விஷ்ணுபுரம் விருதுகளை முன்பெல்லாம் நவம்பர் வாக்கில்தான் முடிவெடுப்போம். சென்ற ஆண்டு சீ.முத்துசாமிக்கான விருதை ஆகஸ்டிலேயே அறிவித்தோம், மலேசியாவின் சுவாமி பிரம்மானந்தர் அவர்களின் ஆசிரமத்தில் நிகழ்ந்த இலக்கிய விழாவில். அது ஒரு நல்ல விளைவை உருவாக்கியது. கிட்டத்தட்ட நான்குமாதக்காலம் முத்துசாமி பேசப்பட்டார். அவருடைய படைப்புக்கள் வாசிக்கப்பட்டன.
ஆகவே இவ்வாண்டு மேலும் முன்னரே ராஜ் கௌதமனுக்கான விருதை அறிவித்தோம். அவர் எழுதியவை ஆய்வுநூல்கள். அவற்றை வாசகர்கள் வாசித்துவிட்டு விழாவுக்கு வருவதற்கு அது உதவியாக இருந்தது. அரை ஆண்டுக்காலத்தை ஓர் ஆசிரியருக்காக ஒதுக்க முடிந்தது. ஆகவே இனிவரும் காலங்களில் ஜூன் மாதம் விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது வழங்கப்பட்டதுமே விஷ்ணுபுரம் விருதை அறிவித்துவிடலாமென்பது எங்கள் எண்ணம்.
விஷ்ணுபுரம் விருதின் நோக்கமே அமைப்புசார்ந்து கவனிக்கப்படாத, கௌரவிக்கப்படாத படைப்பாளிகளை வாசகர்நடுவே நிறுத்துவதுதான். இந்த ஒன்பதாண்டுகளில் நாங்கள் விருது அளித்த அனைவருக்குமே அந்த வாசகக் கவனம் கிடைத்துள்ளதைப் பார்க்கிறேன். இவ்விழாவுக்குப்பின் அவர்கள் தங்களுக்கு வாசகர்கள் இருப்பதை உணர்கிறார்கள். ஆகவே ஊக்கம் அடைகிறார்கள். உடல்நிலையில்கூட பெரும் மாறுதல் உருவாகிறது.
இது முழுக்கமுழுக்க இலக்கியவாசகர்கள் சேர்ந்து அளிக்கும் விருது என்பது இந்த கவனத்தை உருவாக்குகிறது. வெறுமே விருது அளிக்காமல் அந்த ஆசிரியரைப்பற்றிய விரிவான விவாதத்தை உருவாக்குவதும், ஆவணப்படம் எடுப்பதும் இவ்விருதின் வழிமுறைகளாக உள்ளன. அவ்வகையில் இன்று தமிழில் அனைத்துவகையிலும் முதன்மையான விருது இதுவே. இந்த விழாவில் விருதுபெறும் எழுத்தாளர் மட்டுமே முக்கியமானவர். அவரை மட்டுமே முன்னிறுத்துவோம்.
2010ல் இதன் செலவு மொத்தமே ஒரு லட்சம்ரூபாய்தான். ஐம்பதாயிரம் விருது, ஐம்பதாயிரம்விழாச்செலவு. இன்று பன்னிரண்டு மடங்கு செலவாகிறது. அன்று முந்தையநாளே வந்து தங்கியிருந்தவர்கள் நாற்பதுபேர். இன்று முந்நூறுபேர். அரங்கில் குறைந்தபட்சம் எப்போதும் முந்நூற்றைம்பது பேர் இருந்தனர். ஆரம்பகாலத்தில் இவ்விழாவுக்கு வருகைதந்தவர்கள் [மணிரத்னம் முதல் இளையராஜா வரை] பெரும்பாலும் சொந்தச்செலவிலேயே வந்தனர். ஒருகாலத்தில் கல்யாணமண்டபத்தின் ஒரே கூடத்தில் வெறுந்தரையில் ஜமுக்காளம் விரித்து நூறுபேர் படுத்து குளிரில் நடுங்கியிருக்கிறோம் [அதுவே பொற்காலம், அன்று எல்லாரும் சேர்ந்திருந்தோம். இரவெல்லாம் பேசினோம். இப்போது வசதியாக இடம் அமைந்தபோது தனித்தனியாகப்போய்விட்டோம் என பலர் இம்முறை புலம்பினர்]
இன்று விருந்தினர்களுக்கான பயணச்செலவு மிக முக்கியமான அம்சமாக ஆகிவிட்டிருக்கிறது. பங்கேற்பாளர்கள் தங்குவதற்காக மட்டும் விழா நிகழும் ராஜஸ்தானி சங்க் அரங்கைத் தவிர மூன்று மாளிகைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. வசதியான படுக்கைகள் கொண்ட இடங்கள். இன்னமும் ஆடம்பரம் நோக்கிச் செல்லவில்லை. செல்லும் நோக்கமும் இல்லை. ஆனால் வசதியின்மை இல்லை.
இம்முறை ஐந்து கடைகள் விழாவின் அரங்கில் அமைக்கப்பட்டிருந்தன. ராஜஸ்தானி சங் அரங்கில் அதற்கான இடம் இருந்தது. தமிழினி, பாரதிபுத்தகாலயம், தன்னறம் ஆகியவற்றின் புத்தகக்கடைகள். கள்ளிப்பட்டி ஸ்டாலினின் கருப்பட்டிக் கடலைமிட்டாய், [ தன் மீட்சி , இயற்கை கடலைமிட்டாய் , நம்பிக்கையின் ஒளி ]சென்னிமலை சிவகுருநாதனின் இயற்கை நெசவு ஆடைகள் [ கைநெசவும் தனிவழியும், செயல்படுவோர் அளிக்கும் மீட்பு ]. அனைத்திலுமே நல்ல கூட்டம் இருந்தது. நாங்கள் முன்வைக்க விரும்புவது மாற்றுப்பண்பாடு, இலக்கியம் ஆகிய இரண்டையுமே, அதற்கான சான்றுகள் அவை
அந்த அரங்குகள் விழாவுக்கு ஒருவகையான ‘கார்னிவல்’ தன்மையை அளிப்பதைக் கண்டேன். பொருட்கள் விற்பனையாகுமா என்ற ஐயம் இருந்தது. மக்கள் பணத்துடன் வரவேண்டும். ஆனால் நினைத்ததற்கு மாறாக நல்ல வணிகம் நிகழ்ந்ததாக அறிந்தேன் அது வெறும் வணிகம் மட்டுமல்ல. இந்தவகையான செயல்பாடுகளுக்கு அளிக்கப்படும் அறம்சார் ஆதரவும்கூட
சிட்னி கார்த்திக்
இந்த பெரிய நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதற்கான நிர்வாகத்திறன் மிக முக்கியமானது. சென்றமுறையும் இம்முறையும் அதற்கு முதன்மைப்பொறுப்பாளர் நண்பர் செந்தில்குமார். தொழில்முறையில் அவர் ஒர் உயர்நிலை நிர்வாக மேலாளர். இப்போது தொழில்துறையில் இறங்கியிருக்கிறார்.அடுத்ததாக ராம்குமார். இந்திய ஆட்சிப்பணியில் இருப்பதனால் அவரும் நிர்வாகிதான். டைனமிக் இரும்புவணிக நிலையத்தின் உரிமையாளரும் நண்பருமான நடராஜனும் நிர்வாகிதான். இறுதியாக மீனாம்பிகை. அவரும் நிர்வாக அனுபவம் கொண்டவர்.
செல்வேந்திரன் நீண்டகாலமாக இதழியலில் செயல்பட்டு வருபவர். தொடர்புகளை நிர்வாகம் செய்பவர். சூரியன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான நண்பர் விஜய் சூரியன் உணவு ஏற்பாடுகள் அனைத்தையும் இருங்கிணைத்தார். அவர்களால்தான் இந்நிகழ்ச்சி இத்தனை பிழையில்லாமல் நிகழ்ந்தேறியது. நிகழ்ச்சியில் மாற்றுக்கருத்தில்லாமல் பாராட்டுபெற்றது ஒருங்கிணைப்பின் கச்சிதம்தான். அதற்கு இவர்கள்தான் ஆதாரம்
இத்தகைய நிகழ்ச்சிகளை முறையாக ஒருங்கிணைக்காவிட்டால் வருகையாளர்கள் அனைவருக்கும் பயணம், தங்குமிடம் ஏற்பாடு செய்வதிலிருந்து ஒவ்வொன்றிலும் குறைபாடுகள் உருவாகும். அனைவரும் சீராக தங்கள் பங்களிப்பை அளிக்கமுடியாமலாகும். எங்கோ ஓர் ஒழுங்கு குலைகிறது என்றால் அதன் பொருள் அந்த ஒழுங்கை நம்பி இருக்கும் ஒருவர் ஏமாற்றப்படுகிறார், ஒழுங்கைக்குலைப்பவர் அவரைச் சுரண்டுகிறார் என்பதே.
நான் இன்றுவரை பார்த்தவரையில் நிகழ்ச்சிகளின் ஒழுங்குகளைக் குலைப்பவர்கள் எவருமே, ஒருவர்கூட எச்சமில்லாமல், படைப்பூக்கம் அற்ற ஒட்டுண்ணிகள் மட்டுமே. படைப்பு என்பதே ஓர் ஒழுங்கு என்பதை படைப்பாளிகள் அறிவார்கள். ஆகவே இவ்வுலகின் இயல்பான ஒழுங்கிலாப்பெருக்கை தங்களுக்குள் ஒழுங்காக ஆக்கிக்கொண்டே இருக்கிறார்கள். ஒழுங்கின்மை அல்லது அத்துமீறல் அவர்களிடம் இருப்பது படைப்பு நிகழும் போது, அந்த தன்னிச்சையான எழுச்சியின்போது மட்டுமே. அது நிகழவேண்டுமென்றால் புறவுலகம் ஒழுங்குக்குள் அமைந்தாகவேண்டும் என்பதையும் அவர்கள் அறிந்திருப்பார்கள்
மனக்குறைகள் ஏதுமில்லாமல் இந்நிகழ்ச்சி சென்ற சில ஆண்டுகளாக நிகழ்கிறது.வழக்கமாக பெரிய நிறுவனங்கள் இவ்வகை நிகழ்ச்சியை நடத்தும். அவர்கள் ஆண்டுமுழுக்கச் செயல்படும் அலுவலக அமைப்பும், ஊழியர் அணியும் கொண்டிருப்பார்கள். ஆகவே அவர்களால் இவற்றை சீரான முறையில் நிகழ்த்தமுடியும். எங்களுக்கு ஊழியர், அலுவலகம் எதுவுமே இல்லை. வெறும்நண்பர்களின் திரளைக்கொண்டு இப்படி ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதற்கு ஒவ்வொன்றையும் முன்னரே காணும் கண் தேவை. முழுமையான திட்டமிடல் தேவை. அவற்றை நடத்திமுடிக்கும் சமநிலைகொண்ட மனம் தேவை.
செந்தில்குமார், ராம்குமார், நடராஜன், மீனாம்பிகை, செல்வேந்திரன், விஜய்சூரியன் ஆகியவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் நன்றி சொல்லவேண்டும். அவர்கள் நால்வரின் திறன் மட்டும் அல்ல, அவர்கள் நால்வருக்கும் ஒருவரோடொருவர் இருக்கும் நட்பும் இதில் முக்கியமான பங்காற்றுகிறது. அவர்கள் மிகச்சிறந்த இலக்கியவாசகர்கள். அனேகமாக அங்கு வந்த அத்தனை எழுத்தாளர்களையும் முழுக்க வாசிப்பவர்கள். ஆனால் அவர்களில் பலருக்கு ஐந்துநிமிடம்கூட அரங்கிலமர வாய்ப்பு அமையவில்லை. அவர்களின் அந்த கொடை நெகிழ்வூட்டுவது.
இவ்விழாவுக்கு நன்கொடை அளித்தவர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். பலரை இதுவரை நேரில் பார்த்ததே இல்லை. கடிதங்கள்கூட அனுப்பாதவர்களே மிகுதி. பெரும்பாலும் அனைவருமே என் இணையதளத்தின் வாசகர்கள். நிறுவனங்களிடம் கொடைபெறவில்லை. முதன்மையான காரணம் இது வாசகர்கள் அளிப்பதாகவே இருக்கட்டும் என்பதுதான். அதில் அதைப்பெறும் ஆசிரியனுக்கு ஒரு கௌரவம் உள்ளது
இவ்விழாவுக்கு சுவிட்சர்லாந்திலிருந்து சுசித்ரா, சிங்கப்பூரிலிருந்து சுபா, ஆஸ்திரேலியாவிலிருந்து கார்த்திக், லண்டனிலிருந்து சிறில், ஜெர்மனியிலிருந்து செந்தில்குமார் தேவன், அமெரிக்காவிலிருந்து சிவா சக்திவேல் என ‘சர்வதேச’ வாசகர்கள் வந்து பங்கெடுத்தனர். பலர் இவ்விழாவுக்காகவே வந்து கோவையிலிருந்தே இரவில் விமானமேறினர். துபாயிலிருந்து ஜெயகாந்த் ராஜு குடும்பம் வந்திருந்தது. ஆஸ்டின் சௌந்தர் மிக நன்கு அறிந்த குழும நண்பர். குடும்பத்துடன் வந்திருந்தார். அவரை நண்பர்கள் இப்போதுதான் பார்க்கிறார்கள்.
செந்தில்குமார் தேவன், நண்பர் சுரேஷ்பாபுவும் [யுவால் நோவா ஹராரி ரசிகர்பேரவை சென்னை] இருவரும் இணையத் தொடர்புகளை கவனித்துக்கொண்டார்கள். திருக்குறள் அரசியின் அர்த்தமண்டபம் என்னும் அமைப்பு உள்ளூர் தொடர்புகளை உருவாக்கியது ஈரோடு பாரி, அழகியமணவாளன், திருப்பூர் ராஜமாணிக்கம், அந்தியூர் மணி ,ராதாகிருஷ்ணன், சென்னை ராகவ் ஆகியோர் வெவ்வேறு வகையில் இந்நிகழ்ச்சியில் பங்காற்றியிருக்கிறார்கள். வழக்கம்போல ஈரோடு விஜயராகவன் விருந்தினர்களை கவனித்துக்கொண்டார். அதற்குத் தேவையான முடிவிலாத பொறுமை கொண்ட ஓரிருவரில் ஒருவர். சமீபத்தில் திருமணமான தாமரைக்கண்ணன் மனைவியுடன் வந்திருந்தார்.
குழும நண்பர்கள் அனைவருக்கும் அணுக்கமானவராக இருந்தவர் வே.அலெக்ஸ். இந்த ஆண்டு அவர் இல்லை. சென்ற ஆண்டே சிகிழ்ச்சையில் இருந்தார். அவருடைய சிகிழ்ச்சையிலும் அவர் குடும்பத்தின் மீட்சியிலும் விஷ்ணுபுரம் குழுமம் முதன்மையான பங்கு வகிக்கிறது. அலெக்ஸுக்கும் எனக்கும் அணுக்கமான நண்பரான அயோத்திதாசர் ஆய்வுநடுவத்தின் பாரிசெழியன் வந்திருந்தார். நிகழ்ச்சி முழுக்க அலெக்ஸ் நினைவு இருந்துகொண்டே இருந்தது.
நண்பர்களுடனான சந்திப்புகள் முன்பெல்லாம் விஷ்ணுபுரம் விருதுவிழாவின் முக்கியமான ஒரு பகுதியாக இருர்ந்தன. இன்று அனைவருக்குமே பொறுப்புகள் அளிக்கப்பட்டு ஆளுக்கொரு திசையில் பறந்துகொண்டிருந்தார்கள். எவரும் எவருடனும் பேசிக்கொண்டிருப்பதைக் காணமுடியவில்லை. இது ஓர் இழப்புதான். ஆகவே ஜனவரி ஒன்றாம் தேதி நண்பர்கள் மட்டும் சந்திக்கலாமென ஒரு முடிவு செய்திருக்கிறோம்
இந்த விழாவில் ஒன்றைக் கவனித்தேன். விஷால்ராஜாவை ஒர் இளைஞர் ‘அவர்லாம் சீனியர்ங்க’ என்றார். விஷாலுக்கு 25 வயதுதான். இவருக்கு 21 வயது. காலச்சுவடில் கதை எழுதியிருக்கிறாராம். அரங்கசாமிக்குப்பின்னால் மூன்றாம் தலைமுறை வந்துவிட்டிருக்கிறது வாசகர்கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தவர்களில் பாதிப்பேர் இலக்கியவாதிகளாக ஆகிவிட்டிருக்கிறார்கள். ஆகவே இளைஞர்கள் நிகழ்த்துபொறுப்புக்கு வந்தாகவேண்டும்
அதோடு குழுமநண்பர்கள் பலர் சுயதொழிலில் தீவிரமாகிவிட்டிருக்கிறார்கள். விஜய்சூரியன், செந்தில்குமார் போன்றவர்கள் தொழிலதிபர்களாக மலரும் காலம். ஆகவே அடுத்த ஆண்டுமுதல் நிறைய இளைஞர்களை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு வேலைகளுக்குள் கொண்டுவரவேண்டும் என நினைக்கிறேன்
அதோடு ஒன்றும் தோன்றியது. இவ்வாண்டு ஒரு வாசகர்சந்திப்பரங்கில் 350 பேர் வரை அமர்ந்திருந்தனர். இது அந்த எழுத்தாளருக்கு நிறைவளிப்பது. ஆனால் அனைவரும் வினாவி விடைபெற இயலாது. ஏனென்றால் ஒருவருக்கு ஒரு மணிநேரம். அதில் அதிகம்போனால் ஐந்து கேள்விகளுக்கே இடம். நீளமான பதில் என்றால் நாலைந்து கேள்விகள் மட்டும். விவாத வசதிக்காக ஆசிரியர்சந்திப்பு நிகழ்ச்சியை இரண்டாகப்பிரித்து ஒரேசமயம் இரண்டு இடங்களில் இரண்டு சந்திப்புகள் நிகழும்படி அமைத்து விவாதநேரத்தை இரண்டு மணிநேரமாக நீட்டினால் என்ன?
வழக்கமாக வரும் சிலநண்பர்கள் இந்த ஆண்டு வர இயலாமலாகிவிட்டது. அவர்களின் இருப்பு எவ்வகையிலோ உணரப்பட்டது. த்ன் தொழிலில் ஒரு மிகப்பெரிய முன்னடைவுக்கான ஒப்பந்தம் போடவிருந்தமையால் ராஜகோபாலன் வரவில்லை. அவர்தான் எங்கள் அரங்குகளை ஒருங்கிணைப்பவர். புகைப்படக்கலைஞரான சிவாத்மா பிரபஞ்சன் மறைவை ஒட்டிய நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார்.
ஏ.வி மணிகண்டன், நெல்லை சக்தி கிருஷ்ணன், சேலம் பிரசாத் , சந்திரசேகர், குருஜி சௌந்தர் , அருணாசலம் மகாராஜன், விஜயகிருஷ்ணன் என வெவ்வேறு காரணங்களால் வரமுடியாது போனவர்களைப் பற்றிய பேச்சே அதிகமாக இருந்தது. நட்புக்கூடுகைகளின் இயல்பு அது. அங்கே எல்லாரும் நம்மைப்பற்றி பேசவேண்டுமென்றால் வராமலிருந்தாலே போதும். நண்பர்கள் இதை ஓர் உத்தியாகக் கடைப்பிடிக்கிறார்களோ என்றும் சந்தேகப்படலாம்
இவ்விழாவுடன் இணைந்து நிகழ்ந்த முந்தையநாள் நிகழ்ச்சிகள் படிப்படியாக உருவாகி வந்தவை. முதல்ஆண்டு நிகழ்ந்த முந்தையநாள் சந்திப்பில் பிரியத்திற்குரிய இக்கா புனத்தில் குஞ்ஞப்துல்லாவும் மணிரத்னமும் பங்குகொள்ள அது மறக்கமுடியாத நிகழ்வாக இருந்தது. ஆகவே அதை அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்தோம். ஆனால் அதை முறைப்படுத்தவேண்டியதில்லை, தன்போக்கிலான உரையாடல்களாகவே தொடரட்டும் என விட்டுவிட்டோம்.
ஆனால் இருநூறுபேருக்குமேல் அதில் பங்கெடுக்க ஆரம்பித்தபோது பேசுபவர் முகம் அனைவருக்கும் தெரியவேண்டும் என கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே மேடை தேவையாகியது. மேடை வந்ததுமே எவர் மேடையில் எவர் கீழே என தெரிவு வந்துவிடுகிறது. ஆசிரியரைச் சந்தித்தல் என்னும் நிகழ்ச்சியாக அது மாறியது. ஆசிரியரிடம் வாசகர்கள் கேள்விகேட்டு உரையாடுவது என்னும் வடிவம். வாசகர்கள் சுருக்கமாக கேள்விகேட்கவேண்டும் – ஆசிரியருடன் விவாதிக்க அவர்களுக்கு இடமில்லை. ஏனென்றால் பேசவேண்டியவர் அந்த ஆசிரியர் மட்டுமே
ஆசிரியரைச் சந்தித்தல் ஏன் முக்கியமானதாக ஆகியிருக்கிறது? முன்பு சிற்றிதழ்ச்சூழலில் இந்தவகையான நிகழ்ச்சி இல்லை. வட்டமாகக் கூடி அமர்ந்து விவாதிப்பதே வழக்கம். ஆனால் அது ஐம்பதுக்கும் குறைவானவர்கள் பங்கெடுத்தால் மட்டுமே இயல்வது. அவ்வகையான உரையாடல்களில் பெரும்பாலும் அனைவருமே எழுத்தாளர்களாகவும் இருப்பார்கள். தமிழில் எழுத்தாளர்களுக்கு வாசகர்கள் என ஒரு வட்டம் உருவாகியிருப்பது இப்போதுதான். அவர்கள் பெருவாரியாக வருவதும் கோவையில் மட்டுமே. ஆகவே வாசகர்களை எழுத்தாளர்கள் நேருக்குநேர் சந்திப்பதும் உரையாடுவதும் இங்கு மட்டுமே இயல்வது.
முகநூலில் எல்லாம் பெரும்பாலும் வேறுவகையான அரட்டைகளுக்கே வாய்ப்புள்ளது. இங்கு வருபவர்களே மெய்யான வாசகர்கள் என்பதை பங்கெடுத்த எழுத்தாளர்கள் உணர்ந்திருப்பார்கள். கலவையான, தயக்கமான எதிர்வினைகளாக சில இருந்தாலும் அவையே வாசகர்களிடமிருந்து வருபவை. ஆகவே முக்கியமானவை. ஒவ்வொருமுறையும் இங்கே வரும் எழுத்தாளர்கள் தங்கள் மிகச்சிறந்த வாசகர்களை இங்கே திரளாகச் சந்திப்பதாக எழுதியிருக்கிறார்கள். இரா முருகன் தனக்கு இவ்வளவு வாசகர்கள் இருப்பதை உணர்ந்து திகைத்ததாக எழுதியிருக்கிறார்
இம்முறை தேவிபாரதி,ஸ்டாலின் ராஜாங்கம், சரவணன் சந்திரன், சி.சரவணக் கார்த்திகேயன், கலைச்செல்வி, நரன், சாம்ராஜ், சுனீல் கிருஷ்ணன்,லீனா மணிமேகலை ஆகியோர் கலந்துகொண்ட விவாத அரங்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் கூர்மையாக அமைந்திருந்தன. இலக்கியப்பார்வைகளில்தான் எவ்வளவு வேறுபாடு என்று வியந்துகொண்டேன். இலக்கியத்தை ஒரு தொழில்நுட்பமாகப் பார்ப்பவர், அதை ஒருவகை வாக்குமூலமாகப் பார்ப்பவர், இலக்கியம் வழியாக வாழ்க்கையை மாற்றிக்கொள்பவர், இலக்கியம் ஒரு அறிவுச்செயல்பாடு என்று மட்டும் பார்ப்பவர் என பலவகை.
அதேபோல எழுந்துவந்த கேள்விகளும் மாறுபட்டவை. எழுத்தின் இலட்சியவாதத்திற்கும் சமகாலத்திற்குமான உறவு முதல் எழுத்தின் அழகியலுக்கும் அன்றாடத்துக்குமான முரண்பாடு வரை. நான் எண்ணியதுபோல அனைத்துவினாக்களும் எழுத்தாளர்கள் மீதான மதிப்புடன் மட்டுமே முன்வைக்கப்பட்டன. உரையாடலில் அரங்கு ஆசிரியருக்கு ‘எதிர்’ திசையில்தான் அமர்ந்திருக்கிறது. அது எதிர்ப்பதுபோலத் தோன்றும். ஆனால் எதிர்த்திசையிலிருந்து நம்மை நோக்கி வர முயல்கிறது என்பதே உண்மை
இந்த அரங்கு ஒர் ஒட்டுமொத்தச் சித்திரத்தை அளிக்கும்பொருட்டே ஒருங்கமைக்கப்பட்டது. எல்லா தரப்பும் ஒலிக்கவேண்டும் என்பதே இதன் விதி. இலக்கியத்தில் இன்று என்ன நிகழ்கிறது என்பது இவ்வரங்கினூடாகவே ஒரு வாசகனுக்கு வெளிப்படவேண்டும். எழுத்தாளர்களுக்கு இன்றைய வாசிப்பு எந்நிலையிலுள்ளது என்பது தெரியவரவேண்டும். அது நிகழ்ந்தது என்பதை பொதுவான எதிர்வினைகளிலிருந்து உணரமுடிந்தது.
பதிமூன்று அரங்குகளிலாக மொத்தம் 15 மணிநேரம் விவாதம் நிகழ்ந்திருக்கிறது. ஒருநொடிகூடச் சோர்வளிக்காமல் உத்வேகமான இலக்கியப் பேச்சாக இருந்தது. இதில் பேசப்பட்ட கருத்துக்களை சற்று காலம் கழித்து மட்டுமே தொகுத்துக்கொள்ள முடியும். அவை ஒவ்வொன்றும் வாசகர்கள், அறிமுக எழுத்தாளர்களின் உள்ளத்தில் அளித்த ஆழமான பதிவுகள், அங்கே அவை வளரும் விதம் இன்றுநாம் கணிப்பதற்கும் அப்பாற்பட்டவையாகவே இருக்கும்
பொதுவாக கேள்விகளை நான் கவனித்தவரை ஓர் எழுத்தாளரை வாசிக்கையில் வாசகன் சென்று முட்டும் ஓர் எல்லையில் இருந்தே திரும்பி கேட்கப்படுவனவாக அவை உள்ளன. சி.சரவணக் கார்த்திகேயனின் கதைகளை வாசிப்பவர் அவை ஓர் எல்லையில் கச்சிதமாக சொல்லப்பட்ட கதைகள் மட்டுமா என்ற ஐயத்தை அடைகிறார். அதை கேள்வியாகக் கேட்டு அவர் என்ன எதிர்வினையாற்றுகிறார் என கவனிக்கிறார். அந்தக் கேள்வி பொதுவாக அரங்குக்கே உரியது என்றால் அரங்கில் ஒரு கவனம் உருவாகிறது. பதில் நிறைவளித்தால் ஓர் ஓசை எழுகிறது.
சரவணன் சந்திரனின் கதைகள் உலகம் முழுக்க நிகழ்பவை. ஆகவே அவர் தன் நிலத்தை எழுதவில்லை. அவரிடம் நீங்கள் ஏன் உங்கள் நிலத்தை எழுதவில்லை என்று கேட்கப்பட்டது. அது அவர் சொல்லும் பதிலென்ன என்பதைக்கொண்டு அவரை அளவிடும் முயற்சி. ‘என்னால் எழுதமுடியும், ஆனால் என் பிரச்சினைகள் வெளிப்படும் களம் அது அல்ல’ என அவர் சொன்னதை பலர் ஏற்றும் பாராட்டியும் பேசியதைக் கேட்டேன். இப்படி ஒவ்வொரு எழுத்தாளர் சார்ந்தும் அவர்களின் ஆக்கங்களை வாசித்த வாசகர்களுக்கு ஒரு சில மையக்கேள்விகள் உள்ளன. என்றாவது நான் மேடையில் அமர்ந்தால் என்னிடம் என்ன கேட்பார்கள் என ஆவலாக உள்ளது
மாலையில் வழக்கமான குவிஸ் நிகழ்ச்சி. வினாடிவிடை என்பது ஒருவகை விளையாட்டு. ஒரு இசைத்துணுக்கை ஓடவிட்டு இது எந்தப்படத்தின் இசை, இந்த படமாகிய நாவலை எழுதியவர் யார் என்று கேள்வி எழும்போது நம்முள் நூறு படங்களும் நாவல்களும் ஓடுகின்றன. கான் வித் த விண்ட், சவுண்ட் ஆஃப் மியூஸிக் என பல பதில்கள். ஒவ்வொன்றும் மேலும் நினைவுகளைத் தூண்டுகின்றன. பாஸ்டர்நாக் எழுதிய டாக்டர் ஷிவாகோவில் லாரா என்னும் பாடல் என ஒருவர் பதில் சொல்லும்போது ஒரு குதூகலம். கூர்மையாக இரண்டுமணிநேரம் இலக்கியத்தை நினைவில் ஓட்டிக்கொள்வதன் கொண்டாட்டம் அது. நாம் பதில் சொல்லாவிட்டாலும்.
எல்லா கேள்விகளுக்கும் பரிசு உண்டு. முதற்பரிசாக தமிழினியின் ‘கொங்குத்தேர்வாழ்க்கை இரண்டாம்பகுதி’ என்னும் மாபெரும் தொகுப்பை ஜெயவேலு என்னும் வாசகர் வென்றார். பெரும்பாலான வாசகர்கள் நாவல்களின் வரிகளைக்கூட நினைவு வைத்திருந்தார்கள். அசோகமித்திரனின் மிகச்சாதாரணமான வரிகளைச் சொல்லி க் கேட்டபோதுகூட சரியான பதில் வந்தது. நாவல்களின் இறுதிவரிகள் நினைவில் வாழ்பவை என்று நினைத்துக்கொண்டேன்
[கதிர்முருகன்]
நான் கோவைக்கு 21 அன்று காலையிலேயே வந்திருந்தேன். ராஜஸ்தானி சங் அறையில் தங்கியிருந்தேன். பல நண்பர்கள் வந்திருந்தனர். இரவு வரை பேச்சு, விழாவுக்கான திட்டமிடல்கள். மறுநாள் காலை 6 மணிக்கே நண்பர்கள் எழுப்பிவிட்டனர். இரவெல்லாம் வந்துகொண்டே இருந்தார்கள். 9 மணிக்கு 250 பேர் வந்துவிட்டிருந்தார்கள். மிகச்சரியாக 930க்கே முதல் அரங்கை தொடங்கிவிட்டோம். அனேகமாக ஒரு அரங்கும் பிந்தவில்லை.
இம்முறை இருநாட்களிலும் இரண்டுமணிநேரம் வாசகர்கள் எழுத்தாளர்களைச் சந்திக்க பொழுது ஒதுக்கப்பட்டது. அந்த இரண்டுமணிநேரமும் ஆழமான உரையாடல்கள் நிகழ்ந்திருப்பதை கடிதங்களில் காணமுடிகிறது. வரும் ஆண்டுகளில் அந்தச்சந்திப்புகளை முறைப்படுத்தமுடியுமா என்று பார்க்கவேண்டும்
23 மாலை 3. 30 மணிக்கு மதுபால் சந்திப்புடன் அரங்குகள் முடிந்தன. 530 க்கு கே.பி.வினோத் இயக்கிய ராஜ் கௌதமனைப்பற்றிய ஆவணப்படமான ‘பாட்டும் தொகையும்’ திரையிடப்பட்டது. ஐந்துமணிக்கே அரங்கில் நண்பர்கள் நிறைந்துவிட்டனர்.
ராஜ்கௌதமனின் ஊரான புதுப்பட்டிக்கு அவர் 1996க்குப்பின் படமாக்கிய அன்றுதான் நுழைகிறார். மழை பெய்துகொண்டிருக்கிறது. ‘ஊரே மண்ணுக்குள் புதைந்துவிட்டது போலிருக்கிறது!” என்கிறார். ராஜ் கௌதமனின் உடல்மொழி, அவருடைய பேச்சுமுறை, குடும்பச்சூழல், பின்னணி என பல கோணங்களில் அவரை காட்டும் முக்கியமான ஓர் ஆவணப்படம். பல இடங்கள் முக்கியமானவை. அத்தகைய தருணங்கள் கதைசினிமாக்களில் அமைவதில்லை. அதனால்தான் பல பெருங்கலைஞர்கள் மெய்யான சினிமா என்பது ஆவணப்படமே என்கிறார்கள். ராஜ் கௌதமனை அடையாளம் காணமுடியாது வெருளும் நாய் ஓர் உதாரணம்.
இன்னொரு இடம் அவருடைய மனைவி தங்கள் குழந்தை ஒன்று இளமையில் இறந்ததைச் சொல்லும்போது அவருடைய உணர்ச்சிகள் உள்ளூர கொந்தளிப்பதை கண்கள் காட்டுகிற தருணம், அருகிருக்கும் ராஜ்கௌதமனின் உடல்மொழி. அதன் உச்சம் ராஜ் கௌதமன் அவருடைய எள்ளல், அடக்கம் அனைத்தையும் கடந்து ‘இது மாறும் மாறவேண்டும்’ என காமிராவை நோக்கி எழுந்துவந்து சொல்லும் தருணம். அதிலிருக்கும் ஆழமான கோபமும் உணர்வெழுச்சியும்.
விழா வழக்கம்போல கச்சிதமான சிறப்பான நிகழ்வு. விழாவில் பங்களிப்புகள் சீராக இருக்கவேண்டும் என்பது எங்கள் எண்ணம். அதுதான் அனைவரும் சேர்ந்து நிகழ்த்தும் விழா என்னும் உணர்வை உருவாக்குகிறது. விவாத அரங்குகளில் அத்தனை எழுத்தாளர்களும் எவ்வகையிலோ மேடையில் தோன்றவேண்டும். இளையவர்களை மூத்தவர்கள் வாழ்த்தவேண்டும். கோவையின் ஆளுமைகள் வந்து விருந்தினரை கௌரவிக்கவேண்டும்.
இவ்வாண்டும் இயகாக்கோ சுப்ரமணியம் வந்து அனிதா அக்னிஹோத்ரியை வரவேற்றார். டி.பாலசுந்தரம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் ஆகியோர் வந்து விருந்தினர்களை கௌரவித்தனர். எழுத்தாளர்கள்நாஞ்சில்நாடன், தேவகாந்தன், சு.வேணுகோபால், தேவதேவன், லக்ஷ்மி மணிவண்ணன், எம்ல்கோபாகிருஷ்ணன், கீரனூர் ஜாகீர்ராஜா, ஆகியோர் இளம் எழுத்தாளர்களை கௌரவித்தனர்.
விஷ்ணுபுரம் நண்பர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது, மேடையில் வந்து விருந்தினரை கௌரவிப்பது இரண்டும் எப்போதுமுள்ள வழக்கம். இம்முறையும் அவ்வாறே நிகழ்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொருவர் என அனைவருமே இதில் பங்கெடுக்கிறார்கள்.. நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது என்பது ஒரு பயிற்சி. அது பொதுவாகவே விவாதங்களுக்கான பயிற்சியை அளிக்கிறது. விவாதம் ஒரே இடத்தில் சுற்றிவருவது, அரங்கிலுள்ள எவரேனும் மிகையாகப் பேச ஆரம்பிப்பது போல பல சிக்கல்கள் உண்டு இதில். அவற்றை தவிர்த்து விருந்தினரை கூடுதலாகப் பேசவைத்து சரியான நேரத்திற்குள் நிகழ்ச்சியை முடிப்பதுதான் தொகுப்பாளரின் சவால்
இம்முறை உணவு ஒருங்கிணைத்த விஜய் சூரியன்தான் மிகுந்த சிக்கலுக்கு உள்ளானார். எதிர்பார்த்ததை விட நூறுபேர் மிகுதி. இறுதிநேர ஏற்பாடுகள் தேவைப்பட்டன. இருந்தாலும் இரண்டாம்நாள் இரவு நான் உட்பட அமைப்பாளர்களுக்கு உணவு கிடைக்கவில்லை. நள்ளிரவில் ஓட்டல் தேடி செல்லவேண்டியிருந்தது
தங்குமிடமும் அவ்வாறே, முன்பதிவு என ஒரு முறை வைப்பது தோராயமாக எத்தனைபேர் வருவார்கள் என்ற கணக்குக்காக. 150 பேர் முன்பதிவுசெய்திருந்தனர். ஐம்பதுபேர் கூடுதலாக கணக்கிட்டோம். மேலும் ஐம்பதுபேர் வந்தமையால் கொஞ்சம் இடம்தேடி அலையும் சிக்கல் ஏற்பட்டது. சிக்கல்களை அப்போது பதற்றமூட்டுவனவாக உணர்ந்தாலும் எண்ணிப்பார்க்கையில் நிறைவுதான் வரும்.
உரைகள் அனைத்துமே சிறப்பாக இருந்தன. முன்பெல்லாம் உரைகளைச் சுருக்கி நான் எழுதிவைப்பேன். அவை பதிவாகாமல் போகக்கூடாது என்று. இப்போது அனைத்தும் சுருதி டிவியில் கிடைக்கின்றன. சுருதிடிவிக்கும் கபிலனுக்கும் நன்றி. உரைகளை பின்னால் சென்று கேட்கையில் உண்மையாகவே ஒரு காலப்பயணம் நிகழ்கிறது. உரைகள் காணொளிகளாக வருகையில் அவற்றிலிருக்கும் உடல்மொழி மேலும் முக்கியமானதாகத் தெரிகிறது. உதாரணமாக இப்போது சுனீல் கிருஷ்ணன் பேசும்போது இருக்கும் தன்னம்பிக்கையை ஆச்சரியமாகப் பார்க்கிறேன்.
ராஜ் கௌதமனின் உரை அவருடைய இயல்பின்படி பகடியும் அலைபாய்ந்தலுமாக இருந்தாலும் பலவகையான நுட்பமான வெளிப்பாடுகளைக் கொண்டிருந்தது. வாசகர்களின் எதிர்வினைகளை மேடையிலிருந்து கண்கூடாகப் பார்க்கமுடிந்தது.
திருமூலநாதன்
விழா மேடையில் நான் எங்கோ என்பதுபோல் இருந்துகொண்டிருப்பேன். ஒரு சிம்பொனியின் ஒத்திசைவும் உச்சமும் நிகழ்வதுபோல. இறுதியாக எடுத்துக்கொள்ளும் அந்த கூட்டுப்புகைப்படம் ஒரு வகையான சாதனை அறிவிப்பு. இத்தனைபேர் சேர்ந்து இத்தனை வெற்றிகரமாக இத்தனை ஆண்டுகளில் எதையும் செய்த வரலாறு தமிழில் இல்லை. தமிழ் இலக்கியச்சூழலின் மிகச்சிறந்த வாசகர்கள், மிகச்சிறந்த இளம்படைப்பாளிகளின் பெருந்தொகை இது.
விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு தனித்தனியாக நன்றி சொல்வதில்லை. அனைவரும் நெஞ்சுக்கு அணுக்கமானவர்கள். விடைபெறும்போது கட்டித்தழுவிக்கொள்வோம். அடுத்தமுறை சந்திப்பது எங்கே என்பதை உறுதிசெய்துகொள்வோம். அதுவே போதும்.
இம்முறை விழாவுக்கு முன்னரே வந்திருந்தாலும் வழக்கம்போல 24 அன்றும் கோவையில் இருந்தேன். 40 பேர் வரை சாய்வில்லாவில் தங்கியிருந்தனர். இரவெல்லாம் உள்ளம் பொங்கப்பொங்க பேசிக்கொண்டிருந்தோம். அதுவரை இருந்த கருத்தாடல்கள் எல்லாம் அகல வெறும் கேலி கிண்டல் நட்பு என ஒர் இரவு.
மறுநாள் ஒவ்வொருவராக கட்டித்தழுவி முத்தமிட்டு விடைபெற்றுச்செல்ல நான் கடைசியாகவே கிளம்பினேன். வழக்கம்போல அடுத்த சந்திப்பை, அடுத்த நிகழ்ச்சியை உறுதிசெய்துவிட்டுத்தான். இல்லையேல் பெரும் சோர்வு வந்து அழுத்த ஓரிருநாட்கள் எழவே முடியாமலாகிவிடும். உள்ளப்பிரிதல் ஒவ்வொரு முறையும் நிகழ்கிறது
வழக்கம்போல இவ்விழாவும் மனநிறைவை அளிப்பதாகவே இருந்தது 2013ல் தேவதேவனுக்கு விருது கொடுக்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இளையராஜா வந்திருந்தார். பெருங்கூட்டம். ராஜா சிறப்பாகப்பேசினார். அன்றைய நிகழ்ச்சியின் விவாதங்களும் அற்புதமாக இருந்தன
விழாமுடிந்தபோது அரங்கசாமி சொன்னார் ‘இனிமே இப்டி ஒண்ணு நடத்தமுடியுமான்னு தெரியலை சார். இது வாய்ச்சிரிச்சு. இதை மார்க்கா வச்சு இனிமே செயல்படணும்’ அதையே ஞானக்கூத்தன் விழாவிலும் பேசிக்கொண்டோம். வண்ணதாசன் விருதுவிழாவில் இனி இதை எட்டவே முடியாது என்று எல்லாருமே சொன்னார்கள். சென்ற ஆண்டு ‘இதான் சார் பெஸ்ட்’ என்றார் கிருஷ்ணன் ‘இனி இதை நினைச்சுகிட்டே அடுத்ததை செய்யவேண்டியதுதான்”
இந்த முறை கிளம்பும்போது அரங்கசாமி கிருஷ்ணன் ஆகிய அத்தனைபேருமே சொன்னார்கள் ‘ஒரு உச்சத்தை அடைஞ்சிட்டோம்சார். இனிமே மேலே செய்ய என்ன இருக்கு?” அது உண்மை. ஆனால் மேலும் மேலும் செல்வதற்கு எப்போதும் இடமிருக்கும். இது நாம் நம் நிறைவுக்காகச் செய்வது. இதன் விளைவுகள் என்ன என்பதை நம்மால் இப்போது சொல்லவே முடியாது. இது நினைவாக நம்மிடமிருக்கும் என்பதே நாம் ஈட்டிக்கொள்ளும் செல்வம். மற்றவை காலத்தின் கையில்.
இதை ஏன் ஒருங்கிணைக்கிறோம்? இலக்கியம் என்பது ஒரு பெரிய கொண்ட்டாட்டம் என்பதே என் எண்ணம். அது தனிநபரின் தவம் மட்டும் அல்ல. கூடவே ஒரு சமூகத்தின் கூட்டு அறிவியக்கமும்கூட. அறிதல் என்றுமே ஆனந்தம் நிறைந்ததுதான். கொண்டாட்டமாக ஆகாத எதுவும் உண்மையான விருப்புடன் செய்யப்படாது, ஆகவே நீடிக்காது. ஒரு நிகழ்ச்சி பயனுள்ளது என்றால் அதற்கான சான்று அது மகிழ்ச்சியுடன் முடிகிறதா இல்லையா என்பது மட்டுமே
வெண்பா
இலக்கியம் ஒரு சமூகநிகழ்வாகவும் நிலைநிறுத்தப்படுகையிலேயே அது வாசகர்களை அடைகிறது. முன்னுதாரணமான பல இலக்கியவிழாக்களை நான் மலையாளத்தில் பார்த்திருக்கிறேன். அவற்றை ஒருங்கிணைத்தவர்கள் எம்.கோவிந்தன் முதல் அய்யப்பப் பணிக்கர் வரை தீவிர இலக்கியத்தை சமூக இயக்கமாக வளர்த்தெடுத்த முன்னோடிகள். அந்தக்கனவு க.நா.சுவுக்கு இருந்தது. [அவர் சாகித்ய அக்காதமி விருது வென்ற நூலே ‘இலக்கியத்திற்கு ஓர் இயக்கம்’ தான்]
அக்கனவு பிரமிளுக்கு இருந்தது. சுந்தர ராமசாமிக்கு இருந்தது. தமிழினி 2000 மாநாடு அதன் விளைவே. இது அக்கனவுகளின் தொடர்ச்சி. இணையம் அளிக்கும் தொடர்புவசதியால் மேலும் கூடுதலான பங்களிப்பாளர்களைத் திரட்டிக்கொண்டேன். மிகக்குறைவான செலவில் நிகழ்த்துவதனால் பத்தாண்டுகளாக தொடர்கிறது இவ்விழா
இலக்கியம் ஒரு சமூகம் தன் அகத்தால் செய்துகொள்ளும் பரிமாற்றம். அது நிகழ்வது இவ்வரங்குகளில் அல்ல, ஆனால் அதன் தடையங்களை இவற்றில் பார்க்கிறோம், நாம் செய்ய முடிந்ததைச் செய்வோம். நம் செயல் நமக்களிக்கும் உவகை நமக்கான பரிசு. இந்த நான்குநாட்களும் அந்த பெருமகிழ்வில் திளைத்தேன். நண்பர்களும் அத்திளைப்பில் உடனிருந்தனர்.