விஷ்ணுபுரம் விழா கடிதங்கள் -3

48408299_10155912825957108_25962579088113664_n

டியர் ஜெயமோகன்,

விழாவில் கிட்டிய அனுபவத்துக்கும், பரிசில்களுக்கும், விருந்தோம்பலுக்கும் நன்றி.

நிகழ்வு குறித்து கடந்த மூன்று தினங்களில் அவ்வப்போது ஃபேஸ்புக்கில் நான் எழுதிய குறும்பதிவுகளைத் தொகுத்திருக்கிறேன்:

சி சரவணக்கார்த்திகேயன்

விஷ்ணுபுரம் விழா சில குறிப்புகள்

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விழா மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. நான் பத்தாண்டுகளாக வெவ்வேறு இலக்கிய விழாக்களில் கலந்துகொள்பவன். பெரும்பாலும் எதுவும் பேசியதில்லை. விழாவுக்கு வருபவர்களைக்கூட தூரத்தில் நின்று மனதால் சந்தித்திருக்கிறேன். நான் சந்தித்த ஒரே எழுத்தாளர் அசோகமித்திரன். அவரை காரில் வீட்டுக்குக் கொண்டுசென்றுவிட்டேன். மிக மகிழ்ச்சியாக இருந்தது இந்த விழா. இந்தவிழாவுக்காக நான் தனியாக வந்திருந்தேன். அற்புதமான நிகழ்வு.

இத்தகைய விழாக்களில் நான் காண்பது ஒரு கலைவு. பலவகையான நண்பர்கள் கலந்துகொண்டு கூடி ஒரு நிகழ்வை நடத்துவார்கள். ஆகவே கம்யூனிகேஷன் இருக்காது. ஆகவே பிரச்சினைகள் வரும். நான் ஏற்கனவே சொன்ன நிகழ்ச்சியில் அசோகமித்திரனை கூட்டிவந்தவர்கள் வீட்டுக்குப்போக ஏற்பாடு செய்ய மறந்துவிட்டார்கள். சின்ன தப்புதான். ஆனால் மிகப்பெரிய மனவருத்தத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே உங்கள் நிகழ்ச்சியில் இருந்த திட்டமிடலும் ஒழுங்கும் மிக மிக நிறைவளித்தன. வந்திருந்த எந்த எழுத்தாளரும் உபசரிக்கப்படாமல் போகவில்லை என்பதை கவனித்தேன். அத்தனைபேரையும் தனித்தனியாகக் கவனித்து தனித்தனியாக கூட்டிவந்து கூட்டிச்சென்றதைக் கண்டபோது இப்படித்தான் ஒரு நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது

அதேபோல நிகழ்ச்சிகளின் ஒழுங்கு. அனைத்து நிகழ்ச்சிகளும் மிகச்சரியான நேரத்தில் தொடங்கின. பலசமயம் இது அமைப்பாளர்களின் திறன்குறைவாக இருக்கும். ஆனால் இதையே ஒரு இயல்பாகச் சொல்லிக்கொள்வார்கள். என்ன பிரச்சினை என்றால் பார்வையாளர்களை கணக்கிலெடுப்பதில்லை. மிகச்சரியாகத் தொடங்கும் ஒரு நிகழ்ச்சி பார்வையாளர்களின் நேரத்தை பாதுகாக்கிறது. மிகக்கூடுதலான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் சோர்வடையாமலிருக்கவும் செய்கிறது.

விவாதங்களும் மிகச்சிறப்பாக இருந்தன. பெரும்பாலும் நம்மூர் மேடைகளில் எவராவது மைக்கை எடுத்து பேசித்தள்ளுவார்கள். வாய்திறக்கும் தகுதியே அவர்களிடமிருக்காது. நாமும் சிவனே என்று கேட்டுக்கொண்டிருக்கவேண்டும். உங்கள் அரங்கில் அனைவருமே எழுத்தாளர்கள்போல பேசினார்கள். சுருக்கமான கேள்விகள். அனைவருமே எழுத்தாளர்களை வாசித்துவிட்டு core சார்ந்தே கேள்விகளைக் கேட்டார்கள். சரவணன் சந்திரன், தேவிபாரதி,நரன், சாம்ராஜ், சரவணகார்த்திகேயன், கலைச்செல்வி அனைவரைப்பற்றியும் ஆழமான கேள்விகள் எழுந்தன.

மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்த நண்பர்களுக்கு என்னுடைய நன்றி. வணக்கம்
சிவசங்கர்
சென்னை

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் அமர்வில் ஒவ்வொரு சந்திப்பும் உற்சாகமானதாக அமைந்திருந்தது. வெவ்வேறு எழுத்தாளர்கள், வெவ்வேறு பார்வைகள். கலைடாஸ்கோப் போல திரும்பிக்கொண்டே இருந்தது. அரங்கிலும் எழுத்தாளர்கூட்டம்.அவர்களுக்கும் ஏராளமான பார்வைக்கோணங்கள். மாறிமாறி கருத்துக்கள் வந்துகொண்டே இருந்தன

சி.சரவணக்கார்த்திகேயன் எழுத்து என்பது திட்டமிட்டது என்றார். அருகே அமர்ந்த கலைச்செல்வி திட்டமிடலே கிடையாது என்றார். அடுத்து வந்து அமர்ந்த சரவணன் சந்திரன் அதை தன்போக்கில் எழுதுவதாகச் சொன்னார். லீனா மணிமேகலை பேசியது முழுக்கமுழுக்க பெண்ணிய அரசியல். ஆனால் தேவிபாரதி சரவணன் சந்திரன் எல்லா அபொலிடிக்கல் ஆக தெரிந்தனர்.

ஒவ்வொரு எழுத்தாளரும் தங்களை முழுமையாகப் பேசி முன்வைக்கும்படி அரங்கு அமைந்திருந்தது. உண்மையில் கேள்விகள் எல்லாமே அவர்களின் படைப்புக்களிலிருந்து வந்தன. பெரும்பாலான கேள்விகளில் எதிர்விமர்சனம் இருந்தது. ஆனால் அதை மென்மையாக கம்மிபண்ணி கேட்டார்கள். தேவிபாரதிக்கு மட்டும்தான் நிறைய பாராட்டுக்கேள்விகள். ஸ்டாலின் ராஜாங்கம் பேச ஆரம்பிக்கும்போது அவர்மேல் இருந்த விமர்சனப்பார்வை பேசிமுடித்தபோது மாறியிருந்தது. இந்த விமர்சனக்கேள்விகள்தான் எழுத்தாளர்களை நிறையப் பேசவைத்தது என நினைக்கிறேன். இந்த எழுத்தாளர்கள் எல்லாம் நிறைய பேசும் இன்னொரு அரங்கு இருக்குமா என்று தெரியவில்லை.

மிகச்சிறப்பான உரையாடல். தமிழ்நாட்டில் இந்த அளவுக்குக் கிரியேட்டிவ் ஆக ஒரு சந்திப்பும் விழாவும் நிகழமுடியும் என்பதே மிகப்பெரிய ஆச்சரியம்தான். ஒரு பிசிறு இல்லை. கண்டபடி எவருமே உளறவில்லை. என்னைப்போன்ற ஒரு வாசகனுக்கு பன்னிரண்டு மணிநேரம் இலக்கிய உரையாடல் என்பது மிகப்பெரிய கொந்தளிப்பு. பத்து புத்தகங்களை வாசிப்பதுபோல். சொல்லப்போனால் சென்ற ஆண்டு நான் வாசித்த மொத்த புத்தகங்களைவிட அதிகமாக இந்த இரண்டுநாட்களில் கற்றுக்கொண்டேன். நீங்கள் சொன்னதுபோல விழாமனநிலை. ஆகவே மனம் மிகமிக க்ரியேட்டிவ் ஆக இருந்தது.

எவ்வளவு கருத்துக்கள். சமூகம், அரசியல், இலக்கியம், இலக்கியவிமர்சனம். எல்லாவற்றையும் யோசித்துத் தொகுத்துகொள்ள நீண்டகாலம் ஆகும் என நினைக்கிறேன்

சரவணக்குமார்

அன்பின் ஜெ,

“இவர்கள் இருந்தார்கள்” இரண்டாம் முறையாக வாசித்து கொண்டிருக்கிறேன். விழா நினைவலைகள் இடையிடையே தலைதூக்கி திவான் பகதூர் ரோட்டுக்கு இழுத்தபடி உள்ளன.

ஒவ்வொரு வெண்முரசின் முடிவிலும் வந்ததிலயே இதுதான் ஆகச்சிறந்ததென்று தோன்றும், இனிமேல் உதாரணத்தை மாற்ற வேண்டியதுதான். இந்த விழாக்களும் அப்படித்தான்

“ஆர்ப்பரிக்கும் சமுத்திரத்தை, அதன் அலையை உணர்வதற்கு மொழியொன்றும் தடையோ தேவையோ
இல்லை”

இருநாள் அமர்வுகள் அனைத்திலும் பங்குபெற்ற அனிதா அக்னிஹோத்ரி அவர்கள் முத்தாய்ப்பாய் கூறிய வரிகள். வங்க மொழி தேசிய கீதத்தை பாடி விருது விழாவை நிறைவுசெய்கையில் உணர முடிந்தது.

நான் பரவசத்துடன் அவரை நோக்கி ஓடினேன். அவர் அரங்குக்கு வெளியே சென்று விரிந்த திண்ணையில் தூணருகே நின்றிருந்தார். நான் சென்று வணங்கி, “என் பெயர் ….., தமிழில் நிறைய வாசிக்கிறேன்” என்று பதற்றமும் மூச்சுத்திணறலுமாகச் சொன்னேன்.

–என்று 1985ல் க.நா.சு வை நீங்கள் சந்தித்த நிகழ்வை படிக்கையில் “ராஜஸ்தானி சங்க்” அரங்கின் மூன்று தளங்களிலும் இருநாள்கள் அருகிலிருந்து கண்டதை நினைத்துக்கொள்கிறேன்.

“சொந்தக்காரவங்க வீட்டு கல்யாணத்துல கலந்துகிட்டு கிளம்புற மாதிரிதான் இருக்கு…” கடைசி படியை கடந்தபடி நாஞ்சில்நாடன் சொன்னது,ரயில் நிலையத்தில் புன்சிரிப்புடன் அவசர கதியில் கடந்து செல்லும் வாசக நண்பர்களை பார்க்கையில் மீண்டும் நினைவிற்க்கு வந்தது.

“விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்” என்னும் ஒற்றைப்புள்ளியில் இணைந்து,இசைந்து, இல்லாமலாகிய இரு நாட்கள்.
“இந்த உலகின் பணம், அதிகாரம் அற்பவேட்டைகள் அனைத்தையும் இப்படிக் காலடி வைத்து இலகுவாக தாண்ட முடிந்தால் மட்டுமே நான் வாழ்ந்தவன்,வென்றவன் என்று எண்ணிக்கொண்டேன்” – “சக்கரவர்த்தி உலா”வின் கடைசிவரிகள்.

யோகேஸ்வரன் ராமநாதன்

லீனா மணிமேகலை

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்