விஷ்ணுபுரம் விழா:கடிதங்கள் 8

அன்புள்ள ஜெ,

இந்த ஆண்டு விருது விழா எனக்கு இனிய அனுபவமாக இருந்தது. கடந்த ஆண்டு இருந்த தயக்கமும் , கூச்சமும் நீங்கி அனைவரிடமும் உரையாட முடிந்தது. இலக்கியம் மட்டும் ஆன இந்த இரண்டு நாட்களுக்காக இந்த வருடம் முழுக்க காத்து இருந்தேன்.

22 காலை முதல் அமர்வு தொடங்கி அனைத்து அமர்வுகளிலும் பங்கு பெற முடிந்தது. பங்கு பெற்ற அனைத்து எழுத்தாளர்களின் ஆளுமைகளையும் இந்த அமர்வு மூலம் அறிய முடிந்தது. எனக்கு தனிப்பட்டு படித்த அமர்வு ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களுடையது ஒரு ஆய்வாளருக்கு உண்டான வகையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிக விரிவாக பதில் சொன்னார். சாம்ராஜ் , நரன் ,தேவிபாரதி அவர்களின் அமர்வுகள் சுய பகடி மிகுந்ததாக இருந்தது. அவர்களின் வாழ்க்கை பார்வை , எப்படி எழுத்துகளில் வெளிப்படுகிறது என்று விளக்கி கொள்ள முடிகிறது.

சுனில் கிருஷ்ணன் அவரின் அமர்வும் மிக சிறப்பாக இருந்தது. அவர் ஆரோகிய நிகேதனம் மாறி விஷ்ணுபுரத்திற்கு சவால் விடும் ஒரு படைப்பை தான் படைப்பேன் என்றபோது அங்கு இருந்த பலரும் அவராக ஆகி அந்த சவாலை உங்களை நோக்கி மனதளவில் விடுத்தார்கள் என்று நினைக்கிறேன் என்னையும் சேர்த்து.

பிற எழுத்தாளர்களின் அமர்வுகள் அவர்களின் வாழ்க்கை சார்ந்த பார்வையை அவர்களிடம் கேட்ட கேள்விகளுக்கும் கிடைத்த பதிலும் பிரதிபலித்தது. லீனா மணிமேகலை , சரவணன் சந்திரன், கலைச்செல்வி, சரவணன் கார்த்திகேயன் என்று வேறு வேறு தலத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் அவர்களின் எழுத்தில் அவர்கள் தேடுவதையோ , கண்டு அடைவதையோ இந்த அமர்வுகள் மூலம் வாசகர்களாக எங்களுக்கு கிட்டியது.

அமர்வுகளின் இடைவேளைகளில் எழுத்தாளர்களுடனான சந்திப்பு , பின் இந்த ஆண்டு சற்று தயக்கம் நீங்கி எழுத்தாளர்களை அணுகி கேள்விகளை கேட்ட முடிந்தது , பின் சில வாசகர்கள் கேட்டு கேள்விகளுக்கு அவர்கள் தரும் விளக்கம் என்று இடைவேளையிலும் இலக்கியம் சார்ந்து தான் விவாதம் சென்று கொண்டே இருந்தது.பின் இரவு வினாடி வினா போட்டியில் ஒரு புத்தகம் கூட பரிசு பெறாமல் திரும்பியது வருத்தும் தயுவதாக இருந்தாலும் , கேட்கப் பட்ட கேள்விகளை கொண்டு நான் இன்னும் வாசிப்பில் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும் என் வாசிப்பை நான் இன்னும் எவ்வளவு விரிவாக்க வேண்டும் என்று புரிந்தது.

முருகானந்தம்

சிறப்பு விருந்தினர்களின் அமர்வுகளும் சிறப்பாக விளங்கின , விருது நாயகர் ராஜ் கௌதமன் அவர்களின் அமர்வை தாங்கள் தொகுத்து வழங்கினாலும் அவரின் அமர்வை அவரே தொகுத்து சென்றார். தன் பதில்களை அவர் சுய பகடி மூலம் தன் வாழ்க்கை சார்ந்து விளக்க முயற்சி செய்தார் ஏனே எனக்கு தான் பிடி கிடைக்கவில்லை.

இடையில் உங்களை சந்தித்து ஆசிப் பெற்றது. பிறரிடம் என்னை நீங்கள் அறிமுகம் செய்தது எல்லாம் ஒரு நெகிழ்ச்சி ஊட்டியதாக இருந்தது. மயிலாடுதுறை பிரபு , வேனு வேங்கட்ராயன் , லோகமாதேவி என்று இந்த ஆண்டு சில நண்பர்களுடன் விருது விழா இனிமையாக முடிந்தது.

விருது விழாவுக்கு இந்த ஆண்டு வல்லபி அக்கா உடல் உபாதைகளுக்கு மத்தியிலும் வந்துவிட்டார்கள். அடுத்த நாள் கல்லூரி தேர்வு இருந்ததால் நான் அமர்வுகள் முடிந்த உடன் கிளம்பி விட்டேன். விருது விழாவின் காணொளியை இப்போது தான் பார்த்தேன். அருமையான உரை ஜெ. பல இனிய நிகழ்வுகளாக இந்த இரண்டு நாட்கள் அமைந்தது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கு என்நன்றிகள் மற்றும் வாழ்த்துகள். சிறப்பான் ஒருங்கிணைப்பு. மீண்டும் உங்களுக்கு என் நன்றிகள் .

சுகதேவ்.

கார்த்திகைப் பாண்டியன்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

இம்முறை விஷ்ணுபுர விழாவிற்கு வந்தது மிக இனிய நினைவுகளைத் தந்திருக்கிறது. முதல் நாள் மட்டும் தான் வந்திருந்தோம் என்றாலும். அந்த ஒரு நாள் வேறு ஒரு உலகில் சஞ்சரித்து விட்டு அது முடிந்தவுடன் ‘தட்’ என்று land ஆனது போல் உள்ளது. என் மகள்களும் வந்திருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. இத்தனைத் தீவிரமாக இலக்கியம் உபாசிக்கப்படும் இடத்தை அவர்களும் பார்க்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் அவா. என் மகள்களுக்கு பேச்சுத் தமிழ் வரும்.நானும் ஜெயகாந்தும் முடிந்த போதெல்லாம் நல்ல இலக்கியத்தை வாசித்துக் காண்பித்து விடுவோம். ஆங்கில இலக்கியத்தை அவர்களே தேடி வாசிப்பவர்கள். எனக்குக் கூட நல்ல ஆங்கில புத்தகங்களை சிபாரிசு செய்வார்கள். இருவரும் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள். இலக்கியத்தோடு இத்தனை பரிச்சயம் இருந்த போதிலும், விழாவில் நடந்த விவாதங்களை புரிந்து கொள்வதில் inadequate-ஆக உணர்ந்தார்கள். குழுவூக்குறிகளைப் போல் இவ்விழாக்களுக்கே உரிய ஒரு மொழி அமைந்து வந்துள்ளது.இதில் நகைமுரண் என்னவென்றால், சாம்ராஜ் மலையாளத்தில் சொன்ன ஒரு சிறு பகடியும், நீங்கள் மலையாளத்தில் சொன்ன ஒரு சிறு நிகழ்வும் தான் அவர்களுக்கு நேரடியாகப் புரிந்தது. Gulf-ல் வளர்ந்த குழந்தைகள் அல்லவா? அவர்களுக்கு மலையாளம் தான் காதுக்கு அருகில் உள்ளது:) தமிழ் இலக்கிய விழாவில் மலையாளப் பகடிகளுக்கு சிரித்ததைப் பற்றி சிரித்துக் கொண்டோம்.:) அனைத்துக்கும் ஈடுகட்டும் விதத்தில் இலக்கிய விlனாடிவினா அமைந்தது. அவர்கள் அதில் meaningful participation செய்ததும், பரிசுகள் வென்றதும் ஒரு பெரிய redemption- முக்கியமாக எனக்கு :)) On the whole, எங்கள் அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்தது. மறு நாளும் கலந்து கொள்ளாதது எனக்கு பெரிய இழப்பு. மதுபால், அனிதா அக்னிஹோத்ரியின் செஷன்களை மிஸ் செய்து விட்டேன்.


தளத்தில் வெளியான மதுபால் அவர்களின் சிறுகதைகள், முக்கியமாக அவற்றின் தலைப்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. தலித் மற்றும் பெண்கள் பற்றிய அல்லது பெண்களின் எழுத்துக்கள் -இவை தான் இந்த வருட விஷ்ணுபுர விழாவின் தீம். மதுபாலின் கதைகளில் ஊடாடும் பெண்களின் மீதான அக்கறை உண்மையிலேயே வேறு லெவெல். பெரும்பாலும் என்னுடைய career-ல் மலையாளிகளுடனேயே பழகியுள்ளேன். மலையாளப் பெண்களின் tough life, அவர்களின் மகன்களின் மேல் அவர்களுக்கு இருக்கக்கூடிய பெரும்பற்று, பொறுப்பு, கல்விக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் அனைத்தையும் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். நான் பார்த்த பெரும்பாலான மலையாளப் பெண்கள் career women. வீட்டிலோ conservative set up தான். கைலி அணிந்து கொண்டு, வெற்று மார்புடன், கட்டன் சாயா கேட்டுக் கொண்டேயிருக்கும், ‘எந்தாடீ, வாய் நோக்கியிரிக்கின்னே..’ என்று மனைவி மார்களை அர்ச்சனை செய்து கொண்டிருக்கும் கணவர்களால் ஆளப்படும் இல்லங்கள் தான் பெரும்பாலானவர்களுடையது. ஏட்டன்களைப் பற்றிய பராதிகளை வெளியிலும் சொல்லாமல் வேலையையும் sincere-ஆக செய்து கொண்டு தனக்கென்று ஒரு பெயரும் சம்பாதித்துக் கொள்ளும் பெண்களால் நிறைந்தது தான் gulf கேரள சமூகம். Disclaimer:- இளைய தலைமுறை தம்பதிகளில் மாற்றங்களைக் காண்கிறேன். இத்தகைய பெண்களைப் பற்றிய கதைகள், பக்தியின் பெயரால் அதிகாரம் செலுத்துபவர்கள், மதவெறியால் புதிதாக முளைத்துள்ள கொலைச் சம்பவங்கள், அதனால் ஏற்படும் மன/மத மாற்றங்கள் என்று தீவிரமான ஒரு உலகம் மதுபால் அவர்களுடைய எழுத்துக்களில்.


தாய் நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து பல தலைமுறைகளாக வேறு நாட்டில் வசிப்பவர்கள் தங்கள் நாட்டிலிருந்து எடுத்து வந்த விழுமியங்களை விதை நெல்லென பாதுகாக்கிறார்கள். தாய் நாட்டில் உள்ள அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னேறி விடுகிறார்கள். புலம் பெயர்ந்தவர்கள் catch up செய்வதற்கு காலங்கள் ஆகின்றன. புலம்பெயர்ந்தவர்களுக்கு தாங்கள் விட்டு வந்த மண்ணை நினைவுறுத்துபவை அவ்விழுமியங்கள் மற்றும் அவ்வுறை நிலை கலாசாரம் மட்டுமே. பெண் கதாபாத்திரங்களே இல்லாமல் ஒரு முழு நீளப் படத்தை எழுதிய உங்களுக்கு மதுபால் நல்ல contrast :))

Romanticist/Idealist- ஆன மனிதர்கள் சந்திக்கும் சவால்கள், அச்சவால்கள் அவர்களை உடைத்துப் போடும் சித்திரங்கள்,அல்லது அச்சவால்களை சந்தித்து சீதாப்பழ மரங்களாக மிஞ்சி நிற்கும் அவர்களின் உறுதிகள் – இவையே அனிதா அக்னிஹோத்ரியின் கதையுலகம். அவர்களின் பேச்சை ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஜனிஸ் பரியத்தின் சிறுகதை தொகுதி வெளியீடு

நான் குடிமைத் தேர்வுக்கு முயலும் போது(of course அதில் தோற்று விட்டேன்), இந்திய வரலாறே என் விருப்பப்பாடம். நம் புராணங்கள் அனைத்தும் இந்திய வரலாற்றாய்வாளர்களால் இடது கை நுனி விரலால் புறந்தள்ளப்படுவதைப் பார்த்து அதிர்ந்திருக்கிறேன். ராஜ் கௌதமனின் மாற்று வரலாற்றுப் பார்வை, சங்க காலங்களின் திணைகளைப் பற்றிய அவதானிப்புகள் ஆகியவை சுவாரஸ்யமாக இருக்கின்றன. அவரின் அனைத்து புத்தகங்களையும் வாங்கியிருக்கிறேன். வாசித்துக் கொண்டிருக்கிறேன். ராஜ்கௌதமனைப் பற்றி நீங்கள் எழுதியிருக்கும் முதல் கட்டுரை-வரலாற்றெழுத்தை தொகுத்துச் சொல்லியிருப்பது எனக்கு மிகுந்த மன எழுச்சியைத் தந்தது.

நான், ஜெயகாந்த், செல்வராணி எல்லோரும் பேசிக் கொண்டது போல ‘more than a mouthful’ உங்கள் தளத்தில் சில நாட்களாக. அனைத்தையும் அள்ளி அள்ளி விழுங்கியாகி விட்டது. மெள்ள ஂமெள்ள அசை போட்டு செரித்து தனதாக்கிக் கொள்ளவேண்டும்.

மிக்க நன்றி,
கல்பனா ஜெயகாந்த்.

அன்பு ஜெமோ அவர்களுக்கு ,

வணக்கம். நான் கடந்த 2016 முதல் விஷ்ணுபுரம் விழாவில் கலந்து வருகிறேன். ஆனால் இம்முறை தான் முதன் முறையாக சனிக்கிழமை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.

கவிஞர் இசை, கவிதா சொர்ணவல்லி, ஜான் சுந்தர்

முதல் நாள் விருந்தினர்களுடனான சந்திப்புகள் யாவும் கலகலப்பாகவும் சுமூகமாகவும் இருந்தது. இரண்டாம் நாள் அப்படி இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதாகவே லீனா மணிமேகலை அவர்களுடனான உரையாடல் அரங்கு அமைந்தது.

அன்று காலை சுமார் ஏழு மணியளவில் நான் உட்பட நண்பர்கள் உடனான உரையாடலின் போது படைப்புகளின் மீதான விமர்சனத்தை விட ஒரு எழுத்தாளரை வரிசைபடுத்துவது ஒப்பிடுவது அதிகம் பதற்றம் கொள்ள வைக்கும் என நீங்கள் சொன்னது ஞாபகம் வந்தது .விழா நாயகன் திரு ராஜ்கௌதமன் அவர்களுடனான அரங்கு உரையாடல் தனக்கென ஒரு தனியான வரலாற்று பார்வை கொண்ட கறாரான பேராசிரியர் ஒருவருடனான உரையாடல் போல் இறுக்கமாக இருக்கும் என நினைத்திருந்தேன். மாறாக அவர் போலித்தனமான பாவணைகள் ஏதுமின்றி இயல்பாக உரையாடினார். மாலையில் திரையிடபட்ட ஆவணப்படம் அதை சிறப்பாக பதிவு செய்திருந்தது. இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஒரு உச்ச நாயகனுடன் பணியாற்றிய அனுபவத்தை பெற்றிருப்பார்கள் என நம்புகிறேன்.

கே என் செந்தில்

ஒரு பதிலின் போது தான் தனக்காகவே வாழ்வதாகவும் பிறருக்காக வாழவில்லை எனவும் பிறரும் அது போலவே வாழவேண்டும் என அழுத்தமாக தெரிவித்த போது அது தவறு என ஒருவர் சுட்டிகாட்ட சற்றும் அசராமல் அவர் தன் உறவினர்தான் ஆனால் அவர் சொல்லை தான் ஏற்கவில்லை என அழுத்தம் திருத்தமாக்கினார். சாதி ஒழிய வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தமது சாதிய உறவினரிடமிருந்து வெளியேற வேண்டும் என்றார். எனக்கும் அது சரி என பட்டது.
anita

கடிதம் மிக நீண்டு விட்டது.இது போன்ற ஓரு நீண்ட கடிதத்தை இதுவரை நான் எழுதியதில்லை. எப்படி முடிப்பதென தெரியவில்லை.

விழா நண்பர்கள் அணைவருக்கும் நன்றி.

என்றும் அன்புடன்
ஜெயப்பிரகாஷ்
காங்கயம்.

லீனா மணிமேகலை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-5
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா:கடிதங்கள்-9