விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்-7

raj

விஷ்ணுபுரம் காணொளிகள்

அன்புநிறை ஜெ,

மிக நெகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறது. இரண்டு நாட்களை பல முறை மனதில் மீள நிகழ்த்திக் கொண்டே இருக்கிறேன். விருது நிகழ்வில் பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களின் உரை நிறைவுறும் தருவாயில் கிளம்பினேன். பத்து மணியளவில் விமான நிலையம் சென்றடைந்து விமானம் அரைமணிநேரம் தாமதம் என்றறிந்தபோது இன்னும் சில நிமிடங்கள் அங்கிருந்திருக்கலாமே என்றிருந்தது.

முதல்நாள் காலை ஆறரை மணியளவில் ராஜஸ்தானி சங்கத்தின் வாயிலில் வந்திறங்கியபோதே நமது குடும்பத்தினரின் சிரிப்பும் பேச்சும் கலந்த ஒலி கட்டிடத்தின் வலதுபுறம் எனை இழுத்து வந்தது. இருகை விரித்து எதிர்கொண்ட மீனாவைத் தழுவிக் கொண்ட அம்முதல் கணம் முதல் விஜயசூரியன், அரங்கா மற்றும் லோகமாதேவியிடம் விடைபெற்றுக் கிளம்பிய மழை பெய்து நனைத்திருந்த விருதுநாள் இரவு வரை ஒவ்வொரு நொடியும் இனியவை. அஜி மற்றும் சைதன்யாவை மீண்டும் ஒரு முறை சந்திக்க முடிந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது.

இதுவே நான் கலந்துகொள்ளும் முதல் விஷ்ணுபுர விருது விழா. நண்பர்கள் பலரும் நம்பமுடியாமல் அப்படியா எனக்கேட்டனர். எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.முதல் நாள் முதல் அமர்வு நண்பர் செல்வேந்திரன் மட்டுறுத்திய எழுத்தாளர்கள் சரவண கார்த்திகேயன் மற்றும் கலைச்செல்வியின் நிகழ்வு. இருவரது படைப்புகளையுமே படித்திருந்ததனால் முதல் அமர்வின் அறிமுகம் முதலே ஆழ்ந்து போனேன். ஆப்பிளுக்கு முன் நாவலை வாசித்து விட்டு, CSK என்றறியப்படும் சரவண கார்த்திகேயனிடம் சில கேள்விகள் கேட்க எண்ணியிருந்தேன். வாசகர்களுக்காக அவை திறந்தது முதலே வினாக்கள் வரிசையாக அலைகளென வந்தன. நாம் எழுத்தாளரிடம் கேட்க எண்ணியிருப்பதை வேறொருவர் கேட்பதும், அல்லது வேறொரு கேள்வியின் விடையென எழுத்தாளர் நம் மனதில் எழும் கேள்விக்கான விடையை சொல்லிவிட, புதியதொரு கோணம் திறப்பதுமாக இரு தினங்களும் புதிய அனுபவமாயிருந்தது. ஊட்டி முகாம் குருகுல மனநிலையைத் தருவது, இவ்விரு தினங்களில் வருவது ஒரு விழா மனநிலை.நிகழ்வது கற்றலே எனினும் உணர்வதன் வேறுபாடு.


கலைச்செல்வி அவர்கள் எழுத்தின் வழி தெரிந்த ஆளுமையாக இல்லாமல் வேறொரு முகத்தோடு அறிமுகமானார். இருவருமே மனம் திறந்து வைத்து உரையாடினார்கள். சரவண கார்த்திகேயன் தனது எழுத்து முறை engineered writing என்று வரையறை செய்தார். காந்தியின் காமம் சார்ந்த தளத்தில் நாவல் எழுத முனைந்து நிறைய வாசிப்புடன் அவரால் எழுதப்பட்ட அந்நாவல், வாசிக்கும்போது தர்க்க ரீதியாக இடைவெளிகளை நிரப்பியதுபோல தொனித்தது. கதை எழுதத்தொடங்கும் போது தெளிவற்றுத் தெரியும் வினாவோடு அணுகி படைப்பின் வாயிலாக அதைக் கண்டடைந்த அனுபவம் கிடைத்ததா, அல்லது முன்வரைவோடுதான் அந்நாவல் எழுதப்பட்டதா என்ற கேள்வியே முதன்மையாக எனக்கிருந்தது. எனில் ஏறத்தாழ பலரது வினாவுக்கு விடையளித்தன் வாயிலாக அக்கேள்விக்கு பதிலிறுத்திருந்தார்.

அந்த அமர்வின் மையச் சரடென மனதில் பதிந்தது, அவர்களது எழுத்தில் கண்டடைதல் என்ற அனுபவத்தை இருவருமே இதுவரை உணரவில்லை எனக் கூறினார்கள். கலைச்செல்வி தன்னை பாதிக்கும் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வடிகாலென இலக்கியம் அவருக்கு இருப்பதாகக் கூறினார்.

சரவணன் சந்திரன் எழுதிய கட்டுரைத் தொகுப்பு (மதிகெட்டான் சோலை) மட்டுமே வாசித்திருந்தேன். அமர்வை முன் நடத்திய அரங்கா நன்றாக சிரித்தார், சரவணன் சந்திரன் சற்று நேரத்தில் சகஜமானார். இறுகிய மனநிலை போன்ற தோற்றத்தில் தொடங்கியவர் அமர்வு முடிவதற்குள் தன்னை இயல்பாகவும் நேர்மையாகவும் முன்வைத்ததன் மூலம் அணுக்கமானார்.


எழுத்து வழி ஆங்காங்கே தீற்றிய கோடுகள் நேர் சந்திப்பில் பல வாசகர்களின் மாற்றுக் கோணங்களுக்கு பதிலளிப்பதன் வாயிலாக ஒரு தெளிந்த சித்திரமென உருவாகி வருகிறது. சரவணன் ஜெயமோகனுடனான தனது உறவு, தனது விளையாட்டுப் பயிற்சியின் கோச்சுடன் போன்றதான உறவு, சற்றுத் தொலைவிலிருந்தே, வட்டத்துக்கு வெளியில் நின்றே கற்றுக் கொள்ளும் மாணவன் தான் எனக் கூறினார். ‘நீங்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிப்பது போலிருக்கிறதே’ போன்ற சீண்டிவிட வாய்ப்புள்ள கேள்விகளுக்குக் கூட, ‘நான் அந்தந்த நிமிடங்களிலிருந்தே விடையளிக்கிறேன், எந்த முன் வரைவும் இல்லை, எனவே முன் பின் இருக்கலாம்’ எனக்கூறியது நேர்மையாக தொனித்தது.

அடுத்த அமர்வு இவ்வருடம் சாகித்ய அகடமியின் யுவபுரஸ்கார் விருதுபெற்ற நமது சுனீல் கிருஷ்ணன். நான் மிகவும் ரசித்த அமர்வு இது. மரபுக்கும் நவீனத்துக்குமான உரையாடலாக அவரது படைப்புகள் இருப்பது குறித்து பேசியதோடு, ஆரோக்ய நிகேதனம் போன்ற ஒரு மாபெரும் ஆக்கத்தை எழுத வாய்ப்பிருக்கிறதா எனக் கேட்கப்பட்டபோது அதற்கான எண்ணம் இருப்பதையும் இதுவரை வெளிந்தவற்றின் உச்சமான விஷ்ணுபுரத்தை விஞ்சுவதாக அது அமையுமென்றும் கூறினார். அது நிகழட்டும் என்ற எண்ணம் உள்ளே நிறைந்து தளும்பி அந்நிமிடம் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. மெல்லுணர்வாக இருக்கலாம், எனில் என்னுள் பல தருணங்களில் உணர்ச்சி தர்க்கத்து இணையாக மேலெழுவதை உணர்ந்தே இருக்கிறேன்.காந்திய ஆய்வாளர், ஆயுர்வேத மருத்துவர், இலக்கிய படைப்பாளி என்ற பன்முகம் குறித்த சுசித்ராவின் கேள்விக்கு பதஞ்சலி குறித்த

யோகேந சித்தஸ்ய, பதேந வாசாம்,
மலம் சரீரஸ்ய ச வைத்யகேந

பாடலைக் குறிப்பிட்டு உடலால் ஏற்படும் தோஷத்துக்கு ஆயுர்வேதமும், மனதால் வரும் தோஷத்துக்கு காந்தியமும், வாக் தோஷத்துக்கு இலக்கியமும் என செயல்படுவதாகக் கூறி உச்சத்தில் தனது அமர்வை நிறைவு செய்தார். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் சுனீல் குறித்து நம் வீட்டுப் பிள்ளை எனப் பேசியதும் இனிமையான நிகழ்வு.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களுடைய அமர்வு. இவரது படைப்புகளை வாசிக்க இயலவில்லை, மேலும் இவரது களம் மற்றும் பேசுபொருள் என்னால் தொடர்புறுத்திக் கொள்ள இயலுமா, அதுவும் உணவிடைவேளைக்கு அடுத்து வரும் நிகழ்வாயிற்றே என எண்ணினேன். அத்தயக்கம் முழுமையாக பொருளற்றுப் போனது. தனது ஆய்வின் பொருட்டு களத்தில் இருந்து அவர் கண்டடையும் தரவுகள் அவர் அதுவரை கொண்டிருந்த நிலைப்பாடை மாற்றக் கூடியதெனில் அதற்கு அவர் தன்னைத் திறந்து வைத்திருப்பதும் அதை வெளிப்படையாக அங்கீகரிப்பதும் அவரது கோட்பாடுகளின் மீதும் அவரது எழுத்தின் மீதும் ஈர்ப்பை உருவாக்கியது, வாசிக்க வேண்டும். காந்தி குறித்த தலித் களப்பணியில் அவர் அறிய நேர்ந்த மாற்றுச் சித்திரத்தை தெளிவாக முன்வைத்தார்.

தேவதேவன், இசை

 

தேநீர் இடைவேளைக்குப் பின்னர் கவிஞர்கள் நரன் மற்றும் சாம்ராஜ் அவர்களுடனான அமர்வு. அன்று காலை உணவின் போதே சாம்ராஜ் அவர்களது பகடியின் தேர்ந்த கூறுமுறை கொண்ட கதைகள் குறித்து சுனீல் கிருஷ்ணன் கூறியிருந்தார். சாம்ராஜ் தனது பேச்சால் அரங்கத்தையே கவர்ந்து கலகலக்கச் செய்தார். புகைப்படங்களில் சாம்ராஜ் அவர்களின் அமர்வு அரங்கில் அமர்ந்திருப்பவர்களின் முகம்கொள்ளா சிரிப்பிலேயே தனியாகத் தெரிகிறது. மதுரையில் பிறந்து கேரளத்தின் மீதான காதல் என்ற வகையில் எனக்கு மிக நெருக்கமானவராக உணர்ந்தேன். ஜெ கூறியது போல மதுரை குறித்து அவர் எழுத சாத்தியமுள்ள நாவலுக்காகக் காத்திருப்பேன். நரன் தான் கடந்து வந்த நெருக்கடிகள் குறித்தும் கூறினார். அதன்பிறகு எழுத்தாளர் தேவிபாரதியுடனான அமர்வு. அடுக்கடுக்காக பல அனுபவங்களை சில நிமிட உரையாடலில் நிறைத்துவிடக்கூடிய மனிதர். நிழலின் தனிமை தந்த அவர் குறித்த இறுக்கமான சித்திரம் உருமாறியது. இருநாள் விவாதங்களில் பல்வேறு கோணங்களில் எழும் கேள்விகளும், அதற்கான விடைகளும் என உருவாகி வரும் எழுத்தாளர் பற்றிய அறிதல் பல கைகள் ஒருங்கிணைந்து எழுப்பும் பேராலயம் போல தெளிந்து வருகிறது.

இரவுணவுக்குப் பிறகு இலக்கிய வினாடி வினா. ‘நீ இன்னும் வாசிப்பை ஆரம்பிக்கவே இல்லை’ என இவ்வளவு வெளிப்படையாக உணர்த்த வேறு வழியே இல்லையா! ஒரு மணிநேரமும் பதற்றமாக அரைகுறை நினைவு மீட்டல்களோடு தவற விட்ட விடைகளோடு ஒரு போராட்டம். இதை வருடம் தோறும் விறுவிறுப்பாக நடத்தும் செந்தில் அவர்களிடம் தனியாக ட்யூஷன் போயாவது அடுத்த வருடம் முயற்சிக்க வேண்டும். ஒரு புத்தகமாவது கிட்டியதே என ஆறுதல் கொண்டேன்.

இரண்டாம் நாள் காலை ஆறரை மணியளவில் வந்து ஜெ நிகழ்த்தும் இனிய, அனிச்சை சிற்றுரையில் ஐக்கியமானேன். ஊட்டி முகாம், விஷ்ணுபுரம் விழா இரண்டிலுமே தவறவிடக்கூடாததென நான் உணர்வது இது போன்ற உரையாடல்களில் ஜெ விவரிக்கும் விஷயங்கள்தான். நூறு புத்தகங்களில் நாம் படித்து அறிய வேண்டியவற்றை இரண்டு மணி நேரத்தில் அறிந்து கொள்ளலாம். காந்தியம், கம்யூனிசம் எனத் தொடங்கி மிக அரிய தகவல்கள்; எளிமையாக எழுந்து வரும் ஒரு வினாவுக்கும் அதன் பின்புலம், அந்நிகழ்வின் வரலாற்று முக்கியத்துவம், பின் விளைவுகள் என ஒரு ஒட்டுமொத்தப் பார்வையை விளக்குவது, இது போன்ற உரையாடல்களை பொக்கிஷமாக்குகிறது. அடுத்த ஒரு வருடத்துக்கான செயல் திட்டமாக, வாசிப்புப் பட்டியலாக, இலக்குகளாக விதைத்து விடுகிறார். வருட இறுதியில், கார்ப்பரேட் கம்பெனிகள் இதற்கு அவ்வளவு மெனக்கெடுகின்றன – சுய மதீப்பீடு செய்தல்(self appraisal), வரும் ஆண்டின் இலக்குகளை தீர்மானித்தல் ( goal setting), முன்னேற்ற முன்வரைவு திட்டமிடல் ( development plans) அனைத்தையும் செய்யுமாறு அத்தனை சட்டகங்கள் அமைத்துத் தருகின்றன. இவ்விரு தினங்களில் நிகழ்ந்தது இவை அனைத்துமேதான்,ஆனால் சுய விழைவோடு உள்ளிருந்து வரும் உந்துதல் பெற்று இவையணைத்தும் நிகழ்கிறது.

நரன்

இரண்டாம் நாளின் முதல் அமர்வு லீனா மணிமேகலை அவர்களுடன் துவங்கியது. சுவாரஸ்யமான அமர்வு, பெண்ணியம் இன்னும் தொடக்கூடிய சாத்தியங்களையும் , பெண்களின் இன்றைய மற்றும் நாளைய தேவைகளையும் குறித்து என்னுள் கேள்விகளை எழுப்பியது. இது குறித்து தனியாக எழுத வேண்டும்.

அடுத்தது வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி அவர்களுடனான அறிமுகம். தளத்தில் வெளியான இவரது அனைத்துக் கதைகளையும் வாசித்திருந்தேன். ஆட்சிப் பணி அனுபவங்களைக் குறித்தே பல கதைகள் அமைய நேர்ந்தது தனது தெரிவினால் நேர்ந்தது என ராம் அவர்கள் விளக்கினார். சுசித்ரா மொழிபெயர்த்திருந்த எரிகல் ஏரி அவரது இன்னொரு முகத்துக்கு சான்றாக இருந்தது. மொழி அறியாமல் இரண்டு தினங்கள் அமர்ந்திருந்தும், அவர் நமது விவாதத்தின் அடர்த்தியையும், ஆழத்தையும் வாசகர் உடல் மொழி, மற்றும் மொழியின் ஏற்ற இறக்கங்களில் இருந்து அவதானித்ததை கடல் முன் நின்று அலைகள் வாயிலாக கடலை அறிந்து கொள்வதற்கு உவமையாக அழகாக சொன்னார். தனது உரையில் ஆத்மார்த்தமாக இதுபோன்ற அறிவியக்கமும் வாசகர்களும் வேறெங்குமில்லை எனச் சொன்னது ஒரு பெருமிதம் தந்தது.

உணவு இடைவேளுக்கு முன்னதாக விருது பெற்ற முதன்மை நாயகன் ராஜ் கௌதமன் அவர்களுடனான அமர்வு ஜெ நடத்தினார். இயல்பான, சுய எள்ளலுடன் கூடிய, அரங்குக்கான புனைவுகள் இல்லாத பேச்சு. சில சமயம் வகுப்பறை மாணவர்களை வேறொன்று சொல்லி பாடத்தை சுவாரஸ்யமாக்க முயலும் பேராசிரியர் போல பல வழிப் பாதைகளுக்கு மாறி பயணம் செய்தார். மட்டுறுத்துவது எப்படி எனப் பாடம் எடுப்பது போல ஜெ விவாதத்தை மிக நேர்த்தியாக மீண்டும் மீண்டும் மையத்திற்கு கொண்டு வந்தார். ராஜ் கௌதமன் அவர்களுக்குத் தொடர்ச்சியாக ஒன்றிலிருந்து ஒன்றென சொல்ல நிறைய விஷயங்கள் இருந்தன. இதை மாலை உரைக்கென வைத்திருக்கிறேன் என இடையில் எழுதி வைத்த தாளை எடுத்துக் காட்டி கலகலப்பாக்கினார். சிலுவைராஜ் சரித்திரமும் பாட்டும் தொகையும் வாசித்திருந்தேன். புதுமைபித்தன் குறித்து அவர் பேசியதைக் கேட்ட பிறகு அதுவும் வாசிக்கத் தோன்றியது.

பன்முக மலையாள ஆளுமையான மதுபால் அவர்கள் அரங்கில் நுழையும்போதே வாயிலில் நானும் சைதன்யாவும் சந்தித்தோம். வசீகரமான தோற்றமும் குரலும் உடையவர். தமிழ் நிறைந்தொலித்த அவையில் அவரது மலையாளம் இசை போல தொனித்தது. எத்தடையுமற்ற இருமொழி உரையாடல் அவரது அமர்வை சுவாரஸ்யமாக்கியது. அவரது கதைத் தலைப்புகளின் தெரிவு, காமிரா கோணங்கள் போன்ற கதைக் காட்சியமைப்பு, அவரது திரைப்படங்கள், ஒழிமுறியின் கேரளக் காட்சிப் பின்புலம், நூறு நாற்காலிகள் திரைப்படமாவதற்குரிய சாத்தியப்பாடுகள் என அவரது பன்முகத்துக்கு ஏற்ற கதம்பான கேள்வி பதில்கள்.

மாலை ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு சரியாக ஐந்தரை மணிக்கு கே.பி.வினோத் இயக்கிய ராஜ் கௌதமன் பற்றிய ‘பாட்டும் தொகையும்’ ஆவணப்படத்துடன் விருது விழா துவங்கியது. இருநாள் முடிவுறப் போவதெண்ணி எனது பதற்றமும் ஒருபுறம் துவங்கியது. அனைவரது உரையும் கேட்டுவிட வேண்டுமென மனதுள் வேண்டிக் கொண்டே அமர்ந்திருந்தேன். ராஜ் கௌதமன் அவர்களது ஏற்புரை நிறைவுறும் தருவாயில் கிளம்ப வேண்டியிருந்தது.

இத்தனை எழுத்தாளர்களது படைப்புகளை வாசித்து அது குறித்து அவர்களுடன் விவாதம் செயவதற்குரிய அரிய களம், இலக்கியம் குறித்துப் பகிர்ந்து ஆட்களில்லாத ஒரு வருடத் தனிமையை நீக்கும் நண்பர்கள் சந்திப்பு, ஆசானுடனான அரிய தருணங்கள் என நிறைவான இரு தினங்கள்.

பெருமழை பெய்து அப்போதுதான் விட்டிருப்பதை வெளியே வந்த பிறகே உணர்ந்தேன். இரு தினங்களும் இவ்விழா எந்த இடையூறுமின்றி செயல்பட தாங்கள் பெரும்பாலான அரங்குகளில் கலந்து கொள்ள முடியாத செந்தில், மீனாம்பிகை, விஜய சூரியன், போன்றவர்களை எண்ணிக் கொண்டே வெளியே வந்தேன். இருதினங்களும் தெளிவான திட்டமிடல், அருமையான உணவு. இதை சாத்தியமாக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் வணக்கங்களும்.

நீர்கிழித்து தலை தூக்கும் மீனென நகரத்தை மூடிவைத்த மழை மேகங்கள் வழியே தலைநீட்டி மேலேறிய விமானத்துடன் முழுப்பயணமும் இணை வந்தது நிலவு. நிலவு கிளர்த்திய கனவுகள் அனைத்திலும் கற்றுக் கொண்டே இருந்தேன். ஏதோ மலை முகட்டில், அடர்ந்த காட்டு வழியில், பேராலமரமொன்றின் அடியில் என எங்கெங்கோ கனவுகள் இட்டுச் சென்றன. பறவையாக மலையுச்சியிலிருந்து சிறகு விரித்தெழும் கனவும் வந்தது. அன்புநிறை ஜெ, எல்லா இடத்திலும் ஆசிரியனென முன்செல்லும் உங்கள் குரல்.

வணக்கங்களுடன் பேரன்புடன்,
சுபா

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விருதுவிழாவில் நான்காம் முறையாகக் கலந்துகொள்கிறேன். சென்ற ஆண்டுமுதல் முதல்நாள் விழா கருத்தரங்கு – ஆசிரியர் சந்திப்பு நிகழ்வுகள்- ஆக மாறியிருக்கிறது. தமிழகத்தின் மிகப்பெரிய இலக்கியவிழாவாக உருவாகியிருக்கிறது. இதை இன்னும் பிரம்மாண்டமாக சில இதழ்களோ அமைப்புகளோ நடத்திவிடமுடியும். ஆனால் அங்கே என்ன இல்லாமலாகும் என்றால் சமத்துவம்தான். இங்கே எந்த எழுத்தாளரும் நட்சத்திரம் அல்ல. எல்லாருமே படைப்பாளிகள். அவர்களுடைய படைப்புத்திறனால் வாசகர்களிடம் ஏற்பு பெறுகிறார்கள். எவரையும் செயற்கையாக ஏற்றிவைக்கவில்லை. ஆனால் பெரிய நிறுவனங்களில் அதைச்செய்ய முடியாது. புத்தகக் கண்காட்சி ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது. ஆனால் இன்றைக்கு அப்படி அல்ல. அங்கும் விஐபி அட்டகாசங்கள் ஆரம்பமாகிவிட்டன

இந்த விருது ஏன் முக்கியமாக்கிறது என்றால் இது ஓர் எழுத்தாளரை முன்வைக்கிறது. அவரை வாசிக்கவும் விவாதிக்கவும் செய்கிறது. அனிதா அக்னிஹோத்ரியிடம் ஒரு சில வார்த்தைகள் பேசினேன். அவர் சொன்னார், இதை ஒருங்கிணைப்பவர் ஒர் இடத்தில்கூட தன்னை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அவருடைய ஒரு படம் கூட இல்லை. ஒரு நிகழ்ச்சியிலும் அவர் பேசவில்லை. வேறு எழுத்தாளர்கள் மட்டுமே முன்னால் நிறுத்தப்பட்டார்கள். இது இந்தியாவில் எங்கும் நிகழ்வதே இல்லை என்று சொன்னார். அந்த அர்ப்பணிப்புதான் இந்நிகழ்ச்சியின் வெற்றி என்று நான் சொன்னேன். இத்தனைபேர் முன்னால் வந்து வேலைசெய்வதும் விவாதிப்பதும் இதில் இலக்கியம் மட்டுமே முன்னிறுத்தப்படுவதனால்தான். இங்கே ராஜ் கௌதமன் மட்டும்தான் எங்கும் விளம்பரம்செய்யப்பட்டார். இதைத்தான் நான் இலக்கியத்தின் வெற்றி என்று நினைக்கிறேன்

அனைத்து நிகழ்ச்சிகளும் அற்புதமாக நிகழ்ந்தன/ மிகச்சரியான நேரம் என்பது மிக முக்கியம். அது வாசகர்களை நீங்கள் முக்கியமாகக் கருதுகிறீர்கள் என்பதற்கு ஆதாரம். அவர்களுக்கு வந்துசெல்ல வசதி என்ன என்று பார்க்கிறீர்கள். ஒழுங்கு இரூந்ததனால்தான் ஒருவர் கூட வாய்ப்பில்லாமல் போகவில்லை. அத்தனைபேரும் கௌரவிக்கப்பட்டார்கள். விழாவில் வந்திருந்த எழுத்தாளர்கள் அனைவரும் மேடையில் இனங்காட்டப்பட்டார்கள். அது முக்கியமானது. உதாரணமாக கீரனூர் ஜாகீர் ராஜா மேடையில் வந்து ஒரு எழுத்தாளரை கௌரவித்தார். உடனே அவர் வந்திருப்பது அனைவருக்கும் தெரிகிறது. அனைவரும் அவரிடம் பேச வாய்ப்பு அமைகிறது

மிகச்சிறந்த விழா. முன்னுதாரணமாகக்கொண்டாடப்படவேண்டிய நிகழ்ச்சி

எஸ்.வெங்கட்ராகவன்

லீனா மணிமேகலை

புகைப்படத்தொகுப்பு

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா:கடிதங்கள் 6
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா:தேவிபாரதி உரை