விஷ்ணுபுரம் விருதுவிழா:தேவிபாரதி உரை

விஷ்ணுபுரம் காணொளிகள்

2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பேரா ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதுவழங்கும் விழா 23-12-2018 அன்று கோவையில் நிகழ்ந்தது. அதில் எழுத்தாளர் தேவிபாரதி அவர்கள் ஆற்றிய உரை

_MG_7010

ஒடுக்கப்பட்டோர் இலக்கியம்-நம்பிக்கைகளின் நிகழ்காலமும் அவநம்பிக்கைகளின் எதிர்காலமும்.

ராஜ் கௌதமன் போன்ற ஓர் இலக்கிய ஆளுமையின் பங்களிப்புகள் குறித்து உருப்படியாக எதையாவது சொல்லிவிட முடியும் என என்னால் கற்பனை செய்துகொள்ள முடியவில்லை. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக அதைப் பற்றிக் கொஞ்சம் யோசிக்க முயன்றேன். எனது முன்னோடிகள், சமகாலத்தவர்களின் இலக்கியப் பங்களிப்புகளைக் குறித்து மதிப்பிடுவதற்கு நான் முயன்றதில்லை. அது பெரும் உழைப்பையும் பொறுப்புணர்வையும் கோரும் ஒரு செயல்பாடு. துரதிருஷ்டவசமாக அவை என்னிடம் இல்லை. ராஜ்கௌதவமனையோ அவரது சமகாலத்திய படைப்பாளிகளையோ முழுமையாக வாசித்தறிவதற்கான முனைப்புகளில் நான் ஈடுபட்டதில்லை, அதுபோன்ற திட்டமெதுவும் இப்போதுகூட எனக்கு இல்லை. ஒரு ஒருவரின் படைப்புகளை கூடுதலாகவோ குறைவாகவோ அவ்வப்போது வாசிப்பது நிச்சயமாக அவரை மதிப்பிடுவதற்குப் போதுமானதல்ல.

கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் நவீன இலக்கியத் தளத்தில் ஓய்வின்றிச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ராஜ்கௌதமனின் கட்டுரைகளில் சிலவற்றை அவை வெளிவந்த காலங்களில் இதழ்களின் வழியாகவோ தொகை நூல்களின் வழியாகவோ வாசித்திருக்கிறேன் என்பது இந்த மேடையில் நின்றுகொண்டிருப்பதற்குப் போதுமான தகுதி அல்ல. இது எனது தயக்கத்தை அதிகரித்தது. எனினும் ராஜ்கௌதமனை, அவரது பங்களிப்புகளைப் புரிந்துகொள்வதற்கு நான் தொடர்ந்து முயன்றுகொண்டிருந்தேன். அவர் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலித்தியச் சிந்தனைகளைத் தன் செயல்பாடுகளுக்கான ஆதாரமாகக் கொண்டிருப்பவர். அதன் வெளிச்சத்தில் தமிழ்ச் சிந்தனைப் பரப்பின் எல்லைகளுக்குள் ஊடுருவியவர், அவற்றில் குறுக்கிட்டவர்,தமிழ்ச் சமூகத்திற்கும் அதன் சிந்தனைத் தளத்திற்குமிடையேயான இடைவெளிகளை ஆராய்ந்தவர், அதன் அரசியலைக் கண்டறிய முற்பட்டவர்.

தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளில் முதன்மையானவராக அறியப்பட்டிருக்கும் புதுமைப்பித்தனை, அவரது படைப்புகளை தலித்தியச் சிந்தனைகளின் ஒளியில் ஆராய முற்பட்டவர், தமிழ் நவீன இலக்கியத்தின் அடையாளமாகக் கருதப்படும் சுந்தரராமசாமியின் படைப்புகளை அவற்றின் அரசியலை ஆராய்ந்தவர், தலித்துகளின் படைப்புமொழியைக் கண்டறிய முற்பட்டவர், அயோத்திதாசர், பெரியார் எனத் தமிழ்ச் சமூகத்தின் விடுதலைக்காக உழைத்த ஆளுமைகளைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் தமிழ் நவீனச் சிந்தனைக்கு வளம் சேர்த்தவை. அவரது நாவல்களான சிலுவை ராஜ் சரித்திரமும் காலக்கண்ணாடியும் ஒடுக்கப்பட்டோர் வரலாற்றின் கவனிக்கத்தக்க பிரதிகளாக இடம்பெற்றிருப்பவை. ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, கைவிடப்பட்ட மனிததர்களின் வாழ்க்கையை இலக்கியத்தின் மையத்திற்கு அழைத்து வந்தவர்களில் ராஜ்கௌதமன் முக்கியமானவர். இப்படி ராஜ்கௌதமனை மதிப்பிடுவதற்கும் அவரைக் கொண்டாடுவதற்கும் அவரை வாசிப்பதற்கும் காரணங்கள் இருக்கின்றன.

1970களில் தோன்றிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மனிதர்களின் துயரங்களைத் தம் படைப்புக்களின் வழியே முனவைத்தார்கள், பா.செயப்பிரகாசம், பூமணி, ராஜேந்திர சோழன், மேலான்மை பொன்னுசாமி, பிரபஞ்சன் முதலான கலைஞர்களின் படைப்புகளில் அவை அதிகம் இடம்பெற்றிருந்தன. பூமணியின் முதல் நாவல் தலித் இலக்கியம் குறித்த சிந்தனைகளைத் தோற்றுவித்த படைப்புகளில் ஒன்று. செயப்பிரகாசத்தின் சில கதைகளில் விளிம்பிலும் வேறு சில கதைகளின் மையத்திலும் தலித் வாழ்க்கை குறித்த சித்தரிப்புகள் இடம்பெற்றிருந்தன.

அவை அவர்களின் துயரங்களைப் பகிர்ந்துகொண்டதோடு அவர்களது விடுதலைக்கான வாய்ப்புக்களைப் பற்றிய சிந்தனைகளையும் கூர்மைப்படுத்திக்கொண்டிருந்தன. அவர்களில் பலரும் மார்க்சியத்தின் தாக்கம் பெற்றவர்கள். இடதுசாரிக் கருத்தியல்களின் வழியே ஒடுக்கப்பட்ட மக்களின் துயரார்ந்த வாழ்க்கையை ஆராய்ந்தவர்கள். வர்க்க முரண்களின் ஒரு பகுதியாக சாதிய ஒடுக்குமுறையை, தீணடாமையின் அவமானங்களை, புறக்கணிப்பின் வலிகளை அடையாளம் காண முற்பட்டவர்கள். 1980களின் இறுதியில் அல்லது 1990களின் தொடக்கத்தில் இந்தச் சிந்தனை முறையில் பெரும் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. தலித் அரசியல் குறித்த சிந்தனைகள் தமிழ் அறிவுலகத்தின் மனசாட்சியோடு பேச முற்பட்டன. அதுவரையிலான அறிதலின் போதாமைகளைக் குறித்தும் படைப்பு மொழியில் நிலவி வந்த அநீதிகளைக் குறித்தும் உரையாடும் ஒரு புதிய தலைமுறை தமிழ் அறிவுலகில் கவனம் பெறத் தொடங்கியது. அப்போது நடைபெற்ற உரையாடல்களிலிருந்து வலுப்பெற்ற தலித் இலக்கியம் படைப்பு மொழியிலும் விமர்சனப் பார்வையிலும் அறக்கோட்பாடுகளிலும் தத்துவ நெறிகளிலும் தலைகீழான மாற்றங்களைக் கோரியது. நிறப்பிரிகையின் பங்களிப்பு அதில் முதன்மையானதும் முக்கியமானதுமாகும் என நினைக்கிறேன்.

அவரைக் கொண்டாடும் இந்த விழாவில் இந்த மேடையில் நின்றுகொண்டிருக்கும்போது தமிழ் நவீன இலக்கியத்தில் ராஜ்கௌதமனின் பங்களிப்புகள் குறித்து பேசுவதற்கான யோசனைகளில் மூழ்கியிருந்தபோது தோன்றியவை இவை. நான் குழப்பமடைந்தேன். இமையத்திலிருந்து, பாமாவிலிருந்து சுகிர்தராணியிலிருந்து ரவிக்குமாரிலிருந்து ஸ்டாலின் ராஜாங்கத்திலிருந்து இளம்பிறையிலிருந்து, விழி பா. இதயவேந்தன் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும் கவிஞர்களும் சிந்தனையாளர்களும் பங்களித்திருக்கும் தலித்திய இலக்கியத்தின் பங்களிப்புகள் குறித்தும் அவற்றின் சமூக அரசியல் விளைவுகள் குறித்தும் பரிசீலிப்பதன் ஒருபகுதியாகவே ராஜ்கௌதமனைப் பரிசீலிக்க வேண்டியது அவசியம் என நினைத்தேன். நிறப்பிரிகையில் தொடங்கி எண்ணற்ற சிற்றிதழ்கள், நிகழ், காலச்சுவடு, உயிர்மை, உயிரெழுத்து, அம்ருதா உள்ளிட்ட தீவிர இதழ்கள், இந்தியா டுடே, சுபமங்களா, ஆனந்தவிகடன், குமுதம், தமிழ் இந்து எனக் கடந்த கால் நூற்றாண்டுகளில் தலித் இலக்கியம் தமிழ் நவீன இலக்கியத்தின் அடையாளமாக மாறியதன் விளைவுகள் யாவை? இலக்கியத்தில், சிந்தனையில், அரசியலில் அதன் நிகழ்காலப் பயன்மதிப்புகள் எவை என்பது குறித்துப் பரிசீலிப்பது அவசியம் எனத் தோன்றியது.

ராஜ்கௌதமனின் பங்களிப்புகளைப் பரிசீலிப்பது அதன் ஒரு பகுதியாகவே இருக்கக்கூடும்.

இதுபற்றிய சிந்தனைகளில் மிகத் தற்செயலாகக் குறுக்கிட்டது கடந்த டிசம்பர் 13ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழா. எந்தத் திட்டமும் இல்லாமல் அந்தத் திரைப்பட விழாவுக்குச் சென்ற நான் நாளொன்றுக்கு குறைந்த பட்சம் நான்கு உலகத் திரைப்பட விழாக்களைப் பார்த்தேன்.

எனக்குப் பார்க்கக் கிடைத்த திரைப்படங்களில் குறைந்தபட்சம் 10 திரைப்படங்கள் உலகம் முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, கைவிடப்பட்ட மனிதர்களின் துயரங்களைப் பேசியவையவையாக இருந்தன. எகிப்தின் முக்கியமான ஒரு திரைப்படம் பற்றிச் சொல்ல வேண்டும். புறக்கணிப்புக்கும் அவமானத்திற்குமுள்ளான தொழுநோயால் பாதிக்கப்பட்ட குப்பை பொறுக்குபவர் ஒருவரையும் அவருடன் வாழும் அனாதைச் சிறுவன் ஒருவனையும் பற்றிய அந்தத் திரைப்படம் எனக்கு இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் துயரங்களை நினைவூட்டியது. நான் உறைந்து போனேன். படத்தில் பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் அந்தத் தொழு நோயாளியை அடித்து உதைத்து வெளியேற்றிய தன் சக மனிதர்களை நோக்கி அவர் கேட்கும் ஒரு கேள்வி படத்தின் குரலாகவும் உலகம் முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் எனக்குக் கேட்டது.

அடிபட்ட அந்த மனிதர் கேட்ட கேள்வி நான் மனிதன் இல்லையா? என்பதுதான்?  திரைப்பட விழாவின் தீம் என்பதுகூட அந்தக் கேள்வியை முன்வைப்பதாக இருந்ததாகவே எனக்குத் தோன்றியது.உலகின் மனசாட்சியை நோக்கி எழுப்பப்படும் புறக்கணிக்கக்கப்பட்ட, கைவிடப்பட்ட அந்த மனிதரின் கேள்வியை நான் ராஜ்கௌதமன் உள்ளிட்ட தலித் ஆய்வாளர்களும் இமையம் உள்ளிட்ட எழுத்தாளர்களும் சுகிர்தராணி உள்ளிட்ட கவிஞர்களும் எழுப்பும் கேள்வியாகவே புரிந்துகொள்கிறேன்.

இந்த மேடைக்குப் பொருத்தமற்றதாகத் தென்பட்டாலும் அதே திரைப்படவிழாவில் எனக்குப் பார்க்கக் கிடைத்த தென்கொரியத் திரைப்பட மேதை கிம் கி டுக் இன் ஒரு திரைப்படத்தைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். தன் திரைப்படத்தின் வழியே அவர் அறம் சார்ந்த, மனித மாண்புகள் சார்ந்த மனித உரிமைகள் சார்ந்த, ஜனநாயகம் சார்ந்த அரசியல் சார்ந்த கேள்விகள் எதையும் எழுப்பியதாகத் தென்படவில்லை. அவர் அவை எல்லாவற்றின் மீதுமான நம்பிக்கைகளைக் குலைக்கிறார். மனித குலத்தின் எதிர்காலம் குறித்த மிக பயங்கரமான சித்திரங்களை உருவாக்கிவிட்டுக் கடந்து செல்ல முயற்சிக்கிறார். ஒருவெளை இன்றைய ஒடுக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர், நாளை அதுபோல் நம்பிக்கையிழக்கலாம், இலக்கியம், தத்துவம், அரசியல், மனிதப் பண்புகள் சார்ந்த நமது இன்றைய நம்பிக்கைகள் வெறும் கற்பனைகளாகச் சிதறிப் போகலாம். அதற்கான தடயங்கள் தென்படத் தொடங்கியிருக்கின்றன.

விருது பெறும் ராஜ்கௌதமனுக்கு எனது வாழ்த்துக்கள்.

விருது வழங்கும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்திற்கும் ஜெயமோகனுக்கும் நன்றி.
•••

தேவிபாரதி
வெள்ளகோவில், 22 டிசம்பர் 2018
9677538861
கோவையில் நடைபெற்ற விருதுவழங்கும் விழாவுக்காக எழுதப்பட்ட கட்டுரை.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்-7
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா இதுவரை