கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ,

தாங்கள், அஜிதன், சைதன்யா மற்றும் சகோதரி அனைவரும் நலம் என எண்ணப்பதிவு கொள்கிறேன். பலத்த மழையால் நாகர்கோவிலின் அநேக வீடுகளை வெள்ளம் சூழந்ததாக அறிந்தேன். உங்களால் சமாளிக்ககூடிய சிரமமாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.

இலக்கில்லாமல் ஒடும் தெருநாய் மாதிரி, நான் இணையத்தை அவ்வப்பொழுது மேய்ந்து கொண்டிருந்த சமயத்தில், உங்களது இணையதளத்தை எதேச்சையாக கண்டுற்று வாசிக்க ஆரம்பித்தேன். இன்றுவரை, உங்களின் நிழலாகப் பின்தொடர்கிறேன். வாசிப்பு அனுவபமே இல்லாத என்னை, உங்கள் எழுத்து இழுத்துக்கொண்டது. உங்களுடைய அனைத்து இணைய எழுத்துக்களும், எனக்காகவே எழுதப்பட்டது போன்று உணர்கிறேன். கட்டுரைகளும், குறுநாவல்களும் சிரமமில்லாமல் புரிந்தது. சில, மறுவாசிப்பில் புரிந்தது. அலுவலக நேரத்தில், பணிகளுக்கிடையே வாசிப்பது புத்துணர்ச்சியை தருகிறது.

பணி மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையில், இலக்கிய வாசகனாகவேண்டும் என்றால், உங்கள் நூல்களை படிக்கவேண்டும். அதற்கு நீண்ட, நெடிய தனிமை வேண்டும். அலுவலக நேரத்தில் அது சாத்தியப்படாது. சில நாட்கள், உங்கள் இணையதளத்தில் கட்டுரைகள் வராதபோது, உங்கள் நூல்களை வாசித்தபின் தான் உங்களுக்குக் கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

மனைவி, குழந்தைகளை சரிக்கட்டிவிட்டு நூல்களைப் படிக்க ஆரம்பித்தால், இரண்டு பக்கம் வாசித்தபின், மனம் பறக்க ஆரம்பித்துவிடுகிறது. கிளி சொன்ன கதையில், அனந்தனின் கதை ஒடுவது மாதிரி என்னுடைய பால்யமும் ஒடுகிறது. மனம் குவியமறுக்கிறது.

உணர்ச்சி கொந்தளிக்காமல், கண்கலங்காது, தொண்டை நரம்புகள் அதிராமல், நெஞ்சினில் பாரம் ஏறாமல், மூளையிலிருந்து மின்சாரம் பீய்ச்சாமல், கண்டினியுட்டி பிரச்சனையில்லாமல் எங்கனம் உங்கள் எழுத்தை படிப்பது. லயித்து தொடரும் வாசிப்பும்கூட ஒரு தியானப்பயிற்சி ஆகுமா?

தொடர்வாசிப்பு பயிற்சிமூலம், மனதின் நீள்அகலப் பரப்புகளையும் விசாலமாக்கி, உங்கள் நூல்களை நிச்சயம் வாசிப்பேன். தங்களிடம் பகிர்ந்துகொள்வேன். அப்பொழுதுதான் என் இருப்பு முழுமையடையும்.

சில மாதங்களுக்கு முன், தங்கள் தளத்தில் வளைகுடா விவாதம் வந்தபோது, என் கருத்தை பதிவுசெய்ய இயலவிலை. அச்சமயத்தில், பணிதொடர்பான பயணங்களால் தவற விட்டுவிட்டேன். அங்காடித்தெரு படத்தினையும் தாமதமாகவே பார்த்தேன். நான் இருக்கும் இடத்தில், ஒரு மல்டிஃபிளெக்ஸ் தியேட்டர் உள்ளது. ஒவ்வொன்றும் 150 இருக்கை வசதிகொண்ட நான்கு திரைகூடங்கள் உள்ளது. ஆனால் அங்காடித்தெரு, மைனா, நந்தலாலா போன்ற நல்ல படங்கள் இங்கே திரையிடப்படுவதில்லை. சன் பிக்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் பிக்சர்ஸ் வெளியிடும் குப்பைகளெல்லாம் வருகிறது. விளம்பரச்சந்தை வியாபாரிகளின் காலகட்டம்.

ஒருதடவை உங்கள் கைபேசியில் கூப்பிட்டேன். எனக்கு வார்த்தைகளே எழவில்லை. நீங்களும், என் நிலையை புரிந்து கொண்டு, நிறைய பந்துகளை போட்டுத்தந்தீர்கள். எனக்கோ, எல்லாத்துளைகளும் அடைத்துக்கொண்டுவிட்டதால், நீங்கள் எடுத்துக்கொடுத்த விஷயங்களை சரியாக முன்னெடுத்து பேச இயலவில்லை!!!

கடந்த ஐந்து மாதங்களாக, பதுங்கியிருந்தே உங்களை வாசித்து வந்தேன். அதுவுங்கூட சுகமாகத்தான் இருந்தது. ஒரு சில நாட்கள் உங்கள் தளத்தை வாசிக்காவிட்டாலும், வாசிக்கமுடியவில்லையே என்ற உங்களின் நினைவே அதிகம் வந்துபோகிறது. கடிதம் எழுதாமைக்கு தங்களிடம் மன்னிப்புக்கோருகிறேன். அவ்வப்பொழுது, தங்களின் தலைமறைவு மாணவனாக இருக்கவும் அனுமதி கேட்டுக்கொள்கிறேன்.

எழுத்தாளர் ஆ.மாதவன் அவர்களை கவுரவிக்கும் விழாவில் கலந்துகொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். அடுத்த விருது நிகழ்ச்சியில் நிச்சயம் கலந்துகொள்வேன். இலக்கிய வாசிப்பினை உணரச்செய்து இந்த சமுதாயம் வாசிக்க, சிந்திக்க, தன்னையறிய, அறிவு வளம்பெற இந்த விருது நிகழ்ச்சிகள் ஒரு திறப்பாக இருக்கும். தங்களுக்கு, என் பணிவான வணக்கங்கள்.

கதிரேசன், ஒமன்.

அன்புள்ள கதிர்

நெடுநாட்கள் கழித்து கடிதம். மேகமலையில்கூட உங்களைப்பற்றி பேச்சு வந்தது. ஆனால் கதிர்தானே அப்புறம் எழுதலாம் என்று ஒத்தி போட்டேன்

நலம்தானே? மறுமுறை ஊர் வரும்போது சாவகாசமாக பேசலாம்

ஜெ

அன்புள்ள ஜெ!

அருந்ததி ராய் பற்றிய கருத்து மிக அருமை.

நான் ஹவுஸ் சர்ஜனாக இருந்தபோது மெஸ் பில்லுக்கு வைத்திருந்த பணத்தில் A god of small things வாங்கிப் படித்து நொந்து நூடுல்ஸானது ஞாபகம் வந்தது. ஹெலிகாப்டர் மீதிருந்து வெள்ளத்தைப் பார்வையிடுவது போல் உண்மை நிலவரத்தை மேலோட்டமாகக் காட்டும் பார்வைகள் அவர்களுடைய இலக்கியம்
நன்றி
ராமானுஜம்

அன்பு ஜெ!

நாளிதழ்களில் தொடங்கி வார இதழ் மாத இதழ் என விரியும் பத்திரிகை உலகில் ஏன் மனைவி பற்றிய பாதகமான (Adverse) ஜோக்குகள் மட்டுமே வெளிடப்படுகின்றன? இவற்றை யார் எழுதுகிறார்கள்? உண்மையில் இவர்கள் மனைவியை வெறுக்கிறார்களா? ஒட்டுமொத்த ஆண் சமூகமே மனைவியைத் தொல்லையாகக் கருதிகிறதா? நாமும் ஏன் இவற்றிற்கு சிரிக்கிறோம்?
தயவு செய்து இதில் உங்களது பார்வையைக் கூறவும்.

அன்புடன்,
லோ. கார்த்திகேசன்

அன்புள்ள கார்த்திகேசன்

ஆனந்தவிகடனில் உள்ள பல ஜோக்குகளுக்கு ஆங்கிலத்தில் வெளிவந்த பஞ்ச் என்ற இதழின் நகைச்சுவை பாணியின் பின்புலம் உண்டு, பஞ்ச் மேலோட்டமான இதழியல் நகைச்சுவையை உருவாக்கிய இதழ்

இந்த நகைச்சுவைகளுக்குரிய பின்புலம் ஒன்றுண்டு. பெரிய விருந்துகளில் கனவான்கள் நகைச்சுவை பேசும் வழக்கம் அன்று உண்டு. குளிர்நாடுகளில் சாப்பாட்டு மேஜையை அதிகநேரம் நீட்டிக்க வேண்டியிருந்தது. உரைகள், நாவல் வாசிப்பு, இசை எனப் பல நிகழ்ச்சிகள் நடக்கும். மேஜிக் கூட உண்டு.

அதற்கான நகைச்சுவைகளுக்கு ஒரு பாணி உண்டு. ’டேபிள் ஜோக்ஸ்’ என்பார்கள். எவரையும் புண்படுத்தாத, அதிகம் சிக்கலற்ற, எளிய நகைச்சுவைகள் அவை. அவற்றுக்கு இரு வழிகள்

ஒன்று, தன்னையே கிண்டல் செய்து கொள்வது. பிறரை பாதிக்காத நகைச்சுவை என்பது அதுதானே. தன்னை கிண்டல்செய்துகொள்வதென்பது மனைவியை கிண்டல்செய்வதாக ஆகியது. இன்றுவரை மனைவியிடம் அடிவாங்கும் நகைச்சுவைகள் புழக்கத்தில் உள்ளன.

இரண்டு, வேலைக்காரர்களைக் கிண்டல் செய்வது. அவர்கள் புண்பட்டாலும் பிரச்சினை இல்லை அல்லவா? பஞ்ச் இந்தபாணியை முன்னெடுத்தது. அதை விகடன் பின் தொடர்ந்தது. வேலைக்காரியை இடிப்பது மனைவியிடம் அடிவாங்குவது ஆகிய நகைச்சுவைகள் தமிழ் வார இதழ்களில் சாஸ்வதமாக ஆயின

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,
நான் என் தெலுங்கு நண்பன் ஒருவனிடம் நாஞ்சில் நாடன் கதைகள் சிலவற்றை கூறியிருக்கிறேன் . அவன் இக்கதைகள் ஆங்கிலம் அல்லது தெலுங்கு மொழியில் கிடைக்குமா என்று கேட்டான் . நாஞ்சிலின் படைப்புகளை ( குறிப்பாக சிறுகதைகளை ) யாராவது மொழிபெயர்துள்ளர்களா ?, அப்படியெனில் எங்கு கிடைக்கும். தெலுங்கில் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

அன்புடன்
கோ.ஜெயன்

அன்புள்ள ஜெயன்

நானறிந்தவரை நாஞ்சில்நாடனின் கதைகள் ஏதும் தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்படவில்லை

ஜெ

முந்தைய கட்டுரைசோற்றுக்கணக்கு, கடிதங்கள்
அடுத்த கட்டுரைநான்காவது கொலை!!! – 14