‘யானை’ – சிறுகதை

elephant-and-child-on-yellow-caroline-sainis

பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்பதற்கு அனந்தன் சொன்ன காரணம் வித்தியாசமாக இருந்தது. அவள் “என்ன?” என்றாள். அவன் தலையை கவிழ்த்து முனகலாக “எங்க ஸ்கூலிலே ஆனை இருக்கு” என்றான். “என்னது?” என்றாள். “ம்ம்ம்ம் ஆனை” அவள் அவனை ஒற்றைக்கையைப்பற்றி படுக்கையிலிருந்து தூக்கி எடுத்து “கெளம்பு” என்றாள். கால் தரையில் உரசியபடி இழுபட்டு வர “ஆனை முட்டிடும்… ம்ம்ம்ம் ஆனை முட்டிடும்” என்று அவன் அழத்தொடங்கினான். “வாயமூடு, மென்னிய நெரிச்சிருவேன்” என்று சாதனா சொன்னாள்

வழக்கமாக வேறு ஒருபாட்டுதான். காலையில் எழுந்ததுமே போர்வையைச் சுற்றிக்கொண்டு உடலைக்குறுக்கி அமர்ந்து வெறித்த பார்வையுடன் இருப்பான். அவளைப் பார்த்ததுமே “இன்னிக்கு என்ன கெழமை?” என்று கேட்பான். திங்கள் என்றோ செவ்வாயென்றோ அவள் சொல்லிவிட்டால் “ஞாயித்துக்கிழமென்னு சொல்லு…ஊஊ ஞாயித்துக்க்கெழமன்னு சொல்லு ஊஊ” என்று அழ ஆரம்பித்துவிடுவான். அவனை முதுகில் இரண்டு போட்டு, கையைப்பிடித்து தரதரவென்று இழுத்துச்சென்று, கால்சட்டையைக்கழற்றி, குளியலறையில் நிறுத்தி, குளிப்பாட்டி சாப்பாட்டை வாயில் திணித்து, புத்தகப்பையை தோளில் மாட்டி வெளியே இழுத்துச்சென்று, லிப்டில் தரையிறங்கி, சாலையோரத்தில் கொண்டு சென்று நிறுத்தும்வரை சாதனா செவிகளே இல்லாதவளாக இருப்பாள். அப்போது அவன் பலவிதமான காரணங்கள் சொல்வான். “வயித்த வலிக்குது” முதல் “ஆயி வருது” வரை. ஒருநாள் “எங்க டீச்சர் செத்துப்போய்ட்டாங்க” என்றான். பலவிதமான அழுகைகள் பிலாக்கணங்கள் முறையிடல்கள் விசும்பல்கள் தேம்பல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்

அபார்ட்மெண்டின் முன்புதான் வேன் வந்து நிற்கும் அங்கு ஏற்கனவே அவனுடன் படிக்கும் ஏழட்டு பிள்ளைகள் நின்றிருப்பார்கள். அவர்கள் எல்லாருமே காலையில் எழுந்து அவசரமாக கிளம்பியதன் சோர்வுடன் வீங்கிய இமைகளுடன் தெரிவார்கள். அவர்களைக் கொண்டுவிட வந்த பெண்கள் மட்டும் ஓரமாக நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். அனந்தன் எப்போதுமே கண்ணீர் வழிந்து மார்பில் கொட்ட உதடுகளை பிதுக்கியபடி மற்ற்ற குழந்தைகளை பகைமையுடன் பார்த்துக்கொண்டிருப்பான். அப்போதுதான் அவன் அழுவதை அவளும் பார்ப்பாள் “என்னடா அழுக? கண்ணத்தொடை. அறைஞ்சுருவேன், கண்ணத்தொடைடா” என்று கைகுட்டையால் கன்னத்தை அழுந்தத் துடைத்து வேன் வரும்போது தூக்கி உள்ளே ஏற்றி விடுவாள்.

எப்போதுமே அவன் ஒரே இருக்கையில்தான் சென்று அமர்வான். தண்ணீர் பாட்டிலை மடிமேல் வைத்துக்கொண்டு ஜன்னல் வழியாக அவளைப் பார்ப்பான். கையாட்டுவதோ விடைபெறுவதோ இல்லை. எப்போதாவது எதையோ மறந்துவிட்டவன் போல பாய்ந்துவந்து ஜன்னல் வழியாக வந்து எட்டிப்பார்ப்பான். அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது அவளுக்குக் கேட்பதற்குள் வேன் சென்று மறையும். அது சற்று தூரம் சென்ற பிறகு தான் அவளுக்கு அனந்தனின் அந்த முகம் நினைவுக்கு வந்து வயிற்றை பிசைவது போல் இருக்கும்.

அவனை மடிமேல் போட்டு தலைமயிரையும் தோள்களையும் வருடியபடி பள்ளிக்கூடத்தில் என்னென்ன படிக்கலாம், நன்றாகபடித்தால் எப்படியெல்லாம் ஆகலாம், அவள் சின்னவயதில் படித்த பள்ளிக்கூடம் எப்படியெல்லாம் இருந்தது என்றெல்லாம் பேசி பள்ளிக்கூடம் பற்றிய ஆர்வத்தை அவனிடம் உருவாக்க முயற்சி செய்வாள். அதையெல்லாம் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக்கொள்வான். குறுக்குக்கேள்விகள் கூட நுட்பமாக கேட்பான். அவளுடைய அந்தப் பள்ளிக்கூடத்தின் முன் நின்றிருந்த நெல்லி மரம் வருடம் முழுக்க காய்க்குமா, அந்த காய்களை பறித்து வீட்டுக்குக்கொண்டுப்போக விடுவார்களா, அல்லது பள்ளிக்கூடத்திலேயே ஒரு பாத்திரம் கொண்டு சென்று அதை ஊறுகாய் போட்டுவிடமுடியுமா? ஆனால் அவன் ஒரு போதும் தன்னுடைய பள்ளிக்கூடம் பற்றி எதையும் சொன்னதில்லை உண்மையில் அவனுக்கு அங்கு என்ன தான் பிரச்னை என்று பலவாறாக சுழற்றிச் சுழற்றிக் அவள் கேட்டிருக்கிறாள். அவன் “அது கெட்ட பள்ளிக்கூடம். அங்கே கெட்ட மிஸ், கெட்ட குழந்தைகள்” என்று மட்டும் சொல்வான். ”ஏண்டா கெட்டதுங்கிறே?” என்றால் “அங்கெல்லாம் ஒரே எறும்பு. பெரீசா காத்து அடிக்கும். நாய்லாம் உண்டு தெரியுமா?” என்று பள்ளிக்கூடத்தின் குறைகளைச் சொல்வான்.

பலமுறை ரவியிடம் அதை சொல்லியிருக்கிறாள். “எல்லா பிள்ளைகளும் அப்படிதான். கொஞ்சநாள் அழும், அப்புறம் சரியாயிடும், ஏன், நான்லாம் வேலைக்கு போனபோதே ஒருவருஷம் அழுதேன்” என்றான். “பக்கத்துவீட்டு பிள்ளைகள்ளாம் சந்தோஷமாதானே போகுதுங்க?” என்றாள். “அதெல்லாம் பொம்பிளங்க. அவளுக கல்யாணம் பண்ணிப்போகும்போதுதான் ரெண்டு சொட்டு கண்ணீர் விடுவாங்க. மத்தபடி எங்க போனாலும் அந்த எடத்தில செட்டிலாயிடுவாங்க” என்றான். “சும்மா எதுக்கெடுத்தாலும் எடக்கு பேசிட்டு. ஒங்க பையன்தானே ?என்ன பிரச்னன்னு கேக்கமாட்டிங்களா?” என்றாள்.

“ஆமா கேட்டா மட்டும் சொல்றானாக்கும்? நேத்திக்கு வந்து ஷேவிங்செட் வாங்கிக்குடுன்னு கேக்கறான். இப்ப உனக்கு முடியில்லயே, இப்ப அதவெச்சு என்ன பண்ணப்போறேன்னு கேட்டேன். வளந்தப்பறம் போது ஷேவ் பண்றதுக்கு பிராக்டிஸ் பண்ணப்போறானாம். என்ன பிராக்டிஸ் பண்ணப்போறேன்னு கேட்டேன்.தலையில முடியிருக்கு அதிலே பிராக்டிஸ் பண்ணப்போறேன்னு சொல்றான். எல்லா அறிவும் இருக்கு .அடம், வேறென்ன?” என்றபின் அவன் மீண்டும் டிவியில் ஆழ்ந்தான்.

அனந்தன் வீட்டின் எல்லா அறைகளிலும் நிறைந்திருந்தான். அவனுடைய கீச்சுப் படங்களிலில்லாத சுவரே அவர்கள் வீட்டில் இல்லை.பெரும்பாலான விலங்குளுக்கு ஏராளமான கால்கள் இருந்தன. ஒரு படத்தை அவள் தேரட்டை என்றுதான் நினைத்தாள். அனந்தனோ அது குதிரை என்றான். “ குதிரைக்கு எதுக்குடா இவ்வளவு கால்?” என்று கேட்டபோது “அப்பதான் அது மேடு பள்ளம் எல்லாம் ஓட முடியும். நீ எர்த்மூவர் பாத்திருக்கேல்ல? நம்ம ரோட்டிலே வந்து மண்ணு அளிச்சே? அதெல்லாம் எப்படி பள்ளத்தில எல்லாம் போகுது பாத்தியா?” என்றான். ஒரு ஹெலிகாப்டரில் ஏராளமான விசிறிபட்டைகளை வரைந்திருந்தான். ஏன் என்று அவள் கேட்டபோது “காக்காக்கு ரெண்டு சிறகு இருக்கு. ஆனா ஈக்கெல்லாம் நெறைய செறகு இருக்குல்ல?” என்றான்

காலையில் அவனை எழுப்பி பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது வரை அவள் அவனை சரியாகப்பார்ப்பது கூட இல்லை. அனுப்பியபின் அவன் திரும்பி வருவது வரை கற்பனையில் அவனை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருப்பாள். அவனுடைய அறைக்குள் சென்று பொருட்களை எல்லாம் ஒழுங்கு படுத்தும்போது மீண்டும் அவனுடைய கற்பனை உலகத்திற்குள் சென்றுவிடுவாள். விதவிதமான யானைகள். யானைகளின் உடல்கள் பெரிய பீப்பாய் போலவும் தலைகளும் தும்பிக்கைகளும் மிகச்சிறிதாகவும் இருந்தன. யானைகளின் உடல்களில் வெவ்வேறு எழுத்துக்கள். அனந்தன் ஆங்கில எழுத்துக்களை பல்வேறாக மாற்றித்தான் எழுதுவது வழக்கம். சில எழுத்துக்கள் கண்ணாடியில் பார்ப்பது போலிருக்கும். சில எழுத்துக்கள் மேலிருந்து கீழே விழுந்து சரிந்தும் சிதைந்தும் கிடப்பது போலிருக்கும். ஆங்கில ஏ மட்டும் தான் நிலையாக இருகால்களையும் ஊன்றி நிற்கும்.

அவன் என்ன எழுதுகிறான் என்று அவள் பார்ப்பதுண்டு. நாக்கை துருத்தியபடி முகத்தில் தீவிரம் கூர்ந்து நிற்க அவன் எழுதுவான். “இது என்ன கண்ணு?” என்று அவள் கேட்டால் “பசிக்குதுல்ல, அதுதான்” என்று அவன் சொல்வான் . “யானைக்கு பசிக்குதா?” என்று அவள் கேட்பாள். “யானைக்கில்ல, எறும்பு குதிரை எல்லாத்துக்கும் பசிக்குதுல்ல? அதான்” அவளுக்குப் புரியவில்லை. “பசிச்சா அது இப்படி தான் சத்தம் போடுமா?” என்றாள். “சத்தம்போடறதுன்னா இதோ இப்படி” என்று இன்னொன்றை காட்டினான். “இது அதுக்கு பசிக்குதுல்ல, அது மட்டும்தான்” என்றான். அவள் அவனை திகைப்புடன் பார்க்க “ரொம்ப பசி” என்று மேலும் கரியால் தீற்றினான்.

எப்போதோ ஒருமுறை எகிப்தியச் சித்திர எழுத்துக்கள் இப்படித்தான் உருவாகியிருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது. மனிதர்கள் ஒட்டு மொத்தமாகவே குழந்தைகளாக இருந்த காலகட்டத்தில். அப்போது குகை மனிதர்கள் வாழ்ந்த குகையொன்றுக்குள் தான் இருப்பதாகவும் தன்னைச்சுற்றி குகைஓவியங்கள் நிறைந்திருப்பதாகவும் அவள் நினைத்துக்கொண்டாள். ஓவ்வொன்றையும் புதிதாக கண்டுபிடிக்கும் குகைமனிதன் ஒருவன் அங்கே வாழ்கிறான். ஏற்கனவே இந்த பூமியில் எல்லாபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதையும் அவை பெயர் சூட்டப்பட்டு அர்த்தங்கள் அளிக்கப்பட்டு வேறு பலவாக ஆகிவிட்டதையும் அவன் இன்னும் அறியவில்லை.

பேச ஆரம்பித்தம்போது அனந்தன் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பெயர் வைத்தான் தவளையை தப்தப் என்றும், குதிரையை குத்குத் என்றும் செருப்பை தப்பி என்றும் சுவரை அப்பை என்றும் படிகளை டக்கு என்றும் அவன் சொன்னான். அவளே நெடுங்காலம் அந்த வார்த்தைகளைத்தான் பயன்படுத்திக்கொண்டிருந்தாள். அவள் அம்மாதான் “பிள்ளங்க அப்படி ஆயிரம் வார்த்தைகளை சொல்லும். நாமளும் அதைச் சொல்ல ஆரம்பிச்சா அதுக கத்துக்கவே கத்துக்காது. நாம் அதுகள்ட்ட எப்பவுமே சரியான வார்த்தையத்தான் பேசணும். அப்பதான் அதுக பேச ஆரம்பிக்கும். சுசித்ராவோட பொண்ண பாரு இவனவிட ஒரு வயசு. கம்மி மணி மணியா பேசுவா. சீரியல் டயலாக் மாதிரி இருக்கும்” என்றாள்.

அவளுக்கு அது ஆச்சரியம்தான் அனந்தனை விட மிகவும் வயதுகுறைந்த பெண் குழந்தைகளெல்லாம் துல்லியமாக உச்சரிப்புடன் முழுச்சொற்றொடராக பேசிக்கொண்டிருந்த போது கூட அவன் ஒற்றைச் சொற்களை தான் சொல்லிக்கொண்டிருந்தான். எல்.கே.ஜி போக ஆரம்பித்தபோதும் கூட அவனால் முழுச் சொற்றொடர்களை சொல்ல முடியவில்லை. யுகேஜி வந்தபிறகுதான் பேசவே கற்றுக்கொண்டான்.எல்கேஜியில் அவனுக்கு பாடம் எடுத்த விஜயலட்சுமி டீச்சர் “என்னமோ பிராப்ளம் இருக்கு. இவன் பேசறதே இல்ல. எது கேட்டாலும் தலையத்தலைய ஆட்டறான். வாய ஒருமாதிரி வலிச்சு காட்டறான். நீங்க ஒரு நல்ல டாக்டர்கிட்ட காட்டிருங்க” என்றாள். அன்றைக்கு அவள் அவ்வளவு அழுதாள்.

“எனக்கு பயமா இருக்கு ரவி” என்று அவள் சொன்னாள். “உளறாதே.எல்லாம் நல்லாத்தான் இருக்கான். அவன் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லத்தான் என்னால முடியல” என்றான். கொஞ்ச நேரம் முன்புதான் அனந்தன் வீட்டில் சுற்றும் மின்விசிறியால் வீடு ஏன் ஹெலிகாப்டர் போல வானத்தில் எழுந்து பறக்காமலிருக்கிறது என்ற ஐயத்தைக் கேட்டிருந்தான். அவளால் அனந்தனைப்பற்றி எவரிடமும் பேச முடியவில்லை. அம்மாவிடம் கூட அவள் ஒன்றும் சொல்லவில்லை. அம்மாவுக்கு அவன் படிப்பில் எப்போதும் முட்டை வாங்குவதில் ஒரு பிரச்சினையும் இல்லை. “பசங்க அப்டித்தான். போகப்போக சரியாயிருவாங்க” என்றாள்.

“யானையா? எங்க இருக்கு?” என்று அவள் கேட்டாள். “எங்க ஸ்கூலில” என்ற அனந்தன் இருகைகளையும் அகல விரித்து தலையை அண்ணாந்து “அவ்வளவு பெரிய யானை! முட்டிரும்!” என்றான். “எங்க? அங்க வளர்க்கறாங்களா?” என்று அவள் கேட்டாள். “வளக்கல. அதுவா நின்னுட்டிருக்கும். வெள்ளையா கொம்பு வெச்சுட்டு கரூஊப்பா… செவப்பு கண்ணு .துதிக்கை இவ்ளோ நீளம்!” ஓடிப்போய் அந்த அறையின் மறு எல்லையைத்தொட்டு விட்டு வந்து “அவ்ளோ பெரிய கை! நாம் பின்னாடி இருந்தாக் கூட புடிச்சிரும்!” என்றான்

“கிளாசிலே உக்காந்து சொப்பனம் காணுறது. போ, போயி ஹோம்வர்க்க பண்ணு. போ” என்றாள். அவன் குரல்தாழ்த்தி “ஆனை!” என்றான். “போய் படி. போ” என்று அவன் தலையை தட்டினாள். அவன் தனது சிறிய மேஜையில் சென்று அமர்ந்துகொண்டு அங்கிருந்தே “அவ்ளோ பெரிய ஆனை!” என்றான். அனந்தன் ஒவ்வொன்றையும் வேறேதோ வடிவில் சொல்வது எப்போதும் வழக்கம்தான். விழித்திருக்கும்போதே கனவுகளில் இறங்கிவிடுவான். உடலை வளைத்து கண்கள் வெறித்திருக்க. தூக்கம் போல மூச்சு சீராக ஓடிக்கொண்டிருக்க அவன் அமர்ந்திருப்பான். சில சமயங்களில் அவன் கண்கள் மேலே சொருகிக்கொள்வதும் கைகால்களின் விதிர்ப்பு உருவாவதும் உண்டு. “என்னடா? என்னடா?” என்று அவள் அவனைப்பிடித்து உலுக்குவாள். விழித்துக்கொண்டு உதடுகளை அசைத்து ஓசையில்லாமல் ஏதோ சொல்வான் “என்னடா? எதுக்குடா இப்படி இருக்கே?” என்பாள்.

வீட்டுக்குள் ஒரு முள்ளம்பன்றி இருப்பதாக ஒரு முறை சொன்னான். அது சென்ற இடங்களை எல்லாம் சென்று சுட்டிக்காட்டினான். முழந்தாளிட்டு அமர்ந்து முகர்ந்து “மூத்திரம் அடிச்சிருக்கு” என்றான். அவள் கூர்ந்து பார்த்துவிட்டு “வயசு அஞ்சாகுது. வீட்டுக்குள்ளயே மூத்திரம்போறியா? அறைஞ்சிருவேன்” என்றாள். அவன் பின்னடைந்தபடி “முள்ளம்பண்ணி” என்றான். “பொறுமைய சோதிக்காதே கொன்னே போட்டுருவேன்” என்றாள். “முள்ளம்ப்பண்ணி” என்று மீண்டும் தாழ்ந்த குரலில் சொன்னான். உரத்தகுரலில் “உண்மையைச் சொல்லு. என்ன பைத்தியகாரி ஆக்காதே” என்றாள். அவன் “முள்ளம்பண்ணி!” என்று சொல்லி “நீ கெட்டவ! நீ கெட்டவ!” என்று கைநீட்டி வீரிட ஆரம்பித்தான்.

அது ஒர் உச்சநிலை. அவன் அலற ஆரம்பித்தால் அதன்பிறகு கட்டுப்படுத்தவே முடியாது. கைகளை அறைந்து வாய் கோணலாகி எச்சில் நுரைக்க கழுத்துநரம்புகள் இழுபட்டு நீலமாகத்தெரிய கத்திக்கொண்டே இருப்பான்.. பிடித்தால் நிற்கமாட்டான். “நிப்பாட்டுடா நிப்பாட்டுடா” என்று அவள் அலறினாலும் கேட்க மாட்டான். அப்படியே விழுந்து கையும் காலும் இழுத்துக்கொண்டு துடித்து அடங்குவான்.

முதல் முறை அப்படி வந்தபோது அவள் தூக்கிகொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினாள். “சின்னப்பிள்ளகளுக்கு லைட்டா பர்பிளக்ஸிட்டி வர்றது உண்டு. பெரிய நியூரோ பிரச்னை ஒண்ணும் இல்ல” என்று டாக்டர் எல்லா சோதனைக்ளுக்கும் பிறகு சொன்னார். “இப்பிடி இதுக்கு முன்னால் வந்தே இல்லையே” என்று அவள் சொன்னாள். “ரொம்ப எக்சைட் ஆகவெக்காதிங்க. கோவத்திலயோ எதிலயோ ரொம்ப கத்தினா அப்படியே அடக்கிடுங்க” என்றார். “அடக்க முடியாது டாக்டர். நாம ஏதாவது சொல்லச் சொல்ல மறுபடியும் ஜாஸ்தியாயிட்டேதான் போகும்” என்றாள். “நீங்களும் சேந்து கத்துவிங்க. அப்ப இன்னும் ஜாஸ்தியாகதான் போகும். நீங்க கத்தக்கூடாது. ஒரு கைப்பிடி தண்ணிய எடுத்து சட்சட்டுனு அவன் மூஞ்சில அடிங்க. அப்படியே செட்டிலாயிடுவான். நல்ல கூல் தண்ணியா இருக்கணும். பிரிட்ஜில இருந்து எடுங்க. ஈஸியானதும் ஒருக்களிச்சு படுக்கவைங்க. நல்லா மூச்சு ஓடணும். அதுதான் ஒரே வழி” என்று டாக்டர் சொன்னார்.

“சும்மா எல்லாத்தையும் பெரிசு பண்ணிட்டிருக்காதே. நான் சொன்னேன்ல, எங்காவது வேலக்கு போ .ஒருநாளைக்கு எட்டு மணிநேரம் எங்காவது வேல பாத்தாதான் நீ நார்மலாவே. எம்சிஏ படிச்சிட்டு வீட்டுல காலையிலருந்து ராத்திரி வரை வெட்டு வெட்டுன்னு உக்காந்திருந்தா இப்படித்தான் ஆயிரம் கற்பனை வரும். உன்னை மாதிரி அம்மாக்கள்தான் நெர்வஸாயி பிள்ளைங்களுடைய வாழ்க்கைய அழிக்கறீங்க. ஒரு செடிய நட்டுட்டு டெய்லி காலைல, சாயந்திரம் மத்தியானம்னு போய் அத எலய தொட்டு பாத்திட்டிருந்தா அது எப்படி வளரும்? அது அவனுடைய பிரச்சின. அதை அவனே தீத்துக்குவான். விடு”

உண்மையிலேயே அவனை அதிகமான பதற்றம் அடைந்து அழித்துக்கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகம் அவளுக்கும் இருந்தது. ஆகவே அவன் பேசுவதை காது கொடுத்து கேட்க கூடாது என்ற முடிவுக்கு வந்தாள். அவன் பேசுவதை கேட்கக் கேட்க ஒவ்வொன்றும் அவளை கால்களை ஊன்றி தொட்டுணர்ந்து வாழும் உலகத்திலிருந்து வெளியே கொண்டு சென்றன. அங்கே அவன் வரையும் ஓவியங்களில் இருக்கும் வேறொரு உலகம். ஒவ்வொன்றும் அங்கே உருமாறி இருந்தன. அந்த உலகத்தில் அவள் அறிந்த எந்தத் தர்க்கத்திற்கும் இடமில்லை. அவன் பேச்சை அரைக்காதில் கேட்டு “சரி, சரி, போய் வெளையாடு” என்று கடந்து சென்று கொண்டே இருப்பாள்.

“அப்பறம் அந்த கரடி ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீய வெச்சு மூக்க அதுக்குள்ள போட்டுடுச்சாம். அப்பதான்…” என்று அவன் ஏதாவது சொல்ல ஆரம்பிக்கும்போது அவள் தன்பாட்டில் வேலைசெய்துகொண்டிருப்பாள். அனந்தன் அவளுக்குப்பின்னால் நடந்தபடி சின்ன திக்கலுடன் கைகளையும் தலையையும் ஆட்டி கரடி எவ்வாறு தொட்டிக்குள்ளிருந்து ஒரு மீனை உறிஞ்சி எடுத்தது என்று சொல்வான் தண்ணீருடன் கரடியின் வயிற்றுக்குள் போன மீன் அங்கே ஒரு சிறு தொட்டிபோல நீந்திக்கொண்டிருந்தது. கரடி தன் வயிற்றிலிருக்கும் மீனிடம் “அங்க என்ன பண்றே?” என்று கேட்டதற்கு “இங்க சின்ன பூச்சியெல்லாம் இருக்கு. அத எல்லாம் சாப்பிடறேன்” என்று சொன்னது.

அவள் அறியாமல் “வயித்துக்குள்ள எப்படிடா பூச்சி?” என்று கேட்டுவிட்டாள். அவன் மேலும் ஊக்கமடைந்து அங்கிருந்த சிறிய ஸ்டூலின் மேலேறி சமையலறை மேடையை பிடித்தபடி “வயித்துல நெறய பூச்சி இருக்கும். அதுக்குதானே நீ எனக்கு மாத்திர குடுக்கறே? கரடிக்கு யாருமே மாத்திர குடுக்கமாட்டாங்கல்ல? அப்ப வயித்துல பூச்சி இருக்கும்ல? அதனாலதான் அந்த பூச்சிய மீன்லாம் சாப்பிடுது” என்றான்

“கற்பனை இருக்கு. நெறைய கதை படிக்க விடுங்க” என்று டாக்டர் சொன்னார். அவனால் சொற்களாக படிக்கமுடியாது. ஏதாவது கதையை சொன்னால் முற்றிலும் சம்பந்தமில்லாத வேறு ஒரு கதையை அவன் புரிந்துகொண்டான். முதல் நாலைந்து சொற்றொடருக்குள்ளேயே பாய்ந்து அவன் கதையின் ஒரு நுனியைபிடித்துக்கொள்வான். “அந்த நெலா தண்ணியில தெரிஞ்சபோது ஒரு மீன் அதுல ஏறி உக்காந்துச்சாம். ஹை போட் அப்டீன்னு சொல்லி வால வெச்சு நீஞ்சிக்கிட்டே போச்சாம்” என்று ஆரம்பித்துவிடுவான். “தண்ணியில தெரியறது நெலாவோட நெழல்தானே, அதுல எப்படி ஏறமுடியும்?” என்று அவள் கேட்டால் வாய் திறந்து கண்கள் மலர்ந்திருக்க அசைவற்றிருந்தபின் “அது மீனோட நெழல்!” என்று பதில் சொல்வான்

தனக்கே ஏதோ ஆகிக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. எந்நேரமும் அவன் நினைவு. அதிலிருந்து வெளியேறவே முடியவில்லை. எதை எண்ணினாலும் அவனிடம்தான் சென்றுசேர்ந்தது. தனியாக இருக்கையில் தான் யோசிப்பது எல்லக்கட்டுகளையும் இழந்து அத்துமீறிக்கொண்டிருப்பதை அவளே அவ்வப்போது உணர்ந்தாள். ஆனால் தன் சிந்தனையில் என்ன தவறிருக்கிறது என்று அவளுக்கு தெரியவில்லை நெடுந்தூரம் சென்றபிறகுதான் என்ன எண்ணிக்கொண்டிருக்கிறோம் ஒரு ஒழுங்கே இல்லாமல் என்று பதற்றத்துடன் திரும்பி வருவாள். டிவி பார்த்தாலோ பத்திரிகை படித்தாலோ மனம் ஒட்டவில்லை. ரவிகூட “என்ன பேசிட்டிருக்கே சம்பந்தமே இல்லாம? உனக்கென்ன ஆச்சு?” என்று கேட்டான். “ஒண்ணுமில்லியே” என்றாள்.

“ஸ்கூல்ல யானையா? குண்டா எதாவது வாத்திச்சி இருந்திருப்பா” என்று ரவி சொன்னான். “வெளயாடாதிங்க. நெஜமாவே தும்பிக்கையெல்லாம் வச்ச யானைன்னு சொல்றான்”. ரவியைப்போல ஒரு நக்கலை உருவாக்கிக்கொண்டால் இந்தக்கட்டுக்கடங்காத நிலையிலிருந்து வெளியே போகலாம் என்று நினைத்துக்கொண்டாள். வீட்டில் தனியாக இருப்பது பிடிக்கவில்லை. முன்பு தனியாக வீட்டில் இருப்பதை அவ்வளவு விரும்பியிருந்தாள். கல்லூரி முடித்ததுமே — எட்டு வருடங்கள் கழித்துதான் அவள் மணம் செய்துகொண்டாள். அந்த எட்டு வருடங்களும் காலையிலிருந்து இரவு வரை பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அலுவலகத்தில் ஐநூறு பேர் நடுவேதான் இருந்தாள். இரவு தூங்குகையிலும் ஐநூறு பேர் சூழ இருப்பது போல்தான் கனவுகள் வரும். வேலையை விடப்போவதாக சொன்னபோது ரவி “உன்னுடைய இஷ்டம்” என்று சொன்னான்

வீட்டில் இருப்பது அவளுக்குப்பெருங்கொண்டாட்டமாக இருந்தது. ரவியும் அலுவலகம் போனபிறகு ஒரு அரைமணி நேரம் வேலைக்காரி வந்து பாத்திரங்களை கழுவி வீட்டை துடைத்துவிட்டு சென்றால் அந்த அபார்ட்மெண்ட் முழுக்கவே அவளுடையதாகிவிடும். பாட்டுபாடலாம். யாரும் பார்க்காமல் நடனமாடலாம். தொலைக்காட்சி பாக்கலாம். புத்தகங்கள் படிக்கலாம் .சிரிக்கலாம் பல ஆண்டுகள் அந்த தனிமை அவ்வளவு தித்திப்பானதாக இருந்தது.

“உன்னையெல்லாம் நல்ல காட்டுக்குள்ள ஏதாவது பர்ணசாலையில் கொண்டுபோயிச் சேக்கணும். ஏதாவது முனிவன கல்யாணம் கட்டிட்டிருக்கணும் நீ” என்றான். “இந்த பத்துமாடி இருபதுமாடிக் கட்டிடம் எல்லாம் பர்ணசாலை மாதிரிதான் . ஸிட்டி எங்கயோ காலுக்கு கீழ இருக்கு. நாம் ஒரு பலூன்ல கட்டி தொங்கவிட்ட மாதிரி இவ்ளோ உயரத்தில இருக்கோம். நமக்கும் ஒலகத்துக்கும் சம்பந்தமே கெடயாது. இந்த லிஃப்ட்ல எறங்கிப்போறதெல்லாம் அப்படியே கயித்துல கட்டி கூடையில எறங்கிப்போற மாதிரி” என்றாள்.

தனிமையை எண்ணி பதற்றம் கொள்ள ஆரம்பித்தால் ஒவ்வொன்றும் மேலும் தனிமையைத்தான் அளிக்கிறது என்பதை அவள் கண்டு கொண்டாள் தொலைக்காட்சி பார்க்கையில் அதிலிருந்த மனிதர்கள் எல்லாம் வெறூம் படங்களாக எங்கோ இருந்தார்கள் .அதிலிருந்த மனிதர்கள் எல்லாம் திரையை உடைத்துக்கொண்டு அவளிடம் வரமுடியாது. இப்போது நான் மயங்கி விழுந்து வலிப்பு வந்து செத்துப்போனால் இந்த மனிதர்கள் எல்லாரும் கண்ணாடிக்கு அப்பால் நின்று என்னை வேடிக்கை பார்ப்பார்கள் என்று எண்ணிக்கொண்டாள். ரேடியோ கேட்டால் எவரோ எங்கிருந்தோ அவளை தொடர்பு கொள்ள முயன்று கத்திக்கொண்டிருப்பதாகவும் அவள் என்ன மறுமொழி சொன்னாலும் அவர்களுக்கு கேட்கப்போவதில்லை என்று தோன்றியது .பத்திரிகைகள் அனைத்தும் ஏற்கனவே அங்கிருந்து கிலம்பிச்சென்றவர்களின் குறிப்புகளாக தோன்றியது

“என்னால் தனியாக இருக்கமுடியல ரவி” என்று ரவியிடம் சொன்னாள். “ஏன் ஜாலியா இருந்தியே?” என்றான் . “தெரியல. இப்ப ஒரு மாதிரி பதற்றமா இருக்கு” என்றாள். “வீட்டுக்குள்ள இருக்கிறதா?” என்றான் “ஆமா” என்றாள். “சரி அப்ப வெளிய எங்கியாச்சும் போ” என்றான். “வெளிய எங்க போறது?” என்றாள். “சும்மா ஷாப்பிங் கீப்பிங் எங்காவது போறதுதானே? இல்ல பக்கத்துல தான் கிண்டர் கார்டன் ஸ்கூல் இருக்கு அங்க போய் எட்டிப்பார்க்கறது” என்றான். “எதுக்கு?” என்றாள். “இவன் எப்படி படிக்கிறான்னு போயிப்பாரு”

அவள் அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அனந்தன் வருவதற்காக அவள் படபடப்புடன் காத்திருக்க ஆரம்பித்தாள். அவன் கதவைத் திறந்து வீட்டிற்குள் வந்து “ஒரு குருவி!” என்று சுட்டுவிரலை மேலே சுட்டி சொன்னான். அவள் ஆவலுடன் “என்ன சொல்லிச்சு?” என்றாள். “கீச்னு” என்றான். “அதோட பேரா?” என்றாள். ‘இல்ல அதோட பேரு கீ. கீச்னா அதோட வைஃபோட பேரு” என்று அவன் சொன்னான். “ அவங்க ரெண்டு பேரும் வேற வேற ஊரு அப்பறம் ஏர்ல அவங்க ரெண்டு பேரும் முட்டிட்டு அப்பறம் லவ்வாயிருச்சு” அவள் “லவ்வா?” என்று கேட்டாள். “இப்ப நீயும் எங்க அப்பாவும் லவ் பண்ணிங்கல்ல? அதுமாதிரி” என்றான்.

உடலிலிருந்து கிழித்து எடுப்பது போல கழற்றி வீட்டின் மூலையை நோக்கி வீசுவது அனந்தனின் வழக்கம். பெரும்பாலும் பித்தான்கள் உடைந்து தெறிக்கும். பெல்ட் பக்கிள் கூட அறுந்துவிழும். ஷுவை பிடுங்கி எடுத்து கீழே போட்டு காலால் எத்தி கீழே தள்ளுவான். புத்தகப்பையைக்கூட ஒரு முதுகில் சுமந்துவந்த வேட்டை விலங்கை வீசுவது போல தூக்கிப் போடுவான். அப்போது அவன் அவற்றை கழற்றிவீசுவது அவளுக்கு பிடித்திருந்தது. அவன் ஷார்ட்ஸ் எடுத்து அணிந்துகொண்டு வெற்று உடம்புடன் வ்ந்து நிற்கும்போதுதான் படபடப்பு குறைந்து அருகே ஒருவர் இருக்கும் உணர்வை அடைந்தாள். “அப்புறம் என்ன நடந்திச்சு?” என்றாள். “என்ன?” என்றான். “அந்த யானை?” என்று அவள் கேட்டாள்

“ஆமா, கறுப்பு யானை. அவ்ளோ பெரிசு” என்று அவன் சொன்னான். இருகைகளையும் விரித்து “ராத்திரி மாதிரி யானை!” என்றான். அறையின் ஒருமூலையை தொட்டு இன்னொன்றை ஓடிச்சென்று தொட்டு மூச்சிரைக்க சுட்டுவிரலை காட்டி “பெரிய ஆனை!” என்றான்.அவளுக்கு கைகள் நடுங்கத் தொடங்கின. “நூறு பேர அது குத்திக்கொன்னுருச்சு தெரியுமா?” என்றான். ”எங்க?” என்றபோது அவள் அதிர்ந்துகொண்டிருந்தாள். அனந்தன் “எல்லாமே சின்னக்கொழந்தங்க. ரத்தம்! அப்படியே ரத்தம்!” அவன் தரையில் கைகளை விரித்து மல்லாந்து படுத்து “இப்படியே செத்துகிடந்தாங்க. நூறு பேரு. அப்பறம் அவங்கள் ஒரு வண்டியில தூக்கிட்டு போனாங்க . அப்டியே கொண்டுபோய்… அங்க… அங்க…” என்று திக்கி “கொடுங்கையூரிலே கொண்டு போட்டுட்டாங்க!” என்றான்

அவள் திகிலுடன் எழுந்துவிட்டாள். “ஏன்?” என்றாள். அவன் “அங்கதான் அவ்ளோ பெரிய குப்ப இருக்கு. அங்க இமயமலை மாதிரி குப்ப இருக்கு. அந்தக்குப்பையில கொண்டு போட்டுட்டாங்காக. ஹெலிகாப்டர்ல போய்தான் அதுங்கள பாக்க முடியும்” என்று அனந்தன் சொன்னான். “அந்தக் குப்பை மேலே ஒரு பெரிய கயிறு கட்டி அப்படியே மௌண்டனிங் மாதிரி ஏறுவாங்க”. அவள் மூச்சுத்திணறலுடன் “இங்க வா” என்றாள். அவன் அவள் அருகே வந்து அவள்: தொடையில் கை வைத்து “பயமா இருக்கா?” என்றான். அவள் அவனை அள்ளி எடுத்துக்கொண்டு வெளியே ஓடினாள். அவன் “என்ன அம்மா?” என்றான். அவள் கிசுகிசுப்பாக “யானை” என்றாள். அவன் வீட்டுக்குள் எட்டிப்பார்த்து மேலும் குரல்தாழ்த்தி “உள்ர நின்னுட்டிருக்கு” என்றான். விரலை வாய்மேல் வைத்து “சத்தம்போடாதே” என்றான். மீண்டும் மெல்ல எட்டிப்பார்த்துவிட்டு “ஆனை! வெள்ளையா இருக்கு” என்றான்.

முந்தைய கட்டுரைகலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-9