விஷ்ணுபுரம் விழா கடிதங்கள் 5

விஷ்ணுபுரம் காணொளிகள்
அன்பிற்கினிய நண்பர் ஜெ அவர்களுக்கு வணக்கம்,

இந்தாண்டு விஷ்ணுபுரம் விருது விழா வழக்கம்போல் மிக சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் .நமது நண்பர்களுக்கு பாராட்டுக்கள்.

கடினமான பணிச்சுமையில்.. நண்பர் அலெக்ஸ் பிரிவு தனிமை..
2 நாள் மிக மகிழ்ச்சியாக இருந்தேன். அதற்கு உங்களுக்கு .நன்றி.

2 ஆண்டுகளாக எந்த நூலும் முழுமையாக வாசிக்கவில்லை அவற்றை update செய்துகொண்டேன்.

விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் சார்பில் நடக்கும் நிகழ்வில் ஆவலோடு பங்கேற்க விரும்புகிறேன். வாய்ப்பளிக்கவும்.

மிகவும் நன்றி
அன்புடன்
பாரி செழியன்

அன்புநிறை ஜெ,

தங்களுக்கும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும் எந்த வகையில் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. இவ்வாண்டு தான் முதன் முதலாக விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்துக்கொள்கிறேன். எப்படி இருக்குமோ என்ற ஒருவித படபடப்பு கூட தவிர்க்க இயலாமல் என்னை நானே ரசித்துக்கொண்டிருந்தேன். விழாவிற்கு கலந்துக்கொள்ள செல்வதற்குள் விஷ்ணுபுரம் படித்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.வாசகனுக்கு அவனுக்கான புத்தகம் தக்க காலத்தில் அவனை தேடி வந்தடையும் என்று நீங்கள் அடிக்கடி கூறுவீர்கள், இந்நிலையில் ஒருநாள் என் அக்காவிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, எதேச்சையாக, எங்க ஹாஸ்டல் ஓனரும் நிறைய புக்ஸ் வெச்சியிருக்காங்க டா, ஏதோ விஷ்ணுபுரம், உடையார்னு நிறைய இருக்கு நேத்துதா பாத்த என்று கூற, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதற்கடுத்த நாளே வரவழைத்து ஒரு வாரத்தில் படித்துமுடித்தேன். இதற்கு முன்பாகவே 2 முறை விஷ்ணுபுரம் படிக்க முயற்சி செய்தபொழுது 2 முதல் 4 பக்கங்களுக்கு மேல் செல்ல முடியவில்லை. ஆனால் இப்பொழுது மிக எளிதாக இருந்தது. கொற்றவைவிட கடினமாக இருக்கும் என்று எண்ணத்தை பொய்யாக்கியது. இவ்வளவு காட்சியமைப்பு கொண்ட நாவல் வாசித்ததில் ஒரு புதுஅனுபவம் கிடைத்தது. என்னையறியாமல் அந்த நாவல் என்னை உள்ளுக்குள் இழுத்துக்கொண்டது.

வாசித்து முடித்ததும், கோவையை விஷ்ணுபுரமாகவும், விழா நடக்கும் இடத்தை அந்தக் கோயிலில் உள்ள விவாத மேடையாகவும் உருவகித்துக்கொண்டேன். பேரூர் கோயிலுக்கு சென்று வந்திருந்தால் இன்னும் பலமாக அந்த உருவகம் நிறைந்திருக்கும். ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவிலலை.


கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் கிருஷ்ணன் மதுபாலுக்கு

இரு நாட்கள் இலக்கியமன்றி வேறெங்கும் நினைவு செல்லாமல், இலக்கியத்தில் திளைத்த நாட்கள் மீண்டும் கிடைக்க விரும்புகின்றேன். விழா முடிந்து வரும் வழியில், உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதல் அனைத்தே புலவர் தொழில் எனும் குறள் அடிமனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. முதலில் நன்கொடை கொடுத்தவர்கள், கொடுக்காதவர்கள் என்ற பேதம் ஏதும் பார்க்காமல் அனைவரையும் ஒன்று போலவே நடத்தியது, தங்க இடம் ஒதுக்கியதற்கு என்று உளமாற நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.


டி பாலசுந்தரம் தேவிபாரதிக்கு

இரண்டாவது அமர்வில் சரவண சந்திரன் அவர்கள் கலந்துக்கொண்டார்கள், இவரின் சுபிட்ச முருகன் மட்டும் தான் நான் வாசித்துள்ளேன். ஆகவே அதைப்பற்றிய என் சந்தேகத்தை கேட்டேன். அந்த நூல் வாசிக்கும்பொழுது சில இடங்களில் வெண்முரசு தான் வாசிக்கின்றோமா? என்று சந்தேகம் வருமளவிற்கு அதன் தாக்கம் இருக்கிறது, ஜெயகாந்தனின் குருபீடம் கதை, சுபிட்ச முருகன் கதை தொடர்பு, விஷ்ணுபுரம் நாவல் தாக்கம் என்று கேட்டதற்கு, விஷ்ணுபுரம் தாக்கம் என்னுடைய அனைத்து படைப்புகளிலும் இருக்கிறது. ஒருவேளை நான்தான் பிங்கலனோ? என்று நான் பலமுறை சுற்றியிருக்கிறேன். என்றும், தாங்கள் என் கேள்வியை மேலும் ஆழமாக விரிவாக ஏன் எனக்கு சுபிட்ச முருகன் படிக்கும் பொழுது, குருபீடம் ஞாபகம் வருகிறது என்று அனாச்சார ஆன்மீகம் இன்னும் கர்நாடகத்தில் தொடர்வதையும் குறிப்பிட்டு விவரித்தீர்கள், சரவண சந்திரன் அரங்கில் ஒருவித பரபரப்பான முகத்தோடுதான் இருந்தார். அவரின் இயல்பான முகவமைப்பு அப்படியா என்று தெரியவில்லை, சரவண சந்திரனின் அமர்வு உள்ளத்தியல்பின் எழுத்து என்று எடுத்துக்கொள்வேன். மேலும் முகநூல் எழுத்தாளர் என்று குறிப்பிட்டது மன வேதனை அளித்தது என்று கூற தாங்கள் அதை விளக்கவும், கூட இருந்தவர்கள் உசிப்பேற்றி விட்டார்கள் என்று தெரிவித்தார். தான் எப்பொழுதும் முரண்பட்ட ஒரு மனிதன் தான் என்று கூறினார். தன் வாழ்க்கையும், தனக்குத் தானும் முரண்படும் ஒரு வித்தியாசமான நபர் என்று தெரிவித்தார். தன்னுடைய மிக பரந்துப்பட்ட தொழில் அனுபவம், வாழ்க்கை அனுபவம் பற்றி மேலும் இலக்கியத்தில் பதிவுசெய்து பல புதிய முறைமைகளை இவர் அறிமுகப்படுத்த வேண்டும். அனுபவம் இருந்தும் ஏன் இன்னும் பலதரப்பட்ட மக்கள் அனுபவங்களை இலக்கியத்தில் பதியாமல், ஒரே மாதிரியாக எழுதுகிறான் என்று தாங்கள் ஆதங்கப்பட்டீர்கள், தங்களுக்கு தெரிந்த ஒருவர் வெளிநாட்டிற்கு சென்றும், அந்த மக்களை பற்றி எழுதாமல் இன்னும் தன் சொந்த ஊரைப்பற்றி எழுதுகிறான் என்று வுருத்தப்பட்டீர்கள், தன் சொந்த ஊரை எழுதுவதன் மூலன் தான் அங்கு செல்ல முடியாமையின் ஆதங்கத்தை தன் எழுத்தின் கற்பனை மூலம் நிவர்த்தி செய்கிறான் என்றுதான் நான் கருதுகிறேன்.

மூன்றாவது அமர்வாக, சுனில் கிருஷ்ணனின் அமர்வு, நான் மிகவும் மதிக்கும் மற்றொரு எழுத்தாளர், காந்திய சிந்தனையாளர். காந்தியை புரியாமல் நான் வசைபாடிய காலத்தில், தங்களின் இன்றைய காந்தி நூல் படித்து, இவர்தான் காந்தி என்று இன்றைய காந்தி இணையதளம் நோக்கி உந்தப்பட்டு, சுனில்கிருஷ்ணனின் அன்புள்ள புல்புல் வழியாக கண்டடைந்த இடம் என்னை நான் திரும்பிபார்க்கையில் எனக்கே வியப்பளிக்கும் இன்னும் காந்தியை என்னால் முழுவதுமாக சரியாக புரிந்துக்கொள்ள இயலவில்லை… இன்னும் தேடுகிறேன். சரியான புரிதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்…

நான்காவது அமர்வாக, ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் அமர்வு, வரலாறு, பண்பாட்டு ஆய்வுதளத்தில் பல புதிய தகவல்கள் எனக்கு கிடைத்தன. அயோதிதாசர் பற்றிய புரிதல், திருச்சி போன்ற நகரங்களின் ஊர் பெயர் மாற்றம், நூல்களின் முக்கியத்துவம் இதுபோன்ற அமர்வுகள் இன்னும் வரலாற்றின் பனி அதிகம் இருக்கிறது. கண்டடைவது அதிகம், செல்ல வேண்டிய தூரமும் அதிகம் என நமக்கு அறிவுறுத்திக்கொண்டே இருக்கும் ஒரு நல்ல வழிகாட்டி எனலாம். மக்கள் வரலாறு. பண்பாட்டிற்கென்றே ஒரு தனி அமர்வாக இதை நாம் கருதலாம் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் இவரின் தொடர் ஆய்வு முறை அடுத்த ஆய்வாக நந்தனின் ஆய்வு, நந்தன் ஒரு நந்தன் தான் என்று எண்ணியிருந்த சமயத்தில் பல ஊர்களில், பல பெயர்களில் நந்தன் வாழ்கிறான் என்று ஒலித்த குரல், வாய்மொழி வரலாறு, நாட்டார்ஆய்வு, மக்கள் வரலாறு போன்று வரலாற்றின் துறைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று புரிந்தன. ஆனந்த தீர்த்தர் பற்றிய இவரது விவரனைகள் உணர்ச்சிமிக்கதாக, மக்களின் மனதில் வரலாறு கடத்தப்படாமல், ஒரே ஒரு நபர் மட்டும் அந்த நினைவோடு எஞ்சி நிற்பதை கேட்கும் பொழுது, தலைமுறைகளின் வரலாற்றின் அவசியம் புரிந்தது. வீரம்மாள் பற்றிய குறிப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தது. வரலாற்றின் உள்கட்டமைப்பின் சாராம்சத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் எதிர்காலத்தில் வரலாறு செல்ல வேண்டிய பாதை, அப்பாதையின் ஈடர்பாடுகள் என்ன என்ன? அதை மீண்டு சென்று வென்று மீளுதலின் முக்கியத்துவம் என்ன என்று அருமையாக புரியவைத்த அமர்வு ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் அமர்வு.

ஐந்தாவது அமர்வாக கவிஞர்கள் நரண் மற்றும் சாம்ராஜ் அமர்வு, ஜென் கவிதைகள் பற்றிய கேள்விகள் எதிர்பார்த்தேன் நானும் கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன் ஆனால் அதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை. சாம்ராஜ் அவர்களின் பதில்கள், தன் கவிதையின் பின்னனியில் உள்ள தன்னுடைய வாழ்க்கை அனுபவங்கள், இயக்கத்தின் போதாமை, ஒரு இயக்கத்திற்கு எந்தளவு உண்மையான தொண்டர்கள் கிடைத்தும், அது வெற்றிபெறாமல் இருந்ததன் விளைவு, புரட்சி வடிவமாக கவிதையைக் கையாள்தல், எள்ளல், பகடி என மிக மகிழ்வான கற்றல் முறையாக நகர்ந்தது இந்த நகர்வு.

ஆறாவது அமர்வாக தேவிபாரதி அவர்களின் அமர்வு, பார்த்தவுடன் முதலில் பயம் தான் ஏற்பட்டது. ஏன் இவ்வளவு இறுக்கத்துடன் முகத்தை வைத்துக்கொள்கிறார் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் அவருடைய வாழ்க்கை அனுபவம் பற்றிய அவரின் விவரபை்புகள், டால்ஸ்டாயைவிட காந்தி ஒரு படி மேல் என்று காந்தியை உயர்த்திய முறை, ஆன்மீகத்தின் முறை, மார்க்ஸ், டால்ஸ்டாய், தஸ்தாவெஸ்கி, காந்தி என்று தனது முன்னுதாரனங்களை வரிசைப்படுத்தி அவர்களைப் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்த விதம் என கட்டமைக்கப்பட்ட ஒரு அமர்வாக இருந்தது.

இவ்வாறு முதல் நாள் ஆறு அமர்வுகள், ஆறு எழுத்தாளர்கள், இரண்டு கவிஞர்கள் என நிறைவோடு முடிந்தது. இத்தனை அமர்வுகளை ஒருசேர பார்க்கையில், நான் கண்டடைவது, எழுத்தாளராக ஒரு சொல்லின் பிறப்பு, சொல்லமைப்பு, திருத்தியெழுதுதல், எழுத்தாளனின் மன நிலை, எந்த மன நிலையில் எந்த நிலையில் எதை எழுது வேண்டும் என்று திட்டமிட்டு எழுதுவது ஒரு வகை, அருவியென மனதை திறந்து சொற்களை குவித்து, பாத்திகட்டி நீரிடுவது போன்று எழுதும் முறை, எழுத்திற்கு அனுபவம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, கலையின் முக்கியத்துவம், வரலாறு பண்பாட்டு முக்கியத்துவம், கவிதையின் முறைமைகள், இயக்கங்களின் போதாமைகள், தனிபட்ட மனிதனின் வாசிப்பு வளர்ச்சி என ஒரு நாளில் இலக்கியத்தில் எவ்வளவு உச்சம் தொட்டு விவாதித்து அமர்வுகளை நடத்த முடியும் என்பதற்கு இந்நாளின் பலதரப்பட்ட வெவ்வேறு இலக்கிய வகைமைகளின் விவாத அமர்வு எடுத்துக்காட்டு.

பாலசுந்தர்

முதல்நாளின் கடைசி கூடுகையாக, இலக்கிய வினாடி-வினா போட்டி ஆவலோடு எதிர்பாத்திருந்தேன். ஒரு வாசகன் இன்னும் எவ்வளவு வாசிக்க வேண்டும், தன் வாசிப்பு நிலை எந்தளவில் இருக்கிறது, தான் வாசித்ததது எந்தளவில் பதிந்துள்ளது, மேலும் வாசிக்க வேண்டியது என்ன என்ன? வாசித்ததின் மேலதிக தகவல்கள் என்ன என்ன? என்று ஒரு வாசகன் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்துக்கொள்ளும் ்முக்கிய நிகழ்வு இது. நாற்பது கேள்விகள், ஒவ்வொரு சரியான கேள்விக்கும் ஒவ்வொரு புத்தகம் பரிசு என மிக கலகலப்பாக எப்படி கற்றோம் என்று தெரியாதளவிற்கு மிக சுவாரஸ்யமாக நகர்ந்தது.

இந்த நாளில் ராஜ்கௌதமனின் மூன்று நூல்களும், தங்களின் பின்தொடரும் நிழலின் குரல், இந்திய ஞானம், அருகர்களின் பாதை, நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் என சில நூல்களை வாங்கினேன். நான் எதிர்பார்த்திராத வகையில் முன்திட்டமிடல் இல்லாமல், எப்பொழுதோ வாங்க வேண்டும் என்று எண்ணிய நூல்களை வாங்கினேன் மிக்க திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.

இதில் முக்கியமாக எனக்கு மிகவும் பிடித்த, மனங்கவர்ந்த, என் ஆதர்ச கவிஞர் தேவதேவனை பார்த்ததில் பேரானந்தம் என்றே சொல்லலாம், பார்த்ததோடு மட்டுமல்லாமல், அவருக்கு அருகில் அமர்ந்து அவ்வப்போது உரையாடிக்கொண்டு இருந்தோம். பழகுவதற்கு மிக மிக எளிமையானவராக இருந்தார். தேவ தேவனை பார்ப்பேன் என்று நினைக்கவேயில்லை. இச்சந்திப்பு எண்ணிப்பார்த்திராத அளவு எனக்கு ஆனந்தத்தை ஏற்படுத்தியது. நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூல் தேவதேவனுக்கு தாங்கள் சமர்பணம் செய்திருந்தீர்கள் அந்நூலில் அவரிடமும், உங்களிடமும் கையொப்பம் பெற்றுக்கொண்டது மிக்க மன நிறைவை தந்தது.

இரண்டாம் நாள், முதல் அமர்விற்கு முன்பாக தங்களிடம் வாங்கிய புத்தகத்தில் கையொப்பம் பெற்றுக்கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. ஆனால் புகைபடம் எடுக்கும் பொழுது மிக்க இறுக்கமாக இருந்தீர்கள். ஏனென்று தெரியவில்லை.

முதல் அமர்வாக பெண்ணிய எழுத்தாளர் லீனா மணிமேகலை அவர்களின் அமர்வு, முதல் கேள்வியே தவறுதலாக புரிந்துக்கொள்ளப்பட்டதோ என்று எனக்கு தெரிந்தது. ஏன் பெண் எழுத்தாளர்கள்தான் புனைவை எழுதும்பொழுது தங்கள் வாழ்க்கையை எழுதுவார்களா? ஆண் எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கையை புனைவாக எழுதியதில்லையா? ஏன் உடனே அதை லீனா மணிமேகலை பெண்கள் எழுதினால் வாழ்க்கையில் நடந்ததா என்று கேட்கும் நீங்கள், ஆண்கள் எழுதினால் அப்படி கேட்பதில்லை என்று கேட்டார், ஆனால் முந்தைய நாள் அவர் அமர்விற்கு வந்திருந்தால் தெரிந்திருக்கும், ஆண் எழுத்தாளர்களிடமும் இந்த கேள்வி ஒரு வாசகரால் வைக்கப்பட்டது என்று. எந்தக் கேள்வி கேட்டாலும் அதை பெண்ணிய நோக்கிலேயே பதிலளித்தது சற்று அயர்வை தந்தது. நீங்கள் எழுந்து ஒரு கவிஞராகத்தான் வாசகர்களாகிய நாங்கள் உங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறோம் என்று விளக்கியபின்பும், பெண்ணியமே தொடர்ந்தது.

தூமை பற்றிய பேச்சு வந்தபொழுது, தூமக்குடித்தான் எனும் சொல்லை பிரயோகித்து, கவிஞர் தேவதேவன் அவர்கள் எழுதிய கவிதையை காண்பித்தார். தூமை எனும் வார்ததையை முதலில் பயன்படுத்திய பொழுது தயக்கத்துடன் பயன்படுத்தினீர்கள் என்ற தேதேவனின் கேள்விக்கு அந்த தயக்கத்தை உண்டாக்கியதே நீங்கள் தான் (ஆண் வர்க்கம்) என்று முடித்துக்கொண்டார். அமர்வும் முடிந்தது.


எம் கோபாலகிருஷ்ணன் [மனைமாட்சி] சாம்ராஜுக்கு
அடுத்த அமர்வு வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி அமர்வு, முதல் நாளில் இருந்தே மிக மகிழ்ச்சியுடன், காணப்பட்டார். ஒரு இலக்கிய திருவிழா எப்படி நடக்கவேண்டும் என்பதற்கு இத்திருவிழா சிறந்த எடுத்துக்காட்டு என்று மிக மனமகிழ்ந்தார். தனக்கு தமிழ் தெரியவில்லை என்று வருத்தப்பட்டார். இன்றைய நவீன தலைமுறை எப்படி ஒரு மொழியுடன் தகவமைத்துக்கொள்கிறது, நம் முன்னோர்கள் சாதாரணமாக மூன்று, நான்கு மொழிகள் பேசினர், எனக்கும் நான்கு இந்திய மொழிகள் தெரியும், ஆனால் தமிழ் தெரியவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்று ஆதங்கப்பட்டார். தமிழ் புரியவில்லை என்றாலும் இந்த இரண்டு நாளில் வாசகர்களின் உடல்மொழி, உணர்ச்சி வெளிபாடுகள் ஆகியவற்றை வைத்து ஓரளவிற்கு ஊகித்து புரிந்துக்கொள்கிறேன் என்று கூறினார். கடைசியாக தன் கதையின் வங்காள மூலததை படித்துக்காண்பித்து உங்களுக்கு புரியவில்லை என்றாலும் எங்கள் மொழியின் ஓசையை கேளுங்கள் என்று கூறி வாசித்துக்காண்பித்தது மனதுக்கு மிகவும் பிடித்திருந்தது. வங்காளமொழியைக் கற்கவேண்டும் என்ற விருப்பமும் ஏற்பட்டது.

இரண்டாவது அமர்வாக விழா நாயகன், ராஜ்கௌதமன் அவர்களின் அமர்வு, நீயா, நானா எனும் போட்டி மட்டும்தான் சொல்லளவில் நடக்கவில்லை. எந்த கேள்விக்கும் அசரவும் இல்லை, நேரடியாக இதுதான் இந்தக்கேள்விக்கு பதில் என்று சொல்லிவிடவும் இல்லை. தமிழ் இலக்கியத்தில் இனி ஆய்வு செய்து வெளியிடுவதற்கு ஒன்றுமே இல்லை என்று எண்ணிக்கொண்டிருந்த நிலையில், பல முனைவர் பட்ட ஆய்வுகள் கூறியது கூறல் என்று தொடர்கையில், தமிழில் ஆய்வு புலங்களை வெளியிலிருந்து தேட வேண்டாம், கிடைத்த இலக்கியத்தையே நாம் இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை, அதை ஆய்வு செய்து புதிய ஒளிப்பாய்ச்சுவோம் என்று கூறியது இந்த அமர்வு. விருதிற்கான இந்த ஆண்டு தேர்வு மிக முக்கியமானது. தமிழ் ஆர்வலர்களுக்கான ஒரு அறைகூவல் என்றுகூட சொல்லலாம். விழா நாயகருக்கு பகடி மன்னன் என்றே பெயர் வைக்கலாம். எவ்வளவு சுய பகடி , அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்த விதம் அலாதி.


விஷால்ராஜா

மூன்றாவது அமர்வாக, மதுபால் அவர்களின் அமர்வு, மலையாளத்தில் உரையாடினார் என்றாலும், என்னால் அந்தளவிற்கு கருத்தூன்றி புரிந்துக்கொள்ள முடியவில்லை. சற்று நேரமானது. ஏதோ தான் புரிந்தது என்று எண்ணுகிறேன். கதைக்கான தலைப்பு தேர்வு பற்றியும், சினிமா பற்றியும் பேச்சு நீண்டது.

மொத்தமாக இவ்விரண்டு நாள் அமர்வுகள், இலக்கியத்தின் மொத்த சித்திரத்தையும் ஒரு சரடாக பின்னப்பட்டு மிக அழகாக எங்கள் முன் வைக்கப்பட்டுவிட்டது. பல கருத்துகள் இடம்பெறும் விதமாக இருந்தது. மிக்க பயனுள்ள அமர்வுகள்

இதற்கு பின்பு அனைத்து அமர்வுகளும் முடிவுக்கு வந்தன. கிட்டத்திட்ட விழா தொடங்குவதற்கு முன்பு இரண்டரை மணிநேரம் இடைவெளி…. என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த சமயம், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அமர்ந்துக்கொண்டிருந்தார். அவரிடம் மூன்று நபர்கள் பேசிக்கொண்டிருந்தார், நானும் சென்று ஐக்கியமானேன். மிகச் செறிவான பேச்சு, அந்த இரண்டரை மணிநேரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. மொழியில் சொற்களின் முக்கியத்துவம் பற்றி பேசிக்கொண்டிருந்தார் இடையிடையே அதற்குத்தகுந்த குறள்களை மேற்கோள்காட்டி பேசியது, இன்றைய காலத்தில் சொற்களின் உருமாற்றம், உறக்கம் போய் தூக்கம் ஏன் வந்தது, சோறு போய் சாதம் ஏன் வந்தது, சொற்களஞ்சியங்களின் முக்கியத்துவம், ஒரு படைப்பாளி தன் படைப்பை எந்த வகையில் எப்படி அதற்கான சொற்களை கண்டடைய வேண்டும் என்று எடுத்துரைத்தார். தமிழ் படைப்புகளை நிராகரித்தால், சொற்கள் நமக்கு கிடைக்காது என்றும், ஆட்சியர் என்ற சொல் எனக்குத் தெரிந்து கம்பர் தான் தன் கம்பராமாயணத்தில் முதன்முதலாக பிரயோகபடுத்தினார் என்றும் கூறினார். ஆக ஒரு படைப்பாளி தனக்கு தேவையான சொற்களை எங்கிருந்து வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றுக் கூறினார்.

சுசித்ரா

 

சொற்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததால், இடையில் சொற்களுடன் தொடர்புடைய தனக்குப்பிடித்த திருவெம்பாவை பாடலான, பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே என்று சொல்லி, ஏழு பாதாளங்களை குறிப்பிட்டு அதற்குக் கீழே சொல்ல முயன்றால் சொற்களுக்கு ஆற்றலின்றி திரும்பி வந்துவிடும் என்றும், வானில் மேலே செல்ல சொற்கள் பொருள் கொள்ளுவது போல் என்றும் சிவபெருமானின் அடிமுடியை சொற்களுடன் தொடர்புபடுத்தி பாடிய விதத்தை ரசித்துப் பேசினார். ஒவ்வொரு முறையும் முடிக்கும்பொழுது உணவு பண்டத்துடன் முடித்து அதற்கு பெயர் ஏற்பட்ட விதம், உணவு தயாரிக்கும் பாத்திரங்களின் பெயர் என்று சுவாரஸ்யமாக முடித்தார். தமிழ் மொழிக்கு மட்டும் வட்டாரத்திற்கு மொழி வேறுபாடு கிடையாது. மராத்தியிலும் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு விதமான மராத்தி பேசுகிறார்கள், இங்கு யாரும் வட்டார எழுத்தாளர்கள் கிடையாது என்றும், தன்னை யாரும் வட்டார மொழி எழுத்தாளர் என்று குறுக்குவதை பிடிக்காது என்று வெளிபடுத்தினார். கடைசியாக, கம்பராமாயணத்தில் தங்களுக்கு பிடித்த பாடல்கள் கூறமுடியுமா என்று கேட்டதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல், நான்கு பாடல்கள் வீதம் சொல்லி அதற்கு பொருளும் எடுத்துக்கூறி பிடித்ததற்கான காரணமும் எடுத்துக் கூறினார். இதுமட்டுமல்லாமல் இன்னும் நிறைய பாடல்கள் இருக்கு என்று கூறினார். ஆனால் விழா துவங்குவதற்கான நேரம் வரவே கனத்த இதயத்துடன் அவரிடமிருந்து பிரியாவிடை பெற்றோம். ஒரு சிற்றிதழில் பாடுக பாட்டே எனும் தொடரை எழுதி வந்தார், இடையில் எந்த வித முன்னறிவுப்பும் இன்றி அத்தொடர் நிறுத்தப்பட்டது. ஆனால் இவர் அதை நிறுத்தாமல், எழுதி, வரும் புத்தக கண்காட்சிக்கு அந்த நூல் வெளிவருவதாக கூறினார். அதை வாங்க ஆவலுடன் காத்திருப்பதாக கூறி விடைபெற்றோம். 

 

 

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இந்த விருது விழா ஏற்புரைகளும், வாழ்த்துரைகளும் அமைந்தன.மிகுந்த மனமகிழ்ச்சியும், மிகச்சிறந்த ஆண்டாகவும், சு. வேணுகோபால், கீரனூர் ஜாகிர்ராஜா, தேவதேவன், நாஞ்சில் நாடன் என்று பல முக்கிய எழுத்தாளர்களை சந்தித்தில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். விழா முடிந்து குழுப்படம் எடுத்துவிட்டு பிரியாவிடை பெற்று திரும்பும்பொழுது, மிகுந்த கனத்த இதயத்தோடு தான் சென்றேன். உவப்பத்தலைக்கூடி உளப்பிரிதல் அனைத்தே புலவர் தொழில் எனும் குறளின் பொருளை அன்று அனுபவித்தேன். விழாக்குழுவினருக்கும், தங்களுக்கும் மனங்கனிந்த நன்றி….

 

அன்புடன்,
ரா. பாலசுந்தர்

லீனா மணிமேகலை

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா :கடிதங்கள் 4
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை