விஷ்ணுபுரம் விழா :கடிதங்கள் 4

raaj

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் அமைப்பின் சந்திப்புகளில் அனைத்து அரங்குகளும் மிகசிறப்பாக நிகழ்ந்தன. நான் அவ்வப்போது இலக்கியநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுண்டு. வெறும்பேச்சுக்கள் இல்லாமல் இப்படி ஒரு விரிவான நிகழ்ச்சி நிகழ்வது, அதன் ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ளவை மட்டுமே பேசப்படுவதும் மிக முக்கியமானது. அதோடு இந்த அரங்கில் தமிழிலக்கியத்தின் பெரும்பாலான முகங்கள் வந்துகூடிவிடுகின்றன. எல்லாருக்கும் சொந்தமான கருத்துக்கள் உள்ளன. அவை எழுந்துவரும். ஆகவே கருத்துமோதல் நடந்துகொண்டே இருக்கும். அதனால்தான் இந்நிகழ்ச்சி வழக்கமான நிகழ்ச்சிகளிலிருந்து வேறுபடுகிறது. இது ஒரு சிற்றிதழ்சார்ந்த நிகழ்ச்சி. அதற்குரிய ஒரு vigor இருந்துகொண்டே இருந்தது.

 

முக்கியமாகச் சொல்லவேண்டியவர் கடலூர் சீனு. அனேகமாக எல்லா படைப்பாளிகளையும் ஆழமாக வாசித்து அவர்களின் படைப்பின் core problem சார்ந்து மட்டுமே கேள்வி கேட்டார். கேள்விகளை சுருக்கமாக, ஆனால் தெளிவாக கேட்டார். முதலில் அந்தப்பிரச்சினையைச் சொல்லி, அதன்மேல் தன் கேள்விகளைக் கேட்டார். லட்சுமி மணிவண்ணன், கார்த்திகை பாண்டியன், சுசித்திரா, சுபா ஆகியோரின் கேள்விகளும் சிறப்பானவையாக இருந்தன. அவர்கள் கேட்டதுமே நான் அவர்களின் பெயரை கேட்டறிந்து அவற்றைக் குறித்துக்கொண்டேன். இது ரொம்ப முக்கியம். இப்படி குறித்துக்கொள்ளாவிட்டால் கிட்டத்தட்ட 15 மணிநேரம் மொத்தமாக நடந்த விவாதங்களை நினைவில் நிறுத்தமுடியாது

கேள்விகள் எப்போதுமே அந்த எழுத்தாளரின் ஒரு படைப்பைச் சார்ந்ததாக இல்லாமல் ஒட்டுமொத்தமாக அவர்களை மதிப்பிடுவதாகவே அமைந்தன. முதல்நாள் அரங்கில் சரவணக் கார்த்திகேயனின் கதைகளில் உள்ள வணிகஎழுத்துசார்ந்த நடை, அவருடைய பாலியல்சார்ந்த obsession அவருடைய கதைகளில் உள்ள திட்டமிட்டதன்மை ஆகியவற்றைப் பற்றிய கேள்விகள் எவ்வளவு relevant ஆனவை என்பது அவரை வாசித்தவர்களுக்கே தெரியும்.

கலைச்செல்வியின் படைப்புகளிலுள்ள முக்கியமான limitation என்பது அவர் நேரடியாக சம்பந்தப்படாத வெவ்வேறு களங்களை எடுத்துக்கொள்வதும் அந்தந்த ஊரின் வட்டாரபாஷையை கொஞ்சம் செயற்கையாகப் பயன்படுத்துவதும் கதைகளுக்குள் முடிவுகளை முன்வைப்பதும்தான் என நான் நினைத்திருந்தேன். அதைப்பற்றியே கேள்விகள் இருந்தன. இருவருமே ஆத்மார்த்தமாக அந்தக்கேள்விகளை எதிர்கொண்டார்கள். முதல் அரங்கே சிறப்பாக அமைந்தது. அது நல்ல தொடக்கம்.

சரவணன் சந்திரனிடமும் அவருடைய படைப்புக்களிலிருந்து வந்த கேள்விகள் முக்கியமானவை என அவரே உணர்ந்திருப்பார். ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவர் எப்படி வாசகன் மனதிலே பதிவாகியிருக்கிறார் என்பதை நேருக்குநேர் பார்ப்பது ஒரு சிறப்பான விஷயம். எதிர்பாராத ஆச்சரியங்களும் இருக்கும். சோர்வும் இருக்க வாய்ப்புண்டு. சரவணன் சந்திரனின் படைப்புகளில் ஐந்து முதலைகளின் கதை, சுபிட்சமுருகன் ஆகியவைதான் அதிகவாசகர்களை கவர்ந்தவை எனத் தெரிந்தது. அஜ்வா அடுத்தபடியாக. அவருடைய கதைகளிலுள்ள கிளைக்கதைத்தன்மை, zero narration பற்றித்தான் கேள்விகள் அமைந்தன. அவர் தன் படைப்புக்களில் முன்வைக்கும் உலகியல் பார்வை எப்படி சுபிட்சமுருகனில் ஒரு salvation சார்ந்த பார்வையாக மாறியது என்பதை அவரிடம் கேட்டார்கள். அவர் சொன்ன பதிலும் சிறப்பாகவே இருந்தது

அதேபோல தேவிபாரதியை காந்தியுடன் சேர்த்தே வாசகர்கள் ஞாபகம் வைத்திருந்தார்கள். அவரிடம் அவருடைய எழுத்து காந்தியை நோக்கிச் சென்றதைப்பற்றி பல கேள்விகள் இருந்தன. அவர் அங்கிருந்து பேச்சை டால்ஸ்டாய் நோக்கி கொண்டுசென்றார். அவருடைய நட்ராஜ் மகாராஜ், நிழலின் தனிமைபற்றித்தான் கேள்விகள். அவருடைய நடையின் modern அம்சம் பற்றி ஒருவர் கேட்டார். அதை அவருடைய நடையில் உள்ள காம்யூவின் சாயல் பற்றி மாற்றீக் கேட்டிருக்கலாம். எல்லா கேள்விகளுக்கும் தேவிபாரதி நேர்மையாக பதில் சொல்லி மேலும் ஒரு தளத்திற்கு சென்று விரிவாகவும் பேசினார்.

ஸ்டாலின் ராஜாங்கத்திடம் வாசகர்கள் என்ன கேட்பார்கள் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன். காந்திபற்றி கேட்பார்கள் என நினைத்தேன். ஆனால் அவர் அயோத்திதாசரின் பௌத்த ஆன்மிகத்தை ஏற்கிறாரா என்பதைச்சார்ந்தே பலகேள்விகள் இருந்தன. அவர் ஆய்வாளரா அரசியல்வாதியா என்ற ஒரு சந்தேகம் இருந்தது என நினைக்கிறேன். உங்கள் அரசியலுக்கு மாறாக களஆய்வு அளிக்கும் செய்திகள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கான அடிப்படை அதுதான். அவர் கள ஆய்வு வழியாக அவர் எப்படியெல்லாம் மாறினார் என விளக்கினார்.

சுனீல்கிருஷ்ணனை அரங்கினர் நன்றாக அறிந்திருந்தார்கள். அவருடைய காந்திய ஆர்வம் பற்றியும் அவர் கதைகளில் பாலியல் இல்லாமலிருப்பதைப் பற்றியும் கேள்விகள். [ பாலியல் இருந்தால் சரவணக் கார்த்திகேயனை மடக்குவீர்கள். இல்லை என்றால் இவரை மடக்குவீர்கள்] அவருடைய ஆயுர்வேத ஈடுபாடு காரணமாக அதைப்பற்றிய நாவல் எழுதுவாரா என்ற கேள்வி வந்தது. அவர் ஆரோக்கியநிகேதனம் போல ஒன்றை எழுதும் கனவு உள்ளது என்று சொன்னார்.

சாம்ராஜ், நரன் பற்றிய விவாதத்தில் சாம்ராஜுக்கும் ஷோபா சக்திக்கும் இடையே இருக்கும் நெருக்கம் பற்றிய கேள்வி சாம்ராஜுக்கு ரொம்ப பிடித்திருந்தது. நரனிடம் பல கேள்விகள் அவருடைய கதைகளிலுள்ள நாற்றம் போன்ற புலன்பதிவுகள், கொடூரமான நிகழ்ச்சிகள் பற்றித்தான் இருந்தன. அவருடைய ஜென் கவிதைகளை எவருமே பேசவில்லை. சாம்ராஜ் இடதுசாரிகள் எப்படி ஒருகாலத்தில் இந்த மண்ணின் உப்பாக இருந்தார்கள், எப்படி அவர்கள் கள்ளமற்ற நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்று சொன்னபோது எனக்கு மனம் விம்மியது. ஒருகாலத்தில் நானும் அவர்களிடம் நெருக்கமாக இருந்தேன்.

லீனா மணிமேகலையின் விவாதத்தில் அவருடைய கவிதைகளையே அதிகமும் அரங்கினர் பேசினார்கள். அவர் அதை அவருடைய பெண்ணியச் செயல்பாடு நோக்கிக் கொண்டுசெல்ல முயன்றார். பெண்ணியக் களப்பணியாளராகவே அவர் பேசினார். அதற்குக் காரணம் மட்டுறுத்துனர் அவரை ஒரு கலகக்காரர் மட்டுமே என்று முதல் கேள்வி கேட்டதுதான். அதற்கு அவர் பதில் சொல்லி முடித்ததும் வந்த முதல் கேள்வி அவருடைய ஒரு குறிப்பிட்ட கவிதையில் திருநங்கையுடனான அனுபவம் பற்றி வருவது அனுபவம் சார்ந்து நேரடி பதிவாக எழுதப்பட்டதா அல்லது உருவகமாக உருவாக்கப்பட்டதா என்று. லீனா அதை உடனே கவிதைவாசித்தால் பெண்ணிடம் மட்டும் சொந்த அனுபவமா என்று கேட்கிறீர்கள், இது ஆணாதிக்கம் என பதில் சொன்னார். அவர் தான் கேட்பது அனுபவப்பதிவுக்கும் செயற்கையான உருவகத்திற்குமான வேறுபாட்டைத்தான் என்று விளக்கினாலும் லீனா அந்த இடத்திற்கே செல்லவில்லை.

அதன்பின் புதியமாதவி லீனாவின் தூமை என்ற கவிதையைச் சுட்டிக்காட்டி கேள்விகேட்டார். புதியமாதவி கேட்ட கேள்வி தூமை என்பதை அந்தக்கவிதை எப்படி படிமமாக ஆக்குகிறது என்பது. ஆனால் தூமை பற்றி எழுதக்கூடாது என்று சொல்பவர்களுக்கு எதிரான ஒரு பதிலை லீனா சொன்னார். மற்ற பெண் கவிஞர்களின் கவிதை போல இல்லாமல் லீனாவின் கவிதைகளில் தொன்மங்கள் வருவது ஏன் என்ற கேள்விக்கும் அதேபோலத்தான் பதில் வந்தது. அவருடைய கவிதைகள் ஏன் சத்தமாக, ஒற்றைப்படையாக ஒலிக்கின்றன என்ற கேள்விக்கும் அவர் எதிர்விமர்சனமாகவே பதில் சொன்னார்.

லட்சுமி மணிவண்ணன் சொன்னதுபோல எல்லா கேள்விகளும் லீனாவின் கவிதைகளில் இருந்தே வந்தன. அவர் பெண்ணியத்திலிருந்து பதில் சொன்னார். சபையினர் பலவகையான வாசகர்கள். பாதிப்பேர் எழுத்தாளர்கள். கேள்விகேட்டவர்களில் முக்கால்வாசிப்பேர் பெண் எழுத்தாளர்கள். ஆனால் லீனா ஆணாதிக்கவாதிகளுக்கான பதிலையே சொல்லிக்கொண்டிருந்தார். அது ரெடிமேட் பதில். அது அந்தச்சபைக்கு உரிய பதில் அல்ல. இந்தவகையான இலக்கிய அரங்கை அவர் புரிந்துகொள்ளவில்லை.அவர் கடைசிநேரத்தில் வந்தது காரணமாக இருக்கலாம்.

நிற்பவர்கள் குமரவேல், முரளி

அனிதா அக்னிஹோத்ரியின் அரங்கு சிறப்பாக இருந்தது. ‘அழகை எங்கு சந்தித்தாலும் அங்கேயே அடிபணிக’ என அவர் சொன்னது ஒரு ஆப்தவாக்யம் போலவே இருந்தது. நான் வாசித்தவரை மிகச்சிறந்த பெண்ணியக்கதை என்றால் அது எரிகல் ஏரிதான். அனிதாவிடம் வாசகர்கள் கேட்ட கேள்விகளிலிருந்து ஒர் அதிகாரி நேர்மையாக இருக்க முடியாது, அவருடைய அறவுணர்ச்சி உண்மையாக இருக்கமுடியாது என்ற சந்தேகம் வாசகர்களிடம் இருப்பதாக உணரமுடிந்தது. ஆனால் அவர் நேர்மையாக தன் limitations பற்றித்தான் சொன்னார்.

மதுபாலின் அரங்கை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் மலையாளத்தில் பேசியது காரணமாக இருக்கலாம். ராஜ் கௌதமனின் அரங்கு சரியாக இல்லை. அவரால் கோர்வையாகப் பேசமுடியவில்லை. கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தமே இல்லாமலிருப்பதுபோலத் தோன்றியது. நான் தப்பாகச் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.

செந்தில்வேல்
கோவை

அன்புள்ள ஜெ

ஒவ்வொரு ஆண்டும் விஷ்ணுபுரம் விருதுவிழா முடிந்ததும் சில போலிச்சர்ச்சைகள் உருவாக்கப்படும். விழா அறிவிக்கப்படும்போதே அதைப்பற்றிய நக்கல்நையாண்டிகள், அவதூறுகள் நடக்கும். விஷ்ணுபுரம் விழாவுக்கு பணம்கொடுத்து டார்ஜெட் வைத்து ஆள் சேர்ப்பதாகக்கூட ஒருவர் எழுதியிருந்தார். விழா நடக்கும்போதே நையாண்டிகள் வந்தன. விழாவில் எல்லாரும் ஜெயமோகனை பாராட்டி பேசினார்கள், எங்கு பார்த்தாலும் ஜெயமோகன் கட்டவுட்டாக இருந்தது என்று ஒருவர் எழுதினார். இவர்களுக்கெல்லாம் வாசகன் என்ற ஒருவன் பொதுவாக இதையெல்லாம் பார்க்கிறான் என்ற நினைப்பே இல்லை. வெறும் வயிற்றெரிச்சல். அதை இப்படி வெளிப்படுத்துவதைப்பற்றிய கூச்சம்கூட இல்லை

பிரபு மயிலாடுதுறை

ஆனால் இதெல்லாம் விஷ்ணுபுரம் விழா தொடங்கிய காலம் முதலே நடந்து வருபவை. இதையெல்லாம் கடந்தே விழா நடைபெற்று மேலும் வளர்ந்து வருகிறது. இனிமேலும் வளரும். இன்னொரு அவதூறு இப்போது முகநூலில் படித்தேன். விஷ்ணுபுரத்தில் சாம்ராஜ் நக்சலைட்டுக்களை ஏளனம் செய்து பேசினார் என்று ஒருவர் எழுத சிலர் வசைபாடியிருந்தார்கள். நான் அவர் நக்ஸலைட்டுக்களை புனிதப்படுத்தி பேசுகிறார் என்றுதான் நினைத்தேன். தமிழக அரசியலில் ஒரே நேர்மையாளர்கள் அவர்கள்தான் என்றும் அவர்கள் மட்டுமே தியாகிகள் என்றும் அவர் சொன்னார். அவர்களுடன் சம்பந்தப்பட்டிருந்த காலத்தை பற்றி கண்ணீர் மல்கினார். அது ஒருவகையில் அவர் தன்னையும் புனிதமானதாக காட்டிக்கொள்ளச் செய்தது என்றுதான் நாங்கள் பேசிக்கொண்டோம்.

அவர் சொன்னதுபோல நக்ஸலைட்டுக்கள் புனிதர்கள் அல்ல. அவர்களில் பலர் காரியக்காரர்கள். நான் திருப்பூர்க்காரன். முன்னாள்நக்சலைட்டான கருணா மனோகனரன் எனக்குத்தெரியும். அவரெல்லாம் எப்படி வாழ்ந்தார் என்றும் தெரியும். திமுகவுக்காக ஓடாக உழைத்து வாழ்க்கையை அர்ப்பணித்த பல் ஆயிரம்பேர் இருக்கிறார்கள். நக்ஸலைட்டுகள் கள்ளமற்றவர்கள், தியாகிகள் என்பதெல்லாம் கிறிஸ்தவ ஃபாதர் என்றாலே ‘மை சன்!’ என்று பேசவைக்கிற தமிழ் சினிமா செண்டிமெண்ட் பிட். அதைத்தான் சாம்ராஜ் அங்கே சொன்னார். அதை இணையத்திலே வேறுமாதிரி திரிக்கிறார்கள். எதையாவது வம்பு வளர்க்கவேண்டியதுதான் இவர்களின் நோக்கம்.

இந்த வம்புகளும் ஒருவகையில் நல்லதுஇதான். இதைப்பார்த்துத்தான் பதிப்பேர் இங்கே வருகிறார்கள். நானும் அப்படித்தான் வந்தேன். வந்தபின் இங்கே நிகழ்வது இலக்கிய விவாதம் மட்டுமே என்று தெரிந்துகொண்டேன். இவர்கள் சரியானவர்களை இங்கே திருப்பி விடுகிரார்கள்.

எம். ராஜேந்திரன்

லீனா மணிமேகலை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-3
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா கடிதங்கள் 5