சென்ற நான்கு வருடங்களில் நான் எழுதிய கதைகள் இந்தத் தொகுதியில் உள்ளன. நடுவே இரண்டரை ஆண்டுக்காலம் எதுவும் எழுதாமலிருந்தேன். இதில் உள்ள முக்கால்பகுதி ஆக்கங்கள் இந்த 2008இல் இரண்டு மாதங்களிலாக எழுதப்பட்டவை. அது என் இயல்பு. ஒரு தீவிர மனஎழுச்சிக்கு ஆட்பட்டு அது முடிவடையும் வரை எழுதிக்கொண்டே இருப்பேன்.
இத்தொகுதியில் உள்ள கதைகளில் இப்போது நான் காணும் பொது அம்சம் ‘கதை’தான். சோதனை முயற்சிகளில் முற்றாகவே ஆர்வம் இழந்துவிட்டேன். இலக்கியச் சிடுக்குகள் அற்பமானவையாகப் பின்னகர்ந்து விட்டன. சங்க காலப் பாணன் முதல் இன்றைய நவீன இலக்கியவாதிவரை கதை சொல்லல் என்ற ஒரே பெருஞ்சரடில் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற எண்ணமும், நான் ஒரு கதை சொல்லியே ஒழிய வேறெவரும் அல்ல என்ற எண்ணமும் உருவாகியிருக்கிறது.
உடலை மறைப்பதற்காகஅல்ல, உடலை நிரப்புவதற்காகவே உடைகளை மனிதன் உருவாக்குகிறான் என்று ஒரு கூற்று உண்டு. மனித வாழ்விலும், வரலாற்றிலும் மனிதமனம் காணும் போதாமைகளை, விடுபடல்களை, இடைவெளிகளை நிரப்புவதற்காகவே கலைகளும் இலக்கியமும் உருவாக்கப்பட்டன. ஆகவே ஓர் இலக்கியவாதி வாழ்வுக்கு இணையான மறுவாழ்வு ஒன்றை தன் புனைவின்மூலம் உருவாக்கிக் கொண்டிருக்கிறான். வரலாற்றுக்கு இணையான மறு வரலாறு ஒன்றை அவன் உருவாக்கிக் கொண்டிருக்கிறான்.
அது ஒரு எளிய பணி அல்ல. மண்மீதுள்ள கோடானுகோடி கதைசொல்லிகள் தங்களை அறியாமலேயே ஒருங்கிணைந்து அந்த பெரும் புனைவுப் படலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். புராதனச் சீனக்கதை ஒன்றில் பூமியில் வாழும் சிலந்திகள் அனைத்தும் கூடி தங்கள் வலைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து பூமியையே வலையால் மூடி அனைத்து உயிர்களையும் சிறைப்பிடிப்பதாக வரும். இப்புவியில் வாழும், வாழ்ந்த, வாழப்போகும் அனைத்து மானுடர்களையும் புனைவு ஒன்றாக இணைத்து விடுகிறது. பூமிமீது உள்ள அத்தனை இலக்கியங்களையும் அவ்வகையில் ஒற்றைப்பெரும் புனைவாக நம்மால் கண்டுவிடமுடியும்.
ஆகவே இன்று நான் மேலான இலக்கியம் என்று எண்ணுவது நிஜவாழ்வுக்கு இணையான, அல்லது அதைவிட மேலான, ஒரு அகவாழ்வை வாசகனுக்கு அளிக்கும் புனைவுகளை மட்டுமே. ஒரு வாழ்வுக்குள் ஓராயிரம் வாழ்வுகளை வாழ வாசகனுக்கு உதவும் ஆக்கங்களை மட்டுமே. துல்லியமான காட்சிகள், பின்னிப்பிணைந்து விரியும் அக ஓட்டங்கள், ஒட்டியும் உரசியும் பெருகும் நிகழ்ச்சிப் பிரவாகம், எண்ண எண்ண விரியும் அர்த்த மடிப்புகள் என்று புனைவை நான் இன்று வகைப்படுத்துகிறேன். ஓர் இளம் வாசகனாக எனக்கு பரபரப்பூட்டிய நவீனத்துவ ஆக்கங்கள் பெரும் சலிப்பையே அளிக்கின்றன. செவ்வியலுக்கு குறைந்த எதையுமே மனம் ஏற்க மறுக்கிறது.
எளிமையும் உட்சிக்கலையும் ஒரே சமயம் அடைந்தவையே பேரிலக்கியங்கள். பிரமாண்டத்தையும் துளித்தன்மையையும் ஒரே சமயம் கொண்டவை. மலைகளைப் போல மௌனம் மிக்கவையும் கடலைப்போல ஆர்ப்பரிப்பவையுமாக ஒரே சமயம் தோற்றமளிப்பவை. என்னுடைய இன்றைய அழகியல் நோக்கை நவீனச் செவ்வியலுக்கான யத்தனம் என்று நான் வகைப்படுத்துவேன்.
அதன் பல்வேறு முகங்கள் இத்தொகுதியின் கதைகளில் இருக்கும். இவற்றில் நுட்பமான யதார்த்தத்தளம் சார்ந்த ஆக்கங்கள் உண்டு. மிகைபுனைவுகளும் உண்டு. ஆனால் முழுக்க முழுக்க படைப்பூக்கத்தின் தற்செயலை நம்பி எழுதப்பட்டவை. அதனாலேயே ஆசிரியனும் விளக்கிவிட முடியாத பல தருணங்கள் கொண்டவை. செவ்வியலின் அடிப்படையான ஓர் இயல்பை இவற்றில் வாசகர் காணமுடியும். வரிகள்தோறும் செறிந்திருக்கும் கவித்துவ உட்குறிப்புகள்.
தமிழ் நவீனகவிதைகள் அடைந்தவற்றைவிட அதிகமான கவித்துவப்படிமங்களை இந்த உரைநடை முன்வைத்துச் செல்கிறது. ஆனால் புனைவின் ஒருமையில் இருந்து உந்தி நிற்காமல் இயல்பான ஓட்டத்தின் ஒருபகுதியாக அவை உள்ளன.
செவ்வியல் இயல்பு என்பதே அதுதான். ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தைப் பார்க்கும் ஒருவன் எளிய பிரமாண்டம் ஒன்றை முதலில் கண்டடைவான். அவன் கூர்ந்து பார்ப்பான் என்றால் தன் வாழ்நாள் முழுக்க பார்த்தாலும் தீராத தனித்த சிற்பங்களின் முடிவிலா வரிசையைக் கண்டடைவான்.
செவ்வியல் ஆக்கங்களை வாசிப்பதற்கான மனத்தயாரிப்பும் கவனிப்பும் உடைய வாசகர்களே என் இலக்கு. அவர்களை தொடர்ந்து கண்டடைந்தும் வருகிறேன் என்பதே ஒரு படைப்பாளியாக என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.
இருபதாண்டுக்காலமாக என் அண்ணாவின் இடத்தில் இருக்கும் படைப்பாளியான நாஞ்சில்நாடனுக்கு இதை சமர்ப்பணம் செய்கிறேன்.
மெய்ப்பு நோக்கி உதவிய எம்.சுப்ரமணியம் அவர்களுக்கும் அ.கா.பெருமாள் அவர்களுக்கும் நன்றி. மனுஷ்யபுத்திரனுக்கு என்றும் உள்ள நட்பு.
[உயிர்மை வெளியீடாக வரவிருக்கும் ‘ஊமைச்செந்நாய்’ சிறுகதை தொகுதியின் முன்னுரை]