«

»


Print this Post

இமையத்திற்கு இயல் விருது – 2018


imaiyam

எழுத்தாளர் இமையம் இவ்வாண்டுக்கான இயல் விருதைப் பெற்றுள்ளார். கனடாவை மையமாகக் கொண்டு வழங்கப்படும் இயல்விருது தமிழ் இலக்கியவிருதுகளில் பெருமைமிக்கது. சுந்தர ராமசாமி தொடங்கி தமிழின் முதன்மையான படைப்பாளிகள் இவ்விருதை பெற்றிருக்கிறார்கள்.

எழுத்தாளர் இமையம் கோவேறு கழுதைகள் என்னும் நாவல் வழியாக தமிழில் அறிமுகமானவர். தமிழின் இயல்புவாத இலக்கியப்போக்கின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். தமிழில் 1990 களில் தலித் அரசியலும் தலித் பண்பாட்டாய்வும் உருவாகி வந்தன. தொடர்ந்து தலித் இலக்கிய அலை எழுந்தது. அந்த அலை உருவாக்கிய இரு பொரும்படைப்பாளிகள் இமையம், சோ.தர்மன். அடித்தளமக்களின் வாழ்க்கையை இயல்புவாத அழகியலுடன் சொல்லும் இவர்களின் கதைகள் சமூக விமர்சனமாக கூர்கொள்பவை. ஆனால் அதற்கும் மேலே சென்று மானுட வாழ்க்கை, வரலாறு சார்ந்து ஆழ்ந்த வினாக்களையும் எழுப்பிக்கொள்பவை. அவ்வகையில் எந்த ஒரு பெரும்படைப்பாளியின் படைப்புக்களையும்போல அழகியல் – சமூகவியல் அடையாளங்களைக் கடந்துசெல்பவை அவை.

உதாரணமாக கோவேறுகழுதைகள். அதன் சமூகப்புலம், அது உருவாக்கும் உணர்ச்சிகள் சார்ந்து அது ஒரு தலித் நாவல். தலித் அழகியலை தமிழில்நிலைநாட்டிய ஆக்கம். ஆனால் ஒரு வாசகன் அதை உயிர்வாழ்தலுக்கும் இருப்புக்கும் இடையேயான வேறுபாட்டை உசாவும் படைப்பாகவும் வாசிக்கமுடியும். அந்நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் வெறுமே தங்கிவாழ்கிறது. விலங்குகளைப்போல. அதற்கான போராட்டங்களே அவர்களின் வாழ்க்கை. ஆனால் ஆரோக்கியம் மேலதிகமாக ஓர் இருப்பைக் கொண்டிருக்கிறாள். அது அவளுடைய அன்பினால், வாழ்க்கையினூடாக அவள் கனிந்தபடியே செல்வதனால் நிகழ்வது. அவ்வகையில் இமையம், சோ.தருமன் போன்றவர்களின் மேலோட்டமான தொடக்க அடையாளமே தலித் எழுத்தாளர்கள் என்பது. அவர்களை நாம் மேலும் விரிவாக ஆராயவேண்டியிருக்கிறது. முன்னரே இதை எழுதியிருக்கிறேன், விரிவாக எழுதவேண்டும்.

இமையம் தொடர்ச்சியாக தமிழில் எழுதிவரும் படைப்பாளி. ஆறுமுகம், செடல், எங்கதே போன்ற நாவல்கள். ஏராளமான சிறுகதைகள். தற்காலத் தமிழிலக்கியத்தின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். இவ்விருது வாசகர்களும் சேர்ந்து அவருக்கு அளிப்பது. இமையத்துக்கு வாழ்த்துக்கள்

header

இயல் விருது அறிவிப்பு

தமிழ் இலக்கியத் தோட்டம், 2018-ஆம் ஆண்டிற்கான வாழ் நாள் சாதனையாளர் இயல் விருதை, 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு வழங்குவதில் பெருமை அடைகிறது.

எழுத்தாளர் இமையம் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது விருத்தாசலத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வரும், வெ. அண்ணாமலை என்ற இயற்பெயர் கொண்ட இவர் எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டு கிராமங்களில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களே இவர் கதைகளின் பாத்திரங்கள். அவர்களின் வாழ்க்கை, கலாச்சாரம், சாதி, வகுப்பு, பால் பேதங்களால் அவர்கள் படும் அவலம் போன்றவற்றை அவர்களின் மொழியிலேயே கதைகளாக வடித்திருக்கிறார்.

”தமிழில் இதற்கு இணையாக நாவல் இல்லை” என்று அவரது முதல் நாவலான “கோவேறுக் கழுதைகள்” நூலை தமிழின் முன்னோடி எழுத்தாளர் திரு. சுந்தர ராமசாமி விமர்சித்திருக்கிறார். இந்நாவல் Beasts of Burden என ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.

மனித மனங்களின் பல்வேறுபட்ட மனநிலைகளை தன் ஒவ்வொரு புனைவிலும் காத்திரமாக பதிவுசெய்துவரும் இமையம் தமிழ் படைப்பாளிகளில் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும், சாதி ஆதிக்க மனோபாவத்தை தொடர்ந்து விமர்சித்து வரும் ஒருவராகவும் விளங்குகிறார். ‘இலக்கியப் படைப்பு என்பது சமூக விமர்சனம். சமூக இழிவுகளாக இருப்பவற்றை விமர்சனம் செய்வதுதான் ஒரு நிஜமான கலைஞனின், கலைப்படைப்பின் வேலை. சமூக இழிவுகளை சுட்டிக்காட்ட, அடையாளப்படுத்தவே எழுதுகிறேன். நான் சரியாகவும், முழுமையாகவும் சமூக இழிவுகளை பதிவு செய்திருக்கிறேனா என்பதில்தான் என்னுடைய கதைகளுக்கான உயிர் இருக்கிறது. எழுத்தின் அடிப்படையே அதுதான்.’ இவ்வாறு இமையம் சொல்கிறார்.

இமையத்தின் கதைகள் ’இப்படிப்பட்ட சமூகத்திலா நாம் வாழ்கிறோம்’ என வாசகர்களை கண்ணீர் விடவும், கூச்சப்படவும் வைப்பவை. இவருடைய சிறுகதைகள் நம்மை புதுஉலகத்திற்குள் இட்டுச் செல்கின்றன. சாதி ஆணவக் கொலையைப் பற்றிய பெத்தவன் என்கிற நெடுங்கதை, இவரின் படைப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று என கருதப்படுகிறது. இக்கதை தெலுங்கில் மொழிபெயர்க்கப் பட்டு திருப்பதிப் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.

கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், எங் கதெ, செல்லாத பணம் ஆகிய இவருடைய நாவல்களும், நாலு சிறுகதை தொகுப்புகளும் இதுவரை வெளிவந்துள்ளன. அக்னி விருது, பெரியார் விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது உள்பட பல விருதுகள் இதுவரை பெற்றிருக்கிறார்.

இவருடைய மனைவி புஷ்பவல்லி, மகன்கள் கதிரவன், தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் விருத்தாசலத்தில் இவர் வசித்து வருகிறார். விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் 2019 ஜூன் மாதம் வழமைபோல நடைபெறும்.

இயல்விருதுக்குழு
கனடா
http://www.tamilliterarygarden.com/

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/116412