எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி விருது
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி -கடிதங்கள்
எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம்
அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.
நலத்தையே விழைகிறேன்.
திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தமை பற்றி உங்களுடைய பதிவு மன நிறைவையும் மகிழ்ச்சியும் அளித்தது. எஸ்.ரா. அவர்களை நெகிழ்ச்சியோடு அல்லாமல் வேறு எவ்வகையிலும் எண்ண இயலாது. ஏனென்றால் அவர் எழுத்தின் தாக்கம் அவ்வாறு.
விகடனின் வாயிலாகவே அவர் எழுத்து எனக்கு அறிமுகம். அதில் அவர் எழுதிய தொடர் கட்டுரைகள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். அவர் தீராத பயணியாக இருந்தார். அறியா நிலத்தையும் எங்கோ இருக்கும் மலைக்குகையும் வறண்ட நிலங்களையும் யார் என்றே தெரியாத மனிதர்களின் அன்பையும் அவர்களின் எளிய தடுமாற்றங்களையும் பதிவு செய்தார். அது அன்று ஒரு பெரும் கிளர்ச்சியும் ஆழ்ந்த கனவுகளையும் எனக்கு ஏற்படுத்தியது.
காரணம் என் நிலை அப்படி. நான் வாழ்ந்த ஊர் கிராமத்திலும் சேராது நகரத்திலும் சேர்க்க முடியாது. வெளியூர் பயணம் என்பதே பள்ளி விடுமுறை தினங்களில் சென்னை வருவது. திருமணத்திற்கு பின் அதற்கும் வாய்ப்பில்லை. வீட்டிலிருந்து வெளியே வருவதே வாரம் ஒருமுறை கோவிலுக்கு செல்லவே. அங்கே வீற்றிருக்கும் பெருமாளுக்கும் வேறு வழியில்லை. தற்போது அவர் கொஞ்சம் பிரபலம் அடைந்து விட்டதாக கேள்வி. இந்நிலையில் எஸ்.ரா வின் எழுத்து ஒரு வித மயக்கத்தையும் மெல்லிய ஏக்கத்தையும் ஏற்படுத்தியது.
அவரின் கதை மாந்தர்களான நெடுங்குருதி நாகுவும் உறுபசி சம்பத்தும் நீண்ட நாட்கள் மனதில் ஒரு நிலைக்கொள்ளாமையை உருவாக்கியவர்கள். எஸ்.ராவின் உபபாண்டவம் நாவலை நான் தேடி அலைந்ததையே ஒரு சிறுகதை ஆக்கிவிடலாம். சென்னை புத்தகக்காட்சியில் கிடைக்கும் என்பதற்காக ஊரிலிருந்து கிளம்பி வந்து பாதி அரங்குகள் முடிந்த நிலையில் என் தம்பி என்னை பிடித்து இழுத்துக்கொண்டு உயிர்மை பதிப்பகத்தில் அமர்ந்து உரையாடி கொண்டு இருந்த எஸ்.ராவின் முன்னால் நிறுத்தினான். என் உள்ளத்தில் சொல்லே இல்லை. அவர் நிமிர்ந்து ஒரு புன்னகை புரிந்தார். மிக அரிய புன்னகை. பின் துணிந்து உபபாண்டவம் நாவல் கிடைக்கும் அரங்கை மட்டும் விசாரித்து பதற்றத்துடன் விரைந்து சென்று அப்புத்தகத்தை வாங்கினேன். அதில் அவரின் கையொப்பத்தையும் பெற்று கொண்டபோது உலகப்போட்டியில் தங்க மெடல் வாங்கிய நிறைவை அடைந்தேன்.
அவரது பயணங்களிலும் கதைகளிலும் வெயில் ஒரு முக்கிய பாத்திரமாகவே வருகிறது. சில நேரங்களில் வெக்கை தாளாமல் போவதும் உண்டு. புத்தக வாசிப்பின் மீது பெரிய ஆர்வத்தையும் சகமனிதன் மீது அக்கறையும் உருவாக்கியவர். விருது பற்றிய செய்தி பார்த்தவுடன் என் அம்மா தான் அழைத்து சொன்னார்கள். நான் மகிழ்ச்சியுடன் “நாளை ஜெ.வின் தளத்தில் எஸ்.ரா வை பற்றி சிறந்த ஒரு கட்டுரை உண்டு” என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறினேன்.
விருது பெறும் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள். உங்களுக்கு மன நிறைந்த நன்றிகள்.
மிக்க அன்புடன்
தேவி. க
ஆவடி. சென்னை.
அன்புள்ள ஜெ
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி விருது கிடைத்த செய்தியை அறிந்து மனம் மகிழ்ந்தேன். என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் அவர். உங்களையும் நான் வாசிப்பதுண்டு. ஆனால் உங்கள் எழுத்துக்களிலுள்ள தத்துவம் எனக்கு அவ்வளவு பிடித்தமானது அல்ல. அதோடு எஸ்ரா சொல்லும் நிலம் எனக்கு மிகவும் பிடித்தது. ஏனென்றால் அது என் அம்மாச்சியின் நிலம்
நாங்களெல்லாம் எங்கள் நிலத்திலிருந்து தப்பி ஓடிக்கொண்டே இருக்கும் மக்கள் என நினைக்கிறேன். வண்ணநிலவனின் எஸ்தர் போல. மண்ணை உதறிவிட்டுச் சென்றுகொண்டே இருக்கிறோம். என் அப்பா பூர்வீக மண்ணை விட்டுவிட்டு வந்தவர். அங்கே அவ்வப்போது போவது உண்டு. இப்போது அங்கே ஒன்றுமில்லை. சாமிகளைக்கூட பிடிமண் கொண்டுசென்று இடம் மாறி வைத்துவிட்டார்கள். ஆனால் மண் அங்கேதான் கிடக்கிறது. எஸ்ரா அந்த வரண்ட மண்ணின் எழுத்தாளர். ஆகவேதான் எங்கள் எழுத்தாளர் அவர் என்று நினைக்கிறேன்
ரூட்ஸ் நாவலில் அலெக்ஸ் ஹேலி தன்னுடைய குலத்தின் தொடக்கத்தை ஒரு பழங்குடிப்பாடகனிடமிருந்துதானே கேட்டுத்தெரிந்துகொள்கிறார்? அதேபோல எங்கள் மண்ணின் வரலாற்றை எழுதியவர் அவர். அவருடைய சஞ்சாரம்கூட அந்தவகையான நாவல்தான். நீங்களும் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள். வரண்டநிலத்தில் கேட்கும் நாதஸ்வரம் அது. அதை தஞ்சைக்காரர்கள்கூட புரிந்துகொள்ளமுடியாது. வானம்பார்த்த பூமியின் மக்களின் கதைகளை அவர் சொல்லிக்கொண்டிருக்கிறார். சிலருக்கு அவை செண்டிமெண்ட் கதைகளாகத் தோன்றலாம். ஆனால் அந்த மண்ணை இழந்து அன்னிய நிலத்தில் வாழும் எங்களுக்கு அது எங்கள் மண்ணின் ஓலமாகவே தெரிகிறது. அவர் வழியாக எங்கள் மறைந்துபோன தெய்வங்களெல்லாம் வந்து நின்று ஓலமிடுவதுபோல நினைத்துக்கொள்கிறேன்
எஸ்ராவுக்கு என் வாழ்த்துக்கள். அதை உங்களிடம் சொல்லவேண்டுமென தோன்றியது .ஏனென்றால் நான் தினமும் வாசிப்பது உங்கள் தளத்தைத்தான்
கே.பெருமாள்.