எரிகல் ஏரி- கடிதங்கள்.

ani

 

எரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி

 

அன்பின் ஜெ,

 

சுசித்ராவிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும், சிறப்பான மொழிபெயர்ப்பு, நடையில் சற்றே தங்களின் சாயலில் இருந்தது. கதையின் மூலமும் இதே நடையில் இருக்கிறதா என்று தெரியவில்லை. என் வாசிப்பின் வாயிலாக இதில் இரு படிமங்களை நான் அனுமானித்தேன். கால சூழ்நிலைகளில் பூமியில் இருந்து பிரிந்து சென்ற அந்த எரிகல் மீண்டும் தன் தாய் மடி சேருவதன் பொருட்டு ஏற்படும் வலிகளும் வேதனைகளும் ஷோக்யொவின் மனதின் வேதனையை ஒத்ததாகவே உள்ளது. அவனுக்கு வேறு வழி இல்லை அந்த எரிகல் போலவே தன் தாயின் நினைவுகளில் அவன் தேங்கி நிற்க வேண்டியிருக்கிறது. மற்றொன்று அந்த ஏரியில் முளைத்த சீதாப்பழ  மரத்தைப் போலவே தன் அன்பின் கனிகளை கடிதங்களாக குழந்தைகளுக்கு அளித்துக் கொண்டே இருந்திருக்கிறார். அவன் தாயின் இயல்பும் இதுவாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை,  ஒருவேளை அன்று அவள் அந்தியில் கண்ட காட்சியைப் போலவே, தன் தனி வாழ்வில் சில கணங்களேனும் வாழ்ந்திருந்தால்.

 

 

(இது கூகுளின் குரல் ஏற்ப முறையில் எழுதப்பட்டுள்ளது)

அன்புடன்

சசிகுமார் ரா

சேலம்

 

 

அன்புள்ள ஜெ

 

எரிகல் ஏரி இந்த தளத்தில் நீங்கள் சமீபத்தில் வெளியிட்ட மொழியாக்கக் கதைகளில் முதன்மையானது. கதை என்பதை விட ஒரு படிமம் வழியாகச் செல்லும் நீளமான கவிதை என்று சொல்லுவேன். வானம் மண்ணில் ஒரு எரிகல்லை ஏவி அறைகிறது என்பதும் அந்தக்குழியில் மண் நீரை நிரப்பிக்கொள்கிறது என்பதும் அற்புதமான படிமங்கள்தான். அது ஒரு பெரிய புண். அந்த புண் மண்ணில் உள்ளது. அது வானம் உருவாக்கிய புண். அதேபோன்ற ஒரு புண் அந்த அன்னையின் மனசிலும் உள்ளது. ஆகவேதான் அவள் அதைத்தேடி வந்துகொண்டே இருக்கிறாள். அன்னையின் மனதின் புண்ணை அறிந்த பிள்ளைகளும் வந்துகொண்டிருக்கிறார்கள்.

 

சீதாப்பழங்களை மட்டுமே சாப்பிட்டபடி அந்த எரிகல் ஏரி நோக்கி வந்துகொண்டே இருக்கும் கதாபாத்திரங்கள் அழகான படிமமாக மனதில் பதிந்துவிட்டனர். நூற்றாண்டுகளாக அந்த ஏரி குளிர்ந்து நீர் நிறைந்திருக்கலாம். உள்ளே தீ இருந்துகொண்டேதான் இருக்கும்

 

சுசித்ராவின் மொழியாக்கம் அற்புதமாக இருந்தது. சமீபத்தில் பல மொழியாக்கங்களை படித்து வெறுத்துப்போயிருந்தேன். இந்தக்கதைகள் எல்லாமே நன்றாக மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தன.

 

மகாதேவன்

 

அனிதா அக்னிஹோத்ரி கதைகள்

‘நினைவுகள்’ சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி

‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி

சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி

நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி

நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி

 

முந்தைய கட்டுரைஅஞ்சலி:பிரபஞ்சன்
அடுத்த கட்டுரைராஜ்கௌதமன் -பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிடுதல்