விஷ்ணுபுரம் விழா பதிவுகள்-1

அன்புள்ள ஜெ

இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருது விழா நிகழ்வுகளில் இரு நாட்களும் முழுமையாக (முதன்முறையாக)கலந்து கொண்டேன்(மதுபால் அமர்வு தவிர). கொண்டாட்ட மனநிலையும் கற்றல் சூழலும் நிறைந்திருந்த்து. கொண்டாட்டத்திற்குக் காரணம் விழா நாயகன் ராஜ் கவுதமன் அவர்களும் மற்றும் தேவி பாரதி, சாம்ராஜ் இவர்களின் அமர்வுகளே. பிற அமர்வுகள் ஒரு வகுப்பறை மனநிலையில் இலக்கியத்தை போதித்தன. (அதுவும் தேவை)

சரவணன் கார்த்திகேயன் அமர்வு

வரலாற்று இடைவெளி நிரப்பல், வரலாற்று மீட்டுருவாக்கம், தர்க்கத்தை முழுமையாக்கல், வாசகர்களுடன் விளையாடுதல், கதையாக்கத்தின் பொறியியல் , எழுதி முடித்தவுடன் கிடைக்கும் உச்சம் என்று சுழன்றது. எழுதும்போது எழுத்தாளன் திட்டத்தை தாண்டி ஒரு ஓட்டம் கிடைத்திருக்கிறதா என்று கேட்டீர்கள். இப்போது தோன்றுகிறது. எழுதும் போது என்றில்லை; கேள்வி கேட்கும்போதே திடீரென நாம் திட்டமிடாத சொற்றொடர்கள் வந்து விழுந்து ஆழ்மனம் வெளிப்பட்டு விட்டது.

கலைச்செல்வி அவர்கள் தனது அச்சம், துயரத்திலிருந்து மீள்வதற்காக வாசிக்கத் துவங்கி பின் எழுத வந்ததைச் சொன்னார். கேள்விகளை மிக நிதானத்துடன் எதிர்கொண்டார். தனது எண்ணங்களின் தேடல் ஒருமுகமாக்க் குவியவில்லை என்றார்.

ஓடிப்போய் விடும் மனநிலை, மனப்பிறழ்வு நிலை, வாழ்வின் tora tora அதிர்வுகளில் இருந்து எழுத்து விடுதலை அளிக்கும் என்ற எண்ணம் சரவணன் சந்திரனின் சந்திப்பில் உணர முடிந்தது. தேடல் , தப்பித்தல், பகிர்தலுக்காக எழுதுவதாகச் சொன்னார். ஒரு வித பதட்ட மனநிலை தெரிந்தது. இந்நூற்றாண்டின் பெரும் பிரச்னை குற்ற உணர்வு + அச்சம் + தயக்கம் என்றார். அலுவலகங்கள் போர்ச்சூழலாக மாறி வருகின்றன என்ற பேருண்மை பகிரப்பட்டது. செயல்புயல் யார் கட்டுரைக்கான சுட்டி தேவை.

அலுவலக அழுத்தம் பற்றிய சிந்தனை, இதுகுறித்த செயல்பாடுகளுக்கான அவசியத்தேவை வந்துவிட்ட தாக தெரிகிறது. பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் உணவு வினியோகம் அல்லது ஹோட்டல் வரவேற்பாளர் அல்லது ATM இல் பணம் நிரப்பும் வேலையில் 12 மணிநேரம் பணியாற்றும் பொறியியல் அல்லது முதுகலை படித்த, நுகர்வு தேவைகள் அதிகமாக உள்ள இளைஞர்களுக்கான இலக்கியம் எழுதப்படவேண்டிய அவசியத்தை சரவணன் சந்திரன் அமர்வு உணர்த்தியது

அவர் உளவியல் செயல்பாட்டைப் பேசினார். மனம் செயல்படும் முறையை கவனிப்பது. நிகழ்வை கவனிக்கும் முறை , எண்ண ஓட்டத்தை இறுக்கிப் பிடிக்காமல் free float இல் விடுவது இவை மூலம் தூக்கம் சார்ந்த சிக்கல்களை கடந்தது நல்ல வழிகாட்டி. ஆசானே, தாங்கள் முன்பு சொல்லி இருந்த உளவியல் ,தியான முறைகளைக் குறித்து தீவிரமாக எழுதும் நேரம் வந்துவிட்டது என்று தோன்றுகிறது

சுனில் கிருஷ்ணன் குறித்து பொறாமையாக இருந்த்து (என்னை விட 10 வயது இளையவர் இலக்கிய சாதனை புரிந்துள்ளதால்). அதைப் போக்கிக் கொள்ள அவரைப் படிக்க வேண்டும்.

1 தொழில்நுட்ப யுகத்தில் தன்னைக் கோமாளியாகக் காட்டிக் கொள்வது மூலம் நிலைபெறலாம் (இது மட்டும் புரியவில்லை)

2 சிறுகதை முரண்களைப் பேசும் ஊடகம்

3 உலகமயமாதல் மற்றும் அமெரிக்க நிர்வாக முறையில் உள்ள பொறுப்பாக்கல் (Accountability) முறைகள் தரும் அழுத்தம் எழுத்தாளனை தயாரிக்கிறது

4 இக்கால எழுத்தாளர் துண்டு பட்ட கால அவகாசங்களில் எழுதப் பழக வேண்டும்

5 ஓவியம் கைவராத காரணத்தால் எழுதுகிறேன் (காட்சி முறை எழுத்து)

6 காந்தியைத் தூக்கிப் பிடிப்பது காந்திக்காக அல்ல

7 புறவாழ்க்கையை உடற்கூற்றியல் நினைவுகள் மூலமும் (anatomical memory) அகவாழ்வை மாய யதார்த்த வாதம் மூலம் எழுதுதல்

8 sentimentality உணர்வுகளை சுரண்டாத வரை தவறில்லை

9 காந்தி ஆய்வாளர், விமர்சகர், புனைவெழுத்தாளர் என்ற மூன்று பரிமாணங்களை ஆயுர்வேத முறையில் உடல், மன, வாக் தோஷ நிவர்த்திக்காக, சரகர் , பதஞ்சலி, பாணினியின் ஆளுமைகளைப்போல கையாளுகிறேன்; இவற்றில் முரண் இல்லை

இவை சுனிலின் தெறிப்புகள்
ஸ்டாலின் ராஜாங்கத்தின் அமர்வு ஒரு கள ஆய்வாளரின் சீர்மையுடன் இருந்த்து.

1 வன்முறைகளின் வேர்களைத் தேடி வந்த இடம் பண்பாட்டு ஆய்வு

2 தற்போதைய ஆய்வு நந்தன் குறித்து

3 அயோத்தி தாசரின் ஏட்டுச்சுவடி கால சிந்தனைகள், திரி என்ற சொல் திரு ஆக மருவியது, அயோத்தி தாசரின் பண்பாட்டு பவுத்தம் அம்பேத்கரின் அரசியல் பவுத்தமாக உருவெடுத்த்தன் காலத்தேவை, பவுத்தத்தை அயோத்திதாசர் கீழிருந்து உருவாக்கியது,

4 தலித்களுக்கு அரசியல் விடுதலை போதாது, கருத்தியல் விடுதலை தேவை

5 மதுரை தெற்குத்தெருவில் ஆனந்த தீர்த்தரின் பணிகள், திருச்சி வீரம்மாளின் அன்னை ஆஸ்ரம்ம்

6 பூனா ஒப்பந்தம் முடிந்தவுடன் காந்தி 1932 முதல் 1942 வரை ஹரிஜன் சேவையில் முழுமையாக ஈடுபட்டது

7 முழுமையான தலித் வரலாறு எழுதவேண்டியதன் தேவை

இவை ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கத்தின் சிந்தனைகள்

சாம்ராஜ் சிரித்துக்கொண்டே சிரிக்கவைத்தார். ஒரு வகையில் இவரை ராஜ் கவுதமன், தேவிபாரதியின் மனநிலையுடன் சேர்க்கலாம். ஏற்றத் தாழ்வு – மார்க்ஸியக் கனவு – எம் எல் தீவிரம் – எதுவும் நிலையில்லை என்னும் சுய எள்ளல் வழியாக நிறைவடையும் ஒரு பாதை இருக்கிறது. புரட்சி ஒரு குழந்தைக் கனவு என்றார். இது விடுதலைப்போரில் அடிமைத்தனம் – வன்முறைப்பாதை – சிறைவாசம்- கீதை- வெளிவந்து ராமகிருஷ்ணமடத்தில் சேவை செய்தல் என்ற (திலகர் பேசிய) ஒரு பழைய பாதையை நினைவுறுத்துகிறது

நரன் உரையாடலில், கவிதை ஒரு மீறல், ஓவியங்களை கவிதை மூலம் வெளிப்படுத்தல் குறித்தும் வாழ்வின் சிக்கல்கள் தன்னை கவிஞனாக்கியது பற்றியும் உரைத்தார்

தேவிபாரதி அவர்கள், இடைவேளியில் திவான் பகதூர் சாலையின் டீக்கடை முன் உள்ள சிமிட்டி திண்டில் புகைபிடித்தபடியே ஸ்டாலின் ராஜாங்கத்துடன் பேசிக்கொண்டிருந்தார். இரண்டடிகள் தள்ளி நாஞ்சில்நாடன் டீகுடித்துக்கொண்டிருந்தார். விஷ்ணுபுர விழாவின் அழகே தடுக்கி விழுந்தால் இலக்கியம் மீதும் பண்பாட்டு வரலாற்றுள்ளும் தடுக்கி விழுந்துவிடுவோம் என்பது தான்.

தேவிபாரதி , மொழிவழியே உருவாகும் கலைச்செயல்பாடுதான் இலக்கியம் என்றார். கலைக்கு அரசியல் சரி தேவையில்லை, அது ஒரு மனசாட்சி சார்ந்த ஆன்மிகச் செயல்பாடு, டால்ஸ்டாய் மூலம் தான் நிறைவடைந்தேன், என்றார். சாவதற்கு முன் ஏதேனும் ஒரு வகையில் வாழ்வின் அர்த்தம் புரிந்து கொள்வதே ஆன்மிகம்; இன்றைய நெருக்கடிகளுக்கு காந்தியிடம் உள்ள தீர்வு, தான் ஒரு மரபின் தொடர்ச்சி, காந்தி போலவே முக்கியமானவர் மார்க்ஸ், வாழ்வில் வைத்திருக்கும் எந்த முன்னெச்சரிக்கைக்கும் பொருள் இல்லை; தேவிபாரதி மிகவும் அண்மையானவர் ஆகிவிட்டார்

அனிதா அக்னிஹோத்ரி அவர்கள் உரையாடலில் கிடைத்தவை , “எங்கு அழகைக் காண்கிறீர்களோ அங்கு சரண் அடைந்துவிடுங்கள்”, “எப்போதுமே நீங்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளப் படுவதில்லை”, “நான் ஒரு உணர்வெழுச்சியின் எழுத்தாளர்”, அவர் ஜெ-யின் ஆக்கங்களை மொழிபெயர்க்க ஆவலாக இருந்தார்

ராஜ் கவுதமன் அவர்களின் அமர்வில் பகடியை ஒரு விளக்க முறையாகக் கையாண்டார். வாசகர்களை மாணவர்களாக மாற்றி விட்டு, மூளையைக் கசக்காமல் , தேர்வுக்கு வராத பாடம் எடுக்கும், ஆசிரியராக விளங்கினார். அரசியல் இல்லாமல் வரலாறு இல்லை.

இப்படிச் சொல்கிறேன். அவர் எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் தரவில்லை. இலக்கிய ஆய்வு என்பது கொஞ்சம் அப்படி, இப்படித்தான் இருக்கும். ஆனால் எல்லாக் கேள்விகளும் எழுந்த அடித்தளத்திற்கான விடைகளை அவரது இருப்பு உணர்த்தி இருந்தது. சுய பகடி வன்முறையை விட வலிமையான ஆயுதம் என்றார். சாதிகளைச் சார்ந்தவர்கள் தம் சாதிகளுக்கே துரோகம் செய்வதன் மூலமே சாதியைக் கடக்க முடியும்; பவுத்தம் வீழ்ச்சிக்குக் காரணம் , முதலாளித்துவமாக வளர்ந்து கொண்டிருந்த இந்திய இனக்குழு சமூகத்தை புத்தர் பின் எடுத்து சென்று விட்ட்து தான் என்று லோகாயத த்தில் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா சொல்லி இருப்பது குறித்த ஒரு வாசகர் கேள்விக்கு ‘புத்த மதத்தை நீங்கள் மடக்கி விடுவீர்கள் என்று தெரியும் ‘ என்று பதில் அளித்தார். ச் ரவண பவுத்தம் வணிக தத்துவத்தை வளர்த்தது என்றார். பகடி மூலம் தன்னை மறைத்துக் கொண்டு விளையாடினார். மொத்த அரங்கை, விழாவையே பகடி செய்தார். ஆனால் எல்லோருக்கும் பிடித்தமானவர் ஆனர். விருது விழாவின் முத்தாய்ப்பாக அவரை பேசக் கூப்பிடும்போது எழுந்து நின்று சிறுநீர் கழிக்க உங்களிடம் சைகை காட்டியது ஒரு உச்சகட்ட பகடி

ஆனால் அவர் விருதையும் விஷ்ணுபுர இயக்கத்தையும் மிகவும் மதித்தார்.தன்னை மறைத்துக் கொண்டு விளையாடுவது போல இருந்தது. அதிக மரியாதை மூலம் பிறர் அவருக்கு மெல்லிய discrimination செய்துவிடும் அபாயத்தை தவிர்க்க அவரது செயல்முறையே வழி. ஆசானே, நீங்களும் அதை உள்ளே ரசித்துக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த கொண்டாட்ட மனநிலையை வாழ்வின் அனைத்து கணங்களிலும் பெற வேண்டும். (சாம்வெல் ஜான்ஸனில் இந்த பண்புக்கூறு இருந்திருக்கிறதா? அதைப்பற்றி எழுதுங்கள்)

Eric Fromm MA Psychology இல் கேள்விப்பட்ட்து. The Art of Loving மொழிபெயர்ப்பு வந்தால் தயவு செய்து அறிவிக்கவும்

உள்ளுணர்வு இல்லாமல் ஆய்வு கூடிவராது. ஆய்வும் புனைவும் ஒன்றை ஒன்று இட்டு நிரப்பும்; மனிதன் ஒரு புனைவு செய்யும் விலங்கு; என்றார். தனது ஆய்வில் குறிப்பாக முரண்களையோ ஐயங்களையோ எழுப்புமாறு சவால் விடுத்தார். (ஆதங்கோட்டு ஆசானின் காலம் – கேரளப்பின்புலம் போல). மானுடம் ஒளியை நோக்கி செல்வதாக காலையிலும் இல்லை என்று மாலையிலும் எண்ணுவதாக தெரிவித்தார். அரங்கமே சிரித்துக் கொண்டிருந்தது.

விருது விழாவில் சுனிலும் தாங்களும் பேசியது முக்கியமாக இருந்த்து. சுனில் பேசுகையில் , விருதாளர் ஒரு textual gap filler ; பூகோவின் மூளையை சங்க இலக்கியத்தில் apply செய்தவர்; மார்க்ஸியத்தை மீறும் புள்ளிகள், கலை, மானுட உண்மையைச் சொல்லாது என்போரே சடங்குகளை நிராகரிப்பர்; அவர் ஒரு விடுபட்ட வைரப்பட்டையை உருவாக்கியவர் ; களப்பிரர் காலம் இருண்மையுடையதல்ல; என்றார்

ஸ்டாலின் ராஜாங்கம் பேசும்போது, உள்ளூர் வரலாறு, நுண் வரலாறு, வட்டார வரலாறுகளின் வளர்ச்சி குறித்தும் 5 புலங்களில் விருதாளரின் பங்களிப்பு (சங்க, அக இலக்கிய ஆய்வுகள், நவின தமிழ் முன்னோடிகள் குறித்த ஆய்வுகள், தன் வரலாறு, பதிப்பு காணாத சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள்) குறித்தும் மொழிபெயர்ப்பு என்பது ஒரு ஆய்வாளர் செய்யும் தியாகம் என்றும், தலித்துடன் பெண்ணும் சேர்ந்து அடிமைப்பட்டுப் போனது, பெருங்கற்காலம் – இனக்குழுச் சமூகம் –உடைமைக்காலம் – வைதிகம் என்ற ஒழுக்கில் உள்ள இடைவெளிகளைக் கண்டடைதல், பற்றியும் விவரித்தார். விருதாளருக்கு வரையறை என்றால் பிரச்னை, புனிதமாக கட்டப்பட்டதை உடைத்தல், அதிகார வர்க்கத்திற்கெதிரான மனநிலையை சாதிகளற்ற ஒரு பழைய காலத்தில் தேடுவதாக கூறியது ஒரு சுருக்கமான விருதாளரின் சிந்தனைப்போக்கின் வரலாறு.

தேவி பாரதியின் கட்டுரை செறிவாக இருந்தது.

நீங்கள் ஒரு நெடிய அறிமுகம் மூலம் விழாவின் தீவிரத் தன்மையை மீட்டீர்கள். அனந்தங்காட்டு இரவிப்புதூர் கிணற்று மாடன் சாமி தலைகீழாக இருப்பது போல வரலாறு ஒரு பகுதி தலைகீழாக இருப்பது (அதே கதையில் புலையர் உயர் அடுக்கில் இருக்கிறார்; தலைகீழ் என்பது அடுக்குகள் கொண்ட அரிய படிமம்), ஒடியன் விலங்காக மாறுவது, புலையனார் கோட்டைபற்றிய செய்தி, சுசிந்திரம் வரலாறு ஆயிரம் பக்கங்களுக்கு பேரா. K K பிள்ளை எழுதியபிறகும் அ கா பெருமாள் அவர்கள் மீண்டும் வேறு ஒரு வரலாறு எழுதுவதற்கான வாப்பு இருத்தல், “சங்க காலத்”தின் புறத்திணை பிரிவினை / வர்ண பாகுபாடு கொண்ட அக்கால சமுதாயத்தையும், அகத்திணை அரை பழங்குடி வாழ்வை வெளிப்படுத்துவதையும் பற்றிப் பேசினீர்கள்.

அகப் பாடல்கள் முன்னர் நடந்த வாழ்வை அவையில் நிகழ்த்திய கலைகளாக இருந்தன என்று நீங்கள் சரியாகப் ‘பிடித்து விட்ட்தாக’ ராஜ் கவுதமன் பேசும்போது கூறியது நினைவில் நிற்கிறது. பெருங்கற்கால வாழ்வை சங்க காலம் மீண்டும் நடித்துப் பார்க்கிறது என்பது ஒரு பாய்ச்சல் என நினைக்கிறேன்.

கலைக்கதிர் பத்திரிகை இப்போதும் வருகிறது. ஆனால் அதன் நோக்கங்கள் வேறாகி விட்டன. க மணி போன்றவர்கள் எழுதிய பிரபஞ்ச இயல், நரம்பியல் விளிம்பு நிலை அறிவியலின் அற்புதங்கள் அதில் இப்போது இல்லை.

சங்கம் என்ற ஒன்று இல்லை ; வரலாறு எழுதியவர்கள் தொகுக்கும் போது சிலவற்றை விலக்கிக் கொண்டே வந்துள்ளது, வரலாறு மாற்றப் பட்டு வந்துள்ளது, ஓலைச்சுவடிகள் போதாமையால் சுண்ணம் தடவி அடுக்குகளாக் எழுதுவது போல , மேலே மேலெ வரலாற்றை எழுதி வந்துள்ளது குறித்து ராஜ் கவுதமன் பார்வையை நீங்கள் சோர்வளிக்காமல் விளக்கினீர்கள். பி ஜி ஸ்ரீனிவாச ஐயங்கார் ( தமிழ்ப் பெருமித உணர்வு) – கைலாசபதி ( மார்க்சிய பார்வை) – ராஜ் கவுதமான் (subaltern studies) என்ற வரலாற்று ஆய்வாளர் முக்கோணத்தை அறிவித்து விருதாளருக்கு பெருமை அளித்தீர்கள்.

ஏற்புரையில் ராஜ் கவுதமன் பேசும்போது எழுத்து ஒரு இன்பம் தரும் விளையாட்டு , நான் விளையாடி விட்டேன்; இனி நீங்கள் ஆடுங்கள் என்றார்; அமர்வில் இருந்தது போன்றே விழாவிலும் சுயபகடி, எள்ளல். சிரித்துக் கொண்டே கலைந்தோம்

விழா ஏற்பாடுகளை நண்பர்கள் பார்த்துப் பார்த்துச் செய்திருந்தனர்.

கூச்சத்தாலும் (சரவணன் சந்திரன் கூறியது போல Coach- Player விலகலாலும் உங்களை அணுகாமல் இருந்திருக்கிறேன். இம்முறை நண்பரின் உதவியுடன் ஒரு புகைப்படம் எடுத்து விட்டேன்). கூச்ச உடைப்பு, கற்றலின் அறிவுத்தடை பற்றி உபநிட தங்களில் கூறியிருப்பதைப் பற்றி தயவு செய்து விளக்கவேண்டும்.
நன்றி ஆசானே

அன்புடன்
ராகவேந்திரன்
கோவை

அன்புள்ள ஜெமோ,

நான் பங்கேற்ற முதல் விஷ்ணுபுரம் விருது விழா இதுவே. தயக்கத்துடன் சனிக்கிழமை அரங்கினுள் நுழைந்தேன். இரு நாட்கள், தங்கள் தளத்தின் வழியே அறிந்த எழுத்தாளர்கள் மற்றும் விஷ்ணுபுரம் குழுவினர் சிலருடன் உரையாட வாய்ப்பமைந்தது. கேள்விகளையும், கருத்துகளையும் ஆர்வம் தாளாத ஐந்து வயதினாள் போல நான் அடுக்கும்போது நிதானமாகவும், ஊக்குவிக்கும் விதமாகவும் பதிலளித்து என்னை அத்தயக்கத்திலிருந்து மீட்டனர்.

அரங்கில் உள்ளோரில் எவர் வாசகர் எவர் எழுத்தாளர் என வித்தியாசம் காண இயலாதது குறித்து விழா நாயகன் ராஜ் கௌதமனுக்கு எழுந்த ஐயம் எனக்கும் இருந்தது. பல இலக்கிய விழாக்களில், ஆர்வமற்ற அல்லது பட்டிமன்ற விவாதச் சூழலை எதிர்ப்பார்த்து வரும் மக்கள் பங்கேற்கின்றனர். அந்த இலக்கிய நிகழ்வுகள் முடிவுறுகையில் ஒரு மனச்சோர்வு உருவாகி, இனி சில காலம் இம்மாதிரி விழாக்களுக்கு செல்ல வேண்டாம் என்ற எண்ணம் மீதமிருக்கும். ஆனால் இரு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் – எழுத்தாளர் வாசகர் சந்திப்புகள், விவாதங்கள் (மேடை/ மேடை தவிர்த்து), வினா விடை, விமர்சனங்கள், பாராட்டுகள் – நமக்கென ஒரு அடையாளத்தை நிறுவிக் கொள்ள வேண்டுமென்ற உத்வேகத்தையளிக்கிறது.

அனிதா அக்னிஹோத்ரி அவர்கள் கூறியது போல சம கால எழுத்தாளர்களை அங்கீகரிக்க, ஊக்குவிக்க இது போன்ற விழாக்கள் அவசியமாகிறது. நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட விழாவாக அமைந்த விஷ்ணுப்புரம் விருது விழா ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

அன்புடன்,
ஸ்வதா
https://howzzatbyswe.blogspot.com

முந்தைய கட்டுரைபிரதமன் -கடிதங்கள்-6
அடுத்த கட்டுரைஇரு தனிமைகள்