்பட்டது.ரையியிட்டு.. சாமீ.. நாமளா போயீ எங்கயும் நிக்கறதில்லேன்னு ஆயிடுச்சு.. புக்குல பிரசுரம் ஆவுது.. பிறகுபுக்காவும் போட்டுக்குறோம்.. எல்லாம் பேப்பர்தானே.. காலத்துக்கு தக்க எதுலயாச்சும் சேமிச்சுக்கலாம்னு(சும்மா ஒரு நெனப்புக்குதான்) ப்ளாக் ஓபன் பண்ணியாச்சு. இதுல இன்னோரு விசயமும் கெடக்கு… நாமஅமைப்புகிமைப்புன்னு யார் கூடவும் சேந்துக்கறதில்ல.. தன் கையே தனக்குதவி.. சர்தான் போட்டுவப்பமேனுட்டு ப்ளாக் ஆரம்பிச்சா இதென்ன இப்டியொரு ஏழரைய கூட்டீட்டாரே கிருஷ்ணன்னுமடமடக்குன்னு யோசிச்சேன். இதுல ஒரு சிக்கல் பாத்தீங்கன்னா, நாம மத்தவங்கள பத்தி சொல்லறதுக்குஇன்னும் கொஞ்சம் துாரம் போக வேணாமான்னு மனசு கெடந்து அடிச்சுக்குச்சு.. சரி.. அப்பப்ப வாசிச்சத பத்திதோன்றதை மொகநுால்ல போடுறமே அதை சொல்லி வப்போம்னு மொதக்கேள்விக்கே கொஞ்சம்ரணகளமா யோசிச்சாச்சு.. ஆனா அதுக்கு பிறகு மனசு குழைய ஆரம்பிச்சுடுச்சு.. யோசிக்கவே தோணல.

அனிதா அக்னிஹோத்ரி நூல் வெளியிட்ட ஜனிஸ் பரியத்தின் சிறுகதை தொகுதி

ப்பு இல்லேன்னா நானெல்லாம் இன்னைக்கு நின்னுருக்க முடியாது. சுயபரிதாபமேகொன்னுருக்கும். அம்மாடீ.. கலை.. இதெல்லாத்தையும் வேற ஒரு சக்தியா மாத்திக்கலாம்னு கை நீட்டிஇழுத்துக்கிச்சு இலக்கியம். உள்ளொடுங்கலான ஆளுதான் நானு. ஆனாலும் இலக்கியத்துக்கு வந்த பிற்பாடுநிறைய மேடைய பாத்தாச்சு. இப்ப அதிலயும் நாட்டம் போயிடுச்சு.

ஆனால் இந்த மேடை கம்பீரமானது. ஆளுமையானது.மேடையில், சரவணன்சந்திரன் குழப்பமும் தவிப்புமாக பேசியதை கேட்டபோது “முன்னொரு காலத்திய நான்“ என்பது போல தோன்றியது. சிஎஸ்கேவின் பதில்கள் வெளிப்படைத்தன்மையும், நேர்மையுமாக இருந்தன. சுனில் மேடைக்கு நெருக்கமான உடல்மொழியோடு அமர்ந்து, கேள்விகளை எதிர்க்கொண்டார். ஓவியம் கைவராத காரணத்தால் எழுதுகிறேன் என்ற அவரின் கருத்தையொட்டி நரனுக்கும் கருத்திருந்தது. நானும் கூட உலகை.. செய்திகளை.. மனிதர்களை.. நடப்புகளை வடிவங்களாக்கிக் கொள்வேன். (பெரும்பாலும் அவை சதுரங்களுக்குள் அடங்கிப் போய் சப்பிட்டு போய் விடுகின்றன என்பது வேறு விஷயம்). ஸ்டாலின்ராஜாங்கத்தின்அமர்வு சிந்தனைக்கான இடமாக தோன்றியது. புரட்சி ஒரு குழந்தைக் கனவு என்று போகிறபோக்கில் சாமராஜ் சொன்ன கருத்து முக்கியமானதாக தோன்றியது. கலகலப்பான நிகழ்வு அவருடையது. ராஜ்கௌதமன் அவர்களின் நிகழ்வும் அவ்வாறே. எந்த கேள்விக்கும் அவரிடம் நேரிடையாக பதில் பெற முடியாமல் போவதை அவரே ரசித்து செய்வதாகத் தோன்றியது. வாழ்வின் எந்தவொரு நிகழ்வும் யாதொரு முக்கியத்துவமும் இல்லாதது போன்றும் அதே நேரம் செறிவானதொரு உரையாடலாகவும் அமைந்தது தேவிபாரதி அவர்களின் அமர்வு.

இம்மாதிரியான இலக்கிய வளர்த்தெடுப்பு  எங்கேனும்  நடைபெறுகிறதா  என்பது குறித்து நான் அறிந்திலேன்.

வீட்டு விழாக்களில் கூட ஏதேனும் விடுபடல்கள் ஏற்பட்டு விடும். இங்கு அதுமாதிரியான எதுவும் இதுவரை இருந்ததில்லை. இம்முறையும் அவ்வாறே. ஒற்றைக் குடையின் கீழ் கவியும் நபர்கள் தனித்தனி ஆளுமையாளர்கள் என்பதை புரிந்துக் கொள்ளும்போது, ஆளுமையின் ஆளுமை குறித்து புரிந்துக் கொள்வது எளிது.

 

னிப்பட்ட வகையில், இவ்விரண்டு நாட்களும் நான் தக்கையாகி, எப்போதும் பறப்பதற்கு ஏதுவாகவே நின்றுக் கொண்டிருப்பேன். ஆனால் இம்முறை நான் கீழே கால்களை ஊன்றிக் கொள்ள வேண்டியிருந்தது. நல்லவேளை முதல் அமர்விலேயே என் பொறுப்பு கழிந்துப் போனதால் மீண்டும் தக்கையாக மிதந்தலைந்தேன். அமர்வில், என்னை மீறி “நான்“ வெளிப்பட்ட தருணத்தை நான் மதிக்கவே செய்கிறேன். இன்னொரு சேதியையும் சொல்லியே ஆக வேண்டும். கடந்த ஆறு வருடங்களாக நான் எழுதிக் கொண்டிருந்தாலும், தங்களின் வழியே கற்றதும் பெற்றதும்தான் என்னை உருவாக்குகிறது என்பது கூட, என்னை மீறி வந்தவைகளே. இது underplay செய்வது போன்ற தோற்றத்தை உருவாக்கியதாக ஒருவர் அபிப்பிராயப்பட்டபோது, உண்மையை ஒப்புக்கொள்வதில் ஏன் தயங்க வேண்டும் என்று தோன்றியது.

எவ்வகையிலும் குறைவின்றி நடக்கும் இத்திருவிழா, இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான கூறு.

அனைத்தையும் வேறு வார்த்தைகளின்றி “நன்றி“க்குள் புதைக்கிறேன்.

 

அன்புடன்

கலைச்செல்வி.

 

மொழிபெயர்பபளர்கள் நிர்மால்யா அழகியமணவாளன் மொழிபெயர்க்கப்பட்ட மதுபால்

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,

விஷ்ணுபுரம்    விழாவுக்கு என்னால் இந்த வருஷம் 2 நாட்களும் வந்து கலந்துக்க முடியவில்லை. கல்லூரியில் ஃபர்ஸ்ட் இயர் என்பதால் outing dates, gate pass, warden permission போல பல விஷயங்கள் இப்போது  நான் ஹாஸ்டலில் இருந்து வெளியே வர தேவைப்படுகின்றது. இருந்தாலும் ஞாயித்துக்கிழமை காலையில் அனுமதி வாங்கி ராஜஸ்தானி சங்கத்துக்கு வந்துட்டேன்

என்னை கல்லூரியிலிருந்து பேருந்துநிலையம் வரை என் கெமிஸ்ட்ரி பேராசிரியர் அவரின் பைக்கில் கொண்டு வந்து விட்டார். விடுமுறை அன்னிக்கு நான் நேரத்திலேயே எழுந்து புறப்பட்டு ஒரு இலக்கிய கூட்டத்துக்கு போறேங்கறதை அவரால நம்பவே முடியலை. என்னிடம் எல்லாவிவரமும் விசரிச்சு,  என்னைக்கட்டித்தழுவிக்கொண்டு கூட்டத்துக்கு போறதுக்கே வாழ்த்துசொல்லியனுப்பினார்

சண்டே மதியம் வரைக்கும் தான் என்னால  மீட்டிங்கில் இருக்க முடிஞ்சுது, ஆனாலும் உங்களைப்பார்த்ததிலும், விஜயசூரியன் மாமா அரங்கா மாமா  எல்லாரையும் பார்த்து பேசினதிலும் மிகவும் மகிழ்ச்சி

 

தங்கவேல்

ஒரே ஒருதரம் மட்டும் நான்  பொள்ளாச்சியில் அம்மாவின் கல்லூரியில் சந்திச்சிருந்த M.கோபாலக்ருஷ்ணன் சார் கூட என்னை ’’சரண், நல்லா இருக்கியா ‘’ன்னு கேட்டார். நாஞ்சில் நாடன் சார்,  ஷாகுல் மாமா, மது மாமா , சுரேஷ்பிரதீப் அண்ணா, இப்படி நிறைய பேருடன் பேசிட்டு இருந்தது மகிழ்சியாக இருந்தது. முந்தின நாள் குவிஸ் கலந்துக்கலையேன்னு வருந்தினேன் அதில் கேட்ட சில கேள்விகளை அம்மா சொன்னப்போஅன்னிக்கு மதியம் வரை நடந்த அமர்வுகள் மட்டும் இருந்து கவனிச்சேன்.லீனா மணிமேகலை அவங்களோட அமர்வில் இருந்தேன். அப்புறமா அவங்க புத்தகம் வாங்கி  அந்தரக்கன்னி வாசிச்சேன் நல்லா இருந்தது அவங்க பேசின சில விஷயங்கள் என் வயசில் இருக்கும் பெண்களும் பசங்களும் தெரிஞ்சுக்க வெண்டியதுதான்னு நினக்கிறேன்

அனிதாஅக்னிஹோத்ரி மேம் அவங்க அமர்விலும் இருந்தேன். அவங்க  எழுதின சில பக்கங்களை வாசிச்சாங்க  அவங்க பெங்காலி பேசினது ரொம்ப நல்லா இருந்தது,  இந்திய மொழிகளில் மத்த மொழியை வேற யாராச்சும் பேசறப்போ அது அழகா இருக்கும் ஆனா வங்கமொழியை மட்டும் அதை தாய்மொழியா கொண்டவங்க பேசும்போதுதான் அழகா இருக்கு. (அப்படின்னு நான் நினைக்கறேன்! )அவங்க கதையிலிருந்து ஒரு பக்கம் அன்னிக்கு ஒரு பிரதி கொடுத்தாங்க  அமர்வு நடக்கும் போதே வாசிச்சேன். அது ஒரு  selected  page  போலிருக்கு. ரொம்ப நல்லா இருந்தது. இது மாதிரியே மத்த முக்கிய எழுத்தாளர்கள் பேசறப்போவும் அவங்க எழுதினதில் ரொம்ப முக்கியமான சிலதை மட்டும் எல்லாருக்கும்  கையில் கொடுத்தா அதை ஒருவேளை படிக்காம வந்திருந்தவங்களுக்கும் வசதியா இருக்கும்னு நினைச்சேன். சுசித்ராக்கா சொன்ன எரிகல் ஏரி கதை பிடிச்சிருந்தது ரொம்ப, ராஜ் கெள்தமன் சாரின் புக் பத்தி எனக்கு சரியா புரியலை. அவர் என்ன ஆய்வு செஞ்சுருக்காருனெல்லாம் எனக்கு உண்மையிலேயே புரியலை. இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு வாசிக்கும் போது புரியும்னு நினைக்கறேன். அவர் நல்லா ஜாலியா பேசினார்.

 

ராம்குமார், சுரேஷ்பாபு, சுனீல்கிருஷ்ணன், அய்யலு ஆர் குமரன்

மதுபால் சாரின்  சில கதைகளை அம்மாவை சொல்லச்சொல்லி கேட்டுக்கிட்டேன். மற்ற எந்த கதையையும் கல்லூரியில் அதிக வேலை இருந்ததால் வாசிக்க முடியலை. இனி நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிச்சு முடிச்சுருவேன்

7 ஆம் வகுப்பில் படிக்கும் போது உங்க கதைகளுக்கும் தளத்துக்கும் அறிமுகமானேன். மழைப்பாடலில் வெண்முரசில் இணைந்தேன். இன்னிக்கு விஷ்ணுபுரம் விழாவில் பலரை எனக்கும் பெரும்பாலானவங்களுக்கு என்னையும் தெரிஞ்சிருக்கு. நானே சுயமா தமிழில் வாசிக்கவும் எழுதவும் செய்யறேன். எல்லாத்தையும்விட நீங்க எழுதறது வாசிக்கவும் புரிஞ்சுக்கவும் க‌ஷ்டம்னு சிலர் சொல்லறப்போ எனக்கு நல்லாவே புரியுது. இதெல்லாமே எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயங்கள்.ஆனா நான் இன்னும் நல்லா தமிழ் எழுத கத்துக்கனும். இந்த கடிதத்துக்கும் session க்கு என்ன தமிழ்லன்னு அம்மாட்டெ கேட்டுதான் எழுதறேன்.

சாம்ராஜ் அவர்களின் ஒரு கவிதை புத்தகம் வாங்கினேன். அரங்குக்கு வெளியே கடலைமிட்டாய் விற்பனை இருந்தது. ஹாஸ்டல் நண்பர்களுக்கும்  சேர்த்து வாங்கிட்டு  வந்தேன்.  விழா பத்தி நண்பர்கள்ட்டெ பேசிட்டே , எல்லாருமா சாயங்காலம் அதை சாப்பிட்டோம்

Thank you for the Sweet memories sir

 

ம்ரித விஸ்வ வித்யாலத்திலிருந்து,

சரண்

லீனா மணிமேகலை

 

 

 

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா:கடிதங்கள் 8
அடுத்த கட்டுரைபாட்டும் தொகையும் ஆவணப்படம் -கடிதங்கள்