பதிப்புரை
விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் ஜெயமோகனின் நண்பர்களால் உருவாக்கப்பட்ட விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பின் சார்பில் சென்ற 2010 முதல் அளிக்கப்பட்டுவருகிறது. தமிழின் இலக்கியத்தெளிவற்ற சூழலில் இலக்கிய முன்னோடிகள் கௌரவிக்கப்படாமல் போய்விடலாகாது என்னும் நோக்குடன் உருவாக்கப்பட்ட விருது இது.
இதுவரை ஆ.மாதவன், பூமணி, தேவதேவன்,தெளிவத்தை ஜோசஃப் [இலங்கை] தேவதச்சன், ஞானக்கூத்தன், வண்ணதாசன், சீ.முத்துசாமி [மலேசியா] ஆகியோருக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்பதாவது விருது பேராசிரியர் ராஜ்கௌதமன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
தமிழ் தலித் சிந்தனையில் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கியவர் ராஜ் கௌதமன். தமிழ்ப்பண்பாட்டாய்வை தலித் நோக்கில் முன்னெடுத்தவர். சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை போன்ற முக்கியமான நாவல்களை எழுதியவர். அவருக்கு 23-12-2018 அன்று கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவதை ஒட்டி இந்நூல் வெளியிடப்படுகிறது. கே.பி.வினோத் இயக்கிய ராஜ்கௌதமனைப் பற்றிய ஆவணப்படமான ‘பாட்டும்தொகையும்’ அன்று வெளியிடப்படுகிறது
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்
***
முன்னுரை
பேராசிரியர் ராஜ்கௌதமன் அவர்களுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவதை ஒட்டி வெளியிடப்படும் நூல் இது. ராஜ்கௌதமனின் புனைவிலக்கியம், பண்பாட்டுவிமர்சனம் ஆகியவற்றை முழுமையாகத் தொகுத்து மதிப்பிடும் முயற்சி. அவருடைய மூன்றாம்தலைமுறை வாசகர்களே இதில் பெரும்பாலும் எழுதியிருக்கிறார்கள். இலக்கியமுன்னோடி ஒருவருக்கு செய்யப்படும் மரியாதை இது.
பேராசிரியர் ராஜ்கௌதமன் அவர்களின் இயற்பெயர் எஸ்.புஷ்பராஜ். எஸ்.கௌதமன் என பின்னர் பெயரை மாற்றிக்கொண்டார். 1950ல் விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டி என்னும் ஊரில் பிறந்தார். மதுரையில் உயர்நிலைப்படிப்பை முடித்தபின் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அண்ணாமலைப் பல்கலையில் தமிழிலக்கியம், சமூகவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழின் முன்னோடி நாவலாசிரியரான அ.மாதவையா பற்றிய ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார்
புதுவையிலும் காரைக்காலிலும் அரசுக் கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி 2011ல் ஓய்வுபெற்றார். இப்போது நெல்லையில் வசிக்கிறார். மனைவி பரிமளம் அவர்களும் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றினார். மகள் டாக்டர் நிவேதா லண்டனில் வசிக்கிறார்
ராஜ் கௌதமன் பண்பாட்டு ஆய்வுநூல்கள், தலித்விமர்சனக் கட்டுரைகள், ஆளுமைகளை மதிப்பிட்டு எழுதிய நூல்கள் என மூன்றுதளங்களில் விரிவான பங்களிப்பைச் செய்திருக்கிறார். சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ் ஆகிய மூன்று தன்வரலாற்று நாவல்களையும் எழுதியிருக்கிறார்.
2010 முதல் வழங்கப்பட்டுவரும் விஷ்ணுபுரம் விருது ஆ.மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், சீ.முத்துசாமி ஆகியோருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான விருது 23-12-2018 அன்று கோவையில் நிகழ்ந்த விழாவில் வழங்கப்படுவதை ஒட்டி இந்நூல் வெளியாகிறது
விஷ்ணுபுரம் விழாக்குழு
கோவை
***